லிபியா பற்றி எழுதுகிறபோது எனக்கு ஈழப் பிரச்சினை உடனடியாக ஞாபகம் வருகிறது. இது யதேச்சையானதா அல்லது இதன் பின் அறிவுறுத்தப்பட்ட சுய-அரசியல் ஏதேனும் இருக்கிறதா? மத்தியக் கிழக்குப் பிரச்சினை பற்றி, அதிலும் குறிப்பாக லிபியா பற்றி, அதுவும் தமிழில் எதற்காக மாய்ந்து மாய்ந்து எழுதவேண்டும்?
தமிழ்ச் சூழலில் விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் என ‘அறியவரப்பெற்ற’ மார்க்சியர்கள் லிபியாவின் நிலைமை குறித்து எழுதுகிறபோது, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதனை முன்னிறுத்தியும், லிபிய அதிபர் கடாபியின் ஒடுக்குமுறையை இரண்டாம்பட்சமாக்கியும், இன்னும் கடாபிக்கு எதிராகக் கிளர்ந்திருக்கும் எதிரணியினரை அமெரிக்க-மேற்கத்திய ஆதரவாளர்களாகவும்-அவர்களால் ஏற்கனவே திட்டமிட்டவகையில் ஆயதபாணியாக்கப்பட்டவர்களாகவும், லிபியாவுக்கு தொழில்முறையிலாகக் குடியேறிய ஆப்ரிக்க மக்களுக்கு எதிரான நிறவெறியர்களாகவும் சித்தரிக்க என்ன காரணம்?
இதன் மூலம் தமிழ்ச்சூழலுக்கு இவர்கள் எதனை அறிவுறுத்துகிறார்கள்?
ஓடுக்குமுறையாளனான கொடுங்கோலன் முவம்மர் கடாபி ஒருபுறம், அவனை எதிர்த்துப் போராடுகிற- ‘வேறுபட்ட அரசியல் தன்மைகளும் முரண்களும் கொண்ட’ எதிர்ப்பாளர்கள் பிறிதொருபுறம் - இதனிடையில் 'எம்முடையது மனிதாபிமானத் தலையீடு' எனும் அறஅரசியல் எனப் பிரகடனப்படுத்தியபடி லிபியாவின் மீது தலையிட்டிருக்கும் அமெரிக்க-மேற்கத்திய அரசுகள். இதில் எவர் எவருடைய சார்பு நிலையை எவரும் எடுக்கப் போகிறார்கள்?
நீங்கள் அமெரிக்காவின் பக்கமா? கடாபியின் பக்கமா? அல்லது கடாபிக்கு எதிராகப் போரிடுகிறவர்கள் பக்கமா? ‘உடனடியாக’ நீங்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன?
ஈழநிலைமையைப் பொறுத்து இந்தக் கேள்வியை இப்படிக் கேட்டுப் பார்க்கலாம்: நீங்கள் இலங்கையில் மனித உரிமைப் பிரச்சினையை எழுப்பியிருக்கும் அமெரிக்க-மேற்கத்திய நாடுகள் பக்கமா? அம்னஷ்டி இன்டர்நேஷனல்-ஹயுமன் ரைட்ஸ் வாட்ச்-ட்ப்ளின் பீப்பிள்ஸ் டிரிப்யூன் போன்ற சுயாதீன மனித உரிமைகள் அமைப்புக்களின் பக்கமா? இனக்கொலை புரிந்த கொடுங்கோலனான மகிந்த ராஜபக்சேவின் பக்கமா? அல்லது வேறுபட்ட அரசியல் பார்வைகளும் முரண்களும் கொண்ட விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளிகளின் பக்கமா?
இதில் எனது பதில் திட்டவட்டமாக இருக்கிறது. நான் ‘உடனடியாக’ லிபியப் போராளிகளின் பக்கமும், ஈழப் போராளிகளின் பக்கமும் நிற்பதாகச் சொல்வேன். எனது முதல் தேர்வும் இதுதான்.
இங்கு அடுத்த கேள்வி வருகிறது. லிபியாவிலும், ஈழத்திலும் ஒரே மாதிரியானவர்கள் போராடவில்லை. லிபியாவை எடுத்துக் கொண்டால் அங்கு அல்கைதா அமைப்போடு தொடர்புள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகள் போராடுகிறார்கள், கடாபிக்கு முன்னிருந்த முடியாட்சியை மீளக் கொண்டுவருகிறவர்கள் போராடுகிறார்கள், பழங்குடி இனக்குழுமங்கள் போராடுகின்றன. மேற்கத்தியக் கல்விகற்ற தாராளவாத ஜனநாயகவாதிகள் போராடுகிறார்கள். மிகக்குறைந்த அளவில் மார்க்சியர்களும் போராடுகிறார்கள். இவர்களில் நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள்?
ஈழத்தில் தமிழ் இன அரசியல் மட்டுமே பேசிய விடுதலைப் புலிகளும் டெலோ அமைப்பினரும் போராடினார்கள். மார்க்சியம் பேசிய ஈ.பி.ஆர்.எல்.எப்-ஈரோஸ்-பிளாட்-இ.என்.டி.எல்.எப் போன்ற அமைப்பினர்களும் போராடினார்கள். இவர்களில் நீங்கள் யாரை ஆதரித்தீர்கள்? உங்களது தேர்வுகள் என்னவாக இருந்தன? மார்க்சியராகக் கருதிக் கொள்கிறவரின் முன் இதில் இரு தேர்வுகள் இருக்கின்றன. ஓன்று மார்க்சிய அமைப்புக்களை ஆதரிப்பது. அதுவே அவரது அடிப்படைத் தேர்வாக இருக்கும். இரண்டாவதாக ஒரு பொது எதிரிக்கு எதிராக, ஒரு குறைந்தபட்சத் திட்டத்தின் அடிப்படையில், ஒரு ஜனநாயக அமைப்பில் இணைந்து போராடுவதனை ஏற்பது. இந்த நிலைபாடுதான் பரந்துபட்ட மக்கள் விடுதலை அமைப்பைக் கட்டுவதற்கான முதல்படிநிலையாக இருக்கும். நான்கு ஈழவிடுதலை அமைப்புக்கள் ஒன்றாக இணைந்தபோது, ஈழவிடுதலையை ஆதரிக்கிறவர்கள் இப்படித்தான் தமது மகிழ்வையும் ஒப்புதலையும் வெளியிட்டார்கள். இதே நிலைமைதான் இன்று லிபியாவிலும் இருக்கிறது.
லிபியாவில் கிளரச்சியாளர்கள் இடைக்கால அரசு ஒன்றை அமைத்திருக்கிறார்கள். தமது மக்களின் ஒப்புதல் பெற்ற, யாப்பு அடிப்படையிலான ஜனநாயக அமைப்பு ஒன்றினை உருவாக்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். தமது நிலத்தில் அந்நியத் தலையீட்டைத் தாம் விரும்பவில்லை எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலைமை லிபியாவுக்கு மட்டும் பிரத்தியேகமானது இல்லை. எகிப்தில் யாப்பு வரையப்பட்டு மக்கள் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். துனீசியாவிலும் இதுதான் நடந்திருக்கிறது. சிரியா, யேமான், அல்ஜீரியா, பெஹ்ரைன் என எல்லா நாடுகளிலும் மக்கள் இதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
எகிப்தில் எவ்வகையிலானவர்கள் போராடினார்கள்? இஸ்லாமியவாதிகள், மார்க்சியர்கள், இளைஞர்கள், ஜனநாயகத்தை அவாவிய அறிவிஜீவி வர்க்கத்தினர் இந்த நான்கு பிரிவினரே போராடினார்கள். மத்தியக் கிழக்குப் புரட்சிகள் அனைத்திலுமே இஸ்லாமியவாதிகளுக்கும், அதாவது அடிப்படைவாதிகளுக்கு அல்லது அல்கைதாவினருக்கு ஒரு பங்கு இருக்கிறது. அவர்களும் கிளர்ச்சியாளர்களின் அங்கம்தான். எனினும் அவர்கள் மக்கள் ஒப்புதல் பெற்ற யாப்பிலும், ஜனநாயக அமைப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இந்த வெகுமக்கள் கிளர்ச்சியாளர்களில் உள்ளிட்ட இஸ்லாமியவாதிகளின் பங்கேற்பை மத்தியக் கிழக்குச் சூழலில் எவர் எதற்காகப் பாவிக்கிறார்கள்?
அமெரிக்கர்கள் இந்த எழுச்சிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, கொடுங்கோலர்களைப் பாதுகாப்பதற்காக இதனைப் பாவித்தார்கள். துனீசிய, எகிப்து எழுச்சிகளின் ஆரம்பநாட்களில் இதுதான் அமெரிக்க-மேற்கத்திய நிலைபாடாக இருந்தது. இதுதான் இன்றளவிலும் ‘அமெரிக்க-மேற்கத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களான’ கடாபியினதும், சிரியாவின் அசாத்தினதும் நிலைபாடாக இருக்கிறது. இந்த நிலைபாட்டை மார்க்சியர் எனக் கோரிக் கொள்வோரும் முன்வைப்பது அபத்தமன்றி வேறென்ன?
பிறிதொரு விவாதம், அமெரிக்கர்களும்-மேற்கத்தியர்களும் லிபியக் கிளர்ச்சியாளர்களுக்கு, மத்தியக் கிழக்கு எழுச்சிகள் தோன்றுவதற்கு பலமாதங்களுக்கு முன்பே எகிப்தும் அமெரிக்க-மேற்கத்திய அரசுகளும் ஆயுதங்கள் வழங்கிவிட்டன என்கிற கூற்றாக வெளிப்படுகிறது. அமெரிக்க-மேற்கத்தியத் தலையீடுகள் என்பது எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் இருந்து வருகிறது. அமெரிக்காவின் என்டோவ்மென்ட பர் டெமாக்ரஸி எனும் அமைப்பு, யுஎஸ் எய்ட் எனும் அமைப்பு போன்றன தமது நிதியாதரங்களின் மூலம் உலகெங்கிலும் அமெரிக்க ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்துவருகிறது. யுகோஸ்லாவியத் தலைவரான மிலோசாவிச்சை அகற்றுவதற்காகச் செயல்பட்ட otpor எனும் அமைப்பு, எகிப்துக் கிளர்ச்சிகளில் முக்கியப் பங்காற்றிய ஆகஸ்ட் ஆறு கிளர்ச்சிக் குழு எனும் அமைப்புக்கு அமைதிப் போரட்டங்களை நடத்துவது எப்படி என பயிற்சியளித்திருக்கிறது என்பது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த otpor அமைப்பின் தத்துவாசிரியன் காந்தியத்தால் ஆதர்ஷம் பெற்ற ஒரு யூதர் என்பதும் தெளிவாக இருக்கிறது. மட்டுமல்ல இந்த அமைப்பு மத்தியக் கிழக்கு நாடுகள் அனைத்திலும் பரவியிருந்தன என்பதும், இவர்கள் அனைவரும்; கிளர்ச்சிகளில் பங்கேற்றார்கள் என்பதும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் காரணத்திற்காக மத்தியக் கிழக்கு எழுச்சிகளை அமெரிக்காதான் தூண்டிவிட்டது என வாதிப்பவர்களும் இருக்கிறார்கள். மக்கள் எழுச்சிகளின் தன்மைகளையும், அதில் ஈடுபட்ட வேறுபட்ட மக்கள் சக்திகளையும், இது குறித்த மத்தியக் கிழக்கு மார்க்சியர்,கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவர்களின் அறிக்கைகளையும் ஆய்வுகளையும் கவனித்து வருவோர் இது எவ்வளவு அற்பமான கூற்று என்பதனை அறிவார்கள்.
லிபியாவிலும் சிறுபான்மையினரான அமெரிக்க ஆதரவு சக்திகள் இருக்கவே செய்யும். அதற்காக லிபியக் கிளர்ச்சியை, அல்கைதாவினரின் கிளர்ச்சியாக, ஆப்ரிக்க மக்களுக்கு எதிரான கிளர்ச்சியாக, அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சியாகச் சித்தரிக்க முனைவது வரலாற்றுக்கு எதிரான பார்வையாகவே இருக்கும்.
இந்தக் கட்டுரை எழுதப்படும் இந்த நிமிடம் வரையிலும் ( 03.04.2011 : அதிகாலை 03.07 மணி) லிபியக் கிளர்ச்சியாளர்களுக்கு எகிப்திய அல்லது அமெரிக்க அல்லது பிரித்தானிய ஆயுதம் என எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் ஆயுதம் வழங்க வேண்டும் என எகிப்திய சகோதரத்துவ இஸ்லாம் தலைவரும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரும், ஹிலாரி கிளின்டனும் தெரிவித்து வருகிறார்கள். சமவேளையில் மறுபடி மறுபடி தாம் கைப்பற்றிய இடங்களை கடாபி படையினரிடம் தாம் இழந்துவருவதற்கான காரணம் தம்மிடம் போதிய ஆயுதங்கள் இல்லை என்பதனைக் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இவர்கள் இப்போது வைத்திருக்கும் ஆயதங்கள் பென்காசியில் நிலைகொண்டிருந்த ராணுவத்தினர் கடாபிக்கு எதிராகத் திரும்பியபோது தம் வசம் கொண்டிருந்த ஆயுதங்கள்தான். தம்மிடம் இருப்பதெல்லாம் பழைய ரஸ்ய ஆயுதங்களே என்பதனையும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனை இங்கு எழுதக் காரணம் எதிர்காலத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்காது என்பதனை நிலைநாட்டுவதற்காக இல்லை. மாறாக மத்தியக் கிழக்கு எழுச்சிகளுக்கு முன்பாகவே லிபியர்கள் ஆயதபாணிகளாக்கப்பட்டார்கள், அமெரிக்காதான் லிபியக் கிளர்ச்சியைத் தூண்டியது, அல்கைதாவினர்தான் கடாபிக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்பதனை மறுப்பதற்காகவே இதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இத்தகைய அனுமானுங்களை மார்க்சியப் பகுப்பாய்வு என்று சொல்லிக் கொள்வது கூட அபத்தமாகவே இருக்கும்.
எதற்காக இவர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளது மக்களின் ஜனநாயக அவாவினது பகுதியாகத் தோன்றிய லிபியக் கிளர்ச்சியை அதனின்று அகற்றி, பிரத்யேகமான ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சினையாகப் பார்க்கிறார்கள்? அதற்கான காரணம் என்ன? ஈழத்துக்கும் லிபிய நிலைமைக்கும் இடையிலான ஒப்புமையும் ஒரு காரணம் என நான் நினைக்கிறேன். இலங்கை விஷயத்திலும் லிபிய விஷயத்திலும் அமெரிக்க-மேற்கத்திய நாடுகள் மனித உரிமை அரசியலைத்தான் பாவிக்கின்றன. இந்த மனித உரிமை அரசியலை ‘தமது நிலைநோக்கில் நின்று முன்னெடுக்காதது’ மட்டுமல்ல, அதற்கு எதிரான பார்வையையும் கொண்டிருக்கிற, அமைப்பாகத் திரண்ட ஈழ இந்திய மார்க்சியர்களும், முன்னாள் மார்க்சிய மனித உரிமையாளர்களும், தமது இலங்கை தொடர்பான நிலைபாட்டை நியாயப்படுத்துவதற்கான அரசியலாகவே அவர்கள் இத்தகைய நிலைபாட்டைத் தேர்கிறார்கள் எனவும் கருதுகிறேன்.
இதனோடு இன்னொரு மிகச் சரியான காரணமும் இருக்கிறது. அமெரிக்க ஆதரவு நாடுகளான பஹ்ரைனும் யேமானும் தமது அரசுகளுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை ராணுவ ஒடுக்குமுறையின் மூலம் கொன்று வருகிற சூழலில், அமெரிக்கா தனது மனிதாபிமானத் தலையீட்டை அங்கு நிகழ்த்தாமல், ஏன் லிபியாவில் மட்டுமே நிகழ்த்தி வருகிறது என்கிற வலிமையான கேள்வியிலிருந்து அக்காரணம் எழுகிறது. ராணுவத்தை மக்கள் மீது பாவிப்பதனை அமெரிக்க எதிர்ப்பு நாடுகளான சிரியாவும், அல்ஜீரியாவும் கூடத்தான் செய்துவருகிறது என்பதனையும் அங்கும் லிபியா போல அமெரிக்கா தலையிடவில்லை என்பதனையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
லிபியாவை மட்டுமே அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தேர்வு செய்துகொள்ள என்ன காரணம்? அறம்சார்ந்ததொரு மிகப் பெரும் காரணம். கடாபி விமானக் குண்டுவீச்சின் மூலம் தமது மக்களைக் கொன்று கொண்டிருந்தார். பென்காசி நகரில் வீதிக்கு வீதி வீட்டுக்குவீடு புகுந்து எலிகளையும் பூச்சிகளையும் கொல்லுமாறு தமது ஆதரவாளர்களுக்கு கடாபி கட்டளையிட்டார். லிபியா இரத்தக்கடலாகும் எனச் சொன்னார் கடாபியின் புதல்வர். மிகப்பெரும் கொலை நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும் கடாபி தயாராக இருந்தார். அதுவே கடாபி இதுவரையிலும் தனது எதிர்ப்பாளர்களைக் கையாண்ட முறையாகவும் இருந்தது. அந்த நாட்டின் கிளர்ச்சியாளர்கள், தமது நாட்டுக்குள் அந்நியத் துருப்புக்களை அனுப்பாமல், தம்மைப் பாதுகாக்க வெளிநாட்டு உதவியை அவர்கள் கோரினார்கள்.
பாதுகாப்புச் சபையின் விமானப் பறத்தலற்ற பிரதேசத் தீர்மானம் அதனது விளைவாகவே தோன்றியது. இதில் தீவிரமான நடவடிக்கையாளர்கள் வழமை போல அமெரிக்க-மேற்கத்திய அரசுகள்தான். சீனா,ரஸ்யா உள்ளிட்ட கியூபா,இந்தியா என இதில் பார்வையாளர்கள் மட்டும்தான். இதில் மட்டுமல்ல, கடாபியின் லிபியப் படுகொலைகளுக்கும், மகிந்தாவின் ஈழப்படுகொலைகளுக்கும் இவர்கள் பார்வையாளர்கள் என்பதனையும் மீறி அமைதியாக இருப்பதன் மூலம் பங்காளர்களாகவும் இருக்கிறார்கள். எத்தனையெத்தனையே விக்கின வியாக்கியானங்களையும் தாண்டி இதுதான் நடைமுறை உண்மை.
விமானப் பறத்தலற்ற வான்வெளியைக் கோரி வெளிநாடுகளின் உதவியைக் கோரிய லிபிய மக்கள் ஏகாதிபத்திய ஆதரவாளர்களா அல்லது எதிர்ப்பாளர்களா? அவர்கள் என்ன நிலைபாட்டை மேற்கொள்ள வேண்டும்? ஓரு மார்க்சியர் விநோதமாக எழுதினார் : எகிப்து போல சகல மக்களும் திரண்டிருந்தால் கடாபியைச் சரணடையச் செய்திருக்கலாம் என எழுதுகிறார். எகிப்தில் ராணுவம் மக்களைக் கொல்லவில்லை. லிபியாவில் ராணுவம் மக்களைக் கொல்கிறது. திரிபோலியில் ஆயுதம் தாங்கிய கடாபி ஆதரவாளர்களை கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தெருவில் இறக்கிவிட்டார் கடாபி. எப்படி மக்கள் திரண்டெழுவது சாத்தியம்?
லிபியா பற்றிய செய்திகளை வாசித்து வருபவர்கள் ஒன்றை அறிவார்கள். ஈராக் ஆப்கான் பிரச்சினை போல அமெரிக்கா லிபியத் தாக்குதலுக்குத் தலைமையேற்கவில்லை. அது அதனை விரும்பவில்லை எனவும் தெரிவித்திருக்கிறது. அதற்கான காரணம் இன்றைய நிலையில் லிபியாவின் எண்ணெய்வளத்தைப் பெறுவதற்கான போட்டியில், அங்கு கடந்த பத்தாண்டுகளாக நிலைபெற்றிருக்கிற பிரித்தானிய பிரெஞ்சு நிறுவனங்களும் அடுத்ததாக இத்தாலியும்தான் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த மூன்று நாடுகளின் அரசியல் தலைவர்களும் லிபியாவின் கடாபியை நேராகச் சந்தித்திருக்கிறார்கள். அதிகலாபம் பெறவிருக்கிற இவர்களே அதிகம் தாக்குதலுக்குப் பங்களிக்க வேண்டும் என அமெரிக்கா சொல்லிவருகிறது. ஆகவேதான் பிரான்சும் பிரித்தானியாவும் தாக்குதலில் முன்னணியில் இருக்கின்றன. இவ்வகையில் தமக்கிடையிலான வேறுபட்ட நலன்களையும் தாண்டி, லிபியாவில் மட்டுமே இந்நாடுகள் தலையிடக் காரணம், உள்ளக நிலைமையில் லிபிய மக்களின் மீதான விமானக் குண்டுவீச்சு என்பது தார்மீகக் காரணமாகவும், புறநிலைமையில் தமது பொருளியில் அரசியல் ஆதிக்கத்தைக் கொண்டிருத்தல் எனும் அரசியல் காரணமாகவும் இத்தலையீடு நேர்ந்திருக்கிறது.
எகிப்திலும், துனீசியாவிலும், பஹ்ரைனிலும், யேமானிலும் இந்நாடுகளின் அரசியல் ஆதிக்கம் இன்றளவிலும் இருக்கிறது. இந்த நாடுகளில் அது நழுவிப் போய்விடும் சாத்தியத்தை இந்த மக்கள் எழுச்சிகள் தோற்றுவித்திருக்கின்றன. இதனைக் கவனம் கொண்டே மக்களுக்குச் சாதகமாக மத்தியக் கிழக்கில் தாம் தலையிடுவதான ஒரு அரசியலையே இப்போது அமெரிக்க- மேற்கத்திய அரசுகள் இப்போது தேர்ந்திருக்கின்றன. இன்றைய நிலைமையில் லிபியாவைப் போன்று சிரியாவிலும், அல்ஜீரியாவிலும் இவர்கள் தலையிட நேரிடலாம், தமது ஆதரவுத்தளங்களான பஹ்ரைனும் யேமானும் தமக்கு எதிராகத் திரும்பினாலும் அவர்கள் தலையிடலாம். என்றாலும், தமது தலையீட்டுக்கான மனிதாபிமானக் காரணம் ஒன்றை அவர்கள் கொண்டிருக்கவே விரும்புவார்கள்.
ஏகாதிபத்தியம் மனிதாபிமானக் காரணத்தை முன்வைத்து தலையீட்டை நிகழ்த்தி தனது பொருளியல் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை, பினகாலனிய நாடுகளின் சர்வாதிகாரிகளும் கொடுங்கோலர்களும் தமது மக்களின் மீதான வன்முறைகளை நிகழ்த்தி வருகிறார்கள் என்பதும், தமது வாரிசு ஆட்சிகளைச் சுமத்தி வருகிறார்கள் என்பதும். இதில் இனப் படுகொலைக்கு உள்ளாகும் மக்கள் என்ன நிலைபாட்டை மேற்கொள்ள வேண்டும்? தம்மை படைவலிமையின் மூலமோ, சர்வதேசிய நிறுவன அமைப்புக்களின் மூலமோ, அல்லது சர்வதேசீய தார்மீக அரசியலின் மூலமோ காத்துக் கொள்கிற நிலைமை கொண்டிராத மக்கள் இதில் என்ன நிலைபாட்டை எடுக்க வேண்டும்?
சீனா ரஸ்யா போன்ற முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகள், கியூபா நிகரகுவா போன்ற புரட்சிகர அரசுகள், இந்தியா தென் ஆப்ரிக்கா போன்ற பின்காலனிய அரசுகள் வெறும் பார்வையாளர்களாக அல்ல இனக்கொலையின் பங்காளர்களாக இருக்கும் சூழலில் இந்த மக்களுக்கு முன்னுள்ள தேர்வுகள் எத்தகையது?
இந்த நெருக்கடியான கேள்விகளுக்கு இன்று மார்க்சியர்களிடம் பதில் இல்லை. அவர்களது சர்வதேசியம் என்பது வழக்கொழிந்து போய்விட்டது.
இப்போது இலங்கைப் பிரச்சினைக்கு வருவோம். ராஜபக்சே ஒரு மிகப்பெரும் இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்திருக்கிற மாமன்னனாக இருக்கிறார். அவரது குடும்ப, வாரிசு அதிகாரம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. ராணுவப் பொருளாதாரமாக அந்நாடு மாறிவருகிறது. ராணுவக் கோட்பாடு அங்கு ஒரு அறிவுத்துறையாகப் பரிணமித்து வருகிறது. கடாபி தேர்தல் மூலம் வந்தவரல்ல, மகிந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என இடையில் ஒரு குரல் கேட்கிறது. இட்லர் ஒரு காலத்திய ஜெர்மானிய மக்களின் தலைவன். அவரும் தேர்தல் முறையையும் பாராளுமன்றத்தையும் சட்டத்தையும் கொண்டிருந்தார். வெகுமக்களின் உளவியலாக்கம், மதம், ராணுவமயம் போன்றவற்றினை ஒப்பிட சவளைப் பிள்ளை வடிவிலேனும் பாசிசத்தின் அத்தனைக் கூறுகளையும் கொண்டதாக இலங்கை அரசு இருக்கிறது.
விடுதலைப் புலிகள் பல அரசியல் தவறுகளை இழைத்தார்கள். அவர்களது அரசியல் வெகுமக்கள் அரசியல் அல்ல. அமைப்பு வடிவமாக அவமானகரமான ஸ்டாலினிய வடிவத்தை அவர்கள் கொண்டிருந்தார்கள். தமது மக்களுக்குள்ளாகவே தமக்கான பாரிய எதிரியை அவர்கள் உருவாக்கினார்கள். பின் சோவியத், பின் செப்டம்பர் நிலைமைய அவர்கள் அவதானிக்கவில்லை. வைதீக இந்துமத சாதீய சமூகத்தின் முரண்களை அவர்கள் விமர்சன உணர்வுடன் கையாளவில்லை. என்றாலும் இத்தனைக்கிடையிலும் அவர்கள் ஒடுக்கப்பட்ட ஈழமக்களுக்கான விடிவுக்காகத்தான் களமாடி மறைந்தார்கள் என்ற உண்மையை எவரும் மறுதளிக்க முடியாது. ஓரு அமைப்பாக இன்று அவர்கள் இல்லை. முன்னைய போராளி அமைப்புக்கள் எதுவும் அதுவாகவே இல்லை. ஓரு புதிய அரசியலின் திசைவழியைத் தேட வேண்டிய நிலையில்தான் இன்று அம்மக்கள் விடப்பட்டிருக்கிறார்கள்.
ராஜபக்சேவுக்கும் கடாபிக்கும் சிற்சில வேறுபாடுகள் தவிர வெகுமக்களைக் கொன்றொழிப்பதில், வாரிசு ஆட்சியை உருவாக்குவதில் பெரியளவு மாறுபாடுகள் இல்லை. இருவரும் இனக்கொலை செய்யத் துணிந்த ஆட்சியாளர்கள். அமெரிக்க- மேற்கத்திய அரசுகள் பேசுவது இருக்கட்டும், இவர்கள் மனித உரிமை மீறல்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டுமா இல்லையா? அம்னஸ்டி இன்டர்நேசனல்-ஹயூமன் ரைட்ஸ் வாட்ச்-டப்ளின் பீப்பிள்ஸ் டிரிப்யூனல் பேசும் மனித உரிமை ஏகாதிபத்திய ஆதரவு அரசியலா அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலா?
இல்லை மனித உரிமை அரசியலே ஏகாதிபத்தியத்தின் கண்டுபிடிப்பா?
மனித உரிமை அரசியல் ஏகாதிபத்திய அரசியல் தலையீட்டுக்கானது எனில், எதற்காக காஷ்மீர் பிரச்சினை, நேபாளப் பிரச்சினை, நக்ஸலைட்டுகள் பிரச்சினை என்ன மனித உரிமை அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டு இருக்க வேண்டும்? உண்மை அறியும் குழவின் அறிக்கைகள் எல்லாம் எதற்காக? எதற்கு அரசின் முன்பாகப் பரிந்துரைகளை வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?
இல்லை, முன்னாள் இந்திய தமிழக மார்க்சியர்களின் மனித உரிமை அரசியல் என்பது சந்தர்ப்பவாத விளையாட்டா? ஏன் சுயாதீனமான மனித உரிமை அரசியலை இடதுசாரிகளும், மார்க்சியர்களும் மேற்கொள்ள முடியாது? ஏன் இனப்படுகொலை என்பதும் அதற்கு எதிரான அரசியல் என்பதும் மார்க்சீய அரசியலாக முன்னெடுக்கப்படவில்லை? மகிந்தாவினது மனித உரிமை மீறல்களை வாயளவில் விமர்சித்துக் கொண்டு, பிடல் காஸ்ட்ரோ ஏன் இலங்கையை ஆதரித்தார் தெரியுமா எனச் சப்பைக்கட்டு கட்டுவதற்கான காரணம் என்ன?
ஏன் எனில், மனித உரிமை அரசியலை, இனக்கொலைக்கு எதிரான ஒரு முக்கியமான அரசியலாக மார்க்சியர் ஏற்கவில்லை. இந்த அரசியலை மார்க்சியர் ஏற்றிருந்தால் அவர்களது சர்வதேசீயச் செயற்பாடுகள் வேறாக இருந்திருக்கும். கடாபிக்கு எதிரான முன்னணியிலும், மகிந்தாவிற்கு எதிரான முன்னணியிலும் அவர்களைக் கொண்டு நிறுத்தியிருக்கும். இந்த அரசியலை மார்க்சியர் ஏற்கவில்லை எனில், அதனைப் பிறர் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும்?
பெண்நிலைவாதம், இனத் தேசியம், மனித உரிமை என்ற இந்த மூன்றும் மார்க்சியர்களுக்கு மிகப்பெரும் பிரச்சினைகள். இது மார்க்சியர்களால் விடை காணவேண்டிய மிகப்பெரிய சவால்கள். மார்க்சியர்கள் இதனைச் சரியாக எதிர்கொள்ளாத போதுதான், விமோசன மரபான மார்க்சிய இயக்கங்களுக்கு வெளியில் இது சுயாதீன அரசியல் போக்குகளாகத் தொழிற்படத் துவங்குகின்றன.
இன்றைய நிலையில் ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமானத் தலையீடு தொடர்பாக அலட்டிக் கொள்கிற நேரத்தில் பாதியையாவது நாம் மனித உரிமை அரசியலில் ஈடுபாட்டுடன் செலுத்துவோமானால், ஏகாதிபத்தியம் அதனைப் பயன்படுத்துவதனை என்றேனும் தடுத்துநிறுத்துவதற்கான சாத்தியம் இருக்கிறது.
அதுவரையிலும்-
ஈழ நிலைமையில் தமது அரசியலை நேரடியாகச் சொல்வதற்குப் பிரதியாக லிபியா பற்றி ஏகாதிபத்திய எதிர்ப்புப் பனுவல்களைத் தமிழில் எழுதிக் கொண்டு, உலக அரசியலில் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க முடியும்.
- யமுனா ராஜேந்திரன் (