அண்டை மாநிலங்களிலிருந்து கிடைக்கும் நீரே தமிழ்நாட்டின் முதன்மையான நீராதாரமாக உள்ளது. இதற்கு அடுத்த நிலையில் ஏரிகளும் குளங்களும் உள்ளன. இவை தவிர நிலத்தடி நீரும் பெருமளவு நீர்த் தேவையை நிறைவு செய்கிறது.

மழைநீரைச் சேமித்து வைத்துப் பயன்படுத்து வதற்கு ஏற்றவகையில் 39,000 ஏரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இவற்றுள் 38,000 ஏரிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னர் அமைக்கப்பட்டவை. அவற்றில் பாதியளவு ஏரிகள் இன்று அழிக்கப்பட்டு விட்டன. இதனால் நீர் சேமிப்புத் திறன் வெகுவாகக் குறைந்து விட்டது.

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை (ஜூன்-செப்டம்பர்) மூலமும் வடகிழக்குப் பருவமழை (அக்.-டிச.) மூலமும் ஓரளவு நீர் கிடைக்கிறது. மற்றக் காலங்களில் கடுமையான வெப்பம் நிலவுகிறது.

தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் நீர்

மழையின் மூலம்      25 இலட்சம் எக்டேர்ஃமீட்டர்

நிலத்தடி நீர்   15 இலட்சம் எக்டேர்ஃமீட்டர்

வெளிமாநிலங்களிலிருந்து     25 இலட்சம் எக்டேர்ஃமீட்டர்

மொத்தம்      60 இலட்சம் எக்டேர்ஃமீட்டர்

நீர்த் தேவை

வேளாண்மைக்கு      50 இலட்சம் எக்டேர்ஃமீட்டர்

தொழில்துறைக்கு      13 இலட்சம் எக்டேர்ஃமீட்டர்

நகரங்களுக்கு  4 இலட்சம் எக்டேர்ஃமீட்டர்

கால்நடைகளுக்கு     1 இலட்சம் எக்டேர்ஃமீட்டர்

கிராமங்களுக்கு 2 இலட்சம் எக்டேர்ஃமீட்டர்

மொத்தம்      70 இலட்சம் எக்டேர்ஃமீட்டர்

ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு 10 இலட்சம் எக்டேர்ஃமீட்டர் நீர்ப் பற்றாக்குறை நிலவுவதை மேற்கண்ட அட்டவணை தெளிவுபடுத்துகிறது. வட மாநிலங்களைப் போல ஆண்டுதோறும் நீர்வரத்து உள்ள பெரிய ஆறுகள் தமிழ்நாட்டில் இல்லாததால் மிகக் கடுமையான நெருக்கடியை நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம்.

தமிழக ஆறுகள்

தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆறு காவிரியாகும். இது தவிர வைகை, தாமிரபரணி, பாலாறு முதலி யவை தமிழ்நாட்டில் ஓடுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளை 34 ஆற்றுப்படுகைகளாக வகைப் படுத்தலாம். இவை தவிர மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளும் பல சிறிய ஆறுகளும் உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் தாமிரபரணி மட்டுமே தமிழ்நாட்டிலே உருவாகி, தமிழ்நாட்டிலேயே ஓடி கடலில் கலக்கிறது. மற்ற ஆறுகள் எல்லாம் பிற மாநிலங்களில் உருவாகின்றன. இதனால் ஆற்று நீருக்காகத் தமிழகம் எப்போதும் பிற மாநிலங்க ளையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

முல்லைப் பெரியாறு

நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது முல்லைப் பெரியாறு அணை. இன்று அதன் வலிமை பற்றிப் பெரும் சிக்கல் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையே உள்ளது இது வேதனைக்குரியது.

கேரளத்தின் மோசடி

இந்த அணை பலவீனமாக இருக்கிறது; உடைந் தால் கேரளத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என்று மலையாள மனோரமா இதழ் செய்தி வெளியிட்டதன் விளைவாகக் கேரள அரசு அணையின் உயரத்தைக் குறைக்க வேண்டுமென நெருக்கடி கொடுத்தது. அணையின் நீர் உயரம் 145 அடியிலிருந்து 132 அடியாகக் குறைக்கப்பட்டது. தமிழக அரசு அணையைப் பலப்படுத்திய பிறகு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. எனினும் கேரள அரசு இன்னும் மறுத்து வருகிறது. மேலும் புதிய அணை ஒன்றைக் கட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. முல்லைப் பெரி யாறு அணையின் உயரத்தை உயர்த்தி தமிழகத்தின் தென்மாவட்டங்களின் வறட்சியைப் போக்கப் பாடுபட வேண்டியது இன்று நம்முன் உள்ள அவசரக் கடமையாகும்.

நடுவண் அரசுக் குழு

தற்போது உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆதரவாக 142 அடி வரை தண்ணீரைத் தேக்க ஆணை பிறப்பித்து உள்ளது. எனினும் இந்த ஆணை யை நிறைவேற்றக் கேரள அரசு மறுத்து வருகிறது.

இவ்வாறு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த தைத் தொடர்ந்து கேரளச் சட்டமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு சட்டம் இயற்றப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உச்சநீதி மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுத்த கேரளத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இச்சிக்கலைத் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் கொண்டு செல்லும் வகைகளில் உச்சநீதிமன்றம் ஆய்வுக்குழுவொன்றை அமைத்துள்ளது.

ஆனால், தமிழ்நாட்டு அரசோ, ஆளும் கட்சியி னரோ, பிற அரசியல் கட்சிகளோ தமிழரின் ஆற்று நீர் உரிமைகள் பறிபோவதைக் கண்டும் காணாமல் உள்ளனர்.

மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள்

தமிழ்நாட்டில் இருந்து பல ஆறுகள் கேரளத்தை நோக்கிப் பாய்கின்றன. இந்த ஆறுகளின் மூலம் 3073.7 மில்லியன் கனமீட்டர் நீர் தமிழகத்திற்குக் கிடைக்கிறது.

மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைத் தமிழகத்தை நோக்கித் திருப்புவதற்கான பல திட்டங்கள் இருந்தும் அவை நீண்டகாலமாக நிறைவேறாமல் உள்ளன. கேரள அரசின் அடாவடித்தனமும் நடுவண் அரசின் மாற்றாந் தாய்ப் போக்கும் மட்டுமின்றி, தமிழக ஆட்சியாளர்களின் கவலையற்ற போக்கும் இதற்குக் காரணமாகும்.

ஆண்டுதோறும் கேரளத்தில் 2500 டி.எம்.சி. நீர் எவ்விதப் பயன்பாடுமின்றிக் கடலில் கலக்கிறது. இந்த நீரைப் பயன்படுத்துவதற்கான நிலங்கள் கேரளத்தில் இல்லை. இந்நிலையில், இந்த 2500 டி.எம்.சி.யில் 2000 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குத் கொடுத்தாலே தமிழ்நாட்டின் தண்ணீர்த் தேவை முற்றிலும் நிறை வேறிடும்.

எனினும், கேரளத்தை ஆளுகிற காங்கிரசுக் கட்சியும் சரி, மார்க்சியக் கட்சியும் சரி, தமிழகத்திற்கு எதிராகவே நடந்து வருகின்றன. இவர்களது இந்திய தேசியத்தில் தமிழ்நாடு இல்லையென இவர்கள் கருதுவதாகவே தோன்றுகிறது.

பாழாகும் பாலாறு

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திற்கு வளம் சேர்க்கின்ற பாலாறு, கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் 4762 அடி உயரமுள்ள சென்னகேசவ மலைத்தொடரில் உற்பத்தியாகிறது. இம்மலைத் தொடரில் இருந்துதான் வடபெண்ணை மற்றும் தென்பெண் ணை ஆறுகளும் உற்பத்தியாகின்றன.

பாலாறு கர்நாடகத்தில் 82 கி.மீ. பயணம் செய்து ஆந்திரத்தை அடைகிறது. தமிழகத்தின் எல்லையான வேலூர் மாவட்டம், புள்ளூர் என்ற இடத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழைகிறது. தமிழ்நாட்டில் 242 கி.மீ. தூரம் பயணம் செய்து, காஞ்சிபுரம் மாவட்டம், சதுரங்கப்பட்டினம் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது.

ஆண்டுதோறும் மழைப்பொழிவினால் மட்டும் பாலாற்றில் 2173.32 மில்லியன் க.மீ. தண்ணீர் கிடைக்கிறது. இது தமிழ்நாட்டின் மொத்த நீர் வளத்தில் 06.08 சதவிகிதம் ஆகும். பாலாற்றின் அகலம் 1 கி.மீ. முதல் 2 கி.மீ. வரை உள்ளது.

பாலாற்றுப் படுகையின் மொத்த நிலப்பரப்பு தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 10 விழுக்காட்டைவிட அதிகமாகும். திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் இதன் மூலம் பயனடைகின்றன. பாலாற்றுப் படுகையின் மொத்தப் பரப்பு 18,300 ச.கி.மீ. ஆகும். இதில் தமிழகத்தில் சுமார் 11,000 ச.கி.மீ. உள்ளது.

பாலாற்றின் துணை ஆறுகள்

கமண்டல ஆறு, நாகநதி ஆறு, பொன்னையாறு, வெள்ளையாறு, வாசுகியாறு, செய்யாறு என்பன பாலாற்றின் துணை ஆறுகளாகும்.

பாலாற்றுப் படுகையில் 2,40,000 கிணறுகள் உள்ளன. 2,11,000 கிணறுகள் பாசனத்திற்குப் பயன் பட்டு வருகின்றன. மேலும் 8 டி.எம்.சி. கொள்ளளவு உள்ள இரண்டு நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றி லிருந்து 606 ஆற்றுக் கால்வாய்கள் மூலம் 661 ஏரிகளுக்குத் தண்ணீர் செல்கிறது. மொத்தத்தில் 363 டி.எம்.சி. தண்ணீர் பாலாற்றின் மூலம் கிடைக்கின்றது.

தமிழ்நாட்டின் வளம்மிக்க ஆறுகளில் ஒன்றான பாலாறு, மணற்கொள்ளையாலும் ஆந்திர மாநிலத்தின் ஆக்கிரமிப்பாலும் தொழிற்சாலைக் கழிவுகளாலும் அழிந்து வருகிறது.

தோல் தொழிற்சாலைக் கழிவுகள்

வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகள் அதிக அளவில் திடக்கழிவுகளை வெளியேற்று கின்றன. 100 கிலோ தோல் பதனிடப்பட்ட பின்னர் 20 கிலோவாகக் குறைக்கப்படுகிறது. மீதமுள்ள 80 கிலோ திடக்கழிவாக வெளியேறுகிறது. மேலும் இரசாயனக் கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன.

வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் கரையைச் சுற்றிலும் சுமார் ஆயிரம் தோல் தொழிற்சாலைகள் உள்ளன. சராசரியாக ஒரு ஆண்டுக்கு 13.5 மில்லி யன் கி.மீ. கழிவு நீர் பாலாற்றில் விடப்படுகிறது. இதனால் இராணிப்பேட்டை, குடியாத்தம், ஆம்பூர் போன்ற பகுதிகளில் வேளாண்மை முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீரும் மாசடைந்துவிட்ட தால் குடிநீர்த் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது.

ஆந்திரம் அணை கட்டுகிறது

ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் பாலாற்றின் குறுக்கே 30 தடுப்பணைகள் கட்டியுள்ளன. இதில் 28 தடுப்பணைகள் ஆந்திர அரசால் கட்டப்பட்டவை. ஆந்திர அரசு புதிதாகக் கட்டவுள்ள அணைக்காக ரூ.275 கோடி செலவிடப்படவுள்ளது. அணையின் நீளம் 506 மீ. உயரம் 35 மீ. 1892ஆம் ஆண்டின் உடன்பாட்டின் படி ஆந்திர அரசு இது குறித்துத் தமிழக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆந்திராவில் தொழில்பேட்டை அமைப்பதற்காக இந்த அணை கட்டப்படவுள்ளது.

மைசூர் அரசும், சென்னை அரசும் 1892ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, ஆந்திர அரசு எடுக்கின்ற எந்த ஒரு நடவடிக்கையும் பாலாற்றின் கீழ்ப்பகுதியில் இருக்கின்ற தமிழகத்தின் நலனைப் பாதிக்குமாயின், அது குறித்து ஆந்திர அரசு தமிழக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும் தனக்குப் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் ஆந்திர அரசின் நடவடிக்கையைத் தமிழக அரசு எதிர்க்கலாம். தமிழக அரசின் அனுமதி பெற்றே பாலாற்றின் மேல்புறத்தில் உள்ள ஆந்திர, கர்நாடக அரசுகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டும். ஆனால் தமிழக அரசுக்கு எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமல் 30 தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இதனைத் தமிழ்நாட்டை ஆண்ட தலைவர்கள் கண்டுகொள்ள வில்லை என்பதுதான் உண்மை நிலை.

காவிரி, முல்லைப் பெரியாறு போலவே பாலாற் றையும் தமிழகம் இழந்து வருவது, இந்திய மற்றும் தமிழக அரசுகளின் பொறுப்பற்ற போக்கின் விளை வுகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் விழி மூடி மௌனித்துக் கிடப்பதன் எதிர் விளைவுதான்.

காவிரி ஆற்றுநீர்ச் சிக்கல்

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள சுமார் 2.6 கோடிப் பேர் நேரிடையாகக் காவிரியால் பயன்பெறுகின்றனர்.

காவிரிக்கான தமிழக உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்திலும் நடுவர் மன்றத்திலும் நடைபெறும் வழக்குகள் முடிவு பெறாமல் தொடர்கதையாக நீண்டு செல்கின்றன.

சென்னை அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடை யில் காவிரி நீரைப் பயன்படுத்திக் கொள்வது தொடர் பாக 1892ஆம் ஆண்டு ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகள் வருமாறு :

1892ஆம் ஆண்டு உடன்பாட்டின் முக்கிய கூறுகள்

1. முதலில் 11 டி.எம்.சி. கொள்ளளவுக்கான உயரமும் பிற்காலத்தில் அனுமதி கிடைத்தால் 41 டி.எம்.சி. நீரைத் தேக்குவதற்கும் வசதியாக அகலமான அடித் தளம் அமைப்பது.

2. இவ்வாறு அகலமான அடித்தளம் அமைத்ததைக் காரணம் காட்டி பிற்காலத்தில் பெரிய அளவில் நீரைத் தேக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவ தில்லை.

மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் சென்னை அரசு அனுமதியளித்தது. மைசூர் அரசு 1911ல் தனது அணைக்கட்டு வேலைகளைத் தொடங் கியது. மைசூர் அரசு தனது உறுதிமொழிகளை மீறத்தொடங்கியது. இதன் விளைவாக இரு அரசு களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.

1914-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட ஹென்றி கிரிஃபின் தீர்ப்பை எதிர்த்து சென்னை அரசு இந்திய அரசிடம் மேல்முறையீடு செய்தது. 1916ல் இத்தீர்ப்பை இந்திய அரசு உறுதிப்படுத்தியதால் சென்னை அரசு இங்கிலாந்திலுள்ள இந்தியச் செயலருக்கு மீண்டும் மேல்முறையீடு செய்தது. இதனை இந்தியச் செயலர் ஏற்றுக்கொண்டார். எனினும் மைசூர் அரசுடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இப்பேச்சுவார்த்தை களின் விளைவாக 18.02.1924 ஓர் உடன்பாடு ஏற்பட்டது.

1924-ஆம் ஆண்டு உடன்பாட்டின் முக்கிய கூறுகள் :

1.93.50 டி.எம்.சி. கொள்ளளவு உள்ள மேட்டூர் அணையை அமைத்து அதன் மூலம் புதிதாக 3.01 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை சென்னை அரசு ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த உடன்பாடு கையெழுத்தாகி 50 ஆண்டுகளின் பின்னர் பிரிவு கள் 10(4) முதல் 10(7) விதிகளை மறுபரிசீலனை செய்து கொள்ளலாம்.

கிருஷ்ணராஜசாகர் நீர்த்தேக்கம் 1929ஆம் ஆண் டில் கட்டிமுடிக்கப்பட்டது. இதில் 44.827 மி. கனஅடி நீர்த்தேக்கலாம். 1934ஆம் ஆண்டு மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்டது. கீழ்ப் பவானி நீர்த் தேக்கமும் பவானி சாகர் நீர்த்தேக்கமும் கட்டப்பட்டன. 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது கர்நாடக மாநிலம் உருவானது. இதன் விளைவாகச் சிக்கல்கள் உருவாயின. பேச்சுவார்த்தைகளால் பலன் ஏற்படவில்லை. எனவே தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 1971இல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. வழக்குகளும் பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடை பெற்றன. இவற்றால் பயன் ஏற்படவில்லை. ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, யகாச்சி எனத் தொடர்ந்து கர்நாடகம் அணைகளைக் கட்டி சுமார் 25 இலட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் புதிதாகப் பாசன வசதியளித்தது.

இந்நிலையில் 02.06.1990இல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றம் அளித்த இடைக் காலத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும். எனினும் கர்நாடகம் தண்ணீர் தரத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் 05.02.2007 அன்று நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது.

இந்த இறுதித் தீர்ப்பின்படி பின்வரும் வகையில் காவிரி நீரைப் பங்கீடு செய்தது. ஆனால் இடைக் காலத் தீர்ப்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட்டிருந்த 205 டி.எம்.சி.க்கு பதிலாக 185 டி.எம்.சி.யே இறுதி தீர்ப்பில் வழங்கப்பட்டது. இது தமிழ்நாட்டுக்குப் பெரும் ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பாகும். நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட் டுள்ளது.

நதி நீர் உரிமைகளை மீட்டெடுப்போம்!

காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு ஆகியவற்றில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமையைப் பாதுகாக்கத் தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரசு, தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., கட்சிகளின் அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தமிழக மக்களும் அரசியல் கட்சி களும் தமிழை வளர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் அமைப்பு களும் ஒன்றுபட்டு நின்று தீவிரமான முயற்சிகளை முன்னெடுக்கவில்லை. இந்த நிலை மாற வேண்டும். மேற்கண்ட ஆற்றுநீர் உரிமைகளை மீட்கத் தமிழ் மக்கள் உறுதியாகக் குரல் எழுப்ப வேண்டும். போராட வேண்டும். தெலுங்கானாப் போராட்டங்களை முன் மாதிரியாகக் கொண்டு களத்தில் இறங்க வேண்டும்.

அதேவேளை, மேற்கு நோக்கிப் பாயும் ஆறு களைத் தமிழகம் நோக்கித் திருப்புவதற்கான முயற்சி களை முன்னெடுக்க வேண்டும்.

இவைதவிர, தொழிற்சாலைக் கழிவுகளால் ஆறுகளும், ஆற்றோரப் பகுதிகளும் நிலத்தடி நீரும் வேகமாக நச்சுத் தன்மையடைந்து வருகின்றன. அளவற்ற மணல் கொள்ளையால் நீர்ச் சேமிப்புத் திறன் மிகவும் குறைந்து, நிலத்தடி நீர்மட்டம் தாழ்ந்து வருகிறது. அதேபோல நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்கின்ற தனியார் நிறுவனங்கள் பெருகி வருகின்றன. இதனால் நீர் ஒரு வணிகப் பொருளாக மாற்றப்பட்டுவிட்டது. திருப்பூர் போன்ற மாநகரங்களின் குடிநீர் வழங்கல் பன்னாட்டுத் தனியார் நிறுவனங் களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளும் நமது ஆற்றுநீர் உரிமைகளைப் பறித்துவிட்டன. எனவே, தொழிற் சாலைக் கழிவுகள் ஆறுகளிலும் விளை நிலங்களிலும் விடப்படுவது தடுக்கப்பட வேண்டும். மணல் கொள்ளை முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். நீர் விற்பனை செய்வதையும், மாநகராட்சிகளில் நீர் வழங்கலும் தனியாரிடம் விடுவதை நிறுத்த வேண்டும்.

ஆக்கிரமிப்புகளால் அழிந்து வரும் ஆறுகளையும் ஏரி குளங்களையும் மீட்க வேண்டும். பெருந்தொகை யைச் செலவு செய்து கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை உருவாக்கித் தண்ணீரை உறிஞ்சியெடுப்பது நீண்ட காலத்திற்குப் பயன்தராது. நிலத்தடி நீர் வளத்தையே இது பாதிக்கும். இதற்குப் பதிலாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் முதலியவற்றைச் சீரமைத்து மழை நீரைப் பெருமளவில் சேமிக்க வேண்டும். ஏரி, குளங்களை அழித்துவிட்டு வீடுகளில் மழைநீரைச் சேமிக்கச் சொல்வதால் பயனில்லை. அனைத்து வழிகளிலும் மழை நீரைச் சேமிக்க வேண்டும்.

நம்மிடம் உள்ள நீர்வளத்தைப் பாதுகாப்பதும், அண்டை மாநிலங்கள் தரமறுக்கின்ற ஆற்றுநீர் உரிமைகளைப் பெறுவதும் நம்முன்னுள்ள இரண்டு முதன்மையான கடமைகளாகும்.

தமிழர்களே! தாமதம் வேண்டாம்! நீர் உரிமை களைக் காக்க வாருங்கள். அணிதிரள்வோம்! போராடுவோம்!

- வழக்கறிஞர் தமிழகன். மாநில அமைப்பாளர், நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு

Pin It