ரஷ்யாவின் படை ஜெர்மனியை முற்றுகையிட்டபோது பெர்லின் நகரில் வசித்த பெண்ணொருத்தி தானும், தன்னைச்சுற்றி இருந்தவர்களும் எப்படி வேட்டையாடப்பட்டோம், ஒரு போர் தங்களை எவ்வாறு விலங்குகளுக்கும் கீழான வாழ்க்கைக்கு இழுத்துச் சென்றது என்பது பற்றி சுயவிவரணக் குறிப்புகளே ‘அனோனிமா’ புத்தகம் (தமிழில் முகம் மறைத்தவள் - தேவா).

உலகின் சிறந்த படை என நாம் எண்ணும் ரஷ்யாவின் செம்படை, கம்யூனியசத்தால் உந்தப்பட்டு அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட படை என்று கூறப்படும் அந்தப் படையும், எவ்வாறு போர்ப் பிரதேசங்களில் நடந்துகொண்டது என்பதை இப்புத்தகம் சொல்கிறது.

குறிப்புகள் ஜெர்மனியப்படை தோல்வி முகத்துவாரத்தில் நிற்கும் தருணத்தில் இருந்து தொடங்குகிறது. மிகக் கம்பீர பிம்பம் அளித்துக்கொண்டிருந்த ஜெர்மனிய வீரர்கள் சோர்ந்த முகத்துடன் மனம் முழுக்க கவலைகளுடன் சாலையில் கடந்து செல்கின்றனர்.

தொடரும் நாட்களில் வெடிகுண்டு சத்தங்களும், பீரங்கி குண்டுகளும், விமானத்தாக்குதல்களும் அவர்களை சுயபிரக்ஞை அற்றவர்களாக மாற்றுகின்றன. இறப்பும், படுகாயங்களும் சாதாரணப் பிரச்சினைகளாகவும், உணவுத்தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாகவும் அவர்களைக் கவ்வுகிறது.

மெல்ல அனோனிமா வசிக்கும் பகுதி ரஷ்யப்படைகளிடம் சென்றடைகிறது. தோல்வி அவர்களைப் பேசவும் மதிப்பற்ற மனிதர்களாக மாற்றியிருக்கிறது. பாலியல் வன்புணர்வுகளும், சூறையாடுதலும், படுகொலைகளும் சாதாரணமாகின்றன. வெற்றி கொண்ட ரஷ்யப்படை விரும்பிய பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தவும்,
விரும்பிய வீடுகளில் இருந்து வேண்டிய பொருட்களை திருடிச் செல்லவும் உரிமை பெற்றவர்கள் ஆகின்றனர்.

உலகின் மிக உயர்ந்த இனமாக தங்களைக் காட்டிக் கொண்ட நாஜி ஆண்கள் பற்றி விவரணைகளாக, நாஜி வீரர்கள் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மவுனமாக செல்வதில் இருந்து ஆரம்பிக்கிறது.

அடுத்து பெர்லின் விழுந்த அன்று இரவு கண்முன்னால் ரஷ்ய வீரர்களிடம் சிக்கிக்கொண்ட தன் மனைவிக்கு உதவ முடியாமல் பெண்ணான‌ அனோனிமாவிடம் வந்து அழுது புலம்பும் “பேக்ரி மாஸ்டராக” மற்றொரு ஆணைப் பற்றியக் குறிப்பு.

தொடரும் நாட்களில் நிலவறையில் தங்கியிருக்கும் குடும்பங்களிடையே ரஷ்ய வீரர்கள் “பெண்களைத் தேடும்போது உடன்படாத பெண்கள் முரண்டு பிடிக்கையில் “கூப்பிட்டால் போக வேண்டியதுதானே? இவர்களால் வீணாக எல்லோருக்கும் பிரச்சினை” எனக் கூட்டத்திலிருக்கும் ஒரு ஜெர்மனிய ஆண் கூறுகின்றான். ஜெர்மனிய மக்கள் எல்லோருமே எதுவும் செய்ய முடியாதவர்களாக ஆகின்றனர்.

அனோனிமா தான் தொடர்ந்து பலபேரால் பலமுறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதையும், தனக்கு ஏற்பட்டுள்ள உணவுத்தட்டுப்பாட்டை போக்கவும் வழிதேடுகின்றாள். ஒரு கட்டத்தில் ராணுவ அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதால் கீழ்மட்டத்தில் உள்ள ராணுவ வீரர்களின் கூட்டு பாலியல் வன்புணர்வுகளிலிருந்து தப்பிக்கலாம் என முடிவெடுக்கிறாள். அதனால் அவள் மற்றும் அவளைச் சார்ந்தவர்களது உணவுத்தட்டுப்பாடும் ஓரளவு நீங்குகிறது.

அப்போதும் அவள் தேர்ந்தெடுத்துள்ள ரஷ்ய ராணுவ அதிகாரி (அனோனிமாவின் பாஷையில் அவளது காவல் ஓநாய்) அவளது அறையில் இல்லாதபோது அவள் யாராலும் கூட்டு பலத்காரத்திற்கு உட்படுத்தப்படலாம் என்ற நிலை, எனவே தொடர்பு ராணுவ அதிகாரி இல்லாத நேரத்தில் பதட்டமும், பயமும் கொள்கிறாள். அந்த ராணுவ அதிகாரி அவளைவிட்டு வேறு இடத்திற்கு மாறுதலாகிச் செல்லும்போது, அடுத்த ராணுவ அதிகாரியை அவள் தேட வேண்டிய நிலை.

அனோனிமாவின் உலகம் சுற்றிய அனுபவ அறிவும், பன்மொழிப்புலமையும், அசியல் அறிவும் அவளைக் காப்பாற்ற முடியவில்லை. ஏதோவொரு ரஷ்ய ராணுவத்தானுடன்தான் இரவை கடத்த வேண்டிய நிலை. அவளது இருப்பிடம்
ரஷ்ய ராணுவத்தாரும், அவர்களின் சப்பாத்துகளில் ஒட்டிய குதிரை சாண‌மும், மதுப்புட்டிகளும், பாலியலும் நிறைந்த விடுதியைப்போல் மாறுகிறது. அவளுக்கு ஓரளவு உணவுத்தட்டுப்பாடு நீங்குகிறது.

ஒரு கட்டத்தில் தான் ஒரு பாலியல் தொழிலாளியைப்போல் மாறிவிட்டதையும், தனது மனமும், உடலும் தன்னிடம் அன்னியப்பட்டுவிட்டதை அனோனிமா உணர்கிறாள். அவள் மட்டுமல்லாமல் எல்லாப் பெண்களும் அதை எதிர்கெள்கின்றனர். பாலியல் வல்லுறவு  என்பது சாதாரணம் என்ற நிலையில் எத்தனை முறை, எத்தனை பேரால் என்பது மட்டுமே தகவல்களாக மாறுகின்றன.

சிலர் உணவுத்தேவைக்காகவும், ஓரளவு பாதுகாப்புக்காகவும் தாங்களே அனோனிமா போல் உயரதிகாரிகளுடன் பாலியல் தொடர்பு ஏற்படுத்திக்கொள்கின்றனர். இந்த காலங்களில் தங்களுடைய பேச்சும், செயலும் மிகவும் கீழ்த்தரமாக மாறியிருப்பதை அனோனிமா உணர்கிறாள். பின்பு போர் வீரர்கள் அங்கிருந்து சென்றபின்பு தங்களுக்கு நடந்தவற்றை தாங்களே நம்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு அந்த நிலையிலிருந்தும் வாழ்விலிருந்தும் வெளிவர எத்தனிக்கின்றனர்.

இந்தப் புத்தகத்தை படிக்கும்போது இடையறாது மனம் ஈழத்தை நோக்கிச் செல்வதை தடுக்க முடியவில்லை. நம் சமகாலத்தில் ஈழத்தில் போர் திணிக்கப்பட்டதையும், போர் திணிக்கப்பட்ட இந்த ஆண்டுகளில் மக்கள் உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்ததையும், கடைசியாக உறவினர்களை இழந்தும், அங்கவீனப்பட்டும், சிங்கள ராணுவத்திடமே
உணவுக்கு கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டதையும், போர் முடிந்த பின்பும் சர்வதேசத்தின் தொண்டு நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டு, அந்த மக்கள் அவசரநிலை பிரகடனச் சட்டத்தின் கீழ் ராணுவத்தினரிடையே வாழ்ந்து வருவது என சிந்தனை ஓட்டத்தில் மனதில் கலவரம் மூள்கிறது.

அதுவும் ரஷ்ய செம்படை ஓரளவு விடுதலை விழிப்புணர்வு உந்தப்பட்டு சேர்ந்த படை. மேலும் படை வீரர்கள் இதுபோன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற‌ ஸ்டாலின் உத்தரவை ராணுவ வீரர்களின் பேச்சில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இருந்தும் ஜெர்மனியர்கள் ரஷ்யப்படை வீரர்களின் வேட்டைப்பொருளாய் மாற்றப்பட்டனர் என்பது புரிகிறது.

ஆனால் இலங்கை ராணுவமும், அரசாங்கமும் அந்த குறைந்த அளவு நியாயத்தையும் கொண்டிருக்கவில்லை. இவர்கள் இனத்துவேஷத்தால் சிறுபான்மை மக்களை ஒடுக்குவதில் காட்டுமிராண்டிகள். அதற்கு செம்மணி படுகொலைகள், வெள்ளைக் கொடியேந்தி சரணடைந்தவர்களை சுட்டுக்கொன்றது, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியது, இசைப்பிரியா போன்றவர்களை பலிகொண்டது என ஏராளமான உதாரணங்கள் உண்டு. மேலும் ரஷ்யப்படை அனோனிமா வசித்தப்பகுதி 1945-ல் மே 10லிருந்து மே 21 வரை மட்டுமே முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்குள்ளாகவே பெர்லின் மக்கள் வாழ்க்கை முழுவதும் தடம்புரண்டுவிட்டது.

ஆனால் ஈழத்தில் போர் நடந்த காலத்தின் நீளம், அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள அங்ககீனம், ஆண்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டது அல்லது விசாரணை முகாம் சித்திரவதையிலிருப்பது என ஆண்களே இல்லாத தேசமாக வன்னிப்பிரதேசம் மாற்றப்பட்டிருக்கினறது. இந்த மக்களுக்கு வெளியிலிருந்து வரும் உதவிகள் தடுக்கப்பட்டு சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. ஆயுதப் போராட்டம் முடிந்த பின்னரும் பத்திரிக்கையாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இலங்கையில் உயிர் வாழ முடியாத நிலை அல்லது சுதந்திரமாக செயல்பட முடியாத  நிலையே உள்ளது. சுயமாக சம்பாதிக்க முடியாமல், ஆண்களும் இல்லாமல், வெளி உலக உதவியும் பெற முடியாமல் அந்த மக்கள் அவசர காலச்சட்டத்துடன் வாழ்வது நம்மை திகிலடையச்செய்கிறது.

சமீபத்தில் இலங்கை சென்றுவந்துள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கயல்விழி, "அங்கே ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் அங்ககீனப்பட்டுள்ளார். பெண்களும், குழந்தைகளும் மட்டுமே உள்ளனர். அவர்களும் உதவிகள் இல்லாமல் மிக மோசமான நிலையில் உள்ளனர். பாலியல் வல்லுறவுகள் சாதாரணமாக நடக்கின்றன" என்று கூறுகின்றனர்.

மேலும் இரவு பத்து மணிக்கு மேல் பேருந்துக்காக காத்திருந்தபோது ஒவ்வொரு வீடுகளைத் தேடியும் இராணுவத்தினர் செல்கின்றனர். “இங்கே என்ன அண்ணா நடக்கிறது?” என்ற கயல்விழியின் கேள்விக்கு அருகிலிருப்பவர் சத்தமாகப் பேசாதே என்று கூறுவதிலிருந்து அங்கு நடக்கும் சம்பவங்களின் தீவிரம் நம்மை உறைய வைக்கிறது.

நாம் இங்கிருந்து கொண்டு வீரவேசமாக ஐந்தாம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்று முழங்கிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. அது அங்கு மக்களிடையே இருக்கும் இராணுவம் தொடர்ந்து அங்கேயே இருக்க வழிவகுக்கும். ஒரு வேளை தங்கள் மீது திணிக்கப்படும் அளவற்ற வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் பதிலாக ஆயுதப் போராட்டத்தை மீண்டும் ஈழத்தமிழர்கள் கையில் எடுத்தால் அது அவர்களது விருப்பம்.

இராணுவ பலத்தில் குறைவாக இருந்ததல்ல ஈழம் இந்நிலைக்கு போனதற்குக் காரணம், அவர்களின் போராட்ட நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் போனதுதான். எனவே, நாம் செய்ய வேண்டியது

1.      இலங்கை அரசின் இன அழிப்பையும், போர்க் குற்றங்களையும் வெளிக்கொண்டு வந்து அதற்கு உலகத்தின் ஜனநாயக சக்திகளிடம் நியாயம் கேட்பது.

2.      இத்தகைய கொடூரமான  குற்றங்களை தமிழர்களுக்குச் செய்த இலங்கை அரசிடமும், இரணுவத்திடமும்தான் இன்று ஈழத் தமிழ்மக்கள் கையளிக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மையை உலகுக்குப் புரிய வைத்து, இதற்கு "தனி ஈழமே" தீர்வென்பதை உலகை ஏற்ப வைப்பது.

3.      தமிழர் பகுதிகளில் இராணுவத்தையும், அவசர காலச்சட்டத்தையும் நீக்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கும் வகையில் போராடுவது.

4.      உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள அந்த மக்களுக்கு உதவிகள் சென்று சேரும் வண்ணம் இலங்கையைக் கட்டாயப்படுத்தும் போராட்டங்கள் செய்வது.

5.      ஈழத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் உதவிகள் செய்யும் அமைப்புகளுக்கும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குமிடையே நேரடித் தொடர்பு ஏற்படுத்துவது.. சீரமைப்புப் பணிகளை கண்காணிப்பது,

6.      பத்திரிக்கையாளர்களையும், மனித உரிமை அமைப்புகளையும் அந்த மக்களிடையே நெருங்கிப் பழகச் செய்வது.

இவையெல்லாவற்றையும் செய்வது அவ்வளவு சுலபமல்ல; இருந்தும் சர்வதேச ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராடி நாம் இதைச் செய்ய வேண்டும், இல்லையெனில் சமஉரிமை கேட்டுப் போராடிய அந்த மக்களுக்கு தரப்பட்ட அவல வாழ்வுக்கு நம்மையும் சேர்த்துதான் சரித்திரம் பழிக்கும்.

 

Pin It