ranipettai agitation 600

இராணிப்பேட்டை சிப்காட்டில் மூடப்பட்ட தொழிற்சாலைகளைத் திறக்கக் கோரி 2000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மார்ச் 4 அன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறது. இங்குள்ள கழிவு தொட்டி சனவரி 31-ம் தேதி நள்ளிரவு உடைந்து 10 தொழிலாளிகள் பலியாகினர். (விவரங்களுக்கு தனிக் கட்டுரையைப் பார்க்கவும்). இந்தப் படுகொலைக்குக் காரணமான முதலாளிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்காமலும், இத்தகைய விபத்துக்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் அரசாங்கம் இருந்து வருகிறது. இத்தனை ஆண்டுகளாக இந்த சுத்தகரிப்பு நிலையத்தை செயல்பட அனுமதித்து வந்த மாசு கட்டுப்பாட்டு வாரியமும், அரசின் பிற அதிகாரிகளும் இந்த விபத்திற்குப் பின்னர் அதைச் சட்ட விரோதமானதெனக் கூறி, சுத்தகரிப்பு நிலையத்தின் கீழ் இயங்கிவந்த 86 தொழிற்சாலைகளின் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர். இதனால், சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் ஒரே நாளில் வேலையிழந்தனர்.

வேலையிழந்த தொழிலாளர்கள் அரசின் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் தங்களுடைய வேலைகளை மீட்பதற்கான கோரிக்கைகளை கொடுத்துள்ளனர். அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்துவதற்காக, வேலையிழந்து தெருவில் நிற்கும் தொழிலாளர்கள் ’சிட்கோ’ நுழைவு வாயில் அருகில் மார்ச் 4 அன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மூடப்பட்ட தோல் தொழிற்சாலைகளுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க வேண்டும். தொழிற்சாலைகளைத் திறப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து அமைதியான முறையில் தொழிலாளர்கள் போராடினர்.

கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத அரசு அதிகாரிகள்

ஆனால் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களுடைய இந்தப் போராட்டத்தைப் பற்றி அரசு அதிகாரிகள் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. எந்த அரசு அதிகாரியும் போராடும் தொழிலாளர்களைச் சந்திக்கவோ, அவர்களுடைய பிரச்சனைக்குத் தீர்வு காணவோ முன்வரவில்லை. அரசு அதிகாரிகளின் இந்தத் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து, தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் வேலையையும் வாழ்வுரிமையையும் பறித்து தொழிலாளர்களுடைய உரிமைகளை மீறிய அரசாங்கம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையைக் கொண்டு தடியடி நடத்தினர்.

எனினும் தங்களுடைய வேலையும், வாழ்வுரிமையும் கிட்டும் வரை, இந்தப் போராட்டத்தைத் தொடர்வதில் இந்தத் தொழிலாளர்கள் உறுதியாக உள்ளனர். 

Pin It