ஏக்கமும் தவிப்புமாகத் தொடங்கியது, இப்போது வெறியாக மாறியிருந்தது. ஐப்பசி மாதத்தின் மெல்லிய குளிரும் சேர்ந்து கொண்டபோது வெறியளவுக் கூடியிருந்தது. வழக்கத்திற்கு மாறாக ஒவ்வொருவருக்குள்ளும் அந்த வெற்றிக்களிப்பும், வாகையும் தனதாகவே இருக்க வேண்டும் என்ற உறுதியும் மேலோங்கியிருந்தது. வெறியேறிய இந்தப் போட்டிக்குக் காரணம் இப்போதுதான் முதன்முதலாகப் பருவத்திற்கு வந்திருந்தது ஜிம்மி. பருவம் பூத்த பரிபூரணம் உடலின் எந்தப் பகுதியிலும் படர்ந்தே கிடந்தது ஜிம்மிக்கு. அந்தி மஞ்சள் வண்ணம் அழகைக் கூட்டியிருந்தது. நெற்றியின் நடுவில் இதயத்தை வரைந்து வைத்தார் போலக் கருப்பு மயிர்கள். கண்களுக்கு மேலே புருவம் தீட்டின மாதிரி கோடாக வெள்ளை நிறம். உடல் வாலிப்பாக, கால்கள் மென்மையும் வலிமையும் சமமாகச் சங்கமித்துப் பருவம் வந்த மொத்த ஆறு நாய்களையும் வாலிபப் போதையில் கிரங்கடித்துத் திரிந்தது.

மணி, ராஜா, ரவி, கருப்பா, செவலை, மூக்கன் இன்னும் பெயர் வைக்கப்படாத பதினெட்டு இருபது நாய்கள். எல்லோருக்குமே பெரியதாக சொந்த வீடோ, தனியொருவரின் பராமரிப்போ இல்லை. எல்லாமே தெரு நாய்களாகத்தான் எல்லோர் வீடுகளிலும் இருந்து வாழ்ந்தன. பெயர் வைக்கப் பெற்றவைகள் தொடக்க நாட்களில் ஒருவரின் வீட்டில் வளர்ந்தது என்பதும், பெயர் வைக்கப்படாதவைகள் இனப்பெருக்கத்தின் விளைவாக வளர்ப்பவர்கள் இல்லாமலே வளர்ந்தவை என்பதும் குறிப்பாக அறிந்து கொள்ள வேண்டியவை.

அங்கிருந்த பெண் நாய் முழுவதையும் தானே சொந்தம் கொண்டாடிய மணி மஞ்சளையும் சோப்பையும் கலந்த மாதிரி அடர் சிவலை நிறம். கலவையில்லாத கருப்பைப் போல் கண்கள். மூக்கு வெளிர் கருப்பு. வால் நீண்டு முறுக்கி விட்டாற் போல் மேலே தூக்கி நிற்கும். குரல் இரைச்சலாக அடக்கு முறையின் சாயலாகக் கம்பீரமாய் இருக்கும். ஆக அந்தக் கூட்டத்தின் தலைமைக்கான அத்தனைத் தகுதிகளுடனும்தான் வலம் வந்து கொண்டிருந்தது மணி நாய். இரண்டு ஆண்டுக்கு முன்வரை அதிகாரம் செலுத்திவந்த பலசாளி சோளக் கொல்லையில் திருடப் போனபோது வெங்காய வெடிக்குத் தன் கண்ணைப் பறிக் கொடுத்ததிலிருந்து மணியின் உடல்வலிமையும், தோற்றப்பொலிவும் தொலைந்து போனது. அதிகாரமும் சேர்ந்தே தொலைந்தது.

 ராஜா நாய் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. பெயருக்கு ஏற்பவே இராஜா நாட்டுநாய்களின் சராசரி உயரத்தை விடவும் கொஞ்சம் கூடுதல் உயரத்துடன் கழுத்தும் தலையின் முன் பகுதியும் கருப்பாக இருந்தது. அதாவது கோடைக்காலத்தில் தார் உருகி ஜொலிக்குமே அந்தக் கருப்பு. கழுத்துக்குப் பின்பகுதி உடல் முழுவதும் இளஞ்சிவப்பு நிறம். கால்கள் முழங்கால்களுக்குக் கீழ்வெள்ளை நிறமாக எடுப்பான தோற்றத்துடன், முயல் வேட்டை ஆடுவதிலும் வல்லமை பெற்றிருந்தது. இவ்வளவு தகுதி இருந்தும் அந்தப் பதவி ஓராண்டுக்குக் கூட நீடிக்கவில்லை.

போன சீசனில் ஜிம்மியின் அம்மா ராக்கியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும், இப்போது போட்டியாளர்களின் வலிமையால் ராக்கியை வசப்படுத்துவது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது ராஜாவுக்கு. அப்போதுதான் கருப்பனின் ஆளுமை தொடங்கிய நேரம்.

ராக்கிக்கும் கருப்பனின் மீது ஒரு பார்வை இருந்தது என்பதும் மறுப்பதற்கில்லை. பெரும்பாலும் ஒரு பெட்டை நாயைப் பலநாய்கள் துரத்தின போதும் அந்தப் பெட்டை நாய்க்கு யாரைப் பிடித்திருக்கிறதோ அதை மட்டும்தான் அனுமதிக்கும். என்றாலும், உடல் வலிமையும் அதிகாரமும் உள்ள சில நாய்கள் போட்டிக்கு வரும்போது விரும்பம் இல்லையென்றாலும் கட்டுப்பட்டே ஆகவேண்டும். அதுவும் கொடுமை தனது மனசுக்குப் பிடிச்ச நாய் ஏங்கித் தவித்து, தனது இயலாமைக்கு வெட்கித் தலைகுனிந்து வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கும். அந்தக் கொடுமையான தருணங்களில் பெண் நாய்கள் நினைப்பதுண்டு செத்தே விடலாமென்று.

போன சீசனில் அப்படியொரு ஆதிக்க அரங்கேற்றம் நடந்தது. இந்தத் தெரு நாய்களின் ஏக சுதந்திரமானதும், யாருடைய இடையூருமின்றி, எப்போதும் தங்களின் ஆதிக்க பூமியாகவும், அந்தப்புறமாகவும் விளங்கிய மேட்டுக்காடு அந்தச் சேரிமக்களுக்குச் சொந்தமானதாக இருந்த வானம்பார்த்த புஞ்சை நிலம். அங்கே வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருந்த பூர்விகக் குடிகளான ஐம்பது அறுபது குடிகளுக்கும் சொந்தமானதுதான் அந்த மேட்டுக்காடு பத்து ஏக்கரும். அந்தத் தெருநாய்களுக்கும் உரிமையுள்ள சொந்தங்கள் அவர்கள் மட்டுமே. அவர்களின் வாழ்க்கையையும், நாய்களின் வாழ்க்கையையும் பிரித்து வரலாறு எழுத முடியாது.

திருடுவதற்கு ஏதுவுமில்லை என்றபோதும் குடிசைக்குக் காவலாய், குழந்தைகளுக்கு உயிருள்ள பொம்மையாய், குழந்தைகள் மலம் கழித்தால் சுத்தம் செய்யும் துப்புறவுத் தொழிலாளியாய், பெண்கள் காட்டுக்கு விறகு பொறுக்க, தனியாகப் போகும் நேரங்களில் துணையாய், ஆண்களுக்கு உடன் செல்லும் மெய்க்காப்பாளராய், வீட்டில் இருக்கும் ஆடு, மாடுகளுக்கு உற்ற காவலனாய் இப்படி அந்தத் தெருநாய்களையும், சேரிமக்களையும் பிரித்துவிட முடியாத பிணைப்பு இருந்தது. பசியாறக்கூட வழியில்லை என்றபோதும் நன்றியுணர்வு சுவாசத்தைப் போலத் தெருநாய்களிடம் குடிகொண்டே இருந்தது.

அதனால் பூர்வீக மேட்டுக்காடு என்பது சேரிமக்களுக்கு மட்டும் பூர்வீகமானதல்ல. தெருநாய்களுக்கும் அதுவே பூர்வீகம். அவர்கள் பெயர்களில் பட்டா இருந்தது. தெரு நாய்களுக்கு அது இல்லை. பயன்பாட்டு ரீதியில் அவர்களைப் போலவே தெரு நாய்களுக்கும் சம பங்குண்டு.

அந்தச் செம்மண் காட்டில் ஐம்பது வயது நிரம்பிய ஆறேழு வேப்பமரங்கள், கள்ளிக்காடு, உசந்து படர்ந்த மாமரங்கள், பலாமரங்கள், வேலிக்கு அரணாக பனைமரங்கள். ஒரக்கேணி, சின்னச்சின்ன காய்கறித் தோட்டங்கள். ஊடே பூத்து நிற்கும் செவ்வந்தி செடிகள். இவைகளெல்லாம் அந்த மக்களுக்குப் பயன்பட்டதுபோலவே நாய்களுக்கும் போக்கிடமாய், காதல் வளர்க்கும் கந்தர்வ பூமியாய், இனவிருத்தி ஏற்பாட்டின் மறைவிடங்களாய், எல்லாவற்றிக்கும் மேலாக அந்த வேப்பமரங்கள் கோடையைக் கானலாக்கும் குளிர்வாசத் தலங்களாய், பசிமறந்து கண்ணயரும் தாய்மடியாய், மயக்கம் தெளிவிக்கும் மருத்துவ மனையாய், நாலுகால் நீட்டிக் கண்ணயர்ந்து எழுந்தால் உயிருக்கே ஒரு கம்பீரம் வந்துவிடும் அளவுக்குப் பயன்பட்டே வந்தது.

அப்போது எம்.எல்.ஏ ஆகி வீட்டுவசதித்துறை மந்திரியாகவும் வந்துவிட்ட ரகுராமன் மேட்டுக்காடு முழுவதையும் வாங்க நினைத்தார். அது தஞ்சைபுதுகை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே இருந்தது. மந்திரியின் கூடுதல் கவனத்தைப் பெற்றது. அனைத்துக் குடிமக்களையும் அழைத்து அன்பைப் பொழிந்து, அதிகாரம் உச்சம் தொட்டுப் பிரியாணி, பாட்டில்களுடன் பட்டா மாறியது மந்திரிக்கு.

பத்திரம் செய்தகையோடு மந்திரி ஒரு உத்தரவு போட்டார். "இனிமேல் நீங்கல்லாம் கிழக்கே இருக்கிற ஒங்க வீடுகளுக்குப் புதுசா ரோடு போட்டுத் தந்துடுறேன். மேற்குப் பக்கமா குறிப்பா மேட்டுக்காடு வழியா இனி ஒங்க போக்கு வரத்துக்கூட இருக்கக் கூடாது'' என்று.

"எங்க நெகமும் சதையுமா, எலும்பும் ரத்தமுமா, உசுரும் ஒடம்புமா ஒட்டிக்கெடந்த மண்ணுங்க'' எனும் முனு முனுப்பு.

மூன்றே மாதங்களில் மொத்த மரங்களும் வெட்டப்பட்டுச் சின்னச் சின்ன உரக்கிணறுகளும் மூடப்பட்டு வீட்டுமனைகளாக்கி சாத்தப்பா நகர் எனும் பெயர்மாற்றம் பெற்றுவிட்டது. மூன்றாண்டுகளில் ஏறத்தாழ நூற்றைம்பது வீடுகளுக்கும் மேலாகி விட்டன. எல்லா வீடுகளும் பெரும்பாலும் இரண்டு மாடி வீடுகள், எல்லோருக்கும் கார்கள் இருந்தன. புதுக்கோட்டையில் இப்போது சாத்தப்பா நகர்தான் அதிகமான விலைபோகிறது. காரணம் எந்நேரமும் பேருந்து வசதி, தேசிய நெடுஞ்சாலையை விட்டு இறங்கினாலே நகர், இதற்கெல்லாம் மேலாகத் தூய்மையான, சுவையான நிலத்தடிநீர்.

மந்திரியின் உத்தரவின்படி அவ்வளவாக அந்தக் கிழக்குப் பகுதி மக்களின் நடமாட்டும் சாத்தப்பா நகருக்குள் இல்லைதான். அவர்களில் சிலர் கொத்தனார் வேலையும், சித்தாள் வேலையும் பார்ப்பவர்களாக இருந்தும் சாத்தாப்பாநகருக்குள் வேலைக்குக்கூட வருவதில்லை. நகரின்; வளர்ச்சியையும், தங்கள் வாழ்க்கையையும் மனசுக்குள் நினைக்கும் போதெல்லாம் வேதனைக்குமிழ்கள் வந்துபோகும்.

அவர்களுக்குக் கட்டளையிட்ட மந்திரியால் அவர்களுடன் வாழ்ந்த நாய்களுக்குக் கட்டளைபோடவோ, கட்டுப்படுத்தவோ முடியவில்லை. இத்தனை மாற்றங்களுக்குப் பிறகும் தெருநாய்கள் சாத்தப்பா நகருக்குள்தான் உலவித்திரிந்தன. ஆனால் முன்னைப் போலில்லை தெரு நாய்களுக்கு: சில ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் கடுமையான எதிர்ப்புகளும் மாறி, மாறி மிரட்டிக் கொண்டே இருந்தன.

சாத்தபா நகர் வாசிகள் வளர்க்கும் பொம்ரேனியன், டால்மேநுன், புல்டாக், டாபர்மேன், அல்மிநுசன், ஜெர்மன் ணநுப்பேர்ட் அப்புறம் ராஜபாளைய நாய்களென விதவிதமாக வண்ண, வடிவத் தோற்ற வேறுபாடுகளுடன் நாய்யெனும் பொதுப்பெயரும் கொண்டு உலா வந்தன. இருந்தும் அவைகளுக்கும் இனப்பெயரைத் தாண்டி தனிப் பெயரும் வளர்ப்பவர்களால் வைக்கப்பட்டிருந்தது. ஜூலி, ரூத், பப்பி, ரீத்து, ட்ராம் எனத் தெருநாய்களுக்கிருந்த மணி, ராஜா, ரவி, கருப்பா, ஜிம்மி எனும் பெயர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது.

பொம்ரேனியன் குள்ளமா, முடி அடர்ந்து, அழகா, வால்ல முடிநிறைந்து, மூக்கு நீண்டு, முடியில்லாத கால்கள், அழகுக் கண்கள், குழியாக இருந்தபோதும் கவர்ச்சிக் குறையாத வசீகரத் தோற்றத்தில் வந்து தெருநாய்களைக் மோகபோதையேற்றிக் கிறங்கடித்து வந்தது.

அல்Nநுசன் பிரௌன், கறுப்பு வண்ணங்களில், வால்முடி அதிகமா, மூக்கு நீண்டு, முயலுக்கு மாதிரி காது நேராநிக்கிற அழகு, மிதமான உயரம் ஒருமாதிரி மன்மத அம்பையும், அச்ச உணர்வையும் ஒரே நேரத்தில் உற்பத்தி செய்தது தெருநாய்களின் மனசுக்குள்.

காஷ்மீர், மலையாளப் பெண்களைப் பார்க்கும்போது அழகாராதனையில் கட்டவிழும் மனம்போல ஜெர்மன் ணநுப்பேடு சாம்பல், பிரொளன், கறுப்புயெனப் பல வண்ணங்களில், முடிஅடர்ந்து தேவலோக ரம்பை, ஊர்வசி ஓர் உரு கொண்டது போல அச்சமற்றக் கவர்ச்சியை அள்ளிவீசி சாதுவாக வீதி வலம் வரும்போது, மோகத்தைக் கொன்றுவீடு, அல்லால் நின்றன் மூச்சை நிறுத்திவிடு என வயதான மணிநாய் முதல் வாலிபத் திமிர்கொண்டு அலையும் கருப்பன் நாய் வரை மொத்தத் தெருநாய்க்கும் மோக நோய் பீடிப்பதைத் தவிர்க்க இயலவில்லை.

டால்மேநுன், புல்டாக், டாபர்மேன் ஆகிய வகையான நாய்கள், மிக உயரமாய் ரோமம் அடர்ந்து, வளர்ந்த கன்னுக்குட்டி அளவுக்குச் சதை பருத்துக் கூலிப் படைகளைப்போல் அணிவகுத்து வருவது பார்க்கும்போதே உயிர் பயங்கொள்ளச் செய்வதும், தெரு நாய்களுக்கு ஆசை அடிவேரில் அமிலம் ஊற்றுவதுபோல் பெருங்கொடுமையாகவும் இருந்தது. அதே வேளை வந்தேறு குடிகளான முதலாளி நாய்கள் தெரு நாய்களை ஓர் அர்ப்ப உயிரைப் போலப் பார்ப்பதும், ஏளனம் செய்வதும் நெடுங்கோபத்தைத் தெருநாய்கள் மனதுக்குள் உண்டாக்கியே வந்தன.

ஆனால் தெருநாய்களுக்கு அதிசயக் காட்சியாய் இருந்தது. வெளிநாட்டு நாய்களையெல்லாம் அழைத்துவரும் அதன் முதலாளிகள் சங்கிலியால் பிணைத்து இருந்தார்கள். நாய்கள் முன்னே முறுக்கேறிச் சென்றன. முதலாளிகள் பின்னே தறதறவென இழுபட்டு வந்தார்கள்.

இந்தக் காட்சி தெருநாய்களுக்குப் பல கேள்விகளைத் தோற்றுவித்தன, நம்மை வளர்த்தாக நாம் கருதிக்கொண்டிருக்கும் சேரிச்சொந்தங்கள் நமக்குச் சரியாக ஒருவேளை உணவுகூட தந்ததில்லை. ஏதாவது அவர்கள் வீட்டில் நல்லது கெட்டது நடந்தா அன்னக்கி வயிறு நெறையுங்கிறதத் தவிர பசியாற வாழ்ந்த சரித்திரம் இல்ல. அப்படி ஒரு தரித்திரம். ஆனாலும் அவுகளுக்குப் பாதுகாப்பா, அவுங்க பின்னாடிதான் போயிருக்கோம். ஒரு நாளும் அவுங்க நம்மள கட்டினது கெடையாது. நாமலும் அவுகள விட்டுட்டுப் போனதுங்கெடையாது. எத்தனையோ முறை அடிவாங்கி இருக்கிறோம். அப்பகூட பிரிஞ்சு வந்தது கெடையாது. ஆனா இந்தப் பணங்காரங்க, வெளிநாட்டு நாய்களுக்கு விதவிமான உணவு, மாமிசவகை, உயர்ரக சோப்புக்குளியல் மருத்துவ வசதி. கார்பயணங்கள், இம்புட்டும் கண்ணாலயும், மூக்காலயும் கண்டுகிட்டுதானே இருக்கோம். இருந்தும், அந்தச் சங்கிலிப் பிணைப்பும், நாய்கள் முன்னேயும், முதலாளிகள் பின்னேயும் வருகிற அந்தக் காட்சி, சங்கிலிய விட்டாலே தங்கள் முதலாளிகளை விட்டு ஒட்டாமலே ஓடிப்போயிருங்கிறததானே காட்டுது?..

ஓகோ அவர்கள் முதலாளி, நம்ம ஆளுக நமக்குச் சொந்தக்காரங்க அதுதாங் காரணமா இருக்குமோன்னுத் தோணுது.. இப்படித் தொடர்ந்த ஒரு நாள்லதான் அந்த ஆதிக்க அரங்கேற்றம் நடந்தது.

ஜிம்மி நாயின் அம்மா ராக்கியை வசப்படுத்தி விட்ட களிப்போடு கருப்பன் நெருங்கிய போது தெருநாய்களின் பெருங்கூட்டமே சூழ்ந்திருந்தது. பன்னெடுங்காலம் கோலோச்சிய மணியும், ராஜாவும் யோசித்தன. தங்களுக்கு வயதாகி விட்டதோ? என்று. அப்பொழுது யாரும் எதிர்பாராத விதமாய் சூழ்ந்திருந்த தெருநாய்க் கூட்டத்தைப் பிளந்து கொண்டு உறுமியவாறே நுழைந்தது புல்டாக் ரூத். கருப்பன் தன் அடிவயிற்றிலிருந்து ஆத்திரத்தை வரவழைத்துக் கொண்டு முழுப்பற்களும் தெரியும்படி துறுத்திக்கொண்டு குரைத்தபோதும் கொஞ்சமும் லச்சைசெய்யாமல் ஜிம்மியின் அம்மா ராக்கி அருகில் நின்றது புல்டாக் ரூத். தெரு நாய் முழுவதையும் முரட்டுப் பார்வையும் அதிகாரத் தோரணையுமாய் அலட்சியம் செய்தது. ராக்கிக்கு இப்போது திரண்டு வந்திருந்த ஆசை அச்சமாக மாறி அடிவயிற்றில் உயிர்பயங்கொண்டு ஓட எத்தனித்தது. புல்டாக் ரூத் தனது திமிர் வழியும் முரட்டு உடலுடன் முகத்துக்கு முன்னால் நின்றது. ராக்கிக்கு ஒன்று புரிந்தது, இனித் தப்ப முடியாதென்று.

தெரு நாய்கள் உறுமலும், குரைத்தலுமாகப் பெருஞ்சத்தம். ஆனால், எந்த நாயும் புல்டாக் ரூத்திடம் நெருங்க முடியவில்லை. அவைகளுக்குள் ஒரு கேள்வி. இந்தப் புல்டாக் ரூத் எப்படி அந்த முரட்டுச் செயினை, அவ்வளவு பெரிய கேட்டைத் தாண்டி வந்தது என்று? இந்நிகழ்வுகளுக்கு மத்தியிலேயே புல்டாக் ரூத் ராக்கியைத் தனக்கு இணக்கமாக்கிக் கொண்டது.

தெருநாய்கள் தங்களின் உயிர்பிரிவதை உணரும் அவமானத்தில் வெட்கித் தலைகவிழ்ந்தன. தங்களின் கூட்டத்துக்கு முன்னாலேயே தங்களுக்கு உரிமையான துணையை எவனோ ஒருவன் நினைக்கவே... ஒவ்வொரு நாயும் துக்கமும், துடிப்பும் சம அளவில் வெறியேற்றியது. இரவு எல்லோரும் கூடுவது எனத் தீர்மானித்து விலகின.

ஆனால் எந்த நாயும் எங்கேயும் போனதாகத் தெரியவில்லை. கண்முன்னாலேயே நடந்த அந்த அக்கிரமம் நெஞ்சைக் குடைந்துகொண்டே இருந்தது. சிறுபிள்ளைகள் இருக்கும் சில வீடுகளிலிருந்து த்தோ...த்தோ...த்தோ... எனப் பலமுறை அழைப்பு வந்தும் எந்த நாயும் செல்லவில்லை. எல்லா நாய்களும் இரவுக்காகவே காத்திருந்தன.

தெருவுக்கு வெளியில் உள்ள ஒண்டிக்கருப்புக் கோயில் விளக்கு மேடையில் கூடின. மணி தனது பின்னங்கால்களை மடக்கி, முன்கால்களை நீட்டி மேடையின் மையப்பகுதியில் உட்கார்ந்தது.

அதன் வலப்புறம் ராஜாவும், இடப்புறம் கருப்பனும் மணியைப் போலவே அமர்ந்தன. ஏனைய நாய்கள் அரைவட்ட வடிவினில் அமர்ந்தன. மணிக்கு ஒரு கண் பார்வை இல்லாததால் அரைவட்டத்துக்குத் தன் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தது. அனைத்து நாய்களுமே வந்திருந்தன. எத்தனையோ முறை இவைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதுண்டு, கடித்துக் கொண்டதுண்டு, பகைமுற்றிப் பார்ப்பதைக்கூட தவிர்த்துக் கொண்டதுண்டு. இருந்தும் இன்று எல்லாவற்றையும் மறந்து ஒற்றுமையாய் கூடியிருப்பதைப் பார்த்த மணிக்குக் கொஞ்சம் சந்தோஷம். ராக்கியும் வலிதாங்க முடியாம, ஒக்காரவும் முடியாம ஓரமா படுத்திருந்தது.

மணி தனது கரகரத்த குரலில் "என்னப்பா எல்லாரும் பேசாம இருந்தா எப்படி''

கருப்பன் "இங்க பாருங்க சும்மா யோசன கேட்குறதல்லாம் வேணாம். என்ன பண்ணுனமின்னு மட்டும் சொல்லுங்க. உசுரே போனாலும் மசுரு மாதிரிதான். செஞ்சு முடிக்கிறோம். அந்தக் கறையக் கழிவியாகணும்'' என்றது.

ராஜா "கருப்பா நீயே ஒரு ரோசனை சொல்லு'' என்றதும், தனக்கு இணங்கிக் காத்திருந்த ராக்கியை அபகரித்துச் சிதைத்த புல்டாக் ரூத்தைப் பழிவாங்க காத்திருந்த கருப்பன்; "எனக்கு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுங்கிறது தாங்க. அந்த ரூத்துப் பய வீட்டுலதான் பப்பி இருக்கா. அவளை நான் சிதைச்சு சின்னா பின்னபடுத்திடுறேன்'' என வாய் மூடுவதற்குள், மணி "ஏலே கருப்பா நீ ஏண்டா பப்பிய சிதைச்சு சின்னா பின்னப்படுத்துற, ஒண்ணு தெருஞ்சுக்கடா எப்பவும் அதிகார வர்க்கந்தான் நம்ம பொண்டுகமேல விருப்பமில்லாமலே விழுந்தெந்திருச்சுப் போறாங்க. ஆனா அந்த மேலிடத்துப் பொண்டுகளுக்கு எப்பவுமே நம்மமேல ஒரு கண்ணு உண்டு. நீ முதல்ல பப்பிக்கு ஒம்மேல அப்படி இப்படி இருக்காண்ணு நோட்டமிடு. இருந்தா விருப்பத்தோடவே முடிச்சுட்டு வந்துரு.அப்புறம் இன்னொரு காரியமும் நாம பண்ணனும்''

மொத்தக் கூட்டமும் "என்னனென்னு சொல்லுங்க முடிச்சுடுறோம்'' மென்றது.

மணி "எல்லாருங் கவனமா கேளுங்க. அந்த முதலாளிப் பயலுக அவங்ஞ நாய்கள காலையில அஞ்சர ஆறு மணிக்குள்ளதான் கூட்டிக்கிட்டு வற்றாங்க. அப்போ நாம எல்லோரும் ரெண்டாம் வீதி முக்கத்துல போய் நின்னுறனும். அங்கருந்துதான் மெயின் ரோட்டுக்குப் போறாங்ஞ. பெரும்பாலும் கூட்டமாதான் வருவாங்ஞ. நாம அப்போ நமக்குள்ள சண்ட போட்டுக்கிற மாதிரி பாவலா காட்டி அவங்க கிட்ட வந்த ஒடனே ஆளாளுக்கு அந்த ரூத் பயல்லருந்து அம்புட்டுப் பயகமேலயும் கடிச்சுக் கொதறிடணும். மொச(முயல்) வேட்டையில எப்படி கொரவளைய கவ்வித் தூக்குவோமோ அப்படி இருக்கணும் புடி. அவங்களும் நம்மல தாக்குவாங்க. என்ன நடந்தாலும் பயப்படக் கூடாது. என்ன சரியா''

எல்லாநாய்களும் "சரி, என்னிக்கி தாக்குறோங்கிறத சொல்லுங்க'' என்றன.

மணி "நாளைக்கி கருப்பனுக்கு டையங் குடுப்போம். அவன் பப்பிய முடிச்சாலும் சரி, இல்லையின்னாலுஞ்சரி, நாளைய மறுநாள் தாக்குறோ'' மென்றது.

அடுத்தநாள் சனிக்கிழமை. கருப்பன்; எட்டு மணிக்கெல்லாம் ரூத்தின் கர்ஜனை முழுங்கும் பப்பி வீட்டுக் சென்று விட்டது. ரூத் அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்தது. பப்பி அந்தவீட்டுப் பையனோடு விளையாடிக் கொண்டிருந்தது. கேட்டுக் கம்பிவழியாக நோட்டமிட்ட கருப்பன் ரோட்டில் நின்ற புங்கமர நிழலில் படுத்துக்கொண்டது. அவ்வப்போது சென்று ரூத் உள்ளே போய் விட்டதா என்பதை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தது.

மணி பன்னிரெண்டு இருக்கும். ரூத்தின் நடமாட்டம் காணோம். கருப்பன் நாய் கேட்டின் அருகில் வந்து கம்பிகள் வழியாகக் குழைவான முணகல் சத்தமிட்டுக் காதல் வழியும் கனிப்பார்வையால் தூது விட்டது.

இதற்காகவே காத்திருந்ததுபோலப் பப்பியும் அப்படி, இப்படி குழைந்து, மெல்லியதாக முணகி வாலை குழைத்துக் கம்பிகளின் வழியாக முகத்தைத் தினித்துச் சம்மதம் தெரிவித்தது. ஒரு நொடியும் தாமதிக்காமல் கருப்பனும் பப்பியின் முகத்தோடு முகம் வைத்து வெளியில் வருவதற்கு அச்சாரம் தந்தது.

அப்போது உள்ளே விளையாடிக் கொண்டிருந்த அந்தப் பையன் தனது பந்து கேட்டுக்வெளியில் விழ அதை எடுக்க கேட்டைத் திறந்தான்.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பப்பி நொடியில் வெளியில் வந்தது.

கருப்பன் கொஞ்சம் தொலைவில் ஒடி நின்று கொண்டது. பப்பியும் ஓடி அருகில் நின்றது. கருப்பன் கணக்கச்சிதமாய் முடித்துக் கொண்டு பப்பியின் உச்சி மோந்து வழியனுப்பித் திரும்பியது.

நேரே மணியின் முன்வந்து "தலைவரே என் வேலைய சிறப்பா முடிச்சுட்டேன்'' என்றது பெருமிதத்துடன்.

மணி "ரொம்ப மகிழ்ச்சி. ஆனா இந்தச் சேதி இந்நேரம் ரூத்துக்குத் தெரிஞ்சிருக்கும். நாளைக்கு ரூத்து இன்னும் மூர்க்கமாத் தாக்கலாம். தயாராகிக்கங்க'' என்றது.

சனி இரவு, ஞாயிறு காலைக்காகக்; காத்திருந்தன தெருநாய்கள். அதிகாலை ஐந்துமணியிருக்கும் இரண்டாம் வீதி முக்கத்தை முற்றுகையிட்டன. மணி தனது சகாக்களுக்கு உறுதியும் உத்வேகமும் தரும்படி "எல்லோரும் தயாராக இருங்க. அந்த முதலாளி பயக தத்தங்கள் நாய்களோடு ஒண்ணாம் வீதியில் கூடி பிறகுதான் இரண்டாம் வீதி வழியாக மெயின்ரோட்டுக்குப் போவாங்க'' எனப் பேசிக் கொண்டிருந்த போதே ரூத்தின் தலைமையில் அந்தப் பெரும் நாய்க்கூட்டம் முன்னே வர அதன் முதலாளிகள் தற தறவென இழுத்து வரப்பட்டனர்.

மணி "எல்லோரும் தயாராகுங்கள் அவர்கள் வர வர நமக்குள் சண்டை போடுவது போலப் பாவனை செய்து அருகில் வந்ததும் மூர்க்கமாய் தாக்குங்கள், கடித்துக் குதறிவிடுங்கள், அவர்களும் கடிக்கலாம் அதற்கு வாய்ப்புக் கொடுக்கமால் கடிச்சுச் சாச்சிருங்க'' அவ்வளவு தான் மூன்று நிமிட இடைவெளியில் யுத்தக் களம் இரத்த களமாய் மாறி இருந்தது.

கருப்பனும், ராக்கியும் ரூத்தையே குறிவைத்துக் குதற மற்ற நாய்கள் அந்தப் பெரும் பட்டாளத்தைச் சூறையாடியது. முதலாளியின் நாய்களுக்கு எதிர் தாக்குதல் இயலாததாகவே போனது. சில முதலாளி நாய்கள் கடிதாங்காமல் உயிர் அச்சத்தில் தெறித்து ஓடின. சில நாய்கள் அங்கேயே மயங்கி விழுந்தன. ரூத்தின் கழுத்திலும், முதுகிலும் பல இடங்களில் இரத்தம் வழிய சதை தொங்கின. தெரு நாய்கள் வெற்றி மகிழ்ச்சியில் சிறு சிறு காயங்களுடன் வெவேறு திசைகளில் ஓடி ஒண்டிக் கருப்புக் கோயில் மேடைக்கு அருகில் அங்கங்கே கால்களைத் தூக்கி சிறுநீர் கழித்தவாறே தங்கள் சேரிச் சொந்தங்களைப் பார்த்துச் சின்னதாய் புன்னகைத்தன.

Pin It