கேரளா ஓர் அலாதியான மாநிலம். இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் இல்லாத தனித்தன்மைகள் இம்மாநிலத்திற்கு உண்டு. பார்ப்பபணியத்தில் ஊறி திளைத்த மாநிலமும் இது தான்.

muslim boysஇஸ்லாம், மார்க்சியம் கிறிஸ்தவம், தலித்தியம், சமூக நீதி கோட்பாடு என ஒவ்வொரு கொள்கை கோட்பாடும் கொடி கட்டி பறப்பதும் இங்கு தான். பழமையின் காவலர்களும், புதுமையின் காதலர்களும், கை கோர்த்து உலா வரும் மண் இது. இருப்பினும் அரசியல், சமூகம் உள்ளிட்ட துறைகளில் ஒவ்வொரு சமூகமும் தங்களின் பங்கை கிட்ட தட்ட சரி சமமாகவே பெற்றுள்ளனர்.

ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் அதிக அளவு ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம்கள் செயல்படுவதும் இங்கே தான். அரசியல் சம நிலை இங்கு நிலவுவதால் மத வாத பாசிசம் இங்கே நுழைய முடியவில்லை. இனியும் நுழைய முடியுமா ? அவ்வாறு நுழைய முயன்றால் என்ன நடக்கும் என்பதை அண்மையில் இந்த நாடு கண்டது.

பாசிசம் நேரடியாக நுழைய முடியாத சூழலில் அதுயென்ன செய்யும் ? ஒற்றுமையுடன் வாழும் மக்கள் இடையே , சகோதரத்துவம் பேணும் மக்கள் இடையே பொய் கதை பரப்பி , பரஸ்பரம் சந்தேகங்களை விதைத்து வெகு மக்களை பீதிக்குள்ளாக்குகிறார்கள்.

தீவிர வாதி,
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதி,
காஷ்மீர் தீவிரவாதி
என்ற சொற்கள் எல்லாம் இவர்களால் தான் உருவாக்கப்பட்டன. தீவிரவாதி என்ற சொல் அளவுக்கு எந்த வார்த்தையாவது கேலி கூத்தாக்கப்பட்டதா ? என்று யோசித்தால் இல்லை என்று தான் கூற வேண்டியதிருக்கும்.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிர வாதி என்று தலை நகர் டெல்லியில் ஓங்கி கத்தினால் நம் நாட்டில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அந்த புண்ணியவான் தன்னைத்தான் அழைக்கிறார்கள் என திரும்பி பார்த்தாலும் வியப்படைவதிற்கில்லை.

காஷ்மீர் தீவிர வாதி என்ற சொல்லை பரப்பியவன் எவனாக இருந்தாலும் அவன் பரம்பரை முட்டாளாக தான் இருக்கவேண்டும் . காஷ்மீரி எந்த நாட்டில் வந்துடா தீவிரவாதம் செய்தான் ? அவன் தனது மாநிலத்திற்குள் இருந்து போராடுகிறான் . பிரச்னைகளை பேசி தீர்க்கவேண்டிய பாஜக அரசு தீர்த்து பேசுகிறது அப்பாவிகளை.

பண்டிட்களை காஷ்மீர் பிரிவினை வாதிகள் விரட்டியதற்காக பழி தீர்க்க இந்திய ராணுவம் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டு கொலையாட்டம் போடுகிறது என்று சொல்வோரும் உண்டு.

காஷ்மீர் இளைஞனுக்கு குறைந்த பட்சம் பெல்லட் குண்டுகளால் பார்வை பறிபோகும் . அதிக பட்சம் துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்கப்பட்டு உயிர் போகும் . ஆனால் காஷ்மீர் யுவதிகளின் நிலை ? குறைந்த பட்சம் என்பதே கிடையாது. உச்சபட்சம் மட்டும் தான் . கற்பு பறிபோகும் கத்தினால் உயிரும் சேர்ந்து.

இந்த நிலையிலும் காஷ்மீரிகள் தீவிரவாதிகள் தான் என்று நம் வெகுஜன ஊடகங்களும் அரசியல் வாதிகளும் எவ்வளவு காலங்கள் சொல்லிக்கொண்டு இருக்கப்போகிறார்களோ தெரியவில்லை.

மேற் குறிப்பிட்ட சொல்லாடல்களை வைத்து கொண்டு கேரளாவில் ஒரு ஆணியையும் பிடுங்க முடியாது. என்பதை பாசிச சக்திகள் தெரிந்தே வைத்து இருந்தார்கள். கல்வி கற்றவர்கள் அதிகம் நிறைந்த மாநிலமல்லவா ? இங்கு ஐரோப்பிய பாணியில் , அமெரிக்கன் ஸ்டைலில் , யூதர்களின் தொனியில் நச்சு விதையை பரப்ப முயன்றனர்.

இஸ்லாம் போபியா லண்டன் மாநகரத்தில், பாரிஸ் நகர வீதிகளில் , ஸ்பெயினின் மேட்ரிட்டில், பிரஸ்ஸல்ஸில் மியூனிச்சில் , சிட்னியில் , கேன் பர்ராவில் பரப்பப்பட்ட அதே நச்சுப்புகை கொச்சினில் , திருவனந்த புரத்தில் கோழிக்கோட்டில் மலப்புரத்தில் திட்டமிட்டு பரப்பப்பட்டது. வெளி நாடுகளுக்கு குறிப்பாக அரபு நாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் அங்கு ஐ எஸ் ஐ எஸ் என்ற பயங்கர அமைப்பில் சேர்க்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் மட்டும் தான் என்று இல்லை கிறிஸ்தவர்கள் ஹிந்துக்கள் கூட மூளை சலவை செய்யப்பட்டு மதம் மாற்றப்பட்டு ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகளாக்கப்படுகிறார்கள் அதற்கு இங்குள்ள முஸ்லிம்களும் உடந்தை. . அவர்களோடு நெருங்கி பழகுவதே மிக அபாயகரமான விஷயம் தான் என மலையாள கரையோரம் சந்துக்கு சந்துக்கு மூலைக்கு மூலை மூளையற்றதுகளின் முனகல்கள் பரவின.

வாழ்வாதாரத்துக்கு பெருமளவு வளைகுடா வை நம்பி இருக்கும் கேரளா மக்களுக்கு இந்த நச்சு பரப்புரை பீதியில் ஆழ்த்த தொடங்கியது. ஆனால் எல்லாம் குறுகிய காலம்தான் . புளுகு பரப்புரை புறப்பட்ட இடம் எதுவென்று கண்டறிந்த பின் விஷ ஜந்துவை கண்டால் அதனை நசுக்க என்ன ஆயுதத்தை எடுக்கலாம் என கோபத்துடன் யத்தனிப்பது போல் புளுகு பரப்புரையை வீழ்த்த நாலா புறமிருந்து ம் ஆயுதங்கள் புறப்பட்டன.

ஜூலை மாத தொடக்கத்தில் பாலக்காடு மற்றும் காசர் கோடிலிருந்து 15 இளைஞர்கள் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானத்திற்கு சென்று விட்டதாகவும் இது மிகவும் அபாயகரமானது என்றும் பாஜகவின் கேரளா மாநில பிரிவின் தலைவர் கும்மா நம் ராஜசேகர் தெரிவித்தார்.

இதை போன்று 2012ல் ஒரு புளுகு பரப்புரை பரப்பப்பட்டது. . கேரளாவில் வேக வேகமாக கேரளா இளம் பெண்கள் முஸ்லிமாக மாறுகிறார்கள். முஸ்லீம் இளைஞர்கள் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ யுவதிகளை திட்டமிட்டு காதலித்து மதம் மாற செய்கிறார்கள் . அதன்பெயர் லவ் ஜிஹாத், என்றும் பாசிச சக்திகள் பரப்பின . லவ் ஜிஹாத் விவகாரம் பூதாகாரமாக பரவவே அன்றைய கேரளா முதல்வர் உம்மன் சாண்டியே சட்டமன்றத்தில் விளக்கம் அளித்து பிரச்னையை முடித்து வைக்கவேண்டிய நிலை.

உம்மன் சண்டி தனது சட்டமன்ற உரையில் 2002 ல் இருந்து 2012 வரை கேரளாவில் 2500 பெண்கள் முஸ்லிம்களாக மாறி இருக்கிறார்கள் அதற்கு பிரத்யேக காரணம் எதுவும் இல்லை. . அது லவ் ஜிஹாதும் அல்ல. இது போன்ற வதந்திகளை பரப்புவது தவறு என்றவர் லவ் ஜிஹாதுக்கு பக்க பலமாக செயல்பட்டதாக மார்க்க பீடங்களான தர்பிய்யத்துல் இஸ்லாம் , மவூனத்துள் இஸ்லாம் என்ற நிறுவனங்கள் மீது குற்றம் சாட்ட முடியாது. அவை சட்ட விரோதமானதும் அல்ல. அவை கம்பெனி சட்டத்தின்படி முறையாக பதிவு செய்யப்பட்டவை . அவை மீது நடவடிக்கை எடுக்க முடியாது .

ஆனால் லவ் ஜிஹாத் என்ற புளுகு பரப்புரை யாராவது பரப்பினால் நடவடிக்கை பாயும் என சுட சுட பதில் அளித்தார். அதோடு அந்த விவகாரம் சூரியணைக்கண்ட பனித்துளி போல் மறைந்தது.

தற்போது இடது சாரிகள் ஆட்சியில்பாசிச சக்திகளால் பரப்பப்பட் இஸ்லாம் போபியா என்ற நச்சு பரப்புரையை இடது சாரிகள் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதை அறிய ஆவலாக உள்ளது அல்லவா ?

இடது சாரி பத்திரிக்கையான தேசாபிமானி இவ்வாறு கூறியது காணாமல் போன இளைஞர்கள் எமன் நாட்டில் உள்ள தம்மாஜி என்ற பகுதிக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றதாக ரா உளவு அமைப்பு உண்மையை உடைத்து சொன்னது. தேசாபிமானி பத்திரிக்கை அதிகாரபூர்வ செய்தியை ஆணித்தரமாக அறிவித்த பின் பும் கேரளாவின் முன்னணி செய்தி ஏடுகளான மாத்ரு பூமியும் மலையாள மனோரமா வும் ஏற்கனவே பரப்பிய பழைய புளுகு செய்திகளையே பரப்பின. மாறும் வழியை காணோம். ஆதாரங்களுடன் செய்திகளை சொல்லிய பிறகும் முன்னணி ஊடகங்கள் புறக்கணிப்பது என்ன நியாயம் ?

காணாமல் போனதாக சொல்லப்பட்ட ரிபைலா என்ற இளம்பெண் தான் எந்த தீவிர வாத அமைப்பிலும் சேரவில்லை. என ஊடகங்களுக்கு அனுப்பிய வாட்சப் வாய்ஸ் மெசேஜில் தெரிவித்து இருந்தார். இதையும் தேசாபிமானி தவிர மாத்ருபூமியும் மலையாள மனோரமாவு ம் வெளிப்படுத்தவில்லை .

மீடியாக்களின் கற்பனைகள் எல்லை மீறின பாலக்காடை சேர்ந்த சகோதரர்களான பெஸ்டன் வின்சன்ட் , பேக்ஸ்டன் வின்சன்ட் இருவரும் ஜாகிர் நாயக் உரையால் உந்தப்பட்டு முஸ்லிம்களான மாறினார்களாம் . இவ்வளவு முக்கியமான சமாச்சரங்கள் எல்லாம் நடக்கும்போது ஜாகிர் நாயக் பெயரை கொண்டு வராமல் இருந்தால் எப்படி ? இனி ஜாகிர் நாயக் வதந்தி செய்திகளில் அடிபடுவார். மும்பையில் நடந்தாலும் சரி உள்ளூர் முட்டு சந்துகளில் நடந்தாலும் சரி ஜாகிர் நாயக் என்ற கேரக்டர் எல்லா நாடகங்களிலும் வலு கட்டாயமாக சேர்க்கப்படடலாம். ஜாகிர் நாயக் சங்கிகளின் வெறும் வாய்க்கு அவலானார்.

ஜாகிர் நாயக் உரையால் உந்தப்பட்ட அந்த வின்சென்ட் சகோதரர்கள் தீவிர வாத பாதைக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். தீவிர வாத ப்பாதைக்கு இளைஞர்களை இழுத்து செல்லும் ஜாகிர் நாயக்கை மாநிலத்தின் மூன்றாவது பெரிய கட்சியான கேரளா முஸ்லீம் லீக் ஆதரிப்பது வெட்கக்கேடு ஐ யூ எம் எல் பயங்கர வாத பாதையை நோக்கி நகர்கிறதா ? என்று குறுக்குப்புத்தி ஊடகங்கள் சில பீதியினை பரப்பின.

ஏசியா நெட் தொலைக்காட்சி கூட இந்த ஈன செயலில் ஈடுபட்டது பரவலான அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

கேரளாவில் பலவீனமான சங் பரிவாருக்கு வெகு ஜன ஊடகங்கள் உத்வேகமும் ஊக்கமும் வழங்கி கொண்டு இருந்த நிலையில் இடது சாரிகளும் காங்கிரசும் எழுத்தாளர்களும் எதிர்த்து கருத்தியல் ரீதியாக பதிலடி கொடுக்க அதிரடியாக களமிறங்கினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் கல்வி அமைச்சருமான எம் ஏ பேபி முஸ்லிம்களுக்கு எதிரான வாதங்களை உடைக்க ஆரம்பித்தார். தீவிரவாதம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. அதைப்போல இஸ்லாம் போபியா என்ற முஸ்லீம் வெறுப்புணர்வை நாம் அனுமதிக்க முடியாது என்றார். இந்த வதந்தி குறித்து முறையான விசாரணை வேண்டும். வதந்தி பரப்பிய சங் பரிவார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். சங் பரிவார் பரப்பும் இஸ்லாம் போபியா என்ற சந்தேக வலையில் இருந்து நாம் விழிப்புடன் இருக்கவேண்டும். என்றார்.

சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான பால் சக்கரியா பேபியுடன் கரம் கோர்த்தார். உண்மை இல்லாத விஷயத்தை பரப்புவதால் சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்த சங் பரிவார் திட்டமிடுகிறது. என்றார்.

கேரளமுதல்வர் பினராயி விஜயன் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏகே ஆண்டனி , மாநில காங்கிரஸ் தலைவர் வி எம் சுதீரன் உள்ளிட்ட ஆளுமைகளும் தங்கள் கண்டனங்களை வன்மையாக தெரிவித்தனர்.

முஸ்லீம் சமூகத்தை திட்டமிட்ட அவதூறுகள் மூலம் களங்கப்படுத்தும் சதிகாரர்கள் விஷயத்தில் மாநில அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் காங்கிரசின் ரமேஷ் சென்னிதாலா சட்டமன்றத்தில் ஒரே போடாக போட்டார்.

பதிலடி அதிரடியாய் புறப்பட்டது கண்டு அரண்டு போனது பாசிச முகாம்.

- அபூஸாலிஹ்

Pin It