“பெரியார் சமஉரிமைக் கழகம்” என்ற பெயரில் 08.08.1976இல் தொடங்கப்பட்ட இயக்கம் தான், 1988 மார்ச்சு முதற்கொண்டு, “மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி” என்னும் பெயரில் இயங்குகிறது.

தந்தை பெரியார் 1919இலேயே வரித்துக் கொண்ட வகுப்புவாரி உரிமைக் கொள்கைக்கு, 1927 முதல் அவரே பாதுகாவலராக விளங்கினார். அதற்கான இறுதி வடிவத்தை 1934இல் அளித்தார். பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் மாநில அரசு வேலையிலும் கல்வியிலும்; மய்ய அரசு வேலையிலும் கல்வியிலும் அவரவர் விகிதாசாரப்படி இடஒதுக்கீடு பெற்றே தீரவேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.

அவர் அளித்த ஆதரவினால்தான், சுயேச்சை அமைச்சரவையில் ஓர் அமைச்சராக இருந்த (1927-1929) எஸ். முத்தய்யா முதலியார், சென்னை மாகாண அரசில், 100 விழுக்காடு இடங்களையும் பிரித்து 5 வகுப்பினருக்கும் வழங்கினார்.

1932இல் பொப்பிலி அரசர் சென்னை மாகாண முதல்வரானார். பனகல் அரசருக்கு ஒப்பாக அவர் செயல்பட்டார். ஈ.வெ.ரா. அவரைத் தூண்டிவிட்டு, இந்தியா முழுவதிலும் உள்ள சிறுபான்மை மதத்தினருக்கு 1934இல் மத்திய அரசு வேலையில் விகிதாசார ஒதுக்கீடு தந்தது போல, சென்னை மாகாண எல்லைக்குள் இயங்கும் எல்லா மத்திய அரசுத் துறை வேலைகளிலும் - பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார், ஆதித்திராவிடர் ஆகிய மூன்று வகுப்பினருக்கும், தனித்தனி இடஒதுக்கீடு தரவேண்டும் எனக்கோரி, 1935இல் அதைப் பெற்றுத்தந்தார். அப்படி அவர்கள் இடஒதுக்கீடு பெற்றிட ஒரு கருவியாகப் பயன்பட்டவர் மேதை சர். ஏ. இராமசாமி ஆவார். ஆனால் வெள்ளையன் வெளியேறியவுடன், இந்த மத்திய அரசு இடஒதுக்கீடு, பார்ப்பன-பனியா அரசினரால் 1947 அக்டோபரில் திரும்பப் பெறப்பட்டது.

சென்னை மாகாண வேலையிலும் கல்வியிலும் முதன்முதலாகப் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு 1947 இறுதியில், தனி ஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் தந்தை பெரியாரே ஆவார். அன்று 14 விழுக்காடு ஒதுக்கீடு தரப்பட்டது. இதனால் ஆறு வகுப்புகளுக்கும் 100 இடங்களும் பிரித்துத் தரப்பட்டன.

இந்திய அரசமைப்புச் சட்டம், கல்வியில் இடஒதுக்கீடு தருவதற்காக வேண்டி, 2.6.1951இல் முதன்முதலாகத் திருத்தப்பட்டது. எனவே, 18.6.1951 முதல் சென்னை மாகாணத்தில் - இந்து மற்றும் சிறுபான்மை மதத்தினரிலுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு 25 விழுக்காடு ஒதுக்கீடு; ஆதித்திராவிடருக்கு 15 விழுக்காடு ஒதுக்கீடு என்ற கேடான ஆணை காங்கிரசு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. மொத்த இடஒதுக்கீட்டின் அளவே வெறும் 40 விழுக்காடு என ஆக்கப்பட்டது. பெரியாரால் இந்த அநீதியை ஓரளவுக்கே களைய முடிந்தது. 1969இல் பெரியார் முன் வைத்த கோரிக்கையின்படி 1971இல், தி.மு.க. அரசு, சட்டநாதன் பரிந்துரைப்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு 25 விழுக்காடு என்பதை 31 விழுக்காடாகவும்; தாழ்த்தப்பட்டோருக்கு 16 விழுக்காடு என்பதை 18 விழுக்காடாகவும் உயர்த்தித் தந்தது.

இந்த இடைக்காலத்தில், நம் கட்சியின் சார்பில், நாம் தான், மத்திய அரசு வேலையிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி இடஒதுக்கீடு வேண்டும்; பெரியாரின் வேலைத் திட்டங்களுள் இந்த ஒன்றை யேனும் நாம் வென்றெடுக்க வேண்டும் என 1976இல் முடிவெடுத்தோம்.

இது கருதி, 1978 ஏப்பிரல் 29 முதல் புதுதில்லியில் தங்கினோம்; மத்திய அமைச்சர்களுடனும், நாடாளு மன்ற உறுப்பினர்களுடனும் 6.5.1978 வரை விவாதித் தோம். 8.5.1978இல், அதிகாரப்பூர்வமாக, இந்தியக் குடிஅரசுத் தலைவர் என். சஞ்சீவரெட்டியிடம் கோரிக்கை விண்ணப்பத்தை அளித்தோம்; ஒரு மணி நேரம் அவருடன் விரிவாக விவாதித்தோம். இதனை முதன் முதலாகத் தொடங்கி வைத்தவர்கள் மார்க்சியப் பெரி யாரியப் பொதுவுடைமைக் கட்சியினராகிய நாம் தான் என்பதை - நம் தோழர்களும் தமிழ்ப் பெருமக்களும் எண்ணி எண்ணிப் பெருமிதம் அடையலாம்.

இடஒதுக்கீட்டின் இறுதி இலக்கு, 100 விழுக்காடு இடங்களையும் - எல்லா வகுப்புகளுக்கும் அவரவர் விகிதாசாரப்படி அரசு பங்கிட்டு அளிப்பதே ஆகும். இதை அடைந்தே தீருவது என உறுதிகொண்ட நாம், 9.9.2011 நாளிட்டு இந்தியத் தலைமை அமைச்சருக் கும் மற்றைய மத்திய அமைச்சர்களுக்கும் பின்கண்ட வடிவிலான கோரிக்கை கொண்ட விண்ணப்பத்தை விடுத்தோம். இது “Periyar Era” ஆங்கில இதழிலும், “சிந்தனையாளன்” தமிழ் இதழிலும் முழுவதுமாக நவம்பரில் வெளியிடப் பட்டுள்ளது.

இவ்விரண்டு ஏடுகளையும் நீங்கள் பல தடவை படியுங்கள்; அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாண வர்கள், தமிழ்ப் பெருமக்கள் பார்வைக்கு உடனே இவற்றைக்கொண்டு செல்லுங்கள். தயக்கப்படாமல் எல்லோரிடமும் பொருளுதவி, உடலுழைப்பு கேளுங்கள்.

நம் கோரிக்கை என்ன?

*      மய்ய அரசு, மாநில அரசு

       வேலைகளிலும், கல்வியிலும் :

1.     இந்து மேல்சாதியினர் மற்றும் சிறுபான்மை மதத்தில் உள்ள மேல்தட்டு வகுப்பினர் - 17.5%

2.     இந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இஸ்லாம், கிறித்துவ, சீக்கிய-சமண, பவுத்த பிற்படுத்தப்பட்டோர் - 58%

3.     பட்டியல் வகுப்பினர்   17%

4.     பட்டியல் பழங்குடியினர்     7.5%

              -----------

              ஆக 100 %

              -----------

எனப் பிரித்து அளிக்க வேண்டும் என்பதே ஆகும். இதை எல்லோருக்கும் புரிய வையுங்கள்.

நம் கட்சியின் முயற்சியினால் மட்டுமே, தமிழகத் தில், தந்தை பெரியார் காலத்தில் பிற்படுத்தப்பட்டோ ருக்குக் கிடைத்த 31 விழுக்காடு என்பதை, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 50 விழுக்காடாக 1.2.1980இல் உயர்த்திப் பெற்றோம் என்பதை ஊரார்க்கெல்லாம் உரத்தகுரலில் எடுத்துக் கூறுங்கள்.

இதேபோல், மத்திய அரசிலும், நாம் தொடர்ந்து போராடி, உரிய ஒதுக்கீடு பெற முடியும் என்ற நம்பிக் கையை ஒடுக்கப்பட்டோர் நெஞ்சங்களில் ஆழமாக ஊன்றுங்கள்.

இந்த இடைக்கால வேலைத் திட்டத்தை வென்றெ டுத்துவிட்டால், அத்துடன் நம்பணி முடிந்துவிடுமா? முடியாது; முடியாது. ஏன்?

1947இல் இந்தியாவுக்கு வந்த விடுதலை என்பது இன்னமும் வெகுமக்களுக்கு ஆனதாக இல்லை.

வெள்ளையன் காலத்திலேயே “திராவிட நாடு” என்கிற கோட்பாட்டை 1917இல் அறிவித்தவர், மேதை டாக்டர் டி.எம். நாயர் ஆவார்.

அதனை அடுத்து, அன்றைய மாநிலங்கள் அவை யில் தமிழ் மாகாணத்தைத் தனியே பிரித்து விடுங்கள் என்று கோரி, சர். சி. சங்கரன் நாயர், பி.சி. தேசிகாச் சாரி இருவரும் 1926 பிப்பிரவரியில் தீர்மான வடிவில் முன்மொழிந்தனர். அது 15.3.1926இல் வாக்கெடுப் பில் தோற்றுவிட்டது.

அடுத்து 1931 திசம்பரில் மாநிலங்கள் அவையில் மீண்டும் அதே தீர்மானத்தைச் சங்கரன் நாயர் முன் வைத்தார். இதற்கு ஆதரவாக சங்கரன் நாயர் உள் ளிட்ட நால்வர் மட்டுமே வாக்களித்தனர்; 16 பேர் எதிராக வாக்களித்தனர்.

இரண்டு தடவைகள் “தமிழ் மாகாணம்” தில்லி ஆதிக் கத்திலிருந்து பிரிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானங் களை முன்மொழிந்தனர். இரண்டு தடவைகளிலும் அத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

அவர்கள் எல்லோரும் முன்வைத்தது தனிச் சுதந்தர திராவிட நாடா? இல்லை. தனித்தமிழ்நாடா? இல்லை.

தில்லிக்காரனிடம்-பார்ப்பன, பனியாவிடம் இருந்து விடுபட்டு, நேரடியாக வெள்ளையன் ஆட்சியின்கீழ் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.

இந்தச் சிந்தனையை உள்வாங்கிக் கொண்ட, ஈ.வெ.ரா., முதன்முதலாக, 1.6.1930இல் சேலத்தில், வன்னியர் மாநாட்டில், “இந்தியா ஒரு நேஷனா? இந்தியா, பல நேஷன்களைக் கொண்ட ஒரு பெரிய நேஷன்” என்னும் கருத்தை வெளிப்படுத்தினார். அடுத்து, வெள்ளையன் காலத்திலேயே ஆச்சாரியார் ஆட்சியால், 1937இல் திணிக்கப்பட்ட கட்டாய இந்தி எதிர்ப்புப் பரப்புரைப் படையை 13.9.1938இல் சென்னை கடற்கரையில் மக்கள் வரவேற்ற போது “தமிழ்நாடு தமிழருக்கே!” என்னும் முழக்கத்தை எழுப்பினார். ஈ.வெ.ரா. கட லெனத் திரண்டிருந்த மக்கள், கடல் அலையை மிஞ்சும் வண்ணம் ஆர்ப்பரித்தனர். அவரே “திராவிட நாடு திராவிடருக்கே” என 1939 முதல் முழங்கினார். அதைத் தமிழ்நாடெங்கும் சென்று அவரும், பல்லாயிரக்கணக் கான தொண்டர்களும் 1944 வரை முழங்கினர்.

30.4.1942இல் தந்தை பெரியார் கிரிப்ஸ் தூதுக் குழுவின் முன்வைத்த கோரிக்கை - “தனிச் சுதந்தரத் திராவிட நாடு” கோரிக்கையா? இல்லை. ஏற்கெனவே தில்லி மாநிலங்கள் அவையில் மற்றவர்கள் கோரிய படி, தில்லி ஆதிக்கத்திலிருந்து திராவிட நாட்டை அறுத்துக் கொள்வதுமட்டும்தான், அவருடைய கோரிக்கை.

அதனை, வேவல் திட்டம், 1945இல் அடியோடு ஏற்க மறுத்துவிட்டது.

அப்போதுதான், அடிக்கப்பட்ட பந்து வானை நோக்கி உயரே உயரே உயருவது போல - அடிபட்ட அரிமா சீறி எழுவதுபோல - “வெள்ளையன் உள்ளிட்ட எல்லா அந்நிய ஆதிக்கத்திலிருந்தும் முற்றிலுமாக விடுபட்ட தனிச் சுதந்தர திராவிட நாடு வேண்டும்” என, 30.9.1945இல் திருச்சி மாநாட்டில் தீர்மானம் மூலம் பெரியார் அறிவித்தார். அது தெளிவான நாட்டுப் பிரி வினைக் கோரிக்கையாகும். அதை நோக்கி அவர் போராடினார். ஆனால், மற்ற திராவிட மொழி மாநி லங்களில் இதற்கு ஆதரவு தேடப்படவில்லை.

இந்தப் பிரிவினைக் கோரிக்கையை அப்படியே வரித்துக் கொண்ட தி.மு.க., 1963இல் அக்கோரிக் கையைக் கைவிட்டுவிட்டது - அரசியல் அவைகளில் பதவிகளைப் பெற வேண்டும் என்பதற்காக.

தந்தை பெரியார் தந்த பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு, இந்திய ஒருமைப்பாட்டை ஏற்று, இந்திராகாந்தியின் அவசர நிலை ஆட்சிக் காலத்தில், திராவிடர் கழகம் தீர்மானம் நிறைவேற்றிவிட்டது.

ஆயினும் இன்றும் நாகாலாந்து, மணிப்புரி, மீசோரம், ஜம்மு-காஷ்மீர் மக்கள் தனி நாடு கேட்டுப் போராடு கின்றனர். தமிழ்நாட்டிலும் “தனிச் சுதந்தரத் தமிழ்நாடு” கோரிப் பாடுபடும் இயக்கங்கள் 2011இலும் உள்ளன.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியி னரான நாம் தனிநாடு கோருவதை மேற்கொள்ளாமல் - “இந்தியாவில், சமதர்ம, மதச்சார்பற்ற - மொழிவழித் தன்னாட்சிகள் அமையப்பாடுபடுவோம்; அத்தன்னாட் சிகள் விரும்பி இணைந்த ஓர் உண்மையான கூட் டாட்சியை இந்தியாவில் நிறுவுவோம்” என்பதை மட்டுமே நம் இறுதி அரசியல் குறிக்கோளாகக் கொண்டு நாம் இயங்கி வருகிறோம்.

நாம், “தன்னாட்சி” என்பது எதை?

1.     கூட்டாட்சிக்கான படை

2. கூட்டாட்சிக்கான ஒரே நாணயம்

3.     பொதுவான செய்திப் போக்குவரத்து

ஆகிய மூன்று அதிகாரங்கள் தவிர்த்த மற்றெல்லா அதிகாரங்களும் தமிழர்க்கு - தமிழ்நாட்டுக்கு முற்றதிகாரங்களாக (Sovereign Powers) இருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் இத்தகைய தன்னாட்சி அதி காரங்கள் வேண்டும்; தன்னாட்சி பெற்ற ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி அரசமைப்புச் சட்டம் வேண்டும்; தனிக்கொடி வேண்டும்; பிராந்திய இராணுவம் வைத் துக் கொள்ள உரிமை வேண்டும்; தனிக் குடிஉரிமை வேண்டும். “நான் தமிழன் என்பது எனக்குள்ள முதலாவது குடியுரிமை;” சில துறைகளில் இந்தியக் கூட்டாட்சியின் அதிகாரங்களை ஏற்றுக்கொண்டிருப்ப தால், நான் இரண்டாவதாக இந்தியக் குடியுரிமை என்பதைப் பெறவும் தகுதியுடையவன்.

இத்தகைய இறுதி அரசியல் இலக்கு பற்றி மா.பெ.பொ.க. வினரும், தமிழ்நாட்டாரும் மட்டும் புரிந்து கொண்டால் போதுமா? போதாது.

குறைந்த அளவில், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத - இந்தி பேசப்படாத எல்லா மொழி மாநி லங்களுக்கும் சென்று இக்கோரிக்கையை விளக்கி, அவரவர் பேசும் மொழியில் நாம் பரப்புரையை மேற் கொள்ள வேண்டும்.

இடஒதுக்கீடு பற்றி, 1978இல் மூன்று மொழிகளில் அறிக்கை அச்சிட்டு எடுத்துச் சென்றோம். 1995இல் எட்டுப் பேர் கொண்ட நம் குழுவினர், ஏழு மொழி களில் அறிக்கைகளை வெளியிட்டு, தில்லியில் உள்ள அந்தந்த மொழிக்கான அரசு விருந்தினர் இல்லங்களில் நேரில் நாமே வழங்கினோம்.

நாம் துறவிகள் போல் மிகச் சிலரேனும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். எல்லா மொழி மக்களிடமும் சென்று நம் அரசியல் குறிக்கோளைப் பரப்ப வேண்டும்.

நம் முன்னுள்ள இவ் இரண்டு பணிகளை வெற்றியாக முடித்திட, நமக்குக் கோடிக்கணக்கான ரூபா நிதி வேண்டும்; நூற்றுக்கணக்கான முழு நேரப் பணி யாளர்கள் வேண்டும்.

இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டு குழு, குழுவாகச் சென்று வெகுமக்களின் ஆதரவைத் திரட்டுங்கள்; பெரிய அளவில் நிதி திரட்டுங்கள்!

சென்னை பல்லாவரம் 7-1-2012, 8-1-2012 மாநாடு களுக்கு, 7.1.2012, சனி காலையிலேயே வந்து குவிந் திடுங்கள்.

உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்; அறிஞர்களின் கருத்துப் பொழிவுகளைக் கேளுங்கள்; கண் போன்ற நம் கொள்கைகளை - உரிமைகளை வென்றெடுக்கத் திட்டம் தீட்டுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.

- வே.ஆனைமுத்து

Pin It