கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகம் முழுவதும் கனிமவளக் கொள்ளை என்பது நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு பூதாகரமாக நடந்து வருகிறது. தாயின் மடியையே அறுத்து ரத்தத்தைக் குடிப்பதைப் போல, இந்தக் கனிமவளக் கொள்ளையர்கள் மிக பிரமாண்டமான இயந்திரங்களை வைத்து பூமித்தாயை அறுத்து கூறுபோட்டுக் கொள்ளையடித்து வருகின்றனர். கனிமங்களை முறையாக எடுக்க பல சட்டங்களும், எண்ணற்ற விதிமுறைகளும் இருந்தாலும் கனிமவளக் கொள்ளையர்களுக்கு மட்டும் அரசின் எந்தச் சட்டங்களும் ஒரு பொருட்டே அல்ல.

sagayam 295

சில அரசு அதிகாரிகளின் நடவடிக்கையின் காரணமாகவே, பேசப்படாமல் இருந்த அதிபயங்கரமான கனிமவளக் கொள்ளை வெளியே அம்பலமாகி உள்ளது. குறிப்பாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த உ.சகாயம் இ.ஆ.ப அவர்கள், மே 19, 2012 அன்று தொழிற்துறைச் செயலாளருக்கு மேலூர் வட்டத்தில் 4 கிராமத்தில் மட்டும் 16,338 கோடி மதிப்புள்ள கிரானைட் முறைகேடுகள் பற்றிக் கடிதம் எழுதியதும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ்குமார் அவர்கள் வைகுண்டராஜன் அவர்களின் தாதுமணல் நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கையினால்தான், மாபெரும் கனிமவளக் கொள்ளை பற்றிய பல்வேறு உண்மைகள் மக்களுக்கும், உலகிற்கும் ஓரளவிற்கு உணர்த்தியது.

கனிமவளங்கள் முறைகேடாக எடுக்கப்படுவதை எதிர்த்து மக்கள் தொடக்கம் முதல் எண்ணற்ற போராட்டங்கள் நடத்தியபோதும், போராடிய மக்களை காவல்துறை மற்றும் குண்டர்களால் தாக்கப்பட்டு கொலையானபோதும் கூட பேசாத பல ஊடகங்கள், கனிமவள முறைகேடுகளை வெளிப்படுத்திய மாவட்ட ஆட்சித் தலைவர் மீது அரசு நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாக பணிமாற்றம் செய்தபோது பேசியது. உலகம் பல்வேறு உண்மையை உணர்ந்தது.

மக்கள் முன் அம்பலமான பல்வேறு கனிமவள முறைகேடுகள் மீது தமிழக அரசு உண்மையான நடவடிக்கை ஏதும் எடுக்காமல், கனிமவள முறைகேடு செய்தவர்களை பாதுகாத்துக் கொண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுபோல் கண்துடைப்பு நாடகம் மட்டும் நடத்தி வந்தது.

அதன் விளைவாக கனிமவள முறைகேடுகள் செய்தவர்கள் மீது உண்மையான நடவடிக்கை வேண்டும். கனிம வள முறைகேடுகள் மீதான நடவடிக்கையை ஏற்கனவே மதுரை, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த உ.சகாயம் இ.ஆ.ப அவர்கள் மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தின் கதவைத் தட்டினர். கனிமவளக் கொள்ளைகள் அம்பலமாகி நாறிப் போய் உள்ள இன்றைய நிலையில், தமிழகம் முழுக்கவும் நடைபெற்றுள்ள கனிமவளக் கொள்ளையை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் சகாயம் அவர்களை சிறப்பு அதிகாரியாக 22-09-2014 அன்று உத்தரவிட்டது.

கனிமவள முறைகேடுகள்:

கனிமங்கள் என்பவை இயற்கையின் சொத்து. மக்களின் பொதுச்சொத்து. சமுதாயத்தின் சொத்து. இப்படிப்பட்ட மக்களின் பொதுச்சொத்தை அரசு மட்டுமே எடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டங்களெல்லாம் 1990களில் பன்னாட்டு கம்பனியின் ஏவலாளக இருக்கும் இந்திய அரசால் தூக்கி எறியப்பட்டது. 1990களில் புதிய பொருளாதாரக் கொள்கை, காட் ஒப்பந்தம் (டங்கல் திட்டம்), உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற பெயரில் தனியாரும் கனிமவளங்களை எடுக்கலாம் என சட்டங்களை இந்திய அரசு கொண்டு வந்தவுடன், கனிமவளக் கொள்ளை என்பது மிகப்பெரிய உச்சத்திற்குச் சென்றது.

இயற்கையோடு மனிதன் இயைந்துதான் வாழவேண்டும். இயற்கையை மனிதன் தேவைக்கு மேல் சுரண்டினால் இயற்கை அதற்கு மிகக் கடுமையாக எதிர்வினையாற்றும். குமரி மாவட்டம் மணவாளக் குறிச்சியில் உள்ள இந்திய அருமணல் ஆலை (ஐ.ஆர்.இ) போன்ற இந்திய அரசின் நிறுவனங்களே கனிமங்களை எடுத்துப் பயன்படுத்துவதில் அரசின் சட்டத்தை மதிக்காமல் மீறும்போது, சுரண்டல் கொள்ளைக்காகவே இத்தொழிலுக்கு வந்துள்ள ஆளும் அரசின் ஆசிபெற்ற கனிமவளக் கொள்ளையர்கள் சட்டத்தைத் தூக்கி காலின் கீழ் போட்டுக்கொண்டு, அதிகாரிகளை விலைபேசி பணியாதவர்களை மிரட்டி யாரும் கற்பனைகூடசெய்ய முடியாத அளவு மாபெரும் கொள்ளை சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி நடத்தி வருகின்றனர்.

பொதிகை மலையில் உருவாகி, ஓடை ஆறுகளால் அடித்து வரப்பட்டு குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் படிந்துள்ள பல லட்சம் ஆண்டுகளாக சேகரித்து வைக்கப்பட்டுள்ள அரியவகை கனிமங்களான இல்மனைட், கார்னெட், சிர்கான், ரூட்டைல், மோனோசைட் ஆகியவற்றை உள்ளடக்கிய தாதுமணலை தனியார்கள் அள்ளத் தொடங்கியவுடன் அழிவு என்பது பேரழிவாக மாறியது.

அரசின் விதிமுறைகளான கடற்கரையோரத்தில் தாதுமணல் அதிகபட்சம் ஒரு அடியும், உட்பகுதியில் அதிகபட்சம் ஒரு மீட்டர் (மூன்றரை அடி) மட்டுமே எடுக்க வேண்டும், அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற விதிகளெல்லாம் காற்றில் பறந்தது. தாது மணலை மண்வெட்டி போன்ற கைகளால் மட்டுமே பயன்படுத்தப்படும் கருவிகளைக் கொண்டு அள்ள வேண்டும், இயந்திரங்களை வைத்து அள்ள வேண்டுமெனில் அரசு தொழிற்துறை செயலரின் அனுமதி பெறவேண்டும் என்பது தூக்கியெறியப்பட்டு ராட்சத இயந்திரங்களைக் கொண்டு அள்ளப்பட்டு வருகிறது. சாதாரண கடற்புரத்தில் கிடைக்கும் மணல்தானே என அனைவரும் நினைத்திருக்க, இந்த அரியவகை தாதுமணலின் சர்வதேச சராசரி விலையோ டன் ஒன்றுக்கு ஒரு லட்சம்(1,00,000) ஆகும்.

தமிழகத்தில் உள்ள 78 தாது மணல் குவாரிகளில் 60க்கும் மேற்பட்டவை வைகுண்டராஜன் குடும்பத்தினருக்குச் சொந்தமானது. தினசரியும் பலநூறு கோடி ரூபாய்கள் மதிப்புள்ள கதிர்வீச்சுத் தன்மையை, கனிமங்களை உள்ளடக்கிய தாதுமணல் கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முறைகேடாக அள்ளப்பட்ட தாது மணலின் மதிப்பு மட்டும் குறைந்தபட்சம் 10 லட்சம் கோடிகளைத் தாண்டும் என்கின்றனர் கடலோர ஆய்வாளர்கள்.

இயற்கையின் அருட்கொடையான கிரானைட் பாறைகளாக உள்ள மலைகள் தமிழகத்தில் 20 மாவட்டத்திற்கும் மேல் உள்ளது. இதனுடைய மதிப்பு தெரியாமல் இருந்தவரை இதற்கு எவ்விதப் பாதிப்புகளும் இல்லாமல் இருந்தது. 80களின் இறுதியில் முதலில் தமிழக அரசு நிறுவனமான டாமின் நிறுவனம், இதை வெட்டியெடுக்கத் தொடங்கியது. 1990களுக்குப் பின்பு பெரும்பாலான கிரானைட் குவாரிகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டது. தமிழக அரசின் பல டாமின் குவாரிகளும், தனியாருக்கு லீசுக்கு கொடுக்கலாம் என்ற பெயரில் தனியாருக்கு கொடுக்கப்பட்டது.

அரசு விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் கிடைக்கும இடத்தில் எல்லாம் கிரானைட் எடுத்ததால் கடந்த 20 ஆண்டுகளாக மதுரையைச் சுற்றியுள்ள 45 கி.மீ தூரத்தில் மட்டும் 60,00 ஏக்கர் பாசன விளைநிலங்கள், 60 கிராமங்கள், 72 கண்மாய்கள், 90 நீர்வழிப் படுகைகள், குளங்கள், பஞ்சமி நிலங்கள் நாட்டின் தொன்மையைப் பறைசாற்றும் தொல்லியல்துறை நினைவுச் சின்னங்கள், பெரியாறு பாசனக் கால்வாய் நிலங்கள், வெள்ளிமலை உயிரினங்கள் என மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சூறையாடப்பட்டு உள்ளது. கிருட்டிணகிரி மாவட்டமும் கிரானைட் கொள்ளையர்களின் கடுமையான சூறையாடுதலுக்குப் தப்பவில்லை. கிரானைட் பாறைகள் இருந்தாலே அப்பகுதி பேரழிவுதான் என்பது எழுதப்படாத விதியாக தமிழகத்தில் கிரானைட் கொள்ளயர்களால் மாற்றப்பட்டது.

அரசின் விலை கிரானைட் கற்கள் ஒவ்வொன்றும் 5,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே, ஆனால், உண்மையில் மேலூர் ஒயிட், எல்லோ ஒயிட் போன்ற கிரானைட் கற்கள் ஒரு கனமீட்டர் முதல் தரம், 1,25,000 இரண்டாம் தரம் 75,000 என சர்வதேச சந்தையில் விற்கப்படுகிறது. ஒவ்வொரு கிரானைட் கற்களும் சுமார் 5 க.மீட்டர் முதல் 12 க.மீட்டர் வரை உள்ளது. முதல் தரமான ஒரு கிரானைட் கல் 7 லட்சம் முதல் 15 லட்சம் வரை விலை போகிறது. தமிழகத்தில் உள்ள சுமார் 20 மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிரானைட் குவாரிகள் பி.ஆர்.பழனிசாமி போன்ற சிலரிடம் மட்டுமே உள்ளது. சர்வதேச சந்தையில் மிகவும் மதிப்பு வாய்ந்த கிரானைட் கற்கள் முறைகேடாக வெட்டப்பட்டது மட்டும் 10 லட்சம் கோடியைத் தாண்டும். கிரானைட் குவாரிகளில் 100க்கும் மேற்பட்ட அப்பாவிகள் நரபலி என்கிற பெயரில் பலிகொடுக்கப்பட்டுள்ளார்கள் என்பது ஒரு தனியான பயங்கரக் கதை.

தமிழகத்தில் ஓடும் நதிகளில,பெரும்பாலானவற்றில் ஆற்றுமணல் வரைமுறையற்று இரக்கமில்லாமல் அள்ளப்படுகிறது. ஆறுகளில் மணல் என்பது ஏதோ வீணாகக் கிடப்பதல்ல. ஆற்றில் மணல் இருந்தால்தான் ஓடும் நதிநீரை பஞ்சுபோல பிடித்து ஈர்த்து வைத்திருக்கும். மணல்தான் தண்ணீரை சேமித்து வைக்கின்றது. ஆறுகளில் தண்ணீர் ஓடாதபோதுகூட மணலுக்குக் கீழே தனியாக ஒரு நீரோட்டம் ஓடிக் கொண்டிருக்கும். இதனால்தான் ஆற்றில் எங்கே கைகளால் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கிறது.

கேரளத்தில் ஓடும் 45 ஆறுகளில் எந்த ஓர் ஆற்றிலும் கேரள அரசு மணல் அள்ள அனுமதிக்கவில்லை. ஆந்திரத்தில் கிருஷ்ணா, கோதாவரி போன்ற மிகப் பெரிய ஆறுகளில்கூட இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளக்கூடாது என்ற அரசின் விதி கடுமையாக உள்ளது.

ஆனால், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் 1 மீட்டர் ஆழம் மட்டும் மனித சக்தியைப் பயன்படுத்தி மணல் அள்ளலாம் என அனுமதி வாங்கிவிட்டு பல மீட்டர்கள் ஆழத்தில் மணல் அள்ளப்படுகிறது. பல இடங்களில் மணல் அள்ளுவது தரையைத் தட்டி களிமண் தெரியும் அளவு அள்ளப்பட்டுள்ளது. களிமண் தெரியும் வரை அள்ளியதால் பல இடங்கலில் ஆற்றின் நடுவே பல்வேறு தாவரங்களும், சீமைக் கருவேல மரம் போன்றவை செழித்து வளர்ந்து உள்ளது. தொழிற்துறை செயலரின் அனுமதி இல்லாமல் ஜேசிபி, பொக்லைன், ஹிட்டாச்சி போன்ற கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி அள்ளக்கூடாது என்பது அரசின் விதி. இவையெல்லாமல் காற்றில் பறக்கவிடப்பட்டு ராட்சத இயந்திரங்களைக் கொண்டு அள்ளப்படுகிறது. அனுமதி பெற்ற மணல் குவாரிகளில் மட்டுமின்றி பார்க்குமிடங்களில் எல்லாம் ஆற்றுமணல் அள்ளப்படுகிறது.

ஆற்றுமணல் கொள்ளையை எதிர்த்து மக்களின் தொடர்ந்த போராட்டத்தாலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு மூலமும் நீதிபதி சம்பத் அவர்கள் ஒரு நிபுணர் குழுவை அமைத்து அதனுடைய பரிந்துரைப்படி 1.10.2003 முதல் அரசு மட்டுமே மணல் குவாரியை நடத்த வேண்டுமென உத்தரவிட்டார். அதற்கு ஏற்ப, அரசு மணல் குவாரியை பொதுப்பணித்துறை மூலம் ஏற்று நடத்தத் தொடங்கியது. முறைப்படுத்துகிறேன் என்ற பெயரில் அரசு, மணல் குவாரிகளை நடத்துவதாகக் கூறினாலும் ஆளும் அரசின் ஆசி பெற்றவர்களை மணலை லாரிகளின் ஏற்றும் ஒப்பந்தம் (லோடிங் கான்டிராக்ட்) என்ற பெயரிலும் இரண்டாம் விற்பனை (செகண்ட் சேல்ஸ்) என்ற பெயரிலும் ஆறுமுகசாமி, கே.சி.பழனிசாமி, படிக்காசு போன்ற மணல் கொள்ளையர்களிடம் மட்டுமே அனைத்து மணல் குவாரிகளும் இருந்தது. தற்போதைய ஆட்சியில் ஆறுமுகசாமி மட்டுமே அனைத்து மணல்குவாரிகளுக்கும் முற்றுரிமை பெற்றவராக வலம்வந்து தற்போது அவரும் மாற்றப்பட்டு ராமசந்திரன் என்பவர் எடுத்து வருகிறார். அரசு 3 யூனிட் கொண்ட ஒரு லாரி மணல் 945 என விலை நிர்ணயித்திருந்தாலும் அதன் உண்மையான விற்பனை விலையாக ரூ.15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை உள்ளது. இந்த விலையை தீர்மானிப்பவர்கள் மணல் கொள்ளையர்கள் மட்டுமே.

தமிழ்நாட்டில் எடுக்கப்படும் ஆற்றுமணல் அனைத்தும் தமிழகத்தின் கட்டட வேலைக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. இவர்கள் சுரண்டும் ஆற்றுமணல் அளவிற்கும், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கட்டிட வேலைகளுக்கும் மிகப்பெரும் இடைவெளி உள்ளது. தமிழகத்தில் அள்ளப்படும் ஆற்றுமணல் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் கூட கடத்தப்பட்டு வருகிறது.

கேரளத்தில் பல இடங்களில் காவிரி, அமராவதி, தாமிரபரணி ஆற்று மணல் கிடைக்குமென பெயர்ப்பலகைகள் தொங்குகிறது. மாலத்தீவு உட்பட பல வெளிநாடுகளுக்கு ஆற்று மணல் கடத்தப்படுகிறது. மாலத்தீவுக்கு கொண்டு செல்லப்படும் ஆற்று மணலின் அளவு ஆண்டிற்கு 11 லட்சம் டன்னாகும். இயற்கையின் மடியில் பாலைக் குடிப்பதற்கு பதிலாக இயற்கையின் மடியையே அறுத்து ரத்தம் குடிக்கும் இக்கொள்ளையர்களால் தமிழகத்தின் ஆற்று வளமே அழிந்துவிட்டது. ஆற்றின் நீர்மட்டமே தாழ்ந்துவிட்டது. ஆற்றில் எங்கு கைவைத்து தோண்டினாலே தண்ணீர் வரும் என்ற நிலை அழிந்தே போய்விட்டது. ஆறுகளில் ராட்சச இயந்திரங்களை வைத்து மணல் அள்ளக்கூடாது என உயர்நீதிமன்றம் 2010, 2012, 2013 ஆண்டுகளில் பல்வேறு தீர்ப்புகளை கொடுத்திருந்தாலும் அது எதுவும் மணல் கொள்ளையை தடுக்க உதவவில்லை. 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆற்று மணல் அள்ளியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

கனிமவளக் கொள்ளையைப் பொறுத்தவரை இவர்களுக்கு குவாரி நடத்த அரசின் அனுமதி பெற்ற இடங்கள் என்பதெல்லாம் பெயர் அளவிற்குத்தான் சில இடங்களில் மட்டும் அனுமதி பெற்ற இவர்கள், கனிமங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அவையனைத்தையும் தங்கள் விருப்பப்படி வெட்டி எடுத்து சூறையாடி இயற்கையை நாசமாக்கி வருகிறார்கள். ஆட்சிக்கு வந்த அனைத்து அரசியல்வாதிகளும் பெரும்பாலான அதிகாரிகளும் இவர்களின் சட்டைப் பைக்குள்ளேயே அடங்கி இருக்கின்றனர். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள்தான் ஒரு நிழல் அரசாங்கமாகவே செயல்பட்டு வருகின்றனர். ஆறுமுகசாமி போன்ற மணல் கொள்ளையர்கள் அடுத்து அமையவிருக்கும் அரசை நான்தான் தீர்மானிப்பேன் என்று வெளிப்படையாக கூட்டங்களில் பேசும் அளவிற்கு இவர்களின் அசுர பலம் உள்ளது.

தாதுமணல், கிரானைட், ஆற்றுமணல் மட்டுமின்றி கல்குவாரிகள், செம்மண், சவுடுமண், வெங்கைக்கற்கள், சுண்ணாம்புக்கல், பாக்சைட் என தமிழகத்தில் உள்ள் எண்ணற்ற கனிமக்குவாரிகள் பலவும், கனிமவளக் கொள்ளையர்கள், அரசியல் வாதிகள், அதிகாரிகள் என்ற கூட்டணியோடு முறைகேடாக நடைபெற்று வருகிறது.

இந்தியா முழுக்க உள்ள முறைகேடாக சொத்துச் சேர்த்து வைத்துள்ளவர்கள் வெளிநாடுகளில் கருப்புப் பணமாக மட்டும் வைத்துள்ள தொகை சுமார் 30 லட்சம் கோடி முதல் 40 லட்சம் கோடிகள் இருக்குமென கணக்குச் சொல்கிறார்கள். அந்தத் தொகையை விட கூடுதலான தொகைக்கு தாதுமணல், ஆற்றுமணல், கிரானைட் குவாரி நடத்தும் கொள்ளையர்களால் கனிமவளங்கள் தமிழகத்தில் இதுவரை சூறையாடப்பட்டுள்ளது.

கனிமவளக் கொள்ளையர்கள் கொள்ளையடித்து வைத்துள்ள தொகையென்பது விடுதலை பெற்றதாக சொல்லப்பட்டு வரும் தமிழகத்தின் 67 ஆண்டுகால பட்ஜெட் தொகையைவிட அதிகமானது. இப்படிப்பட்ட தாதுமணல், கிரானைட் கொள்ளையர்களுக்குத்தான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்த ஏற்றுமதியாளர் விருது அளித்து கௌரவித்து வருகின்றன நாட்டை ஆளும் கொள்ளைக்கார அரசுகள்.

பலருக்கும் கேள்விகள் எழலாம். அரசின் அனுமதி பெற்று தொழில் செய்வதை கொள்ளை எனக் கூறலாமா என்பதுதான் அது. மனிதனால் உருவாக்க முடியாத, மறு உருவாக்கம் செய்ய முடியாத சமூகத்தின் சொத்தான இயற்கையை வரைமுறையற்று சூறையாடுபவர்களை கொள்ளையர்கள் என்பதைத் தவிர வேறு எந்த வார்த்தையாலும் நம்மால் கூறி விட முடியாது. தமிழ் மொழியில் வேறு வார்த்தைகளே இல்லாததால்தான் கொள்ளை என நாம் கூறினாலும், இது முழுமையாக கனிமவள கொள்ளையர்களின் குற்றத்தின் தன்மையைக் குறிப்பிடவில்லை.

இந்தக் கொள்ளை என்ற சொல்லுக்குள் ”லஞ்சம், மோசடி, ஊழல், அத்துமீறல், அராஜகம், நம்பிக்கை துரோகம், தேசத்துரோகம், சுற்றுசூழல் நாசம், விவசாயம் அழிப்பு, கடல்வளம் அழிப்பு, இயற்கைவளம் அழிப்பு, உயிர்மய பன்மையச் சூழல் அழிப்பு, மனிதகுலத்தையே கருவறுப்பது, மண்வளம் அழிப்பு, சமூக அமைதி அழிப்பு, மனிதர்களுக்கிடயே வெறுப்புத் தன்மையை வளர்ப்பது” என எண்ணற்ற கொடுமைகளும், கொடூரங்களையும் உள்ளடக்கி உள்ளது.

கனிமவள முறைகேடுகள் வெளியான விதம்:

25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கனிமவள முறைகேடுகள் பற்றி இன்று அனைத்துத் தரப்பு மக்களும் ஓரளவு வெளிப்படையாக பேசும் அளவிற்கு நிலைமை மாறி உள்ளது. இந்த முறைகேடுகள் எவையும் தமிழகத்தை ஆளும் அரசுகளால் கண்டுபிடிக்கப்பட்டு வெளிக்கொணரப்பட்டது இல்லை. கனிமவள முறைகேடுகள் எல்லாம் மக்கள் நலனில் அக்கறைகொண்ட சிலராலும், சில அதிகாரிகளாலும் மட்டுமே இதுவரை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆளுகின்ற ஆட்சியாளர்களால் அல்ல.

அரசு அமைத்த ஆய்வுக் குழுக்களின் செயல்பாடுகள்:

தாதுமணல் கொள்ளையையோ, கிரானைட் கொள்ளையையோ முழுமையான உண்மைகளை வெளிக்கொணர வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்டவையல்ல தமிழக அரசு அமைத்த ஆய்வுக் குழுக்கள். மக்களின் எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்த திசை திருப்ப மட்டுமே நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டவை. .

தமிழ்நாட்டில் எழுகின்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் குழு அமைத்து பிரச்சனையை மூடிவிடுகிற செயல்பாடு என்பது தமிழக அரசின் வழக்கமாகவே உள்ளது. ஏற்கனவே விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையாக உள்ள காவிரிப் படுகையில் மீத்தேன் எடுப்பது, விளைநிலங்களில் நிலக்கரி எடுப்பது, மேற்கு மாவட்டங்களில் கெயில் பிரச்சனை, தென் மாவட்டங்களில் கூடங்குளம் அணு உலைப் பிரச்சனை மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனை என அனைத்திற்கும் தமிழக அரசு ஆய்வுக் குழு அமைத்துள்ளது. ஆனால் எந்த ஒரு பிரச்சனையையும் உண்மையைக் கண்டறிந்து சரியான முறையில் இதுவரை தீர்க்கப்பட்டதுமில்லை. முழுமையான உண்மைகள் வெளிவந்ததுமில்லை.

பிரச்சனை தீவிரமாக எரியும் நிலையில் உள்ளபோது, குழுக்களை அமைப்பது மக்களுக்கு அரசு இதுவாவது செய்கிறதே என்ற மனநிலையை ஏற்படுத்துவதற்கு உதவுகின்றதே தவிர பிரச்சனையைத் தீர்ப்பதில்லை. தாது மணல் நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட எல்லையில் அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட அதிகமாக அள்ளப்பட்டுள்ளதா என்பதுமட்டும்தான் சிறப்புக்குழு செய்த விசாரணை. ஆனால் மிக அதிகமாக அனுமதி பெறாத இடத்தில் நடந்துள்ள சூறையாடல் பற்றியோ, சட்டவிரோதமாக தாதுமணல் கடத்தப்பட்டது பற்றியோ எவ்வித விசாரணையும் கிடையாது. கிரானைட் கொள்ளை பற்றி மதுரை மாவட்டத்தில் மட்டும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கிரானைட் குவாரிகள் நிறைந்துள்ள கிருட்டிணகிரி உட்பட 20 மாவட்டத்தில் எவ்வித ஆய்வும் இன்றுவரை நடத்தப்படாமலேயே உள்ளது.

உண்மையில் தாது மணல் பிரச்சனை, கிரானைட் பிரச்சனை, ஆற்றுமணல் பிரச்சனை எல்லாம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் நியமிக்கப்படும் சிறப்பு விசாரணைக் குழு மூலம் எதுவும் விசாரணை செய்துவிடக் கூடாது. அப்படி நடந்தால் அதன் மூலம் தாங்களும் கனிம வள கொள்ளையர்களுடன் கூட்டாளியாக உள்ள உண்மை அப்பட்டமாக வெளியே தெரிந்துவிடும் என்பதுதான் தமிழக அரசின் நிலையாக உள்ளது.

2ஜியை அலைக்கற்றையில் நடந்த ஊழலைவிட பன்மடங்கு ஊழல்கள் மிகுந்த கனிமவள கொள்ளை வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியா முழுவதும் உள்ள செல்வந்தர்கள் பதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படும் தொகையான 30 லட்சம் கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ள கனிமவள முறைகேடுகளை குறிப்பாக கிரானைட் கொள்ளையை, தாது மணல் கொள்ளையைப் பற்றி யாரும் நீதிமன்றம் சென்று சிறப்பு விசாரணைக் குழு அமைத்துவிடக் கூடாது என்பதற் காகத்தான் தமிழக அரசு அவசர அவசரமாக ஆய்வுக் குழு அமைத்து ஓர் ஆய்வு நாடகத்தை இதுவரை அரங்கேற்றி வந்தது.

சகாயம் தலைமையிலான ஆய்வுக்குழு:

ஆற்றுமணல் அள்ளுவதை கண்காணித்த நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு அமைத்த கண்காணிப்புக் குழுக்கள், பல லட்சம் கோடி ஊழல் நடைபெற்ற தாதுமணல் முறைகேடுகள் பற்றி ஆய்வு செய்த குழு, மதுரை மாவட்ட கிரானைட் முறை கேடுகளை வெளிக்கொணர தீவிரமாக செயல்பட்டு உண்மைகளைக் கண்டறிந்த அரசு அமைத்த குழுக்களை அரசே செயல்படாமல் தடுத்து நிறுத்தி முடக்கியது. இந்த நடவடிக்கைகள் எல்லாம், தமிழக அரசின் செயல்பாடுகள் அனைத்தையும் நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைத்து மக்களின் மனதில் கேள்வியெழுப்பி வந்தது.

sagayam

ஒரு பக்கம் மக்களின் நலன் காப்பதாகச் சொல்லிக் கொண்டு மக்களிடம் ஏமாற்றி வாக்குப்பெற்று அதிகாரத்திற்கு வந்தபின் கனிமவளங்களைச் சுரண்டும் கொள்ளையர்களுக்கு நேரயடியாகவே ஆதரவாக செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகளின் மோசடியான ஏமாற்றுச் செயல்பாடுகள். இன்னொரு பக்கம், மக்களின் உழைப்பில் கொடுக்கப்படும் வரிப்பணத்தில் தனது சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு கனிமவளக் கொள்ளையர்கள் வீசும் லஞ்சப் பணத்திற்காக அவர்களின் ஏவலாளாகச் செயல்பட்டு வரும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள். பல்வேறுவிதமான முறைகேடுகளில் ஈடுபட்டு வெளிப்படையாகவே அம்பலமாகியுள்ள நீதித்துறையைச் சேர்ந்த பல நீதிபதிகள், கனிமவளக் கொள்ளையர்களுக்கு ஆதரவாகவே வெளிப்படையாகச் செயல்பட்டு வரும் சில உயர்நீதிமன்ற நீதிபதிகள், கனிமவளக் கொள்ளையர்களின் மிரட்டல் மற்றும் பல்வேறு விதமான வித்தைகளால் அவர்களின் அட்டூழியத்தை அம்பலப்படுத்தத் தயங்கும் பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் என்ற நிலைதான் தற்போது தமிழகத்தில் நிலவி வருகிறது.

நாட்டில் நடக்கும் செரிக்கவே முடியாத அளவிலான முறைகேடுகள் குறிப்பாக ஆற்றுமணல், தாது மணல், கிரானைட் முறைகேடுகள் எனப் பலவும் வெளிப்படையாக அம்பலமாகியுள்ள நிலையில், நாம் என்ன செய்துவிட முடியும் என்ற கையறு நிலையிலேயே பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் உள்ளனர். யாரிடம் சென்று இதற்கு முடிவு கட்டுவது? நிவாரணம் எப்படித் தேடுவது என்ற விட்டேத்தி மனநிலையிலேயே சமூகத்தை நேசிக்கும் பலரும் உலவி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் மக்கள் நலன் சார்ந்து செயல்படும் இளம் வழக்கறிஞர் சுந்தரவதனம் அவர்கள் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மூலம் ஒரு பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தரவதனம் அவர்கள் தாக்கல் செய்த மனுவில் தமிழகம் முழுக்க 32 மாவட்டங்களில் நடைபெற்றறு வரும் கனிமவள முறைகேடுகளை தமிழகத்தில் உள்ள நேர்மையான அதிகாரிகளில் முதன்மையானவராகக் கருதப்படும் உ.சகாயம் அவர்கள் ஆய்வு செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

தமிழக அரசோ, தாங்கள் ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சகாயம் தலைமையில் ஆய்வுக் குழு அமைத்தால் அது தேவையின்றி விசாரணையைப் பாதிக்கும், தாமதப்படுத்தும் எனக் குறிப்பிட்டது. தமிழக அரசின் இந்த வாதத்தை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து ‘‘தமிழகம் முழுவதும் உள்ள கனிமவள முறைகேடுகளை சகாயம் அவர்கள் ஆய்வு செய்து 2 மாதத்தில் நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என செப்டம்பர் 11, 2014 அன்று உத்தரவிட்டது. மேலும், சகாயம் அவர்களை உடனடியாக பணிமாற்றம் எதுவும் செய்யக்கூடாது எனவும் தெரிவித்தது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் மற்றும் நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு.

சகாயம் தலைமையிலான ஆய்வுக் குழு கனிம முறைகேடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சரியானதல்ல எனக் கூறி, அதற்கு தடை கோரி டெல்லி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது தமிழக அரசு. டெல்லி உச்சநீதிமன்றம் ‘‘சென்னை உயர்நீதிமன்றம் கனிமவள முறைகேடு குறித்து சகாயம் ஆய்வு செய்ய உத்தரவிட்டது சரியானது, இதற்கு தடைவிதிக்கவோ மாற்றவோ முடியாது’’ என செப்டம்பர் 18, 2014 அன்று தீர்ப்பளித்தது.

செப்டம்பர் 11, 2014 சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்குப் பின் உ. சகாயம் அவர்கள், அவருக்கு வந்த நீதிமன்ற உத்தரவுப்படி, கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்ய தனக்குத் தேவையான நிதி மற்றும் பல்வேறு தேவைகள் குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். தமிழக அரசு இதற்கு எவ்விதமான பதிலையும் தரவில்லை. இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட 48 நாட்களுக்குப் பின் அக்டோபர் 28, 2014 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மீண்டும் தமிழக அரசு ‘‘சகாயம் ஆய்வுக் குழு தேவையில்லை. அரசு ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு குறித்து மிகச் சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது. நீதிமன்றத்தில் கிரானைட் உரிமையாளர்கள் பல வழக்குகள் தொடர்ந்து இருப்பதால்தான் தமிழக அரசால் முழுமையான நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது. சகாயம் மீண்டும் இதை ஆய்வு செய்யச் சென்றால் அரசின் நடவடிக்கையை தாமதப்படுத்தும்’’ என தமிழக அரசு மறுசீராய்வு மனுதாக்கல் செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் மறுசீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து தமிழக அரசுக்கு ரூ. 10,000 அபராதம் விதித்தது.

தமிழக அரசு, தமிழகம் முழுக்க தாதுமணல், கிரானைட், ஆற்றுமணல் உட்பட சுமார் 30 லட்சம் கோடிக்கு பல்வேறு கனிம முறைகேடுகள் நடந்திருக்க மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகளின் மீது மட்டும் எடுக்கப்பட்ட சில நடவடிக்கையை மட்டும் காட்டி சகாயம் ஆய்வுக்குழுவின் செயல்பாடு தேவையில்லை என்பது எதற்காக. தமிழக அரசு கனிம கொள்ளையர்களை பாதுகாக்க மிகுந்த அக்கறையுடன் இருப்பது, அதன் நீதிமன்ற நடவடிக்கை மூலமும் உ.சகாயம் இ.ஆ.ப அவர்கள் அரசிடம் கேட்டு உள்ள உதவிகளை அரசு செய்து கொடுக்காதன் மூலமும் அப்பட்டமாக வெளிப்படுத்தியது. கனிமவளக் கொள்ளையர்களின் ஏஜண்டாகவே தமிழக அரசு செயல்படுவது உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனி போல அப்பட்டமாகத் தெரிந்தது.

சென்னை உயர்நீதிமன்றம் “சகாயம் அவர்களுக்கு அவர் கேட்டுள்ள உதவிகளை நான்கு நாட்களுக்குள் செய்து தர வேண்டும். உ.சகாயம் அவர்கள் தமிழக அரசின் தலைமை செயலருக்கு தனக்கு பாதுகாப்பு கோரி 3 ஆண்டுகளுக்கு முன்பே கடிதம் எழுதி இருந்தும் அரசு இதுவரை வழங்காததை சுட்டிக் காட்டியவுடன் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பை உ.சகாயம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் வழங்க வேண்டும்” என அக்டோபர் 28, 2014 அன்று உத்திரவிட்டது.

நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட அதை அரசு நடைமுறைபடுத்தாமல் அப்படியே பல தீர்ப்புகளை ஒழித்துக்கட்டிய வரலாறு சில உண்டு. 2003இல் நீதிபதி சம்பத் அவர்கள், ஒரு நிபுணர் குழுவை அமைத்து பரிந்துரைத்ததன் மூலம், ஆற்று மணல் அள்ளுவது நேரடியாக பொதுப்பணித்துறை பொறுப்பு என அறிவித்தது தமிழக அரசு. ஆனாலும் அங்கும் தனியார் முதலாளிகள் லோடிங் கான்டிராக்ட், செகண்ட் சேல் என்ற முறையில் பல்வேறு முறைகேடுகளை அரசின் பாதுகாப்போடு செய்தனர்.

இதை எதிர்த்து 2010ம் ஆண்டில் சமூக ஆர்வலர் நெல்லை சுடலைக் கண்ணன், இந்திய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர்.நல்லக்கண்ணு ஆகியோர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்து மணல்கொள்ளையை அம்பலப்படுத்தினர். நீதிபதி பானுமதி, நீதிபதி நாகமுத்து ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு தாமிரபரணியில் பல குவாரிகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது.

மேலும் தீர்ப்பில் தமிழகத்தில் உள்ள 33 ஆறுகளிலும் மணல் அள்ளுவதில் முறைகேடு நடந்துள்ளது. தமிழகம் முழுக்க உள்ள ஆற்றுமணல் குவாரிகளில் பின்பற்ற வேண்டிய பொது வழிகாட்டுதல் வழிமுறைகளை அளித்தது. மேலும், ஆற்று மணல் அள்ளுவதைக் கண்காணிக்க நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா என கண்காணிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்பு குழுவையும், மாவட்ட நீதிபதி தலைமையிலான மண்டலக் கண்காணிப்புக் குழுவையும் அமைத்தனர்.

தமிழகத்தில் நடைபெறும் ஆற்றுமணல் கொள்ளையைப் பற்றி கண்காணிக்க மாநில கண்காணிப்புக் குழுவுக்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை தலைமையாகக் கொண்டும் அரசு நியமிக்கும் உறுப்பினர் செயலர் மாநிலக் கண்காணிப்புக் குழுத் தலைவருக்கு தொழில்நுட்ப விசயங்களில் உதவி செய்வார் எனவும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களை நான்கு மண்டலமாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியை தலைவராகவும் நீர்வளத்துறையிலிருந்து ஒருவரையும் சுற்றுப்புறவியலாளர் ஒருவரையும் கொண்ட மண்டல அமைப்புக் கமிட்டி அமைத்துச் செயல்பட வேண்டும் என்று கூறி 2.2.2010 அன்று ஆற்று மணல் முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி நீதிபதி நாகமுத்து ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. மேலே குறிப்பிட்ட கண்காணிப்புக் குழுக்கள் 2 ஆண்டுகள் பொறுப்பிலிருக்கும். குழுத் தலைவருக்கு மாதம் ரூ 75 ஆயிரமும் குழு உறுப்பினருக்கு மாதம் ரூ 25 ஆயிரமும் சம்பளமாகக் கொடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் இந்தக் குழு செயல்பட இட ஒதுக்கியும் அலுவலக வேலைக்காக தட்டச்சர் ஒருவரையும் அலுவலக உதவியாளர் ஒருவரையும் ஒதுக்க வேண்டும் என்றது. மேலும் தமிழகம் முழுவது ஆற்றுமணல் அள்ளுவதில் பொதுவழிகாட்டும் நெறிமுறைகளைக் கூறும் 42 பக்க தீர்ப்பு ஒன்றை அளித்தது.

கண்காணிப்புக் குழு எடுக்கப்படும் மணலின் அளவு, கனிமவளச் சட்டத்தில் கூறப்பட்ட வழிமுறைகளின்படி அறிவியல்பூர்வமாக மணல் அள்ளப்படுவதைக் கண்காணிக்கும். பாதிக்கப்பட்ட மக்கள் இக்குழுவினரிடம் முறையிடலாம். பாதிப்புகளுக்கு எவ்வாறு இக்குழு தீர்வுகாண வேண்டும் என்பது உட்பட பல்வேறு நடைமுறை சார்ந்த செயல்பாடுகளை, தமிழகத்தில் நடைபெறும் ஆற்றுமணல் முறைகேடுகளை தடுத்து நிறுத்தி தீர்வுகாணும் வகையில் அமைத்தது.

ஆனால், இந்தத் தீர்ப்பு அன்றைக்கு தமிழகத்தை ஆண்டுவந்த கருணாநிதி அரசாலும் 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அரசாலும் பின்பற்றப்படவேயில்லை. ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதில் தீவிரமாக இருந்தனரே தவிர, ஆற்றுமணல் தடுத்து நிறுத்துவதில் அக்கறை காட்டவேயில்லை. உயர்நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புப் குழுக்களை செயல்படுத்த தமிழக அரசு விடவேயில்லை. அவர்களுக்கு அலுவலகங்கள் அறைகூட ஒதுக்கவில்லை. மணல் கொள்ளை பற்றி கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுக்கள் செயல்படாமலேயே 2012 பிப்ரவரியில் இல்லாமல் போனது. ஆற்று மணல் கொள்ளை தமிழகம் முழுக்க நீதிமன்றம் உத்தரவிட்ட சில இடங்களைத் தவிர்த்து அனைத்த இடங்களிலும் அரசு அதிகாரிகளின் பாதுகாப்பான கூட்டணியோடு இன்று வரை கொடிகட்டிப் பறந்து வருகிறது.

நீதிமன்ற உத்தரவை அரசு நடைமுறைப்படுத்த தவறினாலும் தீர்ப்பை சுட்டிகாட்டி அரசியல் இயக்கங்களும், மக்கள் இயக்கங்களும் அழுத்தம் கொடுத்து கடந்த காலத்தில் ஆற்றுமணல் தொடர்பான உத்தரவை அரசு நடைமுறைப்படுத்த வைக்க தவறின. அது போன்ற நிலைமை சகாயம் ஆய்வுக் குழுவிற்கும் ஏற்பட்டு விடக் கூடாதென முடிவு செய்து தமிழகம் முழுக்க நடைபெற்றுள்ள கனிமவள முறைகேடுகளைப் பற்றி ஆய்வு செய்யும் உ.சகாயம் அவர்களுக்குத் தேவையான விவரங்கள் கிடைக்க உதவ வேண்டியது, சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமை என்ற அடிப்படையில் செயல்படுவது என முடிவு செய்தோம்.

31.10.2014 அன்று உ.சகாயம் ஆய்வுக்குழுவுக்குத் தேவையான விவரங்கள் மக்களை தர வைப்பதற்கு லஞ்ச ஊழல் ஒழிப்பு செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், விவசாய அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும் ஒவ்வொரு தனிநபர்களும் எவ்வாறெல்லாம் உதவலாம் என்பதையும், ஆய்வுக் குழுவிற்கு உதவுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதற்கான வகையில் தீர்மானிப்பதற்காகவும் தமிழகம் தழுவிய அளவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்று கூடினோம். இதில் ”கனிமவள முறைகேடு-சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம்” என்ற பெயரில் செயல்படுவது என்று முடிவு எடுக்கப்பட்டது..

இதன் சார்பில் சகாயம் ஆய்வுக் குழுவினர் ”கனிமவள முறைகேடுகளால் ஏற்பட்ட இழப்பீடுகள் பற்றி மதிப்பீடு செய்வதுடன் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள், உயிரிய பன்மயச்சூழல் பாதிப்புகள், மேய்சல் நிலம் அழிப்பு, மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்புகள் (health impact study), குடிநீர் ஆதாரங்கள் அழிந்ததால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள், விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், தொல்லியல் சின்னங்கள் பாதிப்பு, பொதுவழித்தடம் அழிப்பு, தடுப்பு, கண்மாய், குளம், நீர்வழி பாதை அழிப்பால் ஏற்பட்ட இழப்புகள், பஞ்சமி நிலம் அழிப்பு, உயிரிழப்புகள், ஊர் அழிப்பு, ஊரை விட்டு மக்களை விரட்டியதால் ஏற்பட்ட பாதிப்பு, மீன்வளம் குறைந்ததால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகள், இயற்கைக்கு (lose of echo system service) ஏற்பட்ட பாதிப்புகள், மக்களைப் பிளவுபடுத்தி மோதவிட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள், ஒவ்வொரு கிராமத்திலும் கனிமவளக் கொள்ளையர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள சமூகப் பாதிப்புகள் (social impact study) பற்றியும் ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும் என்பதை முன்வைத்தும் இது பற்றி மக்கள் சகாயம் ஆய்வுக் குழுவினரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என பரப்புரை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இதன் பின்பும் தமிழகஅரசு சகாயம் ஆய்வுக் குழு, சென்னை உயர்நீதிமன்றம் 11.09.2014, 28.10.2014 அன்றும் உத்தரவிட்டுள்ளபடி, தமிழகம் முழுவதும் 32 மாவட்டத்தில் உள்ள கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு அனுமதி அளிக்காமல் அக்டோபர் 31, 2014 அன்று மாலை மதுரை பகுதியை மட்டும் ஆய்வு செய்ய அனுமதி அளித்தது. இக் காலத்தில் மதுரை, திருச்சி, வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனிமவள முறைகேடு- சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு மக்கள் மத்தியில் பரப்புரை எடுத்து செல்லப்பட்டது.

14.11.2014 அன்று "கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வு குழு ஆதரவு இயக்கம்" ஒருங்கிணைத்த தமிழகம் தழுவிய அனைத்து மாணவ அமைப்புகள், 30க்கும் மேற்பட்ட அனைத்து கல்லூரி மாணவ பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் ”சென்னை உயர்நீதிமன்றம் 11.09.2014 அன்றும், 28.10.2014 அன்றும், உத்திரவிட்டுள்ளபடி, சகாயம் ஆய்வுக் குழுவை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்கான அனுமதியை, தமிழக அரசு உடனே வழங்கக் வேண்டும் எனக் கோரிக்கையை முன் வைத்து தமிழகம் தழுவிய ”இரு வார கையெழுத்து இயக்கம்” ஒன்றை 17-11-2014 முதல் 30-11-2014 வரை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் 100க்கணக்கான இடங்களில் மாணவர்கள் கையெழுத்து இயக்கத்தை மேற்கொண்டு லட்சக்கணக்கானோரிடம் கையெழுத்து பெற்றனர்.

இதே காலத்தில் உ.சகாயம் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ”சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் கனிமவள முறைகேட்டை ஆய்வு செய்ய எனக்கு உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு மதுரை கிரானைட் முறைகேடு பற்றி மட்டும் ஆய்வு செய்ய சொல்லியுள்ளது. எனக்கு உயர்நீதிமன்றம் தெளிவாக வழிகாட்ட வேண்டும்” என வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்திரவிட்டதற்கு மாறாக மதுரையில் மிக அதிகமாக கிரானைட் முறைகேடு நடந்து உள்ளது. அதை தற்போது ஆய்வு செய்யுங்கள். படிப்படியாக மற்றவறை ஆய்வு செய்யலாம் “ என 25-11-2014 அன்று தீர்ப்பளித்தது. அந்த அடிப்படையில் உ.சகாயம் ஆய்வுக்குழு 03-12-2014 முதல் தனது ஆய்வுப்பணியை மதுரையில் மேற்கொண்டு வருகிறார்.

சகாயம் ஆய்வுக்குழுக்கு உதவியாக சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம் சார்பில் மதுரை மாவட்டம் முழுக்க மக்கள் தைரியமாக முன்வந்து முறைகேடுகளைப் பற்றி மனு கொடுக்க வைக்க பல்வேறு வடிவங்களில் (இரு சக்கரப் பேரணி, கிராமம்- நகரம் என அனைத்து இடங்களிலும் துண்டறிக்கை பரப்புரை, சுவரொட்டி, பதாகை, பேருந்து பரப்புரை, தானி பரப்புரை, அரங்க கூட்டங்கள், பத்திரிக்கை செய்தி, இணையதளங்களில் பரப்புரை, பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் பரப்புரை, வெளியீடு) மக்கள் மத்தியில் பரப்புரை செய்து வருகின்றனர். உண்மையில் இந்த பரப்புரையை போலியோ சொட்டு மருந்து பிரச்சாரம் போல் செய்து தமிழக அரசே மக்களை தயார்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனச் செயல்படும் ஆதரவு இயக்கத்தின் இரு சக்கரப் பேரணிக்கு ”50 இரு சக்கர வாகனங்களில் சென்றால் இப்பகுதிமுழுவதும் காற்று மாசுபாடு, புகைமாசுபாடு ஏற்படும்” என்று சொல்லி காவல் துறை தடை விதித்தது. தடையை மீறியே இரு சக்கர வாகன பேரணி 07-12-2014 நடைபெற்றது. மேலும் சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க முண்ணனியினர் மீது காவல்துறையால் பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டது.

10,000 ஆயிரத்திற்க்கு மேற்பட்டோர் இணைந்து இருந்த சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக் முகநூல் பக்கம் கனிமவளக் கொள்ளையர்களின் ஆட்களால் முடக்கப்பட்டது. சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம், அதன் பொறுப்பாளர்களின் மின் – அஞ்சல் பக்கம் தொடர்ந்து முடக்கப்படுவதற்கான முயற்சி நடந்து வருகிறது.

”கனிமவளமுறைகேடு-சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம்” இவ்வாறு தமிழகம் முழுக்க பரப்புரை செய்வதை விரும்பாத சிலர், இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் சென்று அங்கு நீதிபதிகளின் கண்டிப்பால் பின்வாங்கினார்.

சகாயம் ஆய்வுக்குழுவினரிடம் புகார் கொடுத்த பல பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளாளும். கிரானைட் அடியாட்களும் கொலைமிரட்டல் விடுத்த செய்தி பல்வேறு செய்தித் தாளில் வெளிவந்து கொண்டே உள்ளது.

மதுரையில் அன்சூல் மிஸ்ரா அவர்கள் ஓராண்டு காலம் கிரானைட் முறைகேடு பற்றி ஆய்வு செய்து, முழு உண்மையும் வெளிக்கொண்டு வந்து இருந்த நிலையில் உ.சகாயம் அவர்களை ஆய்வு செய்ய சொல்லியது என்பது, சகாயம் அவர்கள் மிக சரியாக ஏற்கனவே தமிழக அரசு ஆய்வு செய்துள்ளது என்று சொல்ல வைக்கும் முயற்சியாகவே பார்க்க வேண்டி உள்ளது.

கிரானைட் முறைகேடு பற்றி ஆய்வு செய்ய மதுரை வந்த சகாயம் ஆய்வுக் குழுவுக்கு தமிழக அரசு மறைமுகமாக பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து கொடுத்து வருவது, பல்வேறு பத்திரிக்கை மூலம் அம்பலமாகி நாறி வருகிறது.

இந்நிலையில் சகாயம் அவர்கள் கிரானைட் கொள்ளையால் அழிக்கப்பட்டு உள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள், உயிரிய பன்மயச்சூழல் பாதிப்புகள், மேய்சல் நிலம் அழிப்பு,மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்புகள் (health impact study), குடிநீர் ஆதாரங்கள் அழிந்ததால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள், விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், தொல்லியல் சின்னங்கள் பாதிப்பு, பொதுவழித்தடம் அழிப்பு, தடுப்பு, கண்மாய், குளம், நீர்வழி பாதை அழிப்பால் ஏற்பட்ட இழப்புகள், பஞ்சமி நிலம் அழிப்பு, இயற்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் உயிரிழப்புகள், ஊர் அழிப்பு, ஊரை விட்டு மக்களை விரட்டியதால் ஏற்பட்ட பாதிப்பு, மீன்வளம் குறைந்ததால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகள், இயற்கைக்கு (lose of echo system service) ஏற்பட்ட பாதிப்புகள் என பல்வேறு வகையில் ஆய்வு செய்வது என்பது தமிழக அரசுக்கும்- அதிகாரிகளுக்கும்- அரசியல்வாதிகளுக்கும்- கனிமவள கொள்ளையர்களுக்கும், கனிமங்களை கொள்ளையடிப்பவர்களோடு தொடர்பு வைத்து உள்ள அனைவருக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் 25-11-2014 அன்று மதுரை மாவட்டத்தில் மிக அதிக அளவில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகளை பற்றி சகாயம் ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்து விட்டு படிப்படியாக மற்றவறை ஆய்வு செய்யலாம் “ என தீர்ப்பளித்து உள்ளதால்., தமிழகத்தில் கனிமவள முறைகேடு நடந்து உள்ளதை பற்றி விபரம் தெரிந்த அனைவரும் சகாயம் ஆய்வுக்குழுவின் சென்னை முகவரிக்கு (உ.சகாயம்இ.ஆ.ப, துணைத்தலைவர், அறிவியல் நகரம், சென்னை-600025) மார்ச்’ 15, 2015 க்குள் அனைவரும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற பரப்புரையை செய்து வருகிறோம். இவ்வாறு அனுப்பப்படும் தகவல்களை சகாயம் ஆய்வுக்குழுவினர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தே ஆக வேண்டும். இதன் மூலம் சகாயம் ஆய்வுக்குழுவின் பணி தமிழகம் முழுக்க உயர்நீதிமன்றத்தால் நீடிக்கப்படும் என நம்புகிறோம். இல்லையெனில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவது என தீர்மானித்து உள்ளோம்.

பலருக்கும், சகாயம் ஆய்வுக்குழுவால் அவர்கள் கொடுக்கும் அறிக்கையால் நிலவும் கனிமவள கொள்ளை நின்று விடுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுவது நியாயமானதே. தற்போது நிலவி வரும் சுரண்டல்காரர்களின் நலன் பேணும் சமூக அமைப்பில் சகாயம் ஆய்வுக்குழு கொடுக்கும் அறிக்கையின் மீது, மக்களுக்கு விரோதமாக உள்ள அரசு, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், கனிமவளக் கொள்ளையர்கள் மீது உடனே எவ்வித நடவடிக்கையும் எடுத்து விடாது.

சகாயம் ஆய்வுக்குழு பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி ஆவணமாக்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுக்கும் போது கனிமவள முறைகேடுகளுக்கு எதிரான அது மிக வலுவான ஆதாரம் ஆகிவிடும். கனிமவள முறைகேடுகள் மீதான நடவடிக்கையை நீதித்துறையையும், அரசையையும் செயல்படுத்த வைக்க, மக்களிடம் கனிமவள முறைகேடுகளை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது, அனுமதிக்க கூடாது என்ற மனநிலையை நாம் தொடர்ந்து உருவாக்க வேண்டும். வலிமையான மக்கள் இயக்கங்களை கட்டமைக்க வேண்டும்.

கனிமவளக் கொள்ளையைப் பற்றி வெளிக்கொண்டு வர, அமைக்கப்பட்டு உள்ள சகாயம் ஆய்வுக்குழுவிற்கு ஆதரவாக நாம் ஒவ்வொருவரும் செயல்படுவோம். மக்களிடம் சென்று ஒவ்வொரு ஊர்களிலும் நடைபெற்று உள்ள கனிமவள கொள்ளையை, முறைகேடுகளை பற்றி மக்களையே எழுத வைத்து அதை ஆவணமாக்கி ஒவ்வொருவரையும் சகாயம் ஆய்வுக்குழுவிற்கு கொடுக்க வைப்போம். கனிமவள முறைகேடுகளுக்கு முடிவு கட்டுவோம். மக்களுக்கு விரோதமாக உள்ள அரசு, அதிகாரிகள், அரசியல்வாதிகள், கனிமவளக் கொள்ளையார்களான சுரண்டல் கூட்டத்திடம் இருந்து இயற்கையை பாதுகாக்கும் போராட்டதை விழிப்புடன் தொடருவோம்.

இயற்கையைப் பாதுகாப்போம். மனிதகுலத்தை விடுவிப்போம்.

- முகிலன்

Pin It