ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள நாடுகளின் மக்களிடையே நிலவும் அரசியல், பண்பாடு, வாழ்வியல், வரலாற்றுக் கூறுகளில் உள்ள வேறுபாடுகளை விட, இந்தியாவுக்குள் அடக்கப்பட்டுள்ள மொழித் தேசிய இனங்களிடையே நிலவும் அரசியல், பண்பாட்டு, வாழ்வியல், வரலாற்றுக் கூறுகளில் உள்ள வேறுபாடுகள் மிகுதி.

காசுமீரிகளுக்கும் நாகாலாந்து மக்களுக்கும், மிசோவினருக்கும் பஞ்சாபிகளுக்கும், வங்காளிகளுக்கும் கருநாடக மக்களுக்கும், பீகாரிகளுக்கும் மலையாளி களுக்கும், இராசசுத்தானியர்களுக்கும் தமிழர்களுக்கும் மிகப் பெரும் அளவில் வேறுபட்ட வாழ்க்கை முறைகள், வரலாற்று வழி நிலைகள், பண்பாடுகள், உணவுப் பழக்கவழக் கங்களே உள்ளன.

pzhulayan 350இவர்கள் அனைவரையும் தன் ஆட்சி அதிகாரத்தால் அடக்கி அன்றைக்குப்  பிரிட்டிசு இந்தியாவை உரு வாக்கியது இங்கிலாந்து வல்லரசு.

பிரிட்டிசு வல்லாட்சியை  எதிர்த்து அன்றைய அளவிலான மொழித் தேசிய எழுச்சிகள் பெருமளவில் நடந்தன. அவற்றையெல்லாம் இந்தியா என்கிற அளவில் ஒருங்கிணைக்க இந்தியக் காங்கிரசுக்  கட்சியைப் பிரிட்டிசு சார்புடையவர்களே  உருவாக்கினர். அதைப் பயன் படுத்திக் கொண்டு இந்தியா என்பது ஒரே சமூக வாழ்வியல் கொண்டது போலவும்,  வரலாறு கொண்டது போலவும், சமய நடைமுறைகளைக் கொண்டது போலவும் ஒரு புனைவு உருவாக்கத்தை ஆரியப் பார்ப்பனியக் கருத்தாளர்கள் உருவாக்கினர்.

இந்து மதம் என்கிற பெயரில் வைதிகப் பார்ப்பனியத்தைக் கொள்கைகளாகவும், புராண சாத்திரங்களைக் கோட்பாடுகளாகவும், வருணாச்சிரம ஆளுமைகளை நடைமுறைகளாகவும் உருவாக்கிக்கொண்டே இந்து மதத்தைப் பரப்பினர். இந்து மதத்தில் அதற்கு முற்றிலும் நேர்மாறான கருத்துகளுடைய, நடைமுறைகளை யுடைய சிறுசிறு சமயங்களை எல்லாம் இணைத்துத் தன்வயப்படுத்திக் கொண்டனர்.

இந்தியம் என்பது இந்துப்பார்ப்பனிய வெறியுடைய அரசியல், பொருளியல் அதிகாரத்தைக் கொண்டதாகவும், பார்ப்பனியம் என்பது இந்திய வெறிக்கு அடங்கிய குமுக, கலை, பண்பாட்டு அதிகாரங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.

இந்தியம், பார்ப்பனியம் ஆகிய இரண்டும் ஒருங்கி ணைந்தே அவற்றின் அதிகாரங்களால் அடக்கப்பட்டுள்ள பல்வேறு மொழித் தேசிய இனங்களின் அடையாளங்களை, உரிமைகளை யெல்லாம் நசுக்கி அடிமைப்படுத்தி வைத்துள்ளன.

அதற்காக, இந்துப் பார்ப்பனிய இயக்கங்கள் தங்களை வலுப்படுத்திக் கொள்ள மேற்கொண்ட முயற்சிகளைச் சற்றுக் கவனத்தோடு ஆய்வு செய்வது தேவை யுடையது.

இந்துப் பார்ப்பனிய இயக்கங்கள் என்று குறிப்பிடப்படுகிறபோது, ஆர்எஸ்எஸ் இயக்கம் தோற்று விக்கப்பட்ட 1925ஆம் ஆண்டிலிருந்து மட்டுமல்லாமல், அதற்கு முன்பிருந்தே அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கவனிக்க வேண்டும்.

அவற்றையெல்லாம் ஏன் கவனிக்கவும், ஆய்வு செய்யவும் வேண்டும் என்பதை அரசியலாக முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வல்லரசியங்களையும், இந்தியப் பார்ப்பனியத் தையும் வீழ்த்துவது என்பது அவற்றின் அரசியல், பொருளியல் அதிகாரச் சூறையாடல்கள், சுரண்டல்களை யெல்லாம் தடுப்பதும், நிறுத்துவதும் என்பதோடு மட்டுமல்லாமல் போராடும் உழைக்கும் மக்களின் அதிகாரங்களை நிறுவுவதுமாகும்.

அது ஓர் எளிய வேலை இல்லை.

மிகப்பெரும் கடின முயற்சி.

வெகுமக்களை அவரவர் வகுப்பு அணிகளாக விரிந்த அளவில் திரட்டிப் போராடுகிற பெரும் முயற்சி.

வெறுமனே மக்களோடு மட்டுமன்றி மக்கள் திரளைப் பாதுகாக்கும் அரணாகப் படைதிரட்டிக் காக்கிற,  போராடு கிற முயற்சி...

அப்படியான நீண்ட காலத் திட்ட முயற்சிக்கு அரசியல் பொருளியல் மட்டுமே அதிகார நடுவங்களாகவும், போராடுவோர் சென்றடைய வேண்டிய இலக்காகவும் இருந்திட இயலாது.

தமிழ்க் குமுகச் சமன்மை, கலை, பண்பாடு, வாழ்வியல் வரலாற்றியல் முயற்சிகளையெல்லாம் மீட்டெடுக்கவும் அவற்றை இம்மண்ணின் மக்களிடையே காலூன்றி நிலைப்படுத்தவுமான வேலைகளையும் விரிவாகச் செய்தல் வேண்டும்.

அவ்வாறு தமிழிய வரலாற்றை, கல்வி உள்ளிட்ட சில முயற்சிகளை, வாழ்வியலை, பண்பாட்டுக் கூறுகளை மீட்டெடுப்பதற்கென நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் நிறைய உள்ளன.

அத்தகைய முயற்சிகளைச் சாதி ஒழிப்பு நோக்க முடைய இயக்கங்களும், மொழிகாக்கும் இயக்கங்களும், அவ்வளவு ஏன் வகுப்பு ஒழிப்பு நோக்கமுடைய பொதுவுடைமைக் கட்சிகளும்கூட பெருமளவில் செய்திட வில்லை.

மாற்று அரசியலைப் பேசிப் பெருமளவில் வலுவாகத் தம்மை வளர்த்துக் கொண்டிருக்கிற அம்பேத்கரிய, பெரியாரிய கட்சிகள் சிலவும்கூட, குமுக விடுதலை அரசியலைப் பயிற்சிக்குள்ளாக்குகிற வகையில் கல்விக் கூடங்களையோ, அரசியல் பயிற்சிப் பட்டறைகளையோ அமைத்திடவில்லை.

மாற்று அரசியலை எப்படி  நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்பதை அடையாளப்படுத்திக் காட்டுகிற தன்மையில் அரசியலாகவும், பொருளியலாகவும், சமூக, கலை, பண்பாட்டின்  அடிப்படைகளிலும் அடித்தள நிறுவனங்களை அமைத்துக் காட்டவில்லை.

மாற்றுப் பண்பாட்டின் விழா நிகழ்ச்சிகள் எத்தகையன என்பதை மக்களிடம் அடையாளப்படுத்தி, மக்களே அத்தகைய பண்பாட்டு நிகழ்வுகளை முன்னெடுக்கும் படியாகப் பழக்கவில்லை.

மாற்றுக் கல்விமுறைகள், மாற்று வணிக, தொழில் நிறுவனங்கள் எத்தகையன? எந்தெந்த வடிவங்களி லானவை?  எப்படியாக அவை நிலைநிறுத்தப்படும்? என்பதை அடையாளப்படுத்துகிற திட்ட ச் செயல்பாடுகள் புரட்சி நோக்குடையவர்களிடம் நடைமுறையில் இல்லை.

புரட்சிக்குப் பிறகு, விடுதலைக்குப் பிறகு அரசைக் கைப்பற்றித் திடுமென மந்திரத்தில் மாங்காயை விழ வைப்பது போன்று, சட்டங்களைப் போட்டு எல்லா வற்றையும் மாற்றி விட முடியும் என்று  கருதுவது கற்பனையானது.

புரட்சியையும் புரட்சி அரசியலையும் பழகும் புரட்சி யாளர்கள், புரட்சியால் அல்லது விடுதலையால் பெறப் படும் அரசதிகாரத்தினைக் கொண்டு,  பன்னாட்டு நிறுவனத் தொழிலகங்களை மீட்டெடுத்துப் புதிய குடியாட்சி அரசியலுக்கு உகந்த முறையில்  எப்படி நடத்துவார்கள்? நிர்வகிப்பார்கள் என்கிற திறன் அறியாமல் எப்படிச் செயல்படுத்த முடியும்?

அரசியல், பொருளியல் அதிகாரத்தை நிறுவுகிற பயிற்சி எப்படிப் புரட்சிக்கு  அல்லது விடுதலைக்கு முன்னரே படிப்படியாகத் தேவையானதோ, அப்படியே வாழ்வியல், பண்பாட்டியல், சாதி ஒழிப்பு உள்ளிட்ட குமுக ஒழுங் கமைப்புகளுக்கான பயிற்சிகளும் மிகவும் அடிப்படை யானவை.

புரட்சிக்கு அல்லது விடுதலைப் போராட்டத்திற்கு அணியப்படுத்துகிற மக்கள் வகுப்பு அணிகளை அரசிய லோடும் பண்பாட்டோடும் களம் அமைத்துப் பயிற்சி கொடுக்க வேண்டுமா? இல்லையா?

நம்மை அடிமைப்படுத்தியிருக்கிற அதிகார வகுப்பு களோ நிறுவனப்படுத்தி அவர்களுக்கான வகுப்பு அதிகாரங்களை, அரசியலை, பண்பாடுகளை நிலைப் படுத்தி வெகுமக்களைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் அடக்கிவைத்திடப்  பயிற்றுவிக்கின்றன.

இன்றைக்குள்ள அவர்களின் ஆட்சி அதிகாரத்தை நிறுவுவதற்கு முன்பாகவே அத்தகைய வேலைகளை அவர்கள் தொடங்கி விட்டனர்.

1925-இல் தொடங்கப்பட்ட இந்தியப் பார்ப்பனி யக் கல்வி நிறுவனமான ஆர்எஸ்எஸின் பொறுப் பில் இதுவரை 20,000 பள்ளிக்கூடங்கள்  செயல் படுகின்றன. 5 கோடியே 40 இலக்கம் மாணவர்கள் அவற்றில் படிக்கின்றனர்.  (ஆர் எஸ் எஸ் இல் உள்ள நேரடியான உறுப்பினர் எண்ணிக்கை என்பது தனி.)

உலகம் முழுக்க 801 இராமக்கிருட்டிண மடங்கள் செயல்படுகின்றன. அவற்றுக்குச் சொந்தமாய் 748 கல்விக்கூடங்கள், கல்லூரிகள், தொழிநுட்பக் கல்லூரிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், மாணவர் விடுதிகள், ஏதிலியர் விடுதிகள்...

இவையன்றி திலகரின்  பெயரால், கோல்வல்கரின் பெயரால், சங்கராச்சாரியின் பெயரால் உருவாக்கப் பட்டுள்ள  நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்கள்...

இந்திய அரசதிகாரத்தின் கீழ்ச் செயல்படுகிற நவோதயா, கேந்திரிய வித்யாலயா போன்ற பல்லாயிரக்கணக்கான கல்வி  நிறுவனங்களும் அவற்றில் படிக்கின்ற பல இலக்கக்கணக்கான மாணவர்களும்,  மாணவர்களின் எண்ணிக்கையும் தனி...

ஆக, இவற்றின் மூலமாகவெல்லாம் பயிற்றுவிக்கப்படும் பிள்ளைகளுக்கு எத்தகைய அரசியல், பண்பாடு ஊன்றப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்...

வகுப்பறைகளில் `உள்ளேன் ஐயா  என்பதற்கு மாறாக `ஜெய் ஹிந்த்’  என்று சொல்ல வேண்டும் என ஆணையிடப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களின் மூளைகள் அவர்களுக்குச் சார்பாய் எந்த அளவிற்குச் சலவை செய்யப் பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

அப்படி, இலக்கம் கூட வேண்டாம், எத்தனை ஆயிரம் பிள்ளைகளை உருவாக்கிடும் நிறுவனங் களை மார்க்சிய வழிப்பட்ட, பெரியாரிய, அம்பேத் கரிய வழிப்பட்ட, அவ்வளவு ஏன் தமிழிய வழிப்பட்ட இயக்கங்கள், கட்சிகள் நிறுவி உருவாக்கி யிருக்கின்றன?

அதேபோல் பன்னாட்டுத் தொழில்களை, வணிகத்தை; இந்தியத் தொழில்களை, வணிகத்தைப் புறக்கணிக்க வேண்டுமாய்ப் போராடுகிற மேற்படி புரட்சி, விடுதலை நோக்குடைய இயக்கங்கள், கட்சிகள் மாற்றுப் பொருளியலுக்கு உரிய தொழில் அல்லது வணிக நிறுவனங்களை எங்காவது நிறுவி உள்ளனவா?

இன்றைக்கு அரசு சார்பில்லாத பெரும்பான்மைத் தனியார் நிறுவனங்கள்யாவும், இந்தியப் பார்ப்பனியத்தின் கோட்பாட்டுப் பின்புலம் உடையன என்பதை அறிய வேண்டும்.

மாற்றுப் பண்பாட்டுக்குரிய விழா என்று ஒரு மக்கள் விழாவையாவது மேற்படிக் குமுக மாற்ற புரட்சி அல்லது மக்கள் விடுதலை நோக்குடைய இயக்கங்கள் அடையாளப்படுத்தியிருக்கின்றனவா? அதை வெகு மக்களிடையே பரப்பி மக்கள் விழாவாக முன்னெடுக்க வைக்கத் திட்டமிட்டிருக்கின்றனவா?

இன்றைக்கு வல்லரசியத்தை விரட்ட வேண்டுமான, துணிவோடும், இந்தியப் பார்ப்பனியத்தை வீழ்த்த வேண்டுமான நோக்கோடும் ஒரு பரப்பல் ஊடகம் (தொலைக்காட்சியோ வானொலியோ செய்தித்தாளோ அவ்வளவு ஏன் கிழமை இதழோ)மக்கள் தளத்தில் உண்டா?

ஆக, அவை எவையுமே இல்லாமல் அவற்றை உருவாக்குவதற்கான திட்டம் பெரிய அளவில்  இல்லாமல் எப்படி இந்தியப் பார்ப்பனியத்தை, வல்லரசியத்தை வீழ்த்துவதான அரசியல் கோட் பாடுகள் முன்னுக்கு நகர முடியும்?  வலுப்பட முடியும்? எண்ணிப்பார்க்க வேண்டும்...

ஆக, இன்றைக்கு அரசியல் பொருளியல் தளத்தில், தமிழ்த்தேச விடுதலைக் குடியரசை நிறுவுவதற்கான பெரும் பணிகள் நீண்ட காலத்திட்டத்திற்குரியதாகச் செய்ய வேண்டி இருக்க, இன்றைக்குக் கருத்தளவில் தமிழ்த் தேசக் கல்வி, கலை, பண்பாட்டுக்குரிய அடித்தள அமைப்புகளைப் பல்லாயிரக்கணக்கில் நிறுவிச் செயல் படுத்தியாக வேண்டியுள்ளது.

சான்றுக்கு, ஒன்றைச் சொல்லியாக வேண்டும்.

கன்னியாகுமரி தமிழ் நாட்டின் மிகப்பெரும் செழிப்பான மாவட்டமும் சுற்றுலாத் தலங்களைக்  கொண்டதுமாகும்.

அந்த மாவட்டத்தின் பெரும்பான்மைப் பகுதியில் உள்ள கோயில்களை நடுவப்படுத்தி ஆர்எஸ்எஸ் இயங்கத் தொடங்கியதோடு, குமரிக் கடலில் இருந்த பெரும் பாறையை அன்றைய ஆட்சியாளர்களை இணங்க வைத்துத் தனக்காக ஆக்கிக் கொண்டது.

விவேகானந்தர் மண்டபத்தை உருவாக்கியது மட்டுமன்றி விவேகானந்தபுரம் எனப் பெரிய நிலப்பரப்பையே வளைத்துப் போட்டுத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்டது.

சங்கரமடத்திற்கு, விவேகானந்தர்-  இராமக்கிருட்டிண மடங்களுக்குச் சொந்தமாய் அந்த ஊரில்  பாதிக்கும்  மேலான இடங்கள்  மடக்கிப் போடப்பட்டு இந்தியப் பார்ப்பனியக் கருத்துடையவர்கள் அப்பகுதி மக்களை அவர்கள் கருத்துகளுக்கு மாற்றி வைத்திருக்கின்றனர்.

அம் மாவட்டத்தில் உள்ள கிறித்தவர்களும் வழிபாட்டு நிலையில்தான் மாறுபாடுடையவர்களே யல்லாமல் இந்தியப் பார்ப்பனிய அதிகார அரசோடு இணங்கிப் போகக்கூடியவர்களாகவே உள்ளனர்.

எனவே, அவர்களுக்கெல்லாம்  தமிழ், தமிழினம், தமிழ் நாட்டுரிமை, பன்னாட்டு நிறுவன எதிர்ப்பு, இந்திய அரசெதிர்ப்பு  பற்றியெல்லாம் பெரிய அளவில் தெரியாது, உடன்பாடும் கிடையாது.

தமிழ்த்தேசமுதலாளி, தொழிலாளி, உழவர்கள், மீனவர்களின் காப்புணர்வு எல்லாம் தெரியாது.

இந்தியப்  பார்ப்பனியத்திடமும், அந்த இந்தியப் பார்ப்பனியம் கூட்டு வைத்திருக்கிற பன்னாட்டு முதலாளி வலுப்படுத்தத்திற்காகவுமே அவர்களின் சிந்தனைகளும் செயல்களும் உள்ளன.

அவர்களுக்கான பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், தங்கு விடுதிகள், உணவு விடுதிகள், கோயில்கள் விழாக்கள், சிறுதொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், நூலகங்கள், பூங்காக்கள்,  முதியோர் இல்லங்கள், ஏதிலியர் இல்லங்கள், நிகழ்ச்சி அரங்குகள் எனப்  பல வகையான நிறுவனங்களெல்லாம் அவர்களின் கொள்கை பரப்புக் களங்களாகச் செயல்படுத்தப் படுகின்றன. ஆயிரக்கணக்கினர் ஒருங்கிணைக்கப்பட்டு அப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அரசு நிறுவனங்கள் பல மேற்படி பார்ப்பனிய நிறுவனங்களுக்குத் துணைப் பணி நிறுவனங்கள் போலவே செயல்படுகின்றன.

மிகு உயரமாய் நிறுவப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலையின் இருப்பையும், அது  நிறுவப்பட்ட நோக் கத்தையும் மறைத்து விழுங்கிவிட்டது விவேகானந்தர் மண்டபம்.  பிற தேசங்களில், நாடுகளிலிருந்து வரு வோர்க்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருந்து வரு வோர்க்கே, இது யாருடைய சிலை, அவர் யார் என்ன நோக்கத்தில் இங்கு நிறுவப்பட்டுள்ளது என்பவற்றைத் தெரிவிப்பதற்கு நிறுவனம் இல்லை.

அரசின் பூம்புகார் படகு நிறுவனம் கூட ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லித் திருவள்ளுவர் சிலைக்குப் படகு போக்குவரத்தை நடத்துவதில்லை.

ஆக, தமிழ்நாட்டின்-தமிழர்களின் பிறந்தகம் என்று பெருமை கொள்ளும் குமரிக்கண்டத்தின் எச்சமாக இருக்கும் கன்னியாகுமரியைக் கூட நம் தமிழ்த்தேச வரலாற்றுச் சுவடாய்ப் பறைசாற்ற இயலாமல், நம் குமுக, கலை, பண்பாட்டு, வரலாற்று நிகழ்வுகளை வெளிப் படுத்த இயலாமல் அதற்கான திட்டம் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறோம்.

இந்த இடத்தில் நாம் இன்னொன்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதாவது ஆர்எஸ்எஸின் கோட்பாடு என்பது மிக மிகச் சிறுபான்மை எண்ணிக்கையினரான ஆரியப் பார்ப்பன அதிகார வகுப்பினரின் அதிகாரவெறிக் கோட்பாடு.

அரசியல் வழி பிரித்தாளும் சூழ்ச்சியைக் கொண்டும், அமைப்பியல் வழி அனைவரையும் தன் கோட்பாட்டின் கீழ் அடக்கி ஒருங்கிணைக்கிற நடைமுறையைக் கொண்டும் அது என்ன வகையிலெல்லாம் திட்டமிட்டு இயங்கி வருகிறது என்பதை உற்றுநோக்கியாக வேண்டும்.

காந்தியைச் சுட்டுக்கொன்ற போதும், இந்திரா அரசின் நெருக்கடி கால அரசியல் சூழலிலும் ஆர்எஸ்எஸ் இரண்டு முறை தடை செய்யப்பட்டது. தடைசெய்யப்பட்ட காலங்களில் தன்  இயக்கத்தைத்  தகவமைத்துக்கொள்ள மேற்கொண்ட முயற்சியையும், இஸ்லாமியர், தாழ்த்தப் பட்டோர் எனப் பார்ப்பனியத்தை எதிர்த்திடுவோரையும் பெருவாரியாக எப்படி ஆர்எஸ்எஸ் க்குள் இணைத்து அடக்கி வைத்து இயங்க வைப்பது என்கிற அவர்களின் முயற்சியையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்

ஏதோ நிறுவனங்களை அமைத்தல், இயக்க எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ளுதல் என்பதோடு அல்லாமல் படைத்துறை, நீதித்துறை உள்ளிட்ட அரசின், அதிகார அமைப்பின் ஆட்சி அரங்குகள் அனைத்திற்குள்ளும் அவர்கள் எப்படி ஊடுருவி அந்த அரங்குகளை அரசியலாகவும், அதிகார நிலையிலும் தங்கள்  கட்டுக்குள் வைத் திருக்கிறார்கள் என்று கவனித்தாக வேண்டும்

ஆனால், இங்கு தமிழ்நாட்டில் தேர்தல் அரசியல் வழி ஆட்சியைப் பிடித்து அனைத்தையும் மாற்றி விடுவதாய் நுழைந்த அரசியல் கட்சிகள் 1916இல் நீதி கட்சி தொடங்கி, பின்னர் திமுகவில் இருந்து நாம் தமிழர் வரை எந்த அதிகாரத்தை நிறுவினார்கள், நிறுவத் திட்டமிட்டு நடத்தினார்கள்.

இழந்தவைதாம்  அதிகம் என்பதை கணக்கிட்டு ஆய்வோர் அறிய முடியும்.

ஆக,  இப்படியாக நம்மை முடக்கி இருக்கும் நிலையில் ஆரியப் பார்ப்பனிய அதிகாரம் தலைவிரித்தாடாமல் என்ன செய்யும்? இந்தியப் பார்ப்பனியம் பாசிசமாய்த் திமிர் பிடித்ததல்லாமல் வேறு எப்படி இயங்கும்?

ஆக, இந்நிலையில் பார்ப்பனிய பாசிசத்தை வீழ்த்துவதும், தமிழர்கள் உள்ளிட்ட மொழித் தேசிய இன மக்களின் உரிமை எழுச்சிக்குப் பாடாற்றுவதும் மிக முகாமையான ஆழ்ந்த விரிந்த முயற்சிகள்.

அவ்வகை எழுச்சிகளுக்கு முயற்சிகளுக்கு அடித்தள மாய் வலுப்படுத்திச் செயலாற்ற வேண்டிய சில முகமையான  பணிகளே கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன...

1) மொழி வழியாக நம் பெயர்கள், நிறுவனப் பெயர்கள், சாலை, ஊர்ப் பெயர்களில் உள்ள சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற அதிகார மொழிகளின் பெயர்களை நீக்கிவிட்டுப் பகுத்தறிவுக்கு உகந்த வகையிலும், தமிழிலுமே பெயர்களைச் சூட்டிக் கொள்ளுதல் வேண்டும். 

(அப்படியாகச் செய்வது ஏதோ தமிழ்ப்படுத்தம் என்றாக மட்டுமே கருத வேண்டாம். அது சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்தது என்பது மட்டுமல்ல, இந்திய மயமாக்கத்தையும் எதிர்த்தது. விக்னேஷ் என்பதும், வித்யாலயா என்பதும் சமஸ்கிருதப் பெயர்கள் என்பது மட்டுமல்ல, அவை  இந்தியப் பெயர்கள், இந்தியா ஆதிக்கத்தால் மொழித் தேசங்களின் மீது திணிக் கப்பட்ட பெயர்கள். விக்னேஷ் என்று இஸ்லாமியர் தவிர கிறித்தவர் தவிர சீக்கியர்தவிர இந்திய ஆட்சிக்குட்பட்ட எல்லாரும் பெயர் வைத்திருக்க முடியும். ஆனால் குறிஞ்சி, முல்லை, நம்பி - என்றெல் லாம் தமிழர்கள் மட்டுமே பெயர் சூட்டி இருக்க முடியும்)

2) குடும்பம், குலம், சமயம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், விழாக்களில் உள்ள சமஸ்கிருதமயமாக்கத்தை, மூட நம்பிக்கைக்கு உட்பட்ட நம்பிக்கைகளை நீக்கிவிட்டுப் பகுத்தறிவோடான விழாக்களையே முன்னெடுக்க வேண்டும்.

(எல்லா மூடநம்பிக்கை விழாக்களும் இந்திய அளவு பரப்பப்படுகின்றன. ஒவ்வொரு மொழி தேசியத் திற்கான பகுத்தறிவுக்குட்பட்ட விழாக்களையே, மொழித் தேசிய விழாவாக ஊன்றி வளர்க்கவும் ஒருங்கிணைக்கவும் முடியும்)

3) சாதி, சமய மறுப்புடையவர்கள் திருமணப் பதிவு களைச் சாதி மறுப்புத் திருமணம் எனப் பதிவு செய்வ தோடு, அவர்களுக்குப் பிறக்கிற குழந்தைகளுக்குச் சாதியற்றவர், சமயமற்றவர் என்றே பதிவுகளைச் செய்திடல் வேண்டும். தமிழக அளவில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குத் தனியாகச் சிறப்புச் செய்வதோடு, அவர்களுக்கெனத் தனி இட ஒதுக்கீடு அளித்திடல் வேண்டும். அரசுப் பதிவுகளில் சாதியற்றவர், சமயமற்றவர் எனத் தனியே குறிப்பிடும் வகையில் இடம் ஒதுக்கிட வேண்டும்.

4) சமயச் சார்பு இல்லாத, சாதியச் தொடர்பில்லாத மூட நம்பிக்கையற்ற விழாக்களைப் புதிது புதிதாக உரு வாக்கி நடத்துதல் வேண்டும். அவர்களைப் பெண் களே முன்னெடுத்து நடத்தும்படி அமைத்தால் சிறப்பு.

5) கோயில்கள் அனைத்திலும் பூசைகளையும், குட முழுக்கு உள்ளிட்ட நிகழ்வுகளையும் அனைத்துச் சாதியினரும் செய்வதும், தமிழிலேயே செய்வதும், தமிழ் வழிபாட்டுப் பாடல்களைப் பாடியே செய்வதுமாக ஓதுவார்களை முன்னிறுத்திச் செயல்படுத்த வேண்டும்.

6) சிவனியர்களையும், மாலியர்களையும் தனித்தனியாகவோ, இணைத்தோ மாநாடுகளை நடத்த கருத் துரைத்துத் தூண்டுதல் வேண்டும். சிவனியமும் மாலியமும் இந்து மதத்திற்குத் தொடர்புடையதல்ல என்றும், வேதங்களும் மனு தர்ம சாஸ்திரங்களும், சிவனிய, மாலிய சமயங்களுக்கும் தொடர்பில்லை என்றும் அறிவிக்கச் சொல்லி வழிப்படுத்த வேண்டும். வள்ளலார் இயக்கத்தினரை வைதிக, வேத, மனு தர்ம சாஸ்திரங்களை மறுத்துக் கருத்துப் பரப்பல் செய்யத் தூண்ட வேண்டும்.

7) திருவள்ளுவர், கண்ணகி, ஒளவையார் உள்ளிட்ட தமிழ் அறவோர்களைச் சிறப்பிக்கும் வகையில் அடையாள நாள்களில் அவர்களின் வெட்டுருவங் களை, படங்களைத் தாங்கி விளக்குகள் ஏந்தி ஊர்வலம் நடத்திச் சாதி ஒழிப்பை, வகுப்பு (வர்க்க) ஒழிப்பை, சமய ஒழிப்பை முன்னிறுத்திப் பரப்பல் செய்தல் வேண்டும். விழாக்கள் நடத்திடல் வேண்டும். மாணவர்களிடையே போட்டிகள் நடத்திடல் வேண்டும்.

8) மக்கள் கலை விழாக்களை நடத்துவது, போகி நாளில் சாதி அழுக்கையும் தீயிட்டுக் கொளுத்தும்படி சாதி, வகுப்பு(வர்க்க)க் கொடூரன் ஒழிப்பு நிகழ்வுகளைப் பரவலாகச் செய்வது.

9) ஒவ்வோர் ஊரிலும் தமிழ் வழிப் பள்ளிக்கூடங்களும், மாவட்டந்தோறும் பெரிய அளவில் மேல்நிலைப்பள்ளி ஒன்றும், கல்லூரி ஒன்றும், தமிழிய உணர்வோடும், சாதி, சமய மறுப்பு உணர்வோடும் தொடங்கி நிறு வனப்படுத்தி நடத்திடல் வேண்டும். (காலத்தால் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்) விடுதியுடன் கூடியதாய் அப்பள்ளிகளை அமைத்து மாணவர் களைப் பொறுப்புணர்வு உள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.

(இவற்றையெல்லாம் வல்லரசிய எதிர்ப்பு, இந்திய பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு உணர்வு கொண்ட இயக்கங்கள் சார்ந்தவர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து, அக்குழுவின் நெறிப்படுத்தலிலும் ஒழுங் கமைப்பிலும் இயக்கிட வேண்டும்)

10) ஒவ்வோர் ஊரிலும் கூட்டு வணிகக் கூடங்களையும், கூட்டுத் தொழிற்கூடங்களையும் மாற்றுப் பொருளியல் திட்டத்திற்கான அடித்தளமாய் நடத்திடல் வேண்டும். ஒவ்வோர் ஊரிலும் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களால் நடத்தப்படும் மேற்படி வணிக, தொழில் நிறுவனங்களின் வழியான ஊதியத்தின் பகுதியை, அவர்களை ஒருங்கிணைத்துக் கூட்டியக்க அளவில் ஆளுகை செய்கிற அதிகாரக் குழுவின் வழியே நடத்தப்பெறும் மேற்சொல்லப்பட்ட பிற வேலைகளை வலுப்படுத்துகிற  தன்மையில் பயன்படுத்துதல் வேண்டும்.

மேலே சொல்லப் பெற்றவையோடு திட்டமிட்ட வேலைகளை அடித்தள வேலைகளாகச் செய்வதுதான், குமுக மாற்றத்திற்கும், விடுதலைக்கும், புரட்சிக்குமான அடிப் படைகளாக இருக்க முடியும்.

ஆரியப் பார்ப்பனியத்திற்கு எதிராய், இந்தியத் திற்கு எதிராய்,  பன்னாட்டு வல்லரசியங்களுக்கு எதிராய் மக்கள் அனைவரையும், இயக்கங்கள், கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் நிறுத்துவது என்கிற உத்திகள் திட்டமிடப்பட வேண்டும்.

அரசதிகார அரங்குகளுக்குள் ஊடுருவி அரசியலை யும், அதிகாரத்தையும் தன்வயப்படுத்திடல் வேண்டும்.

அத்தகைய அடித்தளங்களை அமைத்துக் கொண்டால்தான் தமிழ்த்தேச விடுதலை எனும் கட்டுமானத்தை அதன்மேல் நிறுவ முடியும்.

எனவே, அத்தகைய அடித்தளங்களை அமைத்துக் கொள்ளத் திட்டமிட்டு இயங்க வேண்டியது குமுக மாற்றம் பற்றிய கருத்துடையோர் அனைவரின் கடமையுமாகும்.

Pin It