தமிழ்நாட்டுத் தலைவர்களே! மாணவ மணிகளே! தீரச் சிந்தியுங்கள்! உடனே செயல்படுங்கள்!
காற்றும் நீரும் வெப்பமும் இயற்கை தரும் பெருங்கொடைகள்.
காற்றை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற அளவு, செயற்கையாக உண்டாக்க முடியாது.
அதேபோல் நீரையும் பயன்பாட்டுக்கு வேண்டிய அளவில், செயற்கையாக உண்டாக்க முடியாது.
நிலத்தில் விழும் ஒவ்வொரு துளி நீரும் மண்ணில் உறிஞ்சிப் போவது இல்லை; நிலத்தடியில் இறங்கிப் போவதும் இல்லை.
நிலத்தில் விழும் மழைத்துளி நீர் முதலில் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து ஓடுகிறது. அப்படி ஓடும் நீரை அவ்வப்போது ஊர்மக்கள் தேக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதை மக்களே முன்வந்து செய்ய வேண்டும். அப்படித் தேக்கி வைக்கப்படுவது தான் ஊருணி; ஊர்க்குளம். குடிநீருக்கும், குளிக்கவும் அதை நாம் பயன்படுத்துகிறோம், அது ஊர்ப் பொதுப் பயன்பாட்டுக்கு.
அந்த எளிய பணியைத் தமிழ்மக்கள் செய்யவில்லை; இந்தியப் பொது மக்கள் எல்லோரும் செய்யவில்லை.
2017 பிப்பிரவரி முதலே தமிழகம் குடிநீரின்றித் தத்தளிக்கிறது.
1967 முதல் 2017 வரை இரண்டு திராவிடக் கட்சிகளும் மக்களை மக்க ளாகக் கருதி ஆளவில்லை.
ஊர்க்குளங்களைக் கூடக் காப்பாற்றத் துப்பில்லாத - மனமில்லாத - பொறுப் பில்லாத இந்த இரண்டு திராவிடக் கட்சிகளின் ஊழல் மன்னர்களும் - காவிரி காய்ந்தால் - கருநாடகத்தைக் குறிவைத்து, அதைச் சுற்றி நின்று இலாவணி பாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களும் அரசு செய்ய வேண்டியதைக் கோருவதில் - சிக்கலை அல்லது பிரச்சனையை மட்டும் சார்ந்து நிற்காமல், கட்சி வழிசார்ந்து - பிரிந்து, பிரிந்து நிற்கிறார்கள்.
கருநாடக மொழி மக்கள் காவிரிச் சிக்கலில் கட்சிகளின் வழி பிரிந்து நிற்பது இல்லை; காவிரி நீர்ப்பங்கீடு சிக்கலோடு அவர்கள் ஒன்றித்து விடுகிறார்கள்; தத்தம் கட்சியை இதில் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள்.
கருநாடகக் கட்சிகளின் தலைவர்களும் காவிரிச் சிக்கலில் கட்சி வழியில் தனித்தனியே நின்று பேசுவது இல்லை; ஒன்றிணைந்து உள்ளூரில் செயல் படுகிறார்கள்; பிரதமரையும் மற்ற அமைச்சர்களையும் ஒன்றிணைந்து சென்று பார்க்கிறார்கள்.
ஆனால் தமிழகத் தலைவர்கள் அப்படி இல்லையே! அது முறைதானா?
எடுத்துக்காட்டாக, காவிரிச் சிக்கலில், 1974 முதல், தமிழர்களுக்கு, இந்திய அரசு அநீதி செய்கிறது.
1977 முதல் 1987 வரை உள்ள காலத்தில் முதல மைச்சர் எம்.ஜி.ஆரும், எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதியும், 57 தமிழக நாடாளு மன்ற உறுப்பினர்களையும் உடனழைத்துக் கொண்டு போய் அவ்வப்போதைய பிரதமர்களைப் பார்த்து, காவிரி பற்றி அழுத்தம் தந்தார்களா? ஏன் அப்படிச் செய்யவில்லை?
1989 முதல் 2011 வரை மாறி, மாறி முதலமைச்ச ராக வந்த மூத்த தலைவர் கலைஞரும், செய லலிதாவும் ஒன்றிணைந்து, 57 தமிழக நாடாளு மன்ற உறுப்பினர்களுடன் தில்லிக்குப் போய்ப் பிரத மரைப் பார்த்தார்களா? அப்படி அவர்கள் பார்க் காதது - கடமை தவறுதல் அல்லவா?
இந்த இரண்டு ஊழல் கட்சிகளுக்கும் மாற்றாக இங்கு எந்தக் கட்சியும் தலைதூக்க முடியாமல் இருந்திட-தமிழக மக்களும், கட்சிகளின் தலைவர் களும், மாணவர்களும், இளைஞர்களும் தத்தம் கட்சி வழியில் பிரிந்து நின்று, சிக்கல் வழியில் ஒன்று சேராமல்-தமிழ்மக்கள் தலையில் மண்ணை வாரிப் போட்டதுதான் மிச்சம்!
நீர்ப் பஞ்சம் ஏன்? எதனால்?
தமிழ்நாட்டில் உள்ள சிறிய, பெரிய 41,000 ஏரிகளில் - ஒரு பத்தாயிரம் ஏரிகளையாவது, கடந்த 50 ஆண்டு களில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்கால்களை விளம்பி, முழுக் கொள்ளளவுக்கும் தூர்வாரிச் செப்பனிடாதது ஏன்? ஏன்? நீர்ப்பிடிப்புக்கு வழிகோலாதது ஏன்? ஏன்? அதுவே உண்மையான காரணம்.
நீர்வளம் குறைவாக உள்ள தமிழ்நாட்டில் - இந்த ஆண்டில் கோடை வெப்பம் தாங்காமல் சுருண்டு விழுந்து 2017இல் சில தமிழர்களாவது சாவார்கள்.
குடிநீரும், போதிய உணவும் இன்றித் தமிழ் மக் களும்; தீனியும் நீரும் இன்றி ஆடு மாடுகளும் 2017இல் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் சாகப் போகிறார்கள். இது உறுதி.
அய்யகோ! தமிழ்ப் பெரியோர்களே!
சிக்கல் வழி நில்லுங்கள்!
பிரச்சனை வழியில் சிந்தியுங்கள்! நில்லுங்கள்!
கட்சி வழியில் சிக்கல்களை அணுகாதீர்கள்!
ஊழல் கட்சிகளை ஓட ஓட விரட்டுங்கள்!
இனியொரு விடுதலைப் போருக்கு ஆயத்தம் ஆகுங்கள்!