தொழிலாளர் வைப்பு நிதிக் கணக்கு பொது எண்ணை வெளியிட்டு, 16.10.2014 அன்று பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொழிலாளர் நலச் சட்டங்களில் பிற்போக்கானப் பலத் திருத்தங்களை அறிவித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது.

modiதொழிற்சாலை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பின்றி தொழிலகங்களை ஆய்வு செய்வது கூடாது என்றும், தொழில் நிறுவன நிர்வாகங்களே தொழிற்சாலை சட்டங்கள் கடைபிடிப்பது குறித்து நற்சான்றிதழ் அளித்தால் போதும் என்று மோடி அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே அதிகாரிகளிடம் நிலவும் கையூட்டு ஊழல் காரணமாக தொழிற்சாலை சட்ட விதிகள் முறையாக செயல்படுவதில்லை என்பதே மெய்நிலை.

8 மணி நேர வேலை என்ற விதியினை, 10 மணி நேரம் – 12 மணி நேரம் வேலை வாங்கும் தொழிலகங்கள் அதிகரித்துவிட்டன. மிகை நேர இரட்டை ஊதியத்தை தவிர்ப்பதற்காக, “நீடித்த வேலை நேரம்” (Extension working time) என்ற பெயரால், வாரத்திற்கு 48 மணி நேரத்தையும் தாண்டி வேலை வாங்கும் தொழிலகங்கள் ஏராளம். தொழிற்சாலை ஆய்வாளர்கள் இந்த முறைகேட்டை கண்டுகொள்வதில்லை.

பல்வேறு முதன்மைத் தொழிற்சாலைகளில் கூட தொழிற்சாலை சட்டப்படி கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படாததால், விபத்துகளில் தொழிலாளர்கள் குறிப்பாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், இருக்கின்ற கொஞ்ச நஞ்ச ஆய்வு முறையைக் கூட “ஆய்வாளர் ஆட்சி (Inspector raj)” என்று கேலி செய்து, தொழிற்சாலை ஆய்வாளர் ஆய்வே இல்லாததாக்குவது, நற்சான்றிதழே போதும் என அறிவிப்பது, சட்ட விதிகள் ஏதுமற்ற, வல்லாண் வகுத்ததே வாய்க்கால் என்ற கட்டாட்சியை தொழிற்சாலைகளில் கட்டவழித்து விடுவதாக அமையும்.

இதே கூட்டத்தில், பயிற்சியாளர் சட்டத்தில் (Apprentice act) கொண்டுவரப்போவதாக, சில திருத்தங்களையும் மோடி அறிவித்திருக்கிறார். தொழிலகங்கள் தங்கள் நிறுவனங்களில் அமர்த்திக் கொள்ளும் பயிற்சியாளர்கள் (அப்ரண்டிஸ்) அனைவரையும் தொழிலாளிகளாக நிரந்தரம் செய்ய வேண்டியதில்லை என இத்திருத்தத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே, பயிற்சியாளர் சட்டத்தின் நிபந்தனைகளில் இருந்து தப்பிப்பதற்காக “தற்காலிகப் பயிற்சியாளர்” (காசுவல் அப்ரண்டிஸ்), ஒப்பந்தப் பயிற்சியாளர் (கான்ட்ராக்ட் அப்ரண்டிஸ்) என்ற சட்ட விரோத வழிமுறைகளை பெருந்தொழிலதிபர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பலவும் கூட, இந்த சட்ட மீறல் நடைமுறைகளை கடைபிடித்து வருகிறார்கள்.

நிரந்தரத் தொழிலாளர்கள் நிலையைவிட, தற்காலிகத் தொழிலாளர் நிலைமை மோசமானது. தற்காலிகத் தொழிலாளர் நிலையைவிட, ஒப்பந்தத் தொழிலாளர் நிலைமை படுமோசமானது. ஒப்பந்தத் தொழிலாளர்களைவிட, பயிற்சியாளர் நிலைமை மிகவும் மோசமானது. இப்போது, பிரதமர் மோடி அறிவித்திருப்பது, மிகப் படுமோசமான உழைப்புச் சுரண்டலுக்கு வழி திறந்து விடும்.

“இந்தியாவில் தயாரியுங்கள் (Make in India)” என்ற மோடி முழக்கத்தின் திரைக்குப் பின்னால், இவ்வளவு படுமோசமான தொழிலாளர் குருதி குடிக்கும் அறிவிப்புகள் வந்துள்ளன. பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புகள் அப்பட்டமான உழைப்பாளர் பகை அறிவிப்புகளாகும்.

எனவே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொழிற்சாலை சட்டத்திலும், பயிற்சியாளர் சட்டத்திலும் அறிவித்திருக்கிற இத்திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தொழிலாளர்களுக்கு எதிரான இத்திருத்தங்களை எதிர்த்து, உழைக்கும் மக்களும் மனித நேயர்களும் களம் காணுமாறு அழைக்கிறேன்.

- கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

Pin It