கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்குக் கிடையாது. அரசுக்கும் கிடையாது என்றார் காந்தியார். நவீன சட்டக் கோட்பாடுகள் முதிர்ச்சி யடைந்த் இன்றைய நாட்களிலும் மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா எனும் உøயாடல் முடிந்த பாடில்லை. மனித உரிமையாளர்கள் இதுகுறித்து சோர்வூட்டக் கூடிய தொடர் விவாதங்களில் சோர்வும் சலிப்புமற்று தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் தொடர் முயற்சியால் இதுவரை 128 நாடுகள் மரண தண்டனையை தம் சட்டங்களிலிருந்து நீக்கம் செய்துள்ளன. மேலும் பல நாடுகள் மரண தண்டனையை ஏட்டளவில் ஏற்றிருந்தாலும் நடப்பில் ஏற்கத் தயங்கி நிற்கின்றன. இன்னும் சில நாடுகள் மதில் மேல் பூனையாய் இருக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் ராசீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் நீதி தேவதையே வெட்கித் தலைகுனியும் வகையில் 26 பேருக்கு தூக்குத் தண்டனையை அளித்து ஆண்டு பல உருண்டோடி விட்டன. காந்தியார் வழக்கிலும், இந்திரா காந்தி வழக்கிலும் காணாத புதுமையை ராசீவ் காந்தி வழக்கில் விசாரணை நீதிமன்றம் கண்டது மரண தண்டனையை 26 பேருக்கு விநியோகித்த விந்தையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தாலும் சட்ட வல்லுனர்கள் ஏற்காத சொத்தை வாதங்களின் அடிப்படையில் நளினி, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோ ருக்கு மரண தண்டனையை உறுதி செய்து நாட்கள் மாதங்களாகி ஆண்டுகளாகி ஓடிக் கொண்டிருக் கின்றன.
தற்போது நளினி மரணக் கொட்டடியிலிருந்து வெளியேறிவிட்டார். இப்போது அந்தப் பெண் சிறையாளி தனது துயர் மிகுந்த இருபதாம் ஆண்டைக் கம்பிகளுக்குப் பின் கழித்துக் கொண்டிருக்கிறார். தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நால்வரில் நளினி போக தற்போது மீதம் மூன்றுபேரும் இன்னும் மரணக் கொட்டடியில் இருத்தப்பட்டுள் ளனர்.
ஒவ்வொரு நாள் அதிகாலையும் தம்மைத் தூக்கி லிட ஓலை வந்து சேரும் அச்சத்தோடு அம்மூவருக்கம் பொழுது விடிந்து கொண்டிருக்கிறது. நீதியின் பெயரால், சட்டத்தின் பெயரால் கொலை நிகழ்வது ஏற்கக் கூடியதுதானா? அதன் சட்ட நியாயங்களைத் தாண்டி அறத்தின் பெயரால் மானுடம் இதுவரைக் காலம் விதைத்து வந்திருக்கிற மனித வாழ்வின் விழுமியங்களின் பெயரால் நாம் பதில்களைத் தேடுகையில் மரண தண்டனை ஒரு போதும் கூடாது எனும் முடிவுக்கு வந்து சேர முடிகிறது. இந்தியா மரண தண்டனையினை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிற போதும் அதற்கு நேர்முரணான சட்டப் பிரிவகளை தன் அரசமைப்புச் சட்டத்திலேயே கொண்டிலங்குகிறது. வாழ்வதற்கான உரிமையை இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது. சட்டம் பாதுகாத்து வேலியிடும் தனி மனிதர் ஒருவரின் வாழ்வதற்கான உரிமையை அச்சட்டமே சூறையாடும் கொடுமையை நம்மால் ஏற்க முடியவில்லை.
ராசீவ் காந்தி கொலை செய்யப்பட்டதை நியாயப் படுத்தவோ, அவரின் இறப்பை அசட்டையாகக் கடந்து போவதோ, மனித உரிமையாளர்களின் திட்டமில்லை. மாறாக, ராசீவ் காந்தியின் மரணத்திற்காக பழி தீர்க்க முனையும் வேலையை சட்டம் ஒருபோதும் மேற்கொள்ள முடியாது என்பதே நம் வாதம்.
ஒரு மனநிலை பிறழ்ந்தவரின் கையில் உள்ள துப்பாக்கிக்கும், ஒரு நீதிபதி கையில் உள்ள மரண தண்டனை வழங்கும் அதிகாரத்திற்கும் அதிகம் வேறுபாடில்லை என்றே நாம் கருதுகிறோம். நீதிபதிகள் உயிரும் உணர்ச்சியும் உள்ள நபர்கள் என்பதோடு அவரவர்க்கே உரிய சமூகப் பார்வையின் எளிய கருவிகள் என்பதையும் அக்கருவிகளூடாகவே அவர்களின் நீதி வழங்கல்கள் நிகழ்கின்றன என்பதையும் நாம் அறிந்தே இருக்கிறோம். பொதுவாக உலகில், குறிப்பாக இந்தியாவில் இதுவரை காலமாக தூக்கிலிடப்பட்டவர்களின் வகுப்பு, சாதி, இனப் பாகுப்பாய்வுப் புள்ளி விபரங்களை கண்ணுறும் நமக்கு நீதிமன்றங்களின் பக்கச் சாய்வு வெளிச்சமாய்ப் புலப் படுகிறது. நீதிமன்றங்கள் தீர்ப்புகளையே வழங்கு கின்றன. நீதியை அல்ல என்பதுபோன்ற எல்லாக் காலத்துக்குமான கவித்துவக் கூற்றுகள் நமக்கு நினைவிற்கு வருகின்றன.
பிற தண்டனைகளுக்கும் மரண தண்டனைக்கு மான முதன்மை வேறுபாடு எல்லா மனித உரிமை யாளர்கள், அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள் கூறுவதைப் போல் இது திரும்பப் பெற முடியாத தீவினை, இன்றுவரை இந்தியாவில், உலக வரலாற்றில் உயிர் பறிக்கப்பட்ட நிரபராதிகளின் நீண்ட பட்டியல் நமக்கு அயர்ச்சியூட்டுகிறது.
நீதிபதிகள், ஆளும் வகுப்பினர், கட்சியினர் ஆகியோரால் பந்தாடப்படுவதே நீதி என்பதை நாம் அறிந்தே இருக்கிறோம். ஆனால், நீதியின் மீதே நம்பிக்கையற்றுப் போக வரலாறு நமக்கு வாய்ப்பளிப் பதில்லை. பிரடரிக் டக்ளஸ் சொன்னதைப் போல் போரட்டமின்றி முன்னேற்றமில்லை என்பதில் நமக்கு எள்ளளவும் ஐயமில்லை.
குற்றம் ஒரு சமூக நிகழ்வு, சமூகத்தின் கையில் தனி நபர் ஒரு கருவி அவர் புரியும் குற்றங்களில் சமூகத்தின் பொறுப்பேற்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் தண்டனை முறைகளில் வெளித் தோன்றுகின்றன. அதனால்தான் சித்திரவதைக் கூடமல்ல சீர்திருத்தம் கூடம்தான் சிறை என்கிறோம். நீண்ட காலம் நீடிக்கும் சிறைக்காலம் நன்னடத்தையை ஒட்டி குறைக்கப்பட்டு சிறையாளிகள் விடுவிக்கப்படுவதன் கோட்பாடு அடிப்படை இதுதான். இதன் சாரம் தண்டனை குற்ற மிழைத்தவரைக் குணப்படுத்தும் (திருத்தம்)வகையில் இருந்திடல் வேண்டும். இப்பார்வைக்கு, இப்பார்வை கொண்ட சட்டக் கோட்பாடுகளுக்கு முற்று முழுதாக எதிராய், முரணாய், பொருந்தாப் பிசகாய் அமைவது மரணதண்டனை.
ஒரு மனிதனை சீர்திருத்துவதே அவனுக்காக தண்டனையாக அமைய வேண்டும் எனும் நம் பார்வையில் மரண தண்டனை என்பது நீதிமன்றம் நிகழ்த்தும் கொலை வெறும் கொலையாக இல்லாமல் இது சட்ட அங்கீகாரத்தோடு நிகழும் கொலை. அதையும் கடந்து இது தனி நபரின் கொலை யல்ல. சமூகமே, அச்சமூகத்தின் நேரடி ஏற்பின் அடிப்படையில் நிகழ்த்தும் கொலை, அரபு நாடுகளின் கல்லாலடித்துக் கொல்லும் தண்டனை முறைக்கும் கயிற்றில் இறுக்கிக் கொல்லும் இந்திய மரண தண்டனைக்கும் கோட்பாடு அடிப்படையில் கொலையைத் தவிர வேறு நல்ல பெயர் ஏதுமில்லை.
கல்லாலடிப்பதைக் காட்டுமிராண்டித்தனமென்று கருதுவதும் தூக்குக் கயிறிறுக்கிக் கொல்வது நாகரிகமென்றும் சொல்வதை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. மரண தண்டனைக்கு ஆதரவாக வளைத்து வளைத்துக் கட்டியெழுப்பப்படும் வாதங்களைக் கூர்ந்து நோக்கி னால் அதில் அரசியற் காரணங்களே மிகுந்திருக்கக் காண்கிறோம். அறமும் நீதியும் அன்றாட அரசியலின் தாக்குதலில் தப்ப முடியாதெனினும் அதைவிடக் கூடுதலான அழுத்தம் கொண்டவை என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.
உலகளாவிய மரண தண்டனை எதிர்ப்பியக்கத்தின் பகுதியாக நாமும் மாறியாக வேண்டும். களத்திற்குச் செல்லும் முன் நம் கருவிகளைச் சீர்படுத்திக் கொண்டு கிளம்புவதை ஒத்து நம் போராட்ட அறிவை செறிவுபடுத்திக் கொண்டு போராடுவோம். வரலாறு சாவையல்ல, வாழவையே முன்மொழியும் எனும் தன்னம்பிக்கையோடு புறப்படுவோம்!
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
ராசீவ் கொலைவழக்கில் மரணக் கொட்டடியில் வாழும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை நீதிமன்றக் கொலையிலிருந்து மீட்போம்!
இருபதாம் ஆண்டைக் கடந்து கொண்டிருக்கும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் சிறைவாசத்திற்கு முடிவு கூட்டுவோம்!
சாவையும் சிறையையும் கொண்டாடும் மனப்பிழற் விலிருந்து நம்மைச் சுற்றி வாழும் அனைவரையும் மீட்போம்!
இந்திய அரசுக்கு எடுத்துச் சொல்வோம்!
இந்தியாவை நோக்கி உரத்துச் சொல்வோம்!
மரணம் தண்டனையில்லை! கொல்வது நீதி யில்லை!