தடியை கொடுத்து அடியை வாங்கிய கதை தெரியுமா உங்களுக்கு! அது தான் இஸ்ரேலுக்கு நடந்தது. வருகின்ற ஆண்டில் தேர்தல், தாங்கள் பலகோடி ரூபாயில் நிறுவியுள்ள ஐயர்ன் டூம் சிஸ்டத்தை பரிசோதித்து பார்க்க வேண்டிய கட்டாயம், சரிந்து வரும் தன் செல்வாக்கை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயம் இவை அனைத்தும் இஸ்ரேலிய பிரதமர் கொலைகாரன் நெதன்யாஹூவை பாலஸ்தீனத்தை தாக்க தூண்டியது. நவம்பர் 14ம் நாள் அதற்கான அடித்தளத்தை நாட்டினார். ஆனால் இம்முறை அவர்கள் அதற்கு கொடுத்த விலை அதிகம். கடைசியில் ஹமாசிடம் அடிபணிந்து உலக நாடுகளிடம் பிச்சை எடுத்து போர்நிறுத்தத்தை ஏற்படுத்தியது இஸ்ரேல். இதோ அந்த விவரங்கள்....

பிரச்சனையின் துவக்கம்

14 நவம்பர் 2012 புதன்கிழமை ஹமாசின் இராணுவப்பிரிவு இஸ்சுத்தீன் அல் கஸ்ஸாம் தளபதி அஹமது ஷேக் கலீல் அல் ஜபரியை இஸ்ரேலிய கொலையாளிகள் விமானத்தாக்குதலில் கொன்றதில் இருந்து காஸா பிரச்சனை ஆரம்பித்தது. இந்த தாக்குதலை இஸ்ரேல் “ஆபரேஷன் பில்லர் ஆஃப் டிஃபன்ஸ்” (Operation Pillar of Defence) என்று அழைத்தது. “இதற்கு நாங்கள் பதிலடி கொடுப்போம்” இது தான் ஒசாமா ஹம்தன் என்ற ஹமாசின் செய்தி தொடர்பாளர் லெபனானில் கூறியது.

palestine_620

இதற்கு பதிலடியாக ஹமாஸ் நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை இஸ்ரேலை நோக்கி ஏவியது. அந்த ஏவுகணைகள் தாக்கி அன்றைய தினமே மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இதன் பின்னர் இஸ்ரேல் எப்பொழுதும் போல் அப்பாவி மக்களுக்கு எதிரான தங்களது போரை துவங்கியது. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் குறிப்பாக குழந்தைகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

செவ்வாய்கிழமை வரை இஸ்ரேலின் தாக்குதலில் ஷஹீதானவர்களின் எண்ணிக்கை 200, பலத்த காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1000க்கு அதிகமாக ஆக உயர்ந்தது. இதில் 300க்கும் அதிகமானோர் குழந்தைகள்.

இதற்கிடையே ஏகப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் இயக்கத்தினரால் ஏவப்பட்டன. திங்கட்கிழமை 19.11.2012 அன்று மட்டும் 75 ஏவுகணைகள் ஏவப்பட்டன. அதில் ஒன்று காலியான பள்ளிக்கூடத்தை தகர்த்தது. 20 ஏவுகணைகள் மட்டுமே இஸ்ரேலின் ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் Iron Dome System-ஆல் வானிலேயே வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. ஆனால் பல ஏவுகணைகள் இஸ்ரேலின் பீர்ஷேவா, அஷ்தோத், அஷெக்லான் போன்ற இடங்களை தாக்கியது. தெற்கு இஸ்ரேலில் உள்ள பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

போர் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டன. அவற்றில் பல இலக்கைத் தாக்கின. இந்த ராக்கெட்டுகள் இலக்கை சென்று தாக்கியதில் இஸ்ரேல் கதி கலங்கிப்போனது. இஸ்ரேலின் பல கட்டிடங்கள் நொறுங்கின. பலர் படுகாயம் அடைந்தனர். இஸ்ரேல் எங்கும் அலறல் சத்தமும் ஓலமும் கேட்டுக்கொண்டே இருந்தன. இஸ்ரேலின் இராணுவத்தினர் ஆங்காங்கே சென்று பயந்து ஒளிந்து கொண்டனர். டெல் அவிவ் முழுவதும் சைரன் ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தன.

ஹமாசின் அல்கஸ்ஸாம் இராணுவப்பிரிவினரும் இஸ்லாமிய ஜிஹாதின் போர்பிரிவான அல்குத்ஸ் பிரிவினரும் பஜ்ர்-5 என்ற நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை படைத்த ராக்கெட்டுகளின் பலம் பெற்றுவிட்டதாக தெரிகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவை அனைத்தும் ஹமாஸ் இயக்கத்தினரால் உள்ளுரிலேயே கட்டமைக்கப்பட்டவை. இதன் தொழில்நுட்பம் மட்டும் ஈரானிடமிருந்து பெறப்பட்டது. இதை பரீட்சித்து பார்க்கவே இஸ்ரேல் ஹமாசை தாக்கியது. இதில் கடந்த 15ம்தேதி பஜ்ர் ஏவுகணைகள் டெல் அவிவை தாக்கின என்ற செய்தியை முதலில் இஸ்ரேல் இராணுவ தொடர்பாளர் அவிட்டல் டெய்போவிச் மறுத்தார். இது பாலஸ்தீன மக்களின் பொய் பிரச்சாரம் என கூறினார். ஆனால் அவர் மறுத்தது தான் பொய் என பின்னர் தெரியவந்தது.

“ரிஷோன் லெட்சியோன்” என்ற நகரை ராக்கெட்டுகள் தாக்கியது பின்னர் உறுதி செய்யப்பட்டது. அந்நகர் முழுவதும் மற்றும் டெல்அவிவிலும் சைரன்கள் ஒலி கேட்டுக்கொண்டிருந்ததை அதற்கு பின்னர் வந்த நாட்களில் ஊடகங்களில் காணமுடிந்தது. பின்னர் இஸ்ரேலிய ராணுவமும் அதை உறுதிப்படுத்தியது. அதேப்போல் இஸ்ரேலின் எஃப்16 வகை விமானம் ஒன்று பாலஸ்தீன போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இஸ்ரேல் என்ற நாடு பாதுகாப்பானது, அங்கே வந்து குடியேறுங்கள் என்று வாக்குறுதி அளித்து உலகின் பல பகுதியிலிருந்தும் யூதர்களை கொண்டு வந்து குடியமர்த்திய இஸ்«லுக்கு இப்படி தாங்கள் தாக்கப்படும் செய்திகளை மறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் மக்களின் மனதில் நம்பிக்கையை பெற்றாக வேண்டும். ஆனால் தற்போது நடந்தது வேறு.

தாக்குதல் ஆரம்பித்த முதல் நாளிலேயே ஹமாசின் நீண்டதூர ஏவுகணைகளை தாங்கள் தாக்கி அழித்துவிட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எஹூத்பராக் அறிவித்தார். இந்த பொய்யும் நிலைக்கவில்லை. ஆனால் அதற்கு பின்னர் வந்த அனைத்து நாட்களிலும் குறையாமல் 100 ராக்கெட்டுகள் குறிப்பாக ஃபஜர்-5 வகை ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி ஹமாசால் ஏவப்பட்டன. (Gaza Live Blog AlJazeera, Tehran Times, Arab News, Huftington Post, The Hindu)

இஸ்ரேலின் ஊடகங்களின் மீதான தாக்குதல்

இஸ்ரேலின் தாக்குதலில் அல்குத்ஸ் என்ற அரபுதொலைகாட்சி தாக்கப்பட்டது. அல்குத்ஸ் ஹமாஸ் இயக்கத்தால் நடத்தப்படுகிறது என இஸ்ரேலால் நம்பப்படுகிறது. அல்குத்ஸ் தாக்கப்பட்டதற்கான காரணம் அது நிமிடத்திற்கு நிமிடம் இஸ்ரேலின் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளையும் அதனால் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் காட்டிக்கொண்டிருந்ததே. அது மட்டுமன்றி ஹமாசின் அல்கஸ்ஸாம் பிரிவினரின் பலம், அவர்கள் மேற்கொண்டிருந்த பயிற்சி போன்றவற்றையும் அல்குத்ஸ் தொலைக்காட்சி தொடர்ச்சியாக ஒளிபரப்பிக்கொண்டே இருந்தது. இது போதாதா இஸ்ரேல் தாக்குவதற்கு.

இத்துடன் ஸ்கை நியூஸ் , அல் அராபியா, அல்அக்ஸா தொலைக்காட்சி நிறுவனங்களும் தாக்கப்பட்டன. இஸ்ரேலின் கொலை மாபாதகங்களை குழந்தைகளை கொன்று குவிப்பதையும் அப்பாவி பொது மக்களை கொன்று குவிப்பதையும் இந்த நிறுவனங்கள் தொடர்ச்சியாக காட்டி வந்ததே இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்த குற்றம்.

இதுமட்டுமல்ல ரஷ்ய தொலைக்காட்சி நிறுவனமாக ரஷ்யன் டிவி நிறுவன அலுவலகமும் இஸ்ரேலின் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டது.

செவ்வாய்கிழமை 20ம் தேதி அல்அக்ஸா தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்த கார் ஒன்று இஸ்ரேலிய விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் ஊடகத்துறையை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். (http://www.tehrantimes.com/middle-east/103423-israel-pounds-gaza-strip-from-air-and-sea) and Gaza Live Blog AlJazeera

ஊடகத்தில் பாலஸ்தீன பொதுமக்களின் பங்கு

இம்முறை ஊடகத்துறையில் பொதுமக்கள் ஆற்றிய பங்கு முக்கியமானது. இஸ்ரேல் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட காயமடைந்த அப்பாவி பொதுமக்களின் குழந்தைகளின் பெண்களின் வயோதிகர்களின் படங்களையும் வீடியோக்களையும் பலர் உடனடியாக போரின் முதல் நாளிலிருந்து சமூகவலைதளங்களில் மேலேற்றம் செய்தனர். இதன் வாயிலாக இஸ்ரேல் பாலஸ்தீனர்களின் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகள் உலகெங்கும் உடனுக்குடன் தெரியவந்தது. உலகெங்கிலும் இருந்து இஸ்ரேலுக்கு நெருக்கடிகள் வந்தன. மேலும் தரைவழி தாக்குதலை தொடங்க அமெரிக்காவின் அனுமதிக்கு காத்திருந்த இஸ்ரேலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு இந்த படங்களும் முக்கிய காரணம் எனலாம். எனினும் மிகமுக்கிய காரணம் அரபுலக எழுச்சிக்கு பின் முஸ்லிம்களுடனான நேரடி போரை அமெரிக்கா விரும்பவில்லை.

உலககெங்கும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள்

வெள்ளிக்கிழமையன்று ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இஸ்ரேலின் இந்த அப்பாவி மக்களுக்கு எதிரான வெறித்தனமான தாக்குதலுக்கு எதிரான கண்டன போராட்டங்கள் நடைபெற்றன. லட்சக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். (ரஷ்யா டுடே செய்திகள்)

எகிப்தின் தலைநகரில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்து வந்த லட்சக்கணக்கான முஸ்லிம்கள் “காஸாவுக்கு நாம் லட்சக்கணக்கில் செல்வோம், எங்கள் வாழ்க்கை பாலஸ்தீனத்திற்காக அர்ப்பணிப்போம்” என்ற கோஷங்களுடன் போராட்டத்தினை பதிவு செய்தனர். லெபனானிலும் இந்த போராட்டம் நடந்தது.

ஈரானிலும் இதே நிலை தான். 700க்கு மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.

ஆஸ்திரேலியாவிலும் தெற்கு கொரியாவிலும், இஸ்தான்புல், அங்காரா, ரோம், மத்ரித், துனீஷியா, எமன், அல்ஜீரியா இன்னும் உலகின் பல நாடுகளிலும் இதே நிலைதான். இதனால் இஸ்ரேல் உலகத்தில் தனிமைப்பட்டு போனது.

இஸ்தான்புல் போராட்டத்தில் பங்கேற்ற அலி கோலின் என்பாரின் கூற்றினை இங்கே கூறுவது மிகப்பொருத்தமானது.

“இவ்விஷயத்தில் அனைத்து முஸ்லிம்களும் தங்களது உறுதியை காட்டவேண்டும் என நான் நம்புகிறேன். பிரிவினைகளும் கருத்துவேறுபாடுகளும் நம்முடைய குறிக்கோளை அழித்துவிடும். இதற்கு இஸ்ரேல் பதில் சொல்லவேண்டும் என விரும்பினால் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இதனை செய்ய வேண்டும். இஸ்ரேலை கண்டிப்பதால் மட்டுமே நாம் எதனையும் அடைந்து விடமுடியாது. நாம் கண்டிப்பாக சில உண்மையான (உருப்படியான) நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.” (http://www.tehrantimes.com/middle-east/103391-condemnation-of-israeli-aggression-on-gaza-)

கடினமான சூழ்நிலை

ஹமாசின் தலைவர்கள் ஒரு கடினமான நிலையை மேற்கொண்டார்கள். ராக்கெட் தாக்குதலை நிறுத்தினால் தான் பேச்சுவார்த்தை என்ற இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் நிராகரித்தது.

“நாங்கள் இஸ்ரேலின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளமாட்டோம், ஏனெனில் அது தான் அடக்குமுறை நாடு. எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் போர்நிறுத்தத்தையே நாங்கள் விரும்புகிறோம்.”

இதன் பின்னர் இஸ்ரேல் தங்களது அடுத்த திட்டமாக பாலஸ்தீனத்தின் மீது தரைவழி தாக்குதலை தொடங்கப்போவதாக அறிவித்தது.

அவ்வாறு இஸ்ரேல் ஒருவேளை தரைவழி தாக்குதலை தொடங்குமானால் காசா இஸ்ரேலியர்களின் அடக்கஸ்தலமாக மாறிவிடும் என்று ஹமாஸ் கூறியது. ஹமாஸின் செய்தி தொடர்பாளர் முஷிர் அல் மஸ்ரி இதனை தெரிவித்தார்.

குழந்தைகள் கொலையாளி நெதன்யாஹூ

ஹமாசின் அரசியல் பிரிவுத்தலைவர் காலித் மெஷால் கூறும்போது இஸ்ரேல் என்ன நோக்கத்திற்காக காஸாவை தாக்கியதோ அந்த நோக்கத்தில் தோற்றுவிட்டது. இஸ்ரேல் ஒருவேளை தரைவழி தாக்குதலை தொடங்குமானால் அது இஸ்ரேல் செய்யும் மிகப்பெரிய தவறாக முடிந்து விடும் என்று கூறினார்.

இந்த போரை நிறுத்தவேண்டுமானால் பாலஸ்தீனத்தில் அடைக்கப்பட்ட அத்தனை வழிகளும் எல்லைகளும் திறக்கப்பட வேண்டும், ஹமாசின் தலைவர்களை குறிவைத்து தாக்குவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவை “குழந்தைகள் கொலையாளி” என்றும் “போர்குற்றவாளி” என்றும் அறிவித்தார்.

தரைவழி தாக்குதலும் பான் கீ மூனும்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் செவ்வாய் 20.11.2012 அன்று அளித்த பேட்டியில் இஸ்ரேல் இந்த சண்டையினை உடனடியாக நிறுத்தத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று கூறினார். அத்துடன் ஒருவேளை காசா பகுதியில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்குமானால் அது பெரிய ஆபத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்றும் எச்சரித்தார்.

 “என்னுடைய செய்தி தெளிவானது. அனைத்து பக்கமும் சண்டையை நிறுத்தவேண்டும். மேலும் தாக்குதலை விரிவுபடுத்துவது (தரைவழி தாக்குதலை தொடங்குவது) மொத்த (அரபு) பகுதியையும் அபாயத்திற்கு உட்படுத்திவிடும். நான் இஸ்ரேலிய தலைமையை இந்த வன்முறையை நிறுத்த துரிதப்படுத்துவேன்”

இருப்பினும் நடுநடுவே அவர் அமெரிக்கா சொல்லித்தந்ததையும் வாந்தியெடுக்க தவறவில்லை.

“இஸ்ரேலுக்கு,முறையான பாதுகாப்புக் கவலைகள் உண்டு என்பதை நாம் அனைவரும் அறியவேண்டும். சர்வதேச சட்டப்படி அந்த கவலைகள் மதிக்கப்படவேண்டும். எனினும் தரைவழி தாக்குதல் ஆபத்தினை அதிகப்படுத்தும் விதமாக அமைந்துவிடும்.” (அராப் நியூஸ் - செவ்வாய்கிழமை 20 நவம்பர் 2012)

ஆனால் நியாயமற்ற முறையில் பாலஸ்தீனத்தை ஆக்ரமித்து யூத நாட்டினை உருவாக்கிக் கொண்ட இஸ்ரேலுக்கு தங்களுடைய பாதுகாப்பைப்பற்றி கவலைப்பட எந்த விதமான நியாயங்களும் கிடையாது என்பதை நீதி நேர்மையுடன் சிந்திக்கக் கூடிய அனைவரும் அறிவர்.

palestine_641

ஹமாசின் தாக்குதலில் ஏற்கனவே மிரண்டு போய் இருந்த இஸ்ரேல் பான்கீ மூன் அவர்களின் இந்த அறிவிப்பினால் மேலும் மிரண்டது. அரபுலகில் இஸ்லாமிய எழுச்சி வந்துள்ள நேரத்தில் நடக்கும் இந்தப்போர் மொத்த அரபுலகத்தையே இஸ்ரேலுக்கு எதிராக திருப்பிவிடும் என்பதை பான் கீ மூன் நன்றாகவே உணர்ந்திருந்தார். அமெரிக்காவும் இதனையே பான்கீ மூன் அவர்களிடம் சொல்லி அனுப்பியது. அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட இதனை தெளிவாக உணர்ந்திருந்தன.

சிரியாவில் முஸ்லிம்களுக்கிடையே நடக்கும் பிரச்சனையை கொண்டு குளிர்காய நினைத்துகொண்டிருந்த அமெரிக்கா இவ்வேளையில் இஸ்லாமிய நாடுகளும் முஸ்லிம்களும் ஒன்று சேருவதை நிச்சயம் விரும்பவில்லை. ஒருபக்கம் ஹமாஸ், ஒருபக்கம் ஹிஸ்புல்லா, ஒருபக்கம் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், இத்துடன் எகிப்தின் இராணுவம், சிரியாவின் இராணுவம், துனீஷியா, கூடவே ஈரான் என அனைவரும் இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிவிடக்கூடிய ஆபத்து உள்ளதை அமெரிக்கா தெளிவாக உணர்ந்தது. உடனடியாக தன்னுடைய செயலாளர் ஹிலாரி கிளின்டனை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பி இதனை அறிவுறுத்தியது. இதுவரை மௌனம் காத்த அரபு நாடுகளும் எகிப்தின் தலைமையில் இஸ்ரேலுக்கு எதிரான தங்களது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்தன.

இதன் காரணமாக தரைவழி தாக்குதலை தொடங்குவதை தற்போது நிறுத்தி வைத்திருப்பதாக திங்களன்று மூத்த இஸ்ரேலிய அமைச்சர்கள் அறிவித்தனர். ஆயினும் அப்பாவி பொது மக்கள் மீதான வான்வெளி தாக்குதல் வழக்கம் போல் செவ்வாய்கிழமை காலையே தொடங்கிவிட்டது. (http://www.arabnews.com/un-chief-warns-israel-against-gaza-incursion ) And Gaza Live Blog AlJazeera

இணையதளப்போர்

இதற்கிடையே காஸாவை இஸ்ரேல் தாக்க ஆரம்பித்ததிலிருந்து இஸ்ரேலின் அரசாங்க இணைய தளங்களை களவாடவும் அந்த இணையதளங்களை தடுக்கவும் 440,00,000 அதாவது 44 மில்லியன் முயற்சிகள் நடந்தன. இதில் 10 மில்லியன் முயற்சிகள் இஸ்ரேலிய பிரதமர் இணையத்தை முடக்கவும் 7 மில்லியன் முயற்சிகள் இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சக இணையத்தை முடக்கவும் நடந்தன. இந்த முயற்சியில் ஒரே ஒரு இணையதளம் மட்டுமே வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேலின் நிதியமைச்சர் யுவான் ஸ்டெய்னிட்ஜ் கூறினார். ஆனால் அது எந்த இணையதளம் என்ற விவரத்தை வெளியிட மறுத்துவிட்டார். அந்த இணையதளத்தினை சற்று நேரத்திற்கெல்லாம் சரி செய்து விட்டதாகவும் அவர் கூறினார்.

ஆனால் பல இணையதளங்கள் செயலிழந்து விட்டது தான் உண்மை. அனானிமஸ் என்ற இணையகுழுமம் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டிருக்கும் தாக்குதலுக்கு எதிராக 700க்கு மேற்பட்ட இஸ்ரேலிய இணையதளங்களை தாக்கி செயலற்றதாக்கி விட்டதாக அறிவித்தது. அதில் சில முக்கியமான இணையதளங்கள் இஸ்ரேலின் காதிமா பார்ட்டி இணையதளம், பாங்க் ஆஃப் ஜெரூசலம் இணையதளம், இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் போன்றவை.

இதே போன்று அரசுசாரா பல இஸ்ரேலிய இணையதளங்களும் இணையபோரில் தாக்குதலுக்கு உள்ளாயின.

இஸ்ரேலின் பாதுகாப்புதுறை இணையதளம், பிரதம மந்திரி அலுவலக, ஜனாதிபதி அலுவலக மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியின் அலுவலக இணையதளங்கள் இத்தாக்குதலுக்கு உள்ளாயின. இத்தாக்குதல்கள் உலகில் பல பகுதிகளில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக இந்த தாக்குதல்கள் இஸ்ரேலில் இருந்தும் பாலஸ்தீனத்தில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டன. (http://www.arabnews.com/tens-millions-hackers-target-israel-govt-websites and Gaza Live Blog AlJazeera)

ஹமாசின் உளவுப்பிரிவின் சாதனை

காசாவின் அனைத்து தொலைதொடர்பு கருவிகளின் தொடர்புகளும் இணையதள தொடர்புகளும் இஸ்ரேலின் வழியாக தான் காசாவிற்கு வருகின்றன. அந்த தொடர்புகளை துண்டித்திருந்தால் பாலஸ்தீனத்திலிருந்து எந்த செய்திகளும் வெளியுலகிற்கு வந்திருக்காது. ஆனால் அதனை இஸ்ரேல் செய்யாததற்கு காரணம், காசாவிற்குள் என்ன பேசிக்கொள்கிறார்கள், என்ன செய்திகளை வெளியிடுகிறார்கள் என்று உளவெடுக்க. ஆனால் நடந்தது என்னவென்றால் ஹமாசின் அல்கஸ்ஸாம் பிரிவு உளவாளிகள் இதே தொலை தொடர்பு கருவிகளை பயன்படுத்தி அவற்றை ஹாக் செய்து இஸ்ரேல் இராணுவத்தினர் 5000 பேர்களின் கைபேசிகளுக்கு அச்சுறுத்தல் செய்திகளை அனுப்பி அவர்களின் மனதில் மரண பயத்தை ஏற்படுத்தினர். இதனை இஸ்ரேலிய இராணுவமும் மறுக்கவில்லை.

இஸ்ரேலிய உளவாளிகளுக்குப் பாடம்

இதற்கிடையே இஸ்ரேலுக்கு உளவாளிகளாக செயல்பட்ட 6 பேரை பாலஸ்தீன போராளிகள் சுட்டுக்கொன்றனர். இதனை ஹமாஸ் அக்ஸா வானொலி உறுதி செய்தது. “அவர்களை நாங்கள் கையும் களவுமாக பிடித்துவிட்டோம், அவர்களிடமிருந்து அதிக தொழில்நுட்பம் வாய்ந்த புகைப்பட கருவிகளும் எங்களுடைய இடங்களை படம் பிடித்து வைத்திருந்த படங்களும் கைப்பற்றப்பட்டன. அவர்கள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்தவர்கள்” என்று ஹமாஸ் வானொலி தெரிவித்தது.

செவ்வாய் கிழமை இஸ்ரேலின் தெற்கு பகுதியை தாக்கிய ராக்கெட் 5 இஸ்ரேலிய ராணுவத்தினரை பலத்த காயப்படுத்தியது.

போராட்டகுழுக்கள் ஒன்றிணைந்தன

இந்த போரினால் மற்றொரு நன்மையும் நடந்தது. அது இஸ்ரேலுக்கு பேரிடியாக இருந்தது. ஹமாஸ் இயக்கத்தினரும் அல்ஃபதாஹ் இயக்கத்தினரும் திங்கட்கிழமை அன்று கூட்டாக ஓர் அறிவிப்பை வெளியிட்டனர். அதில் தங்களுக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாட்டை களைந்து தாங்கள் இன்று முதல் ஒருங்கிணைந்து விட்டதாக அறிவித்தனர்.

“இன்று முதல் எங்களுடைய மற்ற தலைவர்களுடனான கருத்து வேற்றுமையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என அறிவிக்கிறோம்” இவ்வாறு ஜிப்ரீல் ரஜப் என்ற மூத்த ஃபதா அதிகாரி ரமல்லாவில் நடந்த பேரணியில் தெரிவித்தார். இது பாலஸ்தீன போராட்டத்தில் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது. (http://blogs.aljazeera.com/topic/gaza/breaking-hamas-fatah-rivals-agree-unite-over-gaza-crisis)

போர் நிறுத்த நிபந்தனை

ஹமாஸ் இயக்கத்தினரும் இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தினரும் எகிப்தும் சேர்ந்து கூட்டாக போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகளை வெளியிட்டனர்.

1. ஹமாஸ் இயக்கத்தினரை அரசியல் காரணங்களுக்காக கொலை செய்வது நிறுத்தப்படவேண்டும்.

2. காசாவில் இருந்து ராக்கெட் தாக்குதல் நிறுத்தப்படும்.

3. எல்லைகளை கடப்பது எளிதாக்கப்பட வேண்டும். (முற்றிலுமாக திறந்து விட வேண்டியதில்லை)

4. போர்நிறுத்தத்திற்கு உத்தரவாதம் கொடுப்பவராக எகிப்து அரசாங்கம் இருக்கும்.

ஹமாசின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதொரு போர் நிறுத்தத்தினை வேறுவழியின்றி இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. எகிப்தின் முயற்சியில் இது நடந்தது. புதன்கிழமையிலிருந்து இது அமலுக்கு வந்தது.

இதன் பின்னர் இந்த ஒப்பந்தத்தை பாதுகாப்பது மட்டுமே முக்கியமல்ல மாறாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவதே இதன் முடிவு என்ற கருத்தும் அரபு நாடுகளால் முன் வைக்கப்பட்டது.

“அரபுலகம்,இஸ்லாமிய உலகம் மற்றும் அதன் நேசநாடுகளின் முன் உள்ள உண்மை பிரச்சனை இந்த ஒப்பந்தத்தை பாதுகாப்பது மட்டும் அல்ல. மாறாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவருவது.” என்று அரபு லீக் நாடுகளின் தலைவர் நபில் அல் அராபி கூறினார்.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் (எகிப்தின்) நிலை முக்கியமானது

நான்காண்டுகளுக்கு முன் கையாண்ட அதே போர்தந்திரங்களுடன் ஹமாசை எதிர்கொண்ட இஸ்ரேலுக்கு அதிர்ச்சி. ஹமாஸ் இப்பொழுது பலம்பொருந்திய அணியாக மாறிவிட்டிருந்தது. இதற்கு முன் 2008ல் இஸ்ரேல் காசாவை தாக்கியது. ஆனால் தற்போதைய நிலைமை வேறு. இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட இரண்டு நாடுகளில் எகிப்தும் ஒன்று. அப்பொழுது எகிப்து அமெரிக்க அடிவருடியாக இருந்தது. இஸ்ரேலின் அடாவடி செயலை தட்டிக்கேட்க திராணியற்ற ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி அங்கு நடைபெற்றது. ஆனால் தற்போது இஸ்லாமிய எழுச்சி முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை எகிப்தின் ஆட்சியில் அமர்த்தியுள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திடமிருந்து முதல் செய்தி இவ்வாறு வந்தது,

“அல் கஸ்ஸாம் தலைவர் அஹ்மத் அல் ஜபரியை இஸ்ரேல் படுகொலை செய்ததை சுதந்திரம் மற்றும் நீதிக்கான கட்சி கண்டிகிறது . அது ஒரு குற்றம். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலின் முற்றுகைக்கு கீழ் நடக்கும் இந்த படுகொலைகளை அரபுலகமும் சர்வதேச இயக்கங்களும் வேகமாக தடுக்க வேண்டும். இஸ்ரேல் இஸ்ரேலுக்குள் இருக்கும் உள்நாட்டு குழப்பங்களை தீர்க்க இந்த பிரச்சனையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

பாலஸ்தீன தடுப்பு இயக்கங்களுக்கு எதிராக நடக்கின்ற இந்த படுகொலை கொள்கைகளை இஸ்ரேல் இந்தப்பகுதியை நிலையற்றதாக வைத்திருக்க விரும்புவதாகவே இந்த கட்சி பார்க்கிறது. இருப்பினும் ஆக்கிரமிப்பாளனான இஸ்ரேல் எகிப்தையும் சேர்த்து இப்பிராந்தியத்தில் நடந்துள்ள மாற்றங்களை கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களைப் போல தற்போதும் பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியர்களின் ஆக்ரமிப்பு கொடுமைகளுக்கு உள்ளாக எகிப்து அனுமதிக்காது.

இந்த கட்சி பாலஸ்தீனத்தின் தடுப்பு இயக்கங்களின் தலைவர்களுக்கும் பாலஸ்தீனத்தில் ஷஹீதான அஹ்மத் அல் ஜபரியினுடைய பொதுமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அஹ்மத் ஜபரி கடந்த ஆண்டு இஸ்ரேலிய இராணுவ வீரர் கெலாட் ஷாலிட் என்பவனை உயிருடன் பிடித்து அவனுக்கு பதிலாக 1000 பாலஸ்தீன மக்களை விடுவித்தவர்களில் முக்கியமான ஒருவர்.”

எகிப்தின் நிலை எவ்வளவு முக்கியமானது என்பதனை பின்வருபவரின் வார்த்தைகளின் மூலம் அறியலாம். அஜ்ஜாம் தமீமி என்ற இஸ்லாமிய அரசியல் வல்லுனர் இவ்வாறு கூறினார்,

“எகிப்து தற்போது சந்திப்புகளின் அரங்கமாகவும் அரபுலக மூத்த அதிகாரிகள் மற்றும் தூதர்கள் ஹமாஸ் மற்றும் காசா மக்களை பற்றிய அவர்களுடைய கருத்தை உறுதியுடன் வெளிப்படுத்தும் மையமாகவும் உள்ளது”

நம்பியபடியே எகிப்து இந்த பிரச்சனையில் மிக அழகான முறையில் நடந்து கொண்டது. பல அரசியல் சதுரங்கங்க காய்களை அது நகர்த்தியது. முதலில் இஸ்ரேலுக்கான தன்னுடைய தூதரை திரும்ப அழைத்துக்கொண்டது எகிப்து. எகிப்தில் இருந்த இஸ்ரேலிய தூதருக்கு சம்மன் அனுப்பியது. பின்னர் காயம்பட்ட காசா மக்களுக்காக ரஃபா எல்லையை திறந்து விட்டது. பின்னர் எகிப்தின் அதிபர் முஸ்ரி அவர்கள் இவ்வாறு கூறினார்,

.”இஸ்ரேல் சொல்வதைப் போல் தரைவழி தாக்குதலை தொடங்குமேயானால் இப்பகுதியில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனை நாங்களோ அல்ல சுதந்திர உலகமோ ஏற்றுக்கொள்ள மாட்டோம்.”

கத்தார் நாடும் இந்த பிரச்சனையில் முக்கிய பணியாற்றியது. ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி இதுபற்றி கூறும் போது,” அரபுலக எழுக்சிக்கு பின்பு அரபு நாடுகள் எடுத்துள்ள நிலை வித்தியாசமானது. 2008 நாம் நினைவு கூறுவோமேயானால் அப்பொழுது பாதிக்கப்பட்ட காசாவின் மக்களுக்கு எதுவும் தரமுடியவில்லை. தற்போது புதிய மாற்றத்தின் வெளிச்சத்தில் எகிப்தின் பிரதமமந்திரி காசாவிற்கு செல்கிறார், துனீஷியாவின் பொருளாதார அமைச்சர் காசாவிற்கு போகிறார், ஒரு வாரத்திற்கு முன் நான் காசாவிற்கு சென்றுள்ளேன். மாற்றங்கள் நடந்திருக்காவிட்டால் (அரபுலக எழுச்சி) இவை எதுவுமே நடந்திருக்காது.”

“இப்பொழுதுள்ள சூழ்நிலை முற்றிலும் மாறுபட்டது. நாம் காசாவின் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பதை பரிசீலிக்க வேண்டும். காசா ற்றுகையிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் தன்னுடைய முற்றுகையை முடிவுக்கு கொண்டு வருவதை கேட்கக்கூடிய தருணம் இதுதான். மனிதாபிமான உதவிகளை அனுப்புவபதற்காக ரஃபா எல்லையை திறந்து விட்டதற்காக எகிப்திற்கும் நாம் நன்றி சொல்கிறோம்”

gaza_623

அமெரிக்க தூதரக காவலாளி இஸ்ரேலியனால் தாக்கப்பட்டார்

இதற்கிடையே இஸ்ரேலில் சில காட்சிகள் நடந்தன. இஸ்ரேல் போரில் தோற்றுக்கொண்டிருந்தததையும் இஸ்ரேலியர்களின் விரக்தி மனநிலையையும் இந்த காட்சிகள் நிரூபித்தன. இஸ்ரேல் ஹமாசிடம் அடிவாங்ககிக் கொண்டிருந்ததையும் அதற்கு எதிராக அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்ததையும் காண சகிக்காத இஸ்ரேலியன் ஒருவன் அமெரிக்க தூதரகத்தின் காவல் அதிகாரிகள் சிலரை கத்தியால் குத்தினான். இஸ்ரேலிய போலிசார் அவனை பிடித்துவிட்டனர். பின்னர் அவனை மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று கூறினர். ஆனாலும் இது போன்ற நிகழ்வுகள் இஸ்ரேலுக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பலமுறை இஸ்ரேலியர்கள் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை தாக்க முயன்றுள்ளனர். ஒவ்வொரு முறையும் இஸ்ரேல் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்ற இதே பதிலையே சொல்லி வந்துள்ளது. (http://blogs.aljazeera.com/topic/gaza/attack-us-embassy-tel-aviv-confirmed)

இஸ்ரேலிய பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல்

புதன்கிழமையன்று இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் டெல்அவிவ் நகரில் பேருந்து ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறைந்தது 27 பேர் படுகாயம் அடைந்தனர். இது மனிதவெடிகுண்டால் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. மாறாக பேருந்தில் ஒட்டி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக ஹஃப்பிங்டன் போஸ்ட் என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு இஸ்ரேலின் பாதுகாப்பு மிக்க இராணுவ தலைமையகத்திற்கு அருகில் நடந்நது. இது போர்நிறுத்த அறிவிப்பிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் நடந்தது.

இதற்கு முன் கடைசியாக ஏப்ரல் 23 2006ல் இஸ்ரேலில் நடந்த குண்டுவெடிப்பில் 11 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 68க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்ட தலைவர்கள்

1.            ஜூலை 2002ல் இஸ்ரேலின் விமான தாக்குதலில் ஹமாசின் இராணுவப்பிரிவு தலைவர் ஸலா ஷஹீதா அவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களுடன் சேர்த்து 14 பேர் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகளும் பெண்களும் அடக்கம்.

2.            மார்ச் 2004ல் ஹமாசின் ஆன்மீகப்பிரிவு தலைவர் ஷேக் அஹமது யாசீன் அவர்கள் இஸ்ரேலின் விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். ஹமாசை உருவாக்கியவர்களில் ஒருவரான அஹமது யாசீன் அவர்கள் வயது முதிர்ந்தவர். வாத நோயால் நடக்கமுடியாதவர். ஹமாஸ் பாலஸ்தீனத்தில் செயல்படும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் பிரிவாகும்.

3.            ஏப்ரல் 2014ல் ஹமாசின் தலைவர் அப்துல் அஜீஸ் ரன்திசி இஸ்ரேலின் விமான ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்.

4.            ஜனவரி 2009ல் இஸ்ரேலின் போர்விமானங்கள் சுட்டதில் ஹமாசின் மூத்த தலைவர் நிசார் ரய்யான் என்பவரும் அவரல்லாமல் 18 பேரும் கொல்லப்பட்டனர்.

5.            ஜனவரி 2009ல் காசா ஹமாஸ் அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் ஜைத் சியாம் என்பவரை விமானதாக்குதலில் இஸ்ரேல் கொலை செய்தது.

அமெரிக்காவின் நிலை

அமெரிக்காவின் பத்திரிக்கை தொடர்பாளர் மார்க் டோனர் இவ்வாறு கூறினார்,”இஸ்ரேலின் தன்னை பாதுகாத்து கொள்ளும் உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம். இந்த தாக்குதல்களில் சாதாரண மக்கள் கொல்லப்படுவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

அதே நேரத்தில் காசாவிலிருந்து தெற்கு இஸ்ரேலின் மீது ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளதை நாங்கள் கண்டிக்கிறோம். இப்போரில் உயிரிழந்த அப்பாவி இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஹமாசும் மற்ற தீவிரவாத இயக்கங்களும் இஸ்ரேலிய மக்களுக்கு மீதாக கட்டவிழ்த்துள்ள வன்முறைகளை நியாயப்படுத்த எந்த முகாந்திரமும் இல்லை.”

இப்பொழுது தெரிகிறதா அமெரிக்காவை ஏன் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் தங்களுடைய எதிரியாக கருதுகின்றன என்று. இவ்வளவு அநியாயங்களையும் இவ்வளவு பஞ்சமாபாதகங்களையும் செய்யும் இஸ்ரேலிய அரசுக்கு ஆதரவு. ஆனால் தங்கள் மீதும் விழும் அடிகளை தடுக்க முயலும் காசா மக்களுக்கு எதிர்ப்பு. இவர்கள் தான் மனித உரிமை காவலர்கள்.

பக்கபலமாக ஈரான்

இஸ்ரேல் பிச்சையெடுத்த போர் ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் காசாவெங்கும் துப்பாக்கிகள் வெடித்து காசாவின் வெற்றி கொண்டாடப்பட்டது, பல கார்களின் ஹாரன்கள் ஒலி எழுப்பி இதனை கொண்டாடின.

இஸ்ரேலை இதுவரை இல்லாத அளவிற்கு தாக்குதல் நடத்தி போரில் வெற்றிகொண்ட இஸ்லாமிய ஜிஹாத் குழுவினரையும் ஹமாசையும் ஈரான் அதிபர் அஹமது நஜதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்தார்.

“யூதர்கள் தங்கள் அந்தியை நெருங்கிவிட்டார்கள். பாலஸ்தீன நிலத்தின் உரிமையை அங்கீகரிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இறைவனின் கருணையினால் புனித அல்குத்ஸ்-இன் விடுதலைக்கு நாம் சாட்சிகளாவோம். ஹமாசுக்கு எதிராகவே நிற்கமுடியாத போது ஈரானுக்கு எதிரான தாக்குதலை நினைத்து பார்ப்பது கூட சிறுபிள்ளைத்தனமாது” என்றும் அவர் கூறினார். (Tehran Times On Line: 25 November 2012 15:36 In Print: Monday 26 November 2012)

ஹிஸ்புல்லாவின் எச்சரிக்கை

காசா போராளிகள் இஸ்ரேலை உலுக்கிவிட்ட ராக்கெட் அடிகளின் வாயிலாக தெளிவான வெற்றியை பெற்றுள்ளனர் என்று ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா அவர்கள் பாராட்டினார்

“பஜ்ர் 5 ராக்கெட்டுகள் இஸ்ரேலை உலுக்கிவிட்டன. லெபனானை தாக்க நினைத்தால் தினமும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் டெல்அவிவையும் அதை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கும். அதை எதிர்த்து எவ்வாறு உங்களால் நிற்கமுடியும்.” என்று தொலைக்காட்சி பேட்டியின் வாயிலாக தன்னுடைய ஆதரவாளர்களிடம் அவர் பேசினார்.

“மீண்டும் ஒருமுறை வாளுக்கு எதிராக இரத்தம் வெற்றி பெற்றுள்ளது. காசா போராளிகள் தங்களுடைய இரத்தத்தை சிந்தி இந்த வெற்றியை பெற்றுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். “

“நெதன்யாஹூ பெரிய இலக்கு எதையும் வைத்துக்கொள்ளவில்லை. அவருடைய குறுகிய இலக்கைக்கூட இஸ்ரேலால் அடையமுடியவில்லை.

அவர் பாலஸ்தீன போராளிகளின் எதிர்ப்பை தடுக்க நினைத்தார். அது முடியாமல் போனது.

பாலஸ்தீன போராளிகளின் ஏவுகணை சக்திகளை அழிக்க நினைத்தார். அதுவும் முடியாமல் போனது.

இஸ்ரேலின் பலத்தை அதிகப்படுத்த நினைத்தார். மாறாக இப்போரில் அது பலஹீனப்பட்டுப்போனது.

அஹ்மத் அல் ஜபரியின் இழப்பு முக்கியமானது தான் எனினும் போராளி இயக்கங்கள் தனி நபரை சார்ந்து ஒருபோதும் இருந்ததில்லை” என்று அவர் கூறினார்.

இறுதி வழி

“தற்போது காசா மக்கள் பெற்றுள்ள வெற்றியின் வாயிலாக நமக்கு தெரிய வருவது என்னவெனில் பாலஸ்தீனத்தை காப்பாற்றவும் இந்நிலத்தில் நீதியை கொண்டுவரவும் இன்று நீங்கள் கையில் எடுத்துள்ள பாதை தான் ஒரே வழி”

இது ஈரான் அதிபர் அஹமது நஜதி அவர்கள் வெற்றி பெற்ற காசா மக்களைப்பார்த்து கூறியது. இந்த வழி ஒன்று தான் பாலஸ்தீனத்தை காக்கும். ஏன் அடக்கி ஒடுக்கப்படும் அனைத்து முஸ்லிம்களையும் இந்த வழியே காக்கும்.

                                                -அபூஅப்ரஹ்

Pin It