மறைந்த நாமக்கல் நா..இராவை முன் வைத்து...

தமிழ்த்தேசிய அரசியலில் நா.ப.இராமசாமி அவர்களைத் தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. தமிழ் அறிவுலகிலும் அவரை அறியாதவர் எவரும் இருக்க இயலாது. அவருடைய அரிய நூலகம் அறிஞர் பலரையும் தேனீக்களை ஈர்க்கும் மலர் போல அவருடைய நாமக்கல் இல்லத்திற்கு ஈர்த்திருக்கிறது.

பன்முகத் தன்மை வாய்ந்தவர் நாபஇரா. ஈழ ஆதரவுப் போராட்டங்கள், தமிழக உரிமைப் போராட்டங்கள் என ஒன்று விடாமல் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்துக் கொண்டவர். தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கடுமையான அடக்குமுறைகள் நிலவிய காலத்திலும் அவற்றிற்கெல்லாம் சிறிதும் அஞ்சாது விடுதலைப் புலிகளையும் ஈழ விடுதலையையும் ஆதரித்து நின்றவர். பொதுமைக் கொள்கையைத் தம் கொள்கையாக வரிந்து கொண்டவர். பார்ப்பனிய எதிர்ப்பில் எள்ளளவும் சமரசம் செய்து கொள்ளாத போராளியாக வாழ்ந்தவர்; தெளிந்த பகுத்தறிவுவாதி.

அரசியலில் அவருக்கு எந்த அளவு நாட்டம் இருந்ததோ அதனினும் கூடுதலான ஆர்வம் இலக்கியத்திலும், அதனூடாகப் புத்தகத் தேடலிலும் வாசிப்பிலும் சேமிப்பிலும் இருந்தது. அவர் நூலகத்தில் வேறெங்கும் கிடைக்காத பல அரிய நூல்கள் இருப்பதாகத் தமிழ் ஆய்வறிஞர் பொ.வேல்சாமி கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். நினைவேந்தல் கூட்டத்திலும் அது குறித்து நெஞ்சு கனக்க விரிவாகப் பேசினார். பழந்தமிழ் இலக்கியத்தில் அவருக்கிருந்த ஈடுபாட்டைப் போலவே நவீனத் தமிழ் இலக்கியத்திலும் இருந்தது என கண.குறிஞ்சி குறிப்பிட்டுப் பேசிய பொழுது அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றுதான் என உணர முடிந்தது. காணக் கிடைக்காத தமிழருள் தமிழராகவே அவர் வாழ்ந்திருக்கிறார்.

ஆம்! அவர் காணக்கிடைக்காத தமிழர்தாம். நாபஇராவை நினைக்கும் பொழுதெல்லாம் நெஞ்சில் இன்னொரு காணக் கிடைக்காத தமிழரான கரூர் வழக்குரைஞர் பூ.அர.குப்புசாமி நினைவில் வந்து நிழலாடுவதைத் தடுக்க முடியவில்லை. முன்னவர் நாமக்கல்லை வாழ்விடமாகக் கொண்டு செயல்பட்டவர்; பின்னவர் கரூரை வாழ்விடமாகக் கொண்டு இயங்கியவர். நாபஇராவைப் போலவே பூஅரகுவும் பலதளங்களில் செயல்பட்டவர். குறிப்பாகக் காவிரிச் சிக்கலில் அவரின் அளப்பரிய ஈடுபாடும் ஈகமும் உழைப்பும் அனைவரும் அறிந்ததே! கேட்கும் நிலையைக் காது இழந்த பின்னரும் படுக்கையாகிய நிலையிலும் கூட அவரைப் பார்க்க வருவோர் போவோரிடம் எல்லாம் காவிரி பற்றியே பேசுவார். தமிழகத் தலைவர்கள் காவிரிக்கு இழைத்த இரண்டகம் மீது ஆற்றவொண்ணாச் சினம் இறுதி மூச்சு வரை அவருக்கிருந்தது. அச்சினத்தோடும் கவலையோடும்தான் அவர் உயிர் பிரிந்திருக்க வேண்டும்.

அவரும் வாசிப்பிலும் புத்தகச் சேர்ப்பு, சேமிப்பிலும் பேரார்வம் கொண்டவராக இருந்தார். தம்முடைய புத்தகங்களை யாழ்நூலகத்திற்கு வழங்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். நோய் அவரை முடக்கிப் போட்டதால் அவ்வெண்ணம் கடைசி வரை ஈடேறவே இல்லை.

இருவருமே நோய்த் தாக்கம் மிக்குற்றுக் கட்டிலில் சாயும்வரை ஓயாது இயங்கியவர்கள். நாபஇரா 15-10-1939இல் தோன்றி 23-09-2013இல் தம் 75ஆம் அகவையில் மறைந்தார்; பூஅரகுவோ 01-08-1933இல் தோன்றி 15-02-2010இல் தம் 76ஆம் அகவையில் மறைந்தார். இருவருமே இன்னும் நீண்ட காலம் நம்மிடையே வாழ்ந்திருக்க வேண்டியவர்கள். இன்றைய மருத்துவ உலகில் 75 , 76 அகவைகள் எல்லாம் இறக்கக் கூடிய அகவைகள் அல்ல. நோய் என்னும் கொடிய காலன் அவர்களை நம்மிடமிருந்து பிரித்துச் சென்று விட்டான். “நெருநல் உளனொருவன்....” என்ற மெய்யியலை மாற்ற எந்த அறிவியலாலும் இயலாது.

இருவரும் காணக்கிடைக்காத தமிழ்ச் சான்றோர்கள் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை. தனிவாழ்வு வேறு பொதுவாழ்வு வேறு என்று அவர்கள் எப்பொழுதும் வாழ்ந்ததில்லை. தனிவாழ்வில் அவர்களுக்கு ஒளித்துக் கொள்ள எதுவுமே இருந்ததில்லை. முகமூடி அணிந்து அவர்கள் நாடகம் ஆடவில்லை. திறந்த புத்தகங்களாக வாழ்ந்தனர். நாபஇராவைக் காட்டிலும் பூஅரகுவிடம் இக்கட்டுரையாளன் நெருக்கமாகப் பழகியவன். தனிவாழ்வில் தாம்பெற்ற தோல்விகளை மனம் திறந்து பேசுவார். தம் கொள்கைகளிடமிருந்து குடும்பம் விலகி நின்றதை அவர் எப்பொழுதும் மறைத்ததில்லை. தம் இயலாமையை நொந்து கொள்வார். அத்தகைய ஓர் அரிய பண்பாளர் அவர். நாமக்கல்லாரும் ஆகச் சிறந்த பண்பாளராகவே திகழ்ந்தார்.

இவர்கள் இருவரைப் பற்றியும் பேசுகையில் தவிர்க்க முடியாமல் கேள்விகள் பல எழுகின்றன. தனிவாழ்விற்கும் பொதுவாழ்விற்கும் தொடர்பு உண்டா? தனிவாழ்வின் குறைநிறைகள் பொதுவாழ்வைப் பாதிக்காதா? தனிவாழ்வின் ஒழுக்கச் சீர்கேடும் பண்பாட்டுச் சீரழிவும் பொதுவாழ்வில், அம்மனிதரின் அரசியல் வாழ்வில் தாக்கத்தை ஏறபடுத்தாதா? அம்மனிதரே இயக்கம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருப்பின் அது ஒட்டுமொத்த அரசியலில் எந்தத் தாக்கத்தையும் விளைவிக்காதா? வெறும் புறக் காரணிகள் மட்டும்தான் அரசியல் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கிறதா? பொது, அரசியல் வாழ்வில் தனிமனித ஒழுக்கம் பற்றியும் தனிமனிதப் பண்பு பற்றியும் தனிமனிதக் குறைநிறைகள் பற்றியும் பேச வேண்டிய தேவையே இல்லையா? தனிவாழ்வில் ஒழுக்கக் கேடான ஒருவர் அரசியலில் உயர்ந்த நோக்கம் ஒன்றிற்காகப் போராடினால் அவர் பின்னே எந்தக் கேள்வியும் இன்றி அணி திரண்டு நிற்க வேண்டியதுதானா? இது நீண்டகாலப் போக்கில் எந்தப் பின்னடைவையும் ஏற்படுத்தாதா? இத்தகு கேள்விகள் அரசியல் தளத்தில் குறிப்பாக மார்க்சியத் தளத்தில் பல்வேறு கோணங்களில் வேறுபட்ட பார்வைகளில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டிருந்தாலும் இன்றைய தமிழ்நாட்டுச் சூழலில் மீண்டும் இக்கேள்விகளை எழுப்பி ஆழமாக விவாதிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இக்கேள்விகளை விவாதிப்பதற்குக் கடந்தகால தமிழ்நாட்டு அரசியல் வரலாறு பெரிதும் துணை நிற்கும் எனக் கருதுகிறேன். இன்று தமிழ்நாட்டு மய்ய நீரோட்ட அரசியலில் பெரிதும் கோலோச்சுவன திராவிடக் கட்சிகளே. இக்கட்சிகளுக்குக் கொள்கை கோட்பாடுகள் இருப்பதாகக் கூறினால் அக்கட்சித் தொண்டர்களே எள்ளி நகையாடுவர். பணம், பதவி, அவற்றால் பெறும் ‘சுகம்’ ஆகியவற்றைத் தவிர இவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் எப்பொழுதும் இல்லை; இருந்ததாகவும் தெரியவில்லை. இன்று எல்லாத் தேர்தல் கட்சிகளும் இந்தச் சீரழிவு நிலையையே வந்தடைந்துள்ளன.

கொள்கை கோட்பாட்டுப் பற்றுறுதியும் ஈகமும் நிறைந்த இடதுசாரிக் கட்சிகளிலேயே ஓட்டை விழுந்து விட்டது. இதை அவர்களாலேயே மறுக்க முடியாது. நீண்ட காலம் மார்க்சிசுட்டுக் கட்சியில் இருந்தவரும் திருப்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான கோவிந்தராசு இன்று திமுக ஸ்டாலின் அணியில்; செல்வத்தில் புரளுகிறார். அவர் கட்சி மாறிய பொழுது திருப்பூரிலிருந்து சென்னைக்கு அணி வகுத்த பேருந்துகளே நூற்றுக் கணக்கில் என்பார்கள். அண்மையில் திரிபுராவில் மார்க்சிசுட்டுக் கட்சியைச் சேர்ந்த பழம்பெரும் உறுப்பினர் ஒருவர் பணப்படுக்கையில் புரண்ட அருவருப்பை அனைவரும் அறிவோம்.

இதற்குப் பல்வேறு புறக்காரணிகள் உள்ளன என்றாலும் அகக் காரணிகள் அவற்றிற்கு ஊக்கிகளாக அமைந்து சீரழிவை விரைவுபடுத்தி விட்டன என்பதே உண்மை. இங்கு நாம் திராவிட இயக்கத்தை மட்டும் விவாதத்திற்கான அலகாக எடுத்துக் கொள்வோம். இன்றுள்ள எல்லாத் திராவிடக் கட்சிகளுக்கும் தாயாக இருப்பது நீதிக்கட்சியும் அதன் வழியாகத் தோன்றிய சுயமரியாதை இயக்கமுமே ஆகும். இவ்வமைப்புகள் தமிழ்நாட்டு அரசியலைப் புரட்டிப் போட்ட அமைப்புகள் என்பதில் அய்யமில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் விழிப்புணர்வைப் பெற இவை பெரிதும் துணை நின்றன.

அமைப்புகளின் பங்களிப்பைக் காட்டிலும் பெரியார் என்ற மாமனிதர் ஆற்றிய சாதனைகளே சாலப் பெரியன. தமிழ்நாட்டின் புரட்சி இயக்கங்கள் யாவும் பெரியாரைத் தொட்டே கடந்து சென்றாக வேண்டும். ஆனால் பெரியாரின் அமைப்புக்குள் இருந்தவர்களும், அமைப்பை விட்டு வெளியேறி புது அமைப்பைக் கண்டவர்களும் சிதைந்து சீரழிந்து போனார்கள். தமிழ்நாட்டுப் போராட்ட அரசியலுக்குப் புதைகுழி தோண்டியவர்கள் இவர்களே.

இச்சீரழிவுகளின் தொடக்கப் புள்ளி எது? தனிமாந்த ஒழுக்கக் கேடுகளே! தனிமாந்த ஒழுக்கக் கேடுகளே! இக்கூற்றில் எள்ளளவும் மிகையில்லை. பெரியார் இரண்டாவதாக இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் என்று குற்றம் சாட்டி வெளியே வந்தவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை நாடே அறியும் . “பானுமதி படிதாண்டாப் பத்தினியும் அல்ல, நானும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல” என்ற கூற்று புகழ் பெற்றது; கட்சிக்குள் நிலவிய “கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை” வெளிச்சம் போட்டுக் காட்டுவது. கண்ணதாசனின் ‘வனவாசச்’ செய்திகளை நாம் அறிவோம். மணிரத்தினத்தின் ‘இருவர்’ படம் இவர்களின் தனிமாந்த ஒழுக்கக் கேடுகளை அம்பலப்படுத்தியது. இதில் எம்சிஆரைப் புனிதராகக் காட்டியது வேறு செய்தி.

திமுக கட்சிக்காரர்கள் இவற்றைப் பற்றியெல்லாம் எப்பொழுதும் அலட்டிக் கொண்டதே இல்லை. ‘வனவாசம்’ வெளிவந்த பொழுதும் சரி, ‘இருவர்’ படம் வெளிவந்த பொழுதும் சரி தலைவரின் தனிவாழ்வைக் களங்கப்படுத்துவதாகக் கூறி கொதித்தெழுந்ததாகச் செய்தி இல்லை. கருத்துரிமையை மதித்து அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. உள்ளூர அவர்கள் மகிழ்ந்து போனார்கள் என்பதே உண்மை. அதுமட்டும் அன்று. அவற்றையெல்லாம் தம் தலைவர்களின் தனிச்சிறப்புகளாகக் கொண்டாடினார்கள். இங்குதான் நம் தமிழ்நாட்டு அரசியலின் வீழ்ச்சியே தொடங்குகிறது.

மெய்யறிவு காணும் பாதையைப் பெரியாரின் பகுத்தறிவு இவர்களிடம் ஊக்குவிக்கவில்லை. ‘பாவம் புண்ணிய’மெல்லாம் ஒன்றுமில்லை, எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம் என்பதையே கற்றுக் கொடுத்தது. சமூகத்தை மாற்றி அமைக்கும் முன்னேர் உழவர்கள் நாம் என்ற கருத்து இவர்களிடம் எப்பொழுதுமே இருந்ததில்லை. மேடைப்பேச்சு, எழுத்துகளில் ஆரவாரம் ஆர்ப்பாட்டம் இருந்ததே ஒழிய உண்மையின் ஒளி இருந்ததில்லை.

கொள்கை கோட்பாடுகளில் எப்பொழுதுமே இவர்களிடம் உண்மையான பிடிப்பும் உறுதியும் இருந்ததில்லை; விடுதலை அரசியலுக்கான வீரமும் ஈகமும் இருந்ததில்லை. உலக விடுதலை இயக்கங்களிலும் பொதுவுடமை இயக்கங்களிலும் காணப்படும் ஈடற்ற ஈகங்களுக்கு இணையாக திமுக வரலாற்றில் சிறிய அளவிலேனும் எதையேனும் எடுத்துக்காட்ட முடியுமா? தண்டவாளத்தில் தலை வைத்துப்(!) படுத்ததையும், பாளையங்கோட்டைச் சிறையில் தேள், பாம்பு, பூரான்களுக்கிடையில்(!) வாழ்ந்ததையும் தவிர. அதனால்தான் “கடவுள் இல்லை” என்ற முழக்கத்தை “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று எளிதாக மாற்றிக் கொள்ள முடிந்தது; “கிடைத்தால் திராவிடநாடு இல்லாவிட்டால் சுடுகாடு” என்ற வீரமுழக்கம் மய்ய அரசின் ஒரே ஒரு சட்டத்தால் தொண்டைக் குழிக்குள்ளேயே அமிழ்ந்து அழிந்து போனது. அதனால்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈகத்தையும் வீரத்தையும் கண்டபொழுது திடுக்கிட்டுப் போனார்கள்; போராட்டத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனக் கை கழுவினார்கள்; மெல்ல மெல்லப் போராட்டம் வலுவிழந்து போக வழி வகுத்தார்கள். ஆனால் அதே சமையம் போராட்ட ஈகங்களைத் தங்கள் பதவி நோக்கிய பயணத்திற்குப் படிக்கட்டுகளாக மாற்றிக் கொண்டார்கள்.

கட்சித் தொண்டர்களிடையே தலைவர்கள் எப்பொழுதுமே கொள்கைப் பற்றையோ ஈக உணர்வையோ ஊட்டி வளர்த்ததில்லை. பேசவரும் பேச்சாளர்களுக்கும் தலைவர்களுக்கும் புலால் விருந்தும் புட்டிகளும் வழங்க வேண்டும்; தலைவர்கள் “சுகத்தில்” திளைக்க தாமும் அதைக் கண்டு எஞ்சியுள்ளதை உண்டு குடித்து மகிழ்ச்சியில் மூழ்க வேண்டும். அதனால்தான் தலைவர்கள் நினைத்தபொழுதெல்லாம் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டபோது தொண்டர்கள் பெயரளவுக்கேனும்கூட எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.

“சுகம்” தேடுதல் எல்லா வகை இழிவுகளையும் சரிவுகளையும் கொண்டு சேர்க்கும். இன்பத் துய்ப்பு பணத்தைத் தேடி ஓடச் சொல்லும். பதவியை நாடி அலைக்கழிக்கும். பதவியும் பணமும் அதிகாரத் துய்ப்பில் மூழ்கச் செய்யும். ஒருமுறை இவற்றையெல்லாம் துய்த்துத் திளைத்தபின் அவற்றை இழக்க எப்பொழுதும் மனம் வராது. அவற்றைத் தக்கவைக்கவும் இல்லாத போது தேடி அடையவும் அதற்காக எதை வேண்டுமானாலும் ஈகம் செய்யவும் தூண்டும். திராவிட இயக்கங்களுக்கு, குறிப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நேர்ந்த சோக வரலாறு இதுதான்.

‘பதவிச்சுகம்’ என்னும் ஊக்கப் போதை மருந்து அளித்த உற்சாக வெறியில்தான் முள்ளிவாய்க்காலில் ஈழமக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்த போதும் கூட எள்ளளவும் மன உறுத்தலின்றி மகனுக்கும் மகளுக்குமாகச் சக்கர நாற்காலியில் ஓடி ஆடி பதவிப் பேரம் பேச முடிந்திருக்கிறது; தலைமேட்டில் ஒரு மனைவியும் கால்மேட்டில் ஒரு மனைவியும் அமர்ந்திருக்க விடியற்காலையில் கடற்கரையில் உண்ணாப் போராட்டம் என்ற கபட நாடகத்தை அரங்கேற்ற முடிந்திருக்கிறது; உலக வரலாற்றில் ஈடிணையில்லா விடுதலைப் போராட்டத்தை ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கத் துணை நின்ற பின்னரும் எந்தச் சலனமுமின்றி உலகத் தமிழர் தலைவனாய் உலாவர முடிகிறது; ஈழத்தமிழர்களுக்காய் செய்த தியாகங்களை(!) எந்தக் கூச்சமுமின்றிப் பட்டியலிட முடிகிறது; கூடிக்குலாவிய காங்கிரசைக் குற்றம் காண முடிகிறது, மீண்டும் தழுவிக் கொள்கின்ற வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டே.

துரோகங்களின் வரலாறு இதுதான். சொந்த “சுகபோகங்களுக்காக”ச் சொந்த நாட்டையும் மக்களையும் காட்டிக் கொடுக்கும் வரலாறு இதுதான். ஈழத்தில் கருணா பலியானதும் இச்’சுகபோக’ பலவீனத்தில்தான். பிள்ளையான் கதையும் இதுதான். இவர்களோடு கரும்புலிகளின் உயிரச்சமற்ற ஈகத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். சுகபோகிகளின் இரண்டகம் உயரீகத்தைத் தோற்கடித்து விட்டதுதான் மிகப் பெரும் வரலாற்றுச் சோக முரண்.

புரட்சிநிறை அரசியல் புதைசேற்றில் மூழ்கிப் போவதுதற்குத் தனிமாந்த ஒழுங்கீனங்களும் பலவீனங்களும் பெரும் காரணிகளாக அமைந்து விடுகின்றன. இக்காரணிகளோடு புற அரசியல் காரணிகளும் ஒன்றிணையும் போது எல்லாமே முடிந்த கதையாகி விடுகிறது. உலக வரலாற்றில் எங்கும் இக்கதைகள் நிறைந்திருப்பதைக் காணலாம்.

பெரியாரைப் போன்றும் காந்தியைப் போன்றும் தலைவர்களைக் காண்பது அரிது. இருவரும் இருவேறு துருவங்கள்தாம். ஆனால் அவரவர் தளத்தில் வெளிப்படையாய் வாழ்ந்தவர்கள். தங்கள் வாழ்க்கையை மக்களோடு பகிர்ந்து கொண்டவர்கள். அவர்களுக்கு மூடி மறைத்துக் கொள்ள எதுவும் இருந்ததில்லை. அதனால்தான் ஒருவர் தந்தையாகப் போற்றப்பட்டார்; மற்றொருவர் மகாத்மாவாக வணங்கப்பட்டார். ஆனால் அவர்களுடைய வாரிசு எனக் கூறிக்கொண்டோர் பொய்யர்களாய்த் திரிந்து போனார்கள். தமிழ்ச் சமூகத்திலும் இந்தியத் துணைக் கண்டத்தின் பிற சமூகங்களிலும் மாற்றங்கள் நழுவி நழுவிப் போகின்றமைக்குத் தலைவர்களின் உண்மையின்மையும் முகாமையான காரணியாகும்.

தமிழ்நாட்டில் அண்மையில் நடந்த நாடகம் ஒன்று நம்முடைய கருத்துகளுக்கு வலுச் சேர்ப்பதாக உள்ளது. இந்நாடகம் கருணாநிதி ஆடிய உண்ணாநிலைப் போராட்ட நாடகத்தைக் காட்டிலும் நிறையத் திருப்பங்கள் நிறைந்த திகில்நிறை நாடகம். வெற்றி அல்லது வீரச்சாவு என்ற முழக்கத்துடன் உணவு மறுப்புப் போராட்டம்(திட உணவு மட்டுமே மறுப்பு?) என அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அந்நாடகம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஓடிச் சென்று வாழ்த்துத் தெரிவித்ததும் மருத்துவமனைக்கு முதன்முறை அழைத்துச் சென்று விடுவிக்கப்பட்டதும், மீண்டும் உணவு மறுப்புத் தொடர மீண்டும் கைதானதும், கருணாநிதி அறிக்கையும், மன்மோகன்சிங்குக்கு வேண்டுகோள் விடுத்ததும் என அடுத்தடுத்த காட்சிகள் பரபரப்பாக அரங்கேறின. இறுதி உச்சகட்டக் காட்சியாக மன்மோகன்சிங் கடிதத்துடன் திமுக பேச்சாளர் இளங்கோவன் உணவு மறுப்புப் போராட்டத்தை முடித்து வைக்க ‘சுபமாக’ நிறைவுற்றது நாடகம். மீண்டும் ஒருமுறை தோழரின் உயிரைக் கருணாநிதி காப்பாற்றி விட்டார் என்ற சுப வீரபாண்டியனார் அறிக்கை நாடகத்திற்கு முத்தாய்ப்புச் சேர்த்தது. வாழ்த்துத் தெரிவித்த தலைவர்களும் உயிரைக் காப்பாற்றத் துடித்த தலைவர்களும் ‘மவுனமாகிப்’ போனதுதான் நாடகத்தின் மறுபக்கச் சோக முடிவு.

தியாகுவின் இந்த உணவு மறுப்புப் போராட்டம் என்பதே முற்ற முழுக்க தந்நல நோக்கத்தில் நடத்தப்பட்ட ஒன்றாகும். தம் ஒழுக்கக் கேடுகளால் இழந்து போன செல்வாக்கை மீண்டும் புனரமைத்துக் கொள்ள அவர் தீட்டிய நாடகமே இது. தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்திலிருந்து பெரும்பான்மையான உறுப்பினர்களால் வெளியேற்றப்பட்டவர் அவர். அவர் வெளியேற்றப்பட்டதற்கான காரணங்களைச் ‘சமூகநீதித் தமிழ்த்தேசத்’தில் விரிவாக எழுதியாயிற்று. ஆனால் எந்த அரசியல் அறமும் இன்றி அவரைப் போன்றே தந்நலம் மிக்க ஒருசிலரைத் தம்மோடு வைத்துக் கொண்டு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கச் செயலாளர் என்ற பெயரில் தொடர்ந்து வஞ்சக நாடகம் ஆடி வருகிறார். தனிமாந்த வாழ்வுச் சறுக்கல்கள் எந்நிலைக்குக் கொண்டு சேர்க்கும் என்பதற்கு இவருடைய வாழ்வே ஆகச் சிறந்த சான்றாகும். கருணாநிதியைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, “ஒரு காலத்தில் பெருங்காயம் அடைத்திருந்த டப்பா” என்று குறிப்பிடுவார். இன்று அது இவருக்கே சாலப் பொருந்தி வருவதுதான் வரலாற்று நகை முரண். இன்று இருவர் அரசியலும் புரட்டு அரசியலாய் ஒரே புள்ளியில் சங்கமித்திருப்பது சாலப் பொருத்தமே.

மீண்டும் தொடக்கத்திலே எழுப்பிய கேள்விகளுக்குத் திரும்ப வேண்டி உள்ளது. பொதுவாழ்வில் முன்னோடும் பிள்ளைகளாக வருகின்றவர்கள் தனிவாழ்வில் அறவொழுக்கம் பேணுகின்றவர்களாக இருக்க வேண்டும். தனிவாழ்வு வேறாகவும் பொதுவாழ்வு இன்னொன்றாகவும் அமைந்து விடக் கூடாது. அதுவும் விடுதலை அரசியலில் இத்தகையோரின் செயல்பாடுகள் அவ்வரசியலையே பாழ்படுத்தி விடும்; துரோக அரசியலாக மாறி விடும்; ஆதிக்க அரசியலாகத் திரிந்து விடும். புரட்சி அரசியலை முன்னெடுப்போர் தற்கட்டுப்பாடு மிகுந்தவர்களாக இருக்க வேண்டும்; சுகம் மறுப்பவர்களாக, சுகம் துறப்பவர்களாக, தம்மை வருத்திக் கொள்பவர்களாக, எந்த ஈகத்திற்கும் எப்பொழுதும் அணியமானவர்களாக இருக்க வேண்டும். உண்மையில் துறவிகள் என்போர் இவர்களே! சேகுவாராவையுயம், பிரபாகரனையும் வேறு எப்படி அழைப்பது?

நாபஇராவும் பூஅரகுவும் இவ்வகையில் நமக்கு ஒளி மிகுந்த முற்காட்டுகளாவர். அவர்கள் மிகப்பெரும் புரட்சியெல்லாம் செய்து விடவில்லை. தம்மளவில் அவர்கள் சரியாக வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்களைப் போற்றுவோம்! தனிவாழ்விலும் பொதுவாழ்விலும் அறவொழுக்கம் பேணுவோம்! போலி நாடகமாடிகளை இனங்கண்டு புறக்கணிப்போம்!

- கலைவேலு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It