பன்னெடுங்காலம் முதல் தமிழகத்தில் சாதிப் பாகுபாடு நிலவி வருவதும், அதனால் சமூகத்தில் நடைபெறும் கொடுமைகளும் யாவரும் அறிந்ததே. மிக நவீன காலமான இப்போதும், சாதியக் கொடுமைகள் குறைவதற்கு பதிலாக, அதிகரித்தபடியே உள்ளன. தமிழகத்தில் கிறிஸ்தவம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் பரவியது. தற்போது, ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church), தென்னிந்திய திருச்சபை (Church of South India) உட்பட பல திருச்சபைகள் உள்ளன. கிறிஸ்தவர்களிடையேயும் சாதிக் கொடுமைகளுக்கு சிறிதும் குறைவில்லை. கிறிஸ்துவத்தைத் தோற்றுவித்தவரான இயேசு கிறிஸ்து சாதியைப் பற்றி என்ன போதித்தார்? கிறிஸ்துவின் காலத்தில் சாதி இருந்ததா? அவர் சாதிக்கு ஆதரவானவரா? ஆகியவற்றை பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.

பேரரசர் அகஸ்டஸ் காலத்தில், இயேசு கிறிஸ்து கி.மு. 5 ஆம் ஆண்டில், ரோம ஆட்சிக்குட்பட்ட யூதேயாவிலுள்ள பெத்லேகமில் பிறந்தார். கி.பி. 27 முதல் கி.பி. 30 வரை, யூதேயா மற்றும் கலிலேயா பகுதிகளில் போதித்தார். ஏறக்குறைய கி.பி.30-ல் ரோம ஆளுனர் பிலாத்துவினால், யூத குருமார்களின் பொய் குற்றச்சாட்டுகளின்படி, மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டார்.

கிறிஸ்துவின் மக்கள் பணி மூன்றாண்டுகள் மட்டுமே. அப்போதனைகள் இன்றளவும் நிலைத்துள்ளன. பேசப்படுகின்றன; விவாதிக்கப்படுகின்றன; பெரும்பாலோனாரால் பின்பற்றப்படுகின்றன. கிறிஸ்துவின் போதனைகள் அதிகார மையங்களுக்கு எதிராக இருந்தன. அவருக்கு இருந்த முதன்மையான நோக்கமே, மக்களை, யூத அதிகார மையங்களின் (யூத குருமார்கள் மற்றும் பிற) பழமைவாத பிற்போக்குப் பிடியிலிருந்து மீட்டெடுப்பதும், இறைவனின் ஆட்சியை நிறுவுவதே ஆகும். இதனை அன்பின் அரசு எனவும் கொள்ளலாம்.

கிறிஸ்து வாழ்ந்த யூத சமூகத்தில் சாதி என்ற ஒன்று இல்லை. நம்மிடையே உள்ளது போன்ற சாதியமைப்பு, அவற்றின் பல்வேறு படிநிலைகள் போன்றவை அங்கில்லை. ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் இருந்தனர். சமூகத்தில் சிலர் கடை நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பெண்களும் ஒடுக்கப்பட்டிருந்தனர். பாவிகள் என சிலர் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். இந்த ஒடுக்கப்பட்டவர்களை கிறிஸ்து எவ்வாறு அணுகினார். ஒடுக்குதல் குறித்து அவரது பார்வை என்ன?

யூத குருமார்கள், சதுசேயர், பரிசேயர் (யூத மேல் தட்டு மக்கள்) ஆகியோர் சமூகத்தில் உயர் நிலையிலிருந்தனர். இவர்கள் சமூகத்தின் மீது அதிகாரம் செலுத்தி ஒடுக்குதலையும், சுரண்டுதலையும் செய்து வந்தனர்.

இயேசுவும், சமாரியர்களும்

கிறிஸ்துவின் காலத்தில் சமாரியர்கள் என்ற ஒரு பிரிவினர் (சமாரியா என்ற நிலப் பகுதியைச் சார்ந்தவர்கள்) இருந்தனர். இவர்கள் அன்றைய சமூகத்தில் கீழ்நிலையில் இருந்தவர்கள். இவர்களை யூதர்கள் தொடமாட்டார்கள், அவர்களுடன் உணவு அருந்தமாட்டார்கள், அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களைத் தொடக்கூடமாட்டார்கள். அவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள்.

இயேசுவும் ஒரு யூதர்தான்.

இயேசு பெரும்பாலும் தனது போதனைகளில் சிறு, சிறு கதைகளைப் (உவமைகள்) பயன்படுத்தினார். அவரது புகழ்பெற்ற நல்ல சமாரியன் கதையில், அவர் சமாரியர்கள் பற்றி ஒரு உயர்வான சித்தரிப்பைத் தருகிறார். தன் அயாலனை அன்பு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த, இக்கதையை கூறுகிறார்.

ஜெருசலேமிலிருந்து, ஜெரிக்கோவிற்கு செல்லும் ஒரு வழிப்போக்கனை, கள்வர்கள் அடித்து, அவனிடமிருந்து பணத்தைப் பறித்துக்கொண்டு, குற்றுயுரும், குலையுருமாக விட்டுச் செல்கின்றனர். அவ்வழியே வரும் ஒரு யூத குரு அவனைப் பார்த்தும், பாவி எனக் கூறி விலகிச் செல்கிறார். பின்பு அவ்வழியே வரும் ஒரு ஆசாரியரும் (தேவாலயத்தில் பூசைகளில் ஈடுபடுபவர்) அவ்வாறே செய்கிறார். அதன் பின்பு, ஒரு சமாரியர் அவ்வழியே வருகிறார். அவர், அந்த வழிப்போக்கனின் காயங்களையெல்லாம் கழுவி, எண்ணெய் தடவி, கட்டுகிறார். பின்பு உடல் குணமடைய திராட்சை ரசம் அளிக்கிறார். பின்னர், அவனைத் தன் கழுதையில் ஏற்றி சத்திரத்தில் தங்க வைக்கிறார். மேலும், சத்திர கண்கானிப்பாளரிடம் அவனுக்குத் தேவையானவைகளைச் செய்யும்படி கூறி, அதற்கான பணத்தையும் கொடுக்கிறார். அதற்கு மேலும் செலவானால், திரும்பி வரும்போது கொடுப்பதாக கூறிச் செல்கிறார்.

இக்கதை 2000 ஆண்டுகளுக்கு முன்பு, சொல்லப்பட்டிருப்பதுதான் இதன் சிறப்பு. “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்” என்ற சட்டங்கள் சமூகத்தில் நிலவி வந்த காலகட்டத்தில், இக்கதை கூறப்பட்டுள்ளது. இப்போதும் இதன் முக்கியத்துவத்தை உணர முடியும். முதன் முதலில் மனிதனின் மனதைப் பற்றி பேசிய கதை இது, என ஒரு மனோதத்துவயியல் அகராதி குறிப்பிடுகிறது.

அதனினும் முக்கியமானது, கதையில் குறிப்பிடப்படும் நல்லவன், ஒரு தாழ்ந்த சாதியைச் சார்ந்தவன். “உயர் குலத்தில் பிறந்தோர் உயரிய குணங்களையுடையவராய் இருப்பர்”, எனும் உயர் சாதி மனோபாவத்தை இக்கதை உடைத்தெரிகிறது. முதன் முதலாய் ஒரு தாழ்த்தப்பட்ட மனிதனுக்காக குரல் ஒலிக்கிறது. அவன் கதையின் நாயகனாய் உள்ளான். இதிலிருந்து கிறிஸ்து யாருக்காக குரல் கொடுத்தார்? யாருக்காக ஆதரவாக இருந்தார்? என்பது புலனாகும்.

கிறிஸ்துவும், சமாரியப் பெண்ணும்

 ஒரு முறை கிறிஸ்து தனது பிரயாணத்தின் போது, சமாரியாவின் வழியே செல்ல நேரிடுகிறது. அவரது சீடர்கள் நகருக்கு உணவு வாங்கச் சென்றுவிட்டனர். ஒரு கிணறண்டையில் இருந்த அவர், அங்கு தண்ணீர் மொள்ள வந்த ஒரு சமாரியப் பெண்ணிடம் பேசுகிறார். “பெண்ணே, தாகத்திற்கு தா”, என்கிறார். அவளோ அதிர்ச்சியடைந்தவளாய், யூதரான நீர், சமாரியரிடம் தண்ணீர் கேட்பதென்ன? என்கிறாள். அவர், அவளுடன் உரையாடலைத் தொடங்குகிறார். உரையாடலினூடே, யூதர்கள், “ஜெருசலேமில் மட்டுமே கடவுளை தொழுது கொள்ள வேண்டும்” எனக் கூறுகிறார்களே, என அவள் கேட்கிறாள். அதற்கு அவர், கடவுளை அவரவர் உள்ளத்தில் வழிபடும் காலம் வரும், என்கிறார்.

 பின் அவள், அவளது ஊரினுள் சென்று, ஊர் மக்களை அழைத்து வந்தாள். அவர்கள் வந்து, அவருடன் உரையாடினர். பின் அவர்களது விருப்பத்திற்கிணங்க அவர்களுடன் சில நாள்கள் தங்கியிருந்து போதிக்கின்றார்.

கிறிஸ்துவும், சமாரிய தொழு நோயாளியும்

 கிறிஸ்து ஒரு முறை எருசலேம் செல்லும் வழியில், கலிலேயா, சமாரியா பகுதிகள் வழியாகச் சென்றார். ஒரு ஊரில் பத்து தொழு நோயாளிகள் எதிர் கொண்டு வந்தனர். அவர்கள், அவரிடம் குணமளிக்கும்படி வேண்டினர். அவர், அவர்களிடம், நீங்கள் போய் குருக்களிடம் காண்பியுங்கள் என்றார். அவர்களும் சென்றார்கள். செல்லும் வழியிலேயே அவர்கள் குணமாகினர். அவர்களில் ஒருவர் மட்டும் திரும்பி இயேசுவிடம் வந்து, நன்றி செலுத்தினார். அவர் ஒரு சமாரியர். திரும்பி வராத மற்ற ஒன்பது பேரும் யூதர்கள். இச்சம்பவம் சமாரியரின் நற்குணத்தையும், நன்றியறிதலையும் காண்பிக்கின்றது.

கிறிஸ்து, சமாரியர்களுடன் தங்கியிருக்கிறார். அவர்களுடன் உணவருந்துகிறார். சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி அருந்துகிறார். அதாவது இயேசு தாழ்த்தப்பட்டவர்களுடன் ஒருவராக இருக்கின்றார். அவர்களை சரி சமமாக நடத்துகின்றார். இதனாலும் உயர்குடி யூதர்களின் பகையை சம்பாரிக்கிறார். அவர்கள் கிறிஸ்துவை “சமாரியன்” என பழிக்கின்றனர். அவரை பின் பற்றியவர்களை தொழுகை கூடங்களிலிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளனர்.

கிறிஸ்துவும், சகேயுவும்

 சகேயு என்பவர் ஒரு வரி வசூலிப்பவர். வரி வசூலிப்பவர்கள், ரோம பேரரசின் பிரதிநிதியான, யூதேயாவின் ஆளுனரின் கீழ் பணி புரிபவர், அவர்கள் மக்களை கசக்கிப் பிழிந்து வரி வசூலித்தனர். அவர்கள் மக்களால் ஒதுக்கப்பட்டனர். “வரி வசூலிப்பவர்”, என்ற சொல் ஒரு இழி சொல்லாக பயன்படுத்தப்பட்டது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட அவர், ஒரு முறை இயேசு வரும் வழியில், இயேசுவைக் காண, ஒரு மரத்தில் ஏறியிருந்தார். அவர் அருகில் வந்த இயேசு, “இறங்கி வா சகேயு, இன்று உன் வீட்டில் தங்க வேண்டும்”, என்கிறார். அவருடன், அவர் சீடர்களும் சகேயு வீட்டில் தங்கினர். சகேயு மனம் திரும்பி தான் அநியாயமாய் வாங்கிய வட்டியை இரண்டு மடங்காக திருப்பிக் கொடுப்பதாக கூறுகின்றார்.

 கிறிஸ்து, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட சகேயுவை ஏற்றுக் கொள்கிறார். மேலும் அவரது ஆன்ம ஒளியை மீட்டெடுக்கிறார்.

கிறிஸ்துவும், விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணும்

 ஒருமுறை கிறிஸ்துவிடம், விபசாரத்தில் கையும், களவுமாக பிடிபட்ட பெண்ணை, யூதர்கள், அவரிடம் குற்றம் கண்டுபிடிப்பதற்காக, கொண்டு வருகின்றனர். மோசேயின் சட்டப்படி (எகிப்தின் அடிமைதளையிலிருந்து இஸ்ரவேல் மக்களை மீட்ட மோசே, அம்மக்களை நியாயம் தீர்க்க, கொடுத்தது இச்சட்டத் தொகுப்பு; இது ஹம்முராபியின் சட்டத் தொகுப்பை ஒத்தது.) இவளை கல்லெறிந்து கொல்ல வேண்டும், நீர் என்ன கூறுகின்றீர், என அவர்கள் வினவ, “உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதல் கல்லெறியட்டும்”, என இயேசு பதிலளிக்கிறார். சிறுவர் தொடங்கி, முதியவர் ஈறாக அனைவரும் கற்களை கீழே போட்டு விட்டு, சென்று விடுகின்றனர். “அம்மா, நானும் உன்னை தீர்ப்பிடவில்லை”, எனக் கூறி, அவளை அனுப்பிவிடுகிறார்.

 இங்கு விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணிற்காக கிறிஸ்து குரல் கொடுக்கிறார். மேலும், அவளைக் கொல்லத் துடித்த, வெறி பிடித்த ஆண்களின் கூட்டத்திலிருந்து, அவளை காப்பாற்றுகிறார்.

(குறிப்பு: இப்படி ஒரு சம்பவமே, விவிலியத்தின் மூலப்பிரதியில், இல்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இயேசுவின் முக்கிய பெண் சீடரான மகதலேனா மரியாளே அப்பெண் எனவும், அவரை இழிவுபடுத்தவே இக்கதை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். இது பற்றிய முழு விபரங்கள், டேவிட் பிரவுன் எழுதிய “டாவின்சி கோட்”, என்ற நாவலில் காணலாம். கட்டுரையாளர், பெண்ணிய ரீதியில், இச்சம்பவத்தை ஒரு புனைகதையாக எழுதியுள்ளார். அதனை www.thamizhstudio.com என்ற இணைய தளத்தில் காணலாம்).

கிறிஸ்துவின் பெண் சீடர்கள்

 கிறிஸ்துவிற்கு பெண் சீடர்கள் இருந்துள்ளனர். அவர்கள், அவரது மற்ற ஆண் சீடர்களுக்கு இணையாக மக்கள் பணி (திருப்பணி) ஆற்றியுள்ளனர். அவர்களுக்கு இயேசு உரிய அங்கீகாரம் அளித்துள்ளார். மகதலேனா மரியாள், யோவன்னா, சூசன்னா மற்றும் பல பெண்களும் அவரின் சீடர்களாக இருந்தனர். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்கு உதவியாயிருந்தனர். மார்த்தா என்பவரும், அவரது சகோதரியான மரியாளும் ஆகியோரும் (இருவரும் லாசருவின் சகோதரிகள்) அவரது சீடர்களாயிருந்தனர்.

அரவாணியும், பிலிப்பும்

 எத்தியோப்பியாவின் அரசியான கந்தகி என்பவர் ஆவர். (காலம் கிறிஸ்துவின் மரணத்திற்கு பிறகு சில வருடங்கள் கழித்து) அவரது நிதியமைச்சர் ஒரு அரவாணி ஆவார். அக்காலத்திலேயே ஒரு அரவாணி நிதியமைச்சராக பணிபுரிந்துள்ளார்! இது அன்றைய எத்தியோப்பிய சமூகம் அரவாணிகளை எவ்வாறு மதித்தது என்பதை புரிந்து கொள்ள இயலும். அவர் ஒரு முறை எருசலேம் சென்று திரும்பும் வழியில், இயேசுவின் முதன்மையான சீடர்களில் ஒருவரான பிலிப்பு என்பவரைச் சந்தித்தார். அவரிடம் கிறிஸ்துவைப் பற்றி அறிந்து, கிறிஸ்துவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, அவரை பின்பற்றுகிறார். கிறிஸ்துவை பின்பற்றியவர்களில், அனேகமாக முதல் அரவாணியாக அவர் இருக்கக்கூடும். அரவாணிகள் கிறிஸ்துவின் சீடர்களாக அங்கீகரிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கிறிஸ்துவின் முதல் தலைமுறை சீடர்களால் புறக்கணிப்படவில்லை; மேலும், அந்த மனிதர்கள் குறித்து எந்தவித பாகுபாடும் அங்கு நிலவவில்லை, என்பதை புரிந்து கொள்ள இயலும்.

பவுலும், ஒனேசிமும் (அடிமையும்)

 பவுல் கிறிஸ்துவின் முதல் தலைமுறை சீடர். இவர் உலகின் மிக முக்கிய பகுதிகளெங்கும் கிறிஸ்துவின் போதனைகளை பரப்பியவர். இவரது வாழ்வின் கடைசி காலத்தில் ரோம பேரரசர் (சீசர்) நீரோவால் சிறையிலடைக்கப்பட்டார், பின்பு மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது போதனைகளால் ஈர்க்கப்பட்டவர் ஓனேசிம் என்பவர். அவர் ஒரு அடிமை. பிலமோன் என்பவரின் அடிமையாய் இருந்தார். அவரும் கிறிஸ்துவின் போதனைகளை ஏற்றுக் கொண்டவர். சிறையிலிருந்தபோது பவுல், பிலமோனுக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்புகிறார். காலம் கி..பி.61ஆம் ஆண்டாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதில் ஒனேசிமை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அடிமையாக அல்ல; அன்பான சகோதரராக. மேலும், அவர் கடன் பட்டிருந்தால், அதற்கு பவுல் பொறுப்பேற்பார், எனவும் எழுதுகிறார். ஒனேசிம், அடிமையாக இருந்த போது, பிலமோனிடமிருந்து தப்பியோடிவிட்டவர். அன்றைய ரோம சட்டப்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கலாம். அவரை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க பவுல் வேண்டுகிறார். மேலும் அன்பான சகோதரராக, சமத்துவத்துவத்துடன் நடத்த வேண்டும் என்கிறார். இவர்கள் அனைவரையும் இணைப்பது

கிறிஸ்துவின் போதனைகள். 

 உலகெங்கும் அடிமைத்தனத்தை ஒழிக்க ஆப்ரகாம் லிங்கன் காலம் வரை மக்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.  

பீட்டரும், பிற சாதியினரும்

பீட்டரும் (பேதுரு அல்லது இராயப்பர்) கிறிஸ்துவின் முதல் தலைமுறை சீடர் ஆவார். அவர் கிறிஸ்துவின் போதனைகளைப யூதேயா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பறை சாற்றி வந்தார். அவருக்கு ஒருநாள் ஒரு கனவு (காட்சி) வந்தது. அதில் பெரிய கப்பற்பாயைப் போன்றதொரு விரிப்பு நான்கு மூலைகளிலும் கட்டபட்டு, வானிலிருந்து தரையில் இறக்கப்படுவதைக் கண்டார். அதில் நடப்பன, ஊர்வன, பறப்பன அனைத்தும் இருந்தன. “பீட்டர், எழுந்து இவற்றைக் கொன்று சாப்பிடு”, என்ற குரல் கேட்டது. அதற்கு, “வேண்டவே வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும், தூய்மையற்றதுமான எதையும் நான் உண்டதேயில்லை”, என்றார். மீண்டும் இருமுறை, முன்பு ஒலித்தது போலவே குரல் ஒலித்தது.

இதன் உட்பொருளான, அனைத்து சாதியினருக்கும் கிறிஸ்துவை அறிவிக்க வேண்டுமென்பது, பின்பு அவருக்கு உணர்த்தப்படுகிறது. அனைத்து சாதியினரும் சமம், எந்தவித பாகுபாடும் கூடாது, என பீட்டருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

“வரிதண்டுவோரும், விலை மகளிரும் உங்களுக்கு முன்பே கடவுளின் ஆட்சியில் பங்கு பெறுவர்”, என்கிறார் கிறிஸ்து. “ஏழைகளே, கடவுளின் ஆட்சி உங்களுடையதே”, என்கிறார். “சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”, என்கிறார். காணாமல் போன ஆடு, ஊதாரி மகன் ஆகிய உவமைகள் மூலம் ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு அளிக்கிறார். அவர்களும் சமூகத்தில், மற்றவர்களைப் போல் நடத்தப்பட வேண்டும் என்கிறார், அவர்களுடன்தான் அலைகிறார், உணவருந்துகிறார், உறவாடுகிறார். சமூகத்தை உயர் சாதியினரின் கட்டுக்குள் வைத்திருக்க உதவிய யூத சடங்குகளுக்கு எதிராய் செயல் ஆற்றுகிறார். அதனால் உயர் சாதியினரின் குற்றச்சாட்டுக்கு ஆளாகிறார். கொல்லவும் படுகிறார்.

ஆனால் நமது கிறிஸ்துவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பதை சற்று பார்ப்போம். ஆரம்ப காலத்தில் கிறிஸ்துவத்துத்தை பரப்ப வந்த கிறிஸ்துவ மிஷனரிகள், தமிழ் மக்களிடையே நிலவிவந்த சாதிப்பாகுப்பாடு பெரும் சிக்கலாக இருந்தது. அவர்கள் சாதிகளை அங்கீகரிக்க வேண்டியிருந்தது. இது குறித்த பல விபரங்களை ஆ.சிவசுப்ரமணியனின், “கிறிஸ்துவமும், சாதியும்” என்ற நூலில் காணலாம்; (காலச்சுவடு வெளியிடு, 2001).

தமிழகத்தில் ஏறக்குறைய 16% மக்கள் கிறிஸ்துவர்கள். அனைத்து திருச்சபைகளையும் சேர்த்து மிக பெரிய சாதியாக இருப்பது தலித் கிறிஸ்தவர்கள்தாம். (அதனையடுத்துள்ள பெரிய சாதி கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்த வன்னியர்கள் ஆவர். அதனையடுத்துள்ள பெரிய சாதி தென்னிந்திய திருச்சபையைச் சார்ந்த நாடார்கள் ஆவர்). இதில் மிகவும் பிந்தங்கியுள்ள சமூகம் தலித் கிறிஸ்துவ சமூகமே.

அவர்கள் கிறிஸ்துவர்களாக இல்லமலிருந்தாலாவது, அரசின் சில சலுகைகளைப் பெற்றிருக்க முடியும். கிறிஸ்துவ மதத்தில் உள்ள சாதிப்பாகுபாடுகளால் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள் இவர்களே. அதிலும் ஒடுக்கப்பட்டவர்கள், தலித் கிறிஸ்துவ பெண்கள். தலித் ஆண் கிறிஸ்தவர்களின் ஒடுக்குதலுக்கு இவர்கள் இரையாகிறார்கள்.

கிறிஸ்தவர்களிடையேயும் சாதிக் கொடுமைகளுக்கு சிறிதும் குறைவில்லை. சாதிவிட்டு சாதி திருமணங்கள் மிகவும் குறைவு. சாதிவிட்டு, சாதி காதல்கள் நசுக்கப்படுகின்றன. கவுரவ கொலைகளுக்கும் குறைவில்லை. மவுனமாக கொல்லப்பட்ட இதயங்களுக்கு கணக்கில்லை.

கிறிஸ்துவ திருச்சபைகளில் உள்ள உயர் பதவிகளிலும் சாதி தலை விரித்தாடுகிறது. இது சம்பந்தமாக சபைகளுக்குள் நடக்கும் பூசல்கள் குறித்து செய்திகள், செய்திதாள்களில் காணக்கிடைக்கிறது.

 கிறிஸ்துவ பெண் துறவிகள் (கன்னியாஸ்திரிகள்) கிறிஸ்துவ ஆண் துறவிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை நாம் அடிக்கடி செய்தி தாள்களில் காண்கிறோம். இவ்விஷயத்தில் சாதியும், ஆணாதிக்கமும் கை கோர்த்து கொள்கின்றன. ரோமன் கத்தோலிக்க திருச்சபையில், இது வரை ஒரு பெண் பாதிரியாராக வர அனுமதி இல்லை. பெண்ணியப் பார்வையில் விவிலியம் என்ற நூலில் இது குறித்த சில விபரங்களைக் காணலாம். (காலச்சுவடு வெளியிடு, 2006). கட்டுரையாளரின் இந்த நூல் குறித்த மதிப்புரையை கீற்று இணையதளத்தில் (www.keetru.com) காணலாம்.

இதோடில்லாமல் சபைகளில் நிதி நிர்வாக முறைகேடுகள் பற்றிய செய்திகளையும் நாம் கேள்வியுறுகிறோம். பணத்தின் மீதான ஆசையே அனைத்து தீமைகளுக்கும் வேராயிருக்கிறது, என்பது விவிலியத்தின் கருத்து. அது பொதுவாக அனைவரும் மறந்துவிட்ட ஒரு கருத்தாகிவிட்டது.

 கிறிஸ்து அதிகார மையங்களுக்கு எதிராக இருந்தார். தற்போது அதிகாரங்களின் மையமாக அவர் ஆக்கப்பட்டுவிட்டார். இவைகளையெல்லாம் பார்க்கும்போது “உலகில், ஒரே ஒரு உண்மை கிறிஸ்துவர், கிறிஸ்து மட்டுமே”, என்ற தாஸ்தயேவேஸ்கியின் கூற்று, நமக்கு நினைவுக்கு வருவதை தடுக்க முடியாது.

- ம.ஜோசப் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It