தமிழகத்தில் சில அறிவியல் புலிகள் இருக்கின்றார்கள். ஐன்சுதீனுக்கும் நியூட்டனுக்கும் அப்பன்மார்கள் இவர்கள். இவர்களின் அறிவியல் வேட்கையையும் முற்போக்கு எண்ணங்களையும் சொல்லி முடியாது. இவர்கள் தமிழை முன்னேற்றுவதற்கென்றே பிறவி எடுத்தவர்கள். இன்று தமிழ்ப் புலவர்கள் கையில் மாட்டிக் கொண்டு தேங்கிக் கிடக்கும் தமிழ் மொழியின் தேக்கத்தை உடைத்து அதற்குப் புதுக் குருதி பாய்ச்சிப் புத்துயிரூட்டப் புறப் பட்டிருப்பவர்கள். அறிவியல் துறையில் தமிழை வளர்க்க நடையிடும் இவர்களின் கால்களிடையே தமிழ்ப் புலவர்கள் தாம் முட்டுக்கட்டைகளாக இருக்கிறார்கள்: இல்லை என்றால் இவர்கள் இதற்குள் வானத்தை வில்லாய் வளைத்து, மணலைக் கயிறாய்த் திரித்து அந்த வானவில்லில் நாணேற்றி அம்பெய்து அறிவியல் கனிகளை நிரப்பி இருப்பார்கள். தமிழறிஞர்கள் இதற்கு வழியில்லாமல் செய்துவிட்டார்களே!

இந்தப் பிற்போக்குத் தமிழ்ப் புலவர்கள், முட்டுக் கட்டை மொழி வல்லுநர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? அறிவியல் அறிஞர்கள் தமிழுக்குப் புத்துயிர் ஊட்டி உய்தி கொடுக்க விரும்பி அறிவியல் கலைச்சொற்களை ஆங்கிலத்தி லிருந்தும் வேறு மொழிகளிலிருந்தும் அப்படியே பெயர்த்துக் கொண்டு வந்து தமிழில் அப்பி வைக்க விடாமல் இவர்களின் கைகளைப் பிடித்துக்கொள்கிறார்கள்! அதோடு மிக மிகப் பிற்போக்குத் தனமாக அமைந்திருக்கும் தமிழ் நெடுங் கணக்கை, வளர்ந்துவரும் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அறிவியல் தேவைகட்கு ஏற்ப அறிவியலறிஞர்கள் சீர்திருத்த அமைக்க முயலும் பொழுது இந்தத் தமிழ்ப் புலவர்கள், ஐயோ, சீர்திருத்தமா? கூடாது! கூடாது!குடிகெட்டுப் போய் விடும்! தமிழ் அழிந்துவிடும் என்று ஓலமிட்டு இவர்களின் அறிவியல் முயற்சி அத்தனைக்கும் குறுக்கே நிற்கிறார்கள்...!

வளர்ச்சியை, முன்னேற்றத்தை விரும்பாத இந்தப் பிற்போக்குத் தமிழ்ப் புலவர்களால்தான் இன்று தமிழ் தேங்கிப்போய் வெறுஞ் சாய்க்கடையாய் நாற்றமடித்துக் கொண்டு கிடக்கின்றது. அறிவியல் புதுநீர் பாய்ந்து அதனைப் புதுப்பிக்க வழியே இல்லை!

நம் அறிவியல் புலிகள் இப்படித்தான் தம்பட்ட மடித்துக் கொண்டு வருகிறார்கள். தங்கள் கையாலாகாத தன்மையைத் தமிழ்ப் புலவர்மேல் சுமத்தி விட்டுத் தாங்கள் தப்பிக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

முந்நூற்றாண்டுக்கால ஆங்கிலேயன் ஆட்சியில் ஆங்கிலமே அலுவலிலும் கல்வியிலும் முன்வைக்கப்பட்டுத் தமிழ் ஒதுக்கப்பட்டது. இதன் விளைவாகத் தமிழ்ப் புலவர் என்பவர்கள் தமிழ் இலக்கிய இலக்கண வட்டத்துக் குள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டனர். வேறுதுறை அறிவு அனைத்தும் ஆங்கிலத்தில் தரப்பட்டதால் ஆங்கிலம் கல்லாத தமிழ்ப் புலவர்கட்குப் பல்வேறு பொது அறிவுத் துறைகள் எட்ட முடியாதவை ஆயின. அது மட்டும் அன்று, ஆட்சியை அலுவலை நடத்தியவனும், கல்வியின் எல்லாத் துறைகளிலும் முன்னின்று பொறுப்பேற்றவனும், அறிவுல கின் முன்னோடி என்று பெயர் பெற்றவனும் எல்லாம் ஆங்கிலத்தின் வாயிலாக மேற்கல்வி பெற்றவனேயானான்.

எனவே, நாட்டை, ஆட்சியை, அலுவலை, கல்வியை, மக்களை முன்னின்று நடத்தும் பொறுப்பில் இருந்தவர்கள் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் அல்லர். இன்றைய நிலையிலும் கூட இப்பொறுப்பில் உள்ளவர்கள், ஆங்கிலவழி மேற்கல்வி பெற்றவர்களும்; தங்களைப் பெரும் பெரும் அறிவியல் புலிகள் என்று முகம்காட்டி உறுமிக் கொண்டிரப்பவர்களுமே ஆவார்!

பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கல்விக் கூடங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் எல்லாம் இவர்கள் கையிலேயே. அறிவியல் புத்தாக்க நிறுவனங்களும் தொழில் நுட்பக் கல்வியகங்களும் இவர்கள் பொறுப்பி லேயே, எல்லாவற்றையும் முன்னின்று வழி நடத்தும் பொறுப்பும் இவர்களுடையதே! இப்படியிருந்தும் தமிழில் இன்னும் அறிவியல் வளர்ச்சி இல்லை!

முதலில் இந்த அறிவியல் அறிஞர்கள் தமிழர்கள் தாமா என்ற ஐயம் நமக்கு ஏற்படுகின்றது. ஒருவன் உண்மை யான தமிழனாக இருந்தால் அவனுக்குத் தாய் மொழிப்பற்றுச் சொல்லிக் கொடுத்து வரத் தேவை இல்லை. இயல் பாகவே அது அவனிடம் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட உண்மைத் தமிழன் பொறுப்பு உடையவனாக இருந்தால் நாடு விடுதலை பெற்றவுடன் முதல் வேலையாகத் தமிழை ஆட்சி மொழியாக்கவும், கல்வி மொழியாக்கவும் என்ன என்ன செய்யவேண்டுமோ அவற்றைச் செய்திருப்பான். ஏனெனில், தமிழகத்தில் ஏற்பட வேண்டிய எல்லா மலர்ச்சி நிலைகட்கும் இவை இரண்டுமே அடிப்படை.

இதுவரை தமிழ் கல்வி மொழி ஆட்சி மொழி யாவதற்கு எந்தத் தமிழ்ப் புலவரும் முட்டுக்கட்டையாக இருந்ததில்லை. (மாறாக இம்முயற்சிகளில் அவர்களின் குரலே முன்னின்று முதல் நின்று ஒலித்திருக்கின்றது.) அப்படியிருந்தும் இந்த அறிவியல் அறிஞர்கள், தமிழகத்தின் கல்வியாளர்கள், கல்லூரி, பல்கலைக்கழக முதல்வர்கள், துணை வேந்தர்கள், தமிழ் முன்னேற்றமே உயிர் மூச்சாய் இருபத்து நான்கு மணி நேரமும் அறிவியல் வழியிலும் முற்போக்குப் பாதையிலுமே எண்ணம் செலுத்திக் கொண்டிருப்பவர்கள் என்ன கிழித்துவிட்டார்கள்?

தமிழை ஆட்சி மொழியாக்க இவர்கள் ஒட்டு மொத்தமாகக் குரல் கொடுத்தார்களா? அல்லது இவர்கள் நடத்தும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழைக் கல்விமொழியாக நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு துரும்பை அசைத்தார்களா?

வடநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளிலெல்லாம் அந்தந்த மாநில மொழிகள் முழுக்க முழுக்கப் பயிற்று மொழியாகி விட்டனவே. ஆட்சி அலுவல்கள் அவரவர்கள் தாய்மொழியில், நடத்தப்படுகின்றனவே. தமிழகத்தில் மட்டும் இது ஏன் நடைபெறவில்லை? இங்குள்ள அரசுதான் இதைச் செய்ய வேண்டும் என்றாலும் அதைச் செய்யும்படி இந்த அறிவாளர்கள் ஏன் குரல் எழுப்பவில்லை? இவர்கள் தாமே அரசை வழிநடத்திச் செல்ல வேண்டும்! இவர்கள் உண்மைத் தமிழராக, தமிழ், தமிழர் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்களாக இருந்தால் தாய்மொழிவழிக் கல்வி எவ்வளவு அடிப்படையானது என்பதை உணர்ந்திருந்தால் இவர்கள் குரல் தமிழுக்காக ஓங்கியிருக்க வேண்டுமே! தமிழகத்தில் இன்று பத்துக்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. அத்தனை பல்கலைக்கழகத் துணை வேந்தர்களும் தமிழைப் பாடமொழியாக்குதல் தேவை என்றும் தமிழ் வளர்ச்சிக்கு அதுதான் முதற்படி என்றும் வலியுறுத்தியிருந்தால், பல்கலைக்கழகப் பேராசிரியர் அனைவரும் பேரணி திரண்டு அரசைத் தூண்டியிருந்தால் இதற்குள் இது நடந்திருக்குமே! ஏன் அதை இவர்கள் செய்யவில்லை?

பச்சையான, வடிகட்டின, கையாலாகாத்தனம் என்பதைத் தவிர வேறென்ன?

தமிழன் முன்னேறாமலிருப்பதற்கு என்ன காரணம்? தமிழ் இலக்கியச் செழுமையும் இலக்கண வலிமையும் கொண்டிருந்தும் காலத்துக்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுக்கா மல் இருப்பது காரணமா? தனித்தமிழ்க் கொள்கை காரணமா? தமிழ் நெடுங்கணக்கு குறைகள் பல உடையதாய் இருப்பது காரணமா? அறிவியல் துறைகளில் தமிழ்க்கலைச் சொற்கள் தமிழ் மக்களுக்குப் புரியும் படி தமிழ்ச் சொற் களாய் இருக்க வேண்டும் என்று தமிழறிஞர் கூறுவது காரணமா? அல்லது தமிழ் இத்தனை ஆண்டுகளாகியும் தமிழ்மக்கட்கு அலுவல் மொழியாகவும், கல்வி மொழியாகவும் ஆக்கப்படா மல் ஒதுக்கப்பட்டிருப்பது காரணமா?

தமிழ் தமிழகத்தில் அலுவல் மொழியாகவும், கல்வி மொழியாகவும் இன்னும் ஆக்கப்படவில்லை என்பதுதான் காரணம். இந்த இரண்டையும் மேற்கொள்ளாமல் தலைகீழாக நின்றாலும் வேறு எந்த வகையிலும் தமிழை முன்னேற்றிவிட முடியாது; முடியாது; முடியாது.

தமிழகத்தில் இன்று செய்ய வேண்டிய முதல் சீர்திருத்தம் இதுதான். சொந்த மொழியில் கல்வி கற்றால் தான் சொந்த அறிவியல் எண்ணம் வளரும். சொந்த அறிவியல் புத்தகங்களை உருவாக்க முடியும். கல்வி வளர்ச் சிக்கு மட்டுமன்று, அறிவியல் வளர்ச்சிக்கே தாய்மொழி வழிக் கல்விதான் இன்றியமையாதது. அதுபோலவே தாய்மொழி ஆட்சிக்கு வந்தால்தான் தமிழன் தலைநிமிரும். மக்களுக்கு ஆட்சியிற் பங்கிருக்கும். சொந்த நாடென்று ஈடுபாடிருக்கும்.

தமிழகத்தின் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக வும் கல்லூரி முதல்வர்களாகவும் அறிவியல் தொழில்நுட்ப அறிஞர்களாகவும், கல்வியாளர்களாகவும் இருப்பவர்கள் உண்மையான தமிழராக இருந்தால், தங்கள் இன மொழி, முன்னேற்றத்தில் அறிவியல் வளர்ச்சியில் அவர்கட்கு உண்மையாகவே நாட்டம் இருந்தால் அவர்கள் முதலில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் அலுவல் மொழியையும் பயிற்று மொழியையும் மாற்றி அமைப்பதுதான்.

செய்யத்தக்க வேலைகள் இவை மட்டும் அல்ல. தமிழர்கள் பின்தங்கியிருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அரசியல் பொருளியல் குமுகவியல் காரணங்கள், தேவையான அடிப்படை நல்லியல்புகளும் தகுதிப்பாடு களும் தனி மாந்தரிடம் இல்லாமை, மொத்தத்தில் பார்த்தால் நாம் தமிழர் என்ற இன உணர்வு இல்லாமை இப்படிப் பல்வேறு காரணங்கள் உள்ளன. இவை எல்லாம் மாற்றப்பட வேண்டியவையே. இவை எல்லாவற்றிலும் தமிழனின் உணர்வும் வாழ்வும் சீர்திருத்தி அமைக்கப்படற்கு உரியவையே. இவ்வாறிருக்க, இவை பற்றிய எந்த ஓர்மையும் இல்லாமல் அல்லது இவை பற்றி எவ்வகையான ஆக்க வினைப்பாடுகளையும் மேற்கொள்ள விரும்பாமல், தமிழர் அறிவியலில் பின்தங்கியிருப்பதற்குத் தமிழ் மொழியின் எழுத்துக் குறைபாடுதான் காரணம் என்றொரு கற்பனையான வழக்காடலை முன்வைத்துத் தமிழ் எழுத்தைச் சீர்திருத்தியே ஆகவேண்டும் என்று முழுமூச்சாய் முனைந்து நிற்கும் இந்தப் படிப்பாளிகளை எண்ணினால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை!

ஏ! படிப்பாளியே, ஏ! தமிழ்நாட்டு அறிவியல் அறிஞனே, ஏ தமிழகக் கல்வியாளனே, உனக்குச் செய்வதற்கு வேறு வேலை இல்லையா? நீ படித்திருக்கும் அறிவியல் துறையில் தமிழ் வளர வேண்டியதிருக்கின்றதே. அந்தத் துறையில் நீ எத்தனையோ நூல்கள் எழுதலாமே! அந்தத் துறையில் நீ பெற்ற அறிவு முழுமையையும் தமிழர்க்கு அறிமுகப்படுத்தலாமே! அந்த உன் துறை உன் பொறுப்பிலுள்ள துறைதானே, அத்துறை அறிவை உன் மாணவர்க்குத் தமிழில் வழங்கும்படி அந்தத் துறையிலாவது தமிழைப் பாடமொழி ஆக்கி நடத்துவதற்கு நீ முன்வரலாமே!

ஏ! பொறியியல் அறிஞனே, உன் பொறியியல் துறையில் எத்தனை நூல்களை நீ தமிழாக்கியிருக்கின்றாய்? அல்லது சொந்தமாக எத்தனை நூல்களை எழுதியிருக்கின்றாய்? எத்தனை மாணவர்க்குப் பொறியியலைத் தமிழில் கற்றுக் கொடுத்திருக்கிறாய்?

ஏ! விலங்கியல் அறிஞனே, விலங்கியலைத் தமிழ் மாணவர் தமிழில் கற்பதற்கு நீ இதுவரை ஆற்றியிருக்கும் பங்களிப்பு என்ன?

ஏ! வேதியியல் பேராசிரியனே, நீ தமிழனாக இருந் தால், நீ உண்மையான கல்வியாளனாக இருந்தால் உன் வேதியியல் துறை அறிவு தமிழில் கொணரப்பட்டுத் தமிழ் மாணவர்க்குப் பயன்பட நீ எந்தவகையில் உதவியிருக்கின்றாய்?

ஏ! பொருளியல், மாந்தவியல், அளவையியல் அறிஞர்களே, உங்கள் உங்கள் துறையில் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் தலைக்குமேல் உள்ளனவே! அவற்றை ஏன் உங்களால் செய்ய முடியவில்லை? இவற்றை யெல்லாம் செய்யாமல் என்ன ஐயா மண்ணாங்கட்டிச் சீர்திருத்தம்? எழுத்துச் சீர்திருத்தம்?

தமிழைப் பொறுத்தவரை எழுத்துச் சீர்திருத்தம் ஒரு பெரிய செய்தியே அன்று, அது பயனளவான நடைமுறை நிலைக்குரிய ஒரு நடவடிக்கை; ஓர் அடியெடுத்து வைப்பு. செருப்பிலே எங்கே கோணல் இருக்கிறது என்பது நடந்து பார்க்கையில்தானே தெரியும், போட்டுப் பார்த்து எங்கே கடிக்கிறதோ அங்கே அதைச் சரிசெய்து கொள்ளலாம். ஆனால், இங்கோ நடக்கவே விரும்பாதவன் செருப்புச் சீர்திருத்தம் பற்றிப் பேசுகிறான்!

முதலில் தமிழ் நடைமுறைப்படுத்தப்படட்டும். இருக்கும் இந்த ஓட்டைத் தமிழில் முதலில் உனக்குத் தெரிந்ததை நீ எழுது. இந்த ஓட்டைத் தமிழில் அறிவியலை மாணவர்க்குப் பாடமாகக் கற்றுக் கொடு, இந்த ஓட்டைத் தமிழ் அரசு அலுவலகங்களில், மருத்துவக் கல்லூரிகளில், வழக்கு மன்றங்களில், ஆய்வுக் கூடங்களில், எங்கெங்கே ஏழைத் தமிழ்மகன் இருக்கின்றானோ அங்கங்கெல்லாம் கல்வியறிவு அவனுக்கு எட்டும்படி நடைமுறைக்கு வரட்டுமே. உன் தட்டச்சுப் பொறிகளும், கணிப்பொறி களும் இந்த ஓட்டைத் தமிழில் கொஞ்சநாள் ஓடித்தான் பார்க்கட்டுமே என்ன கெட்டுவிடும்? அப்படி நடைமுறை யில் ஓடும் பொழுது எங்கெங்கே என்ன திருத்தம் தேவை, எப்படியிருந்தால் அறிவியல் வளர்ச்சிக்கு இன்னும் எளி தாகும் என்பது தானே புலப்பட்டுவிடுமே! அந்தக் காலம் வரட்டுமே! அதற்குள் என்ன தலைபோகும் விரைவு? அப்படி என்ன தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு உடனடி இன்றியமையாமை?

ஒரு வண்டி ஓடவில்லை. அதன் எந்திரம் பழுதா இல்லையா என்பது தெரியவில்லை. ஓட்டிப் பார்த் தால்தானே தெரியும், பழுதா, பழுதில்லையா, பழுதானால் அதில் எங்கே பழுது, என்ன பழுது என்று!

எந்திரத்தை ஓட்டிப் பார்க்கக் கூட உன்னால் முடியவில்லை. எந்திரம் ஓடுவதற்குத் தொடர்பில்லாத ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு இதனால்தான் எந்திரம் ஓடவில்லை என்கிறாயே? எப்படித் தெரிந்தது உனக்கு?

இதைவிட மட்டமான எந்திரங்களைக் கொண்டு வண்டிகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவே?

எழுத்துச் சீர்திருத்தம் இல்லாததனால்தானா இன்று தமிழில் அறிவியல் வளரவில்லை? தமிழில் கணிப்பொறி வடிவமைக்க முடியவில்லை?

சப்பான்காரன், சீனாக்காரன் எப்படி முன்னேறினான்? இந்த நொடிப்பொழுது சப்பான் மொழி சீனமொழி எழுத் தமைப்புகளைப் பார்த்தால் அவை தமிழைவிடச் சிக்கல் நிறைந்தனவாக உள்ளனவே. இந்தச் சிக்கல்கள் சீனாக்காரரும், சப்பான்காரரும் அறிவியலில் முன்னேறுவதைத் தடுத்து நிறுத்தவில்லையே? அவர்களைப் பின்னின்று இழுக்க வில்லையே.

ஆங்கில மொழியிற் பல்லாயிரம் சொற்களில் ஒலிப்புக்கும் எழுத்துக் கூட்டலுக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு! எவ்வளவு பெரிய இடைவெளி! எ.டு. Knife, Know, Psychology, Right, Iron சொற்களின் ஒலிப்பிலாவது ஒரே தன்மை உண்டா?

எ-டு.   Put-But,          Cough-Rough

Bough-Dough,          Station-Bastion,

Chess-Chemistry,    Woman-Women,

Sew-Few,      Give-Gist

இப்படி ஆயிரக்கணக்கில் சொல்லிக்கொண்டு போகலாமே.

இப்படிப்பட்ட முரண்பாடுகளை எந்த வகையிலும் மாற்றாமல்தானே ஆங்கில மொழியில் கணிப்பொறி உருவாக்கப்பட்டிருக்கின்றது! ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டலை ஒலியியல் (Phonetic) முறைப்படி மாற்றியமைத் தால், கற்பதற்கும் சரி கணிப்பொறி இயக்கத்துக்கும் சரி அது பல மடங்கு எளிதாயிருக்குமே. எனினும், இந்தச் சீர்திருத்தம் ஒன்றுகூட இல்லாமல் ஆங்கிலம் உலக அறிவியல் மொழியாக விளங்குகின்றதே!

இவர்க்கெல்லாம் எது முதன்மையோ அதைத் தேடிப் போய்க் கொண்டிருக்கின்றார்கள். ஆங்கிலம் படித்த நம் கல்வியாளர்களால் நம் அறிவியல் அறிஞர்களால், நம் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களால் அது முடியவில்லை. விடுதலை பெற்று ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் ஆகியும் கல்வியின் மிகமிக அடிப்படையான தாய்மொழிவழிக் கல்வி என்பதைக் கூட நடைமுறைப்படுத்தும் நாட்டம் இவர்களுக்கு இல்லையே!

இந்தி, வங்காளி, மராத்தி, ஒரியா, கன்னடம் போன்ற மொழிகளிலெல்லாம் பல்கலைக்கழகக் கல்வி முழுவதும் மாணவர்க்குக் கற்பிக்கப் படவில்லையா? அங்கு மட்டும் அது முடிகின்றது, தமிழகத்தில் ஏன் முடியவில்லை?

அங்கெல்லாம் கல்வியாளர்கள் முழுக்க முழுக்க அதில் ஈடுபட்டனர், நம் கல்வியாளர்கள் இன்னும் ஆங்கிலத்துக்கு வால் பிடித்துக்கொண்டு கிடக்கின்றனர்.

பல்கலைக்கழகங்கள் இன்றும் ஆங்கிலக் கோட்டைகளாக விளங்குகின்றன. தமிழ்ப் பகைவர்கள் அங்கே வேரூன்றி இருந்து கொண்டு தாய்மொழிவழிக் கல்வியைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் ஆங்கில ஆண்டான் மார்களாக இருந்து வருகின்றனர். தமிழ் உள்ளே கல்வி மொழியாக நுழைந்து விடக்கூடாது என்று திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர். தமிழ் பாடமொழியாவதற்கு இத்தமிழ்ப் பகைவர்களே தடையாகவும் முதல் முட்டுக்கட்டையாகவும் நிற்கின்றனர்.

இந்தக் கல்வியாளர்கள், அறிவியல் அறிஞர்கள் எனப்படுபவர்களுள், தமிழே பாடமொழியாக வேண்டும் என்ற எண்ணம் வாய்க்கப் பெற்ற ஒருசிலரும் கூடத் தமிழை நடைமுறைப்படுத்தப் போதிய எழுச்சியும், போதிய துணிச்சலும் உடையவர்களாக இல்லை. தமிழகப் பல் கலைக்கழகங்களில் தமிழ்தான் பாடமொழியாக இருத்தல் வேண்டும் என்று எழுந்து முழங்க இவர்களுக்குத் திராணி இல்லை. தங்களால் முடிந்ததைத் தங்கள் பொறுப்புக்கு உட்பட்டதைக்கூடத் தமிழில் நடத்திட இவர்களுக்குத் துப்பில்லை. வடநாட்டுப் பல்கலைக்கழகங்களைப் பார்த்தும் கூட இவர்களுக்குச் சுரணை ஏற்படவில்லை.

இரண்டுங்கெட்டான்களாக இவர்கள் இருக்கின்றனர். தங்கள் பொறுப்பைத் தட்டிக் கையாலாகாத்தனத்தை மறைக்கவும் இவர்கள் செய்தியைத் திசை திருப்பி விடுகின்றனர். தமிழ் முன்னேற்றத்துக்குத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று போலியானதொரு கருத்தை முன்வைத்து மக்களைக் குழப்புகின்றார்கள். திருடியவன், அதோ போகிறான் திருடன், என்று வேறு திசையில் சுட்டிக்காட்டித் தான் தப்பித்துக் கொள்வது போலத் தாங்கள் செய்ய வேடியதைச் செய்யாமல் இவர்கள் தமிழறிஞர்களின் பிற்போக்குதனத்தால்தான் தமிழ் வளரவில்லை என்று பொய்கூறித் திரிகின்றனர்.

தமிழ் நடைமுறைக்கே வரவில்லை, அப்படி வராமல் இருப்பதற்கு எழுத்துக் குறைபாடு காரணமாகவும் இல்லை. அப்படியிருக்க இப்பொழுது ஏன் எழுத்துச் சீர்திருத்தம்?

சீர்திருத்தம் ஒன்றும் பெரிதன்று. தேவைப்படும் பொழுது செய்து கொள்ளலாம். முதலில் தமிழ் நடைமுறைப் படுத்தப்படட்டும்; தமிழே அலுவல் மொழியாகவும் கல்விமொழியாகவும் நூற்றுக்கு நூறு நிலை கொள்ளட்டும். இன்று தமிழர் அனைவரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து போராட வேண்டியது இதற்காகவே.... நம் அறிவியல் அறிஞர்கள் எழுத்துச் சீர்திருத்த முயற்சியைத் தள்ளி வைத்து விட்டு இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளட்டும். நாம் நூற்றுக்கு நூறு இவர்களுடன் ஒத்துழைப்போம்.

Pin It