நாம் அந்தப் பிஞ்சுகளின் மரணத்திற்கு உண்மையிலேயே வருந்தகிறோம் என்றால் அந்த ஒத்துழைப்பு தான் நீதியை விரைந்து நிலைநாட்ட துணை நிற்கும்.

அதற்காக "என்கவுண்டர்' கொலைகளுக்கு நாம் பட்டாசு வெடிப்பதும்... இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுவதும்... போலீசாருக்கு பணத்தைக் குறிப்பிடாமல் காசோலையை கொடுப்பதற்குச் சமம். நாளை அது நம் மீதும் திரும்பாது என்பதற்கு எந்தவித உத்திரவாமும் கிடையாது.

பிஞ்சுகளைக் கொன்ற பாதகர்கள் மிக மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அந்த தண்டனையை விரைவான விசாரணையின் மூலம் வாங்கித் தர ஒத்துழைப்பதே நம் அனைவரது கடமை, அதற்காக குற்றம் சாட்டப்பட்ட மோகன்ராஜின் "மோதல் சாவு'க்குப் பட்டாசு வெடிப்பதல்ல நம் வேலை.

அந்தச் சாவை நாம் கொண்டாடுகிறோம் என்றால் நாமும் ஒரு வகையில் மோகன்ராஜாக்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

மோகன்ராஜ்கள் இப்படி காமவெறியும் கொலை வெறியும் கொண்டு அலைந்ததற்கு நமது மீடியாக் களும், ஒரு மிக முக்கியக்காரணம். நாளிதழ்கள்... வார இதழ்கள்... தொலைக்காட்சி சேனல்கள்... என அனைத்திலும் தவறாது இடம்பெறும் ஆபாசங்களும், வக்கிரங்களும் எளிய மனிதர்களைக் கூட கிரிமினல் களாக மாற்றுவதில் போய் முடிகின்றன. சம்பவங்கள் நடந்த பிற்பாடு அதற்கு பலியானவர்களைப் பிரதான குற்றவாளிகளாக முன் நிறுத்தி விட்டு பின் ஒளிந்து கொள்கின்றன இந்த மீடியாக்கள்.

இந்த நேரத்தில் எனக்கு மரியாதைக்குரிய இயக்குநர் மகேந்திரன் அவர்களது "உதிரிப் பூக்கள்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிதான் நினைவுக்கு வருகிறது. மற்ற மனிதர்களுக்கு துன்பத்தைத் தருவதை மட்டுமே "லட்சியமாக' வைத்திருந்த விஜயனை ஊர் மக்களே ஒன்று சேர்ந்து விரட்டிப் போய் ஆற்றில் குதித்துச் சாகச் சொல்வார்கள். அப்போது விஜயன் பேசும் அந்த இறுதி வசனம்தான் என் மனதுக்குள் இப்போது ஓடுகிறது.

அது:   “நீங்க எல்லோரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க. ஆனா இன்னிக்கு உங்க எல்லாரையும் நான் என்னைப் போல் மாத்திட்டேன். நான் செஞ்ச தவறு களிலேயே பெரிய தவறு அதுதான்.''

ஆம்...

நாம் ஒருபோதும் மோகன்ராஜ்களாக ஆக வேண்டாம்.

அநீதிகளைக் கண்டு கொதித்தெழும் நல்ல மனிதர்களாக ஆவோம்.

அதுதான் கற்கால மனோபாவங்களில் இருந்து நம்மை விடுவித்து நாகரிக உலகை நோக்கி நடைபோட வைக்கும்.

இதையே தத்துவமேதை ஜெ. கிருஷ்ணமூர்த்தியின் வார்த்தைகளில் சொல்வதானால்...

“நான் மிருகத்தனமாய் இருந்து

என்னை முறியடிக்க நீங்களும்

மிருகத்தனமான முறையையே உபயோகித்தால்

நீங்களும் என்னைப் போலவே

மிருகமாகி விடுகிறீர்கள்..''