அயோத்தியாவில் வரலாற்றுக் காலந்தொட்டே இராமர் கோயில் ஒன்று இருந்து வருகின்றது. பாபரி மஸ்ஜித் இருக்கும் இடத்தில் தான் இராமர் பிறந்தார் என்பது இந்துத்துவ பாசிஸிட்களின் அடாவடி.

அயோத்தியில் இருக்கும் இராமர் கோயிலின் மஹந்த யுகால் கிஷோர் இவர் சமூக நல ஆர்வலர், நடுவு நிலையான சிந்தனையை கொண்டவர், பல நூல்களை எழுதியவர், பாபரி மஸ்ஜித் வழக்கில் சாட்சியம் சொன்னவர். அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றை இங்கே வெளியிடுகின்றோம்.

கேள்வி: நீங்கள் பாபரி மஸ்ஜித் வழக்கில் ஒரு முக்கிய சாட்சியம். நீங்கள் நிறைய புத்தங்களையும் எழுதி இருக்கின்றீர்கள். இந்த பின்னணியில் நீங்கள் பாபரி மஸ்ஜித் பற்றி உங்கள் கருத்துக்களைச் சொல்ல முடியுமா?

பதில்: நான் மஸ்ஜித் வளாகத்திற்கு பின்னால் தான் வாழ்ந்து வருகின்றேன். அங்கே என் கோவில் இருக்கின்றது. பாபரி மஸ்ஜித்-ஐ இடிக்கும் தீவிரவாதத்தை நான் என் கண்களால் பார்த்தேன். கரசேவர்கள் கோடாரி கத்தியுடன் என் கோயிலை சுற்றிவளைத்து நின்றார்கள். அங்கே பத்திரிக்கையாளர்கள் வந்தால் அவர்களைக் கொலை செய்திட தயாராக இருந்தார்கள். அதேபோல் சமூக ஆர்வலர்களையும் கொலைசெய்யத் தயாராக இருந்தார்கள். நான் மத்திய புலனாய்வு துறையின் நீதிமன்றத்தில் இதைச் சொன்னேன். அமெரிக்கா விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதிய ஜனதா கட்சி, பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி தன்னுடைய சதிகளையும் கொலை பாதகங்களையும் நிறைவேற்றி வருகின்றது என்பதையும் அந்த நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தினேன்.

இந்த வலதுசாரி அமைப்புகள் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லிடாமலிருக்க என்னை தடுக்க முயற்சி செய்தார்கள். நான் பாபரி மஸ்ஜித்-ஐ பற்றியும் சங்க பரிவாரத்தைப் பற்றியும் எழுதியபோது என்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள். இந்த கொலை மிரட்டல்கள் மத்தியப் பிரதேசத்திலிருந்தும் பீகாரிலிருந்தும் வந்தன.

என்னை அவர்கள் இராமருக்கு எதிரானவன் என்றும் இந்துகளுக்கு எதிரானவன் என்றும் வசைபாடினார்கள். இவர்களோடு போரிடுவது இறைவனை வணங்குவதை விட அதிகமான இன்பத்தை எனக்கு தருகின்றது.

கேள்வி : பத்திரிக்கையாளர் முஹம்மது காசிமியின் கைதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.

பதில் : ஒரு முக்கியமான பத்திரிக்கையாளர் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவது இதுவே முதல் தடவை. இது ஓர் ஏதோச்சதிகார தாக்குதல். முஸ்லிம் அறிஞர்கள் இந்திய விவகாரங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிட கூடாது எனத் தடுக்கின்ற நடவடிக்கையாகும்.

காசிமி ஓர் உலகறிந்த பத்திரிக்கையாளர். மேலை நாட்டு விவகாரங்களில் மிகவும் ஆழ்ந்த அறிவுள்ளவர். அவரை ஒரு தீவிரவாதி என முத்திரைக் குத்தினார்கள். அவரை தேசத்துரோகி என்றும் அழைத்தார்கள். இத்தனையும் யூத உளவுத்துறையாகிய மொசாத் இன் தூண்டுதலின் கீழ்தான் நடந்தன.

கேள்வி: இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையேயுள்ள உறவுகள் வளர்ந்து வருகின்றனவே அதைப்பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில் : இஸ்ரேலுடன் வலுவான உறவு என்பது ஒரு பேராபத்து. இந்தியா தனக்குத் தேவையான ஆயுதங்களில் 30 சதவிகிதம் ஆயுதங்களை இஸ்ரேலிடமிருந்து தான் வாங்குகின்றது. இஃது நமது நாட்டின் வருங்கால திட்டங்களைப் பற்றிய ஐயங்களை எழுப்புகின்றது.

குறிப்பாக நமது அக்கம் பக்கத்து நாடுகள் நம்மை சந்தேகத்தோடு பார்க்கத் தொடங்கி விட்டன. நமது நாடு இஸ்ரேலோடு கொண்டுள்ள உறவுகளால்தான் இஸ்ரேல் பாலஸ்தீன் மக்கள் மிது கட்டவிழ்த்திடும் அநியாயங்களைக் கண்டு கொள்ள முடிவதில்லை. இந்தியா அநியாயக்காரர்களின் கையென ஆகிக் கொண்டிருக்கின்றது.

இந்தி மொழியிலிருந்து மொழி பெயர்த்தவர் ஆலியாகான்

தமிழில் குலாம் முஹம்மது

Source : Milli Gazette 16-30 Sept 2012

Pin It