இந்த பொங்கல் விழா என்பது அறுப்புப் பண்டிகைன்னும் சொல்லுவார்கள். அதேபோல நாமும் அறுத்துப் பண்டங்களைக் குடும்பத்துடன் உபயோகப்படுத்துகிற நாள். மற்றும் நம்மாலான வசதிகளை விவசாயத்துக்காக நமக்கு உதவியாய் இருந்து தொண்டாற்றின ஆளுகளுக்கு - அவர்களுக்கு நாம ஏதாவது திருப்தி பண்ணுகிறதுக்கு - சாப்பாடு போடுகிறதோ, அவர்களுக்கு துணிமணி எடுத்துக் கொடுக்கிறதோ அல்லது ஏதாவது காசு கொடுத்து அவர்களைச் சந்தோஷப்படுத்துகிறதோ - இதெல்லாம், நாம் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தோம்.

நேற்று (16.1.968இல்) இந்த நேரத்துக்கு, நான் சேலத்திலே பெரிய மிராஸ்தார் இரத்தினசாமி பிள்ளை என்கிறவர், அவர் தோட்டத்திலே இந்த பண்டிகை வைச்சார். என்னைத்தான் தலைமையாய் அவர் விரும்பினார், போயிருந்தேன். பொங்கல் தடபுடலாக ஒரு அய்ம்பது, அறுபது மாடுகளை வைச்சி நம்ம எதிரிலேயே நடத்தினாரு. இம்மாதிரி இருநூறு பேருக்குச் சீலை வேட்டி தந்தார். ஒரு புலவர் அம்மையார் காமாட்சி அம்மையாருன்னு

அந்த அம்மாளைக் கொண்டு நம்முடைய தலைமையிலேயே மக்களுக்கு எல்லாம் எடுத்துக் கொடுக்கச் சொன்னார். கொடுத்தாங்க. இரண்டு மணி நேரம் நடந்தது அந்தப் பண்டிகை. அப்புறம் பத்து, பதினைந்து நாளைக்கு முன்னே 1ஆம் தேதி (1.1.1968ஆம் நாள்) திருநெல்வேலி ஜில்லாவிலே வள்ளியூர் என்கிற ஊரிலே ஒரு விவசாயி அவர் பண்டிகை நடத்தினார். என்னைக் கொண்டே எல்லாருக்கும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார்.

இது மதத்தைப் பொருத்தது அல்ல. மனிதனுடைய இயற்கையான தன்மையைப் பொருத்ததுதான் இந்தப் பண்டிகை. வேறு யாரும் இதற்கு வேறு கருத்தை ஒண்ணும் சொல்ல முடியாது. ஏனென்றால், இதைத் தான் நாம செய்கிறோம். இதிலே ஒண்ணும் மூட நம்பிக்கையான காரியங்கள் பண்றதில்லே. இதற்கு அவனுடைய பாப்பானுடைய ஆதாரத்தின் படி என்ன கருத்துக் கொடுத்திருக்கிறான் என்றால் இதை மூணு நாளாக ஆக்கினான். ஒரு நாளைக்கு பொங்கல், ஒரு நாள் மாட்டுப் பொங்கல், இன்னொரு நாளைக்குக் கரி நாள் என்று. இதுக்கெல்லாம் அவன் என்ன கதை எழுதி வைத்திருக் கிறான் என்றால் - இந்தப் பண்டிகைகளிலே புராணங் களையும் கடவுள்களையும் மற்றும் முட்டாள்தனங் களையும் ரொம்ப கொண்டுவந்து நிறைய புகுத்தி யிருக்கிறான். இந்தப் பண்டிகை ஆரம்பிச்சது இந்திரனுடைய உற்சவம் - இந்திர விழான்னு - அதிலே எழுதியிருக்கிறான். அது இந்த சிலப்பதிகாரத்திலே கூட இருக்கும் - இந்திர விழான்னு. அதாவது மக்கள் எல்லாம் இந்திரனைக் கும்பிடறதுக்காக, அவனைப் பெருமைப்படுத்துகிறதுக்காக இந்த விழாவை ஆரம்பிச்சாங்களாம்.

இந்திரனுக்கு இந்தப் பண்டிகை நடத்துறதைப் பார்த்து கடவுளுக்குப் பொறாமை வந்துட்டுதாம். நம்மை விட்டுட்டு அவனுக்குப் பண்றாங்களேன்னு. எந்தக் கடவுளுக்கு? கிருஷ்ணனுக்கு. கிருஷ்ணங் கிறவனைக் கடவுள்னு அல்லவா சொல்றாங்க. அவன் இருந்தானோ - இல்லியோ? - கிருஷ்ணன் கடவுள்ன்னு. அவனுக்குப் பெருமை வந்திடுச்சாம். என்னடா இந்த ஜனங்கள் நமக்கு பொங்கல் வைக்காமல் இந்திரனுக்குப் போயி வைக்கிறாங் களேன்னு. இந்திரன் தன்னை என்னா நினைச்சிகிட்டு இருக்கிறான்னா? தான் கிருஷ்ணனுக்கும், இராமனுக்கும் கடவுள்ன்னு நினைச்சிகிட்டு இருக்கிறான். மற்றும் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் மற்றவர்களுக்கும் கடவுள்னு நினைச்சிகிட்டு இருக்கிறான். ஏன்னா? இந்திரனுடைய கணக்குப்படி இவர்கள் எல்லாம் தேவர்கள் தானே தவிர கடவுள்கள் அல்ல. யாரு? சிவன்-விஷ்ணு-பிரம்மா மற்றும் பல கடவுள்களாக இன்னைக்கு நாம கும்பிடுகிறோமே இவனுங்க எல்லாம் தேவர்கள். எதிலே தேவர்கள்ன்னு வர்ராங்கன்னா? வேதத்திலே. வேதத்திலே இந்திரன் தான் தலைவன். எல்லா தேவர்களுக்கும் அவன்தான் அரசன். அவனுக்குப் பேரு தேவேந்திரன்னு பேரு. தேவராஜன்னும் சொல்லுவாங்க. அந்தத் தேவேந்திரன்தான் பெரியவங்கிற முறையிலே அவனுக்கு எல்லாம் வைச்சிகிட்டான். இதற்குக் கிருஷ்ணன் அவன்தான் கடவுள்ன்னு நினைச்சிகிட்டு நாம இருக்கிறபோது அவனுக்கு இதுவெல்லாம் பண்றது என்ன நியாயம் என்பதாகப் பெருமைப்பட்டு மக்களை எல்லாம் கூப்பிட்டு நீங்கள் இந்திரனுக்குப் பொங்கல் வைக்காதீங்க. இந்திர விழா கொண்டாடாதீங்கன்னு சொன்னானாம். ஜனங்கள் இந்திரனைக் கொண்டாடலே.

உடனே இந்திரனுக்குக் கோபம் வந்திட்டுதாம். நமக்கு நடக்கிற பண்டிகையை இவன் சொல்லி நிறுத்திப் போட்டான்னு, இவன் பேச்சை இந்த முட்டாள் ஜனங்கள் ஏத்துகிட்டு பண்டிகை நடத்தாது விட்டுட்டாங்க. ஆனதினாலே அவர்களை நாம சும்மா விடறாதான்னுச் சொல்லி அவன் பெரிய மழையை ஆரம்பிச்சிட்டானாம். மழை பெய்யுது. அந்த மழை வந்த வேகம் நாடெல்லாம் வெள்ளத்திலே அடிச்சிகிட்டு போற அளவிற்கு அவன் மழையை உண்டாக்கிட்டானாம். இதைப் பார்த்த உடனே ஜனங்கள் கிருஷ்ணன்கிட்டே போயி என்னப்பா நீ சொன்னபடி கேட்டேன். அவன் இந்த மாதிரி ஆரம்பிச்சிட்டானே - இப்ப மழை வந்தன்னா எங்கள் கெதி எல்லாம் என்னாகும்? இருண்டு இருக்குது. இடிஇடிக்குது. அதாகுது இதாகுதுன்னு போயி கிருஷ்ணன்கிட்டே அழுதாங்களாம். அவன் சொன்னானாம், “நீங்கள் அதுக்காகப் பயப்படாதீங்க. நான் உங்களை எல்லாம் காப்பாற்றுகிறேன்னு” பெரிய மலையை விரலிலே தூக்கி கொடையாட்டம் பிடிச்சிகிட்டானாம் (சிரிப்பு). வந்து எல்லோரும் அதுக்குள்ளே பூந்துக்கிட்டாங்கன்னு. இந்த மாடுகள் - மக்கள் மற்ற ஜீவப் பிராணிகள் அது சம்பந்தப்பட்ட ஜீவப் பிராணிகள் அவைகள் எல்லாம் வந்து அந்த மலைக்குள்ளே இருந்து, மழையினாலே தங்களுக்குக் கேடு இல்லாமல் தப்பிச்சிகிட்டாங்க. இதை இந்திரன் கேட்டு, ஆத்திரப்பட்டு அவன் அங்கே இருந்து, கிருஷ்ணன்கிட்டே வந்து நீ ஏன் இந்த மாதிரி பண்ணினேன்னு கேட்டானாம் இந்திரன். கிருஷ்ணன் சொன்னானாம் என்னத்துக்கு உனக்கு இதுவெல்லாம். இது மாதிரி செய்யுறதுன்னு என்ன கட்டாயம்? நீ உன்னால் ஆனதைப் பாரு - நான் என்னாலானதைப் பார்க்கிறேன்னு கிருஷ்ணன் சொன்னானாம். அப்புறம் இந்திரன் பார்த்து, ஓ இவன்கிட்டே நம்ம கை செல்லாது அப்படின்னு நினைச்சி மன்னிப்புக் கேட்டானாம். மன்னிப்பு கேட்டதுக்கு அப்புறம் உன் பண்டிகை உனக்கும் நடக்கட்டும்; என் பண்டிகை எனக்கும் நடக்கட்டும்னு இரண்டு பேரும் பண்டிகை நடக்கிறதுக்கு அனுமதிச்சாங்களாம். அது தான் போகிப் பண்டிகை என்கிறது.

போகி - என்றாலே இந்திரன்னு ஒரு அர்த்தம் உண்டு. அந்த வார்த்தைக்கு - சம°கிருத அகராதிப்படி ‘போகி’ன்னா ‘இந்திரன்’னு பேரு. இன்னொரு தத்துவார்த்தம் சொல்லுகிறவன், போகின்னா - போக போக்கியங்களை அனுபவிக்கிறது. ஆனதினாலே அதுக்கு போகின்னு பேரு வைச்சிதுன்னு அப்படியும் சொல்றாங்க. ஆகவே, எந்தக் கதையிலே சொன்னாலும் அது ஒரு முட்டாள்தனமாக கருத்தே தவிர வேறு இல்லை.

மற்றும் இந்த - மாட்டுப் பொங்கலுக்கு ஒரு கதை. இதெல்லாம் அவுங்க ஆதாரப்படி நான் சொல்றேன். மாட்டுப் பொங்கலுக்கு என்ன சொல்லி இருக்குதுன்னா? வருஷத்துக்கு ஒரு தடவை இந்த சங்கராந்தி மூதேவியாக வருகிறாளாம். அந்த மூதேவியாக வருகிற சங்கராந்தி இந்த மாடு கன்றுகளை எல்லாம் அழிக்க வேணும்னு சொல்லி புலி உருவம் எடுத்து மாடுகளை எல்லாம் பிடிக்கப் போவுதாம். அப்போது ஜனங்கள் கூட்டமாய்ச் சேர்ந்து புலியை விரட்டுகிறது. அது பிடிக்க வருகிறது. இவுக எல்லாம் புலியை விரட்டுறாங்க. அதுதான் அந்த மாட்டுச் சங்கராந்தீங்கிறதுக்கு விளக்கம் போட்டு இருக்கிறான்.

கரி நாள்-ன்னு என்னமோ வைச்சி அதிலும் மடத்தனமாய் முன்னே என்ன சொன்னோம் - பின்னாலே என்ன சொன்னோம்னு அவன் கவனிச்சி எழுதினவன் அல்ல. பார்ப்பான் ஆயிரம் கதையை எழுதி வைச்சாலும் தண்ணிலேகூட அறிவைக் கொண்டு எழுதியிருக்க மாட்டான். அப்புறம்தான் நமக்குக்கூட தெரிஞ்சிது. இந்த பொங்கல் வைக்கிறபோது “பொங்கலோ - பொங்கல்”, “புலியோ புலி”ன்னு சேவணி தட்டுவாங்க. இல்லாட்டா தட்டத்தைத் தட்டுவாங்க; கரும்புத் தடியிலே - எனக்கு ஞாபகம் இருக்குது. எங்கள் வீட்டிலே எல்லாம் எல்லாப் பொங்கலும் நடக்கும். மாட்டை எல்லாம் குளத்துக்குள்ளே விடுவாங்க. சாணியினாலே குளமாட்டம் கட்டி, அதிலே புல்லு - பூவு எல்லாம் போட்டு அதை மிதிக்கச் சொல்றபோது மாடு பாட்டுக்கு அதை மிதிச்சிகிட்டு வரும். ஒருத்தன் அதுக்கெல்லாம் பூசை பண்ணிகிட்டு வருவான். இதைக் குடியானவங்க சில பண்ணை ஆளுங்க தட்டத்தை எடுத்துக்கிட்டு கருமபினாலே தட்டுவாங்க. இங்கேயும் இருக்குதோ என்னமோ அந்த வழக்கம். அங்கே அந்த மாதிரி செய்வாங்க எங்க ஊரிலே, அப்போது சொல்றது, “பொங்கலோ - பொங்கல்!”, “புலியோ புலி” - “பொங்கலோ - பொங்கல்!”, “புலியோ புலின்னு” - அப்படி சொன்னதினாலே அந்த புலி பயந்துகிட்டு ஓடி மாட்டை பாதுகாக்கிறதாம். இதுக்குத்தான் ‘மாட்டுப் பொங்கல்’ன்னு பேரு வந்ததுன்னு எழுதியிருக்கிறான். இந்த மாதிரியான முட்டாள்தனமான கருத்துக்களில்தான் பண்டிகை பூராவையும் அமைச்சிகிட்டானுங்க.

நமக்கு எத்தனை பண்டிகை இருக்குதோ, அத்தனை பண்டிகையும் இந்த மாதிரியான முட்டாள்தனமான கடவுள் கதைகள் தான் மூடநம்பிக்கைதான். உள்ள பண்டிகைகளிலே ரொம்ப கவலையோட பார்த்தால் இந்த பொங்கல் பண்டிகைதான் - பகுத்தறிவுப்படி ஒப்புக் கெள்ளக் கூடியதாகவும், இயற்கையாய் நடக்கக் கூடியதாகவும் இருக்கிறதாகச் சொல்லப்படுகிற பண்டிகை.

(17.1.1968 அன்று கரூரில் பொங்கல் விழா சிறப்புக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி)

Pin It