பெருந்துறை சிப்காட் பகுதியில் காவேரி ஆற்றில் தினமும் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அமெரிக்காவின் கொக்கோ- ஆலைக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. இதை எதிர்த்து கடந்த சில மாதமாக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அமெரிக்காவின் கொக்கோ- ஆலையின் கட்டிடப் பணிகளை தடுத்து மக்கள் போரடியதால் , தமிழக அரசு ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதிசு அவர்கள் தலைமையில் கடந்த மாதம் (டிச-11, 2014) பெருந்துறையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களும் கொக்கோ- ஆலை அமைவதற்கு தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதன் பிறகு இக்கருத்துக் கேட்புக் கூட்டம் தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதிசு அவர்கள், பங்கேற்ற மக்களில் 80 சதவிகித்தினர் மட்டுமே கொக்கோ- ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என தவறாக தெரிவித்தார். இது தினமணி போன்ற நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்தது.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த தவறான தகவலைக் கண்டித்தும், கொகோ-கோலா ஆலை அமைக்க அரசு அனுமதித்ததில் உள்ள விதிமீறல்கள், சட்ட விரோத செயல்பாடுகள் பற்றியும் 26-11-2014 அன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நான் கண்டித்துப் பேசினேன். விரிவான மனுவும் கொடுத்து வந்தேன்.
பெருந்துறை - சென்னிமலை சிப்காட் பகுதியில் 2700 ஏக்கரில் வளர்ச்சி என 2000 ஆம் ஆண்டு முதல் கொண்டுவரப்பட்ட தொழிற்சாலைகளால் (சாய, தோல்,ஆஸ்பெட்டாஸ், சானிடரிவேர், இரும்பு ஆலை போன்ற...) ஏற்கனவே மிகுந்த சுற்றுசூழல் பாதிப்புக்கும், புற்றுநோய் உட்பட எண்ணற்ற நோய் பாதிப்புக்கு உள்ளாகி மீள முடியாத வேதனையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே சிப்காட் விரிவாக்கத்திற்க்கு என அரசு 1200 ஏக்கர் நிலம் எடுத்த போது 2009- 2010 ஆண்டில் இப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து போராடி அரசின் உத்தரவை திரும்ப பெற வைத்தனர். மேலும் சிப்காட்டில் 2010 ஆம் ஆண்டில் எட்டு மாவட்டங்களின் நச்சுக் கழிவுகளை கொண்டு வந்து மேலாண்மை செய்வது என ”நச்சுக் கழிவு மேலாண்மைதிட்டம்” கொண்டு வந்த போது நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில், நாங்கள் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி வந்து பல்வேறு ஆதாரங்களை முன் வைத்து அத்திட்டத்தை முறியடித்தோம்.
காவிரி விவசாயிகள் கடந்த 20 ஆண்டுகளாக முறையான நேரத்தில் தண்ணீர் வரத்து இன்றியும், கர்னாடகத்தின் அடாவடியாலும் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பலர் இறந்து உள்ளனர். பலர் ஊரையே காலி செய்து சென்று விட்டனர். ஆனால் பெருந்துறை சிப்காட் பகுதியில் சட்டவிரோதமாகவும், மக்களின் ஒப்புதல் இல்லாமலும் காவேரி ஆற்றில் தினமும் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அமெரிக்காவின் கொக்கோ- ஆலைக்கு அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்தும், பெருந்துறை சிப்காட் பகுதியில் செயல்படும் பல்வேறு ஆலைகளினால் ஏற்பட்டு வரும் பாதிப்பை கண்டித்தும், 05-01-2015 திங்கள் அன்று பாதிக்கப்பட்ட கிராம மக்கள் உருவாக்கி உள்ள பெருந்துறை சுற்றுசூழல் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு பேரணியை நடத்த பிரச்சாரம் செய்து வந்தனர்.
பெருந்துறையில் நடக்க இருந்த சுற்றுசூழல் விழிப்புணர்வு பேரணிக்கு, பெருந்துறையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை [30(2) சட்டம் அமுலில் உள்ளது] இருக்கிறது எனக் கூறி, பெருந்துறை சுற்றுசூழல் பாதுகாப்பு அறக்கட்டளை பொறுப்பாளர் தோழர்.ம.கந்தசாமி அவர்களிடம் பேரணிக்கு காவல்துறை தடை விதித்ததாக கூறி கடிதம் கொடுத்து உள்ளது.
பெருந்துறை- சென்னிமலை பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், அனைத்து இயக்கங்களும் அமெரிக்காவின் கொக்கோ- ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காவல்துறையை வைத்துக் கொண்டு அரசு ஒரு [30(2) சட்டம் அமுலில் உள்ளது] சட்ட விதியைக் காட்டி, பேரணி நடத்தக் கூடாது என அனுமதி மறுப்பது மாபெரும் ஜனநாயகப் படுகொலை ஆகும்; அமெரிக்காவின் கொக்கோ- ஆலைக்கு துணை நிற்பது ஆகும். பேரணி நடத்த 25-12-2014 அன்று (பத்து நாட்களுக்கு முன்பே) அனுமதி கேட்டு பொறுப்பாளர்கள் கடிதம் கொடுத்த நிலையில், பேரணிக்கு முந்தைய நாள் அனுமதி மறுத்து கடிதம் கொடுப்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நீதிமன்றம் சென்று கூட அனுமதி வாங்கி விடக் கூடாது என்னும் அரசின் சதியாகவே பார்க்க வேண்டி உள்ளது.
செப்டம்பர் மாதம் 27-2014 ஆம் தேதி தொடங்கி, கிட்டத்தட்ட இருவார காலம் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் கைது செய்யப்பட்டதை காரணம் காட்டி, அ.இ.அ.தி.மு.க.வினரும்., ஆட்சி அதிகாரத்தில் உள்ள எண்ணற்ற அ.இ.அ.தி.மு.க. உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் செய்த சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை நாடே அறியும். அப்போது எல்லாம் கெட்டுப் போகாத சட்டம்- ஒழுங்கு, மக்கள் தங்கள் வாழ்வாதாரம் அழிவதை எதிர்த்து அமைதியாக ஒரு பேரணி நடத்தினால் கெட்டு விடும் என காவல்துறையை வைத்து பேரணிக்கு தடை விதிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்டு, முழுக்க முழுக்க வெளிநாட்டுக் நிறுவனங்களுக்கு ஆதரவாக நிற்கும் அரசின் இந்த நடவடிக்கை என்பது, மக்களின் குரல்வளையை நசுக்கும், கருத்துரிமைக்கு எதிரான செயல் ஆகும்.
மேலும் பெருந்துறை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இப்போது சுற்றுச்சூழல் அமைச்சராக உள்ள தோப்பு.வெங்கடாசலம் அவர்கள் இங்கு அமைக்கப்படும் கொக்கோ-கோலா ஆலை பற்றி எதுவும் தெரிவிக்காமல் இருப்பது என்பதை கொக்கோ-கோலா ஆலைக்கு முழுக்க துணை நிற்கிறார் என்றே கருதுகிறோம்.
அரசு மீத்தேன் திட்டம் முதல் கொக்கோ-கோலா, பெப்சி, அணு உலை திட்டம் என ஒவ்வொன்றிலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பது இந்த அரசு தமிழக மக்களுக்கு என இல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே உள்ளது என்பது மீண்டும், மீண்டும் அம்பலமாகி வருகிறது. நாடு மீண்டும் ஒரு மாபெரும் வெள்ளையனை எதிர்த்துப் மாபெரும் போராட்டம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.
அரசின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை ஜனநாயக உணர்வு கொண்ட ஒவ்வொருவரும் எதிர்க்க வேண்டியது அவசர, அவசிய கடமையாகும்.
* காவல்துறையின் அடக்குமுறையை முறியடிப்போம்!
* அமெரிக்காவின் கொக்கோ- ஆலையை விரட்டியடிப்போம்!!!
* போராடும் மக்களுக்கு துணை நிற்போம்!
* தாய்மண்ணை பாதுகாப்போம்!!!
- முகிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் & கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம்