"முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்கிற பழமொழிக்கு ஏற்ப..  தமிழகத்தில் துக்ளக் தர்பார் தொடங்கி விட்டது. "ஒரு அழுக்கு இன்னொரு அழுக்கை அகற்றாது” என்றார் நபிகள் நாயகம். நிகழ்காலத் தவறுகளின் மீதுள்ள கோபத்தில், கடந்த காலத் தவறு ஆட்சிக்கு வந்துள்ளது.

தன்னை மகாராணியாக கருதிக்கொள்ளும் ஜெயலலிதாவிற்கு, தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்பதை நினைவுப்படுத்த வேண்டிய நேரம், இவ்வளவு சீக்கிரம் வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சமச்சீர் கல்வித்திட்டம்  கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்பதைக் காரணம் காட்டி அவசர அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி அரசு நிறுத்தி வைத்துள்ளது.

மனுதர்மம் எப்படி நால்வருணம் என்கிற சாதிய அமைப்பைக் காப்பற்றுகிறதோ, அதைப் போலவே நான்கு வகையான கல்வி முறைகள் இங்கே காப்பற்றப்படுகின்றன. அரசுப் பள்ளிகள், மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இண்டியன், ஓரியண்டல் என நான்கு வகையான பாடத்திட்டங்கள், தனித் தனியாக இயங்குகின்றன. குழந்தைகள் விசயத்தில் காட்டப்படும் இந்த அநாகரிகமான வேறுபாடு அருவெறுக்கத்தக்கது. அதை மாற்ற முனைந்த சமச்சீர் கல்வித்திட்டத்தை ஜெயலலிதா அரசு நிறுத்தி வைத்துள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டம் என்பது திடீரென்று முளைத்த மழை நேரத்துக் காளான் அல்ல. அதற்காக கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பத்தாண்டு காலம் போராடி இருக்கிறார்கள். அதன் விளைவாக, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் 2006 ஆம் ஆண்டு ஒரு குழுவை அன்றைய கலைஞர் அரசு அமைத்தது. அந்த குழு மாவட்டந்தோறும், பள்ளிக்கல்வியின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

பின்னர், 2007 இல் முன்னாள் மாநகராட்சி ஆணையர் விஜயகுமார் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஏற்கனவே நியமிக்கப்பட்ட முத்துக்குமரன் குழு அறிக்கையின் கருத்துக்கள், பரிந்துரைகள் ஆகியவற்றின் நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்தது. இதன் பிறகு, பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து தெரிந்து வர 2008 ஆம் ஆண்டு ஒரு கல்வியாளர் குழுவை அரசு நியமித்தது.

பின்னர் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, 26.08.2009 அன்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நான்கு விதமான பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டது. சட்ட வடிவு கொண்டு வரப்பட்டது. அதன் முதல் கட்டமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி 2010 இல் கொண்டு வரப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு 2011-இல் கொண்டு வரப்படும் என முந்தைய அரசு அறிவித்து இருந்தது.

அதிகாரம் தலைக்கு ஏறிய சில தினங்களுக்குள்ளேயே ஜெயலலிதா சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து விட்டார். ஏழைகளுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் ஒரே கல்வி என்பதை ஏற்றுக் கொள்ள அவரின் பார்ப்பனீய ஆதிக்க மனம் மறுக்கிறது. எல்லா பொதுத் துறை நிறுவனங்களும் தனியார்மயமாக மாறும் அவலமான உலகமய சூழலில், தனியார் கல்வி நிறுவனங்களின் லாப வெறிக்கு துணை போயிருக்கிறது இன்றைய அரசு.

உயர்நீதி மன்றத் தீர்ப்பும், மக்களின் ஆவேசமும் மட்டுமே இதற்கு மாற்றான சூழலைக் கட்டமைக்க முடியும். ”ஆடுகளும் மாடுகளும் இன்று தான் அமைச்சர்கள் ஆயினர்”  என்ற கண்ணதாசன் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் ஆளுமையற்றவர்களை ஜெயலலிதா அமைச்சர்களாக்கி உள்ளார். ஜெயலலிதாவின் அமைச்சர்கள் யாரும் 150 கல்வியாளர்களை கொண்டு நியமிக்கப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தை நிராகரிக்கும் தகுதி படைத்தவர்கள் இல்லை.

பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் பலரும் இதற்கு கண்டணம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்து முன்ணணித் தலைவர் இராம.கோபாலன் சமச்சீர் கல்வித்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளார். இந்த முடிவு பிற்போக்குத் தன்மை வாய்ந்தது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. பாடத்திட்டத்தில் ஆட்சேபணைக்குரிய பகுதி இருந்தால், அதை மட்டுமே நீக்க வேண்டுமே தவிர, ஒட்டு மொத்தமாக நீக்குவது என்பது தவறான முன்னுதாரணம் ஆகும்.

'அரசு மதுபானம் விற்பது தவறு’ என ஒட்டுமொத்தமாக மதுவிலக்கு கொண்டு வருவதில் அதிரடி முடிவு எடுப்பாரா ஜெயலலிதா? செய்ய மாட்டார். ஏனெனில், அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பால், இலவசத் திட்டங்கள் என்னும் ஏமாற்றுத் திட்டங்களை நிறுத்த வேண்டி வரும். இதில் மட்டும் கலைஞர் அரசின் பிற்போக்குக் கொள்கைகளைப் பின்பற்றுவது ஏன்? 

'ஒரு விசயம் உருப்படாமல் போக வேண்டும் என்றால் அதை கிணற்றில் போடு. இல்லையென்றால் அதை விசாரிக்க கமிசன் போடு' என்றார் இராஜாஜி. ஜெயலலிதா கிணற்றில் போட வழியின்றி வல்லுநர்கள் குழுவைப் போட்டிருக்கிறார். அச்சடித்த புத்தகங்கள் குழந்தைகளின் கனவுகளில் மண் அள்ளிப் போட காத்திருக்கின்றன. மக்கள் வரிப்பணம் வழக்கம் போல 200 கோடி வீணடிக்கப்பட்டிருக்கிறது.

பெற்றோர்களை போராடத் தூண்டுகிறது ஜெயலலிதா அரசு. மக்களின் போராட்டம் ஒரு போதும் தோற்றுப் போவதில்லை என்பதை நிரூபிக்கும் காலம் மீண்டும் கூடி வந்திருக்கிறது. மாணவர்களின் எதிர்காலம் பற்றிய விசயத்தில் அரசின் இத்தகைய மோசமான போக்கு நீடிக்குமானால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.  

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It