தமிழ் மொழியிலமைந்த சில நாவல்கள் சமூகத்திலுள்ள நடைமுறை நிகழ்வுகளையும் சிக்கல்களையும் பதிவுசெய்தும் கேள்விக்குள்ளாக்கியும் செல்கின்றன. இன்னும் சில, மரபுசார்ந்த மதிப்பீடுகளைக் கட்டுடைக் கின்றன; மனித வாழ்விலுள்ள பல சிக்கல்களைப் பல பரிமாணங்கள் வாயிலாக வெளிப்படுத்துகின்றன. இந்த அடிப்படையில் அமைந்தவையே சு. தமிழ்ச்செல்வியின் ஆக்கங்களான மாணிக்கம் (2002), அளம் (2002), கீதாரி (2003), கற்றாழை (2005), ஆறுகாட்டுத்துறை (2006), கண்ணகி (2008) ஆகியன. பெண், வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் இழப்புகளையும் இந்நாவல்கள் அனைத்தும் பதிவு செய்துள்ளன.

மேற்கண்ட ஆறு நாவல்களிலும் அமைந்த மைய பெண் கதா பாத்திரங்கள் உழைக்கும் வர்க்கத்தினர். அன்றாடம் உழைத்துப் பெறும் கூலியே அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் உணவாக மாறுகிறது. மழையிலும் வெயிலிலும் சளைக்காமல், காலநேரம் பார்க்காமல் வயல்காட்டில் உழைக்கும்பெண், மீன்விற்றுப் பிழைக்கும் பெண், உப்பளத்தில் உழைத்து உப்பு விற்கும் பெண், ஆடுகளை மேய்த்துக் கிடைகட்டி அதன்மூலம் கூலிபெறும் பெண் என்று பல்வேறு சூழல்களிலும் பல்வேறு நிலைகளிலும் உழைக்கும் பெண்களையே நாவல்கள் கதை மாந்தர்களாகக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறை என்பது நீண்டகால வரலாறாக அமைந்துள்ளது. நல்ல மகள், மனைவி, மருமகள், தாய் ஆகியவற்றிற் கான கட்டாக்க இலக்கணத்திலிருந்து ஒருபெண் சுயசிந்தனையுடன் வெளிவர முயலும்போது பல சிக்கல்களைச் சமூகத்தில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மனித வடிவத்தில் இருப்போரின் ஏளனப் பார்வைக்கும் ஏச்சுக்கும் பயந்து, சுயத்தை இழந்து, மரபு வழிப்பட்ட ஆண்சார்பு மதிப்பீடுகளில் ஒன்றி, அதையே பின்வரும் தலைமுறையினருக்குப் (பெண்களுக்கு) பயிற்றுவிக்கும் பயிற்றுநராக மாறி ஆணாதிக்கக் கருத்தை ஒத்திசைப்பவர்களாக மாறிவிடுகின்றனர். சமூகத்தின் போலி கௌரவத்திற்கும் மிரட்டலுக்கும் அஞ்சாமல்; கற்பனையில் வாழா மல் சுயசிந்தனையின்வழித் தனக்கெதிரான கட்டாக்கங்களை உடைத்துக்கொண்டு தன் உழைப்பினை நம்பி வெளிவரும் பெண்களும் உண்டு. இவ்வாறு இருவிதமான நிலைகளும் இந்நாவல் களில் காணப்படுகின்றன. அனுசரித்துப் போதல் என்பதற்கு, முதல் நாவலான மாணிக்கத்தில் இடம்பெறும் செல்லாயியும் அளம் சுந்தராம்பாளும் கற்றாழை பாக்கியமும் சிறந்த எடுத்துக்காட்டுகளா வர். எதிர்ச் செயல்பாடுடையவர்களாகக் கற்றாழை மணிமேகலை, அளம் ராசாம்பாள், ஆறுகாட்டுத்துறை சமுத்திரவல்லி, கீதாரி கரிச்சா ஆகியோரைக் குறிப்பிட முடியும். கற்பனை மதிப்பீடு களைக் கட்டுடைத்து வெளிவரும் பெண்ணாக, கண்ணகி நாவலில் வரும் கண்ணகி தோன்றுகிறாள்.

சு.தமிழ்ச்செல்வியின் அனைத்து நாவல்களிலும் பொதுமைப் பண்பாக அமைந்திருப்பது திருமணமான பெண்களின் துயரங்களே. பெற்றோர் செய்துவைக்கும் திருமணமானாலும் சரி, தானே தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கையானாலும் சரி (சமுத்திரவல்லி, கண்ணகி போல) பல பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக் கிறது. குடிப்பழக்கம்; சீட்டாடுதல்; பிற பெண்களோடு தொடர்பு; மனைவியை விடுத்து வேறு திருமணம் செய்து கொள்ளுதல்; சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டு ஓடிவிடுதல்; குடும்பத்தைப் பற்றிய எண்ணமின்றி அலட்சியப்படுத்துதல்; வேலை செய்யாம லிருந்து கொண்டு உண்ணுதல்; தான் தவறுசெய்து கொண்டே தன் மனைவி மீது சந்தேகப்படல் போன்ற கணவனின் செயல்களையும் மாமியார், நாத்தி, மாமனார் செய்யும் இடர்ப்பாடுகளையும் அனுபவித்துப் பல நிலைகளில் குடும்பத்தைத் தாங்கிப்பிடிக்கும் சூழல் பெண்ணின் கடமையாக்கப்பட்டுள்ளது.

கணவன் எப்படியிருந்தாலும் அனுசரித்துப்போக வேண்டும் என்ற நிலையே இறுதிவரை செல்லாயியின் நிலையாக அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்நிலைமாறி அடுத்தடுத்துவரும் நாவல்களில் வளர்ச்சி நிலையடைந்து, கணவன் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்டல், கணவனை விட்டுப் பிரிந்து வந்து தன்னம்பிக்கையோடு தனியே வாழ்தல், தன் விருப்பத்திற்கேற்பத் துணையைத் தேர்ந்தெடுத்தல், பல பெண்களை மணக்கும் கணவனைப் பிரிந்து தன்னுடன் மட்டும் வாழ விரும்புபவனிடம் சென்று வாழ்தல் என்று மாற்றங்கள் காணப்படு கின்றமை நோக்கத்தக்கது.

‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்ற நினைவில் பெண்கள் வாழ்வதை இந்நாவல்களிலும் காணமுடிகின்றது. சான்றாக ‘மாணிக் கம்’ நாவலில் செல்லாயியை மணந்த பின்னரும் சக்குபாயை மணந்து கொள்ள முயல்கிறான் மாணிக்கம். ஒரு கட்டத்தில் அது நிறைவேறா மலே சக்குபாய் இறந்துபோகின்றாள். எனவே, தன் மனைவியையும் சிறு குழந்தைகளையும் பாதுகாப்பின்றி, எந்த வசதியுமின்றி விட்டுவிட்டு ஓடி விடுகின்றான். ஓராண்டு காலம் முடிந்து திரும்பி வரும்பொழுது, தன் பெற்றோரின் புரட்டு வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு, மனைவியின் நடத்தைமீது சந்தேகம் கொண்டு சுயசிந்தனையின்றி அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறான். அந்தச் சூழலிலும் தன் கணவன் மீது கோபப்படாமல் ‘நேத்து தெய்வத்த பாத்த மேரி யாம்புருசன பாத்தனெயம்மா... யாந்தெய்வமும் எனக்கு எமனாயி வெரட்டிச் சேயம்மா...’ என்று கணவனைத் தெய்வமாகக் கூறி, தன் கணவனி டம் தன்னைத் தவறாகக் கூறியவர்களைத் திட்டி, சாபமிடுகிறாள் (ப. 191). பல துன்பங்களுக்குப் பிறகு கடைவைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் எனக்கூறி நிலத்தை விற்றுப் பணம் எடுத்துச் சீட்டாடச் சென்றுவிடுகின்றான். சீட்டாடும் இடத்திற்கே வந்து தன்னை அழைத்த மனைவியின் மீது கோபங்கொண்டு முடியைப் பிடித்தி ழுத்து அடித்து, எட்டி உதைத்து விரட்டுகிறான். அப்போதும் அவனை ஏசாமல் அவனது கூட்டாளிகளுக்கே சாபமிடுகிறாள் (ப. 236).

சீட்டாடும் இடத்திற்கே தன் மனைவி தேடி வந்ததால், அவள் சொல்லித் தான் ஏன் கேட்க வேண்டும் என்ற உயர் தன்முனைப் பின் (ளுரயீநச நுபடி) காரணமாகத் தன்னிடம் இருந்த எல்லா நிலங் களையும் விற்று, நான்கைந்து தினங்கள் வீட்டுப்பக்கமே திரும்பா மல் சீட்டாடுகிறான். இந்நிகழ்வு புதுமைப்பித்தன் எழுதிய `பால்வண்ணம் பிள்ளை’யின் செயல்பாட்டை நினைவூட்டுகிறது. மனைவி, வாய்தவறி நீ என்று கூறியதனால் தகராறு ஏற்பட்டு அவளை அடித்து வீட்டுக்குள் போட்டுக் குடிசைக்கே தீவைத்து விடுகிறான். இதையெல்லாம் மீறி எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு வாழ்ந்த பிறகும், முதுமையடைந்த காலத்திலும் ஆண் எனும் தன்முனைப்பு அவனிடம் வெளிப்படுகிறது. இதுபோலவே கற்றாழை பாக்கியம், அளம் சுந்தராம்பாள் ஆகியோரும் கணவன் துரோகம் செய்தாலும் அவனை மீறாமல் வாழவேண்டும் என நினைக்கின்றனர்.

ஆறுகாட்டுத்துறை நாவலில் இடம்பெறும் சாமுவேல், தன்னை நாடிவந்த சமுத்திரவல்லியின் மீது காட்டும் அலட்சியம், அவளது அன்பினைப் புரிந்துகொள்ளாமல் போலி கௌரவத்திற் காகச் செயல்படும் விதம், அவளாகவே வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்த செயலை எப்போதும் குத்திக் காட்டிக் கொண்டே யிருத்தல், பெண் குழந்தையைப் பெற்றுத்தரக்கூடாது என மிரட்டுதல்; கட்டளையிடுதல், பெண் குழந்தையைப் பெற்றதால் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிடுதல் என அனைத்தும் ஆண் என்ற ஆணவத்தின் வெளிப்பாடாக அமைகிறது.

சமுத்திரவல்லி அவளது தந்தையை மீறி இவனைத் திருமணம் செய்து கொண்டாள் என்பதற்காகவே, தனக்கு ஆண் குழந்தைதான் பிறக்கவேண்டுமென்கிறான். ஆணாகப் பிறந்தால்தான் தன்னைப் போன்றிருக்கும் என்றும் பெண்ணாகப் பிறந்தால், தாயைப் போலவே குணம் கொண்டிருக்கும் அதனால், எதிர்காலத்தில் தான் அவமானப்பட வேண்டிவரும் என்பதை

‘நாட்டாரு மாதிரி நானும் மானங்கெட்டு நிக்கனமுன்னு

ஆசப்படுறியா?’

‘ஒன்னமேரி ஒரு பொண்ணு நம்மளுக்கு வேண்டாம்’

‘நான் மட்டும் நாட்டாரு எடத்துல இருந்துருந்தன்னா

ஒன்னய வெட்டி கடலுல விட்டுருப்பன்’

‘நான் வுன்னய வீட்டவுட்டு வுடியாறச்

சொன்னனா? இல்ல யாங்கூட வந்து

ஒறவாடுன்னுதான் கையப்புடிச்சி இழுத்தனா?

நீனாதானே வலியனா வந்து என்னக்கிட்ட

பேசுன பழகுன?’

என்றெல்லாம் கூறி,

‘நீ பொம்பளப் புள்ளய மாத்திரம் பெத்துரக்கூடாது... நீ என்னய மட்டும் நெனச்சிருந்து இந்தப் புள்ளய பெத்தியன்னா அது நிச்சயமா ஆம்புளப் புள்ளயாத்தான் பொறக்கும்’ (ப. 151) என்று உறுதியாகக் கட்டளையிடுகிறான்.

தன்னுறு வேட்கை கிழவன்முன் கிளத்தல்

எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை  (தொல். பொருள்: 116)

என்ற இலக்கணத்தை மீறியவளாகக் காதலைத் தானே வலிந்து சென்று முதலில் வெளிப்படுத்துகிறாள் சமுத்திரவல்லி. அந்த மீறல் தன்மையே அவள் வாழ்க்கை முழுவதும் துன்பப்படக் காரணமாய் அமைவதாக உணர்த்தப்படுகிறது.

எவ்வளவு கீழ்த்தரமாக எண்ணி நம்மைத் திட்டினாலும் பழித்தாலும் அவமானப் படுத்தினாலும் நாம் அவற்றைக் கருத்தில் வாங்கிக் கொள்ளக்கூடாது. ஆத்திரப்படக்கூடாது. கழுதைக்கி மாலையிட்டாச்சி.... ஒதக்கிதுன்னு ஓடக்கூடாது (ப. 152) என்று பொறுத்துப் போகும் சமுத்திரவல்லியைத் தந்திரமாகப் பேசி, இரவில் நடுக்கடலுக்கு அழைத்துச் சென்று தள்ளிவிட முனை கிறான் சாமுவேல். அப்பொழுது அவனே கடலுக்குள் விழ நேர்கிறது. காப்பாற்றுமாறு கெஞ்சுகிறான். சமுத்திரவல்லிக்குக் காப்பாற்ற வேண்டுமென்று மனம் தடுமாறினாலும், அவன் பிழைத்து வந்தால் நம்மைக் கொன்றுவிடுவான் என்பதினால் காப்பாற்றாமல் வந்துவிடுகிறாள். இந்நிகழ்வில், தந்திரமாகத் தன்னைக் கொல்லத் திட்டமிட்ட காளனைப் பத்தரை மலையுச்சி யிலிருந்து தள்ளிக் கொன்ற குண்டலகேசி நிகழ்வின் சாயலைக் காணமுடிகின்றது.

நான் ரெண்டுபேருக்கு முந்தான விரிச்சவதான். ரெண்டு பேருக்கும் புள்ளப் பெத்துக் குடுத்துவதான். இல்லங்கல. ஆனா நீ சொல்லுறமேரி நான் தேவுடியா இல்ல. நான் உத்தமிதாங்குறது உண்மன்னா நான் கரயேறுவன். இந்த கடல்தாயி என்ன கரகொண்ட சேப்பா... (ப. 275) என்றுகூறி, கணவன் இறந்தாலும் தான் பிழைக்கவேண்டும்என்ற உணர்வோடு, உயிரோடு திரும்பிய நிகழ்ச்சி, தலை, இடை, கடைப் பத்தினிப்பெண்டிர் என்று ஆணா திக்கம் கட்டி வைத்துள்ள பொய்யாக்கங்களை உடைப்பதாக, பொய்யாக்கிக் காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

பெண் தீட்டானவள் என்று கருதுவதைக் கீதாரி நாவலில் சிவப்பி என்ற பெண்ணின் மூலம் ஆசிரியர் கேள்விக்குள்ளாக் குகிறார்.

எவனுக்குப் பிறந்த பெண்ணோ, எப்படி வீட்டிற்குள் விடமுடி யும்? கன்னித்தீட்டு வீட்டைத் துடைத்துவிடும். அவளை வீட்டிற் குள் விட்டால் அவர்களின் சாமிக்கு ஒத்துக் கொள்ளாது. வீட்டுச் சாமி வெளியேறிவிடும்... அவளையோ அவளுடைய துணிமணி களையோ யாரும் தொடுவதில்லை (ப. 70) என்ற நிலைமை தன்னை வளர்த்த சாம்பசிவத்தின் வீட்டில் இருந்தது. இலுப்பைப் பூக்களை வறுத்து இடிக்கும்பொழுது, சாம்பசிவத்தின் மூத்த மனைவி, சிவப்பியைப் பார்த்து, நீ கைய வைச்சிடாத கெட்டுப் பெயிடும். சலுப்படிச்சிடும் என்கிறாள். பூக்களைப் பொறுக்கி யெடுத்து, காயவைத்து, தாளடித்து பதனம் செய்து பானைகளில் கொட்டிவைக்கும்போது என் கைபட்டுக் கெடாதபூ இப்பொழுது மட்டும் தொட்டால் கெட்டுவிடுமா என்ற கேள்வி சிவப்பிக்கு எழுகிறது. சிவப்பி தொடும் பொருட்களெல்லாம் கெட்டுவிடும், புழுத்துவிடும் என்று சாம்பசிவத்தின் வீட்டிலுள்ளோர் கருத, சாம்பசிவமோ சிவப்பியைத் தொட்டுப் பாலியல் வன்கொடுமை செய்கிறார். சிவப்பியைத் தொட்டதினால் அவருக்கு எந்தத் தீட்டோ, தீங்கோ நேரவில்லை. மாறாகச் சிவப்பியே தன் உயிரை இழக்க நேரிடுகிறது என்பது கவனத்திற்குரியது. போலித் தனமான சில மதிப்பீடுகளை உருவாக்கி வைத்துவிட்டு அவற்றைத் தமது வசதிக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளும் ஆணுலகத் தந்திரங்களை இதில் காணமுடிகின்றது. குழந்தை பெற்றெடுப்பதைப் பெண்ணுக் குரிய கட்டாயத் தகுதியாக இன்றளவும் சமூகம் எதிர்பார்க் கிறது. தம்முடைய வாரிசைப் பெற்றுத்தரும் கருவி என்றளவில் மட்டுமே மனைவி முக்கியத்துவம் பெறுகிறாள். அதைமீறி அவளது ஆசைகள், வலிகள், துயரங்கள் எவையும் பார்க்கப்படுவதில்லை. அந்த அடிப்படையில் கரிச்சாவிற்குத் திருமணம் ஆகி நான்கரை ஆண்டுகள் முடிந்தும் பிள்ளை இல்லையென்பதால், சுயசிந்தனை யற்ற கணவனால் மறுதலிக்கப்படுகிறாள். அவனுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.

“கோபித்துக்கொண்டு போவதால் மட்டும் என்ன பயன்? திரும்பவும் வந்து அதே குடும்பத்தில் வாழ்ந்துதானே ஆகவேண்டும். சுற்றியலைந்து திரும்பியும் வந்து குட்டுப்படுவதை விடவும் பேசாமல் எதுவந்தாலும் தாங்கிக்கொண்டு இருந்து விடுவதுதான் நல்லதென்று... (ப. 155) நினைக்கக்கூடிய கரிச்சா ஒரு கட்டத்தில் கணவனை விட்டுப்பிரிந்து தன்னை வளர்த்த தந்தையிடமே வந்துவிடுகின்றாள். தான் கருத்தரித்திருப்பது தெரிந்த பிறகும் தன் கணவனிடம் சென்று சேர அவள் உறுதியாக மறுத்துவிடுகின்றாள். இனி ஒரு பொழுதும் அவனுடன் சேர்ந்து வாழவே மாட்டேன் என்று சத்தியம் செய்து விடுகின்றாள். பொறுத்துப்போதல் என்பதை மீறி, தன்கணவன் மேல் இருந்த நம்பிக்கையை விடுத்துத் தன் உழைப்பின்மீது நம்பிக்கை வைத்து வாழத் தொடங்குகிறாள். அளம் நாவலில் ராசாம்பாளுக்கு மூன்று குழந்தைகள் பிறந்த பிறகு வேறொரு பெண்ணுடன் அவள் கணவன் வாழ்கிறான். பெண் பொறுத்துக்கொண்டுதான் போக வேண்டும் என்று தாய் சுந்தராம்பாள் கூறியபோதும், அவனது வீட்டைத் துறந்து தன் உழைப்பின்மீது நம்பிக்கை வைத்துக் குழந்தைகளுடன் தாய்வீடு திரும்புகிறாள். மேற்கண்டவற்றில் குழந்தை இல்லை என்பதால் கரிச்சாவின் கணவன் வேறொரு திருமணம் செய்துகொள்ள நினைப்பதும், மூன்று குழந்தைகளைப் பெற்றுவிட்டவள் என்பதால் ராசாம்பாளின் கணவன் அவளை விடுத்து வேறு பெண்ணுடன் வாழ்வதும் ஆண் என்ற அதிகாரச் செயல்பாட்டை யும் தான் தனது வசதிக்கேற்ப எது செய்தாலும் சரியே என்று நினைக்கும் ஆணவத்தையும் வெளிப்படுத்துகிறது. ‘கல்லானாலும் கணவன்’ என்ற போலியாக்கத்தைச் சிதறச் செய்து வெளிவருபவர் களாகக் கரிச்சாவும் ராசாம்பாளும் கற்றாழை மணிமேகலையும் உள்ளனர்.

‘எதிர்பேச்சு பேசும் மனைவியே கணவனுக்குக் கூற்றம்’ என்ற வழக்கு உள்ளது. பெண்களுக்குப் பேச்சுரிமை பெரும்பாலும் எல்லா இடங்களிலுமே மறுக்கப்படுகிறது. கணவன், என்ன சொன்னாலும் செய்தாலும் அதைப் பற்றிக் கேட்காமல் அவன் பின்செல்பவளாக (சிலப்பதிகார கண்ணகியைப்போல) பெண் இருக்கவேண்டுமென்று சமூகம் எதிர்பார்ப்பதை நாவல்களில் சில இடங்களில் பதிவுசெய்யப் பட்டுள்ளது.

தந்தைவீட்டுக்கு அழைத்துச்செல்கிறேன் என்று கூறிவிட்டு வேறுபாதையில் தன் கணவன் செல்வதால், ‘நீங்க எங்க இஞ்ச போறிய’ என்று செல்லாயி கேட்கிறாள். ‘நீ எதுவும் பேசாம யாம் பின்னாடியே வா’ என்பதுதான் பதிலாகக் கிடைக்கிறது. மருத்துவத் தொழிலில் கைதேர்ந்த மாணிக்கம் அதைக் கைவிட்டுவிட்டு மதுக்கூர், திருவாடணை, வெண்டாக்கோட்டை, பழவேறிக்காடு, கருவாக்குறிச்சி, திருமங்கலப்பேட்டை, கல்யாணவடை, உளுவூர், பொன்னாப்பூர் என்று மாதத்திற்கு ஓர் இடத்தை மாற்றிக் கொண்டேயிருக்கிறான். ஏன் என்று செல்லாயியால் கேட்க முடியாது. எனினும் ஒருநாள், இப்பல்லாம் வயித்தியம் பண்ணுற தில்லயா என்று கேட்டதற்கு

“எதயாவுது செஞ்சாச் சரிதான் என்ன கிராஸ் கேள்வியெல்லாம் கேட்டு ஒதவாங்கிச் சாவாத, வாயப் பொத்திக்கிட்டு இருக்குறன்னா இரு இல்லன்னா இப்பயே எழும்பிப்பெயிரு ஒங்கப்பன் வூட்டுக்கு” (ப. 129) என்கிறான் மாணிக்கம். ‘பேசாமல் இருப்பதே’ கணவனுடன் வாழும் தகுதியைப் பெற்றுத்தருவதாக இது காட்டுகிறது. அவளின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு, ஒன்னகிட்ட எனக்கென்னடி பேச்சி, நீதான் வாயாலயே அடிக்கிற வளாச்சே என்று கூறி அடித்து எட்டி உதைப்பதும், ஓராண்டுகாலம் தன்னை விட்டு ஓடி மீண்டுவந்த அவனை வாங்க என அழைக்க நினைத்தவள் ஆர்வத்தில் ‘வந்திட்டியளா’ என்றவுடன் அதைக் குதர்க்கமாக எடுத்துக்கொண்டு சண்டையிடுவதும் பெண்ணுடைய பேச்சின்மீது பாயும் கட்டுப்பாடுகளை உணர்த்துகின்றன. அளம் நாவலில் கணவனை எதிர்த்துப் பேசியதற்கான விளைவு உடனே நிகழவில்லையென்றாலும் அதுவே வாழ்க்கை முழுவதும் போராடுவதற்கான பின்விளைவினை ஏற்படுத்துகிறது.

வீட்டிலிருப்பதையெல்லாம் விற்றுத் தின்னுட்டு வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே உட்கார்ந்திருக்கிறாயே. நான் சம்பாதித்துப் போடுவதைத் தின்றுவிட்டுச் சாப்பாட்டைத் தூக்கி அடிக்கிறாயே. நான் குழந்தை பெற்றெடுத்திருக்கும் இந்த நேரத்திலாவது நீ வேலைக்குப் போகக்கூடாதா? என்று அவள் கேட்டதே சிங்கப்பூருக்குச் சென்ற சுப்பையனை மீண்டும் திரும்ப வராமல் செய்துவிடுகிறது. புனிதவதியை விட்டுப் பிரிந்தோடிய பரமதத்தனைப்போலச் சுப்பையன் சுந்தராம்பாளை விட்டுவிட்டுச் சம்பாதித்து வருகிறேன் என்று கூறிச் சென்று விடுகிறான். வணிகத்திற்குச் சென்ற கணவன் திரும்பி வருவான் என்று காத்திருந்த புனிதவதியைப் போல், சிங்கப்பூர் சென்ற சுப்பையன் பொருளீட்டிக்கொண்டு வருவான் எனக் காத்துக்கிடந்து ஏமாறு கிறாள் சுந்தராம்பாள். எனவே பெண்ணின் பேச்சுரிமைக்குக் காட்டப்படும் எதிர்ப்பு இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடித்து உதைத்து உடலை வதைத்தல், கைவிட்டுச் சென்று உள்ளத்தை வதைத்தல் என்ற இருநிலைகளில் எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது.

கற்றாழை நாவலில், தன் உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் வேறொரு பெண்ணோடு தொடர்புகொண்ட கணவனை விடுத்துத் தனக்குப் பிடித்தவனோடு சென்றுவிட்ட செகதாம்பாளை உடன்பிறந் தோரும் உறவினரும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். செய்யத் தகாத காரியத்தைச் செய்தவளாக அவள் பார்க்கப்படுகிறாள். அவள் செய்த அந்தக் காரியம் அவளைப் பெற்றெடுத்த உறவினர் களுக்குக் காலம் முழுவதும் தலைக்குனிவை ஏற்படுத்திவிட்ட தாகக் கூறப்படுகிறது. ஆனால் அதே நிலையுடைய கண்ணகி, கண்ணகி எனும் நாவலின் மையப்பாத்திரமாகிறாள். கண்ணகி நாவல் ஆணின் அதிகாரத்திற்கு, அதிகார எதிர்பார்ப்பிற்கு, கௌரவத்திற்குப் பதிலடி கொடுப்பதாக அமைந்துள்ளது.

ஆசைத்தம்பி கொடூரமாக அடித்ததினாலேயே கண்ணகிக்கு இரண்டு முறைகளிலும் குறைமாதத்திலேயே குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. அதற்காக ஒருதுளி கண்ணீர்கூட விடவில்லை. சீக்கிரம் பிள்ளை பெற்றுத்தரும்படி கூறும் சிறிய மாமியார் சின்ன வெடையிடம் ‘என்னாலயெல்லாம் புள்ளய பெத்துக்கிட்டு வூட்ட ஒக்காந்துருக்க முடியாது’ (ப. 106) என்கிறாள். காய்க்கிற மரம் கல்லடி படத்தான் செய்யும். அதுக்காக பூக்காம, காய்க்காம இருந்தா நல்லாருக்குமா என்றதற்கு நான் காய்க்கவும் வேண்டாம் கல்லடி படவும் வேண்டாம் என்கிறாள் உறுதியோடு. தன்னை அருகில் வைத்துக்கொண்டு, தன் எதிரிலேயே இன்னொரு பெண்ணிடம் பழகுகின்ற, தான் இருக்கும்போது இன்னும் இரு திருமணங்கள் செய்துகொண்ட கணவனை நினைக்கும் பொழுது அவளது எண்ணங்கள் பின்வருமாறு வெளிப்படுகின்றன.

... கருப்பண்ணசாமி சத்தியமா இந்த நாதியத்தப்பயலுக்கு நான் புள்ள பெத்துக்குடுக்க மாட்டன் (ப. 113) என்று நினைக்கிறாள்.

...இவன் பேருசொல்ல புள்ள பெத்து குடுத்துரவனா நான் கள்ளிப் பால குடிச்சாவது கருவுலயே அழிச்சிடமாட்டன்?... ஆசவச்சிப் பெத்துக்கிர்றதுதான் புள்ள. அரிப்பெடுத்து பெத்துக் கிர்றத்துக்கெல்லாம் பேரு புள்ளயில்ல (ப. 116)

என்று சின்னவெடையிடம் துணிச்சலாகக் கூறுகிறாள்.

தன் கணவனின் செயலைக் கண்டு கொதிக்கும் கண்ணகியைப் பார்த்து, பொறுமையாக இருந்துகொண்டு கடைசிவரைக்கும் பழிகாரி பாவின்னு ஒரு சொல்லுக்கு எடங்கொடுக்காம வாழணும் எனச் சின்னவெடை அறிவுறுத்துகிறாள். அதற்குக் கண்ணகி,

“பேர வச்சிக்கிட்டு நான் என்ன செய்யப்போறன். பேரும் வேண்டாம் புண்ணாக்கும் வேண்டாம்” எனக் கூறுவது முக்கியத் துவமுடையது. புராண நளாயினியின் செயலை வேறுகோணத்தில் படைத்துக்காட்டிய மு. கருணாநிதியின் ‘நளாயினி’யில்கூடப் பத்தினி என்ற பேருக்காக; புகழுக்காகப் பெண் தன்சுயத்தை இழந்து வாழ்வ தாகவே காட்டப்பட்டுள்ளது. பேர், புகழ் என்று மேற்பூச்சு காட்டிப் பெண்களை ஏமாற்றும் நிலையைக் கண்ணகி மறுதலிக்கிறாள்.

இறக்கும் தருவாயிலிருந்த ஆசைத்தம்பி நான் செத்துட்டாலும் அதுக்கப்புறமும் இனிமே நீ எனக்குத் துரோகம் பண்ணக்கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறான். இதையறிந்த பிற பெண்கள் கண்ணகியிடம்;

“துப்பு கெட்டவனுக்கு ரெண்டு பொண்டாட்டி தூந்த கெணத்துக்கு மூணு ஏத்தம்பாங்க. செத்தாலும்மூணுபேரு தாலியறுக்கணுமுன்னு ஆசப்படுற பய. தாஞ் செத்த பெறவும் பொண்டாட்டி யோக்கியமா இருக்கணுமுன்னு நெனைக்கிறான்னா இவனுக்கெல்லாம் போற கதிக்கு புண்ணியம் கெடைக்குமாச் சொல்லு.”

“ஆம்புளன்னா அவுத்துக்கிட்டு அலயலாம், பொட்டச்சின்னா மட்டும் பூட்டிவச்சிக்கிட்டு கெடக்கணும் இதுதான் அவனுவ சொல்ற ஞாயம்”

“அதுகெடக்குது செருப்பு அதகொண்ட குப்பயிலபோடு”

“ஓம்புருசன் பெரிய அரிச்சந்திர மகராசா உண்மைய பேசுற உத்தமன். அவன் கேட்டானாம். இவ சத்தியம் பண்ணி குடுத்தாளாம்”

“சத்தியமாவது பீயாவது. பொட்டச்சின்னா என்னான்னு நெனச்சிட்டான் ஓம்புருசன். ஏதோ மரியாதக்கிக் கட்டுப்பட்டு மண்ணள்ளித் தின்னுகிட்டு கெடக்குறமேத் தவிர நமக்குன்னு ஒரு ஞாயம் இல்லாமயா இருக்கு. அதெல்லாம் என்னான்னு தெரிஞ்சா தாங்குவானுங்களா இவனுங்கல்லாம்” (பக். 188-189) என்று பேசுவது; பெண்களின் சுயத்தை மறுக்கும்; மறுதலிக்கும் ஆணாதிக்க ஆணவத்திற்குக் கிடைக்கும் சவுக்கடியாக அமைகிறது.

தன் மகன் தன்னை வெறுப்பதை நினைத்த கண்ணகி பலவாறு சிந்திக்கிறாள். நாம் என்ன தவறு செய்தோம்? ஆசைத்தம்பி உறவினருக்கும் ஊருக்கும் தெரிந்தே பல தவறுகள் செய்திருப்பினும் அவனை யாரும் தவறாக நினைக்கவில்லை. இன்றைக்கும் குடும் பத்தில் தலைவனாய் இருந்துகொண்டு அதிகாரம் செலுத்துகிறான். அவனை விட நான் என்ன மோசமாய் நடந்துவிட்டேன். திமிர் எடுத்தா வீட்டை விட்டுப்போனேன். தன் தாய், மகன் உட்பட அனைவரும் தன்னைத் தவறாகவே பார்க்கிறார்களே என எண்ணிப் பார்க்கிறாள். தாயே தன்னிடம் கால தூக்கிக்கிட்டு அலஞ்சதெல் லாம் போதும். ஒழுங்கா புருசங்கூட இருந்து அடங்கி ஒடுங்கி குடும்பம் பண்ணு என்றவுடன், எப்போதுதான் நான் புருசனுக்கு அடங்காமல் நடந்துகொண்டிருக்கிறேன் என்று நினைத்துப் பார்க்கிறாள். இந்நிலை சமூகத்தின் ஒருதலைப்பட்ச பார்வையை வெளிப்படுத்துகிறது. கண்ணகியின் செயலைக் கண்டிக்கும் சமூகமும் குடும்பமும் ஆசைத்தம்பியின் செயலைத் தவறு என்று கூறக்கூட முன்வராமல் அவனது அதிகாரத்தை ஏற்றுக்கொண்டும் ஆதரித்தும் வளர்க்கிறது.

தன் மனைவி தன்னுடன் வாழும்போதே பல பெண்களை மணந்து கொண்டும் அருகிலிருக்கும்போதே வேறொரு பெண்ணுடன் நெருங்குவதுமாக இருந்த ஒரு ஆண், தான் இறந்த பின்னும் தனக்குத் துரோகம் செய்யாமல் இருக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொள்வது, தன் கௌரவத்திற்கும் ஆசைக்கும், வாரிசிற்கும் உரிய கருவி மட்டுமே பெண் என்று நினைத்துச் செயல் படும் ஆண் ஆணவத்தின் உச்சகட்ட செயலாக வெளிப்படுகின்றது.

சத்தியம் வாங்கிக்கொண்டு ஆசைத்தம்பி இறந்த பிறகு ஒரு முறை, சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வரும் அன்சர் தன்னைப் பார்க்கத் திருச்சிக்கு வரும்படி கைபேசியின் மூலம் தெரிவிக்கிறான். அன்றுதன் மகனின் குழந்தைக்குக் காது குத்தும் சடங்கு. அதுவரை அந்தச் சடங்கில் கலந்துகொள்ள ஆர்வமுடன் இருந்த கண்ணகி அதைத் தவிர்த்து அன்சரைப் பார்க்கக் கிளம்புகிறாள். அதைப் பார்த்த மல்லிகா என்பவள் பாரதி தம்பி ஒங்களைத் தப்பா நினைக்காதா என்றவுடன் தன் உணர்ச்சிகளைக் கொட்டுகிறாள்.

“அவன் அவ பொண்டாட்டி புள்ளிவளோட சந்தோசமா இருக்குறான்... நான் 13 வயசில அறியா புள்ளயா அவம் பின்னாடி வந்தப்பகூட என்ன பாவமேன்னு நெனச்சிப்பார்க்காம ஏகப்பட்ட துரோகம் பண்ணின எம்புருசன் அவன் செத்த பிறகும் நான் பத்தினியா இருந்து அவம் பேர காப்பாத்தனுமுன்னு சாவக்குள்ளக் கூட சத்தியம் வாங்கிக்கிட்டு சாவுறான். நான் எதுக்காக அவம் பேர காப்பத்தணும்? தாலி கட்டாத பொண்டாட்டியா இருந்தப்பவும் காசுக்கு முந்தான விரிச்ச வேசியா இருந்தப்பவும் என்ன ஒரு பொட்டச்சியா நெனச்சி புரிஞ்சி நடந்துக்கிட்ட நல்ல மனுசன் அவரு. அவரு மொகத்த நான் இப்பக்கூட பாக்காம வுட்டன்னா வேற எப்ப பாக்குறது?” என்று கேட்பது கற்பனை உலகில் வாழ்ந்துகொண்டு போலித்தனமாக நடந்து கொள்ளாமல் யதார்த்தமாக வாழும் வாழ்க்கையை இது எடுத்துக் காட்டுகிறது. சிலப்பதிகார கண்ணகியைப் போலவே சிறு வயதிலேயே திரு மணமாகிக் கணவனால் வஞ்சிக்கப்பட்டிருந்தாலும், கோவலன் மனைவி கண்ணகியைப் போலல்லாமல், தன் கணவன் செய்வது துரோகம், தவறு என்று உணரவும் கோபப்படவும் தண்டிக்கவும் முயன்றிருப்பது அவளது சுயத்தை எடுத்துரைக்கின்றது.

பொறுப்பற்ற தந்தையராக, கணவர்களாக, ஆனால் அதிகாரம் படைத்தவர்களாகவே ஆண்கள் இருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக செல்வராசு, சண்முகம் (கற்றாழை), மாணிக்கம் (மாணிக்கம்), சாமுவேல் (ஆறுகாட்டுத்துறை), சுப்பையன் (அளம்), வெள்ளைச்சாமி (கீதாரி), ஆசைத்தம்பி (கண்ணகி) போன்றோர் உள்ளனர். மேலாதிக்க வர்க்கத்தில் காணப்படும் பெண் பற்றிய மதிப்பீடுகளே உழைக்கும் வர்க்கத்தினரிடமும் ஊடுருவி நிலவுகின்றன என்பதை இந்த ஆறு நாவல்களும் உணர்த்துகின்றன.

கற்றாழை நாவல் முன்னுரையிலும், நாவலிலும் கற்றாழை குறித்துப் பேசும் ஆசிரியர், எத்தகைய வறட்சியிலும் தன்னைத் தகவமைத்துக்கொண்டு உயிர்வாழும் இயல்புடையது கற்றாழை. இந்நாவலில் இயங்கும் மணிமேகலையும் கற்றாழை போன்றவள் என்று குறிப்பிடுகிறார். இது மணிமேகலைக்கு மட்டுமின்றி மற்ற நாவல்களில் இடம்பெறும் செல்லாயி, சுந்தராம்பாள், வடிவாம் பாள், கரிச்சா, கண்ணகி, சமுத்திரவல்லி என அனைவருக்கும் பொருந்தும். ஆணாதிக்கப் புதைகுழியில் சிக்கிக் கிடக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருந்தக்கூடியதே. Red Tea எனும் நூல் தமிழகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பையும் உயிரையும் ஆங்கிலேயர்களும் ஆங்கிலேயக் கூலிகளும் வெறித் தனமாக உறிஞ்சிய பதிவினை முன்வைக்கின்றது. அதுபோலவே சு. தமிழ்ச்செல்வியின் நாவல்கள், ஆண்களும், ஆணாதிக்கச் சிந்தனையைப் பிரித்தறிய முடியாத மூளையைக் கொண்ட ஆண் களின் ஏஜென்டுகளாகச் செயல்படும் பெண்களும், பெண்களின் உழைப்பையும் சுயத்தையும் உறிஞ்சிக்குடித்து ஆடும் வன்கொடுஞ் செயலைச் சித்திரித்துள்ளன.

(கட்டுரையாளர் எத்திராஜ் மகளிர் கல்லூரித் தமிழாசிரியர். ‘தமிழ்ப் பண்பாட்டில் பால் வேற்றுமை’ எனும் இவரது நூல் வெளிவந்துள்ளது. ‘தமிழகச் சிற்ப வரலாறு: பெண் தொன்மம்’ என்னும் பொருளில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் செய்த முனைவர் பட்ட ஆய்வு விரைவில் நூலாக வெளிவர உள்ளது.)

Pin It