சங்கர பாண்டிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆனால் யார் மீது ஆத்திரம் கொள்வது என்று தெரியாத நிலையில் தன் மீதே கூட ஆத்திரப்பட்டான். சங்கரபாண்டியின் தந்தை அந்த ஊர்க் காவல் நிலையத்தின் ஆய்வாளர். அவர் கூட நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறி நழுவிவிட்டார். ஒரு சதைப் பிண்டம் கூட ஆத்திரம் கொண்டு துடித்து எழும்படியான கொடுமை நடந்து இருக்கிறது. ஆனால் அன்பு, ஆசை, கோபம், வீரம், வெட்கம், நகைச்சுவை, துயரம் என அத்தனை உணர்வுகளையும் கொண் டுள்ள மனிதர்களால் எப்படி இக்கொடுமையை எதிர்த்து எழாமல் இருக்க முடிகிறது?

கலாவும் மாலாவும் சங்கரபாண்டியுடன் ஒன்பதாம் வகுப்பு முதல் நன்றாகப் படிக்கும் சிநேகிதிகள். சங்கர பாண்டியை விட நன்றாகப் படிப்பவர்கள். சொல்லப் போனால் அந்தப் பள்ளியிலேயே கலாவும் மாலாவும் தான் முதன்மையான மாணவிகள். ஆரம்பத்தில் சங்கரபாண்டி தன் துடுக்குத்தனத்தினாலும், தன் தந்தை காவல் துறை ஆய்வாளர் என்ற மிதப்பிலும் சக மாணவிகளைக் கேலியும் கிண்டலும் செய்வதுமாக இருந்தான். கலாவும் மாலாவும் அவனுடைய குறிக்குத் தப்பவில்லை. ஆனால் கலாவிடமும் மாலாவிடமும் விசித்திரமான நல்ல குணம் இருந்தது. அவர்கள் சக மாணவர்களுக்குப் புரியாத பாடங்களை ஓய்வு நேரங்களில் சொல்லிக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களுடைய வீடுகள் ஒரு சேரியில் இருந்தன. போதாக்குறைக்கு இருவருடைய தந்தை மார்களும் குடிகாரர்கள். எனவே அவர்களால் வீட்டில் இருந்து படிப்பது இயலாத காரியம். ஆகவே விடுமுறை நாள்களில் பள்ளிக்கு வந்து தாழ்வாரங்களில் அமர்ந்து படித்துக் கொண்டு இருப்பார்கள். தங்கள் நண்பர்களுக் குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு அவர்களின் வீட்டிற்கே சென்று சொல்லிக் கொடுக்கவும் செய்வார்கள். இப்படிச் செய்வதால் மற்றவர்களும் அதிக மதிப் பெண்கள் பெற வாய்ப்பு ஏற்படும் என்றும், அது அவர் களுடைய தனித்தன்மையைக் குறைத்துக் காட்டிவிடும் என்றும் ஆகவே அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் “நன்றாகப் படிக்கும்” மற்ற மாணவ மாணவிகள் அவர்களை எச்சரிக்கை செய்தனர். ஆனால் மற்றவர் களுக்குக் கற்றுக்கொடுப்பதன் மூலம் தங்களுடைய கல்வி அறிவு மேலும் வலுப்படுகிறது என்று கூறி அவர் கள் தங்கள் சொந்த வழியில் சென்று கொண்டிருந்தனர்.

சங்கரபாண்டி இளம் பருவக் கோளாறு காரண மாக, பெண்களைக் கேலி பேசுவதும் கிண்டலடிப்பது மாக இருந்தான். அவனுடைய தந்தை காவல் துறை ஆய்வாளராக இருந்ததால், அவனிடம் தேவையின்றிப் பிரச்சினைகளை வளர்த்துக் கொள்ள விரும்பாமல் மற்றவர்கள் ஒதுங்கிச் சென்று கொண்டிருந்தார்கள். இச்சூழ்நிலையில் அவனால் படிப்பில் முழுக் கவனம் செலுத்த முடியாமல் குறைவான மதிப்பெண்கள் பெற்றுக் கொண்டு இருந்தான். அவனுடைய தந்தை எவ்வளவு அறிவுரை கூறியும் படிப்பில் முன்னேற்றம் வராததைக் கண்டு கோபம் கொண்டு அடிக்க ஆரம்பித்துவிட்டார்.

தந்தையிடம் அடிபட ஆரம்பித்தவுடன் சங்கர பாண்டிக்கு மனம் கஷ்டமாக இருந்தது. தந்தை தன்னை அடிப்பது பிறருக்குத் தெரிந்தால், பின் அவர்கள் தன்னு டைய துடுக்குத்தனத்தைப் பற்றிப் புகார் செய்துவிடு வார்கள் என்ற அச்சமும் ஏற்பட்டது. அவன் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் வேகத்தில் அவனால் ஈடுகொடுத்துச் செல்ல முடியவில்லை. பள்ளி நேரம் போக மீதி நேரங்களில் கலாவும் மாலாவும் மற்ற மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதை, சங்கரபாண்டியும் பயன்படுத்திக் கொண் டான். கலாவும் மாலாவும் மாணவர்களின் நிலையில் இருந்து கற்றுக்கொடுப்பதினாலும், இயற்கையிலேயே அறிவுக்கூர்மை மிக்கவர்களாக இருந்தாலும், சங்கர பாண்டியினால் படிப்பில் வெகு வேகமாக முன்னேற முடிந்தது.

மகனின் வியத்தகு முன்னேற்றத்திற்கான காரணத் தை அறிந்து கொண்ட தந்தை அவ்விரு மாணவி களையும் அழைத்துப் பாராட்டினார். அவர்களுடைய ஏழ்மை நிலையைத் தெரிந்து கொண்ட அவர், அவ்விரு மாணவிகளின் கல்விச் செலவு முழுவதையும் தானே மேற்கொள்வதாகவும், தான் எந்த ஊருக்கு மாற்ற லாகிப் போனாலும், தயங்காமல் வந்து உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறும் கூறினார்.

இப்பொழுது சங்கரபாண்டியிடம் பழைய துடுக்குத் தனம் இல்லை. கல்வியில் கவனம் செலுத்த ஆரம் பித்துவிட்டான். கலாவும் மாலாவும் சக மாணவிகளா கவே இருந்தாலும் அவர்களை மிகுந்த மரியாதைக்கு உரியவர்களாக நினைத்தான். ஒருமுறை அவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர்களாகப் பணியாற்றினால் மாணவர் சமூகம் மிகுந்த நன்மைகளைப் பெறும் என்று கூறினான். கலாவும் மாலாவும் வேறுவிதமாகப் பதில் கூறினார்கள்.

தாங்கள் மாணவர்களுக்கு ஆசிரியர்களாக இருப்ப தைவிட, மக்களுக்கு ஆசிரியர்களாக இருக்க விரும்பு வதாக இருவரும் கூறியது சங்கரபாண்டியை வியப் பில் ஆழ்த்தியது. “மக்களுக்கு ஆசிரியர்களாக இருப் பதா?” சங்கரபாண்டிக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“நீ அம்பேத்கரைப் பற்றிப் படித்திருக்கிறாயா?” கலா கேட்டாள்.

“ம்...ம்... தெரியும். ஆனால்... அவ்வளவாகப் படித்ததில்லை” என்று சங்கரபாண்டி பதிலளித்தான்.

“அவர் சட்டம், சமூகம், பொருளாதாரம், அரசியல், மதம் என்று அனைத்துத் துறைகளிலும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார். இருப்பினும் இந்திய மண் ணின் சாபக் கேடான-பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வை நிர்ணயிக்கும் சமூக முறையை மாற்றுவதில் தான் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார்” என்று மாலா கூறவும், “அதைப்போலத் தான் நாங்கள் இருக்க விரும்புகிறோம்” என்று கலா கூறி முடித்தாள்.

“எனக்கு ஒன்றுமே புரியவில்லையே!” சங்கர பாண்டி குழப்பத்துடன் நெளிந்தான்.

“சங்கரபாண்டி! நம் நாட்டில் திறமையை அடிப் படையாக வைத்து யாருக்கும் வேலை கிடைப் பதில்லை. அதிகாரம் உள்ள, ஊதியம் மிகுந்த, உடலு ழைப்புத் தேவைப்படாத வேலைகளை எல்லாம் பார்ப்பனர்களே அடைந்துவிடுகிறார்கள். அவர்களுக்குத் திறமை இல்லாவிட்டாலும் அப்படிப்பட்ட வேலை கிடைத்து வருகிறது” என்று மாலா கூறவும் “அதெப்படி? போட்டி யின் மூலமாகத்தானே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? திறமை இருந்தால் தானே போட்டியில் வெற்றி பெற முடியும்?” என்று சங்கரபாண்டி எதிர்வினா தொடுத்தான்.

“அப்படியா? சரி நான் ஒரு கேள்வி கேட்கிறேன். புத்திசாலிகள் பார்ப்பனர்களில் மட்டும்தான் உள்ள னரா? மற்ற சாதியினரிடத்தில் இல்லையா?” என்று கலா கேட்க, “அறிவுத்திறன் குறைந்தவர்கள் பார்ப்ப னர்களில் இல்லவே இல்லையா?” என்று மாலாவும் கேட்க, சங்கரபாண்டி சிறிது நேரம் பதில் சொல்ல முடியாமல் தத்தளித்தான். பின் சமாளித்துக் கொண்டு “எல்லாச் சாதியினரிலும் எல்லா நிலை அறிவுத் திறன் கொண்டவர்களும் இருக்கிறார்கள்” என்று கூறவும், “அப்படி என்றால் அனைத்து நிலை வேலைகளிலும் அனைத்துச் சாதியினரும் இருக்க வேண்டும் அல்லவா?” என கலாவும் மாலாவும் ஒரே குரலில் கேட்டனர். சங்கரபாண்டி குழப்பத்துடன் ஒன்றும் சொல்ல முடியாமல் இருந்தான். “சங்கரபாண்டி! உயர்நிலை வேலைகளில் 3 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட பார்ப்பனர்கள் 90 விழுக்காட்டுக்கும் மேல் நிரம்பி வழிகின்றனர். இது எப்படி முடிகிறது? மற்ற சாதியி னரில் அப்படிப்பட்ட வேலை பார்க்கும் திறமை உள்ளவர்கள் இல்லாமல் போய்விட்டார்களா?” என்று கலா கேட்கவும், “அவர்கள் போட்டியில் வெற்றி பெற்றுத்தானே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?” என்று மீண்டும் எதிர்வினா தொடுத்துப் பதில் கூறினான், சங்கரபாண்டி. உடனே கலாவும் “இதிலிருந்தே பொதுப் போட்டி முறை ஒரு கொடுமையான மோசடி என்று புரியவில்லையா?” என்று கேட்டாள். சங்கரபாண்டியோ என்ன பதில் சொல்வதென்று புரியாமல் விழித்தான்.

மாலா தொடர்ந்து “பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறாயா?” என்று கேட்கவும், அவனும் ஒப்புக் கொண்டு தலையசைத்தான். “அப்படிப்பட்ட திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலையைச் செய் கிறார்களா?” என்று கேட்கவும், மீண்டும் அவன் பதில் சொல்ல முடியாமல் விழித்தான். மாலா தொடர்ந்தாள். “பஞ்சமர்களாகிய எங்களுக்கும் சரி, சூத்திரர்களாகிய உங்களுக்கும் சரி, திறமை இருந்தாலும் உயர்நிலை வேலைகைள் கிடைக்காது. நமக்கும் அப்படிப்பட்ட வேலைகளைக் கொடுத்திருக்கிறோம் என்று ஊராருக்குக் காட்டுவதற்காக மிகச் சிலருக்கு இடமளிப்பார்கள். அந்த மிகச் சிலரும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாதபடி கட்டுக்குள் வைத்துக் கொள்ளப் படுவார்கள். இதையெல்லாம் புரிந்து கொண்டுள்ள தால் இதற்கு எதிரான விழிப்புணர்வையும், பொதுக் கருத்தையும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டிய வேலைக்காக எங்களை அர்ப்பணித்துக் கொள்ளப் போகிறோம்.

நான் மக்கு மாதிரி இருந்தேன். இப்பொழுது நன்றாகப் படிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆகவே உங்களுக்கு இணையாகிவிட்டேன் என்று கற்பனை செய்து கொண்டு இருந்தேன். ஆனால் பள்ளிப் பாடங்களைத் தாண்டி இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளும் போது, எனக்கு மலைப்பாக இருக்கிறது. நான் என்றைக்குமே உங்களுக்கு இணையாக மாட்டேன் போலிருக்கிறது என்று சங்கரபாண்டி திக்கித் திக்கிக் கூறினான்.

‘சமூக விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் இவ்விஷயங்கள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்துவிடும்’. கலாவும் மாலாவும் ஒரே குரலில் கூறினார்கள்.

கலாவும் மாலாவும் பள்ளிப் பாடங்களில் மட்டு மல்லாது, சமுதாயக் கல்வியிலும் திறமைசாலிகளாக இருப்பதும், அதுமட்டுமல்லாமல் சக மாணவ மாணவிகளுக்கு, சமூகப் பிரச்சனைகளின் வேர்களை எளிமையாகவும், தெளிவாகவும் எடுத்துக்காட்டி சமூக உணர்வு பெற வைப்பதைப் பார்ப்பன ஆசிரியர்களும் ஆசிரியைகளும் கவனித்து வந்தனர். மேலும் பிற் படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்டவர்களும் ஒற்று மையாக இருந்து பார்ப்பனர்களை எதிர்த்தால்தான் சமூகக் கொடுமைகளை ஒழிக்க முடியும் என்பதில் தெளிவாக இவர்கள் இருப்பதும், அதற்கான விழிப் புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருப்பதும் ஆசிரியர் களுக்கு மிகுந்த ஆத்திரத்தை மூட்டியது. இவர்களை இப்படியே வளரவிட்டால் இரு “பெண் அம்பேத்கர்கள்” உருவாகிவிடுவார்கள் என்றும் அஞ்சினர். ஒரு அம்பேத்கரைச் சமாளிப்பதற்கு, சென்ற தலைமுறை யினர் பட்ட கஷ்டமும், அவர்களால் விழிப்புணர்வு பெற்ற தாழ்த்தப்பட் மக்களின் போராட்டத்தினால் இன்றைய நம் தலைமுறையினர் படும் கஷ்டமும் போதும் என்றும்-எப்படியும் இப்பெண்களின் ஆளுமை வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த அதிர்ச்சி வைத்தியம் செய் தாக வேண்டும் என்றும் சதித்திட்டம் தீட்டினார்கள்.

கலாவும் மாலாவும் பள்ளிக் கல்வியையும், சமூகக் கல்வியையும் தம் சக மாணவ மாணவிகளுக்கு அளிக்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தபோது பார்ப்பன ஆசிரியர்களின் சதித்திட்டம் திரைமறைவில் நடந்து கொண்டு இருந்தது.

காலம் தன்னுடைய வேகத்தில் சுழன்று கொண்டு இருந்தது. கலாவும் மாலாவும் +2 தேர்விற்குத் தங் களையும் சக மாணவ, மாணவிகளையும் ஆயத்தப் படுத்திக் கொண்டு இருந்தார்கள். தேர்வும் வந்தது. தேர்வு நாளன்று மேற்பார்வை செய்வதற்காக வெளியில் இருந்தும் ஆசிரியர்கள் வந்திருந்தார்கள். அவர்களுள் பிரீத்தி சர்மா, ரேஷ்மா சோனியா என்று இரு பார்ப்பன ஆசிரியைகள் கலா, மாலா தேர்வு எழுதும் அறைக்கு மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தார்கள்.

அவர்கள் மாணவ, மாணவிகள் தங்களிடம் விடை யெழுதிய தாள்களை மறைத்து வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்தார்கள். அச்சோதனை கலா, மாலாவைப் பொறுத்தமட்டில் கொடூரமாக இருந்தது. சாதாரண முறையில் சோதனை செய்த பொழுது ஒரு துண்டுத் தாளும் கிடைக்காமல் போக, அவர்களுடைய உடையைக் கழற்றும்படி கூறினார்கள். கலாவும் மாலாவும் மறுக்கவே பிரீத்தி சர்மாவும், ரேஷ்மா சோனியாவும் வலுக்கட்டாயமாக உடைகளைக் கழட்ட ஆரம்பித்தார்கள். கலாவும் மாலாவும் கதறி அழுது தங்களிடம் துண்டுத் தாள்கள் ஏதும் இல்லை என்றும், அப்படியே உடைகளைக் களைந்து சோதனை செய்ய விரும்பினால் தனியறையில் செய்யும்படியும் தேர்வு அறையில் சக மாணவர்கள் பலர் உள்ளனர் என்றும் ஆண்களுக்கு முன்னால் பெண்களை நிர்வாணப்படுத் துவது சரியல்ல என்றும் கெஞ்சினார்கள். ஆனால் கலா, மாலா இருவரின் ஆளுமை வளர்ச்சியில் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியே தீரவேண்டும் என்ற வெறியுடன் இருந்த பிரீத்தி சர்மாவும், ரேஷ்மா சோனியாவும் அதற்கு இணங்காமல் அத்தேர்வு அறையிலேயே பல ஆண்களுக்கு முன்னால் வலுக் கட்டாயமாக உடைகளைக் களைந்து நிர்வாணமாக நிற்க வைத்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொண் டிருந்த சங்கரபாண்டி ஆத்திரம் தாங்க முடியாமல் கத்தினான். ஆனால் அவ்வாசிரியைகள் அவனை அமைதியாக இருக்கும்படியும், மீறி கலாட்டா செய்தால் அவன்தான் அப்பெண்களை நிர்வாணப்படுத்தினான் என்று புகார் கொடுத்துவிடுவதாகவும் மிரட்டினார்கள். பின் சோதனை முடிந்துவிட்டது என்றும் உடைகளைப் போட்டுக் கொண்டு தேர்வு எழுதலாம் என்றும் கூறிவிட்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்கள்.

கலாவும் மாலாவும் உடைகளைப் போட்டுக் கொண்டார்கள். அவர்களிடம் தேர்வு எழுதும் மனநிலை போய்விட்டது. உடனே வீடு திரும்பிவிட்டார்கள். வீட்டில் குடிகாரத் தந்தைகளிடம் கூறி அவர்களுக்குப் புரிய வைக்க இரண்டு நாள்கள் ஆயிற்று. பின் கல்வித் துறையினரிடம் புகார் அளிக்க, கல்வித் துறையினரும் அவ்வாசிரியைகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று காரணம் கேட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பினர். ஆனால் அவ்வாசிரியைகள் தங்கள் வேலையை விட்டு விடுவதாகக் கடிதத்தைச் சமர்ப் பித்துவிட்டார்கள். வேறொரு தனியார் பள்ளியில் இதைவிட அதிகமான சம்பளத்தில் அவர்களுக்கு வேலை கிடைத்துவிட்டது.

சங்கரபாண்டியினால் இந்நிகழ்வைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. காவல்துறை ஆய்வாளரான தன் தந்தையிடம் கூறி அவ்விரு ஆசிரியைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். எப்பேர்ப்பட்ட ரௌடிகளையும் அடித்துத் துவைக்கும் துணிச்சல் மிக்க தன் தந்தை பார்ப்பன ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கு வதைக் கண்டு அவன் வியப்படைந்தான். முதலில் அவர் புகார் மனு கிடைக்காமல் தன்னால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறினார். கலா மாலாவையும் அவர்களது பெற்றோர்களையும் அழைத்து வந்து புகார் கொடுக்க முனைந்தபோது, சாட்சிக்கு யாரும் இல்லையே என்று கூறினார். தான் சாட்சியாக இருப்பதாகக் கூறியதும், தன் மகன் என்பதால் அது செல்லாததாகிவிடும் என்றும், மேலும் தேர்வு எழுதாமல் செல்ல முடிவு எடுத்தவர்கள் உடைகளைக் களைய மறுத்தே சென்று இருக்கலாமே என்று வாதம் செய்தால் என்ன சொல்வது என்றும் கேட்டார். மொத்தத்தில் அவர் அந்தப் பார்ப்பன ஆசிரியை களுக்கு எதிரான புகாரைப் பதிவு செய்யத் தயாராக இல்லை என்பது சங்கரபாண்டிக்குத் தெளிவாக விளங்கியது.

சங்கரபாண்டிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அன்று இரவு உணவு உட்கொள்ளவில்லை. தன் னுடைய வாழ்வின் முக்கியமான திருப்பமுனையை ஏற்படுத்தியவர்கள், தந்தையாலேயே மிகவும் பாராட் டப்பட்டவர்கள், எவ்விதத் தவறும் புரியாமல் கொடூர மாகப் பாதிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் மீதான புகாரையும் பெற்றுக்கொள்ள மறுக்கும் தன்னுடைய தந்தையின் மீது கோபம் கொண்டான். அவனுடைய தந்தை இரவில் வீடு திரும்பிய உடன் கடுமையாகச் சண்டை போட்டான்.

அவனுடைய தந்தை விளக்கம் கூறினார். காவல் துறையினரின் நடவடிக்கைகள் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதுதான் இருக்கும் என்றும், பார்ப்பனர் மீது நடவடிக்கைகள் என்று இருந்தால் அவை கண் துடைப்பாகத்தான் இருக்கும் என்றும் கூறினார். சங்கரபாண்டிக்கு இது புத்தம் புதிய செய்தியாக இருந்தது. அவன் நம்ப முடியாமல் விழித்தான். அவர் மேலும் விளக்கிக் கூறினார். தன் உயரதிகாரியாக உள்ள உதவி ஆணையர் தன்னைவிடத் திறமையில் மிகமிகக் குறைவானவர் என்றும், பார்ப்பனர் என்பதால் அவர் ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுத் தனக்கு உயரதிகாரியாக இருப்பதாகவும், இதுதான் இந்நாட்டின் தலையெழுத்து என்றும் கூறினார்.

ஆனால் பார்ப்பனர்கள் வம்பு தும்புக்குப் போகாத அப்பாவிகள் என்றும், இடஒதுக்கீட்டால் திறமையுள்ள பார்ப்பனர்கள் கூட உரிய பங்கைப் பெறாமல் இருப்பதாகவும், பிரச்சாரம் செய்யப்படுகிறதே என்று அப்பாவித்தனமாகக் கேட்டான். அதைப் பற்றியெல்லாம் தனக்குத் தெரியாது என்றும், ஆனால் பார்ப்பனர் களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்று மட்டும் தனக்குத் தெரியும் என்றும், மீறி ஏதாவது செய்தால் நிம்மதியாக வேலை செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

இதைக் கேட்ட சங்கரபாண்டிக்கு ஆத்திரம் ஆத்திர மாக வந்தது. ஆனால் யார் மீது ஆத்திரம் கொள்வது என்று தெரியாமல் தத்தளித்தான். அவனுக்குத் தன் மீதே கூட, ஆத்திரம் வந்தது.

(இச்சிறுகதை அதீதமான கற்பனையில் தோன்றியது அல்ல; மத்தியப்பிரதேசத்தில் 15.3.2012 அன்று நடந்த உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது)

Pin It