இந்தியா சுதந்திரமடைந்த பிறகான தமிழக வரலாற்றில் ஒரு சடலத்தை பார்த்து அரசு இயந்திரம் இத்தனை அச்சத்தை வெளிப்படுத்தியிருக்குமா என தெரியவில்லை. ஒரு கொலையை தற்கொலையாக மாற்றுவதற்கான மெனக்கெடல் இந்த அளவுக்கு எப்போதும் மேற்கொள்ளப்பட்டதில்லை. ஆனால் தலித்துகளை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் பணி மிக துரிதமாக வழக்கம் போல நடைபெறுகிறது.

தங்கள் குலக்கொழுந்தை பறிகொடுத்து கண்ணீரும் கம்பலையுமாக மருத்துவமனையில் குவிந்த மக்களை சுற்றி, கூடியிருந்தவர்களை விட அதிக எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மரணம் நிகழ்ந்து 10 ஆவது நாளிலும் 144 தடை நீடிக்கிறது. தடை நீங்கினால் கலவரம் வெடிக்கும் என்கிறார்கள். மரணித்தவனின் தாயும் தந்தையும் கூட கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார்கள். வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் அனுமதித்த பிறகும் ஜாமீன் மறுக்கப்படுகிறது. இறுதி மரியாதை செலுத்த இயலாமல் திருமாவளவன் திருப்பி அனுப்ப படுகிறார்.

இவற்றின் மூலம் அரசு சொல்ல வரும் செய்தி தலித்துகளால் சமூகபதட்டம் நிகழாமல் இருக்க பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது. இளவரசன் திருமணம் நிகழ்ந்த பிறகு, நத்தம் காலணி உள்ளிட்ட பகுதிகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையாக்கிய பிறகு, மரக்காணத்திற்குப் பிறகு, இளவரசனின் மரணத்திற்குப் பிறகும் மௌனமாயிருந்த மக்கள் தான் காக்கி சட்டைகளால் மொய்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

மரணித்தவனின் இறுதி ஊர்வலத்தை கூட பெற்றோரின் விருப்பப்படி நடத்த அனுமதிக்க திராணியில்லாத அரசு, தலித்துகள் வன்முறையாளர்கள் என நிறுவுவதில் மட்டும் அக்கறை செலுத்துகிறது.

இவர்கள் ராமதாஸை விட ஆபத்தானவர்கள்……

Pin It