கடந்த நாடளுமன்றத் தேர்தலில், பீ ஜே பீ பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு, பிரச்சாரம் சென்ற இடங்களிலெல்லாம் மோடியும், பீ ஜே பீயும் அதன் தலைவர்களும் அதிகமதிகமாக சொன்ன விசயம் கறுப்புப் பண மீட்பும், விலைவாசியும் தான்.

அப்பொழுது கூப்பாடு போட்ட, இப்பொழுது மோசடி என்று எண்ணுமளவு செயல்படுகிற மோடியின் கோசம் “நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், 100 நாட்களில் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்து, ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுப்போம் என்பதே. அதாவது கேதர்நாத்தில் வெள்ளம் ஏற்பட்டு மண் எது? தண்ணீர் எது? என்று தெரியாமல் எல்லோரும் பதைத்துக் கொண்டிருந்த பொழுது, அவ்வளவு பெரிய, (மனித கற்பனைக்கெல்லாம் எட்டாத) மிகப் பிரமாண்டமான இடிபாடுகளுக்கிடையில்,மிக அதிகமாக 10 நபர்கள் மட்டுமே அமரக்கூடிய வெறும் 80 இன்னோவா கார்களில் சென்று சூப்பர் மேன் அல்லது ஸ்பைடர் மேன் அல்லது அதை விடப் பெரிய மேன் போல சாதனை (!) புரிந்து 15,000 ஆயிரம் குஜராத்திரியர்களை தனியாக இனம் கண்டு, கரை சேர்த்தார் என்று சொன்னதைப் போல, நூறு நாட்களில் கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவதாகச் சொன்னார்.அதைச் சிந்தித்துப் பகுத்துணர்ந்த இந்தியத் திருநாட்டு மக்களும் அவரின் பேச்சையும், கேதர்நாத்தில் அவர் புரிந்ததாகச் சொல்லப்பட்ட சாதனைகளையும், குஜராத்தில் 2002ல் அவர் நடத்திய சமூக சேவைகளையும் (௧) நம்பி அவரை அரியணையேற்றி இன்று அழகு பார்கின்றனர்.

எங்கே அந்தக் கறுப்புப் பணம்?. எங்கே என்னுடைய பங்கு 15 லட்சம் ரூபாய்?.

பதவியேற்று 150 நாட்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த மோசடி அரசு, இரு வரிக் கொள்கையுள்ளதால் கறுப்புப் பணத்தை பதுக்கியுள்ள அந்த நபர்களின் பட்டியலைக் கூட தரமுடியாது என்று கூறிவிட்டனர். மேலும் வருமான வரித் துறையும், அமலாக்கப் பிரிவும் அயலக வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினர். அதற்கு அடுத்த நாள் உச்ச நீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து, கருப்புப் பணத்தைப் பதுக்கியுள்ள 627 பேர் அடங்கிய பட்டியலைக் கொடுத்துள்ளனர்.

அப்படிக் கொடுக்கப்பட்ட அந்தப் பட்டியலின் நம்பகத் தன்மையை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. ஏனெனில் அதில் மன்னார் அன் கம்பனி, துபாய் மெயின் ரோட், துபாய் மூத்தரச் சந்து, துபாய் பஸ் ஸ்டான்ட், துபாய் என்றிருந்தாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை.

இப்பொழுது நம்முடைய சந்தேகம், இருவரிக் கொள்கையிருந்தால், கறுப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களின் பணத்தையல்ல பெயரைக் கூட வெளியிடமுடியாது என்று உங்களுக்கு தேர்தலுக்கு முன்பே தெரியாதா? நன்றாகத் தெரிந்திருந்தும், ஏன் இந்திய மக்களை முட்டாளாள்களாக்கிணீர்கள்? உங்கள் பேச்சை நம்ப வைத்து இப்பொழுது ஏன் துரோகம் செய்கிறீர்கள்?

அடுத்து, பெட்ரோலியப் பொருட்களின் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை சுமார் 30% வரை குறைந்துள்ளது (25.11.2014 நிலவரப்படி). ஆனால் இந்தியாவிலோ 15% வரை கூட குறைய வில்லை. அப்படியிருக்கும் நிலையில், பெட்ரோலிய மூலப் பொருட்களின் உற்பத்தி விலையை உயர்த்தி மேலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையாதவாறு பார்த்துக்கொண்டீர்கள். ஏற்கனவே நோய்க்கு கசப்பு மருந்து கொடுக்கிறேன் பேர்வழி என்று புகைவண்டிக் கட்டணத்தை எட்டாத அளவிற்கு உயர்த்தியுள்ளீர்கள். நீங்கள் பொது மக்களுக்காகவா? அல்லது பெரு நிருவனங்களுக்காவா? பிரதமராயுள்ளீர்கள்? என்று தெளிவுபடுத்தி விட்டால், எங்களுக்கும் குழப்பமில்லாமல் இருக்கும்.

அடுத்து, அரசுடைமையாக்கப்பட்டுள்ள வங்கிகளின் வராக் கடன்

நீங்கள் ஏழை விவசாயிகளுக்கோ அல்லது மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கோ கடன் கொடுத்து, அரசுடைமையாக்கப்பட்டுள்ள வங்கிகளின் வராக் கடன் லட்சம் கோடிகளை (லட்சம் அல்லது கோடி என்பதல்ல லட்சம் கோடி. லட்சம் கோடி என்பது, குறைந்தது 14 பூஜ்யங்கள் உடையது) எட்டவில்லை. மாறாக, அவையெல்லாம் உங்கள் நண்பர்கள் அதாவது பெரு முதலாளிகளிடமே குவிந்துள்ளது.

அதைத் திரும்பப் பெறுவதைப் பற்றிய எந்த அக்கறையையும் மேற் கொள்ளாத நீங்கள், ஒரு சுதேசியாக, மேக் இன் இந்தியாவாக, உடனே ஒரு கோசம் எழுப்புகிறீர்கள். அதாவது பொதுத் துறைப் பங்குகளை விற்க வேண்டும் என்னும் கோசத்தை. அதாவது கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் வளங்கள் சுரண்டப்பட்டால் கால தாமதமுண்டாகுமென்பதால், பொதுத் துறை நிறுவனப் பங்குகளை அதானி போன்ற உங்கள் நண்பர்களுக்குக் கொடுத்து சேவை செய்ய உங்கள் மனம் நாடுகிறதோ என்ற ஐயம் உண்டாகிறது.

அடுத்து உங்கள் தலை தீபாவளி

கடந்த செப்டம்பர் மாதம், சிறுவர்கள் பொம்மைத் துப்பாக்கியில் பட்டாசுக்களை வெடிப்பது போல, பாகிஸ்தான் ராணுவத்தினர் இரவு பகலாக பீரங்கிகளால் காஷ்மீரைத் துளைத்துக் கொண்டிருக்கும் பொழுது, அதுவும் அந்த மாநிலமே கிட்டத்தட்ட வெள்ளத்தால் பாதி அழிந்து விட்டுள்ள நிலையில் ஒரு நாட்டின் பிரதமர் என்ற முறையில், கிஞ்சிற்றும் லஜ்ஜையில்லாமல் மிகவும் கூதுகலத்துடன் அங்கு சென்று தலைத் தீபாவளியைக் (பிரதமராக முதல் தீபாவளி) கொண்டாடிணீர்கள். உங்கள் தீபாவளியை எண்ணினால், வழி மட்டுமே மிஞ்சும்.

அடுத்து உங்கள் அமெரிக்க விஜயம்.

அமெரிக்கா செல்லும் முன் சுமார் 8,000 மதிப்புள்ள மருந்தின் விலையை சுமார் 1.1 லட்சம் ரூபாய் வரை நீங்கள் உயர்த்தி விட்டு சென்றதாக மூன்றாம் வீட்டு ராமும், நான்காம் வீட்டு ஆண்டனியும் சொன்னார்கள். நான் நம்பவில்லை. கரணம் நீங்கள் பொருப்பான பிரதமரென்பதால். ஆம், பதவியேற்று முதல் வேலையாக பொறுப்புடன் நீங்கள் செய்த காரியம், டிராய் விதியை உடைக்க வேண்டுமென்பதற்காக நீங்கள் கூட்டிய அவசர அமைச்சரவைக் கூட்டமென்பது எனக்கு நன்கு தெரியும்.

அடுத்து உங்கள் புவி, வரலாறு மற்றும் அறிவியலறிவு.

நேபாளத்திற்கு நீங்கள் அரசு முறை பயணமாகச் சென்றிருந்த பொழுது, அந்த நாட்டின் பெயரை பூடான் பூடான் என்று மூன்று முறை கூறி உங்கள் புவியியல் அறிவையும், தேர்தல் பிரச்சார சமயத்தில் திருச்சி மற்றும் வேறு பல சுற்றுப் பயணங்களிலும் வரலாற்றுப் உண்மைகளைத் திரித்துக் கூறி உங்கள் வரலாற்று அறிவைப் பறை சாற்றிய நீங்கள், ஒரு மருத்துவமனை திறப்பு விழாவில், மகாபாரத காலத்தில் மரபணு மருத்துவமுறை இருந்திருக்கிறதென்று கூறி உங்கள் அறிவியலறிவை பறை சாற்றியுள்ளீர்கள்.

இதனைப் பொறுக்க முடியாத கரன் தப்பார் போன்றவர்கள், உங்களை விமர்சிக்கிறார்கள். நீங்கள் குஜராத் முதல்வராக இருக்கும் பொழுது, கரன் தப்பார் உங்களிடம் பேட்டி எடுக்கும் பொழுது குஜராத் இனப் படுகொலை குறித்த அவருடைய கேள்வியின் பொழுது நீங்கள் மைக்கை விசிறி எறிந்து விட்டு சென்றதை, நீங்கள் குஜராத் இனப் படுகொலை குறித்த அவர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சென்று விட்டதாக நினைத்து அதற்குப் பகரமாக இந்த விமர்சனத்தை அவர் முன் வைக்கிறாரோ?.

ஆனால் எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல அவசியமில்லை என்று தான் தாங்கள் வந்தீர்களோ? என்று எனக்குத் தெரியாது. எது எப்படியோ. கரன் தப்பாரின் குஜராத் இனப் படுகொலை குறித்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தாங்கள் வரவில்லை என்று நான் இன்று வரை நம்புகிறேன்.       

அடுத்து உங்கள் வீரம்.

சீனா நம் அண்டை நாடு. அருணாச்சலம். நம் நாட்டின் ஒரு மாநிலம். ஆனால் சீனாவின் பார்வையில் அருணாச்சலம் அவர்களின் நாடு போல அவர்கள் இந்திய எல்லையில் தினமும் அத்துமீறுகிறார்கள், சாலை அமைக்கிறார்கள். உடனே வீரமகன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எப்படிக் கர்ஜித்தார் தெரியுமா? அவர்கள் சாலை அமைப்பதைத் தடுத்து நிருத்துவோமென்று கர்ஜித்தார் என்று யாரும் கற்பனை செய்து விடாதீர்கள். நம் அமைச்சரின் கர்ஜனை “அவர்கள் சாலை அமைத்தால், நம் வீரர்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். அந்த சாலைகளைத் துவம்சம் செய்வார்கள்.

அதாவது அவர்கள் சாலை அமைப்பது வரை வேடிக்கை பார்த்து விட்டு, சாலைகள் அமைத்தவுடன் தகர்த்தெறிவதென்பது, உண்மையில் அவர் வீரமகன் தான் அவர். அந்தச் சமயம் பொறுப்பான பிரதமராகிய நீங்களோ எல்லோர் கையிலும் விளக்குமாரைக் கொடுத்து சுத்தம் செய்வதற்கு, உலகில் முதல் முறையாக எல்லோருக்கும் புதியதாகப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.  

அடுத்து உங்களின் பொருளாதாரப் பார்வை

உங்கள் பொருளாதாரப் பார்வையைக் குறித்து அதிகம் விமர்சனம் செய்ய வேண்டாம். ஏனெனில் சுமார் இரண்டாயிரத்து இரு நூறு கோடி ரூபாய் முதலீட்டு டாடா நானோ தொழிற்சாலை திட்டத்திற்கு, சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் வரை வரிச் சலுகைகளை வழங்கி அழகு பார்த்த “வைப்ரன்ட் குஜராத்தின்” (துடிப்பான குஜராத்) முடி சூடா மான்னராக இருந்து தான் உங்கள் வளர்ச்சியின் படியே ஆரம்பமானது.

திரேதா யுகத்தில், அதாவது சுமார் முப்பது லட்சம் வருடங்களுக்கு முன்னால், சுருங்கச் சொன்னால் கல் தோன்றி மண் தோன்றுவதற்கு முன்னரே நடந்ததாக நீங்கள் நம்பும் ஒரு விசயத்தில், இந்தப் பாலம் போடப்பட்டது என்று கூறி பல்லாயிரம் கோடி ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்பட்டுள்ள ஒரு திட்டத்தையே முடக்கி விட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலவாணியை மிச்சப்படுத்தும் சேது சமுத்திரத் திட்டத்தை முடமாக்கி விட்டு, பொருதார வளர்ச்சி தான் எங்களின் தாரக மந்திரம் என்று கொஞ்சம் கூட பதட்டமேயில்லாமல் காஷ்மீரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளீர்கள். பதட்டம், கூச்சமில்லாமல் பொய் சொல்வது எப்படி என்று நான் ஒரு பயிற்சி வகுப்பு ஆரம்பித்தால், நீங்கள் விரும்பினால் அங்குள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சியாளராக வரலாம்.     

உங்களூக்காக எங்கள் பயிற்சி நிலையக் கதவுகள் திறந்திருக்கும்.

இறுதியாக உங்கள் மீது நம்பிக்கை.

பல தேர்தல்களில் நீங்கள் போட்டியிடும் பொழுது, உங்கள் திருமண விசயத்தையே மறைத்துள்ளீர்கள். அப்படிப்பட்ட ஆதர்ச புருசனான உங்கள் நேர்மையை சந்தேகிப்பது, உங்கள் மீது நல்லெண்ணம் கொள்ளாமலிருப்பது, உங்கள் மீது குற்றம் சுமத்துவதெல்லாம், தேச துரோகமாகிவிடுமோ என்ற காரணத்தால், சில பிரபலங்கள் விளக்குமாரைக் கையில் பிடித்திருப்பது போல, நானும் விளக்குமாரைக் கையிலெடுத்துக் கொண்டு, என்னுடைய தலைவிதியையும் நொந்து கொண்டு, சுத்தம் செய்வதற்கு பேருந்து நிலையம் செல்லலாமா? அல்லது புகைவண்டி நிலையம் செல்லலாமா? என்று சிந்தித்துக் கொண்டு, வேரு எந்த உலக சிந்தனையுமில்லாமல், ஸ்வாச் பாரத் (Clean India) அப்யானை மட்டும் சிந்தித்தவனாக.....

     

Pin It