முதலாளி வர்க்க ஆட்சியை மாற்றி தொழிலாளி-உழவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்

தனியார்மய, தாராளமயத்தின் மூலம் உலகமயமாக்குவதற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவதோடு உழைக்கும் மக்கள் முன்னணியைக் கட்டுவோம்

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, டிசம்பர் 12, 2013

அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் வெளிவந்துள்ளன. மத்தியிலும், இந்த ஐந்து மாநிலங்களில் மூன்றிலும் ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி, மிசோராத்தில் மட்டுமே மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இராஜஸ்தானில் அதற்கான ஆதரவு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. தில்லியின் 70 இடங்களில் 8-இல் மட்டுமே அது வெற்றி பெற்றுள்ளது.

பாஜக மத்தியப் பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இராஜஸ்தானில் காங்கிரசு கட்சியை மாற்றி பாஜக அதிகாரத்திற்கு வந்திருக்கிறது. தில்லியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தல் களத்தில் புதிதாக இறங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சி, பாஜக-விற்கு கொஞ்சமே பின்தங்கிய நிலையில் மூன்றில் ஒரு பங்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இராஜஸ்தானில் 6,00,000 வாக்காளர்களும், அதே எண்ணிக்கையில் மத்தியப் பிரதேசத்திலும், சத்தீஸ்கரில் 4,00,000 மும், தில்லியில் 50,000 வாக்காளர்களும் எந்த வேட்பாளருக்கும் இல்லை - நோடா (NOTA) என்று வாக்களித்திருக்கின்றனர். அதன் மூலம் அவர்கள் போட்டியிட்ட எல்லா வாக்காளர்களையும் புறக்கணித்திருக்கின்றனர். தேர்தல் வழிமுறை முழுவதற்கும் தங்களுடைய எதிர்ப்பைக் காட்டும் விதமாக பல கிராமங்களும், பழங்குடி சமூகங்களும் இந்தக் கூட்டு முடிவை எடுத்திருக்கின்றனர்.

விண்ணை முட்டும் விலைவாசி, வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்பற்ற நிலை, அரசியல் குற்றமயமாக்கப்பட்டு வருவது அதிகரித்தல், ஊழல்கள், அரசு பயங்கரவாதம் மற்றும் அடிக்கடி திட்டமிட்டு நடத்தப்படும் வகுப்புவாத வன்முறை ஆகியவற்றால் தொழிலாளர்கள் – உழவர்களிடையில் பரந்துபட்ட வெறுப்பு நிலவிவரும் சூழ்நிலையில் இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இத் தேர்தல்கள் மூலம் சில மாநிலங்களில் கட்சி மாற்றங்கள் மட்டுமே நடைபெற்றிருக்கின்றன. சமுதாயத்தின் போக்கில் எந்த மாற்றமும் மாற்றமும் ஏற்பட வில்லை. முன்பிருந்ததே மேலும் தொடர்கிறது.

பொருளாதாரம், இந்திய மற்றும் அயல்நாட்டுப் பெரிய முதலாளிகளுடைய பேராசையை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து வேலை செய்யும். முதலாளி வர்க்க ஆட்சியைக் கட்டிக் காப்பாற்றுவதற்காக மக்களை முட்டாளாக்குவதிலும், அவர்களைத் திசை திருப்புவதிலும் பிளவுபடுத்துவதிலும் பயிற்றுவிக்கப்பட்ட குற்றவியலான, ஊழல் கட்சிகள் செயலாட்சித் துறை அதிகாரத்தைத் தொடர்ந்து இயக்கி வருவார்கள்.

இந்த ஐந்து மாநிலங்களில் மூன்றில் பாஜக அரசாங்கத்தை அமைக்கும் என்ற செய்தி, உலகின் மிகப் பெரிய முதலாளிகளாலும், உலக ஊக சூதாட்டக்காரர்களாலும் மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட்டிருக்கிறது. இதை பங்குச் சந்தை விலைகளின் உடனடி உயர்விலும் காணலாம். மக்களுடைய கோபத்தைப் பயன்படுத்தி காங்கிரசு கட்சியை கீழே இறக்கிவிட்டு, பாஜக-வை முன்னேற்றும் தங்களுடைய திட்டம் வெற்றி பெற்றிருப்பது குறித்து முதலாளிகள் களிப்பில் ஆழ்ந்திருக்கின்றனர். தாராளமயம், தனியார்மயம் மூலம் உலகமயமாக்கும் தொழிலாளர் விரோத, உழவர் விரோத, தேச விரோத திட்டத்தை விரைவு படுத்துவதற்கு, நரேந்திர மோடி தலைமையில் ஒரு பெரும்பான்மையான பாஜக அரசாங்கமே நல்ல ஏற்பாடென ஏகாதிபத்தியமும் பெரு முதலாளி வர்க்கமும் 2014 க்கு தயாரித்து வருகிறார்கள்.

முதலாளி வர்க்க ஆட்சி 

கடந்த இருபது ஆண்டுகளில், மத்தியிலும், மாநிலங்களிலும் எல்லா வகையான கட்சிகளும் ஆட்சி நடத்தியிருக்கின்றன. சிலர் மதச்சார்பற்றதன்மையிலும், பிறர் இந்துத்துவா-வின் பெயரிலும் சூளுரைத்திருக்கின்றனர். எதிரெதிரான கட்சிகள், மனித நேயத்தோடு கூடிய முதலாளித்துவ சீர்திருத்தம், ஒளிரும் இந்தியா, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பன போன்ற ஏமாற்று முழக்கங்களை எழுப்பிக் கொண்டு, ஒருவர் மாற்றி யொருவர் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். எதிரெதிரான கட்சிகளும், முழக்கங்களும் மாறி மாறி வந்திருந்தாலும், இந்தியக் குடியரசின் அதிகாரபூர்வமான நிலைப்பாடும், கொள்கையும் மாற்றமின்றி இருந்து வந்திருக்கிறது.

இந்தக் காலகட்டம் முழுவதும், ஏகாதிபத்திய கொள்ளையமைப்போடு விரைவாக ஒருங்கிணைப்பது என்பது பொருளாதாரத்தின் போக்காகவும், அரசின் கொள்கையாகவும் இருந்து வந்திருக்கிறது. தனியார்மயம், தாராளமயத்தின் மூலம் இந்திய மூலதனத்தை உலகமயமாக்கும் முயற்சியானது, பொருளாதாரத் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்களும், உழவர்களும் ஒன்றுபடுவதைத் தடுப்பதற்காக அரசு மற்றும் தனிநபர் பயங்கரவாதத்தோடும், வகுப்புவாத வன்முறையோடும், எல்லா வகையான சூழ்ச்சியான திசை திருப்பல்களோடும் சேர்ந்து வந்திருக்கிறது.

ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியை மாற்றி வேறொன்றைக் கொண்டு வருவது என்பது, வண்டியை இழுக்கும் குதிரைகளை மாற்றுவது போன்றதாகும். வண்டி எந்த திசையில் செல்வது என்பதை, குதிரைகள் தீர்மானிப்பதில்லை. அதை வண்டி ஓட்டியின் இடத்தில் உட்கார்ந்திருப்பவன் தான் தீர்மானிக்கிறான். இந்தியக் குடியரசில், ஏகபோக முதலாளிகள்தான் வண்டி ஓட்டியின் இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள்.

இந்திய ஏகபோக குடும்பங்களும், ஆங்கில-அமெரிக்க மற்றும் பிற ஏகாதிபத்திய நலன்களும், ஊடகங்கள் மூலம் எந்தக் கட்சியை, எந்தத் தலைவரை முன்னேற்றுவது என்பதைத் தீர்மானிக்கிறார்கள். ஆளும் கூட்டணியில் யார் எந்த அமைச்சரவைக்குத் தலைமை தாங்க வேண்டுமென – துறைகளின் ஒதுக்கீடுகளை தீர்மானிப்பதில் கூட எப்படி ஏகபோக குடும்பங்கள் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்பதை ராடியா ஒலிச் சுருள்கள் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும், சமூக மொத்த உற்பத்தியான ஜிடிபி (GDP) -யின் வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் அதிவிரைவாக ஏகபோக முதலாளித்துவ குடும்பங்கள், இங்கும், அயல்நாடுகளிலும் தங்களுடைய தனிப்பட்ட பேரரசுகளை விரிவுபடுத்திக் கொண்டு வருகின்றனர். உழைக்கும் பெரும்பான்மையான மக்களுடைய நலன்களை விலையாகக் கொடுத்து அவர்கள் கொழுத்து வருகிறார்கள். தொழிலாளர்கள் – உழவர்களுடைய எதிர்ப்பை நசுக்குவதற்காக தன் வலிமையைக் கட்டவிழ்த்து விடுகின்ற அரசு இயந்திரம், முதலாளிகளையும், அவர்களுடைய சொத்துக்களையும் பாதுகாக்கிறது. இந்த நிலை, காங்கிரசு கட்சி, பாஜக அல்லது ஒரு மூன்றாவது முன்னணியென யார் அதிகாரத்தில் இருந்தாலும் தொடர்கிறது.

ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சி அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால், அது முதலாளி வர்க்கத்தின் திட்டத்தோடு சமரசம் செய்து கொண்டு, தன்னை அதற்கேற்ப முறைப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை மேற்கு வங்கத்தில், சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி அரசாங்கத்தின் அனுபவம் காட்டியிருக்கிறது. முதலாளித்துவ சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதும், பெரு நிறுவனங்களின் நில அபகரிப்போடு ஒத்துழைத்ததும், மேற்கு வங்கத்தில், பெரும்பான்மையான தொழிலாளர்களையும், உழவர்களையும் சிபிஎம்-க்கு எதிராக திரும்பச் செய்தது.

பெரும்பான்மையான மக்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு வழியாக தேர்தல்கள் இருப்பது போல முதலாளி வர்க்கமும், அதனுடைய கட்சிகளும் முன் வைக்கின்றனர். ஆனால் இந்தியாவைக் கொள்ளையடிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள ஒரு சிறுபான்மையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரு முதலாளிகள் தங்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளைத் தீர்த்துக்கொண்டு, தங்களுடைய சமூக விரோத தாக்குதலைத் தொடர தேர்தல்கள் உண்மையில் சேவை செய்கின்றன.

கட்சிகளும் அரசாங்கங்களும் மாறினாலும் அரசானது, முதலாளி வர்க்க ஆட்சியின் அங்கமாக மாற்றமின்றித் தொடர்கிறது.

நவ காலனிய அரசு

தில்லியில் இப்போது குடியரசுத் தலைவரின் ஆட்சி அறிவிக்கப்படலாம். குடியரசுத் தலைவரின் ஆட்சி அறிவிக்கப்படும் போதெல்லாம், அரசு இயந்திரத்தின் பங்கு முழுமையாக வெட்ட வெளிச்சமாகிறது. எந்தக் கட்சியும் ஒரு அமைச்சரவையை அமைக்கிறதோ இல்லையோ, அதிகாரத்துறை, இராணுவம், துணை இராணுவம், காவல்துறை, சிறைக்கூடம் ஆகியவை முதலாளி வர்க்கத்தின் ஒட்டுமொத்த பணிகளை மேலாண்மை செய்யவும், அதனுடைய நலன்களைப் பாதுகாக்கவும் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் ஆவர்.

சுரண்டப்பட்ட தொழிலாளர்கள், உழவர்கள், பழங்குடி மக்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினருடைய எல்லா எதிர்ப்பையும் நசுக்குவதற்காக அணிதிரட்டப்பட்ட முறையான வன்முறையைப் பயன்படுத்தி சுரண்டல் மற்றும் கொள்ளையமைப்பை பாதுகாப்பதற்கான ஒரு கருவியே அரசாகும்.

நமது நாட்டிலுள்ள அரசானது, ஆங்கிலேய ஆட்சியின் கொடுமையான இயந்திரத்தின் தொடர்ச்சியும், மேலும் தீவிரப்படுத்தப்பட்டதும் ஆகும். ஆங்கில வழி கல்வி கற்ற அதிகாரிகளின் தலைமையில் உள்ள மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்பும், வகுப்புவாத அடிப்படையில் திரட்டப்பட்ட மத்திய ஆயுதப்படைகளும் காலனிய காலத்திலிருந்து அப்படியே தக்கவைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அது போலவே, கருப்பு கோட் அணிந்திருக்கும் நீதிபதிகளையும், வழக்குறைஞர்களையும் கொண்ட நீதித்துறை அமைப்பு, சிறைச் சாலைகள் மற்றும் காவல் படைகள். காலனியவாதிகள் நிறுவிய “சட்டத்தின் ஆட்சி”யே இன்றும் தொடர்கிறது. அதன்படி, ஏகாதிபத்திய கொள்ளையும், முதலாளித்துவ சுரண்டலும் சட்டரீதியானவையாகும். மற்றொரு பக்கம், உழைக்கும் மக்களுடைய எந்த எதிர்ப்பும் ஒரு “சட்ட ஒழுங்குப் பிரச்சனை”யாக, இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்துஸ்தான் கெதர் கட்சியின் மாவீரர்கள், காலனிய அரசை எந்த வகையிலும் ஒப்புக்கொள்ளாமல் சமரசமின்றி கடுமையாக எதிர்க்க வேண்டுமென அறைகூவல் எழுப்பினர். பகத்சிங்கும், பிற புரட்சியாளர்களும், காலனிய ஆங்கிலேய இந்திய அரசை உடைத்தெறிந்து விட்டு, எல்லா வகையான சுரண்டலையும், அடிமைத்தனத்தையும் அகற்றக்கூடிய ஒரு புதிய இந்திய அரசை உருவாக்க வேண்டுமென கேட்டனர். காலனிய எதிர்ப்புப் போராட்டத்திற்கு, பெருமுதலாளிகளும், பெரு நிலவுடமையாளர்களும் அவர்களுடைய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் முஸ்லீம் லீக் மூலம் துரோகமிழைத்தனர். 1947-இல் துரோகத்தனமான முதலாளி வர்க்கம் கொண்டுவந்த ஏற்பாட்டின் விளைவாக, நமது சமுதாயம் மிகவும் ஒடுக்குமுறையான இரத்தம் உறிஞ்சும் இயந்திரமான நவ காலனிய இந்தியக் குடியரசில் சிக்கியிருக்கிறது.

1950 அரசியல் சட்டத்தின் அடிப்படை வரையறையானது, பிரித்தாள்வது என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்த ஆங்கிலேய காலனிய அதிகாரத்தின் அடிப்படை வரையறையின் தொடர்ச்சியாகும். இந்தியக் குடியரசும், அதன் அடிப்படைச் சட்டமும், அரசியல் அதிகாரத்தை முதலாளி வர்க்கத்தின் கைகளில் உடும்பிப் பிடியாக வைத்திருக்க வடிவமைக்கப்பட்டதாகும்.

இந்திய மக்களுடைய விடுதலைக்கு, ஆங்கிலேய காலனியத்தின் முழு பாரம்பரியத்திலிருந்தும், அதனுடைய கருத்தியலிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் “சட்ட ஆட்சி”யிலிருந்தும் முழுமையாக விடுபட்டு வருவது அவசியமாகிறது. இரத்தம் உறிஞ்சும் இந்த நவ காலனிய அரசிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். தன்னுடைய குறுகிய நலன்களை முன்னேற்றுவதற்கு இந்திய முதலாளி வர்க்கம் பயன்படுத்தும் இந்த பழைய முறை கருவியானது, முழுவதுமாக அழிக்கப்பட வேண்டும். அதை ஒரு புதிய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு புதிய முறை கருவியான புதிய அரசைக் கொண்டு மாற்றியமைக்க வேண்டும். இது தொழிலாளி வர்க்கத்தையும், கம்யூனிச இயக்கத்தையும் எதிர்கொண்டுள்ள உடனடி அரசியல் பணியாகும்.

புரட்சிகர திட்டம்

உழைக்கும் பெரும்பான்மையான மக்கள் சந்தித்துவரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு, முதலாளி வர்க்க ஆட்சியின் ஒரு கருவியாகிய இந்த நவ காலனிய அரசை மாற்றி, தொழிலாளி – உழவர் ஆட்சியின் ஒரு கருவியாகிய ஒரு புதிய அரசை அமைப்பதாகும். அரசியல் அதிகாரத்தைத் தங்களுடைய கைகளில் எடுத்துக் கொண்டு, உழைப்பவர்கள் பொருளாதார அமைப்பை மாற்றியமைத்து, அனைவருடைய வளமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்யமுடியும்.

டாடாக்கள், அம்பானிகள், பிர்லாக்கள் மற்றும் பிற ஏகபோக குடும்பங்களின் தலைமையில் உள்ள முதலாளி வர்க்கம், தனியார் மற்றும் அரசு முதலாளித்துவ உடமை உட்பட பல்வேறு வடிவங்களில் பெரும்பான்மையான சமூக உற்பத்திக் கருவிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். ஏகபோக முதலாளிகளும், அவர்களுடைய முகவர்களும் அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் இயக்குனர் குழுவில் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் மக்களுடைய ஒன்று குவிக்கப்பட்ட நிதி சேமிப்பை எங்கு பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கிறார்கள். முக்கிய உற்பத்திக் கருவிகள் மீதும், நிதி மற்றும் வாணிகத்தின் மீதும் தங்களுடைய கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, தொழிலாளர்கள், உழவர்கள் உற்பத்தி செய்யும் மதிப்பில் அதிகப்படியான பங்கை சுருட்டிக் கொள்கிறார்கள். இதன் விளைவாக, உழைப்பவர்களுக்கு கிடைக்கும் சமூக உற்பத்தியானது சுருங்கி வருகிறது.

தாராளமயமும், தனியார்மயமும் எல்லா பொருளாதார செயல்பாடுகளிலும், சமூக சேவைகளிலும் முதலாளித்துவ இலாபம் ஈட்டுபவர்களுக்கு இடத்தை மேலும் விரிவுபடுத்துகிறது. அது உழைக்கும் பெருந்திரளான மக்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மேலும் மோசமாக்கி வருகிறது.

பொருளாதாரத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு, முதலாளித்துவ சொத்துக்களை சோசலிச அரசு சொத்துக்களாக மாற்றுவதிலும், சிறு உழவர்களுடைய நிலங்களை தன்னார்வ ஒன்றிணைப்பின் மூலம் பெரும் கூட்டுறவு சொத்தாக மாற்றுவதிலும் இருக்கிறது.

சோசலிச அரசு சொத்து என்றால், தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் அரசு இருக்க வேண்டும் என்று பொருள். அவர்கள், தேசிய செல்வங்களை அரசு பாதுகாப்பதையும், அது எந்த தனியாருக்கு விற்கப்படுவதை தடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மற்றவர்களுடைய உழைப்பைச் சுரண்டும் “உரிமை”யை குற்றமாக ஆக்கும் அதே நேரத்தில், சமுதாயத்தின் பொது நலன்களையும், அதனுடைய உறுப்பினர்களுடைய நலன்களையும் அரசு பாதுகாப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு சமுதாயத்தின் இப்படிப்பட்ட ஒரு புரட்சிகர மாற்றத்திற்கு தொழிலாளி வர்க்கம் மட்டுமே தலைமை தாங்க முடியும். உழைக்கும் வர்க்கத்திற்கு எந்த தனிச் சொத்தும் இல்லை. எனவே, உற்பத்திக் கருவிகளை சமூக உடமையாக மாற்றுவதன் மூலம், அது இழப்பதற்கு எதுவும் இல்லை, மாறாக அதன்மூலம் அது எல்லாவற்றையும் பெற முடியும்.

முதலாளித்துவத்திலிருந்து சோசலிச மாற்றத்தைக் கொண்டுவர, உழவர்களோடு கூட்டணி அமைத்து தொழிலாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாக ஆக வேண்டும். இதை இன்றுள்ள பாராளுமன்ற சனநாயகம் மற்றும் அதனுடைய தேர்தல் வழிமுறை என்ற அரசியல் அமைப்பிற்குள் செய்ய முடியாது. உழைக்கும் பெரும்பான்மையான மக்களைப் பிளவுபடுத்துவதன் மூலமும், ஒடுக்குவதன் மூலமும் முதலாளி வர்க்க ஆட்சியைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இன்றுள்ள இந்தியக் குடியரசு மற்றும் அதன் அரசியல் சட்ட வரையறைக்குள் தொழிலாளர்-உழவர் ஆட்சியை நிறுவ முடியாது.

மூலதன உடமையாளர்களுடைய ஆட்சிக் கருவிக்கு பதிலாக, உழைப்பவர்களுடைய ஆட்சிக் கருவியாக, தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு புதிய அரசு தேவைப்படுகிறது. அது, உழைப்பாளர்கள் மற்றும் உழவர்கள், பெண்கள் மற்றும் ஒவ்வொரு மனிதருடைய உரிமைகளுக்கும், இந்திய ஒன்றியத்தின் அங்கத்தினராக இருக்கும் ஒவ்வொரு தேசத்திற்கும் சுய நிர்ணய உரிமைக்கும் உத்திரவாதமளிக்கும் ஒரு புதிய அரசியல் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

உழைப்பவர்களுடைய அதிகாரமாக, ஒரு புதிய அரசு அதிகாரத்தை நிறுவும் முக்கிய நோக்கத்தோடு, இந்த 21-ஆம் நூற்றாண்டில் ஒரு புதிய அரசியல் சட்டத்தை வகுப்பதற்காக, ஒரு அரசியல் சட்ட நிர்ணய அவையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென கேட்டுத் தொழிலாளி வர்க்கமும், எல்லா முற்போக்கு சக்திகளும் போராட வேண்டும். தொழிலாளர்கள் தங்களிடையிலிருந்து சட்ட மன்றங்களின் தேர்தல்களுக்கு வேட்பாளர்களை நிறுத்துவதற்கான வாய்ப்பை விரிவுபடுத்துவதற்காக, உடனடியான அரசியல் சீர்திருத்தங்களுக்காக நாம் போராட வேண்டும். எந்தத் தேர்தலுக்கும் முன்னர், வேட்பாளர்களை மக்கள் முடிவு செய்வதற்கான உரிமைக்காகவும், சட்ட வரைவுகளை முன்வைக்கவும், தேர்ந்தெடுத்தவர்களைத் திருப்பியழைக்கும் உரிமைக்காகவும், நாம் போராட வேண்டும்.

முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாற்றத்தைக் கொண்டு வரும் முக்கிய நோக்கத்தோடு, தனியார்மயம் தாராளமயத்தை நிறுத்துதல், வங்கி, காப்பீடு மற்றும் மொத்த வணிகத்தை தேசியமயமாக்குவது போன்ற உடனடி நடவடிக்கைகளுக்காக தொழிலாளி வர்க்கம் போராட வேண்டும். நுகர்பொருட்களின் கடுமையான விலை உயர்வை தடுத்து நிறுத்த, வாணிகத்திலும், நிதித் துறைகளிலும் தனிப்பட்ட இலாப நோக்கத்தைக் களைவது போன்ற உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இது, எல்லா நுகர் பொருட்களையும் கட்டுப்படியாகக் கூடிய விலைகளில் போதுமான அளவிற்கு வழங்குவதற்கும், உழவர்களின் விளை பொருட்களை நிலையான, இலாபகரமான விலையில் கொள்முதல் செய்வதற்கும் உத்திரவாதமளிக்கும் ஒரு நவீன பொது வினியோக அமைப்பு முறையை நிறுவுவதற்கு அவசியமாகும்.

புதிய தொழிலாளர் – உழவர் ஆட்சியைக் கட்டும் அடிக்கற்களாகவும், உழைக்கும் மக்களுடைய அரசியல் ஒற்றுமையின் கருவிகளாகவும், தொழிலாளர்களுடைய ஒற்றுமைக் குழுக்களை தொழிற்பேட்டைகளிலும், மக்கள் குழுக்களை குடியிருப்புப் பகுதிகளிலும் கட்டுகின்ற வேலையை கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கி நடத்த வேண்டும்.

உழைக்கும் மக்கள் முன்னணி

முதலாளித்துவ ஏகாதிபத்திய சீர்திருத்தத் திட்டம் மற்றும் அதோடு இணைந்து வரும் அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவும், நவீன காலத்திற்கு ஏற்ற முற்றிலும் புதிய அரசியல் சட்டத்தோடு, இந்திய மறுமலர்ச்சிக்கான திட்டத்தையெட்டியும், எல்லா உழைக்கும் மக்களுடைய ஐக்கிய முன்னணியைக் கட்டும் ஒரே நோக்கத்திற்காக கம்யூனிஸ்டு கெதர் கட்சி முனைப்போடு வேலை செய்து வருகிறது. இந்த உழைக்கும் மக்கள் முன்னணியைக் கட்டுகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பணியில் சேர்ந்து கொள்ளுமாறு எல்லா கம்யூனிஸ்டுகளையும், உழைக்கும் வர்க்கத்தின் எல்லா கட்சிகளையும் நாம் அழைக்கிறோம்.

அரசின் தன்மையிலும், பொருளாதாரத்தின் போக்கிலும் ஒரு புரட்சிகர மாற்றத்திற்கான தேவையை மக்கள் உணர்ந்து கொள்ளச் செய்யும் நோக்கத்தோடு அண்மையில் நடைபெற்ற தேர்தல் களத்தில் கம்யூனிஸ்டு கெதர் கட்சி பங்கேற்றது. இறையாண்மையை மக்களிடம் வைக்கும் மக்களாட்சி என்ற ஒரு சனநாயகத்தின் உயர் வடிவத்திற்கு வழி வகுக்கும் திட்டத்தை நாம் முன்வைத்தோம்.

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி, சோசலிஸ்டு யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்டு), தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், மற்றும் பல அமைப்புக்களின் ஆதரவு பெற்ற மக்களாட்சிக்கான தில்லி தேர்தல் பரப்புரை, தொழிலாளி வர்க்கம் மற்றும் பரந்துபட்ட மக்களுடைய விழிப்புணர்வில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள், தொழிலாளர்களுடைய உரிமைகளை நடைமுறைப் படுத்துவதற்காகவும், வகுப்புவாத வன்முறையை நடத்திய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், மனித உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராகவும் தீரத்தோடு ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர். கட்சிகளை அதிகாரத்தில் அமர்த்தாத, மக்களே அதிகாரத்தை செயல்படுத்த வழிவகை செய்யும் கடமையைக் கொண்டதாக கட்சிகள் இருக்கும் ஒரு புதிய அரசியல் சட்டத்திற்காகவும், ஒரு புதிய அரசுக்காகவும், அரசியல் வழிமுறைக்காகவும் அவர்கள் போராடினர்.

தில்லி தொழிலாளி வர்க்க பரப்புரையின் வெற்றியானது, அது அரசியல் சூழ்நிலையில் கொண்டு வந்துள்ள புதிய தரத்தில் இருக்கிறது. இந்த முயற்சியில் தொழிலாளி வர்க்க, கம்யூனிச இயக்கத்தின் எல்லா கட்சிகளும், ஒன்றுபட்டிருந்தால் இந்த வெற்றி மேலும் சிறப்பானதாக இருந்திருக்கும்.

முடிவுரை

தொழிற் சங்கங்கள், சங்கங்களின் கூட்டமைப்பு உட்பட தொழிலாளி வர்க்கம் மற்றும் அதன் எல்லா கட்சிகளையும் அமைப்புக்களையும் எதிர் கொண்டுள்ள மையப் பணியானது, எல்லா உழைக்கும் மக்களுடைய ஒரு ஐக்கிய அரசியல் முன்னணியைக் கட்டி வலுப்படுத்துவதாகும். இந்த உழைக்கும் மக்கள் முன்னணியானது, இந்தியக் குடியரசை மீண்டும் திருத்தியமைக்கவும், முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு புரட்சிகர மாற்றத்திற்கான பாதையைத் திறந்து விடும் திட்டத்தையொட்டியும் கட்டப்பட வேண்டும். தாராளமயம், தனியார்மயம் மூலம் உலகமயமாக்கும் திட்டத்திற்கு இதுவே உண்மையான மாற்றாகும்.

உழைக்கும் பெரும்பான்மையான மக்கள் வாழும் இடங்களிலும், வேலை செய்யுமிடங்களிலும் மக்கள் குழுக்களையும், தொழிலாளர் ஒற்றுமைக் குழுக்களையும் கட்டி நாம் வலுப்படுத்துவோம்

முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து, இரத்தம் உறிஞ்சும் நவ காலனிய அரசிலிருந்து நமது சமுதாயத்தை விடுதலை செய்து, பிற்போக்காகவும், ஒடுக்குமுறையாகவும் இருக்கும் எல்லாவற்றையும் துடைத்தெறிந்து, எல்லா வகையான சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, அனைவரின் வளமைக்கும், பாதுகாப்பிற்கும் உத்திரவாதமளிக்கும் 21-ஆம் நூற்றாண்டின் புரட்சிக்காக (கெதருக்காக) நாம் தயாராகுவோம்!

தனியார்மயம் தாராளமயம் மூலம் உலகமயமாக்குவதற்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதோடு, உழைக்கும் மக்கள் முன்னணியைக் கட்டுவோம்!

உழைப்பாளர்களுடைய பாதை.. மக்களாட்சியின் பாதை!

விடுதலைப் போர் தொடர்கிறது!

Pin It