தனிமனிதனாய் தமிழனாய்
உங்களின் எளிமையும் நேர்மையும்
எங்களை மனதார மதிக்கவைக்கிறது.
ஆனால்...
அணுஉலை பற்றிய உங்களின் கருத்து
எங்களின் அடிநெஞ்சை
அணுஅணுவாய் வதைக்கிறது.
சாவை எதிர்நோக்கியிருக்கும்
நடைப்பிணங்களுக்கு வேண்டுமானால்
உங்கள் கருத்து உவக்கலாம்.
நாளை வாழ வேண்டிய
நம்இளையதலைமுறைக்கு
கதிர் வீச்சு என்பது
எதிர் வீச்சு அல்லவா?
எப்படியாவது மூன்று பேரையும்
தூக்கிலிருந்து காப்பாற்றத் துடிக்கும்
எங்கள் நடுவே
மொத்த மக்களின் உயிரைக் குடிக்கவல்ல
அணுஉலைக்கு ஆதரவாக
“அறிக்கை ஏவுகணையை”
அனுப்பியிருக்கிறீர்களே!.
பரமக்குடியில் ஏழுஉயிரை ஏப்பமிட்ட
கைத்துப்பாக்கிகளை விட
காமாக் கதிர்கள் ஆபத்தானவை என்பது
உங்களுக்குத் தெரியாததா என்ன?
பார்வைக்கு மசூதிகளைப் போல்
தோற்றமளிப்பதால்
அணுஉலைகள் அனைத்தையும்
நல்லவை என்று நம்பாதீர்கள்!
ஒருத்திக்குக் கட்டப்பட்ட சமாதி
தாஜ்மகால்
உலகத்துக்கே கட்டப்படும் சமாதி
அணு உலை
இஸ்லாமியர்களைப் படுகொலை செய்ய
திட்டமிட்டபோது - இந்திய அரசு
உங்களைக் குடியரசுத் தலைவராக்கி
முகமூடி போட்டுக் கொண்டது
இப்போதும் அவ்வாறே உங்களின்
அணுஅறிவு கையாளப் படுகிறது.
கல்லணையோ தஞ்சை கற்கோயிலோ
கடுகளவும் மக்களைக்
கதிகலங்க வைக்கவில்லை
மண் - மக்கள் - சுற்றுச்சூழல்
இவைகள் குறித்து நீங்களும்
கவலையோடு - நல்ல கனவு காணுங்கள்
அணுவைப் பிளந்தால்
ஆற்றல் வெளிப்படுவது போலவே
மக்கள் சக்தியைப் பிளந்தாலும்
பேராற்றல் வெளிப்படும் என்பதைப்
புரிந்து கொள்ளுங்கள்!
இடிந்தகரை மக்கள்
எதையோ எதிர்பார்த்துப் போராடவில்லை
தங்களின் உயிர் காப்புக்காகப்
போராடுகிறார்கள்.
விலைவாசி ஏற்றம்போல்
மக்களின் குலைநடுங்க வைக்கும்
கூடங்குளத்து உலைவாய் எப்போதும்
மூடியே இருக் “கலாம்”.
Pin It