அமைச்சரவைக்குள் நடைபெறும் அதிகார அரசியலிலோ, நிரப்பப்படாமல் உள்ள துறைகளைப் பறிப்பதற்கு நடைபெறுகின்ற போட்டிகளிலோ – நான் ஒருபோதும் பங்கு கொண்டதில்லை. நான் தொண்டு செய்வதில், அதிலும் அமைச்சரவையின் தலைமையை ஏற்றுள்ள பிரதமர், எனக்கு ஏற்ற துறை எனக் கருதி அளித்த பதவியில் – பணி செய்வதிலேயே நம்பிக்கை கொண்டுள்ளேன். எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால், நான் மனிதனே இல்லை.

ambedkar_240_copyஇந்த அரசின் மீது எனக்கு அதிருப்தி ஏற்படுத்திய மற்றொரு செய்தியை, இப்பொழுது குறிப்பிடுகின்றேன். அது, பிற்படுத்தப்பட்ட மற்றும் தீண்டத்தகாத மக்களை இவ்வரசு நடத்தும் முறையாகும். அரசியல் சட்டத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை என்பதற்காக நான் பெரிதும் வருந்துகின்றேன். இப்பணியை, குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட குழு அளிக்கின்ற பரிந்துரைகளின் அடிப்படையில், அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக விடப்பட்டவையாகும். அரசியல் நிர்ணய சட்டம் நிறைவேற்றி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இதற்கெனக் குழு அமைப்பது குறித்து அரசு இதுவரை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

தீண்டத்தகாத மக்களின் பாதுகாப்பிற்கு, அரசியல் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள சில ஏற்பாடுகள், எனக்கு நிறைவளிப்பதாக இல்லை. இருப்பினும், அரசு அவற்றை செயல்படுத்துவதில் கண்டிப்பைக் காட்டும் என்கிற நம்பிக்கையிலும் – அவை பயன்படும் என்கிற எண்ணத்திலும் அவற்றை நான் ஏற்று கொண்டேன். ஆனால், தீண்டத்தகாத மக்களின் இன்றைய நிலை என்ன? நான் பார்த்தவரையில், முன்பிருந்த நிலையே நீடிக்கின்றது. பழமை வாய்ந்த அதே கொடுங்கோன்மை, பழமையான ஒடுக்குமுறை, பழமையான பாகுபாடுகள் முன்பும் இருந்தன; இப்பொழுதும் இருக்கின்றன.

டெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் தீண்டத்தகாத மக்கள் என்னிடம் வந்து – தங்கள் வழக்குகளைக் காவல் துறையினர் பதிவு செய்யவும், உதவி செய்யவும் மறுப்பதையும், சாதி இந்துக்களால் தங்களுக்கு நேரும் கொடுமைகளை, சோகக் கதைகளாகக் கூறுவதிலிருந்து – நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகளை என்னால் கூறமுடியும்.

இந்தியாவில் தீண்டத்தகாத மக்களின் நிலையினை போன்று, உலகில் வேறு எங்கேனும் ஓர் இனத்தின் நிலை இருக்குமா என்று எனக்கு வியப்பாக உள்ளது. இதைப் போன்றதொரு இனத்தை நான் கண்ட தில்லை. ஆனால், தீண்டத்தகாத மக்களுக்கு இதுவரை எவ்வகை உதவியும் ஏன் வழங்கப்படவில்லை?

நான் பிறந்த தீண்டத்தகாத மக்களின் உயர்விற்காக, இளமைக் காலம் முதலே நான் பாடுபட்டு வருகிறேன். இதன் பொருள், என்னுடைய வாழ்க்கையில் ஆசைகளே ஏற்படவில்லை என்பதல்ல. நான் என்னுடைய நலத்தை மட்டுமே எண்ணி இருந்தால், எந்த நிலையை அடைய விரும்பி இருந்தாலும், அதைச் சாதித்திருக்க முடியும். நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருந்தால், இந்த அரசின் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்க முடியும்.

ஆனால், நான் முன்பு கூறியதுபோல, தீண்டத்தகாத மக்களின் உயர்விற்காகவே என்னை நான் அர்ப்பணித்துக் கொண்டேன். "ஒரு குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக ஆர்வமுடன் செயல்பட விரும்பினால் – அந்தக் குறுகிய எண்ணத்துடன் இருப்பதே நலம்' எனக் கூறும் பழமொழியை இங்கு நான் பின்பற்றினேன். தீண்டத்தகாத மக்களின் நலன் முழுவதும் புறக்கணிக்கப்படுவதைக் காணும்போது, என் உள்ளம் எந்த அளவிற்கு வேதனைபடும் என்பதை நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

– 11.10.1951 அன்று அமைச்சர் பதவியிலிருந்து விலகியபோது வெளியிட்ட அறிக்கையிலிருந்து

Pin It