ஈழ மக்களுக்கு இந்தியாவும் 13-வது திருத்தமும் அரசியல் தீர்வைப் பெற்றுத் தரப் போகின்றனவா?

இலங்கை அரசு அதன் முப்படையினர் மூலம் ஈழ மக்கள் மீது பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரான மற்றும் பன்னாட்டு மாந்தநேயச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்களுடன் போர் குற்றங்களையும் இழைத்துள்ளது என்பதை காட்டும் போதுமான சான்றுகள் உள்ளன என்று உறுதிபடுத்திய ஐ.நா வின் விசாரணைக் குழு, அக்குற்றங்கள் குறித்த ஒரு முழுமையான பன்னாட்டு விசாரணையின் அவசியத்தையும் வலியுறுத்தியது.அக்குழுவின் அறிக்கை வெளியாகி இரண்டு வருடங்கள் கடந்த பிறகும் அக்குற்றங்கள் குறித்து எந்தவகையான விசாரணை ஒன்றின் தொடக்கத்தைக்கூட பன்னாட்டு சமூகத்தால் காணமுடியவில்லை. நடந்தேறியுள்ள அக்குற்றங்கள் குறித்த சான்றுகள் இனப்படுகொலை குற்றம் நடத்தப்பட்டுள்ளதையும் சுட்டிகாட்டுகின்றன என்று பன்னாட்டு சட்டவியல் நிபுணரும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞருமான பிரான்சிஸ் ஃபாயில் குறிப்படுகின்றார். அவரைப்போன்றே, பல பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் நாடுகளும் அக்குற்றங்கள் குறித்து ஐ.நா மூலமான ஒரு முழுமையான பன்னாட்டு விசாரணையின் அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.

ஆனால், அத்தகைய ஒரு விசாரணை இந்திய அரசுக்கு மட்டுமல்ல இந்திய கட்சிகள், ஊடகங்கள், அறிவுத்துறையினர் உள்ளிட்டோருக்கும் உவப்பானதாக இருக்கவில்லை. நடத்தப்பட்டுள்ள அந்தக் குற்றங்களைவிட அவை குறித்த பன்னாட்டு விசாரணையைத்தான் அவர்கள் குற்றமாக காண்கின்றனர். இலங்கை அரசின் இறையாண்மை அந்தளவு புனிதமானது!

இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டினை ஆதரிக்கும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட இந்த இந்தியத்தரப்பினர், இப்பொழுதும் இலங்கை நாட்டின் ஒருமைப்பாட்டிற்குத்தான் மிகவும் கவலைப்படுகின்றனர். ஈழ மக்கள் மீது இழைக்கப்பட்டுள்ள குற்றங்கள் இனி மறைக்கப்பட முடியாது என்ற நிலைமை தோன்றியபிறகு அக்குற்றங்கள் இழைக்கப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில், மாதங்களில், வருடங்களில் மௌனம் காட்டிய இவர்கள், தற்பொழுதும் தாங்கள் ஈழ மக்களின் நியாயத்திற்கு குரல் கொடுப்பவர்கள்தான் என்று காட்டிக்கொள்கின்றனர். அவர்களது குரலில் நியாயத்திற்கான வேண்டுதல் உண்மையில் உள்ளதா என்று ஆராய்ந்தால், தமிழ் ஈழ தனி அரசு என்ற கோரிக்கைதான் அவர்களுக்கு இனப்படுகொலை குற்றத்தைவிட பெரிய குற்றமாக இருக்கிறது என்பதும், இலங்கைஅரசின் குற்றங்களைவிட இந்த கோரிக்கை குற்றம்தான் அவர்களை மிகவும் கவலைக்குள்ளாக்குகிறது! என்பதும் தெரியவருகிறது.

இவ்வாறு நியாயம் நிலைநாட்டப்படுவதன் பொருட்டு நடத்தப்பட வேண்டிய ஒரு விசாரணையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மற்றும் அதற்கு முட்டுக்கட்டைப் போட தனது செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்திவரும் இந்திய அரசு, ஈழ மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத் தருவதில் முனைப்பாக இருக்கிறது! இந்திய தரப்பினர் வலதுசாரி -இடதுசாரி, இந்துத்துவம்-மதச்சார்பின்மை, பிற்போக்கு-முற்போக்கு என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் இலங்கை ஒருமைப்பாடு ,பன்னாட்டு விசாரணை எதிர்ப்பு, தமிழ் ஈழம் கூடாது என்பனவற்றில் மாத்திரமல்ல இவர்கள் இந்திய அரசு முன்வைக்கும் அந்த தீர்விலும் ஒன்றுபடுகின்றனர்!

அந்த தீர்வுதான் என்ன? 30 ஆண்டுகாலம் கிளர்ச்சிவழி போராட்டங்கள் மூலமும் 30 ஆண்டு கால ஆயுத போராட்டத்தின் மூலமும் ஈழத்தமிழர்கள் பெறமுடிந்திருக்காத, ஆனால் இந்தியாவின் முயற்சியினால் இலங்கை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13-வது திருத்தம் என்ற அரசமைப்புச் சட்ட திருத்தத்தின்படி கொண்டுவரப்பட்ட மாகாண ஆட்சிமுறை என்பதுதான்!

சுமார் இரு வருடத்திற்கு முன்பு இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, 13-வது திருத்தத்தின்படியானதும் அதற்கும் உயர்வானதுமான அதிகாரப் பகிர்வினை வழங்கும் ஒரு தீர்வினை செயல்படுத்த இலங்கை அரசு உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். இது குறித்து, அப்பொழுது இந்திய ஊடகங்கள் பெரிய அளவில் செய்திகள் வெளியிட்டன. தவறாமல் தலையங்கம் தீட்டிய இந்து ஏடு, ராஜபக்சே அரசாங்கம் தீர்வுக்காக முயற்சிப்பதாகவும் அதற்கு தமிழர் தரப்பு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அறிவுரையும் கூறியது.

அதன்பிறகு, இந்திய நாடாளுமன்றக்குழு ஒன்றும் இலங்கை சென்று வந்தது. அந்த குழுவிற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் இந்திய அரசு காட்டிய நடுநிலைமை வியக்கத்தக்கது! அது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. ஆகிய கட்சிகளின் பிரதிநிதித்துவம் கவனமாக தவிர்க்கப்பட்டதிலிருந்து தெரியவந்தது. அந்த நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்ற கட்சிகளின் இலங்கை அரசின் மீதான நிலைபாடுகள்தான், அந்த குழு தன் நாட்டிற்கு அரசியல் காரணமாக சுற்றுப் பயணம் மேற்கொள்வதை அதன் இறையாண்மையை மீறும் ஒரு செயலாக இலங்கை அரசை காணும்படி செய்வதில்லை.

srilanka_military_600

(யாழ்ப்பாணத்தில் ஒரு புத்த நிறுவனத்தை இலங்கை இராணுவ அதிகாரிகளின் பங்கேற்புடன் சிங்கள புத்த பிக்குகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி)

அந்தகுழு தெரிவித்திருந்த கருத்துக்கள் 1. ஈழ மக்களின் நிலைமை மேம்பட்டுள்ளது (50,000 வீடுகளை கட்டுவதற்கு பன்னாட்டு நிதி உதவி பெற்ற இலங்கை அரசு, இரண்டு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திற்குள்; (!) மிகப்பெரும் கடின முயற்சியில்; சில நூறு வீடுகளை கட்டியதல்லவா?) 2. ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை (அது என்ன உரிமை என்பதை அக்குழு விளக்கியிருக்கவில்லை என்றாலும் அந்த உரிமை தமிழர்களுக்கு இல்லை என்று ஒப்புக்கொண்டதே பெரிதுதான்!) வழங்கப்படுவது அவசியமானதாகும். 3. ஈழ மக்களுக்கு தன்னாட்சி வழங்கும் அரசியல் தீர்விற்கு இலங்கை அரசு (என்றும் போலவே) தயாராக உள்ளது. 4. ஈழ மக்கள் தனி ஈழ அரசு அமைவதை விரும்பவில்லை. (அவர்கள், அது குறித்து கருத்துக் கூறுவதற்கு சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்றும் அக்கருத்துக் குறித்து இக்குழு கேட்டறிந்ததாகவும் நாம் கட்டாயம் நம்பியே ஆகவேண்டும்)

இக்குழுவின் கருத்துக்கள் இலங்கை அரசுக்கு எந்தவித தொந்தரவையும் ஏற்படுத்தவில்லை என்பதுடன், அதனை பன்னாட்டு சமுகத்தின் முன்பு பாதுகாக்க செய்யும் நோக்கத்திலும் தவறியிருக்கவில்லை. அதிலும், மேற்குறிப்பிட்ட நான்காவது கருத்து மிகவும் முக்கியமானது. அதனுடன் சேர்த்து, தமிழ் ஈழ அரசு என்ற தனிநாட்டுக்;கோரிக்கை கேட்கும் அளவிற்கான துன்பங்களை ஈழத் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்டிருக்கவில்லை மற்றும் அவர்களது நிலைமைகள் இலங்கை அரசின் முயற்சியினால் மேம்பட்டிருக்கிறது என்ற கருத்தும் அக்குழுவினால் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்களில் உள்ளிடையான கருத்தாகும். எனவே, இக்குழுவின் பயணம் வெற்றிகரமானதுதான்! அதிலும், இந்தியாவின் ஆளும் கட்சியான நடுசாரிகாங்கிரஸ், எதிர்கட்சியான வலதுசாரி இந்துத்துவா பி.ஜே.பி, இடதுசாரியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இந்திய கட்சிகள் ஒன்றுபட்டது மிகவும் கவனிக்கத்தக்கது.

அந்தக் குழுவின் கருத்துகளில் முக்கியமானது என்ன? இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் படி அமைந்த, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 13-வது திருத்தம் என்பதை செயல்படுத்துவது என்பதுதான். அதன்படி கொண்டுவரப்பட்ட மாகாண ஆட்சிமுறைதான் தீர்வென்றும், அது இலங்கையின் மற்ற மாகாணங்களில் செழிப்பை கொண்டுவந்துவிட்டதாகவும், தமிழ் மாகாணங்களுக்கு இதுநாள் வரை அதனை அமுல்படுத்தப்படாமல் போனதுதான், ஈழ மக்களின் பிரச்சினைகள் தொடர்வதற்கான காரணமென்றும் ஈழத் தமிழர்களின் நலன்களில் மிகவும் அக்கறைகொண்ட இந்து நாளேட்டின் (தயவு செய்து நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்) சித்ரா சுப்ரமணியம் என்ற செய்தியாளர் எழுதிய கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது.

அந்த 13-வது திருத்தம் என்பது தான் என்ன? ஏன் தமிழர் தரப்பு அதனை ஏற்று சமரசமாக செல்ல மறுக்கிறது?

அந்த திருத்தத்தின் வழியாக அமையப்பெறும் அரசியல் தீர்வு என்ன என்பதை ஆராய்வதுதான் இங்கு நோக்கம். அதனைத்தான், சுயாட்சித் தீர்வு என்றும் அதுதான் சரியான அரசியல் தீர்வு என்றும் இன்றும் இந்திய அரசு குறிப்பிடுகிறது. மேற்குறிப்பிட்ட இந்திய தரப்பினரும் அதனை வெகுவாக ஆமோதிக்கின்றனர். இந்த அரசமைப்பு சட்டத்தீர்வினை, கூட்டாட்சி மற்றும் அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிந்துக் கொள்ள வேண்டியுள்ளது.

Federal Country என்பதற்கு கூட்டாட்சி நாடு என்று வழங்குவதே தமிழில் வழக்கமாக உள்ளது. பாட புத்தகங்களிலும் அவ்வாறே இடம் பெற்றுள்ளது. பரவலாக அறியப்பட்ட அச்சொல்லே இங்கும் வசதி கருதி பயன்படுத்தப்படுகிறது.

மக்களாட்சியும் கூட்டாட்சியும்

இலங்கை அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரையும் நாடாளுமன்றத்தையும் கொண்டுள்ளதே என்றும் இவ்வாறு அந்நாட்டில் மக்களாட்சி நடைபெற்றுவரும் நிலையில், தமிழர்கள் அந்நாட்டின் தேர்தல்களில் பங்கெடுத்து தங்களது உரிமைகளை எளிதில் பெற்றுக்கொள்ளலாமே என்றும் பலரும் ஒரு கருத்தினை முன் வைக்கின்றனர். எளிமையான இந்த கருத்து உண்மையில் சரியானதா? அப்பாவித்தனமானதா? சூழ்ச்சி மிகுந்ததா?

மக்களாட்சி என்பது மக்களால், மக்களுக்காக, மக்களுடைய ஆட்சி என்று எளிய முறையில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் மக்களாட்சி என்பது, தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் மூலம்தான் நடத்தப்படுகிறது. அந்த மக்களாட்சி என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேறுபட்ட தேசிய இன மக்கள் ஒன்றாக அரசியல் வாழ்வு வாழ நேரிடும் நாட்டில் எவ்வாறு நடத்தப்பட முடியும்? அப்பொழுது எழும் அரசியல் சிக்கல்களுக்கு மக்களாட்சி என்ற அரசியல் தத்துவத்திற்கு உட்பட்டு எப்படி தீர்வு காண்பது?

ஒரு நாட்டில் இரு இன மக்கள் தங்களுக்குரிய வௌ;வேறு நிலப்பரப்புகளில் வாழ்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம். ஒர் இனத்து மக்கள் அந்நாட்டில் 70% உள்ளனர் என்றும் மற்றொரு இனத்து மக்கள் 30% உள்ளனர் என்று வைத்துக்கொள்வோம். அந்நாட்டில் ஒற்றையாட்சி முறைமைதான் அமுலில் உள்ளது என்றும், அதாவது அந்நாட்டின் இறையாண்மை அதிகாரம் இரண்டு அரசுகள் இடையே பகிர்வு செய்யப்பட்டு செயல்படும் கூட்டாட்சி முறைமையின்படி அந்நாட்டின் அரசாட்சி, அதிகாரம் செயல்படுத்தப்படவில்லை என்றும் வைத்துகொள்வோம். இந்நிலையில் அந்நாட்டில் சட்டமன்றத்திற்கும் நிர்வாகத் துறைக்கும் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது, என்ன நிலைமை இருக்கும்? 70% -உள்ள இனத்து மக்களின் பிரதிநிதிகள்தானே சட்டமன்றத்தில் பெரும்பான்மையினராக தேர்ந்தெடுக்கப்படுவர்? அவர்கள்தானே நிர்வாகத்துறைக்கும் தேர்ந்தெடுக்கப்படுவர்? இவ்வாறு அரசின் இரு துறைகளையும் கட்டுப்படுத்துபவர்களின் அதிகாரத்தினாலேதானே, நீதித்துறையும் கைப்பற்றப்படும்? எனவே, 30% மக்கள் தொகை கொண்ட இனம், என்னதான் ஒருமித்து பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தாலும், அவர்கள் அந்நாட்டின் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற முடியாது. அதேபோன்று நிர்வாகத்துறைக்கும்; தேர்வு செய்யப்பட்டு ஆட்சி உரிமை பெற முடியாது. இந்நிலையில், அந்நாட்டின் மக்களாட்சி என்பது 70% -உள்ள இனத்து மக்களின் ஆட்சியாகத்தானே இருக்கும்? அப்பொழுது, அந்நாட்டின் 30% மக்கள் கொண்ட இனத்தைப் பொருத்தவரை, தங்களுக்கான மக்களாட்சி நடைபெறுவதாக அவர்கள் எடுத்துக்கொள்ள முடியுமா? முடியாது. ஏனெனில், 70% -உள்ள இனத்து மக்களின் சட்டமும், ஆட்சியும்தான் அவர்களை ஆட்சி செய்யும்.

இப்படியான நிலைமை உள்ள நாட்டில் 30% மக்கள் கொண்ட சிறிய தேசிய இனத்தார் பெரிய தேசிய இனத்தாருடன் சேர்ந்து அரசியல் வாழ்வு வாழ இயலுமா? வாழ முடியாது. எப்பொழுது முடியும் எனில் அவர்களது நில, மொழி, பண்பாட்டு, பொருளியல் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் அவர்கள் தங்களுக்கான ஒரு மாநில அரசுரிமை என்ற தன்னாட்சியுரிமை பெற்றிருப்பதுடன், அந்நாட்டின் நடுவண் அரசும் அவர்களது நலன்களை உறுதி செய்யும் முறையில்; அவர்களின் சமபங்கேற்புடன் அமைந்த, ஒரு அரசாகவும் அமையப்பெற்றிருக்குமாறு இரு அரசுகளின் ஆட்சிமுறைகள் கொண்ட ஒர் உண்மையான கூட்டாட்சிமுறை உறுதிசெய்யப்பட்டிருக்கும்; பொழுதுதான், 70% உள்ள இன மக்களுடன் கூட்டு சேர்ந்து வாழ முடியும்.

அதாவது குறிப்பிட்ட துறைகளில் தன்னாட்சி செய்து கொள்ளும் உரிமையும் மற்ற துறைகளில் பிற இனத்தாரோடு சம அளவில் பிரதிநிதித்துவம் பெற்று நடுவண் அரசின் ஆட்சியில் பங்கு பெறும் உரிமை என்ற இரண்டு அரசியல் உரிமைகள் சிறுபான்மை தேசிய இனத்து மக்களுக்கு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இந்த இரண்டு அரசியல் உரிமை பாதுகாப்புகளும் சிறிய தேசிய இன மக்களுக்கு மறுக்கப்பட்டுவிடுமேயானால், அம்மக்கள் வாக்குரிமை வழங்கப்பட்டிருப்பதானாலேயே அவர்களுக்கு அந்நாட்டில் உண்மையான மக்களாட்சி கிட்டிவிட்டதாக கூற முடியாது. அந்நிலையில் அந்நாட்டில் தேர்தல் ஒன்று நடப்பதாலேயே, அந்த சிறிய தேசிய இன மக்களின்; அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுவதாகவும் கருத முடியாது.

ஒரு எதிர்மறையான உதாரணத்தின் மூலம் முதலில் குறிப்பிட்டுள்ள தேசிய இனத்தாரின் தன்னாட்சி என்ற ஒரு கூட்டுரிமையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளலாம். தற்போது இந்தியாவில் தமிழர்;களின் மாநிலமாக தமிழ்நாடு என்றும், மலையாளிகளின் மாநிலமாக கேரளம் என்றும் இரு மாநிலங்கள் உள்ளன. கேரள மக்களிடம், உங்களுக்கு ஒரு தனி மாநிலம் தேவையில்லை என்றும், நீங்கள்; தமிழகத்துடன் இணைந்து கொள்ளுங்கள் என்றும் இரண்டு மாநிலங்களும் இணைந்த ஒரு மாநிலத்திற்குள் தேர்தலில் பங்கெடுத்து மக்களாட்சி முறையில்; ஆட்சி செய்து ஒற்றுமையாக வாழலாம் என்றும் உங்களது சட்டமன்றத் தொகுதி எண்ணிக்கைகள் அப்படியே தொடரும் என்றும் கூறினால், எந்தவொரு மலையாளியாவது ஒப்பு கொள்வாரா? எந்தவொரு கேரளக்கட்சியும், சர்வதேசியம் பேசும் கம்ய+னிஸ்ட் உட்பட, ஒப்புக்கொள்ள மாட்டா. ஏனெனில், கேரளம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டால் மலையாளிகள் தங்களுக்கான மாநில அரசு என்ற தன்னாட்சி கூட்டுரிமையை தமிழர்களிடம் இழந்து விடுவர் அல்லவா? அந்நிலையில் தமிழகம் - கேரளம் இணைந்த ஒரு மாநிலத்தில் தேர்தல் நடப்பதும், அதில் பங்குபெற்று வாக்களிக்கும் உரிமை பெற்றிருப்பதும் மலையாளிகளுக்கு முக்கியமானதாக இருக்காது. ஏனெனில், மலையாளிகளின் கூட்டு நலன்களை பாதுகாக்கும் அவர்களுக்கான ஒரு மாநில அரசு என்ற கூட்டுரிமைதான் மற்ற உரிமைகளைக் காட்டிலும் அவர்களுக்கு உயர்வான உரிமையாகும். அதனை இழந்துவிட்டப் பிறகு நடத்தப்படும் மேற்குறிப்பிட்டவாறான ஒரு ஆட்சிமுறை என்பது அவர்களைப் பொருத்தவரை மக்களாட்சியாக இருக்காது. தங்களது நலன்களை பாதுகாத்திடும் தங்களுக்கான ஒர் அரசு என்ற கூட்டுரிமைதான் மற்ற உரிமைகளுக்கும் மேலான முக்கியமான உரிமை என்பதை மலையாளிகள் சுட்டிக்காட்டுவர் அல்லவா?

எனவே, பல இனத்தினர்; சேர்ந்து வாழும் ஒரு நாட்டில், ஓர் இனத்து மக்கள்; அவர்களது கூட்டுரிமைகளை பாதுகாத்திடும் தங்களுக்கான மாநிலஅரசு என்ற உரிமையைப் பெற்றிருப்பது முக்கியமானது. மற்றொரு புறத்தில், அந்நாட்டில் உள்ள மற்ற இனங்கள் போன்றே நடுவண் அரசில் சம அளவில் பிரதிநிதித்துவம் பெற்று பங்கெடுப்பது என்பதும் முதன்மையானது. அந்த உரிமைகள் இரண்டும், சிறிய தேசிய இனத்து மக்களுக்கு மறுக்கப்படுமானால் அவர்கள் பெரிய தேசிய இனத்துடன் கூட்டாக அரசியல் வாழ்வு வாழ முடியாது. இவ்வாறு அந்த இரு முக்கிய உரிமைகளும் மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களது வாக்குரிமை என்பதும் தனி மனித உரிமைகள் என்பதும் முக்கியமற்றவை என்பதுடன் அவர்களது நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பயனளிக்கதக்கவையாகவும் இருக்காது.

கூட்டாட்சி அரசியலமைப்பு

கூட்டாட்சி அரசியலமைப்பு என்றால், நடுவண் அரசு மற்றும் மாநில அரசு இரண்டிற்கும் இடையே தெளிவான அதிகாரப் பங்கீடு செய்யப்படுதல் வேண்டும். மாநிலங்கள் தங்கள் அதிகார வரம்பில் முழு இறைமை கொண்டு செயல்பட உரிமை பெற்றனவாக இருத்தல் வேண்டும். நடுவண் அரசு என்பதும் அனைத்து மாநிலங்களின் பொது நலன்களை பாதுகாத்து செயல்படும் ஒரு அரசாக இருக்கும். அந்த அரசும், அனைத்து மாநிலங்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து மாநில பிரதிநிதிகளும் சம அளவில் பிரதிநிதித்துவம் பெறுவதை உறுதிசெய்யும் வகையில்; விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவை கூட்டாட்சி அரசியலமைப்பின் அடிப்படை கூறுகள்.

பல இனங்கள் சேர்ந்து வாழும் கூட்டாட்சி முறை சிறப்பாக செயல்படும் நாடுகளுக்கு உதாரணங்களாக சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், கனடா முதலிய நாடுகள் இருக்கின்றன. சோவியத் நிகரமை கூட்டாட்சி நாட்டினை நிறுவிய சோவியத் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் மாமேதை லெனின்கூட, சுவிட்சர்லாந்து நாட்டின் கூட்டாட்சி அரசமைப்புச் சட்டத்தினைத்தான் சோவியத் கூட்டாட்சி நாட்டிற்கு முன் உதாரணமாக எடுத்துக் கொண்டார். சுவிட்சர்லாந்து அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களின் தன்னாட்சி உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. அம்மாநிலங்கள், தங்களுக்கான அதிகார வரம்பில் செயல்படுவதற்கு தனி அரசியலமைப்புச் சட்டத்தை வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள நடுவண் அரசின் அதிகாரங்கள் என்பன திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. நடுவண் அரசின் சட்டம் இயற்றும் அதிகாரமும்கூட மாநில அரசுகளின் அதிகாரத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது. மாநிலங்கள், நடுவண் அரசு எடுக்கும் முடிவுகளில் பங்கு பெறுவதுடன் அந்த அரசின் சட்டம் இயற்றும் நடவடிக்கைகளிலும் தீர்மானகரமான பங்கினை ஆற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அங்கு நடுவண் அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தவிர, மற்ற அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களின் அதிகாரங்களாகும். அவற்றில் நடுவண் அரசு தலையிட முடியாது. இவ்வாறு மாநிலங்களின் அதிகாரங்கள் மீறப்பட முடியாதவையாக, மாநிலங்களின் இறைமை அதிகாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 இவ்வாறான அதிகாரப்பகிர்வின் மூலம், ஒவ்வொரு மாநிலத்தையும் சார்ந்த ஒவ்வொரு தேசிய இனத்து மக்களின் நிலம், பொருளியல்;, மொழி, பண்பாடு, நீதி நிர்வாகம் முதலியன சார்ந்த அவர்களின் முக்கியமான கூட்டுரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அனைத்து மாநிலங்களின் கூட்டு நலன்களை பாதுகாப்பதற்கு தேவையான அதிகாரங்கள் மட்டுமே நடுவண் அரசால், அதுவும் மாநிலங்களின் ஒப்புதலுடன், செயல்படுத்தப்படுகின்;றன. இத்தகைய அரசமைப்பு மூலம்தான் இருநூற்றாண்டுகள் கடந்தும் ஐந்திற்கும் மேற்பட்ட தேசிய இனமக்கள் ஒரே அரசமைப்பு ஏற்பாட்டில் வாழ்கின்றனர்.

கனடா கூட்டாட்சி நாட்டில் உள்ள பிரெஞ்சு மொழியினரான குயுபெக் மாநிலத்தினர், அந்நாட்டில் மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை காட்டிலும் கூடுதலான அதிகாரங்களை கொண்ட ஒரு மாநில அரசினை கொண்டுள்ளனர். அவர்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு மற்றும் மொழி உரிமைகள் அங்கு பாதுகாக்கப்படுவதற்கான நிலைமை கனடா நாட்டின் அரசியல் அமைப்புச்சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயினும், தங்களது குயுபெக் தேசத்தின் தனிநாட்டுரிமையை வலியுறுத்தும் குயுபெக் கட்சிகள் சில, குயுபெக் மாநிலம் அந்நாட்டிலிருந்து பிரிந்து செல்லும் உரிமையை வலியுறுத்துகின்றன. அவற்றின் கோரிக்கையை ஏற்ற கனடா அரசு, குயுபெக் மாநிலத்தில் வாக்கெடுப்பும்கூட நடத்தியது. அதில், அம்மாநிலம் பிரிந்து செல்வதற்கான கோரிக்கை சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விக்குள்ளானது.

ஆயினும் கனடா அரசு, குயுபெக் மாநிலத்தினை அந்நாட்டிற்குள் உள்ள ஒரு தேசமென்று (Nation within Country) அறிவித்தது. அதன் மூலம், அந்நாடு குயுபெக் மாநிலத்தினரின் தனித்தன்மையையும் அவர்களின் உரிமைகளையும் மனப்பூர்வமாக அங்கீகரித்தது. இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில், குயுபெக் மாநிலம் பிரிந்து செல்வதை குயுபெக் மாநிலத்தின் பெரும்பான்மையினர் ஆதரிக்கவில்லையெனினும், மேலும் கூடுதலான தன்னாட்சி உரிமைகளுடன் கனடா நாட்டிற்குள் ஒரு மாநிலமாக இருப்பதையே அந்த பெரும்பான்மையினரும் விரும்புகின்றனர் என்ற பெரும்பான்மையினரின் கருத்தினையும் குயுபெக் பிரிந்து செல்ல வேண்டும் என்று விரும்பும் மக்களின் கருத்தினையும் மதிப்பளிக்கும் கனடா நடுவண் அரசு, மேற்குறிப்பிட்டவாறு அவர்களது குயுபெக் மாநிலத்தை ஒரு தேசமாக அங்கீகரித்தது.

இவ்வாறு மற்றொரு தேசத்தை, அத்தேசிய மக்களின் கூட்டுரிமைகளையும் பெரியதேசிய இனத்தினர்; அங்கீகரிக்கும் பொழுதுதான், அங்கு இரு தேசத்து மக்களிடையே ஒற்றுமை ஏற்படுகிறது. தங்களது நலன்கள் அந்நாட்டில் உறுதிசெய்யப்படுவதாக சிறிய தேசிய இனத்தாரிடையே நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. இதுதான் பல்தேசிய இனத்தினர் கூட்டாக ஒரே நாட்டில் ஓர் அரசமைப்பு சட்டத்தின் கீழ் அரசியல் வாழ்வை நடத்த முடிவதற்கான காரணமாகும். இதுதான் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தேசிய இனத்து மக்கள் கூட்டாக அரசியல் வாழ்வு வாழ்வதற்கு மக்களாட்சி தத்துவத்தின்படி அமைந்த அரசியல் ஏற்பாடாகும்.

அத்தகைய ஒரு ஏற்பாடு இலங்கையில் ஈழத்தமிழ் மக்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பதுதான் நாம் கண்டறிய வேண்டிய ஒன்றாகும். அந்த நாட்டின் தற்போதைய அரசியலமைப்பு சட்டம், அந்நாட்டின் அரசு ஒன்றிய அரசு என்று அறிவிக்கிறது. இதன் மூலம், அந்நாட்டில் ஈழத்தேசிய மக்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை பாதுகாத்துக்கொள்வதற்கான இறைமைப் பகிர்வின் அடிப்படையில் அமையும் ஒரு மாநில அரசினை உருவாக்க அரசியலமைப்பு சட்டத்திலேயே தடை செய்யப்பட்டுள்ளது. அந்தநாட்டின் அரசின் மூன்று அங்கங்களிலும் பெரும்பான்மையினரான சிங்களவர்கள்தான் அதிகாரத்தினை பெற்றுக்கொள்ள முடியும் என்ற வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திட்டவட்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே ஈழத்தமிழர்;கள் அனைவரும் தேர்தலில் பங்குபெற்று அவர்களின் பிரதிநிதிகள் அனைவரும் ஒத்தக்கருத்துடன் இலங்கை நாடாளுமன்றத்தில் பங்கு பெற்றாலும், அவர்கள் அந்த நாடாளுமன்றத்தில் ஒன்றும் பெற்று விடமுடியாது. ஏனெனில், அவர்கள் அந்த நாடாளுமன்றத்தில் 20மூ-க்கும் குறைவானவர்களாகவே இருப்பர். 75% மேலானவர்களாக சிங்கள பிரதிநிதிகள் இருப்பர். அங்கு தமிழர்; பிரதிநிதிகளின் கோரிக்கைகள் சட்ட அங்கீகாரம் பெற சிங்கள பிரதிநிதிகள் ஒருபோதும் ஒப்புதல் தெரிவிக்க மாட்டார்கள். அதே போன்றுதான், குடியரசுத் தலைவர் தேர்தலில 75% மேலான எண்ணிக்கை கொண்ட சிங்களவர்கள்; தமிழர் ஒருவரை அந்நாட்டின் குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை.அவ்வாறு தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புவதும், அவர் மூலம் தமிழர் நலன்களை பாதுகாக்க முடியும் என்று நம்புவதும் காணல்நீரை நம்பி செல்வதற்கு ஒப்பான ஏமாளித்தனம் அல்லவா?. இதுதான் இப்பொழுது, இலங்கை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செய்யப்பட்டுள்ள சிங்கள இனத்தாரின் ஆதிக்கத்திற்கான அரசியல் ஏற்பாடாகும்.

தொடக்கக்கால ஈழமக்களின் போராட்டம் என்பது ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பு ஏற்பாட்டிற்கான போராட்டமாகத்தான் இருந்தது. அதனை, சிங்கள ஆட்சியாளர்களர்களோ மற்றும் அவர்களது கட்சிகளோ ஒரு போதும் ஏற்றுக்கொண்டதில்லை. 30 ஆண்டுகால அமைதி வழி கிளர்ச்சிப் போராட்டத்தினையும் இலங்கை அரசினை ஆதிக்கம் செய்த பெரும்பான்மை சிங்களத்தினர் மதித்து ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டிற்கு ஏன் இசையவில்லை?

சிங்களத்தினர், தாங்கள் ஆரிய இனத்தினர் என்றும் புத்தமதத்தினை காப்பாற்ற வேண்டிய இனத்தினர் என்ற வகையில் உலக இனத்தார்களில் சிறப்பான இனத்தினர் என்றும் கருதுவதோடு, முழு இலங்கை தீவும் தங்களுக்கு மட்டுமே உரியது என்றும் உரிமை கொண்டாடுகின்றனர். இக்கருத்தினைதான் அங்குள்ள புத்த-சிங்கள நிறுவனங்கள் சிங்களவரின் மனதில் உருவாக்கி வைத்துள்ளன. அதனையே அங்குள்ள கட்சிகள் ஏற்று செயல்படுகின்றன. அதனால் அந்த சிங்கள கட்சிகள் எதுவும் இந்த கருத்தாக்கத்திற்கு எதிராக செயல்பட முடியாது என்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. எனவேதான் சிங்களவர்கள், தமிழர்களின் தாயகம் இலங்கை தீவின் வடக்கு-கிழக்கு பகுதிகளைக் கொண்டமைந்த தமிழ் ஈழம் என்பதையோ அவர்களின் அரசியல் பொருளாதார, பண்பாட்டு உரிமைகளையோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவ்வாறு ஏற்றுக்கொண்டால், முழு தீவும் தங்களுக்கு சொந்தமானது என்ற கருத்தாக்கத்திற்கு எதிரானதாக அமைந்துவிடும் அல்லவா?

மேலே குறிப்பிட்டவாறு ஒரு கூட்டாட்சி ஏற்பாடு என்பது, ஒரு தேசிய இனமக்களின் வாழ்விடமாக அமையும் அவர்களது தாயகத்தையும் அவர்களது அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளையும் அங்கீகரிக்கும் ஒரு ஏற்பாட்டினை உள்ளடக்கிய, ஒரு நாட்டின் அரசியல்-இறைமை அதிகாரத்தை பங்கிட்டுக்கொள்கின்ற ஒரு அரசியல் ஏற்பாடாகும். ஆனால், சிங்களமக்களோ, சிங்களகட்சிகளோ ஈழ மக்களுடனான ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டிற்கு அறவே முன்வராதவர்களாக உள்ளனர். அத்தகைய ஒரு ஏற்பாடு சிங்கள தரப்பினரால் ஒரு போதும் ஒப்புக்கொள்ளப்பட்டதில்லை.

 வரலாற்றுக் காலம்தொட்டு இலங்கைத் தீவின் வடக்கு -கிழக்கு நிலபரப்பு என்பது தமிழர்களின் தாயகமாக தமிழீழம் என்ற பெயரில் இருந்துவருகிறது என்பதை சிங்கள கட்சிகளில் எந்த ஒன்றாலும் இஒருபோதும் ஏற்றுகொள்ள்ளப்பட்டதில்லை .அது ஐக்கிய தேசிய கட்சியானாலும் , சுதந்திரா கட்சியானாலும் ஜனதாவிமுக்திபெரமுணா கட்சியானாலும் அல்லது சிங்கள மககளிடம் வாக்குகள் பெறும் எந்த கட்சியாயினும் அதன் நிலைப்பாடு என்பது இதுதான். இது, சிங்களவர்களின் அரசியல் நிலைபாட்டை தெரிவிக்கும் ஒரு அடிப்படையான உண்மை. (அனால் சிங்களவரின் தாயகத்தை தமிழர் தரப்பு ஒப்புக்கொள்கிறது என்பதும் சிங்களவரின் அத்தாயக நிலப்பரப்பில் எதன் மீதும் தமிழர் தரப்பு உரிமை கோரவில்லை என்பதும் இங்கு ஈண்டு இணைத்துப் பார்க்கத்தக்கது) இவ்வாறு தமிழர் தாயகத்தை சிங்கள தரப்பு ஏற்றுகொள்ள மறுப்பதுதான், தமிழர்-சிங்களர் தரப்பினரிடையே எந்த தீர்வையும் கண்டடைய முடியமைக்கான முட்டுக்கட்டையாக இருந்துவரும் முழு முதற்காரணமாகும். எந்தவொரு கூட்டாட்சி நாட்டிலும் அங்கம் வகிக்கும் மாநிலங்கள் என்பன, அந்நாட்டில் உள்ள மக்கள் இனத்தாரின் தாயகங்கள் என்ற அடிப்படையில்தான் தாயக அலகுககளின் கூட்டிணைவாக கூட்டாட்சி அமைகிறது . இங்ஙனம் ஒரு மக்கள் கூட்டத்தாரின் தாயகத்தை ஏற்றுக்கொள்ளும் பொழுது , அங்கு அமையும் அவர்களின் அரசினை ஏற்றுக்கொள்ளுதல் என்பது இயல்பானது . சிங்களவர்களோ அல்லது சிங்கள அரசியல் கட்சிகளோ அவ்வாறு தமிழர்களின் தாயகத்தை ஏற்றுகொள்ள முன்வருதல் என்பது இந்த 60 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளதா என்பததுதான் கேள்வி. இல்லை என்ற பதில், அரசியல் தீர்விற்கு யார் உடன்பட மறுத்து வருகின்றனர் என்ற கேள்விக்கான பதிலாகவும் அமைகின்றது .

இலங்கை அரசின் கருத்தாளர்களில் முக்கிய நபரான ரோகண குணரத்தினா, இலங்கை அரசு தமிழர்களுடான பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதில்; இறைமைப் பகிர்வை (ளூயசநன ளுழஎநசநபைவெல) ஏற்றுக்கொண்ட தீர்விற்கு ஒரு போதும் சம்மதிக்க கூடாது என்று சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது கவனத்திற்குரியது. இந்நபரின் கட்டுரைகளைத்தான் இந்து குழுமத்தால் வெளியிடப்படும் ஃப்ரண்ட்லைன் என்ற ஆங்கில இரு வார ஏடு அவ்வப்பொழுது ஏந்திவருகிறது.

இத்துடன், இலங்கைத் தீவில் தமிழர்கள் ஒரு சிறுபான்மையினராக வாழ மட்டுமே தங்களால் அனுமதிக்க முடியும் என்று ஈழப்போரின் முடிவின் போது, சிங்கள ராணுவ தளபதி பொன்சேகா அறிவித்ததும் இணைத்துப் பார்க்கத்தக்கது. அதன்பொருள், ஈழத்தமிழர்களின் தாயகத்தை அங்கீகரித்து அவர்களது அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டிற்கு நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்பதுதான். அதாவது சிங்களவர்களைப் போன்றே உரிமைகள் கொண்ட மற்றொரு தேசிய இனமாக தமிழர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகும். மாறாக, அவர்களை தாயகம் இல்லாத சிறுபான்மை மக்கள் கூட்டத்தினராக அறிவிப்பதாகும். அதனையேதான் வேறு மொழியில் முழு தீவும் இலங்கையர் அனைவருக்கும் உரியது என்று ராசபக்சே கூறுவது. இதன் பொருள் என்ன? முழு தீவும் சிங்களவரின் ஆதிக்கத்திற்குட்பட்டது என்பதாகும். இந்த அரசியல் ஆதிக்க உரிமையில் எந்த பகிர்வுக்கும் தாங்கள் முன் வரமாட்டோம் என்று அறிவிப்பதாகும்.

ஆனால், இந்த போக்கு கொண்ட சிங்களத்தவரால் முழுமையாக ஆதிக்கம் செய்யப்பட்டுவரும் இலங்கை அரசு, ஈழத்தமிழர்களுடன் ஒரு கூட்டாட்சி தீர்வுக்கு எப்பொழுதும் தயாராக இருந்து வருவதாக காட்டுவதுதான் இந்திய தரப்பின் நோக்கம். இதனை இந்திய அரசு, இந்திய கட்சிகள் மற்றும் இந்திய ஊடகங்கள் இன்றுவரை சிறப்பாகவே செய்துவருகின்றன. இந்த கருத்து பரப்பல் வேலையில் முதன்மை பணியினை இந்து ஏடும் அதன் குழுமத்தினைச் சார்ந்த மற்ற ஏடுகளும் தொடர்ந்து இன்றுவரை முழுவீச்சில் நடத்திவருகின்றன.

இவ்விடத்தில் இந்தியாவின் கூட்டாட்சி அரசியலமைப்பு முறை செயல்பட்டுவருவது குறித்து புரிந்து கொள்வது தேவைப்படுகிறது. தங்களைத் தாங்களே பாராட்டிக்கொள்வது போன்று, இந்திய கட்சிகளும், இந்திய ஊடகங்களும் இந்தியாவின் கூட்டாட்சி குறித்து பெருமைப்பட்டுகொள்கின்றன. இங்கு அனைத்து இனத்தாரின் நலன்களும் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அதன்மூலம் மக்களாட்சி முறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தொடர்ந்து பாராட்டு பத்திரங்களை வாசித்துக் கொள்கின்றன. ஆனால் இந்தியாவின் பல மாநிலங்களிலும் பல இனத்தார்கள் தொடர்ந்து நடத்திவரும் போராட்டங்கள் இந்திய கூட்டாட்சி முறை செயல்படுவதன் லட்சணத்தை காட்டுகின்றன.

இந்தியாவில் கூட்டாட்சி முறை

இந்திய அரசியலமைப்பு சட்டம், அனைத்து மக்களும் பங்கு பெற்ற பொது வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட ஓர் அரசியலமைப்பு அவையத்தால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம் அல்ல. மாறாக, அப்போதைய ஆங்கில ஆட்சியில் நடத்தப்பட்ட ஒரு தேர்தலில் (அப்பொழுது வயது வந்தவர்கள் அனைவரும் வாக்காளர் அல்ல. குறிப்பிட்ட அளவு சொத்து கொண்டிருந்தவர்கள், வரி செலுத்தியவர்கள் மற்றும் குறிப்பிட்ட கல்வித்தகுதி கொண்டிருந்தவர்கள்தான் வாக்காளர்கள் என்பது அப்போதைய சட்டம்) தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சட்டமன்ற பிரதிநிதிகளிலிருந்தும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் சட்டமன்ற பிரதிநிதிகளிலிருந்துமே, அரசியலமைப்பு சட்ட அவையத்திற்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அத்தகைய பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்டதுதான் இந்திய அரசியலமைப்பு சட்டம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பு என்று அரசியலமைப்பு சட்ட வல்லுநர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இது, கூட்டாட்சி போல்வு என்றும் அரைக்கூட்டாட்சி முறை என்றும்தான் அவர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இந்தியாவில் நடுவண் அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையே மிகவும் ஏற்றத்தாழ்வான முறையில் அதிகார பங்கீடு செய்யப்பட்டுள்ளது. நடுவண் அரசிற்குத்தான் மிகவும் அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. வருவாய் தரும் மிக முக்கியத்துறைகள் அனைத்தும் நடுவண் அரசு வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. உற்பத்தி வரி, சுங்க வரி, வருமான வரி, நிறுவன வரி போன்ற முக்கிய வரி வருவாய்கள் அனைத்தையும் கொண்டு செல்வதுடன் வங்கி, காப்பீடு, தொடர்வண்டி, தகவல் தொடர்பு , பெட்ரோல் , கனிமம் முதலியன சார்ந்த முக்கியத் தொழில்களின் மூலமும் பெருமளவில் வருவாய் ஈட்டுகிறது. ஆனால் அது மக்களுக்கு தினந்தோறும் பதில் அளிக்க வேண்டிய பொறுப்புகள் கொண்ட கடமைகளை கொண்டிருக்கவில்லை. (இன்று கடுமையாக நிலவும் மின் தட்டுப்பாட்டிற்கு நடுவண் அரசு எந்த பொறுப்பும் தனக்கு கிடையாது என்ற போக்கில் செயல்படுவதை கவனியுங்கள்! ஆனால் அதே சமயத்தில் இந்த கடுமையான மின் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்தது, மின்துறையில் முழுமையான தனியார் மயத்தை செயல்படுத்துமாறும் மாநில மின் வாரியங்களை கலைத்திடுமாறும் உத்தரவிடும் நடுவண் அரசு இயற்றிய இந்திய மின்சார சட்டம் - 2004 என்பதையும் கவனிக்கவேண்டும்.) ஆனால், அதே நேரத்தில் மாநில அரசுகளுக்கோ இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கடமைகளை அதிகம் வழங்கும் வகையிலும், வருவாய் பெற்றுத்தரும் துறைகளை மிகவும் குறைவாக வழங்கும் வகையிலும் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தவகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் , ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆண்ட போது உருவாக்கப்பட்ட இந்திய அரசாங்கச்சட்டம்- 1935-ன் நகல் போன்றே உள்ளது. குறிப்பாக, அப்போதைய ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு வசதியான முறையில் செய்யப்பட்டிருந்த நடுவண்-மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரப்பகிர்வினை செய்திருந்த இந்திய அரசாங்கச்சட்டத்தின் விதிமுறைகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அந்த இந்திய அரசாங்க சட்டத்தில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சில முக்கிய தன்னாட்சி அதிகாரங்கள் கூட, கல்வி அதிகாரம் உட்பட, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் மூலம் பிறகு நடுவண் அரசின் அதிகாரம் நீட்டிக்கும் வகையில் பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்பது வேறு கதை.

எனவேதான் அனைத்து அதிகாரங்களும் மையப்படுத்தப்பட்டுள்ளதும், அனைத்து இனமக்களும் சம அளவில் பங்கேற்பதை உறுதி செய்யாத வகையிலும் அமையும் ஒரு நடுவண் அரசையும், மக்களின் இன்றியமையா தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் பல கடமைகள் வழங்கப்பட்டுள்ள ஆனால் நடுவண் அரசிடம் இருந்து மானியம் பெற்று செயல்படும் வகையில் செயல்படும் மாநில அரசையும்; ஒரே நேரத்தில் செயல்படும் ஏற்பாடு கொண்டுள்ள இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பு சட்டம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தி மொழி, இந்திய நடுவண் அரசின் அலுவல்மொழி என்று அரசமைப்புச்சட்டத்தின் கூறு 343 அறிவிக்கிறது. மக்களாட்சிக்கு எதிரான அரசியலமைப்பு என்பதை இப்பிரிவே எளிதாக காட்டுகிறது. உலகில், எந்த ஒரு கூட்டாட்சி நாட்டின் அரசமைப்பிலும் இத்தகைய ஒரு பிரிவினை பார்க்க முடியாது. ஒரு கூட்டாட்சி நாட்டில், அனைத்து மாநில இனமக்களின் அனைத்து மொழிகளுக்கும் அதன் நடுவண் அரசில் சம உரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இந்திய நடுவண் அரசின் ஆட்சி மொழிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய நடுவண் அரசின் அலுவல்கள், இந்தி மொழி பேசப்படாத மாநிலங்களில், அம்மாநில மக்கள் மொழியில் நடத்தப்படுவதில் என்ன சிரமம் இருக்க முடியும்? அவ்வாறு செயல்படும்போது சில சிரமங்கள் வருமேயானாலும் கூட, கூட்டாட்சி நாட்டின் அங்கம் வகிக்கும் ஒரு இனத்து மக்களின் மொழி உரிமைக்கு முன்னுரிமை அளித்து, அவர்களது மொழியில்தானே நடுவண் அரசின் பணிகளை நடத்த வேண்டும்?. இந்த குறைந்தபட்ச நியாயத்தைக்கூட இந்திய நடுவண் அரசு கடைபிடிக்க வேண்டுமென்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறவில்லை. ஆனால், மாநில மக்களின் மொழிக்கு மாறான இந்தி மற்றும் ஆங்கில மொழியில் செயல்படுகின்றன. இது ஒன்றே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஒரு கூட்டாட்சி சட்டம் அல்ல என்பதை தெளிவாக காட்டும் தக்க சான்றாகும் அல்லவா?.

 இத்தகைய இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து விரிவான நூல் எழுதியுள்ள திரு.சீர்வாய் என்ற பம்பாய் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் அதனை மிகவும் மெச்சியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் மற்ற கூறுகள் குறித்து விரிவான ஆய்வுகளை அந்நூலில் செய்துள்ள திரு.சீர்வாய், மிகவும் ஏற்றத்தாழ்வான ஒரு அதிகாரப்பகிர்வினை அவசியம் என்கிறார். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றினை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நியாயமூலமாக குறிப்பிடும் திரு.சீர்வாய், ஆனால் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதை கடுமையாக எதிர்க்கிறார். விடுதலைப் போராட்டத்தை நடத்திய கட்சிகளில் முக்கிய கட்சியாகவும் அதிகாரம் கையளிக்கப்பட்ட கட்சியுமான காங்கிரஸ் கட்சி, மொழிவாரி அடிப்படையிலேயே அதனுடைய கட்சி நிர்வாகத்தை நடத்தியது என்பதையும் சுதந்திரம் பெற்ற இந்தியா மொழிவாரி மாநிலங்களின் கூட்டாட்சியாகத்தான் இருக்கும் என்று உறுதிமொழி வழங்கி மக்களிடம் செல்வாக்கு பெற்றதையும் திரு.சீர்வாய் கவனமாக மறைத்துள்ளார். அவர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முன்னோடி சட்டமான இந்திய அரசாங்க சட்டத்தினையும் மிகவும் பாராட்டியுள்ளார். அவர்,பார்சி இனத்தைச் சேர்ந்தவர் என்பது அறியத்தக்கது. எனவே, பனியா, பார்சி உள்ளிட்ட அகில இந்திய மூலதன சக்திகளின் நலன்களை பேணுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்புச் சட்டத்தை அவர் பாராட்டுவதில் வியப்பென்ன இருக்க முடியும்?.

இவ்வாறான ஒரு அரசியலமைப்பு சட்டத்தை கொண்டுள்ள இந்திய நடுவண் அரசிற்கு உண்மையான கூட்டாட்சி ஏற்பாடு என்பது அறவே ஒப்புக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும். இந்தியாவில் வௌ;வேறு இனமக்கள் தங்களது இன நலன்களை பாதுகாக்கும் நோக்கில் மாநில உரிமைகளை வலியுறுத்தி எவ்வளவோ போராட்டங்கள் நடந்துள்ள போதிலும், நடுவண் அரசின் அதிகாரங்களை மாநிலங்களுக்கு அளிக்கும் வகையில் இந்தியாவில் எந்த ஒரு சிறு நகர்வும் ஏற்பட்டதில்லை. ஆனால், அதே பொழுதில், மாநில அரசின் அதிகாரத்திற்;குட்பட்டிருந்த கொஞ்ச மிஞ்சம் துறைகளும்; நடுவண் அரசு அதிகாரம் செலுத்தும் வகையில் சட்டத்திருத்தங்கள் மூலம் பறித்துக் கொள்ளப்பட்டுள்ளன.

 அதுமாத்திரமல்லாமல், ஒரு கூட்டாட்சி நாட்டின் நடுவண் அரசு நிறைவேற்ற வேண்டிய அடிப்படையான, இன்றியமையா கடமைகளையும் இந்திய நடுவண் அரசு நிறைவேற்றுவதில்லை. உதாரணமாக, காவிரி, முல்லைப்பெரியாறு நதிநீர் பிரச்சினைகளில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை நிறைவேற்றி தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை காப்பாற்றிடவில்லை. அதன் மூலம் தமிழ்நாட்டின் நலன்களுக்கும் உரிமைகளுக்கும் பாதகம் ஏற்படுத்துகிறது. இவ்வாறு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை சட்ட அடிப்படையில் தீர்க்க வேண்டிய கூட்டாட்சி நாட்டின் நடுவண் அரசிற்குரிய அடிப்படையான கடமையினைக்கூட இந்திய அரசு செய்யமறுக்கிறது.

அதே போன்று, தமிழக மீனவர்கள் இலங்கை அரசின் கடற்படையினால் தினந்தோறும் கொல்லப்படும் போதும் இந்திய அரசு அதனை தடுக்க மறுக்கிறது. இலங்கை கடற்படையினரின் செயல்பாட்டை நியாயப்படுத்துகிறது. இவ்வாறு, நடுவண் அரசின் கடமையான தனது குடிமக்களை அந்நிய நாட்டினரிடமிருந்து பாதுகாத்தல் என்ற அடிப்படையான கடமையினை இந்திய அரசு தமிழக மீனவர்களிடத்தில் நிறைவேற்றுவதில்லை. இலங்கை அரசின் உடனான தனது உறவினை விட, தனது நாட்டு குடிமக்களின் உயிர்பாதுகாப்பு முக்கியமானதல்ல என்று தொடர்ந்து தினந்தோறும் காட்டி வருகிறது. இந்நிலையில், இந்திய அரசை ஒர் உண்மையான நடுவண் அரசு என்று எவ்வாறு கூற முடியும்?

இவ்வாறு இந்திய நடுவண் அரசு செயல்படும் நிலையில், அதனை தடுத்து நிறுத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழிவகை இல்லை. ஆனால், அதே சமயத்தில், நடுவண் அரசின் உத்தரவினை கடைபிடிக்காத மாநில அரசிற்கு அனைத்துவகையிலும் நெருக்கடிகள் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில அரசாங்கங்களை கலைப்பதற்கு நடுவண் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது குறித்த விபரங்கள் பலருக்கும் தெரிந்ததே.

இவ்வாறு, உருவாக்கப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி மாநில ஆட்சியாளர்கள் நடுவண் அரசின் ஏவலர்கள் போன்றுதான் செயல்படவேண்டும். அதாவது, நடுவண் அரசிற்காக சட்டம் ஒழுங்கை பராமரித்து கொடுக்க வேண்டிய ஒரு கங்காணி போன்றுதான் மாநில அரசுகள் செயல்படுகின்றன என்று தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சியின் தலைவர் பெ. மணியரசன் கூறுவது பொருத்தமான கூற்று. எனவே, இவ்விடத்தில் இந்தியா அரைகுரை கூட்டாட்சியா அல்லது பார்ப்பன-பனியா-பார்சி என்ற ஆரிய கூட்டத்தாரால் சிறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய இனங்களின் சிறைக்கூடத்தை நிர்வகிக்க செய்யப்பட்டுள்ள அரசியல் சட்ட ஏற்பாடா என்று விவாதிப்பது விரிவை கருதி இங்கு இத்துடன் முடித்துக்கொள்ளலாம்.

கூட்டாட்சி ஏற்பாட்டை எதிர்க்கும் இந்திய அரசு

இவ்வாறான கூட்டாட்சி முறைமையைக் கொண்டுள்ள இந்திய அரசு, இலங்கையில் அதுவும் தமிழர்களுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் ஒரு கூட்டாட்சித் தீர்வை முழுமுற்றாக எதிர்க்கத்தானே செய்யும்?

இதனை, நார்வே நாட்டின் அரசால் நியமிக்கப்பட்ட குழு உறுதிப்படுத்தி தெரிவித்துள்ளது!. இலங்கையில் இரு தரப்பிற்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு சமரச நாடாக செயல்பட்ட நார்வே நாடு, அதன் அமைதிப்பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வி அடைந்து போனது குறித்து ஆய்வுசெய்ய ஒரு குழுவினை அமைத்தது. அந்த குழுவின் அறிக்கை, அச்சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட விதம் குறித்தும், அப்பொழுது இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகள் எவ்வாறு செயல்பட்டன என்பன குறித்தும் விபரங்களை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில்தான், ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒரு கூட்டாட்சி அடிப்படையிலான தீர்வு கண்டடைவதைக்கூட இந்திய அரசு தடுத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மறுத்து இந்திய அரசு இதுநாள்வரை எந்த விளக்கத்தினையும் வெளியிட்டிருக்கிவில்லை என்பது முக்கியமானது.

 இந்தியா கூட்டாட்சி தீர்வை கண்டடைவதைகூட எதிர்த்தது என்று நார்வே நாட்டின் நாடளுமன்ற குழு தெரிவித்துள்ள முடிவுதான் , தமிழர்களின் தாயகத்தை மறுக்கும் சிங்களத்தின் ஆரிய இனவெறிக்கு இந்திய அரசு துணை நிற்பதை காட்டும் தக்க சான்றாகும் . இல்லாவிடில், குறைந்தபட்சம் தமிழர்களின் தாயகத்தையாவது உறுதி செய்யும் கூட்டாட்சி தீர்விற்கு சிங்கள தரப்பு முன்வர வேண்டியிருந்த நிர்பந்தமான நிலைமை உருவாகிருந்த நிலையில் அதனை சீர்குலைத்துவிட்டு , தமிழர்களின் எந்தவொரு கூட்டுரிமையையும் பாதுக்காத்திடாத 13-வது திருத்தத்தின் படியான மாகாண ஆட்சி முறையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துவதன் காரணமென்ன ?

 முழு இறையாண்மை பெற்ற ஈழக்குடியரசு என்ற அரசுரிமையை ஈழத்தமிழர்கள் பெற்றுவிடுவதைப் எவ்வகையிலும் தடுத்துவிட வேண்டும் என்று செயல்படும் இந்திய அரசு, 8 கோடிக்கு மேல் தமிழ் மக்களை கொண்டுள்ள தனது நாட்டின் ஒரு மாநிலமான தமிழ்நாடு மாநில அரசிற்கு வழங்கப்பட்டிராத அதிகாரங்களை கொண்ட ஒரு மாநில அரசுரிமையை கொண்டு ஒரு கூட்டாட்சி நாட்டில் ஈழத்தமிழர்கள் வாழ்வதையும்கூட தனக்கு அச்சுறுத்தலாகத்தான் கருதுகிறது. அதற்கான காரணம் என்ன?

அது ஈழத்தமிழர் பெற்றுவிடும் அரசியல் உரிமைகள் தமிழ்நாட்டு தமிழர்களின் உரிமை போராட்டங்களுக்கு வழியமைத்துவிடும்; என்ற உண்மைதான். அதுதான், இந்திய அரசிற்கு ஈழத்தமிழர் குறித்த பிரச்சனையில் கடைபிடிக்கும் கொள்கைக்கு நிரந்தர அடிப்படையாக அமைகிறது. அதுதான், ஈழத் தமிழர் போராட்டத்தில் தமிழ்நாடு வகிக்கும் பங்கினையும் காட்டுகிறது.

இவ்வாறு, ஒரு உண்மையான ஒரு கூட்டாட்சித் தீர்வினை கூட முன்மொழிய தயாரில்லாத ஒரு நாடு, ஒரு நியாயமான தீர்விற்கு உதவிகள் செய்யக்கூடும் என்று கூறுவதனை எவ்வாறு நம்புவது?.

இலங்கை அரசின் நிலைபாடு

இலங்கை அரசு, தமிழ் ஈழ மக்களின் கூட்டுரிமைகளை உறுதி செய்யும் வகையில் அமைந்த உண்மையான ஒரு கூட்டாட்சித் தீர்வுக்கு ஒரு போதும் ஒப்புக்கொண்டதில்லை. அத்தகைய ஒரு கூட்டாட்சி அரசமைப்பு சட்டத்தீர்வையும் ஒரு போதும் முன்வைத்திருக்கவில்லை. இதனை 60 ஆண்டு கால ஈழத்தமிழர் பிரச்சனையை நன்கறிந்தவர் ஒப்புக்கொள்வர்.

 தமிழர்;களின் இன்றியமையா அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை பாதுகாத்திடும் ஒரு கூட்டாட்சி முறைமை உண்மையில் அங்கு இருக்குமேயானால்,அதனை தமிழர்களின் நலன்களை பாதுகாப்பதற்கான ஒரு அரசியல் ஏற்பாடாக சொல்லலாம். அத்தகைய ஒரு தீர்வுக்குத்தான் தொடக்க காலத்தமிழர் தலைவர்களும் போராடினர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியும், இலங்கை அரசு ஒருபோதும் அத்தகைய ஒரு கூட்டாட்சித்தீர்வுக்கு அறவே ஒப்புக்கொண்டதில்லை என்பது மறுக்க முடியாத வரலாறு.

விடுதலைப்புலிகளுடனான அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தபோதுதான் ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டிற்கு தயாராக இருப்பது போன்று இலங்கை அரசு காட்டிக்கொண்டது. இல்லாவிடில், அந்த அரசு உண்மையில் அரசியல் தீர்வுக்கு தயாராக இல்லை என்ற உண்மை உலகிற்கு தெரிய வந்துவிடும் அல்லவா? மேலும் அப்பொழுது, விடுதலைப்புலிகள் கிட்டத்தட்ட முழு ஈழத்தையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். அப்போது, இலங்கை அரசின் சட்ட அமைச்சராக இருந்த, தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள பெரிஸ்;, தனி நாடு அல்லாத எந்த ஒரு கூட்டாட்சித் தீர்வுக்கும் தாங்கள் தயார் என்றும் அதிகாரப்பகிர்வில் வானமே எல்லை என்றும் கூறினார். விடுதலைப்புலிகள் அமைப்பினரும் உள்ளக தன்னாட்சி உரிமை கொண்ட ஒரு கூட்டாட்சி தீர்வு குறித்து பரிசீலிக்க தயாராக இருந்தனர். அதன்படிதான், அந்த இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான திரு.தமிழ்ச்செல்வன் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று, கூட்டாட்சி அரசியலமைப்பு சிறப்பாக செயல்படும் சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் முதலிய நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களை குறித்தும் அவை செயல்படும் முறை குறித்தும் பயின்று வந்தார்;. இது, அவர்கள் அத்தகைய ஒரு தீர்வை பரிசீலனை செய்ய தயாராக இருந்துள்ளனர் என்பதை காட்டும் சான்றாகும்.

 ஆனால், இப்பொழுது இலங்கை அரசு என்ன கூறுகின்றது என்பதை பாருங்கள்! இலங்கையில் சிங்களவர், தமிழர் என்று இன மக்கள் யாரும் இல்லை என்றும், இலங்கையர் மட்டுமே உள்ளனர் என்றும், இனப்பிரச்சனை என்று ஒன்று இல்லையென்றும் இராஜபக்சே கூறுவது இங்கு இணைத்துப் பார்க்கத்தக்கது. இதன் பொருள் என்ன? முழு இலங்கை தீவும் பெரும்பான்மையினரான சிங்களவரின் அதிகாரத்திற்குட்பட்டது என்பதுதானே?

அதே இராஜபட்சே, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுதான் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையே தவிர, வேறு எந்த அரசியல் பிரச்சினையும் இல்லையென்று அறிவித்ததும் அறிந்ததே. ஆனால், உண்மையில் நடந்துள்ளது என்ன? கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் சுமார் 50,000 வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கான நிதிகளை இலங்கை அரசிடம் வழங்கி, 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சில நூறு வீடுகளே அந்த அரசால் கட்டப்பட்டன. ஆனால், அதே சமயத்தில் இலங்கை அரசால் கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுவருவதும் மேலும் மேலும் பல புத்தவிகாரைகள் அமைக்கப்பட்டு வருவதும் இணைத்துப்பார்க்கத்தக்கது. தொடர்ந்து தமிழர் தாயகத்தை சிங்களமயமாக்கும் வேலையினை முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. இவை அந்த அரசின் கொடிய சிங்கள இனவாத முகத்தினைக் காட்டுவதோடு, பன்னாட்டு சமூகத்தின் எந்த விமர்சனத்திற்கும் அஞ்சாத நடத்தையினையும் காட்டுகிறது அல்லவா?.

இவ்வாறு சிங்களத்தரப்பு என்றும் இன்றும் ஈழத்தமிழர்களின் இருப்பையும் அவர்களது அரசியல் பொருளாதார, பண்பாட்டு உரிமைகளையும் அவற்றை பாதுகாக்கும் அரசுரிமை என்ற அவர்களது கூட்டுரிமையையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதை காட்டிவருகின்றனர்.

13-வது திருத்தம்

இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில்செய்யப்பட்ட 13-வது திருத்தத்தின்படி, புதியதாக மாகாண ஆட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டன. இந்த மாகாண ஆட்சி மன்றங்கள் இலங்கையின் பிற சிங்கள பரப்பிலும்; அமைக்கப்பட்டது போன்றே தமிழர்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் தலா ஒரு மாகாண ஆட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்டன. இதன்மூலம் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்றிய அரசியலமைப்பு என்ற அதன் அடிப்படைத் தன்மையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இம்மாகாணங்களையும் இவற்றின் ஆட்சி அதிகார ஆள்வரையினையும் கூட்டாட்சி நாட்டில் ஒரு மாநிலத்திற்கும் அதன்; அரசுக்;கும் இணையாக கூட அல்ல, இந்தியாவில் உள்ளது போன்ற அரைக்கூட்டாட்சி நாட்டில் இருக்கும் ஒரு மாநில அரசிற்கு இணையாக கூட ஒப்பிட முடியாது. இதனைத்தான் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கும் கூட்டாட்சி ஏற்பாடு என்றும்; அது ஈழத்தமிழர்களின் அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளை மீட்டுக் கொடுத்துள்ளது என்றும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
இலங்கை அரசின் அரசியலமைப்பு சட்டம், அந்த நாட்டின் அரசின் தன்மையை திட்டவட்டமாக வரையறுத்துள்ளது. எவ்வாறெனில், இலங்கை அரசு, ஓர் ஒன்றிய அரசு என்று தெளிவாக அதன் உறுப்பு -2 கூறுகிறது. அதாவது, அந்நாட்டில் ஓர் அரசு மட்டுமே உள்ளது என்றும் கூட்டாட்சி நாட்டில் இருப்பது போன்று, இரு அரசுகள் கொண்ட அரசமைப்பு அல்ல என்றும் தெரிவிக்கிறது. 13வது திருத்திற்குப்பிறகும், அந்த கூறு-2ல் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. இது ஒன்றே, அத்திருத்தத்தின்படி அமைக்கப்படும் மாகாண ஆட்சி முறை என்பது ஒரு கூட்டாட்சி நாட்டின் மாநில அரசுரிமைக்கு இணையான ஒன்றல்ல என்பதை தெளிவாக காட்டுகிறது அல்லவா?.

மற்ற சிங்கள மாகாணங்களுக்கு வழங்கப்படும் அதே அதிகாரங்கள்தான், தமிழ் மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. தமிழர்களைத் தவிர்த்து இலங்கை மக்களில் எந்த பிரிவினரும் தங்களது நில, மொழி, பொருளாதார, பண்பாட்டு நலன்களை பாதுகாக்க வேண்டி எந்த தன்னாட்சி அரசியல் உரிமையினையும் ஒரு போதும் கோரியிருக்கவில்லையே?. எனவே, சிங்களவர்களை கொண்ட ஒரு ஆட்சிபரப்பிற்கு வழங்கப்படும் அதிகாரங்களைதான், ஈழத்தமிழர்களுக்கு வழங்குவதற்கு மேற்படி திருத்தத்தின்படியான மாகாண ஆட்சி வழிவகுத்துள்ளது. இதனை எவ்வாறு, ஒரு தன்னாட்சி உரிமையை வழங்கும் கூட்டாட்சி ஏற்பாடு என்று கூற முடியும்? அதை ஒரு நிர்வாக ஏற்பாடு என்றுதான் கூற முடியும். அந்த நிர்வாக ஏற்பாட்டை ஓர் இனத்து மக்களின் இன்றியமையா கூட்டுரிமைகளை பாதுகாக்கும் தன்னாட்சி ஏற்பாடாக கூறுவது என்பது, வெகுமக்களின் அரசியல் அறியாமையினை பயன்படுத்தும் தந்திரமல்லவா?. இதனைத்தான் சிங்கள அரசின் கோயபல்ஸ் பணியினை இன்றுவரை சலிக்காமல் செய்துவரும் இந்து ஏடு ஈழமக்களுக்கான அரசியல் தீர்வாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. வடக்கு மாகாணத்திற்கு உடனே தேர்தல் நடத்துவதுதான் முதன்மையான பணி என்று இந்து ஏடு தொடர்ந்த பிரசாரம் செய்து வந்துள்ளது இத்துடன் இணைத்து கவனிக்கத்தக்கது.

 அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் அத்தியாயம்- 2 பௌத்த மதத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், அம்மதத்திற்கு அக்குடியரசு முதன்மை முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று கூறுகிறது. அந்த அத்தியாயத்தை மேலோட்டமாக பார்த்தால், அதன் சூழ்ச்சி தெரியாது. ஆனால், உண்மையில் நிலவும் நடைமுறையை பொருத்திப்பார்த்தால்தான் அது ஒரு மத மற்றும் இனவாத அரசினை உருவாக்கியுள்ளது தெரியவரும். எப்படியெனில், அங்குள்ள சிங்களவர்கள்தான் பௌத்த மதத்தில் உள்ளனர். தமிழர்கள் யாரும் பௌத்த மதத்தில் இல்லை. இந்நிலையில், பௌத்த மதத்திற்கு அரசியலமைப்புச்சட்டம் வழங்கியுள்ள முக்கியத்துவத்தின்படி செய்யப்படும் அரசு நடவடிக்கை எந்தவொன்றும் சிங்களவர்களுக்குத்தானே பயனளிப்பதாக இருக்கும்? இதன்படிதான் தற்பொழுது தமிழர் நிலப்பரப்பில் நிலங்கள் இலங்கை அரசால் கையகப்படுத்தப்பட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. இதனால், எந்த தமிழர் பயனடைவர்? இது சிங்களவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் எல்லோருக்கும் பயனளிக்கும் என்று கூறினால் அதை எவர் நம்புவர்?

இலங்கை ஒருமைப்பாட்டை வலியுறுத்துபவர்கள் யார்?

இலங்கை அரசை ஒரு தீர்வுக்கு ஒப்புக்கொள்ள செய்யமுடியும் என்று கூறுபவர்கள், உண்மையில் ஈழத்தமிழருக்கு ஒரு நியாயமான தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என்ற நல்ல நோக்கில் அதைக் கூறுவதில்லை. மாறாக, அத்தகைய ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு ஏதோ தயாராக இருந்தது போன்றும் இப்பொழுதும் இருப்பது போன்றும் அதன் மூலம் ஒர் அரசியல் தீர்வை அந்த அரசு விரும்புவது போன்றும் அந்த அரசுக்கு ஒரு நல்ல தோற்றம் காட்டும் நோக்கம் கொண்டதாகும். அவ்வாறு இல்லாவிடில், உண்மையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு அரசியல் தீர்வுக்கும் முன் வராமல் இருந்து வருவதுடன், அதன் மூலம் அதே காலத்தில் ஈழ மக்களைத் தொடர்ந்து ஒடுக்கியும் அழித்தும் இனப்படுகொலை செய்து வருகின்ற உண்மையையும் சேர்ந்து ஒப்புக்கொண்டதாகிவிடும் அல்லவா?

இதற்குள் அடங்கியுள்ள மற்றொரு முக்கிய நோக்கம், ஒன்றுபட்ட இலங்கை என்பதை காப்பாற்றுவதாகும். எவ்வளவு நீண்ட காலத்திற்கும் ஈழத்தமிழர் பிரச்சினையில் எந்த அரசியல் தீர்வும் ஏற்படவில்லையெனினும் பரவாயில்லை, அதனால் எத்தகைய இனப்படுகொலைக்கு ஈழத்தமிழர் உள்ளாக்கப்பட்டாலும் பரவாயில்லை, அவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தீர்வு காண வேண்டுமென்று கூறுவது, பெரும்பான்மை இனத்தினர் என்று அடிப்படையில் இலங்கை அரசின் முழு அதிகாரங்களையும் கைப்பற்றி, அவற்றை தங்கள் இனநலனுக்கு மட்டுமே உகந்தவாறும் தமிழ் இனத்தாரை அழிக்கவும் பயன்படுத்திவரும் சிங்கள இனத்தை ஆதரிக்கும் நடத்தை அல்லாமல் வேறு என்ன? இனவாத அரசை ஆதரிக்கும் தங்களது இந்த ஒருசார்பு செயல்பாட்டை மறைத்து, அதற்கு நாட்டின் ஒற்றுமை - இனங்களின் ஒற்றுமை என்ற உயர்ந்த நல்லெண்ணத்தின் பாற்பட்ட தீர்வாக பொய் முகமூடி போட்டுக் காட்டுகின்றனர். இவர்களில் இந்தியாவின் இடதுசாரிக்கட்சிகளும் இடதுசாரி சிந்தனையாளர்கள் என்று தங்களை கூறிக்கொள்பவர்களும் அடங்குவர்.

அவர்களில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.அப்துல்கலாமும் ஒருவர். அவர், தன்னுடைய இலங்கை சுற்றுப் பயணத்தின் போது ஐரோப்பாவில் பல்வேறு இனங்கள், தங்களுக்கு இடையேயான கடந்த கால பகைமையை மறந்துவிட்டு, ஐரோப்பிய ஒன்றியம் என்று ஒரு அரசியல் ஏற்பாட்டில் ஒற்றுமையுடன் தற்போது வாழ்ந்து வருவதை உதாரணம் காட்டினார். ஆனால், அத்தகைய ஒற்றுமையை எவ்வாறு சாத்தியமானது? எத்தகைய அரசியல் ஏற்பாடுகளின் மூலம் அதனை உருவாக்க முடிந்தது? அதற்காக உருவாக்கப்பட்டுள்ள அரசியல் நிறுவனங்கள் யாவை? இவைப்பற்றி, அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. பாவம், அவரால் இந்தியாவை உதாரணமாக காட்டமுடியவில்லை! அவரது ஊரான இராமநாதபுரத்திற்கு குடிநீராக வரும் முல்லைப்பெரியாறு நீரினை தரமாட்டோம் என்று கேரள அரசு தடுப்பதையோ அப்பிரச்சினையை தீர்க்க இந்திய நடுவண் அரசு கையாளாகாத ஒர் அரசாக இருக்கிறது என்பதைக் குறித்தோ அவரால் பேச முடியாது. இத்தகைய அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காண திராணியற்ற இந்திய அரசுதான், ஈழ பிரச்சனைக்கும் தீர்வு கண்டு தரப்போவதாக நம்மை நம்ப வைக்க முயன்றார். அணு உலை, அனுமின்சாரம் மற்றும் அணு ஆயுதம் குறித்தெல்லாம் சாதாரண மக்களுக்கு எதுவும் தெரியாது என்பது போன்றே மேற்படி அரசியல் சிக்கல்களுக்கான தீர்வுகளையும் மக்கள் அறிய மாட்டார்கள் என்ற மக்களின் அறியாமையை பயன்படுத்துவதுதான் அவரது இந்த கருத்தும்.

இனங்களின் ஒற்றுமை என்ற கருத்தும் சமத்துவம் என்ற சட்டக்கருத்து போன்றதுதான். சமநிலையில் இருப்பவர்;களைத்தான் சமமாக பாவிக்க முடியும். சமமற்றவர்களை சமமாக பாவித்தால், சமத்துவமின்மைதானே நிகழும்?. அது போன்றுதான், ஒரு தேசிய இனம் மற்றொரு தேசிய இனத்தாரால் ஒடுக்கப்படும் போது, அந்த ஒடுக்கப்படும் இனத்தின் அரசியல் உரிமைகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும். அப்பொழுது இனங்களின் சுமூகம் மற்றும் ஒற்றுமை என்று பேசுவது, உண்மையில் ஒடுக்கிவரும் ஒரு இனத்தின் தரப்பை ஆதரிப்பதாகவே இருக்கும்.

இராஜபக்சே, முழு இலங்கையும் அனைத்து இலங்கையருக்கும் சொந்தமானது என்று சமத்துவ பாசாங்கு பேசிக் கொண்டு, முழு தீவையும் சிங்களமக்களின் ஆதிக்கத்திற்கும் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கும் உட்படுத்தி வரும் நயவஞ்சகம் எவ்வளவு சூழச்;சிமிக்கதோ அதே அளவு சூழ்ச்சியுடன்;, தமிழ் ஈழமக்களின் விடுதலையை மறுத்து இலங்கை ஒருமைப்பாட்;டை முதன்மைப்படுத்;தி வரும் சிங்கள ஆதரவு இந்திய அரசியல் குரல்களும்;, தங்களது சிங்கள ஆதரவினை இனங்களுக்கிடையே சுமூகம் மற்றும் ஒற்றுமை என்ற கருத்துகளில்தான் முடிமறைக்கின்றன.

இவ்விடத்திலும் ஒரு எதிர்மறையான உதாரணம் அவசியமாகிறது. தங்களது நாட்டுடன் நெருங்கிய பண்பாட்டு உறவுகொண்ட நாடு என்றும் தங்களது நலன்கள் நெருக்கமானவை என்றும் இந்தியாவும் இலங்கையும் கூறிக்கொள்கின்றன. சமீபத்தில் மத்திய பிரதேசம் சாஞ்சியில் ஒரு புத்த மத நிகழ்விற்கு இராசபக்சே முக்கிய அரசு விருந்தினராக அழைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. பல்லாயிரக்கணக்கான கோடிகளில் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு உதவிகள் செல்கின்றன. சமீபத்தில் இந்தியாவிற்கான இலங்கைத்தூதர் காரியாவம்சம், சிங்களவர்கள் இந்தி இனத்தாரின் ரத்தவகையை சார்ந்தவர்கள் என்று உறவு பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுடன் இவ்வளவு நெருக்கம் கொண்ட இலங்கை நாடு, அந்நாட்டின் மக்கள் தொகையை விட பல மடங்கு மக்கள் தொகை கொண்ட இனத்தார்கள் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பெற்று வாழ்வதைப்போன்று இந்தியாவின் ஒரு மாநிலமாக சேர்ந்துகொண்டு அரசியல் வாழ்வு வாழலாமே என்று இந்திய ஆட்சியாளர்கள் இலங்கையிடம் கேட்கலாமே?. இலங்கை சுற்றுப்பயணத்தின் போது அப்துல்கலாம் இவ்வாறு கேட்டிருக்கலாமே?.

 அதற்கு அந்நாட்டின் அரசு ஒப்புக்கொள்ளுமா? சிங்களவர்கள் ஒப்புக்கொள்வார்களா? அப்பொழுது தனி நாட்டுரிமை என்ற கூட்டு உரிமையின் மதிப்பு குறித்து மட்டும் எடுத்துரைக்க மாட்டர். அதன் தேவைக்குறித்தும் தெளிவாக எடுத்துரைப்பர்.

அந்த உரிமையின் தேவை ஈழமக்களுக்கு இப்பொழுது உள்ளதா? சிங்களர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் இடையே 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் அரசியல் உறவுதான் அதற்கான பதிலைத் தெரிவிக்கிறது. அந்த அரசியல் உறவு என்னவாக இருக்கிறது? இவ்வளவு காலமும் இலங்கை அரசின் போர்க்குற்றம், மனித உரிமைகளுக்கெதிரான குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை குறித்து மட்டுமே பேசி வந்த மேற்கத்திய ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் ஐ.நா.வின் துணை நிறுவனங்களும் தாங்கள் இது வரை பேசாத ஓர் உண்மைக் குறித்து மெதுவாக பேசத்துவங்கியுள்ளன. அது, கொல்லப்பட்ட ஈழ மக்களின் எண்ணிக்கை குறித்ததாகும். அது, மிகவும் குறைவான மதிப்பீட்டின் படி கூட, 1இ50இ000 ஈழமக்கள் என்று தெரிவிக்கிறது. 100% சிங்களவர்களை மட்டுமே கொண்ட படையினரால் ஈழமக்கள் என்ற சிறுபான்மை தேசிய இனத்து மக்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர் என்ற உண்மை, பன்னாட்டு விசாரணை ஒன்று நடத்தப்படவில்லை என்பதாலேயே, இனப்படுகொலை அல்ல என்று ஆகிவிடாது. இவ்வாறு 60 ஆண்டு கால சிங்களர்-தமிழர் அரசியல் உறவு என்பது சிங்கள ஆட்சியாளர்களால் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகிடும் அளவிற்கு வந்துள்ளது.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சிங்கள-தமிழ்மக்களின் விகிதம் என்பது 65 : 30 ஆக இருந்துள்ளதை, அப்போதைய மக்கள் தொகை புள்ளிவிபர அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் இப்பொழுது அதே இரு மக்களின் விகிதம் என்பது 80 : 15 என்பதாக மாறிவிட்டது. கடந்த ஈழப்போர் மாத்திரமல்ல, இந்த புள்ளி விபரமும் இலங்கை -சிங்கள அரசின் தமிழின அழித்தொழிப்பை காட்டும் சான்றல்லவா?

செர்பிய இனம், போசினியாவில் மேற்கொண்ட இனப்படுகொலை குற்றங்களை குறித்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டு குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்கப்பெறுவதற்கு பாடுபட்டவரும் பாலஸ்தின மக்களின் சட்ட ஆலோசகராகவும் ஒடுக்கப்படும் இனங்களின் உரிமைகளுக்கு போராடிவருபவருமான பன்னாட்டு சட்டவியல் அறிஞருமான வழக்குரைஞர் ஃபாயில், ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசு இனப்படுகொலை குற்றம் செய்துள்ளது என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார்.

ஒரு நாட்டில், அதன் அரசு ஆதிக்கத்தை கொண்டிருக்கும் பெரிய தேசிய இனம், அந்நாட்டின் மற்றொரு சிறு தேசிய இனத்தாரை இனப்படுகொலை செய்யுமாயின், அவ்வாறு இனப்படுகொலைக்கு உள்ளாகும் இனத்திற்கு தக்க பாதுகாப்புதான் என்ன? அம்மக்களின் தனிநாட்டு உரிமையை அங்கீகரித்து, அவர்களுக்கு தனி அரசு அமைத்து கொடுப்பதுதான், பன்னாட்டு சமுகம் அளிக்கும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று ஃபாயில் தெரிவிக்கிறார். அந்த தீர்வு, ஈழத்திற்கு மிகவும் உடனடியானதும் அவசியமானதும் என்றும் கூறுகிறார்.

இங்கு ஈழமக்களின் வாழ்வா அல்லது அழிவா என்பதுதான் கேள்வி.

எனவேதான், ஈழமக்களின் வாழ்வை ஆதரிக்கும் குரல்கள், அவர்களின் தனி ஈழ அரசு என்ற கோரிக்கையையே ஆதரிக்க முடியும், ஆதரிக்கவேண்டும். அவர்களின் அழிவை ஆதரிக்கும் குரல்கள்தான், இலங்கையின் ஒருமைப்பாட்டை ஆதரித்தன, ஆதரிக்கின்றன, ஆதரிக்கப்போகின்றன.

ஈழப்போராட்டம் - தமிழகத்தின் தொடர்பும் பங்களிப்பும்

இந்திய அரசு, என்னதான் ராணுவ பொருளாதார வலிமைகள் கொண்டிருந்த போதிலும், அவற்றினை மட்டுமே கொண்டு இலங்கை நாட்டின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி அந்த அரசினை தனது போக்கிற்கு செயல்படுமாறு செய்துவிடமுடியாது. அந்நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு, அவற்றிற்கும் மேலாக ஒரு காரணி அதற்கு உதவி வருகிறது. அது, 8 கோடி தமிழ்மக்களை கொண்டுள்ள நாடு என்ற முறையில் தமிழ்நாட்டு தமிழர்களின் பிரதிநிதி என்று பன்னாட்டு அரங்கில் செயல்பட முடிவதுதான். இந்த காரணம் இல்லாவிடில் இலங்கை அரசும் கூட இந்தியாவிற்கு பணியவேண்டிய தேவையில்லை. ஆக, இந்திய அரசு ஈழமக்களுக்கு செய்துள்ள அனைத்து கேடுகளும், தமிழ்நாட்டு தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதில்தான் உள்ளது.

இனப்படுகொலை சிங்கள அரசின் பிரச்சார இயந்திரமான இந்து ஏட்டின் கட்டுரை ஒன்று கூறுவதை கவனியுங்கள்! சிங்கள-தமிழ்மக்கள் இருவருமே, தங்களுக்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்று அதன் அதரவை நாடி நிற்பதாகவும் அதனால் இரு தரப்பையும் நிறைவு செய்யவேண்டிய சிக்கலில் இந்திய அரசு இருப்பதாகவும் கூறி சிங்களத்தின் இனப்படுகொலைக் குற்றத்தையும் அதற்கு இந்திய அரசு துணை நின்றதையும் தனது கோயாபல்ஸ் பிரச்சாரத்தால் மறைக்கிறது.

தனது நாட்டில் உள்ளடங்கியுள்ள ஒரு மாநில அரசின் பங்கேற்புடனும், ஒப்புதலுடனுமே சம்பந்தப்பட்ட வெளியுறவு கொள்கையை அமைத்துக்கொள்ள வேண்டுமென்று கூட்டாட்சி நாடுகளின் அரசியலமைப்பு சட்டத்திற்கு முன்னுதாரணமாக உள்ள சுவிட்சர்லாந்து அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், இந்திய அரசு தமிழ்நாடு அரசின் பங்கேற்பை அனுமதிப்பதிருக்கட்டும், தமிழ்நாட்டு மக்களின் கருத்திற்கோ சட்ட மன்றத்தின் தீர்மானத்திற்கோ மதிப்பளிப்பதுண்டா? இதிலிருந்து இந்திய நடுவண் அரசின் வெளியுறவுக் கொள்கை மற்றும் செயல்பாட்டின் சட்ட லட்சணம் தெரியவரும். உண்மை இவ்வாறு இருக்க, இலங்கைக் குறித்த கொள்கையில் தமிழ்நாட்டின் கருத்தினை புறந்தள்ளு-என்று தலைப்பிட்டு இந்து ஏடு சில நாட்களுக்கு முன்பு எழுதியுள்ள தலையங்கத்தினை பாருங்கள்! தமிழ்நாட்டு மக்களின் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டுத்தான் இது நாள் வரை இந்திய அரசு இலங்கைக் குறித்த கொள்கையினை வகுத்து செயல்பட்டு வந்திருப்பது போன்று பொய்யுரைப்பது ஒரு புறம் இருக்கட்டும், அவர்களின் கருத்துக்களையே கவனத்தில்; கொள்ளாமல் அக்கொள்கையினை வகுக்க வேண்டும் என்று கூறும் கருத்தில் உள்ள வன்மத்தையும், திமிரையும் கவனியுங்கள். இத்தகைய ஏடுதான் தமிழர்களுக்கு மக்களாட்சி குறித்து பாடம் நடத்துகிறது.

எனவே தமிழ்நாட்டு மக்களும் கட்சிகளும் ஈழப்பிரச்சனையில் தங்களது பிரதிநிதியாக காட்டிக்கொண்டு இந்திய அரசு செயல்படுவதை எதிர்க்கவேண்டும். ஈழ மக்கள் மீதான இனப்படுகொலைக் குற்றத்திற்கு துணை போன இந்திய அரசே ஈழமக்களின் அரசியல் போராட்டத்தில் தலையிடாதே ! என்பதே தமிழ்நாட்டு மக்களின் முழக்கமாக இருக்கவேண்டும்.

உலகின் வேறு ஏதேனும் ஒரு மூலையில் ஈழத்தமிழர்கள் தங்களது போராட்டத்தினை நடத்தியிருந்தால் தெற்கு சூடான் மக்களைப்போன்று இந்நேரம் தனி நாட்டுரிமை பெற்றிருப்பர். ஆனால் அவர்கள், தங்களது தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டுத் தமிழர்களின் தாயகத்திற்கு அருகாமையில் இருந்து அந்த உரிமைப்போராட்டத்தினை நடத்தியதால்தான் இந்தளவிற்கு அவர்கள் கொடுமைகளுக்கு உள்ளானதுடன் அந்த கொடுமைகளை தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகின்றனர்.

 அவர்களது உரிமைப்போராட்டம், தமிழ்நாட்டு தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை எழ செய்து விடும் என்ற பச்சை உண்மைதானே சிங்கள-இந்திய அரசுகளின் கூட்டு முயற்சிகளினால் நசுக்கப்படுவதற்கான முக்கியமான காரணமாக அமைகிறது?.

ஈழமக்களின் படைபலமாக இருந்த விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பிறகும் ஒரு கூட்டாட்சி-மாநில அரசுரிமைகூட ஈழத்தமிழர்களுக்கு ஏன் கிடைக்கவில்லை?. இதற்கான விடை, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் நலன்களும் இந்திய ஏகாதிபத்தியத்தின் நலன்களும் இணக்கம் கண்டதற்கான காரணத்தை அறிவதில் உள்ளது.

விடுதலை பெற்ற தேசங்களின் இறையாண்மையையே மறுக்கும் உலகமயம் உருவாக்கியுள்ள உலக அரசியல்; பொருளாதார சூழலில், இன்றும் அடிமைப்பட்டு கிடக்கும் தேசங்களின் இறையாண்மையை மீட்டெடுக்கும் போராட்டங்களை ஏகாதிபத்தியங்கள் அழித்தொழிக்க ஆதரவளிப்பதில் வியப்பென்ன இருக்க முடியும்?; தங்களது நாட்டில் தேசிய இனங்களை ஒடுக்கி வரும் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் முதலிய நாடுகள் அத்தகைய அழித்தொழிப்புக்கு துணை நின்றதிலும் வியப்பென்ன இருக்க முடியும்? தேசிய இனங்களின் விடுதலை போராட்டங்கள்தான் உலக மயத்தினை எதிர்க்கும் உண்மையான போராட்டங்கள்! அவைதான் உண்மையான சமத்துவ உலக அரசியல் ஒழுங்கினை உருவாக்குவதற்கான போராட்டங்களுமாகும். இதனை தெளிவாக ஏகாதிபத்தியங்கள் அறிந்தே செயல்படுகின்றன. இந்த உண்மையைத்தான், ஈழ இனப்படுகொலை உலகிற்கு உரத்து கூறுகிறது.

ஏகாதிபத்தியங்களை கண்டு அஞ்சாமல் பாலஸ்தீனம், குர்து, காசுமீர் போன்ற போராட்டங்கள் அரை நூற்றாண்டுகளைக் கடந்தும் பல கொடுமைகளுக்குப் பிறகும் தொடரவே செய்கின்றன. அதைப் போன்றே ஈழப்போராட்டமும் தமிழ் ஈழ தனி அரசு அமையும் வரை ஓயாது தொடர வேண்டும். அதற்கு தமிழகத் தமிழர்கள் தோளோடு தோள் நின்று போராட வேண்டும். அதற்கு, தங்களாலும் இவ்வாறு ஈழத் தமிழர்கள் கொடுமைக்கு ஆட்படுகிறார்களே என்ற தமிழகத் தமிழர்களின் நன்றி உணர்வு மாத்திரம் மட்டும் காரணமாக இருக்கவில்லை.அதற்கும் மேலாக தங்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் சேர்த்தே ஈழப்போராட்டத்தை ஆதரிக்க வேண்டியுள்ளது. வரலாறு இட்டுள்ள கட்டளை இதுதான்.

குறிப்பு : இந்து ஏட்டினை நடத்தும் நிறுவனம் இந்த உலகமயம் காலத்திலும் தொடர்ந்து தனியார் நிறுவனமாகவே இயங்குகிறது. அதாவது, அதன் குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து பிற நிறுவனங்களுக்கோ பொது மக்களுக்கோ அதன் பங்குகளை விற்பதில்லை. உலகமய காலத்தில் இந்தளவிற்கு தனது நலன்களை பாதுகாத்து கொள்;வதற்கான ஏற்பாட்டினை தக்கவைத்துக்கொள்ளும் ஒரு குடும்ப தனியார் நிறுவனத்தின் ஏடு, தமிழ் ஈழ மக்களின் தாயக உரிமை உள்ளிட்ட கூட்டுரிமைகளுக்கான போராட்டத்தினை ஏன் எதிர்க்கிறது?.அதற்கு, இந்து ஏட்டின் ஆரிய இன உறவு அடிப்படையிலான சிங்களப்பாசம் மட்டும் காரணமாக இருக்கவில்லை. இந்திய ஏகாதிபத்திய நலன்களும் இந்து குடும்ப குழுமத்தின் நலன்களுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதாலும்தான்.

- சு.அருணாசலம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It