குற்றத்திற்கு ரூ.1 இலட்சம் தருவதாக கட்டப்பஞ்சாயத்து பேசப்பட்ட அவலம்

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள கிராமம் கடைகண்டார்குளம். இக்கிராமத்தில் வசித்து வரும் தலித் சமூகத்தைச் சேர்ந்த திரு.சமுத்திரம் - திருமிகு. காளியம்மாள் தம்பதியரின் 14 வயது மகளான சந்தனமாரி என்பவரை கடந்த 06.05.2012 அன்று சாதி இந்துவான சுடலைமணி என்பவர் கடத்திச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சி வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் புன்னை வனப்பேரி என்கிற கிராமத்தில் நடந்துள்ளது. இதுகுறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் 29.05.2012 அன்று சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்டனர். களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது.

கடைகண்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்த சமுத்திரம் – காளியம்மாள் தம்பதியருக்கு 5 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த டிசம்பர் 2011 மாதத்தில் சமுத்திரம் – காளியம்மாள் அவர்களது இளைய மகள்களான பெரியதாய், சந்தனமாரி ஆகிய நான்கு பேரும் செங்கல் சூளையில் வேலை பார்ப்பதற்காக புன்னைவனப்பேரி என்கிற கிராமத்திற்கு வந்துள்ளனர். அங்கு தம்பிராஜ் என்பவருக்கு சொந்தமான செங்கல்சூளையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 06.05.2012 அன்று மாலை சமுத்திரம் மற்றும் காளியம்மாள் ஆகிய இருவரும் உறவினரை பார்ப்பதற்காக மதுரை வந்துள்ளனர். இந்நிலையில் அன்று இரவு 9.00 மணியளவில் வீட்டிலிருந்த சந்தனமாரியை அதே பகுதியைச் சேர்ந்த சாதி இந்துவான சுடலைமணி (21) த/பெ.மாரியப்பன் என்பவர் வாயில் துணியை வைத்து அடைத்து வலுக்கட்டாயமாக அப்பகுதியில் உள்ள மொட்டைப்பாறை மலைக்கு இழுத்துச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சி வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இரவு முழுவதும் தலித் சிறுமி சந்தனமாரியை கட்டி வைத்து கொடூரமான முறையில் தாக்கியும் இழிவாகப் பேசியும் சித்திரவதை செய்துள்ளார்.

மறுநாள் 07.05.2012 அன்று காலை 7.00 மணியளவில் வீட்டிற்கு வந்த சந்தனமாரி தமக்கு நடந்த கொடுமையை தம்முடைய பெற்றோர்களான சமுத்திரம் மற்றும் காளியம்மாளிடம் கூறி அழுதுள்ளார். சந்தனமாரியின் தந்தை சமுத்திரம் செங்கல் சூளை உரிமையாளர் தம்பிராஜிடம் சென்று தம்முடைய மகளுக்கு நடந்த கொடுமையை கூறியுள்ளார். இதனை கேட்டறிந்த செங்கல் சூளை உரிமையாளர் தம்பிராஜ், சுடலைமணியின் பெற்றோர்களான மாரியப்பன் – கோமதி ஆகிய இருவரையும் 07.05.2012 அன்று காலை 10.30 மணியளவில் செங்கல் சூளைக்கு வரவைத்து நியாயம் கேட்டுள்ளார். அதற்கு சுடலைமணியின் பெற்றோர்கள் தம்பிராஜிடம் 6 பவுன் மதிப்புள்ள தங்க நகைகளைக் கொடுத்து, "இதை சந்தனமாரியின் பெற்றோரிடம் கொடுத்து விடுங்கள். தெரியாமல் என் மகன் தவறு செய்துவிட்டான். அவனை விட்டுவிடுங்கள்" என்றெல்லாம் பேசியுள்ளனர். அதற்கு சந்தனமாரியின் பெற்றோர்கள் உடன்படவில்லை.

இதனிடையே தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று சுடலைமணியின் பெற்றோர்கள் மாரியப்பன் – கோமதி ஆகியோரிடம் சந்தனமாரியின் தந்தை சமுத்திரம் வலியுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுடலைமணியின் பெற்றோர்கள் சமுத்திரத்தை சாதி ரீதியாக இழிவாகப்பேசி அவமானப்படுத்தியுள்ளனர். இதனிடையே 24.05.2012 அன்று சுடலைமணி தம்மை சமுத்திரம் மிரட்டி வருவதாக புகார் கொடுத்துள்ளார். புகாரை விசாரிக்க வந்த போலீசாருக்கு உண்மையில் சுடலைமணியால் தலித் சிறுமி சந்தனமாரி பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனடிப்படையில் கரிவலம்வந்தநல்லூர் காவல்நிலைய போலீசார் சுடலைமணி, தங்கதுரை ஆகியோர் மீது குற்றஎண்.155/2012 பிரிவுகள் 376, 342, 506(2) இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(1)(12), 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இச்சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் சார்பு ஆய்வாளர் பிரேம்சந்திரன் ஆகியோர் எமது குழுவினரிடம் கூறியதாவது, நாங்கள் விசாரித்த வரை அச்சிறுமியை சுடலைமணி கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். குற்றவாளியை தேடிக் கொண்டிருக்கிறோம். விரைவில் கைது செய்வோம் என்று கூறினர்.

பாதிக்கப்பட்ட தலித் சிறுமி சந்தனமாரிக்கு 29.05.2012 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடந்துள்ளது. உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சந்தனமாரிக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருக்கிறது. அதோடு, அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சட்டரீதியான நியாயம் கிடைக்க வேண்டும்.

ஆகவே கீழ்கண்ட பரிந்துரைகளை எமது அமைப்பு சிவில் சமூகம் சார்பாக அரசிற்கு முன்வைக்க விரும்புகிறது.

பரிந்துரைகள்

• தலித் சிறுமி சந்தனமாரியை பாலியல் வன்புணர்ச்சி செய்த சாதி இந்துவான சுடலைமணி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

• பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 இலட்சம் நிவாரணமும் நீடித்த நிலைத்த மறுவாழ்வு நடவடிக்கைகளும் கொடுக்கப்பட வேண்டும்.

• இவ்வழக்கினை எஸ்.பி. அந்தஸ்த்தில் பெண் அதிகாரி ஒருவர் விசாரணை செய்வதற்கு மாநில காவல்துறை இயக்குனர் உத்தரவிட வேண்டும்.

- ஆ.கதிர், செயல் இயக்குனர்,  எவிடன்ஸ் அமைப்பு

Pin It