அன்புத்தோழனுக்கு....

வணக்கம். நீண்ட காலம் கடந்து சந்திப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனாலும், நம்மை நீண்ட காலம் ஆக்கிரமித்து வைத்திருந்து ஈழ விடுதலைப் போராட் டம். அந்தப் போராட்டத்தை சிங்களப் பேரினவாதத் துடன் இணைந்து இந்தியப் பார்ப்பனியமும் செஞ்சீனமும் சின்னஞ்சிறு தேசமான தமிழ் ஈழத்தை கொன்றழித்த அந்த வேதனை, அந்தத் துயரம் விலகுவதற்கே ஓராண்டு கடந்துவிட்டது. ஆனாலும் காலமும் வரலாறும் எப்போதும் நமக்காக எப்போதும் காத்திருப்பதில்லை தானே!

ஈழ விடுதலையும் அதன் பின்னடைவையும் ஈழ மக்களின் ஈகத்தையும் உள்வாங்கி நாம் அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல வேண்டியவர்களாக உள்ளோம் என்பதையும் நீயும் உணர்ந்திருப் பாய். அவ்வகையில் நீண்ட மௌனத்தோடும் துயரத்தோடும் சொற்களை வைத்து உரையாட வேண்டியுள்ளது. 1949 இல் வியட்நாம் மீது அமெரிக்க வல்லரசு போர் தொடுத்த பின் அந்த மக்கள் அந்த வல்லரசை எதிர்த்து இருபதாண்டு காலமாய் நடத்திய போராட்டத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அமெரிக்காவின் படுகொலைகளை எதிர்த்து வாசிங்டனில் அமெரிக்க மக்கள் போராடி யதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஈழ மக்கள் படுகொலையை கண்டித்து உலகம் தழுவிப் போராடி னாலும் அவ்வாறு போராடிய வர்கள் அனைவரும் தமிழர்களாகவே இருப்பது தற்செயலானதல்ல என்பதை நாம் உணர வேண்டிய நேரமிது.

தமிழகத்திலுள்ள தமிழ்த் தேசிய சிந்தனை யாளர்கள் தமிழ் தேசிய இயக்கங்கள், ஈழம் தோல்வி யிலிருந்து தமிழ்த் தேசிய விடுதலை சாத்தியமா என்கிற கேள்வியோடு இருப்பதை நாம் இந்த நேரத்தில் தெளிவாகப் பேசியாக வேண்டிய கட்டத்தில் உள்ளோம். நாம் மீண்டும் மீண்டும் சொல்வது போல் ஒரு விடுதலைப்போராட்டம் எதிரிகளை மட்டும் கணிப்பதில் சரியாக இருந்தால் மட்டும் போதாது. நண்பர்கள் யார் என்பதை உணர்தல் வேண்டும். அப்படித்தான் நாம் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்கள் சிங்களப் பேரினவாதிகள் மட்டுமல்ல, இந்தியப் பார்ப்பனியப் பேரரசும் எனச் சுட்டிக் காட்டினோம். அவ்வாறு சுட்டிக் காட்டியபோது நம்மைப் பகடியும் கேலியுமாகப் பார்த்தவர்கள் உண்டு. அதற்காக நாம் மீண்டும் அதனைச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாதுதானே!

ஈழப் பேரழிவில் நாம் துயரம் கொள்ளும் அதே வேளையில் அதிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும். அதைவிடுத்து அந்தப் போராட்டமே தோல்வி கண்டு விட்டது. நாம் என்ன செய்யப் போகிறோம் எனும் ஆற்றாமைக் குரல்களால் ஆகப் போவது ஏதுமில்லை. ஒரு போராட்டத்தை ஆயுதமோ ஆயுதக் குழுக்களோ தீர்மானிப்பதில்லை. அரசியல்தான் தீர்மானிக்கும்.

நாம் தமிழ்த் தேசிய விடுதலைக் களத்தில் இருபதாண்டுக் காலமாகப் பயணித்திருந்தாலும் நாம் மக்கள் திரள் அரசியலை முன் வைத்தே போராடி வந்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்னவென்று கூட நாம் அறியாமல்தான் இருக்கி றோம். சில தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஆயுதப் போராட்டத்தைப் பின்னுக்குத் தள்ளி மக்கள் திரள் போராட்டங் களை முன்னெடுப்பவர்களாக இருந்து கொண்டே இவர் களுக்கான ஆயுதக் குழுக் களாக விடுதலைப் புலிகளை கருதிப் பார்த்ததை என்ன வென்று சொல்வது? ஆகையால் தமிழ்த் தேசத்திற்கான அரசியலையும் அதற்கான ஆயுதக் குழுவையும் தீர்மானிக்கிற ஆற்றல் தமிழ்த் தேசிய இயக்கங்களுக்கு மட்டுமே உரித்தானதாக மாற்ற வேண்டிய தேவை முன்னுள்ளது என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். அவ்வகையில் தமிழ்த் தேசிய விடுதலைக்கு ஈழப் போராட்டம் ஒரு புதிய படிப்பினையை அளித்திருக் கிறது.

அந்தப் படிப்பினை என்னவென்றால் ஒரு தேச விடுதலைக்கான மக்கள் ஆதரவு, அம்மக்கள் ஆதரவுடன் ஒரு ஆயுதக் குழு இதைக் கடந்து உலக அளவிலான ஒடுக்குண்ட தேசங்களின் ஒரு ஐக்கியத்தையும் கட்ட வேண்டியதை விடுதலைப்புலிகள் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

 இந்தப் படிப்பினைகள் ஊடாகவே தமிழ்த் தேச விடுதலையையும் தமிழ்த் தேசிய அரசியலையும் சரியான வகையில் உணர்ந்து களம் காண வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம் என்பதை நீயும் உணர்ந்திருப்பாய்தானே!

இன்று நடந்து கொண்டிருக்கிற காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் நீ அறிந்திருப் பாய் என்றே உணர்கிறேன். காஷ்மீர் மக்களின் போராட்டம் அறுபதாண்டு வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும் அந்தப் போராட்டம் அந்த மக்களைச் சார்ந்தே இருப்பதை நீ உணர்ந்திருப் பாய் என்றே கருதுகிறேன். அதனால்தான் எத்தனை இயக் கங்கள் தோன்றி மறைந்தாலும் அவர்களின் விடுதலைப் போராட்டம் உயிர்ப்போடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்திய ராணுவ நிதி ஒதுக் கீட்டில் கிட்டத்தட்ட சரிபாதி காஷ்மீர் விடுதலைப் போரட்டத்தை ஒடுக்குவதற்கே செலவிடப்படு கிறது. காஷ்மீர் மக்களின் போராட்டம் இந்திய அரசை எதிர்த்து மட்டுமல்ல, பாகிஸ்தானையும் எதிர்க்கும் போராட்டமாக இருப்பதை நீ அறிந்திருப் பாய். காஷ்மீரில் இந்தியப் படைகள் நடத்தும் அட்டூழியங்களை நீயும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பாய். பத்து வயது சிறுவர்கள் தொடங்கி எண்ணற்றவர்களை படுகொலை செய்து மூடி மறைத்து விடுகிறார்கள்.

கிட்டத்தட்ட முப்பதாண்டு களாக அந்த மக்கள் தம் கணவன் மார்களையும், மகன்களையும் தேடுபவர்களாக இந்தியாவின் தலைநகரில் எத்தனைப் போராட்டங்கள் நடத்து கின்றனர் என நீ அறிந்திருப்பாய். ஆனால், அந்த மக்களுக்காக ஆதரவுக் கை நீட்ட இந்தியாவில் எத்தனை தேசிய இயக்கங்கள் துணை நிற்கின்றன? என்ற கேள்வி நமக்கு எழத்தான் செய்கிறது. அதனால் தான், நாம் நடத்துகிற அரசியல் மாநாடுகளில் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய விடுதலை இயக்கங்களையும் ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு எதிரான ஓர் ஐக்கியத்தைக் கட்ட வேண்டிய தேவையை உணர்ந்து செயலாற்ற வேண்டியுள்ள தால்தான் நாம் கடந்த ஆண்டு நடத்திய "இந்தியம் எதிர்ப்போம், தமிழீழம் காப்போம்' எனும் முழக்கத்தின் கீழ் நாம் நடத்திய மாநாடு கூட நமது அம்முயற்சியின் வெளிப்பாடுதான்.

இன்னொன்றையும், நீ கவனித்திருப்பாய் என்றே உணர்கிறேன். கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக நாகலாந்து, மணிப்பூர் போன்ற தேசங்களில் நடந்து வரும் போராட்டங்களை நீ கவனித்திருப்பாய் என்றே உணர்கிறேன். இந்தியாவின் தலையமைச்சர் மன்மோகன் சிங் அவர்கள் அவசர அவசரமாக இந்தியாவின் தலைநகருக்கு நாகா மாணவர் சங்கத் தலைவரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியாவின் தலைமையமைச்சரைச் சந்திப்பதற்குக் கூட நாகா மக்கள் தம் மாணவர் சங்கத் தலைவரைத் தான் அனுப்புகிறார்கள். அந்த அளவுக்குத்தான் இந்தியத் தலைமையமைச்சரை நாகா மக்கள் மதிக்கிறார்கள் என்பதை இதிலிருந்து நீ புரிந்து கொள்வாய் என்று கருதுகிறேன்.

அண்மையில் கனடா சென்றிருந்த இந்தியத் தலைமையமைச்சர் மன்மோகன்சிங் அனைத்துலக நாடுகளுக்கு குறிப்பாக கனடாவுக்கு காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு துணை நிற்கக் கூடாது என நேரடியாகக் கோரிக்கை வைத்தார். காலிஸ்தான் விடுதலை வேட்கை இன்னும் நீறுபூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருப்பதையும் அதைக் கவனமாக சுட்டிக் காட்டிய இந்திய அரசுத் தலைமையின் அவதானிப்பையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தியாவிலும் உலக நாடுகளெங்கும் வாழும் சீக்கிய மக்களுக்கு எதிராக யார் ஒருவரும் செயல்பட பஞ்சாபிய மக்கள் அனுமதிப்பதில்லை. தேசிய விடுதலைப் போராட்டத்தை அனைத்து மக்களுக்குமானதாக மாற்றியமைத்தமையை இதன் பின்னணியில் நாம் உணர வேண்டும்.

இந்தியாவின் இதயப் பகுதியில் ஜார்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒரிசா போன்ற பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் தங்கள் மண்ணையும் தங்கள் இயற்கை வளங்களையும் காத்துக் கொள்ள வீரம் செறிந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருப் பதையும் நீ கவனித்துக் கொண்டிருப்பாய். அந்த மக்களின் வீரஞ் செறிந்த போராட்டத்திற்கு இந்தியாவில் உள்ள ஒடுக்குண்ட தேசங்கள் ஆதரவளிப்பதைப் போல் நமது தமிழ்த் தேசத்திலும் அவர்களுக்கான ஆதரவை நாம் வெளிப்படையாகவே அளிக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். இந்த இடத்தில் இன்னொன்றையும் நாம் சொல்ல வேண்டும். பழங்குடி மக்கள் தங்கள் பகுதி சார்ந்த வாழ்க்கை முறையை வாழ்பவர்கள். அவர்கள் சார்ந்த மொழி, பண்பாடு போன்ற கூற்றுகள் ஒரு தேசத்திற்குள் ஒரு பகுதியாகவே அமைந்திருக்க முடியும் என்பதை நீயும் அறிந்திருப்பாய்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர் இந்தியா குறித்த பார்வையை எப்படி வைத்திருக்கிறார்களோ? அதுபோல இப்போது பழங்குடி மக்களின் நடுவே தீவிரமாக இயங்கி வரும் மாவோவியக் கட்சியினரும் அப்பழங்குடி மக்களை இந்தியப் பழங்குடிகள் என்று கூறி அவர்களை இந்தியப் பார்ப்பனியச் சட்டகத்துள் அடைக்கப் பார்ப்பதை என்னவென்று சொல்வது? ஒரு பக்கம் இந்தியாவுக்கு எதிரான போரட்டங்கள் தீவிரமடைவதும் அதில் ஒடுக்குண்ட தேசங்கள் பங்கேற்றுக் கொண்டிருப்பதுமான இவ்வேளையில் மாவோவியர்களுடைய அரசியல் பார்வை என்பது இன்னும் தெளிவற்றதாகவும் வரலாற்றைப் பரிந்து கொள்ளாமல் பின்னுக்கிழுக்கிற முயற்சியுமாகவே நாம் உணர வேண்டியுள்ளது இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

தோழமையுடன்... தோழன்

Pin It