தமிழ் நாட்டின் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், ஃபிப்ரவரி 23ஆம் நாள் 2021-2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை என்ற பெயரில் முழு ஆண்டுக்கான நிதி நிலையறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்!. வரும் மே மாதத்தில் அ.தி.மு.க அரசின் ஆட்சிக் காலம் நிறைவடைகிறது.
அடுத்த அரசு அமையும் வரை மேற்கொள்ளவேண்டிய அரசின் செலவினங்களுக்குப் பேரவையின் ஒப்புதல் பெறுவதற்காகவே இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவேண்டும் என்ற நியதியை மீறி வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு அ.தி.மு.க அரசிற்கான பிரச்சார அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை, திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கை, பொருளாதார வளர்ச்சி சார்ந்த தரவுகள் அனைத்துமே அதில் நம்பகத்தன்மை இல்லாத போதும் அனைவரும் அறியும் வண்ணம் இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது.
ஆனால் தமிழ் நாடு மற்றும் பிற மாநிலங்களின் பொருளாதார நிலை, நிதி நிலை குறித்த அறிக்கைகள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படாதது பெரும் குறைபாடாக தொடர்கிறது. இதனால் நிதிநிலை அறிக்கையில் அளிக்கப்படும் நிதி ஒதுக்கீடுகளுக்கான வாக்குறுதிகள் எந்தளவிற்கு நிறைவேற்றப்படுகின்றன என அறிய முடியாத வெளிப்படைத்தன்மையற்ற நிலையே தொடர்கிறது.
அ.தி.மு.க அரசு பயிர்க் கடன் தள்ளுபடிக்கு ரூபாய் 12 ஆயிரத்து 110 கோடி நிதி ஒதுக்குவோம் என அறிவித்தது ஆனால் அதில் 5,000 கோடி மட்டுமே நிதியமைச்சர் ஒதுக்கியுள்ளார். வேளாண் துறைக்கு ரூ.11, 982 கோடியும், ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.22, 218.58 கோடியும், பயிர்க் கடன் தள்ளுபடிக்கு ரூ.5,000 கோடியும் ஒதுக்கிடப்பட்டுள்ளது.
நீதி, நிர்வாகம் - ரூ.1,437 கோடி உயர் கல்வித்துறைக்கு ரூ.5,478 கோடியும், மின்துறைக்கு ரூ.7,217 கோடியும் மீன்வளத்துறைக்கு ரூ.580 கோடியும், கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடியும், காவல் துறைக்கு ரூ.9,567 கோடியும், தீயணைப்பு மீட்புத்துறைக்கு ரூ.436.68 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ரூ.688.48 கோடியும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.374.88 கோடியும், ஆதிதிராவிடர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.13 ஆயிரத்து 967.58 கோடியும், பழங்குடியினருக்கான துணை திட்டத்திற்கு ரூ.1,276.24 கோடியும், உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.1,932.19 கோடியும், பழங்குடியினர் வசிக்கும் தொலைதூரப் பகுதிகளில் பள்ளிகள் தொடங்க முன்வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு ரூ.4.07 கோடியும், மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,953.98 கோடியும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2,634 கோடியும், கைத்தறி,துணிநூல் துறைக்கு ரூ.1,224.26 கோடியும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.229.37 கோடியும் ஒதுக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2022ல் தமிழக அரசின் கடன் ரூ.5.7 லட்சம் கோடியாக உயரும் என்று அறிவித்த நிதியமைச்சர் ஊரடங்கு காரணத்தால், 2019-20ஆம் ஆண்டு திருத்த மதிப்பீடுகளில் எதிர்பார்த்த வருவாய் இலக்கை மாநில அரசால் அடைய முடியவில்லை. அரசுக்கு வரிகளின் மூலம் வரக்கூடிய வருமானம், ஏறத்தாழ 18 விழுக்காடு குறைந்துள்ள நிலை உள்ளது.
இதன் விளைவாக, 2019-20ஆம் ஆண்டின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.24 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புடைமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நிபந்தனைகளின் படி வணிகம் மேற்கொள்வதை எளிதாக்குதல், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் ஆகிய இவ்விரண்டு சீர்திருத்த நடவடிக்கைகளை அ.தி.மு.க அரசு நிறைவேற்றியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் 2 விழுக்காடு கூடுதல் கடன் பெறுவதற்கு மத்திய அரசு அளித்த அனுமதியின்படி, தமிழக அரசு கடன் பெற்றுள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் மூலதனச் செலவினம் 14.41 சதவீதமாக உயர்ந்து 43 ஆயிரத்து 170.61 கோடி ரூபாயாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்திய தலைமை வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவை அரசு அமைத்தது. இந்தக் குழு, பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள், மாநில அரசின் கொள்கை முடிவுகள் குறித்து பகுப்பாய்வை மேற்கொண்டது.
இக்குழு, 2020-21 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 1.31 விழுக்காடாகக் குறையும் அல்லது 0.61 விழுக்காடு குறுக்கமடையும் எனவும் கணித்துள்ளது. பல்வேறு துறைகள் சார்ந்த 413 பரிந்துரைகளையும் குறிப்புகளையும் இக்குழு வழங்கியது. 2020-21 ஆம் ஆண்டில், குறைந்தபட்சம் 10 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் மூலதனச் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.
15-வது நிதிக்குழு அதன் அறிக்கையில், மத்திய அரசால் விதிக்கப்பட்ட மேல்வரிகள், கூடுதல் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கைக் குறிப்பிட்டுள்ளது. இவை, மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடிய வரி வருவாயின் பங்காக இல்லை. மத்திய அரசின் மொத்த வரி வருவாயில், மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களின் பங்கானது, 2011-12ஆம் ஆண்டில் 10.4 சதவீதத்திலிருந்து, 2019-20 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் 20.2 சதவீதமாக அதிகரித்துள்ளது என அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசிடமிருந்து, மாநிலத்திற்கான வரிப் பகிர்வு 41 சதவீதமாகப் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. 14-வது நிதிக்குழுவில், மாநிலங்களுக்கு இடையேயான நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு 4.023 சதவீதத்திலிருந்து, 15-வது நிதிக்குழுவின் இடைக்கால அறிக்கையில் 4.189 சதவீதமாக ஓரளவிற்கு உயர்ந்து, தற்போது இறுதி அறிக்கையில் 4.079 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
14-வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட தொகையை விட, தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மொத்த மானியத் தொகை 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளில் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தேசிய பேரிடர் துயர்தணிப்பு நிதியில் இருந்து தமிழகத்திற்குப் போதிய நிதி வழங்கவில்லை என்றும், 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார் என்றபோதும் தமிழ் நாட்டின் இறையாண்மைக்காக குரல் உயர்த்தாமல் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசிடம் அ.திமு.க அரசு தேர்தல் கூட்டணிக்காக அடிபணிந்து சரணடைந்துள்ளது.
- சமந்தா