ஆர்.எஸ்.எஸ்.இன் தலைவராக முப்பது ஆண்டுகள் இருந்தவரும் அதன் தத்துவத் தந்தையாகக் கருதப்படுபவ ருமான எம்.எஸ்.கோல்வால்கர், “இசுலாமியர்கள் எந்த உரிமையும் கோராமல் இரண்டாந்தரக் குடிமக்களாக இருப்பதற்கு ஒப்புக் கொண்டால் இந்தியாவில் வாழ்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்” என்று சொன்னார். வாழ்வின் பெரும்பகுதியை ஆர்.எஸ்.எஸ்.இல் பிரச்சாரகராகச் செலவிட்ட பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் மூன்று ஆண்டு களுக்குள் இசுலாமியர்கள் கிட்டத்தட்ட இரண்டாந்தர குடிமக்கள் நிலைக்குத் தள்ளப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். அதனால்தான் உத்தரப் பிரதேசத்தில் இருபது விழுக்காட்டின ராக உள்ள முசுலீம்களில் சட்டப் பேரவைத் தேர்தலில் 403 இடங்களில் ஒரு இடத்தில் கூட முசுலீமை வேட்பாளராக பா.ச.க. நிறுத்தவில்லை.
இப்போது இந்திமொழி பேசாத-இந்தியாவின் பெரும்பான் மையினராக உள்ள பிறமொழி பேசும் மக்களை, “நீங்கள் இந்திமொழியை ஏற்கவேண்டும், இந்தியைக் கற்க வேண்டும்; இந்தி மொழியில்தான் பேசவும் எழுதவும் வேண்டும்; இல்லாவிட்டால் நீங்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத் தப்படுவீர்கள்” என்று நரேந்திர மோடி தலைமையிலான நடுவண் அரசு அறிவித்துள்ளது.
இந்தி ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு 2011ஆம் ஆண்டு அதன் அறிக்கையை மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நடுவண் அரசிடம் அளித்தது. இந்தியைத் தீவிரமாகத் திணிக்கும் இந்தப் பரிந்துரைகளால் கடும் எதிர்ப்பு ஏற்படும் என்று எண்ணிய மன்மோகன் ஆட்சி அந்த அறிக்கையைக் கிடப்பில் போட்டது. “அஞ்சாநெஞ்சன்” நரேந்தரமோடி அந்த அறிக்கையை ஒரு புதையல் போல் கண்டெடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, அதன்படிச் செயல்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஆணையிட்டுள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்த 30 பேர்களில் 28 பேர் இந்தி மொழி பேசும் மாநிலத்தவர் கள். அவர்கள் பரிந்துரைத்த 117இல் 110 பரிந்துரைகளுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.
இது குறித்து நடுவண் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ள விவரங்கள் : பள்ளிக் கல்வித் திட்டத்தில் இந்தி கட்டாயப் பாடமாகச் சேர்க்கப்பட வேண்டும். முதல் கட்டமாக சி.பி.எஸ்.இ. மற்றும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயப் பாடமாக வைக்கப்படும்.
குடியரசுத் தலைவர், நடுவண் அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள், குறிப்பாக யாருக்கெல்லாம் இந்தி தெரியுமோ, அவர்கள் இனி நாடாளுமன்றத்திலும் பொது விழாக்களிலும் இந்தியில் தான் பேசவேண்டும்.
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களில் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் இந்தியில் பதிலளிப்பதற்கான வாய்ப்பைக் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.
விமானங்களில் வழங்கப்படும் செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்கள் 50 விழுக்காடு இந்திமொழியில் இருக்க வேண்டும். விமானப் பயணச் சீட்டுகள், தொடர் வண்டியின் பயணச் சீட்டுகளில் இந்தி கட்டாயம் இடம் பெற வேண்டும்.
அரசு தரும் விளம்பரங்களில் இந்திக்கே முதன்மையான இடம் அளிக்கவேண்டும்.
நடுவண் அரசின் தேர்வுகளை எழுதுவதற்கு இந்தியைக் கற்றிருக்க வேண்டும் என்கிற பரிந்துரைக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டார். ஆயினும் இனி நடுவண் அரசின் தேர்வுகளை எழுத கட்டாயம் இந்தியைக் கற்றிருக்க வேண்டும் என்கிற நடைமுறை இருக்கும் என்பது உறுதி. ஆட்சிமொழிச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தில் 17ஆம் பாகத்தில் விதி 343 முதல் 351 வரை இந்தி ஆட்சிமொழி அல்லது அலுவல் மொழி என்பது பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளன. 1965 முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும் என்கிற அரசமைப்புச் சட்ட ஏற்பாட்டைத் தமிழர்கள் கடுமையாக எதிர்த்ததால் பிரதமராக இருந்த நேரு இந்தி பேசாத மக்கள் விரும்புகின்றவரையில் ஆங்கிலமும் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று வாக்குறுதி அளித்தார்.
இந்த அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிராக நரேந்திர மோடியின் ஆட்சி இந்தி பேசாத மாநிலங்களில் எல்லாத் துறைகளிலும், நிலைகளிலும் இந்தி இருக்கவேண்டும் என்று அறிவித்திருப்பது, இந்தி பேசாத மாநிலங்களின் தேசிய மொழி களை, பண்பாட்டை, நாட்டின் பன்மைத்துவத்தை அழிப்ப தாகும். இந்தி பேசாத மக்கள் தங்கள் கனவுகளைக் கூட இந்தியில் காணவேண்டும் என்பது போன்ற இந்த இந்தித் திணிப்பை முறியடிப்போம். இல்லையேல் “இந்தி”ச் சிறை யின் பூட்டை உடைத்து நமக்கான தனிச்சுதந்தரத் தமிழ் நாட்டை அமைப்போம்.