ஜெர்மன், ரஷ்யா, பிரான்ஸ், ஜப்பான், சீனா போன்ற நாடுகள் தாய்மொழிக்கல்வியை மிகவும் ஊக்குவித்து நடைமுறைப்படுத்தியுள்ளன. இத்தகை நாடுகளில் அறிவியல் பாடங்கள் அனைத்தும் தாய் மொழி வழியாகவே, கற்பிக்கப்படுகின்றன. இங்கு ஆய்வு முடிவுகளைத் தாய் மொழியில் வெளியிடுகிறார்கள். இதனால் அறிவியல் வளர்ச்சி எவ்வகையிலும் தடைபடவில்லை. தேவையான ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துக் கொள்கின்றனர். அறிவியல் கருத்தரங்குகளையும் தாய் மொழியிலேயே நடத்துகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில், தாய் மொழியில் அறிவியல் பாடங்களைக் கற்பது என்பதே இயலாத ஒன்றாக உள்ளது. இப்போது தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியைத் தாய்மொழியில் கற்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

தொடக்கப் பள்ளியில் அறிவியல்:

  தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட அரசு தொடக்கப் பள்ளிகள் உள்ளன. ஆனால் குறிப்பாக நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் இப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கைக் குறைந்து வருகிறது.

  இதற்குக் காரணம் தமிழகத்தின் பட்டித்தொட்டிகளிலெல்லாம் நாள்தோறும் பெருகிவரும் நர்சரிப்பள்ளிகளும், மெட்ரிகுலேசன் பள்ளிகளும், சிபி.எஸ்.ஈ பாடத்திட்டப் பள்ளிகளுமே ஆகும். பெற்றோர்களும் தமிழப் பள்ளிகளை ஒதுக்கி ஆங்கிலப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை மிகுந்த ஆர்வத்துடன் சேர்கின்றனர். அறிவியல் பாடங்களைத் தமிழ் வழிப் பயின்றால் சிறப்புடையதா? ஆங்கில வழிப் பயில்வது சிறந்ததா? என்பதைப் பற்றிப் பெரும்பான்மையான பெற்றோர்கள் சிந்திப்பதே இல்லை.

  ஆங்கிலத் தொடக்கப் பள்ளிகளிலும் தமிழ்த் தொடக்கப் பள்ளிகளை விட அறிவியல் பாடங்களை மிகவும் சிறப்பாக மாணவர்களுக்குக் கற்பிக்கின்றனர் எனக் கூற முடியாது.

  ஒரு சிறந்த ஆங்கிலப் பள்ளியில் நல்ல மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேறிய மாணவர்களிடம் அறிவியல் தொடர்பான ஒரு சில கேள்விகள் கேட்கும்போது, அம்மாணவர்கள் அக்கேள்விக்குத் தொடர்பான பதிலை மனப்பாடம் செய்ததைச் சொல்லுகின்றனர். அம்மாணவர்கள் தாய் மொழியில் சிந்தித்தது ஆங்கிலத்தைச் சொல்லுவதற்குத் தடுமாறுவதை உணரமுடிகின்றது. இதிலிந்;து அம்மாணர்கள் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் படிப்பதால் தெளிவாகச் சிந்தித்து;ப புரிந்து கொள்வதில்லை என்பது புலனாகிறது.

கல்லூரிகளில் அறிவியல்:  

  தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகளில் அறிவியல் பட்டப் படிப்புகளைத் தமிழ்வழிப் பயிற்றுவித்தல் 1969 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தமிழ்வழி அறிவியல் பட்டப்படிப்பில் குறைந்த மாணவர்களே சேர்ந்தனர். இதற்குக் காரணம் தமிழ்வழி அறிவியல் பட்டம்பெறுவோர்க்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை மற்றும் இவர்களுக்குத் தேவையான துணைநூல்கள் தமிழில் இல்லை என்பதேயாகும். பின்னர் தமிழ்வழிப் பட்டப் பயில்வோருக்குத் தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கியது. இதனால் தமிழ்வழி அறிவியல் பயில்வோரின் எண்ணிக்கை சற்றுக் கூடுதலானது.

  இக்காலத்தில் அரசு கல்லூரிகளில் அறிவியல் பாடங்கள் ஆங்கில வழி பயில்வோரில் பாதிப்பேர் தேர்வுகளைத் தமிழில் எழுதுகின்றனர். இம்மாணவர்கள் தமிழ் வழிப் பயிலவே விரும்புகின்றனர்;. தமிழ் வழிப் பயின்றால் வேலைவாய்ப்பு கிடைக்காதோ என்னும் அச்சம் அவர்களை ஆங்கில வழிப் பட்டப்படிப்பில் சேரத் தூண்டுகிறது.

  தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் கல்லூரிகளிலும் ஆங்கில வழி அறிவியல் பட்டப் படிப்புகளையே வைத்துள்ளனர். அம்மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் எழுத முடியும். ஆனால் ஒரு சில தனியார்க் கல்லூரிகளில் ஆங்கில வழி அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்கள் விரும்பினால் துணைப் பாடங்களை மட்டும் தமிழில் எழுதலாம் என வைத்துள்ளனர். இத்தகைய கல்லூரிகளில் பெரும்பான்மை மாணவர்கள் துணைப்பாடங்களைத் தமிழிலேயே எழுதுகின்றனர்;

 எனவே கல்லூரிகளில் அறிவியல் பட்டப்படிப்பைத் தமிழ் வழிக் கற்க மாணவர்கள் முன் வருகின்றனர் என்பது தெளிவாகின்றது . ஆகையால், அரசு, தமிழ்வழிப் பட்டம்பெறுவோர்க்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

களஞ்சியங்கள் வெளியிடல்:

ஒரு மொழியின் வளர்ச்சியில் களஞ்சியங்கள் பெரும் பங்கு வகிக்கினறன. தமிழில் வாழ்வியல், அறிவியல் செய்திகளைத் தொகுத்து 10 தொகுதிகள் கொண்ட கலைக்களஞ்சியமாக வழங்கத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் திட்டமிடப்பட்டது. இப்பணி 1947 ஆம்ஆண்டில் தொடங்கி 1968 இல் நிறைவு செய்யப்பட்டது.

  பின்னர் 1983 இல் தமிழப்பல்கலைக்கழகம் இப்பணியை ஏற்றுக் கலைக்களஞ்சியத்தை அறிவியல், வாழ்வியல் என இரு பிரிவுகளில் தனித்தனித் தொகுதிகளாக வெளியிடுகிறது. தமிழ்க் கலைக்களஞ்சிய வளர்ச்சியில் இது ஒரு சிறந்த படிநிலை ஆகும். அறிவியலில் 20 தொகுதிகள் எனவும் வாழ்வியலில் 14 தொகுதிகள் எனவும், திட்டமிட்டு வெளியிடப் படுகின்றன.

  அறிவியல் களஞ்சியங்கள் அறிவியல் கல்விக்கு உற்றத் தூணாக விளங்குகின்றன. மேலும் ஒவ்வோர் அறிவியல் துறைக்கும், தனித்தனியாகக் களஞ்சியங்களைத் தமிழில் உருவாக்கினால், அறிவியல் தமிழ் மேன்மேலும் வளர்ச்சியடையும். தமிழ் அறிவியல் துணண நூல்கள் இல்லை என்னும் நிலையும் மாறும்.

  பொறியியல், மருத்துவம் ஆகிய பட்டப் படிப்புகளைத் தமிழில் கற்பிக்கத் திட்டமிடப்பட்டு முதலாண்டு பொறியியல், மருத்துவ மாணவர்களுக்கு ஒரு சில பாடங்களை மட்டுமே தமிழில் கற்பிப்பது என முடிவு செய்துள்ளனர். இது வரவேற்கத் தக்கதாகும். ஒவ்வோர் ஆண்டும் தமிழ்க் கற்பிக்கும் பாடங்களின் எண்ணிக்கையைப் பெருக்கி இறுதியில் அனைத்து மருத்துவ, பொறியில் பாடங்களையும் தமிழ் வழிக் கற்பித்தலாக மாற்ற வேண்டும். அதற்கு உதவுமாறு பல்வேறு நூல்கள் வெளியிட வேண்டும். மருத்துவம், பொறியியல் பட்டப் படிப்புகளை முற்றிலும் தமிழ் வழிப் பயிலலாம் என்னும் நிலை வருமாயின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை தமிழ்ப் பள்ளிகளில் சேர்க்க முன்வருவர்.

  தொடக்கப் பள்ளியில் அறிவியல் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் பயின்றால் அங்கு, அவர்களுக்கு மொழி ஒரு சுமையாக அமைகின்றது. மேலும் இளம் பருவத்தில் அவர்களின் சிந்தனை ஆற்றல் மேம்படுத்தப் படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு அவர்கள் ஆங்கிலத்தையோ, விரும்பிய மொழியையோ எளிதில் கற்றுக் கொள்ளலாம். எனவே அறிவியலைத் தொடக்கக் கல்வி முதல் தமிழில் கற்பதே சிறப்புடையதாகும்.

- அன்பு சிவா

Pin It