20 பல்கலைக்கழகங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தி 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி செலவிடப்படும்!
பீகார் மாநிலம், பாட்னாவில், பாட்னா பல்கலைக் கழக நூற்றாண்டு விழா 14.10.2017 அன்று நடந்தது.
அவ்விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், “பாட்னா பல்கலைக்கழகத்தை மத்தியப் பல்கலை அந்தஸ்துக்கு உயர்த்துமாறு” பிரதமரைக் கேட்டுக் கொண்டார்.
அதற்குப் பிரதமர் மோடி என்ன விடை சொன்னார்?
“பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அந்தஸ்து அளிக்கும் வழக்கம் ஒழிந்துவிட்டது. நாம் அதைத் தாண்டி மேலும் ஓர் அடியை எடுத்து வைத்துள்ளோம். அதாவது 10 தனியார் பல்கலைக்கழகங்களையும், 10 அரசுப் பல்கலைக்கழகங் களையும் தேர்வு செய்து, அவற்றுக்கு 5 ஆண்டுகளில் ரூபா 10,000 கோடியை வழங்க உள்ளது. அந்தப் பல்கலைக் கழகங்கள் உலகத் தரம் வாய்ந்தவையாக மாறுவதற்கான திறனை வெளிப்படுத்த வேண்டும். இதற்காக, அந்த 20 பல்கலைக்கழகங்களின் திறனை ஒரு நிபுணரும் மூன்றாம் தரப்பு அமைப்பு ஒன்றுமே தேர்வு செய்ய வழிவகுக்கும். பிரதமரோ, முதல்வரோ, வேறு எந்த அரசியல் தலைவரோ அவற்றைத் தேர்வு செய்யப் போவதில்லை” என்ற மூடத் தனமான திட்டத்தை அறிவித் துள்ளார், பிரதமர் மோடி.
இது மூடத்தனமான திட்டம் என்பதற்கான காரணங் கள் என்னென்ன?
1. முதலில் இந்தியப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களோ, பேராசிரியர்களோ, கல்வியாளர் களோ அப்படிப்பட்ட 20 பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்யத் தகுதியற்றவர்கள் என்று கூறுவது மூடத்தனம்.
யாரோ ஒரு நிபுணரும், மூன்றாம் தரப்பு அமைப்பும் கல்விக்கும், இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் எப்படித் தொடர்புடையவர்கள் என்பதை யார் முடிவு செய்வது?
2. உலகத்தரம் வாய்ந்த 500 பல்கலைக்கழகங்களுக் குச் சமமான தகுதி வாய்ந்ததாக இந்தியாவில் ஒரு பல் கலைக்கழகம்கூட இல்லாதது தனக்குக் கவலை அளிப்பதாகப் பிரதமர் தம் அன்றைய பேச்சில் குறிப்பிட் டுள்ளார்.
அ) அந்தத் தரத்தை முடிவு செய்தவர்கள் அந்தந்த நாட்டுக் கல்வி நிபுணர்களா? மூன்றாம் தரப்பு அமைப்பும் ஒரு நிபுணரும் எந்தத் துறைகளைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்? இவற்றைத் தீர்மானிப்பது யார்?
ஆ) இன்று உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங் களை, தரம் கண்டு தேர்ந்தெடுத்தவர்கள் யார்?
3. உலகத்தரத்தை அடைந்த அந்த 500 பல்கலைக் கழகங்கள் எந்தெந்த நாடுகளில் உள்ளன?
4. அந்த 500 உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் அமைந்துள்ள நாடுகளில் - தொடக்கப் பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி, உயர் அறிவியல் கல்வி, உயர் தொழில்நுட்பக் கல்வி வரையில் எல்லா நிலைக் கல்வியும் அந் தந்த நாட்டினரின் தாய்மொழி வழியில் கற்பிக்கப்படுகிறதா? வேறு எந்த நாட்டு மொழி வழியிலாவது கற்பிக்கப்படுகிறதா?
5. அந்த உலகத்தரம் வாய்ந்த 500 பல்கலைக் கழகங்களில் ஏட்டுக்கல்வி மட்டும்-மனப்பாடம் செய்து எழுதும் கல்வி முறை மட்டும் உள்ளதா? செய்முறைப் பயிற்சி யோடு ((Practical) இணைந்த கல்வி முறையும் சேர்ந்து உள்ளதா?
6. இந்தியாவிலுள்ள ஏறக்குறைய 600 பல்கலைக் கழகங் களில்-எந்தப் பல்கலைக்கழகத்திலாவது அந்தந்த மாநில மக்கள் பேசும் தாய்மொழி வழியில் எல்லா நிலைக் கல்வியும் அளிக்கப்படுகிறதா? ஏன், கடந்த 70 ஆண்டு களாக அப்படித் தாய்மொழி வழியில் கல்வி அளிக்கப்பட வில்லை?
வேறு எந்த சுதந்தர நாட்டில் - தாய்மொழி அல்லாத மாற்றார் மொழி வழியில் கல்வி தரப்படுகிறது?
15.8.1947இல் வெள்ளையன் வெளியேறிய பிறகு, அவன் கொடுத்த கல்வித் திட்டம் நம் இந்திய மாநிலங் களுக்கு-இந்திய மக்களுக்கு எதற்கு? வெள்ளையனு டைய தாய் மொழியான ஆங்கில மொழி வழியில் - எல்லா இந்திய மொழிகளைப் பேசுபவரும் உயர் கல்வி கற்பது ஏன்? இது “சுதந்தரம்” என்பதன் அருமையையும் பெருமையையும் அறியாத-மானங்கெட்டத் தனமல்லவா?
உலகத்தரம் வாய்ந்த அந்த 500 பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள நாடுகளில் - எந்த ஒரு நாட்டிலாவது தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கல்வி வரையில்-தம் தம் தாய்மொழி வழியில் அல்லாமல் பிற மொழியிலோ, ஆங்கில வழியிலோ கற்பிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு என்ன விடை?
2017இல் உயர்நிலைக் கல்வி முதல் பல்கலைக் கழகக் கல்வி, அறிவியல் கல்வி, தொழில்நுட்பக் கல்வியை-எந்த மொழி பேசும் இந்தியனும் அவனவன் தாய்மொழி வழியில் தரப்படாததால்தான் - உலகத் தரம் வாய்ந்த 500 பல்கலைக் கழகங்களில் ஒன்றுகூட இந்தியாவில் இல்லை. 100க்கு 100 மடங்கும் - இதுவே 2017லும் இவ்விழிநிலை நீடிக்கக் காரணம்.