பற்றிப் படர்ந்தேறி

பருவத்தில் மொட்டவிழ்ந்து

சுற்றி மணம் பரப்பும்

பச்சைப்பசுங் கொடிகளல்ல நாங்கள்

கழுத்துக்குச் சுருக்கிட்டுக்

கைதட்டி மக்களால்

கழுமரத்தில் ஏற்றப்படும்

கட்சிக் கவலைகொண்ட

கவின்மிக்க கொடிகள்

திக்குத் தெரியாமல்

காட்டில்கூட அலைந்துவிடலாம்

ஆனால்...

எல்லாத் திக்கும் தெரிந்தும்

காற்றில் அலைகிற

கொடுமை இருக்கிறதே...

அதை நீங்கள்

அனுபவித்தால்தான் புரியும்

வெள்ளைக் கொடியாய்த்தான்

விளங்க நினைக்கிறோம்

அரசியல்வாதிகளோ எங்களைக்

கதறக் கதறக் கற்பழிக்கிறார்கள்

காவி, பச்சை

அதற்கிடையே வெள்ளையென்று

மூவண்ணக் கொடியைத்தான்

முதலில் செய்தார்கள்

பின்பு

அசோகச் சக்கரத்தையும்

நடுவிருந்த வெள்ளையையும் நீக்கிக்

காவியைத் தூக்கலாக்கி

பச்சையைக் குறைத்துத்

தாமரையைத் தாங்கி

ஒரு கொடி வந்தது

சக்கரமோ தாமரையோ

காவியோ பச்சையோ வெள்ளையோ

மூவண்ணங்களின் நோக்கம்

நால்வருணங்களைக் காப்பதுதான்

காவிநிறத்தை உக்கிரமாக்கி

சிவப்புக் கொடியைச் செய்தார்கள்

அதையும் அரிவாளால்

இரண்டாய்க் கிழித்தார்கள்

அதன்பின் அதுவே

பலவாய்க் கிழிந்தது

எதிர்ப்பின் அடையாளம் கருப்பு

ஏழையின் அடையாளம் சிவப்பு

இடையில் கொள்கையில் வெளுப்பு

எல்லாம் இப்போது

ஒன்றாய்க் கலப்பு

காவி பச்சை வெள்ளை

கருப்பு சிவப்போடு

மஞ்சள் நீலத்தையும் சேர்த்து

மற்றுமுள்ள நிறங்களுடன்

குலுக்கிக் குலுக்கிப் போட்டு

கொடி செய்கிறார்கள்

எல்லா நிறங்களையும் கரைத்து

ஏராளமான கொடிகளைச்

செய்துவிட்டார்கள்

வருணபேதம் ஒழிய

போராடும் கட்சிகளைக்கூட

வண்ணபேதம் கொண்ட

கொடிகளால்தான் அறியமுடிகிறது

கொள்கையின் அடையாளமாகத்தான்

முதலில் கொடிகளைச் செய்தார்கள்

காலப்போக்கில் அது

கட்சியின் அடையாளமாக மட்டுமே

பதவியிறக்கம் செய்யப்பட்டுவிட்டது

கோட்டையில் பறப்பதும்

பரணையில் கிடப்பதும்

மாறி மாறிப் பழகிப்போனது

தமிழில் ஒருசொல்

இருபொருள் தருவது போல

கொடியில் ஒருநிறம்

இருபொருள் தருகிறது

பகுத்தறிவின் கருப்புக்கு

சாமியே சரணம் ஐயப்பா!

தோழமையின் சிவப்புக்கு

ஓம்சக்தி! ஆதிபராசக்தி!

பாட்டாளி மக்களின் மஞ்சளுக்கு

கோவிந்தா! கோஓஓஓவிந்தா!

நீதிவேண்டும் நீலத்திற்கு

அரோகரா!.... அரோகரா!

போதாதென்று

வீட்டுமனைகள் விற்பவன்வேறு

கொடிகட்டிக் குழப்புகிறான்

இப்படியாக

நிறங்களின் நிலைமை

கவலைதருவதாக இருக்கிறது

இனி

புதிதாய்க் கொடிசெய்வோர்க்கு

நிறச்சிக்கல் நிறைய உண்டு

இனி

ஒன்று சேருங்கள் என்பதே!

எங்களின் கோரிக்கை

மார்க்சிய வழியில்

உலக் கொடிகளே ஒன்றுசேருங்கள்!

Pin It