“ராமன் வழிபடத்தகுந்தவனா? ராமனுடைய பிறப்பே அதிசயமாக உள்ளது. சிருங்க முனிவரும் கவுசல்யாவும் கணவன் – மனைவி என்ற உறவு கொண்டிருக்கவில்லை எனினும், இம்முனிவன் மூலம்தான் கவுசல்யா ராமனைப் பெற்றெடுத்தாள் எனத் தெளிவாகத் தெரியும் ஓர் உண்மையை மூடி மறைப்பதற்காகவே – சிருங்க முனிவன் பிடித்துக் கொடுத்த பிண்டத்தின் மூலம் கவுசல்யா ராமனைப் பெற்றெடுத்தாள் என்று சொல்லப்பட்டிருக்கலாம். ராமனுடைய பிறப்பில் களங்கம் எதுவுமில்லை என்று வாதிக்கப்பட்ட போதிலும், அவனுடைய தோற்றம் இயற்கைக்கு முரணானது என்பது உறுதியாகிறது. ராமனுடைய பிறப்பு தொடர்பான, மறுக்க முடியாத அருவெறுப்பான வேறு பல நிகழ்வுகளும் உள்ளன...''
– டாக்டர் அம்பேத்கர், "இந்து மதத்தில் புதிர்கள்' என்ற நூலில்
ராமன் என்பவன் கடவுள் என்றால், அவனுக்கு பிறப்பு என்றோ, பிறப்பிடம் என்றோ ஒன்று இருந்திருக்க முடியாது. அவன் மனிதன் என்றால், 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள கிருதயுகத்தில் அவன் பிறந்தான் என்ற அறிவியலுக்கு எட்டாத கற்பனையை, பிறவி முட்டாள்கூட ஏற்றுக் கொள்ள மாட்டான்! ஆனால், இக்கட்டுக் கதைகளை எல்லாம் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்று, இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் (30.09.2010) தீர்ப்பளித்திருக்கிறது. ஒருவருடைய நம்பிக்கையை மதிப்பது என்பது வேறு. ஆனால், சட்டத்தின் ஆட்சி நடைபெறும் ஒரு நாட்டில், ஒரு பிரிவினரின் நம்பிக்கையைக் கொண்டு தீர்ப்பு எழுதப்படுமெனில், இது மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்திற்கும், அரசமைப்புச் சட்டத்திற்கும் பேராபத்தாகவே முடியும். அந்த வகையில் இத்தீர்ப்பு, கடும் கண்டனத்திற்குரியதாகும்.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை, ஏதோ கட்டாந்தரை போல கருதி, அந்த இடத்தை வழக்கு தொடுத்த மூவருக்கும் பிரித்துக் கொடுத்து, ஒரு கட்டப் பஞ்சாயத்தை நடத்தியிருக்கிறது உயர் நீதிமன்றம். இதன் மூலம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட கிரிமினல் குற்றத்திற்கு, சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. "நான் நடத்திய ரத யாத்திரையை நியாயப்படுத்துவதாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது' என்று எல்.கே. அத்வானி கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. ஒருவேளை மசூதி இடிக்கப்படாமல் இருந்திருந்தால், மிகச் சரியாக இம்மசூதியின் கூரையின் கீழ்தான் ராமன் பிறந்தான்; எனவே மசூதியை இடித்துவிட்டு, அந்த இடத்தை இந்துக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று இதே நீதிமன்றம் கூறியிருக்க முடியுமா? ஏற்கனவே இருந்ததாகச் சொல்லப்படும் வழிபாட்டுத் தலத்தை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாகக் கூறும் நீதிமன்றம், மசூதி இடிக்கப்பட்டதை மட்டும் கண்டிக்காதது ஏன்? இது எப்படி வழக்குக்கு அப்பாற்பட்ட பிரச்சினையாகும்?
பாபர் மசூதி கட்டப்பட்டுள்ள கூரையின் கீழேதான் ராமன் பிறந்தான் என்று சொல்லப்படுவதை, நீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், 1994 ஆம் ஆண்டே "சட்ட ரீதியாக உறுதிப்படுத்த இயலாது' என்று கூறிவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்புதான் உயர் நீதிமன்றத்திற்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது, தொல் பொருள் ஆய்வுத் துறையை ஆதாரமாகக் காட்டியிருக்கிறது. தொல் பொருள் ஆய்வு கூறுவது என்ன? பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கு "வழிபாட்டுத் தலம்' ஒன்று இருந்ததாக மட்டுமே கூறுகிறது. அது இந்துக்களின் வழிபாட்டுத் தலம் என்றோ; அங்குதான் ராமன் பிறந்தான் என்றோ; மசூதி கட்டப்படும்போது சொத்து பரிமாற்றம் நடந்தது என்றோ கூறவில்லை.
நடுவணரசில் பாரதிய ஜனதா கட்சி இருந்தபோது, மசூதியை இடிப்பதில் முன்னணி வகித்த முரளி மனோகர் ஜோஷியின் கீழ் செயல்பட்ட தொல் பொருள் ஆய்வின் "வழிபாட்டுத் தல' கண்டுபிடிப்பை, பல்வேறு அகழ்வாராய்ச்சி வல்லுநர்களும் மறுத்திருக்கிறார்கள். மேலும், அது பவுத்தர்களின் வியாரமாகக்கூட இருந்திருக்கலாம். ஏனெனில், 9ஆவது நூற்றாண்டில்தான் எண்ணற்ற பவுத்த வியாரங்களும், பவுத்த சிலைகளும் இந்தியா முழுவதும் காணக் கிடைத்ததாக பவுத்த வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இன்றைய காஞ்சி சங்கர மடம், திருப்பதி கோயில் உள்ளிட்ட பல்வேறு இந்து கோயில்களும் பவுத்த வியாரங்களே என்பதும் வரலாற்றாசிரியர்களின் கூற்று. ஆனால் தொல் பொருள் ஆய்வையும் விஞ்சி, அந்த இடத்தில் இருந்தது ராமன் கோயில்தான் என்று நீதிமன்றம் சொல்வதை எப்படி ஏற்பது?
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, நம்முடைய பண்பாட்டுச் சின்னமாகவே மாறிவிட்ட மசூதியை இந்துவெறிக் கூட்டம் இடித்ததற்கு, நாம் ஒரே ஒரு தீர்வைத்தான் காண முடியும். அதே இடத்தில் மசூதியை கட்டுவதுதான் அதற்குத் தீர்வு. பவுத்த தலங்களை இடித்து, கட்டப்பட்டுள்ள எண்ணற்ற இந்து கோயில்களை இன்றளவும் அனுமதித்திருக்கும் தலித்துகளின் பெருந்தன்மையை, இந்துக்களிடம் நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் வரலாற்றை நேர் செய்வதற்கு, இந்நாட்டின் உச்ச நீதிமன்றம் சட்டப்படியான தீர்ப்பை வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.