“பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும்” என்றொரு பழமொழி உண்டு. இந்தப் பழமொழி போலாகி விட்டது தமிழ்பேசும் நம் மக்களின் வாழ்க்கை. ஈழத் தமிழர்கள் மீது உலக வரலாற்றிலேயே இணை காண முடியாத இன அழிப்புப் போரை இலங்கை அரசுப் படைகள் நடத்தி முடித்துள்ளன. போர் முடிந்த பின் இன ஒடுக்குமுறைகள் குறையுமென்று ஆரூடங்கள் சொல்லப்பட்டன. ஆரூடங்கள் பொய்த்துப் போனது மட்டுமல்ல, சிங்கள இனவெறி தமிழக மீனவர்களையும் தீவிரமாகத் தாக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த சனவரி மாதம் 12-ஆம் தேதி இலங்கைக் கடற்படையினர் புதுக்கோட்டை மீனவர் வீர பாண்டியனைக் கண்மண் தெரியாத் துப்பாக்கிச் சூட்டில் கொன்றனர். இதற்கு எதிராக மீனவர்கள் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்க, சனவரி 22 - ஆம் தேதி வேதாரண்யம் மீனவர் ஜெயக் குமாரை மிகக் கொடூரமான முறையில் இலங்கைக் கடற்படை கொன்றுள்ளது. ஜெயக்குமார் தன் தம்பியுடனும், மற்றொருவருடனும் கடலுக்குச் சென்றிருக்கின்றார். அவர்கள் சேது சமுத்திரத் திட்டப்பணி நடந்த இடமருகே மீன் பிடித்துக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படை மீனவர்களின் படகை சுற்றி வளைத்து மூன்று மீனவர்களையும் கடலில் குதித்து நீந்துமாறு மிரட்டியிருக்கின்றது. ஜெயக் குமாரைத் தவிர மற்ற இருவர் கடலில் குதித்து விட்டனர். சுனாமியின்போது ஜெயக்குமாரின் ஒரு கை பாதிக்கப்பட்டதால் அவரால் கடலில் குதிக்க இயலவில்லை. உடனே இலங்கைக் கடற்படை ஜெயக்குமார் கழுத்தில் சுறுக்குக் கயிறு கட்டி கடலில் தள்ளி, வட்டமிட்டு இழுத்துச் சென்று, ஜெயக்குமார் இறந்த பின் விட்டுச் சென்றுள்ளனர். கண்மண் தெரியாத் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர்களைக் கொன்று கொண்டிருந்த இலங்கை கடற்படை இப்படி மிகக் கொடூரமான முறையில் துன்புறுத்தி ஜெயக்குமாரைக் கொன்றுள்ளது. இந்நிகழ்வு இலங்கைக் கடற்படை எந்த அளவு இன வெறி கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

இப்படி மீனவர்கள் படுகொலை செய்யப் பட்ட நேரத்தில்தான் இந்தியாவின் பாதுகாப்புத் துறைச் செயலர் பிரதீப் குமாரும், சிறிலங்க பாது காப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபக்சவும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தனர். பேச்சு வார்த்தை எதற்கென்றால் இந்தியாவிற்கும் (அதாவது தமிழ்நாட்டிற்கும்) இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பை இணைந்து கண்காணிப்பதற்காக ஆகும். ஒருவேளை தமிழகக் கடற்பகுதியை இலங்கைக் கடற்படை காவல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளதோ என்னமோ தெரியவில்லை.

2009-ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன, “சிறிலங்காவின் வடகடல் வலயத்தில் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் தூரம் எமது நாட்டுக்குச் சொந்தமானதாகும். இதில் பருத்தித் துறையிலிருந்து கிழக்காக 16 கடல் மைலும், காங்கேசன் துறையிலிருந்து 13 கடல் மைலும், திருகோணமலையிலிருந்து கிழக்காக 122 கடல் மைலும், முல்லைத் தீவிலிருந்து கிழக்காக 28 கடல் மைலும் உள்ளடங்குகின்றது. இவ்வடிப்படையில் இக்கடல் வலயத்தை இலங்கைக் கடற்படையினர் பாதுகாத்து வருகின்றனர்” என்று பேசியுள்ளார். அவருடைய பேச்சு உண்மையென்று கொண்டால் நம் அலைவாய்க்கரை வரை இலங்கைக் கடற்படை பாதுகாப்பிற்கு (அட்டூழியத்திற்கு) உட்பட்டது. நமது மீனவர்கள் கடலுக்குள் செல்வதே கடல் எல்லையைத் தாண்டி விடுவதாகும். அப்புறம் மீனவர்ப் படு கொலைக்கு, “அதிக பணத்துக்கு ஆசைப்படுகிற மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்” என்று கருணாநிதியும், “எல்லை தாண்டும் மீனவர்களைக் காப்பாற்ற முடியாது” என்று எஸ்.எம்.கிருஷ்ணாவும் சாக்குப் போக்குச் சொல்ல வேண்டிய அவசியம் கூட ஏதுமில்லை.

கச்சத் தீவைத் தாரை வார்த்தது முதல் பேச்சு மூச்சு இல்லாமல் தமிழகக் கடல் எல்லையை இந்திய அரசின் ஒப்புதலோடு இலங்கை விழுங்கிக் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் கடந்த முப்பது ஆண்டுகளாக 539 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கொன்றுள்ளது; 2000க்கு மேற்பட்ட மீனவர்களைப் படுகாயப்படுத்தி யுள்ளது. தமிழக மீனவர்களின் மீன்பிடி கருவி களை நாசப்படுத்தியுள்ளது. இந்த அட்டூழியங் களையெல்லாம் தமிழக அரசோ, இந்திய அரசோ கண்டிப்பது இல்லை; கேள்வி கேட்பதும்கூட இல்லை. தமிழகக் காவல் துறை ஒரு வழக்கு பதிவு செய்யும் அவ்வளவுதான். அப்புறம் நிலைமைக் கேற்ப தமிழக அரசு நிவாரணம் வழங்கும்.

முன்பெல்லாம் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டால் வழக்கமாகப் பின்வரும் நிகழ்ச்சிகள்தாம் நடக்கும். தமிழக அரசு இந்திய நடுவண் அரசிற்கு ஒரு கடிதம் எழுதும். இந்திய நடுவண் அரசு இலங்கை அரசிற்கு ஒரு கடிதம் எழுதும். இலங்கை அரசு ‘தங்கள் கடற் படை ஏதும் செய்யவில்லை; விடுதலைப் புலிகள் தான் தமிழக மீனவர்களைத் தாக்கியுள்ளனர்’ என்று கூறும். அதனை அப்படியே இந்திய நடுவண் அரசு ஏற்றுக் கொள்ளும்.

இந்த முறையும் இந்நிகழ்ச்சிகள்தாம் நடந்தன. மீனவர்கள் கொல்லப்பட்ட உடனேயே இந்தியாவுக் கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் “தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதற்கும் இலங்கைக் கடற் படைக்கும் தொடர்பேதுமில்லை. இதில் மூன்றாம் தரப்பு சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது” என்று கூறிவிட்டார். பிறகு கலைஞர் ஒரு கடிதம் எழுதினார்; நிவாரணம் அளித்தார். ஏதற்கோ தமிழகம் வந்த பிரணாப் முகர்ஜி தமிழக மீனவர்கள் கொல்லப் பட்டதுபற்றிச் செய்தியாளர்கள் கேட்டபோது மெல்லிய அதிர்ச்சியுடன், “தவறு செய்தால் கைது செய்ய வேண்டுமே தவிர, தண்டிக்கக் கூடாது” என்று கூறினார். தமிழக மீனவர்கள் என்ன தவறு செய்தனர்?

அப்புறம் ஸ்பெக்டரம் ஊழல், மத்திய அமைச் சரவைப் பிரச்சினைகள், தமிழகத் தேர்தல் கூட்டணிப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் பேசக் கலைஞர் டெல்லிக்குச் சென்றார். அப்போது எஸ்.எம்.கிருஷ்ணா, “தமிழக மீனவர்கள் தாக்கப் படுவது நிறுத்தப்படாவிட்டால், இலங்கை - இந்திய உறவு பாதிக்கப்படும்” என்று சொல்லி வைத்தார். தமிழக மீனவர் தாக்குதல் குறித்துப் பேச இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் இலங்கை செல்வார் என்றும் தெரிவிக்கப் பட்டது. நிருபமா ராவ் இலங்கை சென்று, பேச்சு வார்த்தை நடத்தி, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெய்ரிஸ்-உடன் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டார். “(தமிழக மீனவர் தாக்கப்பட்ட) இந்த சம்பவத்தின் பின்னணி குறித்த விவரங்களை சிறிலங்க அரசு கண்டுபிடிக்கும். இந்தப் புலனாய்வில் இந்தியத் தரப்பும் தங்களுக்குக் கிடைக்கும் விவரங்களை சிறிலங்க அதிகாரி களுக்கு அளிக்க வேண்டும். எந்தச் சுழலிலும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது என்பதை நியாயப்படுத்த முடியாது” என்று கூட்டறிக்கை கூறுகின்றது. தமிழக மீனவர்களைத் தாக்கிய “மூன்றாம் தரப்பை” இலங்கை அரசு கண்டுபிடிக்கப் போகிறதாம். இந்திய அரசு அதற்கு உதவப் போகின்றதாம். இந்தியக் கடற்பகுதியில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கொன்றுள்ளது. இலங்கை அரசோ அதை ஒத்துக் கொள்ளவில்லை. முன்பு புலிகள் மீது போட்ட பலியை இப்போது பெயரேதும் இல்லாத ‘மூன்றாம் தரப்பு’ மீது இலங்கை அரசு சுமத்துகிறது. இதை இலங்கை அரசே புலனாய்வும் செய்கிறது.

ஆங்கில நாளேடுகள் முன்பெல்லாம் ‘தமிழக மீனவர்கள் புலிகளுக்கு உதவுகின்றனர். அதனால் கொல்லப்படுகின்றனர்’ என்று எழுதிவிட்டுப் போய்விடும். இப்போதும்கூட இலங்கைக் கடற் படை தான் தங்களைக் கொன்றது என்று தமிழக மீனவர்கள் கூறியதுகூட ஆங்கில நாளேடுகள் செய்திகளில் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக ‘மூன்றாம் தரப்பு’ யார் என்ற புலனாய்வில் ஆங்கில நாளேடுகள் இறங்கிவிட்டன. “இந்திய - இலங்கை நல்லுறவைச் சீர்குலைக்க புலிகள் சதி செய்கின்றனர்” என்ற அளவுக்கு டைம்ஸ் ஆப் இண்டியா வாசகர் களின் கற்பனை சென்றுவிட்டது. தமிழக மீனவர்கள் கூறுவது யார் காதிலேயும் விழ மாட்டேன் என்கிறது. ஏன் தமிழக முதல்வர்கூட மீனவர் குரலைக் காதில் வாங்கிக் கொண்டு, இலங்கைக்கு ஒரு கண்டனம் விடுக்கவில்லை. அப்புறம் பிறரிடம் எதிர்பார்ப்பதில் பயனொன்றும் இல்லை.

வீரகேசரி பிப்ரவரி 3-ஆம் தேதி ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர “தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பில் எஸ்.எம்.கிருஷ்ணா விடுத்த கண்டனம், நிருபமாராவ் இலங்கை விஜயம் எல்லாமே தமிழகத் தேர்தலுக்கான நாடகம் அவ்வளவுதான். இந்திய - இலங்கை உறவை யாராலும் அசைக்க முடியாது” என்று கூறியுள்ளார். மேலும் “தமிழக மீனவர் தாக்குதல், கொலை என்று சொல்லுவதெல்லாம் பொய். புலி ஆதரவாளர்களின் பொய்ப் பிரசாரம்” என்றும் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதே பொய் என்று கூறுமளவுக்கு இனவெறி தலைக்கேறியுள்ளது. இங்கே உள்ள தேசத்துரோகிகள் அந்த இனவெறிக் குரலுக்கும் கூட “ஆம்! ஆம்!” என்று தலையாட்டுவார்கள் போலிருக்கிறது. 1986-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முப்பத்தொரு ஈழ மீனவர்கள் கொல்லப்பட்ட போது நாவலியூர் நடேசன் எழுதிய ‘அஞ்சலி’ கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன.

புயலோடு போராடி அலையோடு விளையாடி

அயர்வின்றிக் குடும்பத்தின் பசி தணித்த சோதரரே!

கடற்தாயின் மடிமீது களித்திருந்த உங்களது

உடல்மீது வெறியர்கள் உழுதனரே குண்டுகளால்!

குற்றமொன்றும் இல்லை தமிழரென்ற குற்றந்தான்

முற்று துறந்த ‘தர்மம்’ இதுவென்று சொல்லுகிறார்!

சூதறியா இதயமதைச் சன்னங்கள் கிழிக்கையிலே

வேதனையால் என்ன புகன்றீரோ; நினைத்தீரோ!

நீலக்கடல் அன்று செங்கடலானதே!

கோலத் தமிழன்னை ஓலம் அதிர்ந்ததே!

Pin It