சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் புலம்பெயர் தேசங்களை தளமாக கொண்டு இயங்குகின்ற நாடுகடந்த தமிழீழ அராசங்கம் மற்றும் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சு, பிரித்தானிய தமிழர் பேரவை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, இலங்கைத் தமிழச் சங்கம், இலங்கையில் சமத்துவம் மற்றும் உதவிக்கான மக்கள் அமைப்பு, இலங்கையில் நீதிக்கும் சமாதானத்துக்குமான ஐக்கிய குழு, அமரிக்கத் தமிழர் அரசியற் செயலவை, உலகத் தமிழ் இயக்கம் ஆகியன ஒன்றிணைந்து கூட்டாக இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளன.

அறிக்கையின் முக்கிய விடயங்கள் :

மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் இடம்பெற்றமை தொடர்பான உண்மைகள் மற்றும் சூழமைவுகள் குறித்து விசாரணை செய்து நிரூபிப்பதற்காக சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஸ்தாபிக்கப்படுகின்றமையை நாம் வரவேற்கின்றோம்.

2014 மார்ச் 27 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இது தொடர்பாக நிறைவேறிய தீர்மானம் பரந்த, சர்வதேச விசாரணைக்கு வழி வகுக்கும். குறிப்பிட்ட காலவரையறைக்கு முந்திய காலத்தையும் 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னரான காலத்தையும் கூட விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என நாம் கோருகின்றோம்.

2009ம் ஆண்டில் சில மாதங்களில் இடம்பெற்ற 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் படுகொலை பற்றிய மறைப்புகள், இழப்பீடுகள், இன்னும் கணக்கெடுக்கப்பாமல் இருக்கும் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்களின் தலைவிதி, தப்பிப் பிழைத்த மற்றும் பாதிக்கப்பட்ட நிலையில் நீதியை எதிர்பார்த்திருப்போரின் விளக்கங்கள் ஆகியவை பற்றி எல்லாம் இந்தத் தீர்மானத்தில் அதிக பிரதிபலிப்புகள் அமைந்திருக்க வேண்டும் என நாம் எதிர்பார்த்திருந்தோம்.

இந்தப் பிரேரணையை நிறைவேற்றுவதற்காக அதற்கு ஆதரவாக வாக்களித்த 23 நாடுகளின் முயற்சிகளை உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் பாராட்டும் அதேவேளை, சர்வதேச விசாரணை நிறுவப்படுவதற்கு எதிரான இந்திய நிலைப்பாடு குறித்து நாம் கவலையுமடைகின்றோம்.

ஈழத் தமிழர்களோடு தனித்துவமான கலாசாரப் பிணைப்பையும் அறிவு சார் நல்லுறவையும் கொண்டமைந்த சரித்திரத்தையும் தைரியத்தையும் கொண்ட நாடு இந்தியா. அது, இந்தப் பிரேரணையில் வாக்களிக்காமல் விட்டமையும் பிரேரணையில் விசாரணை முறைமையை ஏற்படுத்துவது தொடர்பான செயற்பாட்டுப் பந்திக்கு எதிராக வாக்களித்தமையும் எமக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருக்கின்றது. மேலும் தமிழர் பிரதேசம சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்குள் சிக்கியிருக்கின்றமையையும் வடக்கு - கிழக்கு இராணுவ ஆதிக்கத்திலிருந்து அவசரமாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதையும் போதியளவில் வெளிப்படுத்துவதில் இந்தப் பிரேரணை குறைவாகவே உள்ளது.

அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னமானது தமிழர் பிரதேசத்தில் தொடரும் நிலப் பறிப்பு, அரச உதவியுடனான குடிப்பரம்பல் மாற்றம், பூர்வீக சொத்துக்கள், பாடசாலைகள், கோயில்கள் போன்றவை அழிக்கப்படல், தமிழ் மக்கள் மீதான கட்டாயகருக்கலைப்பு, தண்டனை விலக்களிப்புடனான பாலியல் வன்முறைகள் போன்றவற்றுக்கு வழிகோலியிருக்கின்றது.இவை காரணமாகவும் பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை பொறிமுறைக்கு அரசு வலுவுடன் போடக்கூடிய தடைகள் காரணமாகவும் சாட்சிகள், தப்பிப்பிழைத்தோர், மனித உரிமைகளுக்காக செயற்படுவோர் போன்றோரின் உடல் ரீதியான பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்தக்கூடிய ஒரு பொறிமுறையை உருவாக்குமாறு நாம் ஐ.நா.வைக் கோருகின்றோம்.

ஐ.நா. சாசனத்தின் 99ஆம் பிரிவின் வழியே இந்த விவகாரத்தை கையாளுமாறு ஐ.நா. செயலாளர் நாயகத்தைக் கோருகின்றோம். இலங்கைத் தீவில் தமிழ் இனத்துவத்தை சிதைத்து, தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பை மேற்கொள்வதை அடிப்படை இலக்காகக் கொண்டு, இலங்கையில் அடுத்தடுத்து வரும் அரசுகள் தொடர்ந்தும் பரவலாகவும் மேற்கொண்டு வரும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களே இலங்கைப் பிரச்சினைக்கு மூலவேர் என்பதை நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

சிறிலங்காவின் சட்டவாட்சி என்பது இனவாத மேலாண்மையால் செழுமை பெற்ற சிறிலங்கா அரசமைப்பை அடிப்படையாகக் கொண்டது.அதிகாரப் பரவலாக்கலில் தவறிவிட்டதாக இலங்கை உயர் நீதிமன்றத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் 13 ஆவது திருத்தம்தான் ஒரே மார்க்கமாக இந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் பிரேரணை ஏற்றுக் கொண்டிருக்கின்றமை குறித்து நாம் வேதனையடைகின்றோம்.

1972 ஆம் ஆண்டு அரசமைப்பு, 1978 ஆம் ஆண்டு அரசமைப்பு, அதன் 13 ஆவது திருத்தம் போன்றவற்றின் உருவாக்கம் எதிலும் தமிழர்கள் பங்குபற்றவேயில்லை.எனவே, தமிழ் மக்கள் தங்களின் பெருவிருப்பினை எந்தத் தடைகளும் இன்றி வெளிப்படுத்தக் கூடிய சனநாயக இடைவெளி ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு சர்வதேச சமூகத்தை நாம் கோருகின்றோம்.

அப்படிச் செய்தால் மட்டுமே, சர்வதேச விசாரணை மூலம் பொறுப்புக் கூறக் கூடிய விதத்தில் பயனேதும் கிட்டுமானால், அது நீடிப்பதோடு இந்தத் தீவில் மக்களுக்கான நிலைத்த அரசியல் தீர்வாகவும் மாறமுடியும்.

இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pin It