இந்திய மக்கள் தொகை 1931-இல் 32 கோடி, அதில் 25 விழுக்காட்டினர் இஸ்லாமியர்; 8 விழுக் காட்டினர் கிறித்துவர், சீக்கியர், பார்சிகள்.

இவர்களின் கோரிக்கையை ஏற்று, 1934இல் இஸ்லாமியருக்கு 25 விழுக்காடு; மற்ற மூன்று மதச் சிறுபான்மையினருக்கும் 8.33 விழுக்காடு இந்திய அரசுப் பணிகளில் இடப்பங்கீடு அளித்தனர், வெள்ளையர்.

1934இல் சென்னை மாகாணத்தில் ஆட்சியிலிருந் தவர் பொப்பிலி அரசர். அன்று சென்னை மாகாண அரசு வேலைகளில் எந்தெந்த வகுப்புக்கு எத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு இருந்ததோ அதேபோன்ற அளவில் - சென்னை மாகாண அரசு எல்லைக்குள் இயங்கிய அஞ்சல் துறை, தொடர் வண்டித் துறை, வருமானவரித்துறை, இம்பீரியல் வங்கித் துறை எல்லாவற்றிலும், எல்லா இந்திய அரசுப் பணிகளிலும் இடப்பங்கீடு கோரியோர் முதலமைச்சர் பொப்பிலி அரசரும், ஈ.வெ. ராமசாமியும் ஆவர்.

அவர்களின் கோரிக் கைகளை முன்வைத்து வெள்ளையரிடம் வாதிட்டவர் ஏ. இராமசாமி முதலியார். அக்கோரிக்கையை ஏற்று, சென்னை மாகாண எல்லைக்குள் மட்டும் இந்திய அரசுப் பணிகளில் பார்ப்பனர் அல்லாத இந்துக்களுக்கு 44 விழுக்காடு; ஆதித்திராவிடர்களுக்கு 16 விழுக்காடு; பார்ப்பனர்களுக்கு 16 விழுக்காடு; சிறுபான்மை மதத் தினரான இஸ்லாமியருக்கு 8 விழுக்காடு; ஆங்கிலோ இந்தியர் - கிறித்துவருக்கு 8 விழுக்காடு; மற்ற சிறு பான்மையினருக்கு 8 விழுக்காடு இடப்பங்கீடு அளித்து 1935இல் ஆணை அளித்தனர் வெள்ளையர்.

1942இல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், போர்க்கால அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். அவருடைய கோரிக்கையை ஏற்று, 429 உள்சாதிகளாகப் பட்டிய லிடப்பட்ட தீண்டப்படாத வகுப்பினருக்கு அவர் கோரிய 12.5 விழுக்காடு இடப்பங்கீட்டை மத்திய அரசுப் பணி களில் தருவதற்கு மாறாக, அப்போதைக்கு, 11.8.1943 இல், 8.33 விழுக்காடு இடப்பங்கீட்டை இந்திய அளவில் அளித்தனர், வெள்ளையர்.

1946இல் சென்னை மாகாணப் பிற்படுத்தப்பட் டோர் லீக் தலைவர்களான எம்.ஏ. மாணிக்கவேலு நாயகர், ஆரி கவுடர் போன்றோர் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி இடஒதுக் கீடு கோரி விண்ணப்பித்தனர். அவ்வளவே.

அதே 1946இல் தீண்டப்படாதாருக்கு இந்திய அரசுப் பணிகளில் ஏற்கெனவே 8.33 விழுக்காடு தரப் பெற்றி ருந்ததை, 12.50 விழுக்காடாக உயர்த்திப் பெற்றார், அம்பேத்கர்.

வட இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி இடப்பங்கீடு கோரி 1956 முதல் 1967 வரை போராடி னார், டாக்டர் ராம் மனோர் லோகியா. அவர் 1967இல் மறைந்தார்.

1934இல், முதன்முதலாக பிற்படுத்தப்பட்டோருக் கும் தாழ்த்தப்பட்டோருக்கும் மத்திய-மாநில அரசுகளில் வேலையிலும் கல்வியிலும் விகிதாச்சார இடப்பங்கீடு கேட்டு, இறுதிவரை போராடிய தந்தை பெரியார், 1971 இல் தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்டோருக்குத் தமிழ்நாட்டு அரசில் 31 விழுக்காடு இடப்பங்கீடு பெற்றுத் தந்தார்.

24.12.1973இல் பெரியார் மறைவுற்றார்.

தந்தை பெரியாரைப் பின்பற்றி, அவர் 1934 முதல் கோரிய விகிதாசார இடப்பங்கீட்டைப் பெற்றே தீருவது என, நாம் 8.8.1976 அன்றே முடிவெடுத்தோம்.

தமிழ்நாட்டில் அப்போது முதல் பரப்புரை செய்தோம்; இன்றும் செய்கிறோம்.

வடஇந்தியாவில், 7.5.1978இல், உத்தரப்பிரதேசத் தில் முசாபர் நகரில் நடைபெற்ற, உ.பி. பிற்படுத்தப் பட்டோர் மாநாட்டில் நம் கோரிக்கையை வலியுறுத்தி முதன்முதலாக உரையாற்றினோம். விகிதாசார இடப் பங்கீடு பற்றிய இந்தி, ஆங்கில அறிக்கைகளை உ.பி. மாநாட்டுப் பேராளர்கள் அனைவர்க்கும் வழங்கினோம். அன்று முதல் இன்று வரை - 36 ஆண்டுகளாக இந்தியா முழுவதிலும் சென்று நாம் பரப்புரை செய்கிறோம்; போராடுகிறோம்.

அன்று நம் முன்னோடிகள் பெற்ற வெற்றிகளைப் போல், நாமும் நல்ல வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என, நாம் நெஞ்சை நிமிர்த்தி உரக்கக் கூவலாம்.

17.9.1978 முதல் 17.10.1978 முடிய நாம் பீகார் முழுவதிலும் மேற்கொண்ட அடை மழை போன்ற பரப்புரையும்; 19.10.1978 முதல் 31.10.1978 முடிய பாட்னாவில் நாமும், இராம் அவதேஷ் சிங் அமைப்பி னரும் இணைந்து நடத்திய சிறை நிரப்பும் போராட்ட மும் இந்திய அரசையும், பீகார் அரசையும் கலக்கின.

அன்றையத் தலைமை அமைச்சர் மொரார்ஜி தேசாய், பீகாரில் அப்போதே மேற்கொண்ட நமக்கு எதிரான பரப்புரை தோற்றது; அதில் அவர் பாடம் கற்றார்.

பீகார் அரசின் அன்றைய முதலமைச்சர் கர்ப்பூரி தாக்கூர் நம் கோரிக்கையை ஏற்று, முதன்முதலாக, பீகார் அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 10.11.1978இல் 20 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து ஆணை பிறப்பித்தார்.

இது, 1978இல் நாம் கண்ட முதலாவது வெற்றி.

20.12.1978இல் இந்தியத் தலைமை அமைச்சர் மொரார்ஜி தேசாய், “இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவை அரசு அமைக்கும்” என மக்கள் அவையில் அறிவித்தார்.

அதன் விளைவுதான் 1.1.1979இல் பிந்தேசுவரி பிரசாத் மண்டல் (பி.பி.மண்டல்) தலைமையில் அமைக் கப்பட்ட “ மண்டல் குழு”.

இது நாம் குவித்த இரண்டாவது வெற்றி.

1981 அக்டோபர், நவம்பரில் நாம் மீண்டும் பீகார் பயணத்தில் செய்த பரப்புரை காரணமாக, பீகார் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில், அ.தி.மு.க. அரசின் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள், தமிழகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 1979 சூன் திங்களில், வருமான வரம்பு வைத்து ஆணை ஒன்றை அறிவித்தார். ‘ஆண்டுக்கு ரூபா 9000 வரு மானம் பெறுகிற பிற்படுத்தப்பட்டோரின் பிள்ளைகள் இடஒதுக்கீடு பெற முடியாது’ என்றே முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளும் அந்த ஆணையை எதிர்ப்பதோடு நின்றன.

நாம் மட்டுமே, 17.8.1979இல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் வாதாடி (1) 9000 ரூபா வருமான வரம்பு ஆணையை நீக்குங்கள்; (2) பிற்படுத்தப்பட்டோருக்குத் தரப்படுகிற 31 விழுக்காடு இடஒதுக்கீட்டை 60 விழுக்காடாக உயர்த்துங்கள் எனக் கோரினோம்.

அவர், தொலைப்பேசியில், நம் கோரிக்கையை ஏற்க மறுப்பதாக அன்றே கூறினார்.

அமைச்சர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் மூலம், 8.10.1979இல் நம் கோரிக்கை பற்றி, எம்.ஜி.ஆருக்குப் புரிய வைத்தோம்; பயன் இல்லை.

தமிழகத்தில் அப்போது நடந்த மக்களவைத் தேர் தலில்-2014இல் தி.மு.க.வுக்கு நேரிட்டது போல், 1980இல் அ.தி.மு.க.வுக்கு 39இல் 2 இடங்களே கிடைத்தன. எம்.ஜி.ஆர். பாடங்கற்றார்.

நாம் கோரிய 60 விழுக்காடு இடப்பங்கீட்டுக்கு மாறாக, 50 விழுக்காடு இடப்பங்கீடு அளித்து எம்.ஜி.ஆர். அரசு 1-2-1980இல் ஆணை பிறப்பித்தது.

இது நாம் கண்ட மூன்றாவது வெற்றி.

மய்ய அரசில் 1980இல் மீண்டும் இந்திரா காந்தி ஆட்சி அமைந்தது.

31.12.1980இல் மண்டல் குழுவின் அறிக்கையைப் பெற்ற இந்திரா காந்தி, நாடாளுமன்றத்தில் அதை வெளியிட முன்வரவில்லை. எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை, முதன்முதலாக, 29.4.1981இல் தில்லியில் நாம் நடத்தினோம்; 15 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய ஜெய்பால் சிங் கஷ்யாப், அப்போது முதல், மக்கள வையில் இதுபற்றி நாள்தோறும் கேள்வி எழுப்பினார். அது இந்திராகாந்தி அரசின் கவனத்தை ஈர்த்தது.

இந்திரா காந்திக்கு நாம் மேலும் மேலும் அழுத்தம் தந்தோம். “மண்டல் பரிந்துரை பற்றிய பொறுப்பை உள்துறை அமைச்சர் கியானி ஜெயில்சிங் ஏற்றுள் ளார். அவரோடு பேசுங்கள்” என்றே நமக்கு இந்திரா காந்தி மடல் எழுதினார்.

அதன்படி, 25.1.1982 மாலை நானும், ஜெய்பால் சிங் கஷ்யாப், ச. தமிழரசு, சாலை. இளந்திரயன் ஆகி யோரும் ஜெயில் சிங் அவர்களை நேரில் கண்டு நீண்ட நேரம் கலந்து பேசினோம். அவர் நம் நிலைப் பாட்டை முழுவதுமாக உணர்ந்தார்.

அவருக்கு மேலும் அழுத்தம் தர விரும்பினோம். 3.3.1982இல் மீண்டும், தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தினோம். 4.3.1982 பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் ஜெயில் சிங் அவர் களை நேரில் தனிமையில் கண்டு நான் வற்புறுத்தி னேன். அவர், “மண்டல் பரிந்துரையை நாடாளு மன்றத்தில் வெளியிடுவோம். சாதி அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவோம்” என, அன்றே மக்களவையில் அறிவித்தார். அதன்படி 1982 ஏப்பிர லில் மண்டல் அறிக்கையை நாடாளுமன்றத்தில் ஜெயில் சிங் வெளியிட்டார்.

இது நாம் கண்ட நான்காவது வெற்றி.

ஆயினும் இந்திரா காந்தி, இராஜீவ் காந்தி, ஆட்சிகளில் மண்டல் பரிந்துரை அமலாகவில்லை.

விஸ்வநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) பிரதமர் ஆனார். அப்போது நாடாளுமன்ற மேலவை உறுப்பி னராக இருந்த நம் பேரவைத் தலைவர் இராம் அவதேஷ் சிங், அன்றாடம் கேள்வி நேரத்தின் போது, மண்டல் பரிந்துரை அமலை வற்புறுத்தினார்.

அப்போது நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் அன்றையக் குடிஅரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் உரையாற்றிய போது, தம் உரையில் மண்டல் பரிந்துரை அமலாக்கம் பற்றி எதுவும் குறிப் பிடவில்லை என்பதால், இவர் குறுக்கிட்டு, மேற் கொண்டு குடிஅரசுத் தலைவர் பேசக் கூடாது என்று தடுத்துவிட்டார். அந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடி யாகக் காட்டப்பட்டது. அந்த நிகழ்ச்சி தான் வி.பி. சிங் அவர்களுக்கு உடனடித் தூண்டுகோலாக அமைந்தது.

இராம் அவதேஷ் சிங், அத்துடன் நில்லாமல், 6.10.1990 பகலில் தொண்டர்களைத் திரட்டிக்கொண்டு, தில்லியில், ஜன்பத் சாலையில் ஊர்வலமாகச் சென்று, “மண்டல் பரிந்துரையை அமல் ஆக்கிடு” என்று கோரினார். அவரைக் காவல்துறை கைது செய்தது.

இதற்கிடையில்தான், 6.10.1990 அன்று, வி.பி. சிங் அவர்கள் “மண்டல் குழு பரிந்துரைத்தபடி 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை மய்ய அரசு வேலை மற்றும் பொதுத்துறை வேலைகளில் அரசு இன்று முதல் அமல் படுத்துகிறது” என, நாடாளுமன்றத்தில் முதன்முதலாக அறிவித்தார்.

அந்த வரலாற்றுச் சாதனையைச் செய்த அவர், தம் மகிழ்ச்சியை இராம் அவதேஷ் சிங்கு டன் பகிர்ந்து கொள்வதற்காக, நாடாளுமன்றத் திலிருந்து நேரே அவருடைய ஹுமாயூன் சாலை இல்லத்துக்குச் சென்றார். இராம் அவதேஷ் சிங் அப்போது காவல் நிலையத்தில் இருந்ததால், அவருடைய குடும்பத்தினருடன் தம் மகிழ்ச்சி யைப் பங்கிட்டுக் கொண்டார், வி.பி. சிங்.

காவல் முடிந்து விடுதலையான இராம் அவதேஷ் சிங், தம் வீட்டுக்கு வி.பி. சிங் அமைச்சரவையினர் எல்லோரையும் அழைத்துத் தம் கோரிக்கையை நிறை வேற்றிய பிரதமருக்குச் சிறப்பான வரவேற்பும் விருந்தும் அளித்தார். அந்நிகழ்ச்சிக்கு என்னை அவர் அழைத்த போதும், குறுகிய இடைவெளியில், நான் வர வாய்ப் பில்லை எனத் தெரிவித்துவிட்டேன்.

இந்த வெற்றிக்கு, நம்மைப் போன்றே, பிற்படுத் தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் அக்கறை கொண்ட மற்ற பல அமைப்பினரும் நல்ல பங்களிப்புச் செய்துள்ளனர். இது வரலாறு.

அன்று, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவே செயல்பட்ட காங்கிரசு, இப்போது 2014 தேர்தலில் அடியோடு தோற்றுவிட்ட நிலை யில், வி.பி. சிங் செய்த இடஒதுக்கீட்டு அமலை எதிர்த்து, இராம இரதப் பயணத்தை அயோத்தியை நோக்கி மேற்கொண்டு தோற்றுப்போன பாரதிய சனதாக் கட்சி, இன்று முழு வலிமையுடன் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி ஆளுகிறது.

1) இந்த நேரத்தில் புதியதாக அமைக்கப்பட்ட தெலுங் கானாவின் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் - தம் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீட்டு அளவை - தமிழ்நாட்டில் போன்றே, 69 விழுக்காடாக உயர்த் தப் போவதாக அறிவித்துவிட்டார்.

2) 2014 மக்களவைத் தேர்தலில் மகாராட்டிரத்தில் காங்சிரசும், தேசியவாத காங்கிரசும் இணைந்து போட்டியிட்டுப் படுதோல்வியைக் கண்டன. மிக விரைவில் மகாராட்டிரச் சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே வரப்போகும் சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற விரும்பி - ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பி னர், பழங்குடியினருக்கு என அளிக்கப்படும் 50 விழுக்காடு இடப்பங்கீட்டின் அளவை 72 விழுக் காடு அளவுக்கு உயர்த்திட வேண்டும் என்று, மகாராட்டிர அமைச்சரவையினர் 25.6.2014 அன்று முடிவு செய்துள்ளனர்.

அதன்படி ‘மராத்தா’ என்னும் முற்பட்ட வகுப்பினருக்கு 16 விழுக்காடு இடஒதுக்கீடும்; மகாராட்டிர இஸ்லாமியர்களை ‘சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டோர்’ என்று கூறி அவர்களுக்குத் தனியே 6 விழுக்காடு இடஒதுக்கீடும் வழங்கி ஆணை பிறப்பிக்கத் திட்டமிடுகின்றனர்.

இதை மகாராட்டிரத்திலுள்ள எதிர்க்கட்சியினர் எதிர்க் கின்றனர்.

இதன்படி மகாராட்டிரத்தில் இடஒதுக்கீடு அளவு 72 ஆக உயர்த்தப்பட்டால், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் போடப்படும் என்பது உறுதி.

“முஸ்லிம்களுக்கு” என்று தனியே இடஒதுக்கீடு தந்து ஆந்திர அரசு ஏற்கெனவே வெளியிட்ட ஆணை செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. ஏனெனில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு தர விதிகள் 15(4), 16(4) ஆகியவற்றில் இடமில்லை.

ஆனால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள் அடங்கிய மொத்த மதச் சிறுபான்மை மக்களில் 52 விழுக்காட்டுப் பேர் - “கல்வி யிலும் சமுதாயத்திலும் பிற்படுத்தப்பட்டோர்” என்று மண்டல் குழுவினர் அடையாளப்படுத்தியுள்ளனர். எனவே அந்த அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் பிற் படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீட்டில் மதச்சிறுபான்மையினரான - இஸ்லாமியரும் கிறித்து வரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு மொத்த இடஒதுக்கீடு இருப்பதை எதிர்த்து 1993இல் போடப்பட்ட வழக்கு இன்னமும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் 1994 முதல், உச்சநீதிமன்ற ஆணைப்படி, ஆண்டுதோறும் மொத்த இடஒதுக்கீடு 50 விழுக்கா டாகக் கொள்ளப்பட்டு, அதனால் பொதுப் போட்டிக்கு உரிய முற்பட்டவர்கள் பெறக்கூடிய பலனை அவர்கள் அடைய ஏற்பாடு செய்யப்படுகிறது.

இத்தகைய குழப்பங்கள் நீடிக்க இடம் இருப்பது உண்மை.

எனவே தான், 1934 முதல் 1947 வரை இந்திய அளவிலும், 1927 முதல் 1954 வரையில் சென்னை மாகாண அளவிலும், மொத்தம் உள்ள 100 விழுக்காட்டு இடங்களையும் பிரித்துத் தந்தது போல, இப்போதும் நான்கு வகுப்பினரி டையே 100 விழுக்காட்டு இடங்களையும் விகிதா சாரப் பங்கீடு செய்ய வேண்டும் என, நம் பேரவை யும், நம் கட்சியும் 1991 முதல் கோருகின்றன.

அதாவது,

1. எல்லா மதங்களிலும் உள்ள முற்பட்டோர்;

2. எல்லா மதங்களிலும் உள்ள சமுதாயத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோர்;

3. பட்டியல் வகுப்பினர்;

4. பட்டியல் பழங்குடியினர்

ஆகிய நான்கு வகுப்பினருக்கும், அந்தந்த வகுப்பி னரின் மக்கள் தொகைக்குச் சரிசமமாகக் கல்வியிலும், வேலையிலும் இடப்பங்கீடு அளிக்க ஏற்ற வகையில், இந்திய அரசமைப்பின் விதிகள் 15(4), 16(4), 29(2), 338(10) இவற்றைத் திருத்த வேண்டும் என நாம் கோருகிறோம்.

இதுவே எல்லா மதங்களிலும் உள்ள 4100 பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், பிரிவுகளையும் சேர்ந்த இந்து, இஸ்லாம், சீக்கிய, கிறித்துவப் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் முற்பட்டோர் விகிதாசார இடஒதுக்கீடு பெற்றிட ஒரே வழியாகும்.

இத்திசை நோக்கி நாம் எல்லாம் செய்வோம், வாருங்கள்! 

Pin It