வா! மகனே!
என்னை
துவம்சம் செய்;
காயப்படுத்து;
வேஷ்டியைத் துகிலுரி;

மாமரத்தை நேசித்த அளவு கூட
எப்போதும்
என்னை நேசிக்காத என் மகனே

உன்னோடு சண்டையிட
திராணியற்ற
வெற்றுடம்பாய்
விழுந்துகிடக்கிறேன்

ஆயுதம் ஏதுமின்றி
நிராயுதபாணியாய்...

கால்நீட்டி கண்மூடி
கட்டைவிரல் கட்டப்பட்டு
எங்கும் ஓடிவிடாதபடி

என் முகத்தில் மொய்க்கும்
ஈக்களை விரட்டவும்
இயலாதபடி...
என்னை
எரிப்பதா? புதைப்பதா?
என்பதுகூட
நீதானப்பா தீர்மானிக்க வேண்டும்.

எனது ரத்தஉறவு
பேரப்பிள்ளைகள் விளையாட்டுத்தனமாய்
தீப்பந்தங்களோடு நிற்கிறார்கள்
அவர்கள் மனதிலும் தீ வைத்துவிடாதே

எனது ராஜாங்கம் முடிந்துவிட்டது

நான் வளர்த்த
பூவரசப் போத்துகளும், தென்னை ஓலைகளும்
கூட வருகின்றன பாடையோடு

போகிறேன் மகனே
ஒருவரும் அறியாத ஒற்றையடிப்பாதையில்...
மண்ணுக்குள் புதைந்து
மண்ணோடு மண்ணாக...

உனது சண்டை
என்னோடு முடிந்துவிடும்
என்ற நம்பிக்கையுடன்

என்னை மனதளவில் மறுதலிக்கலாமே தவிர
உன் உடம்பெங்கும் பரவிக்கிடப்பது
என்னுடைய ரத்தம் என் மகனே
என்னுடைய ரத்தம்

***

நவீன நாற்காலி

"அம்மாச்சி ஆட்டுக்குட்டி
அம்மானூட்டுத் தென்னமரம்
சாஞ்சிடுச்சி சாஞ்சிடுச்சி''
கால்களுக்கு கவட்டி விரித்த மனசு
ஊஞ்சலானது

உப்புமூட்டைப் பயணம் உதவிற்று
குப்புறத்தள்ளி குண்டி அடிபடும்வரை

ரயிலை வாங்கிக்கேட்டு
தீப்பெட்டியே திருப்தியானது

காகிதக்கப்பல் கைக்குக் கிடைக்காததால்
மழை ஸ்நேகம் நடந்தது

கைவழியாய்க் கசிந்த
சாயங்காலச் சந்தோஷம்
சார் பூர் திரி போட்டது

ஓடிவிளையாட முடியாத மழைநாளில்
திருடன் போலீஸ் விளையாட்டு
திக்...திக்...மனசோடு

நணுங்காமல் தூக்கியடித்த
ஈக்குச்சிகளுக்கும் கைநடுங்கியதால்
உயிர் வந்தது

முழங்கால் சிரா#புகளோடு
திமிறிக்கொண்டுப் பாய்ந்து விழுந்த
கபடியாட்டம் ஆடத்தூண்டும் தினவு

பழைய
பரவச நெகிழ்வோடு
திரும்பினேன்

கார் ரேஸ் கேம்ஸ் பார்த்து
கைதட்டிச் சிரிக்கிறான்
என் மகன்
நவீன நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு

Pin It