இந்திய அளவில் சாதி வாரிக் கணக்கெடுப்பு, 1951இலேயே இந்திய அரசினரால் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். நடுவண் அரசிலும் மாகாண அல்லது மாநில அரசுகளிலும் அப்போது பார்ப்பனர் ஆதிக்கமே கொடிகட்டிப் பறந்ததால் அது புறக்கணிக்கப்பட்டது.

1953இல் காகா கலேல்கர் தலைமையிலும், 01.01.1979இல் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையிலும் அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட குழுக்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை. அவ் இரண்டு குழுக்களும் 1931இல் எடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிவாரிக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொருபத்தாண்டிலும் அதன் பிறகு ஏற்பட்டிருக்கக் கூடிய வளர்ச்சியைக் கணக்கிட்டு, அதன்படி பிற்படுத்தப்பட்டோரின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தோராயமாக மேற்கொண்டனர்.

அதேபோல், மாநிலங்கள் அளவில் 1970க்குப் பிறகு அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் குழுக்களும், அதே அடிப்படையில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கை எடுத்தன. இப்போது, 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதே, இந்தக் கோரிக்கை பலதரப்பிரிவினராலும் முன் வைக்கப்பட்டாலும், பார்ப்பன - மேல் சாதி மேலாதிக்க இந்திய அரசு அடாவடித்தனமாக மறுத்தே வந்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கு நடுவண் அரசு உயர் கல்வியில் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்ற பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பாயசத் என்கிற மேல்சாதிக்காரரர், “1931 கணக்கை வைத்து சாதிவாரிக்கணக்கை மதிப்பீடு செய்ததை ஏற்க முடியாது” என்று கூறிய பிறகு, எல்லோரும் அதிக விழிப்புணர்வு பெற்றனர். எல்லாச் சாதிச் சங்கத்தினரும், இட ஒதுக்கீட்டில் ஈடுபாடு கொண்ட எல்லாக் கட்சிகளும் இதில் மிகவும் ஆர்வம் காட்டினர்.

அண்மையில், தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69ரூ இட ஒதுக்கீடு பற்றிய வழக்கை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், வரும் 2011 கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன் - தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் சேர்ந்து 69ரூ மக்கள் உள்ளனர் என்பதை எண்பிக்க வேண்டும் - அப்படி எண் பித்தால் 69ரூ நீடிக்கப்படலாம் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டது. இது ஒரு நல்ல வாய்ப்பு.

இதற்கு முன்னரே தமிழ்நாட்டிலுள்ள எல்லாக்கட்சிகளும், சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று மனமாரக்கோரின. 2004 முதல் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு - குறிப்பாகத் தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங், முந்தைய சட்ட அமைச்சர் பாரத்வாஜ், மற்றும் உள்ள அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் முதலான மேல் சாதியினரின் ஆதிக்க அரசு இக்கோரிக்கையைச் சட்டை செய்யவில்லை. ஆனால், தமிழ்நாட்டு முதலமைச்சரும், மற்ற அரசியல் கட்சிகளும், சமூகச் சங்கங்களும், வைத்த கோரிக்கையை ஏற்பதுபோல் நடித்து, “2010 சூன் மாதத்துக்குள் மக்கள் தொகைக் கணக்கை எடுத்து முடித்த பிறகு, 2011 சூன் முதல் செப்டம்பருக்குள் தனியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வோம்” என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இது நனைத்துச் சுமக்கிற மடத்தனமான வேலையாகும்.

இப்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது சமூகத்திலுள்ள எல்லாப் பிரிவு மக்களின் கல்வி வளர்ச்சி, வேலைவாய்ப்பு வளர்ச்சி, வாழ்க்கை நுகர்வு வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்று அனைத்துத் துறைகளின் வளர்ச்சி பற்றியும் உள் சாதி குறிப்பிடப்படாமல் எடுக்கப்படுகிற அனைத்து வாழ்க்கைக் கூறுகளையும் காட்டுகிற BIOMETRIC கணக்கெடுப்புக்கு மட்டும் ரூ. 2200 கோடிக்கு மேல் செலவாகும். இந்தக் கணக்குக்கு ஒவ்வொன்றுக்கும் உள்ள பத்தியுடன் “உள்சாதி” என்கிற ஒரு பத்தியும் இப்போதே இணைக்கப்பட்டிருந்தால் தான். ஒவ்வொரு உள்சாதியில் உள்ள உறுப்பினரின் எல்லாத்துறை வளர்ச்சி நிலை பற்றியும் அறிய முடியும். இது மிக மிகத் தேவை.

அப்படிச் செய்வதை ஏற்க முடியாது என்று கூறிவிட்டு, வெறும் தலை எண்ணிக்கையை மட்டும் காட்டுகிற உள் சாதிவாரிக் கணக்கைப் பிறகு எடுப்போம் என்றும், அதற்குத் தனியாக மேலும் ரூ. 2000 கோடி செலவு செய்வோம் என்றும் இந்திய அரசு கூறுவது, சத்துள்ள கோதுமை அடை வேண்டும் என்று கோருவோருக்கு சாணி எரு முட்டை அடையைத் தருகிற ஏமாற்றே ஆகும். அப்படிப்பட்ட சாதிவாரிக்கணக்கு ஒவ்வொரு உள்சாதியினரின் எண்ணிக்கையை மட்டுமே காட்டும்; அந்தந்த உள் சாதியும் ஒவ்வொரு துறையிலும் பெற்றுள்ள வளர்ச்சியின் படி நிலை அளவைக் காட்டாது; பெற்றுள்ள பங்கின் அளவைக் குறிக்காது. அதை வைத்து எந்த உள் சாதியின் வளர்ச்சி நிலையையும் எவரும் அறிய முடியாது.

இவ்வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு, 2008 முதல் இந்திய அளவிலும், தமிழ்நாட்டு அளவிலும் எடுத்துவரும் முயற்சி பெரிது. அவர் அண்மையில் தமிழக முதல்வரைக் கண்டு, தமிழ்நாட்டுமக்கள் தொகைக் கணக்கை உடனே மேற்கொள்ள வேண்டும் என 27 சாதிச் சங்கங்களின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளார். அதை மனங்கொண்டு, முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் உயர்நீதிபதி எம்.எல். சனார்த்தனத்தை அழைத்து இது பற்றிக் கலந்துரையாடியுள்ளார். இது நம்பிக்கை யூட்டுவதாக உள்ளது.

இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்திய அரசினர் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு என்று வைத்துள்ள பதிவுப்படிவத்தில் உள்ள எல்லா விவரம் காட்டும் பத்திகளையும் கொண்ட அதே போன்ற படிவத்தில் “உள் சாதி” என்கிற பத்தியையும் புதிதாகச் சேர்த்து, உடனடியாகத், “தமிழ்நாட்டுச் சாதிவாரிக் கணக்கெடுப்பைத்” தொடங்கிட ஆணையிட வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வேண்டிக் கொள்கிறோம். இந்த அரிய நல்ல பணியை அரசினர் நிறை வேற்றுவதற்குத் தமிழ்நாட்டு ஆசிரியப் பெருமக்கள். அரசு அலுவலர் பெருமக்கள் மற்றும் சமுதாய நலப்பணி ஆர்வலர்கள் மன முவந்து எல்லா வகைகளிலும் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என வேண்டுகிறோம்.

இப்போது உள்ள தோராயக்கணக்குப்படி தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் 70%; பட்டியல் வகுப்பினர் 19%; பழங்குடியினர் 1%; உள்ளனர். இதன்படி மேல் சாதியினர் 10% ஆவர். இந்த 100 விழுக்காட்டு மக்களும் 400 உள் சாதிகளாக உள்ளனர். இந்த ஒவ்வொரு உள் சாதியும் ஒவ்வொரு துறையிலும் 2010 வரையில் பெற்றுள்ள படிநிலை வளர்ச்சி பற்றிய விவரம் இப்போது கட்டாயம் அறியப்பட வேண்டும். இது உடனடித் தேவை.

Pin It