மு.ச. சுந்தரராஜ் ஆகிய நான் 05.06.1986இல் பிறந்தேன். நான் இருக்கும் ஊர் வாழ்வாங்கி, அருப்புக்கோட்டை வட்டம், விருதுநகர் மாவட்டம். இராமநாயக்கன்பட்டியில் மு.சி.பு. புன்னைமுத்து நாடார் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அப்பா முனியக்காளை நாதசுவரக் கலைஞர். அம்மா சந்திரா இல்லத்தரசி. எனக்கு இரண்டு அண்ணன்கள்; மூத்தவர் பத்தாம் வகுப்பு வரை படித்தார். இளையவர் ஆறாம் வகுப்பில் இடைநிறுத்தம் செய்து விட்டார்.

sundar vazhvangiகுடும்ப வறுமை காரணமாய் என்னால் பத்துக்கு மேல் பள்ளிப் படிப்பைத் தொடர முடியவில்லை. வேலைக்குச் சென்றேன். உணவகத்தில் எச்சில் இலை எடுப்பது, பெட்ரோல் நிரப்புவது, செருப்புத் தைப்பது… என்று நான் செய்யாத வேலை இல்லை, எனக்குள் ஓர் அறிவு வெறி இருந்து கொண்டே இருந்தது. படிக்க வேண்டும், கற்க வேண்டும்! வேலை செய்து கொண்டே மின்னணுவியல் (எலக்ட்ரானிக்ஸ்) படித்தேன். தொலைக்காட்சி, வானொலி பழுது நீக்கம் செய்யக் கற்றுக் கொண்டேன். இடையில் விளம்பரம் பார்த்து 50 ரூபாய் கட்டணச் சலுகையோடு ஒரு பயிற்சி நிறுவனத்தில் கணினிக் கல்வி படித்து முடித்தேன். மறுபுறம், வேலை தேடும் ஆசையில் சென்னையிலும் கோவையிலும் வேலைவாய்ப்புத் தரகர்களிடம் பணம் பறிகொடுத்தேன்.

நான் படிக்கும் காலத்தில் புஇமு தோழர்கள் எங்கள் பகுதிக்கு வந்து அறிவுசெறிந்த புத்தகங்கள் படிக்கக் கொடுப்பார்கள். என் வாசிப்புப் பழக்கம் விரைந்து வளர்ந்தது. தாய், நினைவுகள் அழிவதில்லை, கார்ல் மார்க்ஸ் பற்றிய புத்தகங்கள் படித்தேன்.

சிறுவயதிலிருந்தே கவிதை எழுதுவேன். கையெழுத்து நன்றாக இருப்பதால் பள்ளி விழாவின் போது கரும்பலகையில் என்னை எழுதச் சொல்வார்கள். எனக்கு அது பெரிய உந்துதலாய் அமைந்தது. வறுமை காரணமாக நகரத்தில் கூலி வேலைக்குச் செல்ல நேரிட்டாலும், கணினித் துறையில் முதலில் சம்பளமில்லாமலே, பிறகு தினக்கூலி 30 ரூபாய் தொடங்கி. மாதம் 8,000 வரை ஏழாண்டு காலம் வேலை செய்தேன். 2012இல் என் அறிவைப் பயன்படுத்தி சுயதொழில் தொடங்கி, இன்று வரை தொடர்கிறேன்.

இந்தச் சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற மனக்கிளர்ச்சி எனக்குள் இருந்தது. தொடக்கக் காலத்தில் புஇமுவில் சுவர் விளம்பரம் செய்வது, துண்டறிக்கை கொடுப்பது என்று வேலை செய்தேன். அரசுக்கு எதிராக சுவர் விளம்பரம் செய்யும் போது கியூ பிரிவு அதிகாரிகள் ஊர் பேர் கேட்டு விசாரிக்கும் போது சமாளிக்க வேண்டியிருக்கும்.

அப்புறம் எனக்குப் பணம் சம்பாதித்து சுய மரியாதையோடு வாழும் ஆசை வந்தது. ஊருக்குள் என்னை நக்சலைட் என்பார்கள். அரசியல் கட்சியில் சேரும் எண்ணத்தால் 2004ஆம் ஆண்டு திமுகவில் உறுப்பினராகச் சேர்ந்தேன். அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் என்ற பதவியும் கிடைத்தது. என் தொழிலையும் மறந்து விட்டு நேரம் காலம் பார்க்காமல் கட்சி வேலை செய்து வந்தேன்.

என் பாதை மாறியது. சட்டப் பேரவை உறுப்பினரோடு நெருக்கமாக இருந்தேன். எப்போதும் போல் எழுத்துப்பணிதான், கட்சிக் கூட்ட ’மினிட்ஸ்’ எழுதுவேன். போகப் போக கலைஞர் மீது விருப்பம் வளர்ந்தது. அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு அவரது ஆட்சியில் தரப்பட்டது. இது எனக்குப் பிடித்தது. இதனை அவர் வழங்கிய சலுகையாகப் பார்க்காமல் அம்மக்கள் போராடிப்பெற்ற உரிமையாகப் பார்க்க வேண்டும் என்று பிறகு தெரிந்து கொண்டேன். திமுக செயல்பாடுகளைப் பட்டறிவால் தெரிந்து கொள்ளத் தெரிந்து கொள்ள அக்கட்சியின் மீது வெறுப்பு வளர்ந்தது.

எம் மக்கள் மீதான அடிமைமுறை அவர்களை சரியாக உட்காரக் கூட விடுவதில்லை எனக் கண்டேன். சட்டமன்ற உறுப்பினரோடு அமர்ந்து உண்பதையே சமூகநீதி என்றும் சமத்துவம் என்றும் நம்பி வந்தவன், எம் மக்களைப் பார்த்த போது எனதெண்ணம் தவறெனப் புரிந்து கொண்டு விலகத் தொடங்கினேன். சிறிது காலம் புத்தகங்கள் படிப்பதும் இலக்கிய நிகழ்வுகளுக்குச் செல்வதுமாக இருந்தேன்.

இந்நிலையில்தான் திருநெல்வேலி மாநாட்டில் முதல் முறையாகத் தோழர் தியாகுவைக் கண்டேன், அவரது உரை கேட்டேன். அது எனக்குள் ஒரு தனிவித மனமகிழ்வைத் தூண்டியது. இவரைச் சந்தித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தேன். முகநூலில் தேடி அழைப்பு விடுத்து நட்பானேன். தொலைபேசியில் பேசினேன். மதுரையில் சந்தித்து “அரசியலில் உங்களோடு பயணிக்க விரும்புகிறேன்” என்று சொன்னேன். அவர் சொன்னார்: நமக்கு வலிமை குறைவு. கருத்து வலிமையைத்தான் நம்பியுள்ளோம். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். காலம் தீர்மானிக்கட்டும்.”

உரிய காலத்தில் நான் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன். சென்னை அம்பேத்கர் மண்டபத்தில் இயக்கத்தின் பொதுப்பேரவை நடைபெற்ற போது கலந்து கொண்டு இயக்கத்தின் கொள்கைகள், அமைப்பு நெறிகள் செயல்பாடுகள் அனைத்தையும் புரிந்து ஏற்றுச் செயல்படத் தொடங்கினேன். தமிழர் விடுதலைப் போர்முழக்கம் சமூகநீதித் தமிழ்த்தேசம் என்ற முழக்கத்தின் பொருளைப் புரிந்து உள்வாங்கி, இதுதான் நான் பயணிக்க வேண்டிய பாதை என்ற உறுதியான நம்பிக்கையோடு இயங்கி வருகிறேன். மனித சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி காணவும் சாதிப்பாகுபாடற்ற தமிழகம் படைக்கவும் பொதுச் செயலாளர் தோழர் தியாகுவின் வழிகாட்டுதலில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் காட்டும் வழியில் தொடர்ந்து இயங்கி வருகிறேன். தடை பல கடந்து கடலில் கலக்கும் ஆற்றினைப் போல இன்பதுன்பங்களைக் கடந்து இறுதியில் இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையுடன் இயக்கத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

- சுந்தர் (சு.ரா.), வாழ்வாங்கி

Pin It