nayarana samyவரகூர் மா. நாராயணசாமி புகழ் ஓங்குக!

வரகூர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர். அவ்வூரில் மாரிமுத்து செல்லம்மாள் இணையருக்கு 30.11.1929-இல் ஆறாவது குழந்தையாகப் பிறந்தவர்தான் வரகூர் மா. நாராயணசாமி. 5ஆம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வி மட்டுமே பயின்ற அவர் மிகச்சிறந்த சிந்தனையாளர்.

தன் மாமா இலந்தங்குழி க. தங்க வேலுவின் வழியில் பழுத்த சைவப்பழமாக விளங்கிய அவர், 11.01.1948-இல் அரியலூர், பெருமாள் கோயில் தெரு வில் பி.ஆர்.சின்னசாமி தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்திற்கு ஆ.செ.தங்கவேலுவோடு சென்றிருந்தபோதுதான் பெரியார் ஈ.வெ.ரா-வை நேரில் கண்டார்.

அப்போதுதான் அவருடைய பேச்சையும் முதன் முதலாகக் கேட்டார். அய்யாவின் ஆணித்தரமான ஆதாரங் களுடனான மூன்று மணிநேரப் பேச்சைக்கேட்ட அந் நாள் முதல் 23.11.2020-இல் மறையும் வரை எள்முனையளவும் நடுக்கமில்லாத தூய சுயமரியாதைக் காரராகவே வாழ்ந்தார்.

1948 சனவரியில் திராவிடர் கழகத்தில் ஈடுபட்ட அவர் தோழர் வே.ஆனைமுத்துவைச் சந்தித்தது, 02.04.1950-இல், குன்னத்தில் நடைபெற்ற பெரம்பலூர் வட்ட தி.க மாநாட்டில் தான். பெரியார் ஈ.வெ.ரா முன்னிலையில் முதன்முதலாக வே.ஆனைமுத்து உரையாற்றிய நிகழ்ச்சியும் அதுதான்.

ஆ.செ. தங்கவேலு, வரகூர் மா. நாராயணசாமி, அகரம் மு. அழகப்பன், அந்தூர் கி.இராமசாமி இப்படி எண்ணற்றோர் இணைந்து ஆசிரியர் ந. கணபதி ஏற்பாட்டில் புலால் விருந் தோடு சிறப்பாக நடாத்திய இம் மாநாட்டுக்குப் பிறகு பெரியார் அவர்கள் ஆசிரியர் கணபதி அவர்களை ‘வாங்க குன்னம்’ என்றே அழைப்பார்.

தோழர் வே.ஆனைமுத்து வின் பேச்சைக்கேட்ட மா.நாராயணசாமி அவர்கள் அன்று முதல் அவருடைய அணுக்கத் தோழரானார். 1962-க்குள் பெரம்பலூர் மாவட்டத்தைத் திராவிடர் கழகக் கோட்டை யாக மாற்றியதில் இம் மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்த அனைவருக்கும் மகத்தான பங்கு உண்டு.

1960-65; 1970-75; 1985-90 என மூன்று முறை வரகூரின் ஊராட்சித்தலைவராய் ஆகச்சிறந்த பணிகளையாற்றியவர்.

பெரியாரின் மறைவுக்குப் பிறகு, தோழர் வே.ஆனைமுத்து தலைமையில் தொடங்கப்பட்ட பெரியார் சம உரிமைக் கழகத்தில் (மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி) இணைத்துக்கொண்ட மா. நாராயணசாமி அவர்கள், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து அரியலூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட 2007ஆம் ஆண்டு முதல் இறுதி வரை மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக இருந்து அளப் பரிய பணிகளைச் செய்தவர்.

ஆண்டுதோறும் நடைபெறும் பாவேந்தர் பாரதிதாசன், மாமேதை அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாள் விழா கூட்டங்களைத் தவறாது 2017 வரை நடத்திவந்தவர்.

மா.பெ.பொ.க சார்பிலும், பெரியார் ஈ.வெ.ரா நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பிலும் நடைபெற்ற பயிலரங்குகளில் பள்ளி மாணவரைப்போல் பங்கேற்றுத் தம் கொள்கைக்கு உரம்சேர்த்தவர்.

பெரியார் ஈ.வெ.ரா நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கத்திற்கும், சிந்தனையாளன் பொங்கல் மலருக்கும் மா.பெ.பொ.க தோழர்களிலேயே அதிகபட்சமான நிதியைத் திரட்டி யளித்த செயல்மறவர். 2019 பொங்கல் மலருக்கும் 90 அகவை கடந்து நோயுற்றுத் தளர்ச்சியடைந்திருந்த நிலையிலும் ஒரு இலக்கம் ரூபாய்க்குமேல் நிதி திரட்டியளித்த பெருந்தகையாளர்.

தம் வாழ்நாளெல்லாம் பெரியாரின் கொள்கைப் பரப்புரைகளுக்காகவும், மக்கள் நலனுக்காகவும், தோழர் ஆனைமுத்துவின் கட்டளைகளுக்காகவும் பயணித்துக் கொண்டேயிருந்த, பெரம்பலூர் மாவட்ட, பெரியாரின் கொள்கைக் குன்றம் வரகூர் மா.நாராயணசாமி 23.11.2020-இல் தம் பயணத்தை நிறுத்திக் கொண்டார்.

பெரியாரின் கொள்கைப் பயணத்தில் தோன்றாத் துணையான தோழரை இழந்துவாடும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுமைக் கட்சியின் தோழர்களும், பெரியாரிய அன்பர் களும் அவர்வழி நின்று மார்க்சு - பெரியார் - அம்பேத்கர் கொள்கைகளை வென்றெடுக்கப் பாடுபடுவதே அவருக்கு நாம் செய்யும் வீர வணக்கம் ஆகும்.

பெரம்பலூர் மாவட்ட, பெரியாரின் கொள்கைக் குன்றம் வரகூர் மா.நாராயணசாமி புகழ் ஓங்குக!

- முனைவர் முத்தமிழ்

Pin It