இன்றைக்கு உலகத்தில் 137 நாடுகளில் மரண தண்டனையை நீக்கம் செய்து இருக்கின்றன. இந்தியாவிலும் மரண தண்டனையை நீக்க வேண்டும் என பல்வேறு மனித உரிமையாளர்கள் போராடி வருகின்றனர். அண்மையில் ராசீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை இந்திய குடியரசு தலைவர் நிராகரித்து தண்டனையை குறைக்க மறுத்துள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டில் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றால் அது சரிதான். ஆனால் குற்றத்தை யார் செய்தார்கள், கொலையுண்டவர் யார் என்பதை அடிப்படையாக வைத்து அரசும், நீதித் துறையும் செயல்படுமானால் அதைநாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

ராசீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களைவிடுதலை செய்ய வேண்டும் என தமிழக மக்கள் உரிமைக் கழகம் தொடர்ந்து போராடி வந்துள்ளது. மரண தண்டனை வேண்டாம் என்ற கருத்தை மட்டுமல்ல, ராசீவ் வழக்கில் இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நாம் நம் மக்களிடம் கொண்டு சென்றாக வேண்டும்.

21 மே 1991ல் ராசீவ் கொல்லப்பட்ட பின் தமிழகம் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவித்ததுதான் இவ்வழக்கில் 26 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை சித்ரவதை செய்தனர் சி.பி.ஐ. அதிகாரிகள். தொடர்ந்து 60 நாட்கள் காவல் துறையின் மூன்றாம் தர சித்ரவதைக்கு ஆளானார்கள். வெள்ளை தாள்களில் கையொப்பம் பெற்று பின் அதை நிரப்பிக் கொண்டார்கள். 1994ல் இவ்வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை கதவுகள் சாத்தப்பட்ட மூடிய நீதிமன்றத்தில் நடைபெற்றது. செய்தி யாளர்கள் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை. யாரையும் பிணையில் விடவில்லை. சாட்சிகள் யார் யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. விசாரணை நீதிபதி சித்திக் தங்களுக்கு சாதகமாக நடக்கவில்லை எனக் கருதிய அரசு அவரை தூக்கி விட்டு தாங்கள் சொல்வதைக் கேட்கும் நவநீதகிருஷ்ணன் என்ற நீதிபதியை நியமித்தனர். அவர் 1998ல் 26 பேருக்கும் மரண தண்டனை கொடுத்தார்.

தடா சட்டப்படி விசாரணை நீதிமன்றத்தில் இத்தீர்ப்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது. எனவே உச்சநீதிமன்றத்தில் 1999ல் மேல் முறையீடு செய்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் தீர்ப்பின்படி நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தடண்னை உறுதி செய்யப்பட்டது. ராபட் பயாஸ், செயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இவர்கள் மீது நிரூபிக்கப்பட்ட குற்றம் அவர்கள் கொலை செய்தார்கள் என்பது அல்ல. கொலைச் சதியில் ஈடுபட்டார்கள் அல்லது கொலைப் பற்றி தெரிந்திருந்ததுஎன்பதுதான். சம்பவம் நடந்த அன்று இவர்களில் நளினியை தவிர வேறு யாரும் திருப் பெரும்புதூரில் இல்லை.

1978க்குப் பின் அரிதினும் அரிதான வழக்கில் மட்டுமே மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறினாலும் அரிதிலும் அரிதான வழக்கு என்பதைஎப்படி ஆய்வு செய்ய முடியும்?

ராபட் பயாஸ், செயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் இவ்வழக்கிற்கும் தொடர்பில்லை எனக் கூறி நீதிபதி வாத்வா விடுதலை செய்கிறார். ஆனால் மற்ற நீதிபதிகள் அவரைக் குற்றவாளி என்கின்றனர். ஆக நீதிபதிகளை சார்ந்து தீர்ப்புகள் மாறுகின்றன.

இன்றைக்கு 20ஆண்டுகளுக்கும் மேலாக தனிமைக் கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ள மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களின் கருணை மனுவை குடியரசு தலைவர் 11 ஆண்டுகள் கழித்து நிராகரித்துள்ளார். இம்மூவர் சார்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுமரண தண்டனை இடைக்கால தடை நாம் பெற்று விட்டாலும் அது நிரந்தரமல்ல.

இதற்கு முன் பல்வேறு வழக்குகளில் உச்சநீதி மன்றம் கருணை மனுவை குடியரசு தலைவர் காலதாமதப்படுத்தி நிராகரித்தார் என்பதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் முதல்வரை 1965ல் கொலை செய்த வழக்கில் தயாசிங் என்பவரின் கருணை மணு 2 வருடம் காலதாமதப்படுத்தி நிராகரிக்கப்பட்டதால் தயாசிங்கின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதேபோல் ரோட்ரிக் என்பவர் வழக்கில் 6 வருட காலதாமதமும், மதுமேத்தா என்பவர் வழக்கில் 2 வருட காலதாமதமும் கணக்கில் கொள்ளப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப் பட்டது.

இங்கு குடியரசு தலைவர் கருணை மனுவை நிராககரித்துக் கொண்ட காலம் மட்டுமல்ல அந்த நீண்டகாலகட்டத்தில் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டவரின் மன உளைச்சல் / மனவேதனையைக் கணக்கில் கொண்டே ஆயுளாக மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மரண தண்டனை சிறைவாசிநாம் நாளைக்கு தூக்கிலிடப்படுவோமா என்ற மரணத்தை நினைத்து நினைத்து மரண வேதனையை அனுபவிக்கிறான் அல்லவா?

அதைத்தான் உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டு, அவன்அடைந்ததண்டனையே போதுமானது மீண்டும் அவன் உடலை தூக்கு மேடை ஏற்றுவது இரண்டாவது தண்டனையைப் போன்று என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது.

கொடுஞ்சட்டமான தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சித்ரவதையில் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து இந்தத் தண்டனை கொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் தடா சட்டமே செல்லாதுஎன தீர்ப்பளித்தபின்னும் தடா வில் வாங்கப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படை யாக வைத்து இவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் சாந்தன் அவர்கள் சிவராசனின்பணத்திற்கு பொறுப்பானவர் என்றும் முருகன் நளினியை திருப்பெரும்புதூருக்கு தனுவுடன் அனுப்பி வைத்தார் என்பதும் பேரறி வாளன் பேட்டரி செல் வாங்கிக் கொடுத்தார் என்பதும்தான் சிவராசனின் பணத்தைக் கையாண்டது திருச்சி சாந்தனா அல்லது இவரா என உச்ச நீதிமன்ற நீதிபதிகளே குழம்பியுள்ளனர்.

 முருகன் நளினியை திருப்பெரும்புதூருக்கு அனுப்பி வைத்தது நல்லெண்ண அடிப்படையில் (இந்திய தலைவர்களோடு நல்லுறவை ஏற்படுத்த முயல்வதாக முருகனிடம் சிவராசன் கூறியதின் அடிப்படையில்) பெல்ட் பாம்பை தயாரித்தவர் யார், எங்கு வைத்து தயாரிக்கப்பட்டது என்று இதுவரை நிரூபிக்கப்படாத நிலையில் குண்டை தயாரித்து அனுப்பியவர் பேட்டரியை மட்டும் பேரறிவாளன் வாங்கிக் கொடுக்க வேண்டும் ஏன் அனுப்பினார்?

எது எப்படியோ, குற்றமற்றவர்கள் கொடுஞ் சட்டத்தால் அரசின்அதிகார பலத்தால் தண்டிக்கப் பட்டார்கள். 13 ஆண்டுகளாக மரணக் கொட்டடியில் வாழ்கிறார்கள் (சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால்) தயாசிங்கும், ரோட்டரிக், மது மேத்தா, ஹர்பசன்சிங் ஆகியோருக்கு வழங்கிய நீதியை இந்த 3 தமிழர்களுக்கு வழங்குங்கள் என்றுதான் நாம் நீதிமன்றத்தை கேட்கிறோம்.

தமிழக அரசு அரசியல் அமைப்புச் சட்டம் 161ஐபயன்படுத்திஅமைச்சரவையை கூட்டி 3 தமிழர்களின் மரண தண்டனையை ரத்து செய்து ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் அனைத்தும் சமமான தன்மை கொண்டவை அல்ல.

குறிப்பாக அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை (பிரிவு12 முதல் 35 வரை) கண்டிப்பாக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் அரசின் அடிப்படைக் கோட்பாடுகள் (பிரிவு 36 முதல் 51) அரசு நடைமுறைப்படுத்துவது கட்டாயமல்ல. அது போலத்தான் ஆளுநரின் அதிகாரமான பிரிவு 161 இறையாண்மை கொண்ட அதிகாரம். இதைபிரிவு 72 (குடியரசுத்தலைவரின் அதிகாரம்) கூட கட்டுப்படுத்த முடியாது. ஆளுநரின் அதிகாரம் என்பது தமிழக அமைச்சரவையின் அதிகாரமே.

எனவே தமிழக அரசு நிர்வாகப்பிரிவுகளைக் காரணம் காட்டாமல் உடனடியாக 3 தமிழர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.

Pin It