கிரிக்கெட் விளையாட்டில் பணம் வாங்கிக்கொண்டு, முன்கூட்டிய தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு ஏற்ப வீரர்கள் மைதானத்தில் விளையாடுவது, அதாவது விளையாடுவது போன்று நடிப்பது குறித்த ‘Match fixing’ பிரச்சனை நாம் அறிந்ததே. இது குறித்து ஊடகத் துறை விலாவாரியாக விவாதித்திருக்கிறது. அதேபோல, ஊடகத் துறையினர் பணம் வாங்கிக்கொண்டு முன்கூட்டிய தீர்மானித்தபடியே செய்திகளை வெளியிடும் ‘News fixing’ தெரியுமா? அத்தகையச் செய்திகளுக்குப் பெயர்தான் ‘paid news’ எனப்படும் ‘விற்கப்படும் செய்தி’! 

பொதுவாகவே, ஊடகங்களின் வருமானத்தைத் தீர்மானிக்கும் ஒரு முதன்மையான காரணியாக இருப்பது விளம்பரங்கள்தான். இதனால், நுகர்வு விளம்பரங்கள் ஊடகங்களில் விற்பனையாவது தவிர்க்க இயலாத ஒன்று. ஆனால், அதே பாணியில் செய்திகள் விற்பனையாவதுதான் இப்பிரச்சனையின் மையம். தற்போதைய காலகட்டம் தகவல் புரட்சி யுகம். இதில் தகவல் அல்லது செய்தி என்பது முதலீடாகவும் விற்பனைச் சரக்காகவும் உள்ளது. இக்கூற்றை எண்பிக்கும் வகையில் தற்போது ‘Paid news’ அதாவது விற்கப்பட்ட செய்தி அல்லது விலைக்கு வாங்கப்பட்ட செய்தி என்ற பிரச்சனை ஊடகத் துறையில் சமீபகாலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, 2009ஆம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது இப்பிரச்சனை மிகவும் பரபரப்பானது. தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் தங்களுக்கு ஆதரவான செய்திகள், கட்டுரைகள், கருத்துகள், ஒளிப்படங்கள், ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் இடம் பெறுவதற்காக குறிப்பிட்ட தொகையையோ பொருளையோ ஒரு நிறுவனமோ, அரசியல் கட்சியோ, தனிநபர் அரசியல்வாதியோ ஊடகத்திற்குச் செலுத்தி விடுவார்கள். ஒரு விளம்பரத்தை இடம் பெறச் செய்வதற்காக எப்படி ஒரு விளம்பர நிறுவனம் குறிப்பிட்ட ஊடகத்திற்கு கட்டணம் செலுத்துகிறதோ, ஏறக்குறைய அதே பாணியில் செய்திக்காகச் செலுத்தப்படும் ‘மாமூல்’ இது. இந்த வியாபாரத்தில் நேரடியாக பணமோ, பொருளோ கைமாற்றப்படலாம். அதைவிட முக்கியமாக, குறிப்பிட்ட ஊடக நிறுவனமும், குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரிக்கும் ஒரு தனியார் நிறுவனமும் மறைமுகமாகச் செய்துகொள்கின்ற ‘புரிந்துணர்வு ஒப்பந்தம்’ இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தேர்தல் நேரங்களில் ஊடகங்களின் பங்கு என்னவென்பது நமக்குத் தெரியும். தேர்தல் விளம்பரங்கள் மீதான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது. ஆனால் ‘செய்திகள்’ என்ற பெயரில் வெளியாகும் மறைமுக விளம்பரங்களை தேர்தல் ஆணையம் என்ன செய்ய முடியும்? 

பிரச்சனைக்குரிய இத்தகைய ‘செய்தி’ வழக்கமான தேர்தல் செய்தியைப் போல் காட்சியளிக்கும். ஆனால், அச்செய்தின் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் சற்றே உற்று நோக்கினால், அது குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கான ஒரு வகையான தேர்தல் விளம்பரமாக இருக்கும். இதனால், பசுத்தோல் போர்த்திய புலி என்பது போன்று, செய்தித்தோல் போர்த்திய விளம்பரங்களாக இவற்றைக் கருத வேண்டும். பத்திரிகையின் தனிப்பட்ட குரலாக விளங்கும் ஆசிரியர் கட்டுரைகூட இத்தகைய கோணத்தில் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். 

ஒரு நிறுவனமோ, அரசியல் கட்சியோ நடத்துகின்ற பொது நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளர்களை அழைப்பது வழக்கம். இவ்வாறு நிகழ்ச்சிகளுக்கு வரும் பத்திரிகையாளர்களை சிறப்பாகக் ‘கவனித்து’க்கொள்வதும் அவர்களை ஊக்கப்படுத்துகின்ற விதமாக அவர்களுக்குப் பணமோ பொருளோ கொடுப்பதும் நடைமுறையில் உள்ளதுதான். தங்கள் நிகழ்ச்சியைப் பற்றிய செய்தி, செய்தித் தொகுப்பு, செய்திக் கட்டுரை ஊடகங்களில் இடம் பெறுவதற்காக இத்தகைய உபசரிப்புகள் நடக்கின்றன. ஆனால், இத்தகைய உபசரிப்புகள் தேர்தல் நேரத்தில் நடக்கிற போது, ஊடக அறநெறி கேள்விக்கு உள்ளாகிறது. சான்றாக, தேர்தல் விளம்பரத்திற்கும் தேர்தல் செய்திக்கும் உள்ள இடைவெளி குறைந்துவிடுகிறது. இந்த இடைவெளியைப் புரிந்துகொண்டு, இவ்விரண்டையும் வேறுபடுத்திப் பார்ப்பது சாதாரண வாக்காளர்களுக்கு அவ்வளவு எளிதல்ல. மேலும், ‘Paid news’ விவகாரத்தில் நடைபெறுவது வெறும் உபசரிப்பு அல்ல. விளம்பரக் கட்டணம் என்பதைப்போல செய்திக் கட்டணம் என்ற அளவில் செய்தி விற்கப்படுகிறது என்பதை நாம் அறிய வேண்டும். இதன் விளைவாக, ஓர் அரசியல் கட்சி விளம்பரத்திற்காக எவ்வளவு செலவிடுகிறது என்பது மட்டுமல்லாமல், செய்திக்காக எவ்வளவு செலவிடுகிறது என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

இத்தகையப் போக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறிப்பிடும் கருத்துச் சுதந்திரத்தைக் கேள்விக்குரியதாக மாற்றிவிடுகிறது. இப்பிரச்சனை குறித்து ஆய்வு செய்த இந்திய பத்திரிகை கவுன்சில், அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, இந்த செய்தித்தோல் போர்த்திய விளம்பரங்களால் மூன்று விளைவுகள் ஏற்படுவதாகக் குறிப்பிடுகிறது. முதலாவாதாக, வேட்பாளரைப் பற்றியும் அவரது செயல்பாட்டுத் திறன் பற்றியும் சரியான தகவல் மக்களுக்குக் கிடைப்பதில்லை. இரண்டாவதாக, இதில் செலவழிக்கப்படும் தொகை தேர்தல் ஆணையம் கேட்கும் கணக்கில் காட்டப்படுவதில்லை. மூன்றாவதாக, குறிப்பிட்ட ஊடகம் வாங்கிய தொகை அதன் அதிகாரப்பூர்வக் வரவு செலவுக் கணக்கில் காட்டப்படுவதில்லை. இத்தகையச் செயல்பாடுகள் நியாயமான தேர்தல் நடைமுறைக்கு எதிராக இருப்பதாகக் கூறி, ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951’ஐ நடைமுறைப்படுத்துமாறு கவுன்சில் அரசுக்குப் பரிந்துரை அளித்தது. தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு ஊடகங்கள் பத்திரிகை கவுன்சிலின் நேரடிக் கண்காணிப்பில் வரவேண்டும் என்ற பரிந்துரையையும் முன்வைத்தது. இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க சில வழிமுறைகளையும் கொடுத்துள்ளது. இப்பிரச்சனை குறித்த புகார்களுக்கு நேரடி ஆதாரமின்றி, சூழல் ஆதாராம் மட்டுமே கிடைப்பதாகவும் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது. எனவே, இப்பிரச்சனையில் ஊடகத்தின் ‘அகக் கட்டுப்பாடு’ம் வாக்காளர்களிடையே ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வும்தான் மிக முக்கிய வழிமுறைகளாக அமையும் என நம்புகிறது. 

30 ஆண்டுகளுக்கு முன்னால், தேர்தல் குறித்த செய்தி என்றால் ஓரிரண்டு நாளிதழ்களும் அரசு சார்ந்த வானொலிச் செய்திகளும் மட்டுமே என்ற நிலைமையில் தமிழகம் இருந்தது. இன்று விரல்விட்டு எண்ண இயலாத அளவில் பத்திரிகைகள், வானொலி அலைவரிசைகள், தொலைக்காட்சி அலைவரிசைகள், இணைய இதழ்கள் என்று ஊடக எண்ணிக்கைப் பெருகிக் கிடக்கின்றன. இவை அனைத்திலும் வெளியாகின்ற செய்தி மழை வாக்காளர்களைத் திணறடிக்கின்றது. இதனால், தேர்தல் குறித்த உண்மை நிலையை அறிவது எளிதான செயலாகத் தோன்றவில்லை. தேர்தல் விளம்பரங்களும் விற்பனைச் செய்திகளும் விரும்பிய தாக்கத்தை வாக்காளர்களிடம் ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்து ஊடக ஆய்வாளர்களிடம் கருத்தொருமை ஏற்படவில்லை என்றாலும், வாக்காளர்கள் தன்னிச்சையாகச் சிந்திக்க இயலாத அளவிற்கு செய்திகள் திணறடிக்கின்றன என்பது உண்மை. தமிழத்தைப் பொறுத்தளவில் இந்த நிலையெல்லாம் தாண்டிவிட்டது. முக்கிய அரசியல்கட்சிகள் தங்களுக்கென்று தொலைக்காட்சி அலைவரிசைகளையும் பத்திரிகைகளையும் கையில் வைத்திருக்கின்றன. அல்லது சில பத்திரிகைகளை, தொலைக்காட்சிகளை தங்களது ஆதரவு ஊடகங்களாக வைத்துக்கொள்கின்றன. அவை அக்கட்சிகளின் நேரடிப் பரப்புரைக் கருவிகளாகவே அமைந்துள்ளன. இவற்றை ‘Paid media’ அதாவது, விலைக்கு வாங்கப்பட்ட ஊடகங்கள் எனலாம். 

பத்திரிகைகளைவிட, தொலைக்காட்சி என்ற காட்சி ஊடகம் பாமர மக்களிடையே அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புப் பெற்றது. இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அரசால் வழங்கப்பட்ட பிறகு, அதனுடைய வீச்சு அதிகமாகியுள்ளது. தேர்தல் பரப்புரை முடிந்ததும் சின்னங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், சில தனியார் தொலைக்காட்சிகளின் முகவரியை வெளிப்படுத்தும் ‘இசையுடன் கூடிய முத்திரைக் காட்சிகளை’ (Signature) உற்று நோக்கினால் போதும். அவற்றில், அத்தொலைக்காட்சி சார்ந்துள்ள கட்சியின் சின்னம் இயல்பாக, வழக்கம்போல வந்து போகும். சான்றாக, சன் தொலைக்காட்சியின் முத்திரைக் காட்சியில் சூரியன் சின்னமும், ஜெயா தொலைக்காட்சியின் முத்திரைக் காட்சியில் இரட்டை இலைச் சின்னமும் இடம் பெறுவது நாம் அறிந்ததே. எனவே, இத்தகைய தொலைக்காட்சிகளில் கட்சிச் சின்னங்களுக்கென்று தனி விளம்பரங்கள் அவசியமில்லை. மேலும், இத்தகைய ஊடகங்களில் மாற்றுக் கருத்துகள், செய்திகள் ஏன் இடம் பெறவில்லை என்ற கேள்வியை யாரும் எழுப்பிவிட முடியாது. ‘எங்க வீட்டு அடுப்பில் எங்க வீட்டுக்கு மட்டும் சமையல்’ என்பதும் ஒரு வகை நியாயம்தானே! பொதிகை உள்ளிட்ட அரசுத் தொலைக் காட்சியும் ஆளும் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பது நாம் அறிந்ததே. 

தேர்தல் பரப்புரைகள் முடிந்து, வாக்களிக்கும் நாளன்றும் அதற்கு முன்பாகவும் சில தொலைக்காட்சிகள் செய்தித் தொகுப்பு வெளியிடுவதைக் கவனித்திருக்கலாம். கடந்த 5 ஆண்டுகளில் ஆளுங்கட்சி செய்த அவலங்களை செய்தித் தொகுப்பாக எதிர்க்கட்சி தொலைக்காட்சிகள் வெளியிடும். கடந்த 5 ஆண்டுகளில் ஆளுங்கட்சி செய்த சாதனைகளை செய்தித் தொகுப்பாக ஆளுங்கட்சி ஆதரவுத் தொலைக்காட்சிகள் வெளியிடும். அவை செய்தித் தொகுப்பு என்ற பெயரில் வெளியிடப்படும் பரப்புரை அன்றி வேறு என்ன? மு. கருணாநிதி அ.தி.மு.க. அரசால் கைது செய்யப்பட்ட காட்சியை முந்தைய தேர்தல்களில் சன் தொலைக்காட்சி இத்தகைய செய்தித் தொகுப்புகளின்போது இடைவிடாமல் ஒளிபரப்பியதை யார் மறக்க முடியும்? இது ஒரு வகையில் எதிர்மறை விளம்பரம்தானே! 

தப்பித் தவறி, எந்த அரசியல் கட்சியையும் சாராமல் சில ஊடகங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டால், அவை ஆழ்ந்த நோக்கப்பட வேண்டும். இத்தயை ஊடகங்களுக்கு ‘நடுநிலை’ முத்திரை குத்தப்படுவது உண்டு. இது எந்த வகை நடுநிலை என்பது கவனிக்கப்பட வேண்டும். ஏனென்றால், ஒரு ‘நடுநிலை’ பத்திரிகை பல்வேறு அரசியல் கட்சிகள் பற்றிய செய்திகளுக்கு எவ்வளவு இடம் வழங்குகிறது, எந்தப் பக்கத்தில் வழங்குகிறது, யாருடைய செய்திகளைத் தவிர்க்கிறது என்பது உள்ளிட்ட பல காரணிகள் ஒப்பீட்டுப் பார்க்க வேண்டும். அந்த ஒப்பீடுதான் அதன் ‘நடுநிலை’யைத் தீர்மானிக்கும். ஓர் அரசியல் கட்சித் தலைவர் தேர்தல் மேடையில் பேசும்போது அவர் முகத்தை மட்டும் படம்பிடித்து ‘Close-up’ காட்சியாகக் காட்டுவதற்கும், அதே தலைவர் பேசும்போது ‘Long shot’ல் அவரையும் அவருக்கு முன்னால் திரண்டிருக்கின்ற கூட்டத்தைக் காட்டுவதற்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது. பிந்தைய காட்சியில் அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கைச் சுட்டிக் காட்டும் ஒரு விளம்பரம் இருப்பது கவனிக்கத்தக்கது. அதேபோல, ‘நடுநிலை’யான தொலைக்காட்சி பல்வேறு அரசியல் கட்சிகள் பற்றிய செய்திகளுக்கு எத்தனை நொடிகள் வழங்குகிறது, எந்த நேரத்தில் வழங்குகிறது, எந்தக் கட்சியைத் தவிர்க்கிறது என்பவை கவனிக்கத் தக்கன. 

சுவரெழுத்து, சுவரொட்டி, ஒலிபெருக்கி வழியாகச் செய்யப்படும் மலிவான விளம்பரங்களைத் தடைசெய்யும் தேர்தல் ஆணையத்தால், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகும் செய்தித்தோல் போர்த்திய விளம்பரங்களை என்ன செய்துவிட முடியும்? இந்தப் போக்கில் பாதிக்கப்படுவது ஊடக ஆதரவு பெறாத சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள். 

தேர்தல் நடைமுறைகள் தொடங்கியதும் கருத்துக் கணிப்புகள் வெளியிடுவதையும் தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. ஆனால், இத்தகைய வியாபாரச் செய்திகள், கட்டுரைகள், செய்தித்தொகுப்புகள் வழியாக, மறைமுகமாக கருத்துக் கணிப்புகள் வெளியிடுவதைக் காண்கிறோம். இத்தகையச் செய்திச் சேகரிப்பிற்கு இளம் பத்திரிகையாளர்கள் மற்றும் திறமையான ஊடகக் கலைஞர்கள் பயன்படுத்தப்படுவது வேதனைக்கு உரியது. 

இப்பிரச்சனையைச் சரிசெய்ய அரசின் சட்ட நடைமுறைகள் என்ற ஒற்றை அணுகுமுறை மட்டும் போதாது. சட்ட அணுகுமுறைகளோடு இணைந்து வாக்காளர்களிடையே ஏற்படுத்தப்படும் தற்காலிக விழிப்புணர்வும், தொலைநோக்குப் பார்வையிலான ஊடக் கல்வியும், தொடர்ச்சியான விவாதங்களும் மிக அவசியம். இதனால் ஏற்படுத்தப்படும் அழுத்தம் செய்திகளின் சாயத்தை வெளுத்துக் காட்டுவது மட்டுமின்றி, ஊடகங்களின் அகக் கட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்கும். இத்தகைய அழுத்தம் எதிர்காலத்தில் ஏற்படாத பட்சத்தில், மக்களாட்சியின் நான்காவது தூண் உலுத்துப்போய்விடும். 

பத்திரிகை கவுன்சில் குறித்த அறிக்கையை வாசிக்க.....

http://presscouncil.nic.in/Final%20report%20on%20Paid%20News.pdf

- மௌலியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)