சமூகப் பொருளாதார ஆய்வுக்கான சங்கமும் (Society for Social and Economic Research (SSER), அறிவுப் பொதுமை (Knowledge Commons) அமைப்பும் ஒருங்கிணைந்து, சமூக-ஆர்வலர்கள், ஆய்வு - மாணவர்கள், போராளிகள், தொழிற்சங்கப் போராளிகள் ஆகியோருக்கு மார்க்சியத்தைப் பயிற்றுவிக்கவும், இடதுசாரி இயக்கங்களை வலுப்படுத்தவும் ஒரு பயிற்சிப் பட்டறையாக முதல் நக்வெய்ன் மார்க்சியப் பள்ளியை ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் நக்வெய்னில் தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் (STD) வளாகத்தில் ஒழுங்கு செய்திருந்தது. அதன் முதல் தொகுதி மாணவர்களுக்கான பயிற்சி செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4 வரை எழுச்சியுடன் இனிதே நிறைவு பெற்றது.

(தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் (STD) சிறு விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்களுக்கு வருவாய் பெற்றுத் தரும் விதமாக விவசாயப் பொருட்கள், பழங்களிலிருந்து மதிப்புக் கூட்டும் தொழில் நுட்பங்களுடன் பழச்சாறு, பழக்கூழ், ஊறுகாய் போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.)

அப்பள்ளியில் தமிழ் நாட்டிலிருந்து மூவர், கேரளாவிலிருந்து இருவர், ஆந்திராவிலிருந்து இருவர் தெலங்கனாவிலிருந்து பத்து பேர், ஒடிஸாவிலிருந்து இருவர், ராஜஸ்தானிலிருந்து ஒருவர், உத்தரப் பிரதேசத்திலிருந்து நான்கு பேர், பீகாரிலிருந்து ஒருவர், பஞ்சாபிலிருந்து ஒருவர், ஹரியானாவிலிருந்து ஒருவர், ஜம்முவிலிருந்து ஒருவர் என மொத்தம் 28 பேர் பங்கேற்றோம் (9 பெண்கள், ஒரு திருநங்கை, 18 ஆண்கள்).

பொதுவாக வட இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளில் வட இந்தியர்களுக்கே அதிகப் பிரதிநிதித்துவம் கிடைக்கும். ஆனால் இங்கு சற்று மாறாக, இந்தப் பயிற்சிப் பள்ளிக்கு வந்திருந்த 28 பேரில் 16 பேர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளியின் அமைப்புக் குழு கூட்டுணர்வை வளர்க்கும் விதமாக கூட்டிணைவு முறையிலமைந்த கற்றலையும், வேலைப் பிரிவினைவாத மனப்பான்மையைக் கலையுமாறு அன்றாட வேலைகளில் அனைவரின் பங்கேற்பையும் ஊக்குவித்தது. வகுப்பில் கலந்துரையாடல், கூட்டுக்குழுக்களாகக் கற்றல், வேலை செய்தல் களப்பயணம், கலை வடிவங்களை ஊக்குவித்தல் எனப் பள்ளி பல்வேறு பயிற்று முறைகளைக் கையாண்டது.

பள்ளியின் அமைப்புக்குழுவால் நாங்கள் வேலைப் படைகளாகவும் (Brigades), கூட்டுக்குழுக்களாகவும் (Collectives) பிரித்தமைக்கப்பட்டோம். வேலைகளில் உயர்வு, தாழ்வு பிரிவினையைப் போக்கி, எல்லா வேலைகளையும், எல்லோரும் செய்ய வேண்டும் என்றக் கூட்டுணர்வு பெறும் வகையில் நாங்கள் 5 வேலைப் படைகளாக பிரித்தமைக்கப்பட்டோம். வளாகங்களைத் துப்புரவாக்கல், சாப்பிட்டப் பாத்திரங்களைக் கழுவுதல், கழிப்பிடங்களை சுத்தம் செய்தல், துணிகளைச் சலவை செய்தல், தரவுகளை ஆவணமாக்கல் ஆகிய வேலைகள் வேலைப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்தப் பள்ளி எவ்வாறு மற்றப் பள்ளிகளிலிருந்து வேறுபடுகிறது, என்று பார்த்தோமானால், மாணவர்களே பள்ளியின் எல்லா நிகழ்வையும் ஒருங்கிணைத்தார்கள். மாணவ்ர்களே இந்தப் பள்ளியை நடத்தினார்கள், அனைவரும் உழைப்பில் பங்கேற்றனர். பல்வேறுபட்ட பின்புலத்திலிருந்து வந்த மாணவர்கள் கூட்டுக் குழுக்களாகச் செயல்பட்ட போது கருத்து வேறுபாடுகளை எவ்வாறு கையாள்வது, அவற்றைப் புரிந்துணர்ந்து பொது இசைவுடன் ஒருமித்தக் கருத்து பெறவும் பொது இலக்கிற்காக எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற புரிதலையும், அனுபவத்தையும் பெற்றோம். கூட்டுக்குழுக்களின் மூலம் கற்றல், கலந்துரையாடல், பகிர்ந்து வேலை செய்தல் என அனைத்துமே ஒரு திறந்த அணுகுமுறையையும், திறந்த மனப்பான்மையையும் கூட்டுணர்வையும், பொதுவுணர்வையும் எங்களுக்கு ஊட்டியது.

இரண்டாம் நாள் தொடக்கம் காலை ஒன்றுகூடலிலிருந்து அன்றைய நிகழ்வுகளான ஆசிரியர்களை அறிமுகம் செய்தல், வகுப்பிற்கு நேரந்தவறாமல் அனைவரின் வருகையயும், பங்கேற்பையும் உறுதிசெய்தல், வேலைப்படைகளை, ஒருங்கிணைத்தல் என அனைத்தையும் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு நாளும் ஒரு கூட்டுக்குழுவுக்கு என்று சுழற்சி முறையில் அமைப்புக் குழுவால் ஒப்படைக்கப்பட்டது.

அமைப்புக்குழுவின் வேண்டுகோளின் படி கூட்டுக்குழுக்கள் தங்களுக்குப் பெயரிட்டுக் கொண்டு, தங்கள் முழக்கங்களைத் தேர்ந்தெடுத்தனர்.

முதல் கூட்டுக் குழுவின் பெயர்:சகாக்கள்.

முழக்கம்: ஒவ்வொருவரும் அனைவருக்காக, அனைவரும் ஒவ்வொருவருக்காக!

இரண்டாம் கூட்டுக்குழுவின் பெயர்: அவதார் சிங்க் பாஷ் (நக்சல்பாரி கவிஞர்).

முழக்கம்: மாட்டுத்தோலை நீயே உரி, விவசாயம் செய்ய என் நிலத்தைக் கொடு!

மூன்றாம் கூட்டுக்குழுவின் பெயர்: துர்கா வோரா (புரட்சியாளர்).

முழக்கம்: அனைத்து அதிகாரங்களும் பாட்டாளிகளுக்கே!

நான்காம் கூட்டுக்குழுவின் பெயர்: முக்திபோத் (மார்க்சியக் கவிஞர்)

முழக்கம்: மனதின் அவநம்பிக்கை, மனத்திட்பத்தில் நம்பிக்கை

ஐந்தாம் கூட்டுக்குழுவின் பெயர்: சோவியத்

முழக்கம்: அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்கே!

அங்குள்ள ஒவ்வொரு அறையும் ஒரு புரட்சியாளரின் பெயரால் அழைக்கப்பட்டது, அறை கதவின் வெளிப்பகுதியில் புரட்சியாளரின் படமும், அவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பும் ஒட்டப்பட்டிருந்தது.

அமைப்புக் குழுவின் அறை ரோஸா லக்ஸம்பர்க்(ஜெர்மனி) எனவும், வகுப்பறை அமித் சென்குப்தா எனவும், பெருமளவு காலை ஒன்றுகூடல்களும்,கூட்டுக்குழுக்களின் கலந்துரையாடல்களும் நிகழ்ந்த கூடம் ஃபாய்ஸ் அஹ்மத் ஃபாய்ஸ் (பாகிஸ்தான்) எனவும் பெயரிடப்பட்டிருந்தன.

பெண்கள் தங்கிய அறைகள் பகத்சிங், தாமஸ் சங்கரா (பர்கினா ஃபஸோ), சால்வேடர் அலண்டே(சிலி) எனப் பெயரிடப்பட்டிருந்தன.

ஆண்கள் தங்கிய அறைகள் கிளாரா ஸெட்கின்(ஜெர்மனி), சாவித்திரிபாய் புலே, ஸெலா சஞ்செஸ் (கியூபா) என்றும் பெயரிடப்பட்டிருந்தன.

ஒவ்வொரு நாள் காலை ஒன்றுகூடலும் அறிவூட்டி, உணர்வூட்டி எழுச்சியடையச் செய்வதாக இருந்தது. எங்களது புரட்சிய முழக்கங்களால் நக்வெய்ன் நிறைந்தது.

வகுப்பில் மாணவர்களுக்குப் பாடங்களை உடனுக்குடன் மொழிபெயர்க்க மொழிபெயர்ப்புக் கருவிகள் வழங்கப்பட்டன. பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே வகுப்புகள் எடுக்கப்பட்டதால் ஹிந்தி தெரியாதவர்களுக்கு சிரமமில்லாமல் இருந்தது.

எங்கள் இரண்டு வார வகுப்புகளில் வரலாற்றுப்ப் பொருள்முதல்வாதம், அரசியல் பொருளாதாரம், இன்றைய முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், இந்தியாவில் முதலாளித்துவம், சாதி, மதம், பாலினப் பிரிவினைவாதங்களின் வரலாறு, அறிவியல் தொழில்நுட்பம், சமூகக் கலாச்சார மேலாதிக்கம் குறித்துப் பல -பேராசான்கள் வகுப்பெடுத்தார்கள். அவற்றைச் சுருக்கமாக இங்கே காண்போம்:

முதல் வகுப்பு ஆசிரியர்: தோழர் பிரபிர் புர்கயஸ்தா...

அவரது விரைவுரைகளின் சுருக்கமான தொகுப்பு பின்வருமாறு:

(குறிப்பு: பொறியியலாளரான பிரபிர் ’நியூஸ் க்ளிக்’ பத்திரிகையின் பதிப்பாசிரியர், டெல்லி அறிவியல் மன்றத்தின் நிறுவனர்களில் ஒருவர், இந்தியாவின் இலவய மென்பொருள் இயக்கத்தின் தலைவர் (FSMI), ’அறிவு பொதுவே’ அமைப்பின் தலைவர்)

தலைப்பு: சமூகம், உற்பத்தியின் பரிணாமம்: 

மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் உழைப்பும், உற்பத்திக் கருவிகளும் மிக முக்கியப் பங்கு வகுக்கின்றன். நாம் விலங்குகளாய் இருந்த பொழுதும் எவ்வாறு, எப்பொழுது விலங்குலகிலிருந்து பிரிந்து சாதகமான பண்புகளைப் பெற்றோம்? எது பரிணாமத்தை இயக்கும் சக்தியாக உள்ளது? என்று பார்த்தோமானால், நம்மை விலங்குகளிலிருந்து பிரிக்கும் அடிப்படையான அந்தப் பண்புகளாவன: எதிரும் புதிருமான கட்டை விரல் அமைப்பு, கருவிகளை உருவாக்கும் திறன், எவ்வாறு நாம் மனிதர்களாகவும், சமூகமாகவும் பரிணாம வளர்ச்சி அடைந்தோம்? எப்படி பேச்சு,மொழி, சிந்தனை உருப்பெற்று வளர்ச்சி அடைந்தது? பரிணாம வரலாற்றில், எவ்வாறு மனிதர்கள் இயற்கையை ஆக்கத்துக்காகவும், அழிவுக்காகவும் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றோம்? என்பதையும் காண்போம்.

பரிணாமம் குறித்த கற்பிதங்கள்: 

மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானால், அந்த மனிதக் குரங்கு என்ன ஆனது? அது ஏன் இன்னும் உள்ளது? என்று சிலர் கேட்கக் கண்டிருப்போம். ஒரு இனம் மற்றொரு இனத்தைப் பதிலீடு செய்கிறது என்பது கற்பிதம், நாம் நவீன மனிதக் குரங்குகளிலிருந்து தோன்றவில்லை, மனிதரும் மனிதக் குரங்குகளும் ஒரு பொதுவான மூதாதையரைக் கொண்டிருந்தனர். சிம்பன்சி குரங்கு நம்முடன் 98% மரபணு ஒற்றுமை கொண்டுள்ளது. சிம்பன்சிகள் நம் முதல் பங்காளி போலானவை, எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் எப்படி நாம் நம் பங்காளிகளிடமிருந்து வரவில்லையோ, நமக்கும் பங்காளிகளுக்கும் பொதுவான மூதாதையர் இருந்தார்களோ அப்படித்தான் இதையும் புரிந்து கொள்ள வேண்டும். நமது பரிணாம வளர்ச்சியானது நேரியல் மாற்றங்கள் போல் எளிதாக நடைபெறவில்லை, நாம் பரிணாமத்தின் ஒரு கிளையில் உள்ளவர்கள். பரிணாமம் தொடர்ந்தியங்கும் ஒரு வளர்ச்சி நிகழ்வு. மனிதர்களும், உலகமும் படைக்கப்பட்டதாகவும், நிலைபேறு கொண்டதாகவும் மதங்கள் போதிப்பது அறிவியலுக்கு புறம்பாகும். ஒரு பொது மூதாதையரிடமிருந்து 6.5-9.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கிளைத்தவைதான் சிம்பன்சியும், மனித இனமும். பரிணாமம் நமக்குத் தோன்றுவது போல் தெளிவாக இருக்கவில்லை.

நியான்டர்தால்களுக்கும், ஹோமோசேப்பியன்களுக்கும், டெனிசோவன்களுக்குமிடையே வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டத்தில் இனக்கலப்பு நடந்துள்ளது.

அண்மைக் காலத்தை நீக்கிவிட்டுப் பார்த்தோமானால் பெருமளவிலான மனிதப் பரிணாம வளர்ச்சி ஆப்பிரிக்காவிலே நடைபெற்றுள்ளது. ஒட்டுமொத்த மனித குலமும் ஆப்பிரிக்காவிலிருந்து தான் தோன்றியுள்ளது. ஹோமினிடே இனத்தின் வெவ்வேறு குழுக்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து குடியேறினர். 98% மனிதனின் பரிணாம வரலாறு ஆப்பிரிக்காவின் வரலாறாகவே உள்ளது.

ஆரம்பத்தில் மனிதத் தாய் இனம் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்ததால் மிகக் குறைந்த மரபணு வேறுபாடுகளே இருந்தன. 7 மில்லியன் மனிதர்களிடையேயான மரபணு வேறுபாடுகள் ஒரு பாபூன் குழுவுக்குள் இருப்பதை விடக் குறைவாகவே இருந்தன. அதுவே மனித இன வளர்ச்சிக்குத் தடைபோடுவதாக இருந்தது. மரபணு வேறுபாடுகளின் இயக்குசக்திகள் எவை? காலநிலையும் நோய்களுமே மரபணு மாற்றங்களை உருவாக்குகின்றன.

இயற்கையின் தேர்வு என்பது எவ்வாறு உயிரினங்கள் சூழலுடன் பொருந்துகின்றன என்பதைப் பொறுத்தே அமையும். எதிரமைந்த கட்டை விரல்களால் பொருட்களை இறுக்கமாகப் பிடிக்கும் தன்மை சாதகமான முக்கியப் பண்பானது. குரங்குகளால் சில எளியக் கருவிகளைப் பயன்படுத்த முடிந்தாலும் கருவிகளை மாற்றவோ, அவற்றை உருவாக்குவதற்கு முன் மனத்தில் காட்சிப்படுத்தவோ முடியாது. மனிதர்களால் மட்டுமே தாம் செய்ய இருப்பதை முன்னரே மனதில் காட்சிப் படுத்த முடியும். விலங்குகளிடமிருந்து நம்மைப் பிரிக்கும் அந்த முதல் மாற்றம் 2-3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது (ஹோமினிடேக்கள்).

தேனீக்களும் எறும்புகளும் கூட்டுழைப்பால் அழகியலுடன் கூடிய புற்றுகளையும், கூடுகளையும் கட்டும் திறன் பெற்றிருந்தாலும் அவற்றால் ஒரேமாதிரியாகத்தான் கட்ட முடியும், புதிதாய் அவற்றால் புனைய முடியாது.

கைகளில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து நடை நிமிர்ந்தது. அவர்களின் வாழிடத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் உயர்ந்த சவானா புல்வெளிகளில் வாழ நேரிட்ட போது, நிமிர்ந்து மேலே பார்த்து, தூரத்திலிருந்து வரும் ஆட்கொல்லிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இதனால் பெருமளவிற்கு இரண்டு கால்களால் ஊன்றி நிற்பதும், நடப்பதுமான பண்பு பரிணமித்தது. உயிர் பிழைத்திருப்பதற்கு அதிகம் தாக்குபிடிக்கும் திறனும் வெகு தூரத்திற்கு ஓடும் திறனும் கைவரப் பெற்றனர்.

மனிதர்கள் அந்தக் காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் இனமாக இல்லை. பரிணாம வளர்ச்சியில் அழிவின் விளிம்புநிலையில் இருந்தனர்.

ஆதி கற்காலக் கருவியான் ஓல்டோவன் கற்கோடாரி -- 1.2-2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் – உருவாக்கினர்; அதை சேமித்து வைக்கும் பழக்கம் இல்லை, வேண்டும் பொழுது உருவாக்கித் தூக்கி எறிந்து விட்டனர். பெரிய எலும்புகளை உடைக்கவும், அவற்றிலிருந்து மஜ்ஜையை எடுக்கவும் அவை பயன்பட்டன. அச்சுலேன் கற்கோடாரி 200 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது.

மவுஸ்டேரியன் காலக் கருவிகள் -- 315 லிருந்து 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு -- உருவாக்கப்பட்டன. நுண் கற்கருவிகள் நேர்த்தியாகவும், மெருகூட்டப்பட்டும் உருவாக்கப்பட்டன.

வேட்டுவ சமூகமாக இருந்த போது உணவிற்கும், உயிர் பிழைத்திருக்கவும் செலவிட்ட உழைப்பு நேரமானது இன்றைய முதலமைச் சமூகத்தில் தொழிலாளர்கள் / நாம் செலவிடும் காலத்தோடு ஒப்பிடும் பொழுது மிகக் குறைவு.

அப்பொழுது அவர்களின் இடப்பெயர்வு இரண்டு வகைப்பட்டதாக இருந்தது: 1) குறுகிய பெயர்வு: சுற்றியுள்ள, அருகிலுள்ள இடங்களுக்கு இடம்பெயர்தல். 2) காலநிலை அடிப்படையிலான தொலைதூரப் பெயர்வு: முகாம்களாக ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு இரை தேடிப் பெயர்தல், மீண்டும் பழைய இடத்திற்குத் திரும்புதல் என்று ஒவ்வொரு வருடமும் ஒரு பயணச் சுழற்சியை மேற்கொண்டனர்.

ஆரம்ப காலக்கட்டத்தில் ஒரு குழுவிற்கு 30-50 பேர் இருந்தனர். நெருப்பு கண்டுபிடிப்பதற்கு முன் மனிதர்கள் அழிவின் விளிம்பிலே இருந்தார்கள். நெருப்பு கண்டுபிடிக்கப்பட்ட பின் இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை முதன்முதலாகப் பெற்றனர்.

சண்டையிடுவது அல்லது தப்பிச்செல்வது என்று இருந்த ஆரம்ப கால வேட்டுவ மனிதர்களுக்குச் சிக்கலான ஒலிகளோ மொழியோ தேவைப்படவில்லை. சிந்தனை ஆற்றல், மொழியாற்றலுக்கு முன்னரே கருவி உருவாக்கும் திறன் பரிணமித்தது.

கூட்டுக் குழுக்களாக வேட்டையாடுவதையும் உழைப்பதையும் ஒருங்கிணைக்க, சிக்கலான ஒலித்தொடர்பு தேவைப்பட்டது. விலங்குகளால் 200 முதல் 500 வகையான வேறுபட்ட ஒலிகள் எழுப்ப முடியும். சிம்பன்சிகளால் 2000 வார்த்தைகள் புரிந்துகொள்ள முடியும், இரண்டு வாக்கியங்கள் பேச முடியும்.

மொழி என்பது உழைப்பை ஒருங்கிணைக்கும் பொறியமைவாக, பெருந்தொகையான மக்கள் உழைப்பிற்காக ஒருங்கிணைந்து செயல்படும் நிகழ்வில் உருவாகி பரிணமித்தது. அதன் அடிப்படையில் புதிய சொற்களை உருவாக்குவதற்கான மொழி ஆற்றல், சொற்றொடர்களைக் கட்டமைக்கும் திறன் வளர்ந்தது. அதற்கேற்பக் குரல்வளையில் மாற்றம் ஏற்பட்டது.

ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்களின் இடப்பெயர்ச்சி: 

காட்டுத் தீயின் மூலம் மனிதர்கள் நெருப்பை அறிந்தனர், நெருப்பு எளிதில் செரிக்கும் உணவு தயாரிக்கவும், பாதுகாப்பிற்கும் பயன்பட்டது, ஆனால் நெருப்பை எவ்வாறு சேமிக்க முடியும் என்று அவர்கள் அறியவில்லை, சிக்கிமுக்கிக் கற்களை உரசி, நெருப்பை உருவாக்கி, நெருப்பின் மூலம் இயற்கையைக் கட்டுப்படுத்த அறிந்த மனிதர்கள் அதைப் பெருமளவிற்கு அழிமானத்திற்கே பயன்படுத்தினார்கள். உலகின் முதல் ஆண் 180,000 ஆண்டுகளுக்கு முன்பும் முதல் பெண் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பும் தோன்றியதாக அறியப்பட்டுள்ளது.

200 முதல் 300 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவுக்குள் மனித இனத்தின் பரவல் நடைபெற்றது.

ஆப்பிரிக்காவிற்கு வெளியேயான மனிதர்களின் ஆரம்ப இடப்பெயர்வு 120-60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. ஆரம்ப இடப்பெயர்வு கடற்கரைப் பகுதிகளில் நடைபெற்றது, கடல்மட்டம் தாழ்வாக உள்ளதால் இடப்பெயர்ச்சி, விரைவாகவும், எளிதாகவும் நடைபெற்றது.அப்பொழுது யுரேசியாவும், ஆப்பிரிக்காவும் இணைப்பிலிருந்தது, மேற்கு ஆசியா,தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளுக்கு மனிதர்கள் இடம்பெயர்ந்தனர்.பிந்தைய இடப்பெயர்வு 30-60 ஆயிரம் ஆண்டுகளுக்குள் .யுரேசியாவிற்கும், சைனாவிற்கும் மனிதர்கள் குடியேறினர். இந்த இடப்பெயர்வு மெதுவாகவும், கடினமாகவும் நடைபெற்றது.

நியோண்டர்தால் இனமானது குளிருக்குத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் தன்மையை முதலில் பெற்ற மனித இனம் ஆகும்.

புதியக் கற்காலப் புரட்சி: 

வேட்டையாடி இரை தேடும் சமூகமாக இருந்த மனிதர்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்த காலம் புதிய கற்காலம் என்றறியப்படுகிறது. நெருப்பு மனிதர்களின் இடப்பெயர்ச்சியை மிகப் பரவலாக்க உதவியது. இதனுடன் வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் மேற்கொள்ளப்பட்டதால் மனிதர்கள். அரை நாடோடி வாழ்க்கை முறையை மேற்கொண்டனர். பாதுகாப்பிற்கான படையமைப்புகளும் உருவாக்கப்பட்டது.

கடைசிப் பனிக்காலத்தின் ‘பிலையோசீன்’முடிவில் புவியின் வெப்பம் உயர ஆரம்பித்தது . பனிக்காலத்தின் முடிவில் தோன்றிய புதிய காலமான ‘ஹொலொசீனில்’ .மழை அதிகமாகி.விவசாயம் செய்ய ஏதுவான சூழலைத் தந்தது.

12,000 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலில் மேற்காசியாவில் நைலிலிருந்து, யூப்ரிடிஸ் டைகிரிஸ் வரை லெபனான், அனதோலியா, வட ஆப்பிரிக்கா, மெசோபடோமியா, டைகிரிஸ், யூப்ரிடிஸ் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய வளப் பிறை (Fertile Crescent) பகுதியில் விவசாயம் தோன்றியது. புதியக் கற்காலப் புரட்சி 2-3,000 ஆண்டுகள் நடைபெற்றது. 6500 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவில் குடியேற்றம் ஏற்பட்டது.

வேளாண்மைப் புரட்சியால். மக்களடர்த்தி புதியக் கற்காலப் புரட்சியின் போது அதிகமானது. நிலவியல், தொன்மரபியல் மூலம் எவ்வாறு உலகெங்கும் விவசாயம் பரவலானது என்று ஆய்வு செய்யப்படுகிறது. வளப் பிறை நைல் பள்ளத்தாக்கிலிருந்து சிந்துவெளி பள்ளத்தாக்கு வரை ஆதி வேளாண்மை பரவி இருந்தது.

புதர்க்காடுகள், பாலைவனங்கள், புல்வெளிகளில் காடுகளை அழித்தே குடியேற்றம் ஏற்பட்டது, விவசாயம் செய்யப்பட்டது. ஆனால் அடர்வனங்களை அழிக்க முடியவில்லை.

மிகப்பெரும் நாகரிகங்கள் அனைத்தும் பாலைவனங்களின் விளிம்பில் ஓரளவு நீர் வளம் கொண்ட, மழை பொழியும் பகுதிகளிலேயே ஏற்பட்டுள்ளன. நீண்ட நாள் உணவுக்காகவும், உபயோகத்திற்காகவும் விதைகள் சேமிக்கப்பட்டன. எந்தப் புல்வகைகளில் தானியம் கிடைக்கிறது என்பது அறியப்பட்டது.

உணவுக்கான மாமிசத்தை வேட்டையாடிப் பெற வேண்டியதில்லை என்ற நிலை கால்நடை வளர்ப்பினால் உருவானது.

மூலப் பயிர்கள்: 

நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலான பயிர்கள் ஆப்பிரிக்காவில் பெறப்பட்டவை. கம்பு, அரிசி ஆகியவை ஆப்பிரிக்காவில் தோன்றிய பயிர் வகைகள்.மேற்காசியாவிலிருந்து கோதுமை, பார்லி, பட்டாணி, பருப்புகள், ஆளி ஆகியவை பெறப்பட்டன. இந்தியாவில் இருந்த நெல்லின் உற்பத்தித் திறன் ஆரம்பத்தில் குறைவாக இருந்ததாகவும், சீன நெல்வகையுடன் கலந்த பின்பு உற்பத்தித் திறன் அதிகமானதாகவும் அறியப்படுகிறது.

மண்பாண்டக் கலை வளர்ச்சி பெற்றது.விதைகளை, உணவுப் பொருட்களை சேமிக்க மண் பாண்டங்கள் தேவைப்பட்டன. அலங்கரிக்கும் வேலைக்கும் பானைகளைப் பயன்படுத்தியுள்ளனர். திறந்த நெருப்பில் சுடப்பட்ட மண்பாண்டங்கள் 900 பாகைக்குக் குறைவான வெப்ப நிலையில் உருவாக்கப்பட்டவை, மண்பாண்டங்களைச் சூளையில் இட்டு, மேல் நோக்கிய காற்றின் மூலம் அதிக வெப்பநிலையில் 1000-1200 பாகையில் சுட்டுப் பெறப்பட்டன.

உபரி மதிப்பும், சமமின்மையும்: 

புதியக் கற்காலத்தின் போதுதான் விவசாயத்தின் மூலம் அதிகளவில் உபரி பெறப்பட்டது. ஒரு வருடத்துக்குத் தேவையான அனைத்தையும் சேமித்து வைக்க முடிந்தது. ஒரு வருடத்துக்குத் தேவையான உணவிற்கான உபரி, அடுத்த ஆண்டு பயிரிடுவதற்கான விதைக்கான உபரி என உபரி இரு வகையாகப் பிரிக்கப்பட்டது. உழைப்பில் காலநிலை அறிந்து எப்பொழுது மழை வரும், நீர் உயரும் என்பன குறித்த அடிப்படை அறிவு பெறப்பட்டது. அதனால் வானவியல் முதல் அறிவியலாகப் பரிணமித்தது.

வேலைப் பிரிவினை ஏற்பட்டது.கால்நடைகளை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டியிருந்தது. குடியானவச் சமூகம் நிலை பெற்றவுடன் நில உரிமையும் ஏற்பட்டது.

ஆணாதிக்கம் புதியக் கற்காலத்திலே ஆரம்பமானது. பெண்களின் சொத்துரிமை பறிக்கப்பட்டது. உபரி மதிப்பும், சமமின்மையும் வர்க்கம் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தன.

இரும்பும் அரசும்: 

(இதில் ஒருப் பகுதி அறிவுப் பொதுமை (Knowledge Commons) சேர்ந்த ஆய்வாளரும், பள்ளியின் அமைப்புக் குழுவைச் சேர்ந்தவருமான ஸ்ரபனி அவர்களால் எடுக்கப்பட்டது).

உலோகங்கள் கொண்டு பெருமளவு கருவிகள் உருவாக்கப்பட்டன. உலோக ஆயுதங்கள் நகரமயமாக்கலில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. முதலில் பெரிதும் பயன்படுத்தப்பட்ட உலோகமான தாமிரம் எளிதாகக் கிடைப்பதில்லை, மலிவுமல்ல, குறைந்த அளவிலே கிடைத்தது. அதனுடன் ஒப்பிடும் பொழுது இரும்பு பெருமளவில் அனைவருக்கும் கிடைக்கத்தக்கதான ’ஜனநாயக’ உலோகமாகவே இருந்தது எனலாம்.

படைக் கருவிகள் தயாரிப்பதில், அரசு உருவெடுப்பதில் இரும்பு முக்கியப் பங்காற்றியுள்ளது. சமூக வரலாற்றில் இரும்பு மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இரும்புக் கலப்பைகளால் உழவை ,எளிதாக்கி விவசாயத்தைப் பரவலாக்க முடிந்தது. விவசாய உற்பத்தி பெருகியது.காடுகளை அழிக்கவும் இரும்புக் கருவிகள் பயன்பட்டன.

இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ ஒரே நேரத்திலே இரும்பு பயன்பாட்டிற்கு வந்தது. இரும்புப் பயன்பாட்டின் தொடக்கம் பெருங்கற்காலத்திலே நிகழ்ந்தது. பெருங்கற்காலக் கருவிகள் இரும்பால் செய்தவை.

தமிழ்நாட்டின் சங்க இலக்கியத்தில் போர்வீரர்களைப் போற்றி நடுகல் நினைவுக் கற்கள் அமைக்கும் பெருங்கற்கால மரபு இருந்துள்ளது.

புதைக்கும் இடங்களில் பல்வேறு பானைகளும், பண்டங்களும் காணப்பட்டுள்ளன. தீபகற்ப இந்தியாவில் நாக்பூர், கர்நாடகா, பல்வேறு பெருங்கற்கால இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கர்நாடகா, தமிழ்நாட்டில் மட்டும் 2000 பெருங்கற்காலப் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அகாரியா இரும்பு உருக்காலைகள்:

மத்திய இந்தியாவில் அகாரியாவில் பாரம்பரியமாகவே இரும்பை உருக்கும் தொழிலை அங்குள்ளவர்கள் செய்து வந்தனர். அகாரியாவில் பெரிய சுரங்கங்கள் இருந்தன. ராஜஸ்தானில் தாமிரமும், துத்தநாகமும் கிடைத்தன. வட இந்தியாவில் குடியிருப்புகளிலே இரும்பு உற்பத்தி நடைபெற்றதற்கான தடயங்கள் இல்லை. ’அர்த்தசாஸ்திரா’வில் தாதுக்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும் இரும்புச் சூளைகள் குடியிருப்புகளுக்கு அருகிலே காணப்பட்டன. வட இந்தியாவில் மையப்படுத்தப்பட்ட இரும்பு உற்பத்தி நடைபெறவில்லை. பெருமளவு இரும்புக் கசடுகள் ஒரே இடத்திலிருந்தே கிடைக்கவில்லை. வட இந்தியாவில் உயர்ந்த தரத்தில் இரும்பு உற்பத்தி செய்யப்படவில்லை. தென்னிந்தியாவில் தான் தரமான வூட்ஸ் உலை உருக்கு உற்பத்தி செய்யப்பட்டது.

பெரும்பாலும் இரும்பு தயாரிக்கும் போது ஒரு முறை உருக்குவதுடன் நிறுத்தப்பட்டது. அது அதிக அசுத்தங்களைக் கொண்டிருக்கும், அதிக உறுதித் தன்மை இல்லாமல் எளிதில் உடையக் கூடியதாக இருக்கும், அதில் கார்பன் அளவை அதிகரித்தால் அதிக உறுதியும், எளிதில் உடையாத, வளைந்து கொடுக்கும் தன்மையும் பெறும்.தென்னிந்தியாவில் உருக்கப்பட்ட இரும்பை மீண்டும் உருக்கி மாசு நீக்கப்பட்டு கரியைக் கலந்து அடித்து, பண்படுத்தி வடிவமைக்கப்பட்டது, இப்படி உருவாக்கப்பட்ட தரமான உருக்கானது மேற்கு சிரியா, ஐரோப்பா எனப் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதே தன்மை கொண்ட உலோகத்தை உருவாக்க முடிந்தாலும் அந்த முறையைச் சரியாக அறிய முடியவில்லை, வடஇந்தியாவில் புதியக் கற்காலத்தின் வேதக் கலாச்சாரச் சின்னங்களான வண்ண சாம்பல் பாண்டப் பகுதிகள்: ரவி, சட்லெஜ், கங்கைப் பகுதி, மேற்கு உத்தரப் பிரதேசத்தில் கண்டறியப்பட்டன.

இரும்பு பெரிய அளவில் பயன்பாட்டிற்கு வந்தது பொ.ஊ.மு.(கி.மு) 400-500. கங்கைப் பகுதி காடுகளை வெட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இந்திய வரலாற்று காலக்கோடு: 

வளர்ந்த ஹரப்பா நாகரிகம்: 2500-1900 பொ.ஊ.மு

முதல் நகரமயமாக்கல்: மொஹஞ்சதரோ, ஹரப்பா

வேத மக்களின் காலம்: 1500-500 பொ.ஊ.மு (மஹாஜனபதா)

வேளாண்மை, நிலவுடைமை அரசுகள், நகரம்-600-300 பொ.கா.மு.

இரண்டாம் நகரமயமாக்கம்: மகதம்.

மத்தியப்படுத்தலிலிருந்து பரவலாக்கத்திற்கான மாற்றம் 200-300பொ.ஊ(கி.பி)

சாதிகள் நிலைப்படுத்தப்பட்டது 300-500 பொ.ஊ.

இந்திய நிலக்கிழாரியம் 6-12 நூற்றாண்டு பொ.ஊ.

மேற்கிலிருந்தும், மத்திய ஆசியாவிலிருந்தும் தொடர்ந்து உள்ளேற்றம் நடைபெற்றது.

வேதகாலம்: 1500-500 பொ.ஊ.மு.

முதல் நகரமயமாக்கலுக்கும் (ஹரப்பா), இரண்டாம் நகரமயமாக்கலுக்கும் இடைப்பட்ட காலப் பகுதி வேதகாலம் என்றழைக்கப்படுகிறது.

பெரும்பாலும் ஆயர்குல மக்கள், தேர்களையும், குதிரைகளையும் பயன்படுத்தினர். இனக்குழுக்களிடையே அடிக்கடி மோதல் நகழ்ந்தது. நீண்ட காலத்திற்கு கால்நடைகளுக்கான சண்டை தொடர்ந்தது. உற்பத்தியில் அதிக உபரி கிடைக்கவில்லை. பழங்குடியினத் தலைவர்கள் கால்நடைகளையும், பெண்களையும் காத்தனர். 1500 பொ.ஊ.மு- 800 பொ.ஊ வெவ்வேறு குழுக்களின் வருகை ஏற்பட்டது. இனக்குழுவுக்குள்ளான மோதலைக் காட்டுவதாகத் தான் மகாபாரதம் உள்ளது.

ராணுவ ஆதிக்கமும், மேன்மக்களின் ஆதிக்கமும் இருந்தன. அறிவியலும் மதமும் பிரியாமல் பின்னிக் கிடந்தன.

வேத கால வாய் வழி மரபில் உண்மைகளை விட பிற்சேர்க்கைகளும், புனைவுகளுமே அதிகமாக அறியப்படுகின்றன.

வர்ணங்கள் பற்றி ஒருமுறை குறிப்பிடப்பட்டாலும் இருந்தும் அதில் வளைந்து கொடுக்கும் தன்மை காணப்பட்டது. தர்மா பற்றிய குறிப்புகள் இருந்தாலும், கர்மா குறித்தோ, மறுபிறப்பு குறித்தோ குறிப்பிடப்படவில்லை. பின் வேதகாலத்திலே சூத்திரர்கள் பற்றிய குறிப்பு உள்ளது. வேத மரபைச் சாராத இனக்குழுக்கள் ’தாஸ்யா’ என அழைக்கப்பட்டனர்.

ராஜசுவா, அஷ்வமேதா யாகங்களின் மூலம் வளங்கள் அதிகாரவர்க்கத்தினருக்குப் பிரித்தளிக்கப் பட்டன. பெண்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் அவர்களது இனத்தின் அடர்த்தியைத் தக்கவைக்க மற்ற இனப் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு தாசிக்கள் எனப்பட்டனர். கடன் திருப்பிச் செலுத்த முடியாமல் இறந்தவரின் வாரிசுகள் தாசர்கள் ஆக்கப்பட்டனர். தாசர்களை உற்பத்தியில் ஈடுபடுத்தாமல் ,வீட்டு வேலைகளுக்கு வைத்துக் கொண்டனர்.

கம்மக்காரர்கள் உற்பத்தியில் ஓரளவிற்கு ஈடுபடுத்தப்பட்டனர், வீட்டுவேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.அடிமைகள் பெறுமளவிற்கு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படவில்லை.

குடியிருப்புப் பகுதிகளில் வசிக்காதவர்கள் சண்டாளர்களாக அழைக்கப்பட்டனர். நிஷாதா வெறுப்பை குறிக்கும் சொல்லாகக் குறிப்பு பெற்றுள்ளது.தீண்டத்தகாதவர்கள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

தர்மசாஸ்திராவில் சாதிகள் பின்பற்றப்படாமல் இருக்கும் காலத்தைக் குறிக்கும் பொருளில் கலியுகா என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது ஒரு வகையான மையப்படுத்தப்பட்ட நிலவுடைமை காணப்பட்டது. சமூக வேறுபாடுகள் காணப்பட்டன. கிரிஹபதி என அழைக்கப்பட்ட செல்வமுடைய மக்கள், நிலமுடையவர்கள், வணிகர்கள் காணப்பட்டனர். கிரிஹசூத்திரா, தர்மசூத்ரா பொ.கா.மு 800-300 சேர்ந்தது.

ஐந்தாம் நூற்றாண்டில் 16 மகாஜனபதாக்கள் கங்கைப் பகுதியிலும்,துணைகங்கை பகுதியிலும் காணப்பட்டனர். (ஜனபதாக்கள்:-பழங்குடி இனக்குழுவின் பாதம் அல்லது இருக்கை எனப் பொருள்படும்.

கோசலா, மகதா போன்ற வலுவான மஹாஜனாபதங்கள் தனி ராணுவம் கொண்டு விளங்கின. கோசலமும், மகதமும் ஆறுகளுக்கு அருகில், இரும்பு மற்றும் தாமிரச் சுரங்கங்களுடன் முதலில் நிலைத்து நிற்கும் ராணுவத்துடன் இருப்பதாகவும் இடம்பெற்றது. .வரி பெறும் உரிமையோடு அரசும் உருவானது.

அதே காலத்தில்தான் புத்தம், சமணம், ஆசிவகம் போன்ற பகுத்தறிவின் அடிப்படையிலான வேறுபட்ட சித்தாந்தக் கொள்கைகளும், மதங்களும் உருவாயின. பெருவாரியான மருத்துவமுறைகள் புத்த மரபைச் சேர்ந்தவர்களால் முறையாக்கப்பட்டது. புத்த, சமண சமயங்களில் சாதி கர்மா குறிப்பிடப்படவில்லை, ஆனால் மறுபிறப்பு, குறிப்பிடப்பட்டிருந்தது, மூலவேத உரைகளில் மறுபிறப்பு பற்றிய குறிப்பு இல்லை.புத்தர் சமூக அமைப்பை எதிர்த்துப் போராடவில்லை, உற்பத்தியில் ஈடுபடவில்லை, மூலவுரைகள் சமூகத்தில் அரசின் ஆதிக்கத்தை எதிர்த்துக் கேள்வி எழுப்பவில்லை.

புத்தத்தின் எண்வழிப்பாதை தாசர்கள் வாழ்வைத் துறந்து சங்கத்தில் சேர வாய்ப்பில்லாமல் இருந்தது. ஜாதக உரைகளுக்கு முந்தைய நிர்கயா உரைகள் சமூகத்தைப் பிரதிபலிக்கும் விதமாக உள்ளது, வறுமையைக் குறிக்கும் தருத்ரா, துக்கா ஆகியவை நிர்கயாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ராஷ்டிரா நிலம் (அரசு நிலம்) சீதா நிலம் (விவசாய நிலம்) என வடக்கில் இரண்டு வித நிலங்கள் இருந்தன. நிலம் சொத்தாக்கப்படும் நிலை ஏற்பட்ட பொழுது மக்கள் பட்டினி, வறுமை குறித்த நிறையக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

உத்தரபதாவில் தாமிரச் சுரங்கங்கள் இருந்தன. தக்சிணபதாவில் இரும்பு, தங்கம் கிடைத்தன. மகாராஷ்டிரத்தின் பைத்தன், கர்நாடகத்தின் தங்கச் சுரங்கங்களும் போட்டிக்குரியவையாக இருந்தன. இந்த வழியைத் தம் கட்டுப்பாட்டுக்குள்ளும் ஆதரவுக்குள்ளும் கொண்டுவந்தவர்கள் மௌரியர்கள். மௌரிய அரசால் கோசலம் உட்பட எல்லா மஹாஜனபதங்களும் அழிக்கப்பட்டன. வடக்கில் ஏற்படுத்திய ஆதிக்கத்தை மௌரிய பேரரசால் தெற்கில் செலுத்த இயலவில்லை.

இரண்டாம் நகரமயமாக்கலில் அரசின் பங்கு: 

ஒவ்வொரு நகரும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து கிடைக்கும் வரிவருவாயின் அடிப்படையிலே கட்டமைக்கப்பட்டுள்ளது.

வரியானது தானியங்கள், கால்நடைகளாகவும், தினசரி உற்பத்திப் பொருள்களாகவும் பெறப்பட்டது. கடன்சார்ந்த அடிமைமுறை இருந்தது.

வரி வசூலை முறைப்படித்தி எளிதாக்கவே நாணயமுறையும் கணித அறிவும் ஏற்பட்டது. ஒவ்வொரு நகரத்திலும் அதற்கான கணக்குகள் நிர்வகிக்கப்பட்டன.

அரிசியை கங்கைப் பகுதியில் நீர் தேங்கும் பகுதியில் அதிகம் உற்பத்தி செய்ய முடிந்தது. அரிசி கோதுமையை விட எளிதில் செரிக்கும் தன்மை பெற்றுள்ளதால், அது குழந்தைகளுக்கு 6 மாதத்திலே பால்குடியைக் குறைத்து திட உணவைத் தர உதவியது. பெண்களை விரைவில் உழைப்பில் ஈடுபடுத்த முடிந்தது. தென் கிழக்கு ஆசியாவின் நெல்வகைக்கும், கிழக்கிந்திய வகைக்கும் உருவான கலப்பினம் அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக இருந்தது. அமைப்பாக்கம் பரவலாக்கப்பட்டு இருந்தது, அசோகரின் நினைவுச் சின்னங்கள் கங்கைப் பகுதியில் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது அசோகன் ஸ்தூபிகளில் தொழில் அடிப்படையிலான அலகுகள் காணப்பட்டன. தொழில் அடிப்படையிலான உற்பத்தி அலகுகள். குலா என்பது தொழில்முறை அலகுகளாக இருந்தது, கஹனதி, தாசா, கர்மகார், வன்னியர், பற்றிய குறிப்புகள் இருந்த போதிலும் வர்ணம், ஜாதி பற்றிய குறிப்பீடு இல்லை.அசோக அரசு எல்லா மதங்களுக்கும் சம நிலை அளித்தது.

அர்த்தசாஸ்திராவில் சுரங்கம் என்பது போர்க்கருவிகளின் கருவறையாகப் பார்க்கப்பட்டதாகவும், அரசர்களின் போர் வெற்றி அவர்களின் யானைப் படையைச் சார்ந்திருப்பதாகவும் குறிப்பிடபட்டுள்ளது.

பிற நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் மீது படையெடுத்து வல்லாதிக்கத்தால் தங்களோடு இணைத்துக் கொள்வதும், சமரசம் செய்ய அவர்களின் ஆதிக்க வர்க்கத்தில் ஒரு சிலருக்கு உயர் அந்தஸ்து வழங்குவதுமான முறை இருந்தது.

விவசாயிகளும், ஆயர்களும் இடையுறவு கொண்டிருந்தனர். ஜனபதங்களில் உள்ள சத்திரிய குலம் நிலங்களைப் பொதுவாக ஆளுகை செய்தது. கர்மகார்களால் நிலம் உழப்பட்டது. 6ஆம் நூற்றாண்டில் இனக்குழுத் தலைவர்கள் சத்திரியர்கள் என அழைக்கப்பட்டனர். சபைகளில் நிலம் உள்ளவர்களுக்கே ஓட்டுரிமை இருந்தது.

ஆயர்கள் எருதுகளைப் பலியிட்டனர், பலமான இரும்புக் கலப்பைகளைக் கொண்டு எருதுகளால் மட்டுமே உழ முடியும், மரக் கலப்பைகளைக் கொண்டு, கழுதைகள், மற்ற சிறு விலங்குகளால் உழ முடியும், வேளாண்மை செய்யும் குடியானவர் சமூகத்தில் எருதுகள் பலியிடுவது தடை செய்யப்பட்டது. பிராமணீயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மதங்கள் வேளாண்மைக்கு மாறும் போது ஏற்பட்டன.

பெண்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டனர். விவசாயத்தில் ஈடுபடாதவர்கள் போரில் ஈடுபட்டனர், அரச வன்முறை தொடர்ந்து அனுமதிக்கப்பட்டது. அகிம்சையைக் கடைபிடித்த அரசர்கள் படையெடுப்பை நிறுத்தவில்லை என்பதே வரலாறு.

சாதி, வர்க்கம், பிராமணிய அமைப்பு:

பிராமணியத்தின் கர்மா, மறுபிறப்பு, உயிர் கொல்லாமை புத்தம் மற்றும் சமணத்திலிருந்து பெறப்பட்டது. வர்ணா என்பது சாதிகளின் சித்தாந்த அடிப்படையாக கோட்பாடாக இருந்தது.

இரண்டாம் நூற்றாண்டு பொ.ஊ.மு-லிருந்து மூன்றாம் நூற்றாண்டு பொ.கா.மு சாதி அமைப்பு உருப்பெற்று, நிலை பெற்றது. உயர்சாதிகள் அதிலும் முக்கியமாக ஆண்கள் மத்திய ஆசிய மரபு குறியீடுகளைப் பெற்றுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் கூறுவது போல் இந்திய வரலாறு போற்றத்தக்க இந்து ராஜ்யத்தின் வரலாறாக இருக்கவில்லை. சுபாஸ் சந்திரபோஸின் கூற்றுப்படி இந்தியாவின் பெரும்பான்மையான பகுதி எந்த இந்து மன்னனின் ஆளுகையிலும் வரவில்லை, இந்தியாவில் பெரும்பரப்பில் ஆட்சியை நிலைநாட்டியவர் இருவர், முதலாமவர் புத்தமதத்தை சேர்ந்த அசோகர், இரணடாமவர் இஸ்லாத்தை சேர்ந்த அக்பர்.

குப்தர்கள் பொ.கா. 3ஆம் நூற்றாண்டில் ஆட்சியமைத்தனர். குப்தர் ஆட்சிக்காலத்தில் புத்தம், சமணம், ஆசீவகத்தின் மீது பிராமணியம் வெற்றி பெற்றது. ஆட்சி அதிகாரம், மதங்களிலிருந்து பிரிக்கப்பட்டது. ஆதிக்கசக்தி மேலோரிடமிருந்து, மூதாதையரிடமிருந்து பெறப்பட்டதாக கூறப்பட்டது. அவர்கள் செய்ய விரும்பிய ஒவ்வொரு மாற்றத்தையும் நியாயப்படுத்த முன்னோரிடம் பெறப்பட்டதாக கூறும் மரபு காணப்பட்டது.

தர்ம சூத்ரா -- மனுதர்மத்தின் காலகட்டம் 200 பொ.ஊ.மு. 200 பொ.ஊ என அறியபடுகிறது. தர்ம சாஸ்திராவைத் தொடர்ந்து அனைத்தும் மனுவையே நீதி வழங்குபவராக ஏற்றுக்கொண்டது. மனுதர்ம சாஸ்திரம் அரசின் நிர்வாகம் குறித்தும் மனுதர்மம் போதிக்கிறது. அரசர்கள் மனுதர்மத்தையே ஆதரித்தனர். மனுவின் தர்மசாஸ்திரம் புதிய மரபின் உரைவடிவமாக அமைந்தது.

வரலாற்றிலிருந்து மகதப் பேரரசும் அசோகரும் முழுமையாக மறைக்கப்பட்டனர். பிரிட்டீஷார் இந்தியாவின் எல்லாப் பாரம்பரியமும் பிராமணியத்திடமிருந்து பெறப்பட்டதாகவே நினைத்திருந்தனர். அசோகர் மறைக்கப்பட்டார், பிரியதர்சினி என்று அசோகர் அழைக்கப்பட்டதும் அசோகரின் வரலாறும் சிங்கள உரைகளின் மூலமே அசோகரின் வரலாறு தெரியவந்தது. குப்த அரசர்களே போற்றப்பட்டனர்.

2-3 நூற்றாண்டு அகமணமுறை நடைமுறைக்கு வந்தது. சாதி அமைப்பு நிலைபெற்றது. அப்பொழுதிலிருந்தே ஆணவக் கொலை ஆரம்பமானது. வாழ்விடங்களைப் பிரிப்பதன் மூலமும், அகமணமுறையின் மூலமும் சாதிகள் நிலைநிறுத்தப்பட்டன. மற்ற இன மக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கிராமங்களுக்கு வெளியே வாழ்ந்தனர்.

நகரமைப்புகள் சிதைந்து, வணிகம், பணத்தின் சுற்றோட்டம் குறைந்தது. பெருமளவில் விவசாயம் செய்யப்பட்டது. மத்தியப்படுத்தப்பட்ட மகத அரசு, குப்தர்களின் காலத்தில் பரவலாக்கப்பட்டது.

மௌரியத்திலிருந்து குப்த வம்சம் ஆட்சிக்கு வந்த போது அதிகாரப் பரவலாக்கம். நிர்வாக அதிகாரம் குறுநில மன்னர்களுக்கும், ,நிலக்கிழார் களுக்கு பிரித்தளிக்கப்பட்டது. குறுநில மன்னர்கள், நிலக்கிழார்களிடம் கப்பம் பெறப்பட்டது, குப்த அரசானது பரவலாக்கப்பட்ட அரசாக, நிலக்கிழாரியத்தைப் பாதுகாப்பதாக இருந்தது. பிராமணியம் கிழாரியத்தை முறைமையுடையதாகவும் சட்ட பூர்வமானதாகவும் ஆக்கியது.

புத்தமும், சமணமும் பிராமணியத்தை எதிர்ப்பவையாக இருந்த போதிலும் தனிமனித விடுதலையையே (உங்கள் வீடுபேற்றை/ விடுதலையை நீங்களே அடையவேண்டும்) போதிப்பவையாகவே இருந்தன.

சார்வாகா, லோகயதா ஆகியவை மதங்களுக்கு எதிரானவை என மதிக்கப்படவில்லை. அவை ஆதிக்க சக்திகளுக்குப் போட்டியானவையாகப் பார்க்கப்பட்டன. சார்வாகா, லோகயதா பிராமணியத்தை, எதிர்த்து சவால் விடுவனவாக அமைந்தன.

சாதி அமைப்பின் பரிணாமம்:

சாதி என்பது பழைய வர்ண அமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, தன்னைத்தானே மறுவுற்பத்தி செய்து கொள்ளும் நிலையான மக்கள் தொகுதி.

சாதி அமைப்பு கர்மா, மறுபிறப்பு, மறு ஜென்ம வாழ்வில் ஜாதி மாற்ற வாய்ப்பு ஆகியவற்றை கொண்டிருந்தது. பிராமணிய அமைப்பில் சாதிகள் உயரவும் முடியும், தாழவும் முடியும்.ஆனல் தனியொருவர் சாதி வரம்புகளைத் தாண்ட முடியாது. பணம், செல்வத்திற்காக எதையும் தளர்த்திக் கொள்ள புரோகித வர்க்கம் தயாராயிருந்தது. சாதிப் பாரம்பரியம் என்பது கட்டுக்கதையாக உருவாக்கப்பட்டது. ராணுவ பலத்தின் மூலம் தங்களை சத்திரியர்களாகவும் இறைதொடர்பு கொண்டவர்களாகவும் பிராமணர்களை ஏற்கவைக்க முடியும் நாடு பிடிப்பு, போர்த்திறத்தின் மூலம் தன் பிறப்பின் அடிப்படையைத் தாண்டி சத்திரியர்களாக உயரமுடியும். இந்தோ பாக்டிரீயர்களும், இந்தோ ஸ்கைத்தியர்களும் சத்ரிய குலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

ஆனால் பிராமணர் ஆவது மிகக் கடினம், சமஸ்கிருதத்தில் மத, அறிவியல், சாஸ்திரங்களை அறிந்திருக்க வேண்டும், கல்வியறிவு புரோகித வர்க்கத்தின் முற்றுரிமையாக இருந்தது. கணிதம், அறிவியல் அனைத்துமே சமஸ்கிரத வாய்வழி மரபின் மூலம் மட்டுமே அறியவேண்டியிருந்தது. சீனாவில் பொ.ஊ.மு 1ஆம் நூற்றாண்டில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது. உரை நடை, எழுத்துமுறை என்பது அறிவைப் பரவலாக்கி ஜனநாயகப்படுத்த உதவுகிறது, ஒரு பிற்போக்கான சர்ச் கூட பலருக்குக் கல்வியறிவூட்டியிருக்கிறது.

ஆனால் இங்கோ புரோகித வர்க்கத்தின் ஆதிக்கத்தில் வாய்வழி அறிவு மரபின் மூலம் அறிவைப் பரவ விடாமல் தடுத்து பிராமணியம், சாதி ஆதிக்கம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.அதுவே வரலாற்றை சரியாகப் பதிவு செய்யாததற்கும் காரணமானது. பிராமணர்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்களாக இருப்பதும், அரசர்கள் படிப்பறிவில்லாதவர்களாக இருப்பதும் வழக்கமாயிருந்தது. பெண்களும் கீழ்சாதிகளும் பிராகிருதம் பேசியதாகவே அறியப்படுகிறது.

சாதியும் உபரி அபகரிப்பும்: பிராமணிய சமூகம் எல்லாவற்றையும் தன்வயமாக்கும் பண்பைப் பெற்றது. மற்ற இனக்குழுக்களை வல்லாதிக்கம் மூலம் இணைத்துக் கொள்வதாகத் தள்ளிவைத்து அடிமையாக்கி அவர்களின் கடவுளைத் தங்கள் கடவுள்களுக்கு அடிமையாக்கினர். அவ்வாறு தான் அனுமனும் ராமபக்தர் ஆக்கப்பட்டார்.

விவசாயிகளாக, கைவினைஞர்களாக இருந்த சூத்திரர்கள் ஆயுதங்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சாதியற்றவர்கள் ஆயுதங்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. உழைப்புப் பரிமாற்றம் என்பதை விட உழைப்பு அபகரிப்பே நடைபெற்றது.

மக்களைப் பிறப்பின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டுமே செய்யக் கட்டுப்படுத்தும் உழைப்புப் பிரிவினையின் மூலமே உற்பத்தியும், மறு உற்பத்தியும் நடைபெற்றது.

சமூகம் நீடித்திருக்க உற்பத்தியே அடிப்படை ஆனால் உற்பத்தியில் ஈடுபடாமல் இருப்பவர்களே உயர்சாதியினாராக அழைக்கப்பட்டனர். உழைப்பு புனிதமற்றதாகக் கருதப்படுகிறது, உழைக்காமல் இருப்பதே புனிதமாகக் கருதப்படுகிறது. பிராமணர்களோ, சத்திரியர்களோ, வணிகர்களோ, வட்டி வாங்குபவர்களோ (திவிஜா -இரு முறை பிறந்தவர்கள்) உழைப்பில் ஈடுபடவில்லை, மற்றவர்கள் உழைப்பால் அசுத்தப்படுத்தப்படுகிறார்கள்.

உழைப்பு என்பதே அசுத்தமானதாகக் கருதப்பட்டது. உழைப்பின் தன்மையை வைத்துத் தூய்மையின் அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டது. உழைப்பின் தன்மையின் அடிப்படையில் ஒரு சாதி மற்றொரு சாதியிலிருந்து வேறுபடுத்தப்பட்டது. கீழ்ச்சாதிகளாகக் கருதப்பட்ட சூத்திரர்கள் விவசாயிகளாகவும், கைவினைஞர்களாகவும், படைவீரர்களாகவும் இருந்தனர். சாதியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் கிராமங்களுக்கு வெளியே தங்கினர், இறந்த விலங்குகளின் தோலை உரிப்பது இழிவானத் தொழிலாகப் பார்க்கப் பட்டது. மனிதர்கள் நாடோடிகளாக இருந்தபோது கழிவுகளை உடனுக்குடன் தூய்மை செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை, ஆனால் ஒரே இடத்தில் நிலைத்து குடியமைத்தவுடன், கழிவுகள் துப்புறவாக்கப்படாமல் இருந்தால் நீரால் பரவும் நோய்கள் பரவுவதற்கு வெப்பமண்டலப் பகுதிகளில் அதிக வாய்ப்புகள் இருந்தது. துப்புரவாக்குவது முக்கியத்துவம் பெற்றது.

போர்த்திறமும் விழிப்பும் உள்ளக் காட்டு வாழ் மக்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலவில்லை.

சாதிப் பஞ்சாயத்துகள் செயல்பட்டன. சாதிக் கட்டமைப்பால் அறிவியலும், தொழில்நுட்பமும் பிரிக்கப்பட்டதால் அறிவியல் தொழில்நுட்பமும், அறிவு வளர்ச்சியும் தடைபட்டது. மனப்பாடம் செய்யும் கல்விமுறையால் ஆய்வுத் திறன், கேள்விக்குட்படுத்தும் திறன் குறைந்ததுபுதியத் தொழில் நுட்பம் புதிய சாதியைத் தோற்றுவிக்கும் ஆனால் புதிய சாதிகள் உருவாவது தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் தொழில் நுட்பத்தில் எளிதாக மாற்றமோ வளர்ச்சியோ ஏற்படாமல் சமூக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. கட்டிடக் கலை வளர்ச்சிக்கு அதுவே தடையாக இருந்துள்ளது. வில் வளைவுகள், குவிமாடம் பால்பன் காலத்தில் 13ம் நூற்றாண்டிலே தான் மெஹ்ரலியில் அமைக்கப்பட்டது.

வரலாற்றின் மார்க்சியக் கோட்பாடு: 

வரலாற்றில் மெய்மைகளின் அடிப்படையிலே கோட்பாடுகளைப் பெற வேண்டும். கோட்பாட்டின் அடிப்படையில் மெய்மைகளைக் காணக் கூடாது. வரலாற்றை ஆய்வு செய்யும் போது அனைத்தையும் நேரியல் மாற்றங்களாய் நிகழ்ந்தவையாகக் கருதாமல் கவனத்துடன் நோக்க வேண்டும்.எல்லாப் பகுதிகளிலும் ஒரேமாதிரியான சமூக மாற்றங்களும், வளர்ச்சியும் ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்தவை அல்ல, அவற்றிற்கிடையே பொதுவான போக்குகள் காணப்படலாம்.ஆனால் அவை யாவும் முற்றொருமித்த நிகழ்வுகள் அல்ல.

மனிதர்களை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்துவது, மரபியல் அடிப்படை, உயிரியல் அடிப்படை என்பதைத் தாண்டி சமூக அடிப்படையே முக்கியப் பங்கு பெற்றுள்ளது. மனித சமூகம் என்பது சமூகப் பரிணாமங்களின் விளைபொருள். கற்காலத்தில் இரை தேடி வேட்டையாடித் திரிந்த மனிதர்கள் புதிய கற்காலத்தில் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். உலோகக் காலத்தில் நகரமயமும், அரசும் தோன்றின.

உயிரியல் மாற்றங்கள் மெதுவானவை. சமூகமயமாக்கலால், மொழி, உரைநடை வாயிலாக அறிவுப் பரிமாற்றம் துரிதமாகியுள்ளது. மக்கள் வரலாற்றைப் படைத்தாலும் அவர்கள் விரும்பியவாறு படைக்கவில்லை, சமூகக் கட்டமைப்பின் நெறிகளுக்குட்பட்டே படைத்துள்ளனர். எழுதப்பட்ட வரலாறுகள் யாவும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே.

அரசியல், கலை, மதம் என எல்லா மனித நடவடிக்கைகளுக்கும் உற்பத்தியும் மறுவுற்பத்தியுமே அடிப்படையாக உள்ளன. உற்பத்தி என்பது சமூகத்தின், சமூக உறவுகளின் மறு உற்பத்தியையும் உள்ளடக்கியதாகும்.

உற்பத்தி என்பது வெறும் இயற்கை நிகழ்வோ அனிச்சைச் செயலோ அல்ல, விவசாயம், கால்நடை வளர்ப்பு அனைத்துமே குறிப்பிட்ட இலக்கை/விளைபொருளை நோக்கமாகக் கொண்ட மனிதர்களின் இடையீட்டு நடவடிக்கைகளே (purposive intervention) ஆகும்.

அரசும் மதமும் தனியார் சொத்துடைமையைக் கட்டிக் காக்கும் அமைப்புகளாக உள்ளன. மதம் என்பது தற்பொழுதுள்ள சமூக சமமின்மையை அங்கீகரிக்கும் அமைப்பாக மட்டும் இல்லை. அதற்கான நியாயம் எதிர்காலத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தந்து ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகத்தின் இதயமாகவும் உள்ளது.

மார்க்சிற்குக் கிடைத்த காலனியாதிக்க பிரிட்டனின் தரவுகள் இந்தியச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிக்க இயலாததால் அதிலிருந்து பெறப்பட்ட கருத்தாக்கமான ஆசிய உற்பத்தி முறை என்று தனியாக ஒன்று இல்லை என்றே கூற வேண்டும்.

அறிவியலும் தொழில்நுட்பமும் பிரிந்துள்ளதால், உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள், அறிவியலுக்கான அடிப்படை அறிவைப் பெற வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அறிவியல் அறிவைப் பெறும் வகையில் உள்ளவர்களுக்கு நடைமுறை அறிவு இல்லை.

நவீனத் தொழிற்சாலைகளில் மனித உழைப்பு இயந்திரமயமாக்கப்படுவதால் அந்த இயந்திரத்தை இயக்கும் திறனே ஆக்க உழைப்பாக உள்ளது, உற்பத்தி சாதனங்கள் அந்நியப் பகுதியிலிருந்து வருவதால் அந்நிய மொழித் திறன் உள்ளவர்களாலே திறனுள்ள உழைப்பாளிகளாக முடியும். அது அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கப் பெறாததால் அவர்கள் ஆக்கத் திறனுள்ள உழைப்பாளர்களாக தகுதியடையத் தடையாக உள்ளது, இந்தியாவில் வர்க்க அமைப்புக்குள் சாதி அமைப்பு மறுஉற்பத்தி செய்யப்படுகிறது. சாதியும், இனமும் கோட்பாடுகளாக மட்டுமில்லாமகல் உற்பத்தி அமைப்பில் ஆழமாக ஒன்றிணைந்துள்ளன. இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் பிராமணியத்தை வெறும் கருத்தியலாக மட்டுமில்லை, பழைய கருத்தியலின் மீதமிச்சங்களாக மட்டும் இல்லை சமூக, உற்பத்தியில், மறுஉற்பத்தியில் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

 (தொடரும்) 

- சமந்தா

Pin It