தன்னை தலித் விரோதி என யாராவது முத்திரை குத்தி விட்டால் என்ன ஆவது எனப் பதறி, பதறி ஒவ்வொரு நாளும் ஒரு அறிக்கையை தமிழக முதல்வர் கருணாநிதி நாளிதழ்களுக்கு அனுப்பி வருகிறார். தலித் மக்களின் “அத்தாரிட்டி” தான் என்று அடிக்கடி தம்பட்டம் அடிப்பது அவரது வேலை. ஆனால், உத்தப்புரமானாலும், காங்கியனூர் ஆனாலும் தலித்துகள் தங்கள் உரிமைகளைக் கேட்கக்கூடாது. அப்படி கேட்டுவிட்டால் ஏவல் செய்ய காவல்துறை இருக்கிறது, ஏவி விடலாம். மண்டையை உடைக்கலாம், பொய் வழக்கைப்போட்டு சிறைக்கு அனுப்பலாம். பெண் என்றும் பாராமல் பட்டப்பகலில் அவரது ஆடைகளைக் களையலாம். இதை யாரும் தட்டிக் கேட்கக்கூடாது. அவ்வளவு தான், தலித்துகளின் சம்பந்திக்கு (!) வரும் கோபத்தை அடுத்த நாள் நாளிதழ்களிலும், கலைஞர் தொலைக்காட்சிகளில் பார்த்தால் தெரியும். 

அறுபது ஆண்டு காலமாக ஏதாவது ஒரு பதவியில் அமர்ந்து கொண்டு அந்த பதவியைச் சுவைத்து வரும் முதல்வர், ஏதுமற்ற தலித் மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். தலித் மக்களின் பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளையும் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்பதற்கு திருவண்ணாமலை மாவட்டத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

எந்த நாட்டிலும் ஒரு ரூபாய் அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்கவில்லை எனச் சொல்லிக் கொண்டே அனைத்துப் பொருட்களையும், குறிப்பாக மத்திய அரசில் அங்கம் வகித்துக் கொண்டு பலமுறை பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை தாறுமாறாக ஏற்றி வரும் தமிழக அரசு, ஆதிதிராவிட குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையைக் கூட ஒழுங்காக வழங்குவதில்லை. அதற்குத் தான் திருவண்ணாமலை மாவட்டத்தை அதற்கு உதாரணம் என்று கூறினேன். 

மத்திய அரசும், மாநில அரசும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகள் போன்றவற்றில் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 15 (4)-ன் படி உரிய உரிமைகளை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மேனிலைப்பள்ளிகளில் பயிலும் இந்து தலித் மாணவ, மாணவியர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ தலித் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலமாக கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இது மாணவர்களின் நலனுக்காக அரசால் வழங்கப்படும் சிறப்பு சலுகையாகும். 

இச்சலுகையானது அரசாங்கத்திலும், பள்ளிகளிலும் எவ்வாறு தலித் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் காலம் கடத்தப்படுகிறது. இதன் காரணமாக ஆதிதிராவிட மாணவ, மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் குறிப்பாக காட்டாம்பூண்டி அரசினர் மேனிலைப்பள்ளி மற்றும் தானிப்பாடி அரசினர் மேனிலைப் பள்ளியில் கடந்த 2008 - 2009-ம் கல்வியாண்டில் பயின்ற பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ,மாணவிகளுக்கும், கடந்த 2009 - 2010 ஆம் கல்வியாண்டில் பயின்ற பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ,மாணவிகளுக்கும் இன்றுவரை ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலமாக வழங்கப்படும் கல்வி உதவித் தொகையானது யாருக்கும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பெரும்பாலும் கிராமப்புறங்களை சார்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனைப் போன்று திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மேனிலைப் பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தலித் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையினை நூதன முறையில் ‘தனிப்பயிற்சி’ என்ற பெயரில் திட்டமிட்டு ஆசிரியர் ஒருவர், மாணவர்களின் பெற்றோர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் தானே கையெழுத்திட்டு கையாடல் செய்துள்ளார். மேலும் இப்பள்ளியில் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்ட அத்தியந்தல் கிராமத்தைச் சார்ந்த தலித் மாணவன் சி. பெருமாள் என்பவரின் கல்வி உதவித் தொகையை வேறு யாரோ ஒரு நபர் கையெழுத்திட்டுப் பெற்றுள்ளார். ஆனால் பெருமாளின் தந்தை சிவா என்பவர் 12 ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேப்போன்று திருவண்ணாமலையில் உள்ள மற்றொரு தனியார் மேனிலைப்பள்ளியில் பயின்ற தலித் மாணவ, மாணவிகளுக்கு 2006 - 2010-ம் கல்வியாண்டு வரை பயின்றவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 40 தனியார் மேனிலைப் பள்ளிகளிலும், 110 அரசு மேனிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் பயிலும் தலித் மாணவ, மாணவியர்களுக்கு சுமார் 8 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது என மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையே கூறுகிறது. இதேபோன்று திருப்பூர் மாவட்டத்தில், காங்கேயம் அருகேயுள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளி, மதுரை மாவட்டத்தில் சமயநல்லூர் அருகே உள்ள மேனிலைப் பள்ளியிலும் ஒரிரு ஆண்டுகளாக தலித் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் எட்டு கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை நிலுவையில் உள்ளது என்றால், தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் ஏறக்குறைய இருநூற்றி ஐம்பத்தி ஆறு கோடி ரூபாய் என தெரிய வருகிறது. இவையனைத்தும் தலித் மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையாகும். மேலும், தமிழக அரசின் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடப்பு ஆண்டின் நிதியறிக்கையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும், ஆதிதிராவிடர் நலத்துறையின் அமைச்சர் ஆ.தமிழரசி ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலமாக வழங்கப்படும் கல்வி உதவித் தொகை அந்த, அந்த கல்வியாண்டிற்குள் மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால் உண்மைநிலை வேறுமாதிரியாக உள்ளது.   

தலித் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை பிரச்சனையில் அரசு கவனம் செலுத்தி அந்த அந்த கல்வியாண்டிலேயே தலித் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கிட உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற இன்னும் எத்தனை காலமாகுமோ?

- ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It