நடுவண் மேல் நிலைப் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) இயக்குனர் அண்மையில் இந்தியா முழுதும் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வரும் ஆகஸ்ட்டு 7 முதல் 13 முடிய சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி அறிவுறுத்தி இருக்கிறார்.

இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையானது ஒரு மொழி மற்றும் ஒரு வகுப்பு மேலாண்மையை வலியுறுத்துவதாகவும், தமிழையும் தமிழினத்தையும் மற்ற பிற மொழிகளையும் இரண்டாம் நிலைக்குத் தள்ளும் அநீதியான முயற்சியாகவும் உள்ளது.

சமஸ்கிருத மொழியானது எல்லா மொழிகளுக்கும் தாய் என்று மிகத் தவறான ஓர் பொய்யுரையை உள்நோக்கத்தோடு மாணவர்களிடையே விதைப்பதாக இச் சுற்றறிக்கையின் முதல் வாசகமே அமைந்துள்ளது.தமிழ் மொழி சமஸ்கிருதத்தின் தொடர்பேதும் இன்றி தனித்து இயங்குவது என்றும், தனித்த தோற்றமும் வளர்ச்சியும் கொண்டது என்றும் 19ஆம் நூற்றாண்டிலேயே மொழியியலாளர்கள் எல்லீசும், ராபர்ட் கால்டுவெல்லும் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பித்துவிட்டனர்.

தலை சிறந்த மொழியியலாளர் நோம் சாம்ஸ்கி, அலெக்ஸ் கோலியா உள்ளிட்ட மொழியியல் அறிஞர்கள் உலகின் மூத்த முதல் மொழியாக தமிழ் மொழி இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என தங்கள் ஆய்வு முடிவுகளில் தெளிவாக்கி இருக்கிறார்கள்.

வரலாறு நெடுகிலும் சமஸ்கிருத மொழியும், இன ஆதிக்கமும், வகுப்பு மேலாண்மையும் இணைந்தே செயல்பட்டிருக்கின்றன. சமஸ்கிருதத்தோடு ஆரிய இன மேலாதிக்கமும் பிராமண வகுப்பு மேலாண்மையும் இணைந்தே செயல்பட்டிருக்கின்றன.

ஆரிய இனக்கலப்பும், சஸ்கிருத மொழிக் கலப்பும் ஏற்பட்டதால் தமிழிலிருந்து திரிந்து பிரிந்து உருவானவையே தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் ஆகிய மொழிகளும், அம் மொழிகள் சார்ந்த தேசிய இனங்களும் ஆகும்.

வர்ண சாதிக் கோட்பாடு தமிழ் மரபில் இல்லாத ஒன்றாகும். பிறப்பு அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வர்ண சாதி முறைமை தமிழினத்தின் மீது ஆரிய இனத்தின் மேலாதிக்கம் நிறுவப்பட்டதாலேயே நிலைகொண்டது. சமஸ்கிருத மொழித் திணிப்பு அதற்கு ஏற்ற சமூக ஊடகமாக அமைந்தது.

தமிழகத்தின் மீது ஆதிக்கம் செலுத்திய அயல் இனத்து அரசர்களின் துணையோடு ஆரிய மேலாண்மை நிறுவப்பட்ட போது தமிழ் மொழியில் சமஸ்கிருத மொழிக் கலப்பு திட்டமிட்ட முறையில் ஏற்படுத்தப்பட்டது.தமிழ் மண்ணின் கடவுளர்களும், கோயில்களும், கோயில் அமைந்த ஊர்களும் சமஸ்கிருத மயமாக்கப்பட்டன. கடவுளர்களின் பெயர் சம்ஸ்கிருத மயமானதால் அக்கடவுளர்களின் பெயர் சூட்டிக் கொள்ளும் தமிழர்களின் பெயர்களும் சமஸ்கிருத மயமானது. இது ஒரு சமூக அமைப்பு முறையாகவே நிலைபெற்ற போது அடுத்த்தடுத்த தலைமுறையினர் தங்கள் பிள்ளைகளுக்கு வடமொழி மயமான பெயர்கள் சூட்டுவதே நிலைத்துப் போனது. இன அடையாளம் சிதைந்துப் போனது.

ஆரிய – பிராமண மேலாதிக்கம் அரசியலில் மட்டுமின்றி தமிழ்ச் சமூகத்தின் அக வாழ்க்கை முழுவதும் நிறுவப்பட்டது. பிறப்பிலிருந்து இறப்பு வரை கோயில் குடமுழுக்கிலிருந்து அன்றாட வழிபாடுவரை அனைத்தும் சமஸ்கிருத மயமாவதன் வழியாக இந்த மேலாண்மை நிலைகொண்டது.

அறிவியல் சார்ந்த அற வழிப்பட்ட தமிழர் சடங்குகள் மறைக்கப்பட்டன. சைவமும், வைணவமும் இவைக் கடந்த வழிபாட்டு முறைகளும் வேதமத மேலாண்மைக்கு உள்ளாயின. தேவாரம் திருவாசகம் , போன்ற திருமுறைகளும், திவ்யப் பிரபந்தமும், தமிழிசையும் தங்கள் இருப்பை நிலைநாட்டிக் கொள்ள உயிர்க் காப்புப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால்தான் , தமிழ் மொழிக் காப்பு போராட்டமும், இனக்காப்பு போராட்டமும், சமூக சமத்துவப் போராட்டமும் இணைந்தே வரலாறு நெடுகிலும் நடந்துவருகின்றன.

ஆரிய இனவாதத்தின் இன்றைய நவீன வடிவம் இந்தியத் தேசியம் ஆகும். இந்த இந்தியத் தேசியத்தின் தீவிர வடிவமே இந்துத்துவம் ஆகும். எனவே, இந்துத்துவ வெறிக்கட்சியான பாரதிய சனதாவின் ஆட்சி கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி ஆரிய மேலாதிக்கத்தை ஐயத்திற்கு இடமின்றி நிலை நாட்டவும், வருண சாதிக் கொடுமையை நிலைப்படுத்தவும் துறைதோறும் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது.

இந்த வரிசையில் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே தாய்மொழியாக உள்ள சமஸ்கிருதத்திற்குத் தனிச்சிறப்பு வாரம் நடத்தி அதன் மேலாண்மையை வலியுறுத்தும் போட்டிகள், ஆய்வரங்கங்கள், திரைப்பட திரையிடல்கள் போன்றவற்றை நடத்துவது என முடிவு செய்துள்ளது. தமிழர்கள் மீது சமஸ்கிருத மொழி ஆதிக்கத்தையும், ஆரிய இன மேலாண்மையையும் திணிக்கும் இச் செயல் தமிழையும் தமிழினத்தையும் இழிவு படுத்தும் கேடான நோக்கமும் கொண்டது.

உள்துறை அமைச்சகம் வழியாக இந்தியைத் திணிப்பதும், எல்லா அமைச்சகங்களும், எல்லாத் துறை நிர்வாகங்களும் இந்தியில் அறிக்கைகள் அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதும் இப்போது சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட முனைவதும் தமிழ் நாட்டு மக்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை ஆகும்.

சமஸ்கிருத வாரம் என பா.ச.க அரசு அறிவித்துள்ள 2014 ஆகஸ்ட்டு 7 முதல் 13 முடிய உள்ள நாட்களில் சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து சமஸ்கிருத எதிர்ப்பு வாரம் நடத்துவது என த.தே.பொ.க தலைமைச் செயற்குழு முடிவு செய்துள்ளது.

இதனையொட்டி ஆகஸ்ட்டு 7 முதல் 13 வரை உள்ள வாரத்தில் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், கருத்தரங்கங்கள், தெருமுனைக் கூட்டங்கள், துண்டறிக்கைப் பரப்புரைகள் என பலவடிவங்களில் சமஸ்கிருத எதிர்ப்பு வார நிகழ்ச்சிகள் நடைபெறும்.

- கி.வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Pin It