ஆதிக் கொடியில் பூத்த
ஒற்றை இலை வழிக்கிளையொன்று
துளிர்ப்பதற்கென்று குருதி வழியே
வேர் விட்டு மண்ணில் பாய்ந்த போது
நெடும் உடலெனப் பிளந்த பூமி
பூத்துக் குலுங்கிக் கொண்டாடிய
மௌனத் தவங்கள் முளைத்த
கர்ப்பக் கிரகத்தினுள் வீறிட்டழுத
இருளுண்ட ஒற்றைக் கரு
அம்மா புடவையை மடிக்க முடியாதெனக்
கதறிக் கத்துகிறது காலவெளிக்குள்
காலங்காலமாய்...
        
அவனாள்

விட்டுக்கொடுத்தலென்ற
பழிவாங்கிய உச்சங்களில்
இசையிடைத்தொங்கும் மௌனச் சுரங்களென
சுருண்டு கொள்ளும் உடல் சுருக்கி
பாவனைகளின் அரியணையில் அமர்ந்து
வெற்றியென எழுப்பும்
கூக்குரலிசை யெல்லாம்
மயிர் முளைத்துக் கிடக்கிறது
மீசையும் தாடியுமாக
அவளை இவனும்
இவனை அவளும்
அங்கிங்கெனாதபடி எங்கும் கண்டு
ஆனந்தித்துக் கொள்வதாகப் பாசாங்குடன்
கட்டிப்புரண்டு உருண்டு எழுகிறார்கள்
கவிதைகளைப் பிறப்பிக்கும்
கடும் மௌனங்களுடன் கதவிடுக்கில்
புதைந்தொளியும் பல்லிகளாய்...

Pin It